தமிழக முதல்வர் மருத்துவமனையில்! இன்றுவரை வதந்திகள் மட்டுமே மக்களுக்குக் காணக் கிடைக்கின்றன!
நேற்றிரவு அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பத்து நாட்களுக்கு முற்பட்ட அறிக்கையின் நகலாகவே இருக்கிறது!
போய்ப் பார்த்தவர்களைப் பார்த்துவருபவர்களும் எழுதிக் கொடுத்ததைப் படிப்பதுபோல் ஒப்பித்துப் போகிறார்கள்!
சீக்கிரமே முதல்வர் குணமடையப் பிரார்த்திப்போம்!💐💐🙏🙏
சரி! அவர் வரும்வரை நிர்வாகம் இப்படியே இலக்கின்றி அலைய வேண்டியதுதானா?
ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில்கூட ஒருவர் ஒரே ஒருநாள் விடுப்பில் போனாலும், அன்று உங்கள் பொறுப்புகளை யார் வசம் ஒப்படைத்துப் போவீர்கள் என்றொரு கேள்வி, விடுமுறை விண்ணப்பங்களில் இருக்கும்!
ஒரு மாநில முதல்வர், முக்கியமான துறைகள் அனைத்தையும் தன்வசம் வைத்திருப்பவர், தன் ஆணைப்படியே அனைத்து மந்திரிகளும் அறிக்கைவிடவோ, செயல்படவோ வேண்டும் என்ற கோட்பாடுடையவர் எப்போது வருவார் என்ற நிச்சயமற்றுப் படுத்திருக்கும் நிலையில் பொறுப்பு முதல்வர் நியமனம் அவசியமற்றதா?
இதே நிலை எத்தனைநாள் நீடிக்க நம் அரசியல் சட்டம் அனுமதிக்கிறது?
மண்சோறு தின்பதும், ஏழை அடிமைகளின் குழந்தைகளுக்கு அலகு குத்துவதும், பால் குடம் சுமப்பதும்தான் அமைச்சர்களின் அன்றாட அலுவல்!
இது ஓய்ந்த நேரத்தில் அப்போலோவில் தஞ்சம்!
ஒரு அரசாங்கம் இப்படி இயங்குவதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா? எனில் இதற்கு என்ன முடிவு?
சாதாரண குடும்பத்தலைவி ஒருவாரத்துக்குத் தேவையான காய்கறிகளையும் பாலையும் வாங்கி வைக்கும்போது,
பொறுப்புள்ள குடிமகன்கள் ஒருவாரத்துக்கான சாராயத்தை வாங்கிவைத்துக்கொள்ளும்போது,
முன்னாள் முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்களும், எந்நாளும் நிழல் முதல்வரான சசிகலா அம்மையாரும், திடீர் கோடீஸ்வரர்களான மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் யோசித்திருக்க மாட்டார்களா?
இருபத்து நான்கு மணிநேரமும் அவர்களுக்கு அம்மா உடல்நலம் பற்றிய சிந்தனை மட்டுமே என்று நம்ப நாமனைவரும் அப்பாவிக் கட்சித் தொண்டர்களல்ல!
தற்காலிக முதல்வர் என்ற கருத்தை முன்வைத்தவர் கருணாநிதி என்பதற்காகவே அதை முற்றிலும் நிராகரிப்பது அறிவுடைமையாகாது!
ஏறத்தாழ எண்பது வருடம் அரசியலில் ஊறியவர் இதிலும் ஆதாயக்கணக்கு போடாமல் இருக்கமாட்டார் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை கீழுள்ள மற்றவையும்!
1. தற்காலிக முதல்வர் என்பது தன் அதிகார வரம்பை சோதிப்பதாக அமைந்துவிடும் என்ற பயம் சின்னம்மாவுக்கு இருக்காதா?
2. மீண்டும் பணிவு செல்வம் என்பது புது அதிகார மையங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பது ஒரு காரணமாகாதா?
3. வாழ்நாள் கூட்டாளியான பாஜக இன்று தன் காலை ஊன்றிக்கொள்ள அமித்ஷா ஃபார்முலாவை தமிழகத்தில் மட்டும் முயலாதா?
4. அண்ணனுக்குப் பிறகு திண்ணை காலியாகக் காத்திருக்கும், போன நூற்றாண்டு ஆண்ட கட்சியான, காங்கிரஸ் இந்த வாயப்பைப் பயன்படுத்த முயலாதா? அதற்கு இந்திய வரலாற்றின் எல்லாக் கட்சிகளிலும் அலைந்துவிட்டு இப்போது கை நிழலில் ஒதுங்கியிருக்கும் குதிரை வியாபாரி, அம்மாவின் முன்னாள் புரவலர் திருநாவுக்கரசர் உதவமாட்டாரா?
5. எந்நாளும் அம்மா உட்பட அனைவரின் சந்தேக லிஸ்டிலிருக்கும் அரசியல் வியாபாரி, சின்னம்மா நடராஜன், தன் முன்னாள் தோழர் திருநாவுக்கரசரோடு கை கோர்த்து புது வியாபாரக் கூட்டணி அமைக்க மாட்டாரா?
6. எங்கே இழவு விழும், எந்தப் பிணத்தைவைத்து பிழைப்பு நடத்தலாம் என்று ஊரூராய் பணம் பணம் என்றலையும், பச்சோந்தியையே திறமையில் வெட்கப்படவைக்கும்வண்ணம் அரசியல் நிறம் மாறி, திண்ணைக் கழுகாய்க் காத்திருப்பது காரணமில்லாமலா?
இவையெல்லாம் நடக்க சாத்தியமற்றவையா?
இந்த அப்போலோ களேபரத்தில் மறக்கடிக்கப்பட்ட மிக முக்கியமான விஷயம் சொத்துகுவிப்பு வழக்கு!
இதை நாம் மறந்திருக்கலாம்! அந்த வழக்கின் குற்றவாளி எண் இரண்டு, சின்னம்மா அவர்களும் மறந்திருப்பாரா?
மூன்று வாரத்தில் தீர்ப்பு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக முதல்வர் உடல்நலம் குன்றிப் படுக்கைவசமாகிவிட்டார்!
இந்நிலையில் அவருக்கு பாதகமான தீர்ப்பு வருவது தமிழக சட்ட ஒழுங்கை எவ்வளவு பாதிக்கும்?
அப்படி அவர் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டால் வீட்டுச்சிறையில் வைக்கப்படுவாரா?
எனில், இரண்டாவது குற்றவாளி சிறையில்தானே அடைக்கப்படுவார்?
முதல்வர் உடல் நலம் குன்றியிருக்கும்வரையும், உயிரோடிருக்கும்வரையும்தானே சசிகலாவுக்குப் பாதுகாப்பு?
இதையெல்லாம் இந்த நாடகத்தின் கதை வசனகர்த்தா, சட்ட ஆலோசகர் சொல்லிக்கொடுத்திருக்கமாட்டாரா?
இந்த நாடகம் பேரங்கள் முடியும்வரை தொடருமா?
பொறுப்பு முதல்வர் நியமிப்பது தானே கொள்ளிக்கட்டையால் தன் தலையைச் சொறிந்துகொள்வதென அதிகார மையம் நினைக்கிறதா?
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் சில நாட்கள் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்ததாய் ஒரு செய்தி ஊடகங்களில் கசியவிடப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை ஸின்னத்துக்கு வாக்களிக்கச் சொல்லி "அன்புத்தாய்" பேசியதாய் ஒரு ஆடியோ பதிவு பகிரப்பட்டது!
மருத்துவமனை அறிக்கைகள் இந்த இரண்டுக்குமே ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்கின்றன.
நேற்று, முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி!
மேலே குறிப்பிட்ட இரு வதந்திகளையும் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்களா?
ஒரு முதல்வரின் குரலில் பேசி ஆதாயம் தேட முனைவது எவ்வளவு பெரிய மோசடி? இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் யார்?
முதல்வர் நல்ல உடல்நிலையோடு இருக்கும்போதே அவரை உபயோகித்துக்கொண்ட சுயநலக் கூட்டம் அவரது இந்த நிலையை எவ்வளவு தூரம்
உபயோகித்து ஆதாயம் தேடும்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் அறியும் உரிமை வாக்களித்த மக்களுக்கு இல்லையா?
பி.கு:
இந்தப்பதிவுக்கும் வழக்கம்போல இரண்டு விமர்சனங்கள் தவறாமல் வரும்!
1. நான் திமுகக்காரன்! இதைச் சொல்பவர்கள் தயவு செய்து எனக்கு ஒரு உறுப்பினர் அட்டை வாங்கித்தரவும்!
2. இருநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு இதை எழுதியிருக்கிறேன்!
அந்த மும்பை கம்பெனி இதுவரை தராமலே என்னை ஏமாற்றிவருகிறது! பல இருநூறுகள் பாக்கி! அன்பு கூர்ந்து வாங்கிக்கொடுத்தால் தீபாவளிக்கு உதவும்!
வழக்கப்படி 40 % கமிஷன் கொடுத்துவிடுகிறேன்!
🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக