செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சர்வாதிகாரி!

உலகத்தின் கடைசி சர்வாதிகாரி!


ஹோலோகிராஃபிக் இன்டெர்ஃபேஸ் உரையாடலில் நோவாவிலிருந்த வைஸ் பிரசிடெண்ட்டுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த ஆத்மாவுக்கு  துருவன் கேள்வி முதலில் புரியவில்லை!

அப்பா, சர்வாதிகாரின்னா யாருப்பா?”
கொத்தடிமைன்னா என்ன?”

நாம் பிறகு பேசுவோம் ஆத்மா, முதலில் குழந்தையின் சந்தேகத்தை தெளிவுபடுத்து சொல்லியபடி கரைந்து காணாமல் போனார் வி பி!

2516ல் முக்கியமான விதி, என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை தேடிக் கண்டுபிடித்தாவது சொல்லவேண்டும் என்பது.

இந்த சில நூற்றாண்டுகளில் எத்தனை மாற்றம்!

ஜனத்தொகை எல்லைமீறி பூமி தடுமாறிக்கொண்டிருந்தவேளை, உயிர்வாழ சாத்தியமுள்ள நோவா, ஆல்ஃபா, ஏவிட்டா கிரகங்களில் எல்லோரும் குடியேற, இப்போது உலகம் என்பதற்கான அர்த்தம் ஏழு கிரகங்களின் தொகுப்பு!

வழக்கிலிருந்த அத்தனை மொழிகளும் அழிந்துபோய், தமிழ் மட்டுமே ஒரே தொடர்பு மொழி!

இன்னும் பண்டைக்காலத்தில் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு பிராந்தியம் மட்டும் ஆங்கிலம் என்னும் மொழியை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டிருப்பதாய் சொல்கிறார்கள்!

இலக்கியம், வரலாறு இவற்றை தன் விருப்பமாகப் படிக்கும் மகன் ஈராயிரம் ஆண்டு தமிழக வரலாறு என்றொரு மின்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான்.

பத்து வயதுப் பையன் ஆய்வுக்கட்டுரை எழுதுவது முன்னேற்றம் என்றால், இப்படியான தடுமாறவைக்கும் கேள்விகள் அதன் விலை!

கொத்தடிமை என்பது, ஒரு மனிதனை சுய சிந்தனை இல்லாமல், மற்றொரு மனிதனுக்கோ, அமைப்புக்கோ அடிமையாக வைத்திருப்பது. அவர்கள் கேள்வி கேட்கவோ, மறுத்துப் பேசவோ உரிமையற்றவர்கள்.
 “சர்வாதிகாரி என்பவர், தன் முன்னால் யாரும் சரிசமமாக நிற்பதை விரும்பாதவர்.
மாற்றுக்கருத்து, விவாதம் இவை எல்லாம் சட்டவிரோதம் என்று நினைப்பவர்.

இந்த வழக்கம் எந்த ஆண்டுவரை இருந்தது?”

மனிதன் நாகரீகம் அடைய ஆரம்பித்து முதல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பித்த இந்தப் பழக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டோடு வழக்கொழிந்து போனது!
உகாண்டா என்னும் ஒரு சிறிய நாட்டை ஆண்ட இடி அமீன்தான் கடைசி சர்வாதிகாரி!
கொத்தடிமை முறை அதற்கு முன்பே ஒழிந்துபோனது!

போப்பா, நீ தப்புத் தப்பாய் சொல்லித்தர்றே!
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுவரை கொத்தடிமை முறை இருந்தது, உலகத்தின் கடைசி சர்வாதிகாரி பெயரும் தப்பு!

இப்போது ஆத்மாவுக்கே ஆச்சர்யம்!

தனக்கு வரலாற்றுத் தேர்ச்சி அதிகம் என்ற எண்ணம் அவனுக்கு எப்போதுமே உண்டு!
மகன் சேகரித்துவைத்திருந்த தகவல்கள் படிக்கப் படிக்க அவனை ஆச்சர்யப்படுத்தியது!

இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி!

நாகரீக வளர்ச்சியும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் புது உயரங்களைத் தொட ஆரம்பித்திருந்த காலம்!
உலகின் பல பகுதிகளில் ஜனநாயகம் என்ற ஆட்சிமுறை பரவலாக வேரூன்றி இருந்த காலம் அது!

உலகின் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்ற அந்த நாட்டில்தான் உலகின் கடைசி சர்வாதிகாரி இருந்தார் என்ற தகவல் ஆத்மாவுக்கு ஆச்சர்ய முரண்!

நம்ப முடியாத அந்தத் தகவல் படிக்கப்படிக்க அதிர்ச்சியையே தந்தது!
ஜனநாயகமும், மக்கள் உரிமைகளும் தழைத்து வளர்ந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இருண்ட காலம் அது!அந்தக் குட்டி நாட்டை ஆட்சிசெய்த அந்தச் சர்வாதிகாரிக்கு, தன்முன் யார் நிமிர்ந்து நின்று பேசினாலும் பிடிக்காது.

தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் யாரையும் அமரவைத்துப் பேசியதே இல்லை என்பதோடு, அவர்கள் அவர் முன் எத்தனைதூரம் குனிந்து வளைந்து நிற்கிறார்கள் என்பது அவர்களின் முக்கியத் தகுதியாக கருதப்பட்டது!

எந்த அமைச்சருக்கும், எந்த அதிகாரிக்கும் பதவிகள் நிரந்தரமில்லை!
நொடிக்கு நொடி மாறும் மாறுதல்களுக்க மக்களுக்கு எந்தக் காரணமும் சொல்லப் படவில்லை!

தன்னால் அமைச்சர் ஆனவர்களைப் பந்தாடும் அதே வேகத்தோடு அரசு அதிகாரிகளையும் பதவி மாற்றம் செய்வது அவருக்குப் பிடித்தமான விளையாட்டு!

அவர் காலத்துக்கு சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துபோன மன்னர் ஆட்சி முறையின் நீட்சியாகவே தன்னை அவர் கருதினார்!

வெயிலே பார்க்காத அவர் வீட்டை விட்டு வெளியே வருவதே திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது!

அவர் வீட்டிலிருந்து வெளியே வரும் பாதை எங்கும் வண்ணவண்ணப் பதாகைகள் வைக்கப்பட்டன!

அவர் காதுபட ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ராஜகுல திலக என்றவகையான கோஷங்கள் அடுக்கடுக்காய் கூவப்பட்டன!

போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது அடை மொழிகள் உருவாக்கப்பட்டு ஆளுயர எழுத்துக்களில் வழியெங்கும் ஜொலித்தன!

தன் சக அமைச்சர்களின் குனிந்து நிற்கும் முதுகுகளும் பிருஷ்டங்களும் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரியும்வண்ணம் நடைமுறைகள் மாற்றப்பட்டன!

அந்த அடிமைகளுக்கு முகங்கள் என்ற ஒன்று தேவையில்லை என்ற பொது விதி உருவாக்கப்பட்டது!

தன்னுடைய பெயரைச் சொல்லும் உரிமை நாட்டில் யாருக்கும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாகவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டது!

அடைமொழிகளால் மட்டுமே தான் அழைக்கப்படவேண்டும் என்பது அவரது விதிமுறைகளில் முக்கியமானது!

மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றத்தில் தனக்கு எதிர் வரிசையில் ஆட்கள் இருப்பதை எப்போதும் அவர் விரும்பியதே இல்லை!

அப்படி அங்கு ஆட்கள் அமர நேரும்போது, அவர்களைக் கூச்சலிட்டு அவமானப்படுத்தி வெளியேற்ற அடிமைகளுக்குள் எப்போதும் போட்டாபோட்டி!

தலைமையைக் குளிர்விக்கும் போற்றிகளும் புகழுரைகளும் அவருக்கு அலுக்க ஆரம்பித்த காலத்தில், மன்னர் அவைகளில் இருந்த விதூஷகர்களை உருவாக்கினார்!

அவர்கள் பாடல்கள் பாடியும் நடனம் ஆடியும் அவரை மகிழ்வித்தனர்!

அந்த உற்சாகத்தில், எதிரே ஆட்கள் இல்லாத சபையில் டான் குவிக்ஸாட் போல வீர வசனம் பேசுவது அவரது விருப்பமான பொழுதுபோக்கு!

தனக்கு முன்னால் ஆட்சி செய்தவர்களையும், தனக்குப் பின் ஆட்சியாளர் ஆக நினைப்பவர்களையும் அவர்களது வயது உடல்நிலை இவை குறித்து மட்டமான வார்த்தைகளால் வசை பாடுவதற்கே சட்டமன்றம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது!

இதையெல்லாம் கேள்வி கேட்கவேண்டிய மக்களை சிந்திக்கவே விடாமல் எந்தநேரமும் போதையில் வைத்திருக்க, தெருக்கள்தோறும் சாராயக் கடைகளை அரசே திறந்தது!

அரசின் முழு வருமானமும் சாராயம் காய்ச்சி விற்பதில் என்றானது!
அந்த சாராயத்தையும் காய்ச்சி விற்றது அவரும் அவரது கூட்டாளியான நிழல் சர்வாதிகாரியும்!

தனக்கு முன்னால் ஆட்சி செய்தவர் அமல் படுத்திய எல்லா மக்கள் நலத் திட்டங்களையும் தவறாமல் தடை செய்தவர், அவர் காலத்தில் விதைக்கப்பட்ட தீமைகளை மட்டும் உரம் போட்டு விருட்சமாக வளர்த்தார்!

சாராயக்கடையில் மாக்கள் கொண்டுவந்து கொட்டும் செல்வத்தில் ஒரு கடுகளவு பங்கை எடுத்து அவர்களுக்கே இலவசமாகக் கொடுத்தார்!
அதிலும் மறக்காமல் தன்  உருவத்தையும் பெயரையும் பதித்தே கொடுத்தார்!

மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் அத்தனை திட்டங்களுக்கும் தன்  பெயரைச் சூட்டி, ஏதோ தன் பரம்பரைச் சொத்தை மக்களுக்கு தானமாகக் கொடுத்ததுபோல் ஒரு பிம்பத்தை விதைத்தார்!

தட்டிக் கேட்கவேண்டிய எதிர்க்கட்சி, இதையெல்லாம் ஆரம்பித்தது தாங்கள்தான் என்ற குற்ற உணர்ச்சியில் முடங்கிக் கிடந்தது!

ஆனால் அந்த சர்வாதிகாரிக்கும் ஒரு மனக்குறையும், ஒரு மனவருத்தமும் இருந்தது!

சர்வ அதிகாரமும் படைத்த உயரிய ஜீவராசியான தான், ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்களை சந்திக்கச் செல்வது அவருக்கு ஒரு அவமானமான மனக்குறையாகவே இருந்தது!

வானத்தில் பறந்தாலும் ஒருமுறையேனும் தரையிறங்கவேண்டும் என்ற இந்த அமைப்பு அவருக்கு சகிக்கமுடியாததாக இருந்தது!

காணொளி மூலமே தான் தரும் தரிசனம் இந்த அடிமைகளுக்குப் போதாதா என்ற குமுறல் அவருக்கு எப்போதுமே உண்டு!
இதைத் தவிர்க்க, தான் அந்த நாட்டின் பிரதான அமைச்சராய் மாறி சட்டத் திருத்தம் மூலம் மீண்டும் தடையற்ற மன்னராட்சி கொணரலாம் என்று ஒருமுறை அவர் குடித்த மனப்பால் ஏனோ ஜீரணம் ஆகவில்லை!

மனவருத்தம் என்னவென்றால், அந்த நாட்டின் அரசியல் அமைப்பு, ஆள்பவர் மீதும் வழக்குத் தொடரும் உரிமையை மக்களுக்கும், அதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கும் என்று வகுத்துத் தொலைத்திருந்தது!

தான் ஆட்சியில் அமர்ந்த முதல் சில ஆண்டுகளில், அனுபவக்குறைவு காரணமாக வெளிப்படையாக ஆவணங்கள் மூலம் தான் வாங்கிய சில சொத்துக்கள் தனக்கே சுமையாகிப்போகும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை!

அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது அடிமைக்கூட்டம் அதிர்ந்துபோனது!
உயிரோடு மூன்று பெண்களைக் கொளுத்தித் தன் எதிர்ப்பைப் பகிர்ந்துகொண்டது!

அதன்பின் அவர் அந்த வழக்கை ஒரு சாதனைக்காலம் இழுத்தடித்தும், ஒரு வளையாபதி நீதிபதியால் தண்டிக்கப்பட, கொத்தடிமைக்கூட்டம் மண்சோறு தின்றும், தீக்குளித்தும் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தி ஆட்டம் போட்டும் தன் அடிமைச் சிறுமதியை நிரூபித்து அவரைக் குளிர்வித்தது!


இடையில் பிணையத்தில் வெளிவந்த அவரை, வழியெங்கும் பூத்தூவி வரவேற்றது!

பிறகு ஒரு கணக்கியல் மேதை மூலம் அவரது குற்றம் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கும் குறைவானது என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது!

இருந்தும் ஊழ்வினை உச்சநீதிமன்றம் போனது!
தன் ஆயுட்காலக் கூட்டாளிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் தெம்பு அவரைக் கொஞ்சம் அலட்சியமாகவே இருக்கவைத்தது!
இருந்தும் ஏனோ சில தகவல்கள் கொஞ்சம் கவலை தர,
 சளிப்பிடித்ததென்று மருத்துவமனையில் ஐக்கியமானார்!

இப்போதும் அடிமைக்கூட்டம் பால் காவடியும் தீச்சட்டியுமாய் அலைய, இன்னொரு கொத்தடிமைக்கூட்டம் இரக்கமற்ற சளியைக் கண்டித்து போஸ்டர் அடித்து ஒட்டியது!

அண்டை மாநிலத்தில் ஜனநாயகத்தை அனுபவிக்கும் மக்கள் தங்களைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதை மறந்து அடிமைக்கூட்டம் ஆஸ்பத்திரி வாசலில் போலிக்கண்ணீர் விட்டு தவம் கிடந்தது!

படிக்கப்படிக்க ஆத்மாவுக்கு ஆத்திரம் பொங்கியது!


இது நிச்சயம் கட்டுக்கதை! ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் ஒருபோதும் நடந்திருக்காது!

உலகெங்கும் விஞ்ஞானமும் அறிவும் விருத்தியடைந்து மக்கள் அறிவு தாகம் எடுத்து அலைந்த காலத்தில் ஒரு இன மக்கள் மட்டும் இவ்வளவு மதியற்று அடிமைகளாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை!

அதிலும் உலகத்துக்கே அறிவாளிகளை ஏற்றுமதி செய்த, இன்றும் அழியாத ஒரே மொழியை உருவாக்கி வளர்த்த தமிழினம் இப்படி எந்தக் காலத்திலும் இருந்திருக்காது!

சொன்னபடியே, சரித்திரக் குறிப்புகளைத் தந்த இணைப்புப் பக்கத்தைத் துண்டித்து எறிந்தான் ஆத்மா!

உண்மை அவனைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தது ஊமையாய்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக