திங்கள், 5 செப்டம்பர், 2016

ஜெயா டீச்சர்!ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி!

நாலாப்பு பசங்களுக்கு அன்னைக்கு இருப்பே கொள்ளலை. நாளைக்கு விடிஞ்சதும் யாரு சாமிநாத ஆசிரியர் வீட்டுக்கு மொதல்ல போறது?

"இந்தாடி காமாட்சி, காலைலயே நீ சார் வீட்டுக்குப் போய் மூக்க ஒழுக்கிக்கிட்டு நின்னேன்னா, கொட்டியே கொன்னுபுடுவேன் பார்த்துக்க!"
"போடா பொம்பளச்சட்டி, நீ பூளக்கண்ணத் தொடைக்காம வந்து தொலைக்காத!"

அதுக்கப்பறம் நடந்த மூன்றாம் பானிப்பட் சண்டைல, காமாட்சி ரிப்பன் அவுந்ததும், குமார் சட்டை பாக்கெட் கிழிஞ்சு தொங்குனதும் சண்டையை அடுத்த பஞ்சாயத்துக்குக் கொண்டுபோச்சு!

மூனாப்புக்கு ஜெயா டீச்சர்தாம் பொறுப்பு!
நல்ல கறுப்பு, ஆனா அப்படி ஒரு களை!

ரெமி ஸ்னோவும் ரோஸ் பவுடரும் பக்கத்துல போனாலே மணக்கும்!
கிட்ட்டத்துல போய் நின்னு மூச்ச இழுத்து அந்த மணத்தை ஒடம்பெல்லாம் ரொப்பிக்கறது ரவிக்கு ரொம்பப் புடிக்கும்!

இன்னைக்கும் ரவியத்தான் கேட்டாங்க டீச்சர்!
என்னடா ஆச்சு?

டீச்சர், நாளைக்கு சாமிநாத ஆசிரியர் நோட்டு, புஸ்தகமெல்லாம் வாங்கிக்கிட்டு வந்துருவார். எல்லாரையும் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கறாரு!

சரி, அதுக்கு என்னடா சண்டை?

இந்த ஊளமூக்கி சார் வீட்டுக்குப் பக்கத்து ஊடு! அதுனால ஒவ்வொரு விசையும் அவளே மொதல்ல போய் வாங்கிக்கறா!
நல்ல படம் அட்டை போட்ட நோட்டெல்லாம் அவளே எடுத்துக்கறா டீச்சர்!

அதுக்காடா அடிச்சுக்கறீங்க, நான் மெட்ராஸ்லருந்து லேபிள் வாங்கியாந்திருக்கறேன்!

நாளைக்கு அடிச்சுக்காம வரிசேல நின்னு நோட்டு வாங்கிக்கறவங்களுக்கு ஆளுக்கு ஒரு அட்டை தருவேன்!

ஆஹா! வெள்ளப்பேப்பர கோணமாணலா வெட்டிப் பேரெழுதி பழைய சோத்துப் பருக்கைய வெச்சு ஒட்டவேண்டாம்!

டீச்சர், எனக்கு ஏராப்ளான் போட்டது, எனக்கு பூப்போட்டது, எனக்கு கார்!

சட்டுன்னு சீனே மாறிப்போச்சு!

இதுதான் ஜெயா டீச்சர்! 
 சிரிப்பு மாறாம, பெரம்பு எடுக்காம எல்லாப் பிரச்னைக்கும் எல்லாருக்கும் புடிச்ச தீர்ப்பு!

சரி, எல்லாரும் பழம் உட்டுக்கிட்டு க்ளாசுக்குப் போங்க!

எல்லாரும் போனதும் ரவி மாத்திரம் மெதுவாக் கேட்டான் -"டீச்சர், எனக்கு ரெண்டு அட்டை லேபிள்!"

சத்தமா சிரிச்ச ஜெயா டீச்சர் அவன் கன்னத்தக் கிள்ளி முத்தம் கொடுக்க, அன்னைக்கு முழுக்க ரெமி ஸ்னோ வாசம் அடிக்கறதா தோணுச்சு ரவிக்கு!

மறுநாள் வழக்கம்போல் தள்ளுமுள்ளு இல்லாம நோட்டுப் புஸ்தகம் வாங்குனப்ப சாமிநாத ஆசிரியர் கேட்டார் - என்னடா ஆச்சு உங்களுக்கு?

புது நோட்டைப் பிரிச்சு வாசம் புடிச்சுக்கிட்டிருந்த கணேசன் முந்தின நாள் கதையச் சொன்னான்!

பரவால்லடா, அந்தப் புள்ள நல்ல புத்திசாலி!

சாமிநாத ஆசிரியருக்கு மத்த எல்லா வாத்தியாரும், டீச்சரும் பையன், புள்ளதான்!

வருஷம் தவறாம ஈரோட்டுக்குப்போய் நோட்டு, புஸ்தகமெல்லாம் வாங்கிக்கிட்டு வந்து, சென்னிமலை ஆறுமுகன் கடை முக்கிலிருந்து AMR கடை மாட்டுவண்டியில போட்டு கூடவே நடந்த வருவார்!

அட்டைபோட எல்லாருக்கும் கெட்டி அட்டை வாங்கிக்கிட்டு வருவார்!

மழுங்கச் சிரைத்த முன் தலையும், பின்புறக் கட்டுக்குடுமியும் பார்க்க அவ்வளவு அழகு!

எல்லாருக்கும் கடுங்காப்பி குடுப்பாரு! சாமியப்பன் டீக்கடைல தொட்டாங்குச்சில  டீ வாங்கி வெளிய நின்னு குடிக்கற குமாருக்கும் வூட்டுக்குள்ள உக்காரவெச்சு எல்லாரும் குடிக்கற டம்ப்ளர்லதான் காபி குடுப்பாரு!

ஈஸ்வரன் மட்டும் அவங்க ஆயா திட்டும்ன்னு சார் வீட்ல காபி குடிக்கமாட்டான்!

பறப்பய, பள்ளப்புள்ளைக்கும் நம்ம புள்ளைகளுக்கும் ஒன்னா காபி குடுக்கறாரு அந்தக் கூறுகெட்ட பாப்பார வாத்தி அப்படின்னு ரவி அம்மாயி கூட சத்தம் போடும்! ஆனா ரவி கண்டுக்கமாட்டான்!

புஸ்தகம் குடுத்ததுக்கு மேலவளவு ஆளுங்க கிட்ட காசு வாங்கிக்கமாட்டார் சாமிநாத ஆசிரியர்!

போங்கடா! உங்களுக்கெல்லாம் நாங்க ரொம்ப கடன் பட்டிருக்கறம்! 

இத்தனைக்கும் ஒத்தை ரூம்பு ஓட்டு வூடுதான் சாருதும்!

புத்தக வாசம் புடிக்கற பசங்களக் கேப்பாரு
எப்படி என்னடா வாசம் அதுல?

தெரீல சார்! புதுப் பேப்பர் மணம் நல்லாருக்குது!

அது புதுப் பேப்பர் வாசமில்லடா, அதுல இருக்கற எழுத்து வாசனை!
எழுதுனவனுக்கு மட்டுமே புரிஞ்ச வாசனை! நாங்க வாத்திமாருங்க எங்களுக்குப் புரிஞ்ச அர்த்தம், நாங்க சொல்லி நீங்க புரிஞ்சுக்கற அர்த்தம்ன்னு நாறிப்போய் அந்த வாசம் காணாமலே போய்டுது!

சார் சொன்னது புரிய முப்பது வருஷம் ஆச்சு!

சரி, ஜெயா டீச்சருக்கு வருவோம்!

ஜெயா டீச்சர் சென்னிமலை தாண்டி ஊர் எல்லைல வாய்க்கால் ஓரமா குடியிருந்தாங்க! பொட்டு, பூ எதுவும் வைக்கமாட்டாங்க!

நாலு கிலோமீட்டர் தூரமும் நடந்தே வருவாங்க! கார்த்தால கொடையப் புடிச்சுக்கிட்டு அவங்க நடந்து வரதப் பார்த்தா அவ்வளவு அழகா இருக்கும்! ஆனா மணியக்காரர் தோட்டம் தாண்டியதுமே கொடைய மடக்கி கைல வெச்சுக்குவாங்க!

ஏன் டீச்சர்ன்னு கேட்டா, ஒரு சின்ன சிரிப்போட, உனக்குத் தெரியாதுடா, நீ சின்னப் பையன்னு சொல்லும்போது, அந்த சிரிப்பே அழுவறமாதிரிதான் தெரியும்!

அவங்க வேதகாரங்க, அப்படித்தான்னு பெரியசாமி சொன்னது ரவிக்கு அப்போப் புரியல!

ரவி, அடுத்தடுத்து தங்கச்சி, தம்பின்னு பொறக்க, அம்மாவை விட்டு, இங்க அம்மாயி வீட்லதான் இருந்தான்!

கல்யாணம் ஆகாத ரெண்டு சித்தி, அம்மாயி, வளவு முழுக்க அக்கா அத்தனை பேருக்குமே ரவிதான் செல்லப்பிள்ளை!

மெத்தைவீட்டுப் பேரன்னு எங்க போனாலும் மரியாதை!

பள்ளிக்கூடம் போனாலும், பாவடிக் கெணத்துக்கு வரும்போது, ஏதோவொரு சித்தி கிண்ணத்துல ஏதாச்சும் தீனி கொண்டுவந்து ஊட்டிவிட்டுட்டுப்போவாங்க!

வாத்திமாருங்க உக்கார்ற ரூமுக்குள்ள வெச்சுத்தான் ஊட்டிவிடுவாங்க!
அப்ப டீச்சர் இருந்தா சேரவிட்டு எந்திரிச்சு நின்னுக்குவாங்க!

சித்தி, என்ன ஜெயா நல்லாயிருக்கறயான்னு கேட்டா, நல்லாருக்கறனுங் அப்படின்னு பம்முவாங்க!

ஒருநாள் டீச்சர்கிட்ட ரவி கேட்டான்- டீச்சர், எங்க சித்திய உங்களுக்குத் தெரியுமா?

தெரியுண்டா கண்ணா, நாங்க பள்ளிக்கோடத்துல ஒன்னா படிச்சோம்!

அப்பறம் ஏன் அவங்க உங்கள வா போன்னு பேசறாங்க, நீங்க மட்டும் மரியாதையா எந்திருச்சு நின்று பேசறீங்க?

உனக்கு இது தெரியவேண்டாம்டா!ன்னுட்டு வேகமாகப் போய்ட்டாங்க!

சித்திகிட்ட இதையே கேட்டா, அது அப்படித்தான்னு சொல்லிட்டாங்க!

சரி, அவங்க டீச்சராய்ட்டாங்க, நீங்க ஏன் ஆகலை?

நான் எஸ்ஸெல்சிக்கு மேல படிக்கலடா!

ஏன்?

அது அப்படித்தான்!

மாமா மட்டும் மெட்றாஸ் போய்ப் படிக்கறாரு?

அதெல்லாம் உனக்குப் புரியாது!
வா, ஐயர் கடைல முறுக்கு வாங்கித்தாரேன்!

அந்த ஞாயித்துக்கெழம, பசங்கள்ளாம் வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு சுத்தும்போது குமார் கேட்டான், டேய், டீச்சர் வூட்டுக்குப் போலாமா?

சீ! நான் வரலன்னு ஈஸ்வரன் மட்டும் நின்னுக்கிட்டான்!

தோட்டத்து வழியா குறுக்க பூந்து டீச்சர் வீட்டுக்குப் போனா, சே! என்ன இந்த இடத்துலயா டீச்சர் இருக்கறாங்க?

வழியெல்லாம் பன்னி மேயுது! சின்ன ஓட்டுவூடு டீச்சருது!

பசங்களப் பாத்ததும் டீச்சருக்கு அத்தனை சந்தோசம்!
எல்லாரையும் கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க!

கடைல கலர் வாங்கிக்குடுத்தாங்க!

கறுப்புக்கலர் புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு கோயிலுக்குப் போனாங்க!

அது கோயிலாட்டமே இல்ல! கொஞ்சம் பெரிய குடிசை! அதுல சிலுவதான் இருந்துச்சு! சாமியெல்லாம் எங்க டீச்சர்ன்னு கேட்டா, இதுதான்டா எங்க சாமிங்கறாங்க!

வீட்டுக்கு வந்தா, அம்மாயி தொரத்தித் தொரத்தி அடிக்குது!

சித்திதான் தடியப் புடுங்கிப்போட்டுட்டு குளிக்கவெச்சு வூட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போச்சு!


மறுநாள் பள்ளிக்கூடத்துக்கு வந்த சித்தி டீச்சர கண்டபடி சத்தம் போட்டுட்டாங்க! கொஞ்சநேரம் அழுத டீச்சர் கண்ணத் தொடச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க!

அதுக்கப்பறம் ஈஸ்வருக்குத் தெரியாம நெறயாத் தடவ டீச்சர் வூட்டுக்குப் போனாலும் அவங்க ஏனோ அந்தக் கோயிலுக்கு கூட்டிக்கிட்டே போவல.

ஒரொரு தடவையும் இங்க வந்தத யாருக்கும் சொல்லாதேன்னு சொல்லி அனுப்புவாங்க!

நீங்க ஏன் டீச்சர் இந்த பன்னி சந்துல இருக்கறீங்க, ஊருக்குள்ள வந்துறலாமேன்னு கேட்டா, எங்க பொறப்புக்கு இதுதான்டா விதின்னு அழுகற மாதிரி சிரிப்பாங்க!

எல்லாமே சீக்கரம் ஒரு முடிவுக்கு வந்துச்சு! ஒருவாரம் டீச்சர் எப்பப்பாத்தாலும் அழுதுக்கிட்டே இருந்தாங்க!

அஞ்சாப்பு துரைசாமி சார்தான் சொன்னாரு!

அவளுக்கு கல்யாணம்டா, இனி வரமாட்டா!
அன்னைக்கு க்ளாஸ்ல எல்லாரும் போகாதீங்க டீச்சர்ன்னு அப்புடி ஒரு அழுகை!

நானே உங்கள கல்யாணம் பண்ணிக்கறேன் டீச்சர், எங்க ஊட்டுக்கு வந்துருங்கன்னு ரவி அழுதுக்கிட்டே சொல்ல, அவன கட்டிப்புடிச்சுக்கிட்டு அழுது தீர்த்துட்டாங்க டீச்சர்!
கொஞ்ச நேரம் பொறுத்து, எல்லாரும் நல்லாப் படிக்கணும்ன்னு சொல்லிட்டு, ஆளுக்கொரு முத்தம் குடுத்துட்டுப் போனாங்க!

அந்தவாரமே கல்யாணம் முடிச்சு காங்கேயம் போய்ட்டாங்க!

சாமிநாத ஆசிரியர்தான் சொன்னாரு! என்ன படிச்சா என்னடா, அவ பொழப்பு சாராயக்காரன் வீட்ல பன்னி மேய்க்கத்தானே ஆச்சு!
உங்க காலத்துலயாச்சும் இது மாறணும்டா!

எதுமே புரியாம தலைய ஆட்டுனாங்க எல்லாரும்!

ரவிதான் அடுத்த ரெண்டு வருஷத்துல அப்பா அம்மாகூட சென்னிமலைய விட்டே போய்ட்டான்!

அப்பாகூடப் பேசி, பழகப்பழகத்தான் ஜெயா டீச்சர் கதை ரவிக்குப் புரிஞ்சுது!

எட்டாவது படிக்கும்போது பழைய பள்ளித்தோழன் ராஜாமணிகூட மலைக்குப்போகும்போது கேட்டான்!
ஏன்டா, ஜெயா டீச்சர் பத்தி எதாச்சும் தெரியுமா?

இன்னுமாடா அவங்கள நீ மறக்கல?
ரெண்டே வருஷத்துல அவங்க அறுத்துக்கிட்டதாவும், முத்தூர் பள்ளிக்கூடத்துல வேலைக்கு சேர்ந்துட்டதாகவும் சொல்றாங்க!

போன வருஷம் காங்கேயம் மாத்திக்கிட்டுப்போய்ட்ட சாமிநாதன் சார் அவங்கள கட்டிக்கிட்டதாவும் பேசிக்கறாங்க!

எது உண்மைன்னு யாருக்குத் தெரியும்?

ரொம்பநேரம் ரெண்டுபேரும் எதுவுமே பேசிக்கல!

கால ஓட்டம் எல்லாத்தையும் மறக்கடிச்சாலும் இன்னைக்கும் டீச்சர்ஸ் டேன்னா ரவிக்கு ஜெயா டீச்சர் நியாபகம் வராம போனதில்லை!

ஏறத்தாழ முப்பத்தஞ்சு வருஷம் ஆச்சு! 

ராஜாமணி சொன்னது உண்மையா, பொய்யான்னு தெரியல!

ஆனா உண்மையா இருந்தா நல்லதுன்னு தோணிக்கிட்டேதான் இருக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக