வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சாமிநாத ஆசிரியர்.
ஜெயா டீச்சரைப்பற்றி எழுதியபோதே சாமிநாதஆசிரியர் பற்றித் தனிப்பதிவு எழுத நினைத்தேன். 
ஒரு பதிவில் உபகதாபாத்திரமாக வந்துபோக அவரை விட்டுவிடச் சம்மதமில்லை!

என்னைச் செதுக்கிய முதல் உளி அவர்!

வரமாக வந்த வாத்தியார்!
நிச்சயமாக ஆசான் என்பதற்கு வாழும் அர்த்தம்!

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி என்ற நாமகரணம் பெற்ற கச்சிதமான பள்ளி!
ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள்!
ஊர்க்குளத்தின் கரையை ஒட்டிய அழகுக் கட்டிடம்!

அதற்கு பஞ்சகச்சமும் நெற்றியில் ஸ்ரீசூரணமும் சோடாபுட்டி கண்ணாடியுமாக சாமிநாத ஆசிரியர் சைக்கிள் மிதித்து வருவது அப்படி ஒரு அழகு!

எதிர்ப்படுவோர் வைக்கும் அத்தனை வணக்கங்களும் பதில் வணக்கம் - சின்னவர் பெரியவர் பேதமின்றி!

அத்தனை மாணவர்களுக்கும் அவரைப்பிடிக்க ஆயிரம் காரணங்கள். 
அதில் தலையாயது அன்பு!

பள்ளிக்குள் நுழைந்ததும் சாப்ட்டீங்களாடா என்ற பொதுவான கேள்வி வரும்!

எல்லோரும் ஆமென்று சொன்னாலும், சிலர் கண் சொல்லும் செய்தி அவருக்கு மட்டும் புரியும்!

“டேய், நீ போய் சமையல்கட்டுல உப்புமா இருக்கும்! சாப்பிட்டுட்டு வா, ஏய் வள்ளி, நீயும் போ!”

அப்போதெல்லாம் அமெரிக்காவிலிருந்து மக்காச்சோள மாவும், குருணையும் மூட்டை மூட்டையாக வரும்!

காலையிலேயே, குருணை வேகும் மணம் மூக்கைத் துளைக்கும்!
சாமிநாத ஆசிரியர் ஏற்பாடு அது!

காலை முதல் மணி அடிப்பதற்குள் ஒரு ஐம்பது குழந்தைகளுக்கான உப்புமா ரெடியாகவேண்டும்!

யார் என்ற பேதமில்லை! எந்தக் குழந்தை கண்ணில் பசி தெரிகிறதோ, அதற்கு முதலில் சாப்பாடு! அப்புறம்தான் படிப்பு!

பொதுவாக, வாரம் ஒருமுறையோ, இருமுறையோ வரும் நீதிபோதனை வகுப்புதான் அவர் எடுப்பது!

ஊரில் நடக்கும் நல்லது கெட்டது எதற்கும் சாமிநாத ஆசிரியர் இல்லாமல் இருந்ததில்லை!

அந்த ஆள் எதுக்கு கீழவளவு வீட்டுக்குக்கெல்லாம் போறாரு?
இது ஊரில் மற்றவர்களுக்கு பெரும் ஆதங்கம்!

இதை சிலர் நேரிடையாகவும் கேட்டதுண்டு!

"கீழவளவு ஆளுங்க இல்லேன்னா ஊரு நாறிப்போகும் முதலியாரே!
இன்னைக்கு சாயங்காலம் அவங்க கக்கூஸ் க்ளீன் பண்ண வரலேன்னா நாளைக்கு காலைல நீங்க கல்லு பொறுக்கிக்கிட்டு மலங்காட்டுக்குத்தான் போகவேண்டியிருக்கும்!”  
கொஞ்சமும் தாட்சண்யம் இல்லாத பதில் முகத்தில் அறையும்!

ஊரில் எல்லோரும் கூப்பிடுவதுபோல் “டேய் மாதாரி”ன்னுதான் அவரும் கூப்பிடுவார்! ஆனால் அதில் அதிகாரத்துக்குப் பதில் அன்பு வழியும்!

அவர் டேய் என்று கூப்பிடுவது மாதாரியை மட்டுமல்ல, மணியக்காரர், பெருமாள் கோவில் ஐயர் என்று ஊர் கூப்பிடும் பார்த்தசாரதி ஐயங்கார் உட்பட அனைவரையுமே!

(பார்த்தசாரதி ஐயங்கார் பெண்கள், அதிலும் கருடாழ்வார் என்ற நாமகரணி, மூத்தபெண் பற்றி முடிந்தால் பின்னொருநாளில் பேசுவோம்)

அது மட்டுமல்ல உடன் பணிபுரியும் அத்தனை ஆசிரியர்களும், அந்தப் பையன், பொண்ணுதான்!

இத்தனைக்கும் அவருக்கு அப்போது வயது முப்பதுக்குள்தான் இருக்கும்! ஆனால் அறிவை வைத்து வயதைக்கணித்தால், நூறைத் தாண்டும்!

புரோகிதம் என்று யார் கூப்பிட்டாலும் கண்டிப்பாகப் போவார். 
முன்னால் கூப்பிடுபவருக்கு முன்னுரிமை!

சம்பாவணை, மேலவளவு, கீழவளவு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான்!
வெற்றிலை பாக்கில் வைத்து நாலணா!

“வேதத்தைக் காசுக்கு வித்ததாலதானடா பார்ப்பான் பிச்சையெடுக்கறான்! என்னையும் பிச்சைக்காரனாக்காதீங்க!”

அந்த நாலணாவும் நாமதாரி கடையில் செலவாணி ஆகிவிடும்!

பள்ளிக்கூடத்தில் ஆரஞ்சு மிட்டாய் விநியோகம் நடந்தால், அன்றோ, அதற்கு முந்தின நாளோ, சாமிநாத ஆசிரியருக்கு சம்பாவணை வந்ததென்று அர்த்தம்!

ஊருக்குள் வரும் சின்னச்சின்ன உரசல்களுக்கு சாமிநாத ஆசிரியர் சொல்வதே இறுதித் தீர்ப்பு!

ஊரில் இரண்டு டீக்கடை!
அதில் கொஞ்சம் பெரியது மிலிட்ரியார் கடை!

மிக்ஸர் பொட்டலமும், டீ டம்ளருமாய் உள்ளே நாங்கள் சாப்பிட, கீழவளவு ஆட்கள் வந்தால், வெளியே தொங்கும் தொட்டாங்குச்சியில்தான் டீ! 
அதையும் அவர்களேதான் கழுவி வைக்கவேண்டும்!

சாமிநாத ஆசிரியரை மிலிட்ரியார் டீ குடிக்க அழைத்தால், ஒரே பதில்தான்!

“மணி, ஒண்ணு, அவனுக்கு க்ளாஸ்ல குடு, இல்லைன்னா எனக்கு அந்தத் தொட்டாங்குச்சியில ஊத்து!”

அவருக்கு ஜெயா டீச்சர் மேல அப்படி ஒரு வாஞ்சை!

“அந்த ஜாதில பொறந்து இன்னைக்கு ஐயர்ப்பசங்களுக்கும் உங்க பசங்களுக்கும் சரஸ்வதி ஆனவடா அந்தப் பிள்ளை!”

வருஷம்தோறும் ஈரோட்டிலிருந்து புத்தகம்,நோட்டு வாங்கிட்டு வர்றது சார் வேலை!

மாட்டுவண்டில போட்டு எடுத்துக்கிட்டு வந்து ஒவ்வொரு கிளாஸா வீட்டுக்கு வரச்சொல்லி விநியோகம்!

புதுப் புத்தக மணத்தை ஆசையாய் இழுக்கும்போது சொல்லுவார்!

“நல்லா இழுத்துக்கடா!
அது இங்க் வாசமல்ல, எழுதுபவன் எழுத்து அர்த்தத்தோட வாசனை!”
“இதை நாங்க சொல்ற அர்த்தம், நீங்க புரிஞ்சுக்கற அர்த்தம் எல்லாம் அழுக்குப் பண்ண, வருஷம் முடியறதுக்குள்ள நாறிப்போகும்!”

பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பாத்தி, ஒரு தோட்டம்!

அதில் அந்தந்த வகுப்பு மாணவர்கள் தக்காளி, கத்திரி, வெண்டை என பொறுப்பு!

விளைச்சலை விற்று வரும் பணம், அந்த வருடம் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு! 

போனஸாக சாமிநாத ஆசிரியர் தரும் பேனா!

நீதிபோதனை வகுப்பில் அத்தனை கதைகள்! 
எல்லாமே உறுத்தாத போதனையோடுதான் முடியும்!

பாரதி அவர் ஆதர்சம்!
“அந்தக் கிறுக்கன் எங்க ஜாதியில பொறக்காம இருந்திருந்தா, நீங்க, நான் எல்லாருமே கொண்டாடியிருப்போம்!”

அவர் சொன்னது புரியும் வயது வந்தபிறகு அவரை நான் சந்திக்க வாய்க்கவில்லை!

எல்லா வகுப்பிலும் மக்குப் பசங்களுக்கு அவர் வீட்டில் இலவச டியூசன்!
- வெல்லம் போட்ட கடுங்காப்பியோடு!

“ஐயையே, நீங்க ஏன் சார் பொம்பளை மாதிரி சமைக்கிறீங்க?
பேசாம கல்யாணம் பண்ணிக்கலாம்ல?”

“இன்னொரு செல்லம்மா இந்த உலகத்துக்கு வேண்டாம்டா” ன்னு சத்தமா சிரிப்பார்!

சாமிநாத ஆசிரியர் வீட்டில் காப்பி குடிச்சேன் அப்படின்னு எங்க பாட்டிகிட்ட சொன்னா, கண்டபடி திட்டு விழும்!
அந்த ஆள் கீழவளவு புள்ளைகளையும் உள்ள விட்டுக்கிட்டு பொழங்குறான் அவன் வீட்ல காஃபி குடிக்குது பார் இது!
இது சொல் பேச்சு கேக்காமத்தான் அலையப்போகுது!

தீர்க்கதரிசி என் பாட்டி!
அப்படித்தான் ஆச்சு!!

ஒவ்வொரு வருஷமும் முழு ஆண்டுப் பரீட்சை முடிஞ்சதும் தவறாமல் ஒரு காட்சி அரங்கேறும்!

அஞ்சாப்பு முடிச்ச பசங்க பொண்ணுங்க எல்லாம் சாமிநாத ஆசிரியரைக் கட்டிக்கொண்டு அழும்!

சார், நீங்க ஐஸ்கூல் வந்துருங்க ஸார்!

கண்கள் கசிய, சிரித்துக்கொண்டே தட்டிக்கொடுத்து அனுப்புவார்!
இது ஒரு வருடம் கூட தவறாத காட்சி!

ஒருமுறை பள்ளி நாடகத்தில் நேருவும் ஜாக்சன் துரையும் என்று ஒரு நாடகம்! வசனம், சாமிநாத ஆசிரியர்!

சிறப்பு விருந்தாளி, மாவட்டக் கல்வி அதிகாரி சாமிநாத ஆசிரியர் காலில் விழுந்து கும்பிட்டதை ஊரே வியந்து பார்த்தது!

தட்டமுடியாது பாட்டி வீட்டிலிருந்து அப்பா அம்மாவோடு போக நேர்ந்தபோதும், ஒவ்வொரு விடுமுறையிலும் ஊருக்குப் போகும்போதெல்லாம் சாமிநாத ஆசிரியரைப் பார்க்காமல் வந்ததில்லை!

எட்டாவது படிக்கும்போது சார் காங்கேயம் ஸ்கூலுக்கு மாறுதல் வாங்கிப்போய்விட்டார் என்ற தகவல்!

அதற்குப்பின் ஒரு சந்திப்பில் பள்ளித்தோழன் ராஜாமணி சொன்னது 
“சாமிநாத ஆசிரியர், அறுத்துக்கிட்டு வந்த ஜெயா டீச்சரை கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சிலர் சொல்றாங்கடா!”

இப்போதுபோல் அப்போது தகவல் தொடர்பு வசதிகள் இல்லை.

எனினும் சற்றே மெனக்கெட்டிருந்தால் சாமிநாத ஆசிரியரைத் தேடிப்போய் சந்தித்திருக்கலாம்!

ஆனால், ராஜாமணி சொன்ன செய்தி உண்மை என்றே நம்புவது சுகமாக இருந்தது!

தேடிப்போய் அது பொய் என்று போனால், அதை சந்திக்க எனக்கு  மனமில்லை!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக