வியாழன், 20 அக்டோபர், 2016

அருந்தவச் செல்வி

கி பி ஒன்பதாம் நூற்றாண்டு!

இயற்கை கொழிக்கும் கேரளம் முதல், இன்றைய கொங்குநாடு, சேலம், தொண்டி, முசிறி, வஞ்சிமாநகர் வரை படர்ந்து பரவித் தழைத்த சேரநாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட குட்டநாட்டுச் சிற்றரசன் செங்குட்டுவன்!

அவன் குலம் தழைக்க வந்த பைங்கொடி நம் கதை நாயகி!

அருந்தவச்செல்வி!

அவளைக் காண நேர்பவர்கள் அது காரணப் பெயர்தானோ என்று மயங்குதல் இயற்கை!

சந்திரனைத் துலக்கிவைத்ததுபோல் முகம்!
சந்தனத்தை செதுக்கிவைத்த உடல்!
மேகலை காற்றில் நிற்கிறதோ என மயங்கவைக்கும் கண்ணுக்கும் சிக்காத இடை!
கச்சைக்கு அடங்காது திமிறும் தனங்கள்!

மொத்தத்தில் முனிவனையும் தடுமாறத் தடம் மாற வைக்கும் எழில் வடிவம்!

சேர குலத்திற்கு உதிரத்தில் கலந்த வில்வித்தையில் கரை கண்டவள்!

இன்று பெரியாற்றங்கரையில் ஆடை குலைய, ஆயர்குல இளவல் குமணன் மடியில் குழைந்து கிடக்கிறாள்!

"பெண் என்ன உங்களுக்கெல்லாம் பந்தயப்பொருளா? சுயம்வரம் என்பதன் பொருள் தெரியுமா வேந்தே உங்களுக்கெல்லாம்?"

"இதை உன் தகப்பனிடம் கேள் செல்வி!
சுயம்வரம் என்பது பெண் தன் விருப்பத்துக்குரிய மணாளனை மாலையிட்டுத் தேர்ந்தெடுத்தல் மரபு! அதை மல்யுத்தத்தில் வெல்பவனுக்கு மாலை என்று மாற்றியவர் உன் தந்தை!"

"ஒரு பெண்ணின் மனம் சொல்வது என்ன என்பதறியாமல் வென்றவனுக்கு மாலை என்பது என்ன நேர்மை குமணா?"

"உன் மனம் சொல்வதை நம் சிறுவயது முதலே அறிவேன்! ஆனால் இப்போது உன் கோபப்பெருமூச்சில் கிழிவேனோ அவிழ்வேனோ எனத் திணறும் கச்சை என் இச்சையை சோதிக்கிறது!"

சொல்லியவண்ணம் குனிந்து அவள் இதழ் மூட, தூரத்துக் காற்றின் சரசரப்பு யாரோ வருவதைச் சொல்லியது!

துள்ளி எழுந்த அருந்தவச்செல்வி,  “மூன்றாம் ஜாமத்தில் வசந்த மண்டபத்தில் சந்திப்போம் இளவரசே! அவசியம் வந்துவிடுங்கள்!” சொன்ன வேகத்தில் சத்தம் வந்த திசை நோக்கிச் சிட்டாகப் பறந்தாள்!

அவள் நினைத்ததுபோல் அது செங்குட்டுவன், அவள் தந்தை!

“எங்கம்மா போய் வருகிறாய்?”

“பொய் சொல்லும் வழக்கத்தை நீங்கள் எனக்குச் சொல்லித் தரவில்லையே தந்தையே!
உங்கள் விருப்பத்துக்கு மாறாக என் மனம் கவர்ந்தவரைப் பார்க்கப் போனேன்!’

“நாளை காலை சுயம்வரத்தை வைத்துக்கொண்டு அந்த ஆண்டியைப் பார்க்கப் போக உனக்கு வெட்கமாக இல்லையா செல்வி?”

“தந்தையே, நான் நீங்கள் பெற்ற மகள்தானே?
என் விருப்பத்துக்கு மாறானது என்று தெரிந்தும் நாளை நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடு நியாயமானதுதானா?”

“எது மகளே உன் விருப்பம்?
இந்தப் பரந்த சேர நாட்டின் ஒரு மூலையில் நான்கைந்து கிராமங்களை உள்ளடக்கிய ஒரு சின்னஞ்சிறு நாட்டின் சிம்மாசனமா உனக்கானது?"

“உன் அழகும் வீரமும் அந்தச் சின்னஞ்சிறு வனாந்திரத்தில்  அழிந்துபோவது முறையா மகளே?

நீ ஆளப்பிறந்தவள்!

இந்தப் பரந்த சேர நாட்டின் பட்டத்தரசி!
நாளை சோழ, பாண்டிய மன்னர்களை வீழ்த்தும் பராக்கிரமம் மிக்க சேரமான் பெருமாளின் அந்தப்புரத்தை அலங்கரிக்கவேண்டிய பேரழகி நீ!”

“அழகு?
அது எத்தனை நாள் நிலைக்கும் தந்தையே?
எத்தனை பேரழகிகளைக் கண்டது இச்சேர தேசம்?
இன்று அதில் எத்தனைபேர் நினைவில் இருக்கிறார்கள்?”

“குமணனுக்கும் கனவுகள் உண்டு தந்தையே!
என்றேனும் இந்த சேர நாட்டை ஆளும் தகுதியும் வீரமும், எல்லாவற்றுக்கும் மேல் ஒழுக்கமும் உள்ளவன் என் மனம் கவர்ந்தவன்!”

“தகுதிக்கு ஏற்ப ஆசைப்படட்டும் அச்சிறுவன்!
இது சேரமன்னன் காதில் விழுந்த கணம், அவன் தலை மண்ணில் விழும்!”

“தகுதி பற்றி நீங்கள் பேசுவது வியக்கத்தக்கது தந்தையே

சென்ற நூற்றாண்டு சேரநாட்டை ஆண்ட வீரராகவச் சக்கரவர்த்தி அகதிகளாய் வந்த யூதர்களுக்குக் கொடையாக அளித்த கிராமங்களை ஒன்றிணைத்து ஆளும் உங்களுக்கு சேர மன்னனின் சம்பந்தம் கேட்பது எந்தத் தகுதியில்?”

“என் மகளின் அழகை அடைய இன்றே என் மாளிகையில் வந்து காத்திருக்கிறான் சேரமன்னன் - நாளைய சுயம்வரத்தை எதிர்நோக்கி!
இதனினும் என்ன தகுதி வேண்டும் மகளே?”

“சேரனின் அந்தப்புரத்தில் ஏற்கனவே எத்தனை அழகிகள் தந்தையே?”

“ஆனால் அவன் முதல்முறையாக மணம் புரிய நினைப்பது உன்னைத்தான் மகளே!”

“மணந்து?
அந்தப்புரத்தில் ஆயிரத்தில் ஒன்றாய், அவன் பார்வை எப்போது என்மீது படுமென ஒரு பரத்தையைப்போல் அலங்கரித்து, வெட்கம் கெட்டுக் காத்திருக்கவா?”

“அது அரச நீதி! உனக்குப் புரியாது!

திறனிருந்தால் நாளை மற்போரில் சேரமான் பெருமாளை வெல்லட்டுமே உன் குமணன்!”

“போட்டி நேர்மையாக நடந்தால், ஒரு சில நொடிகளில் என் குமணன் காலடியில் கிடப்பான் சேரலாதன்!”

“சூதும் சூழ்ச்சியும் அரசாட்சியின் அங்கம் மகளே!

நல்லவேளையாக இப்போதுவரை குமணன் உனை விரும்புவதை சக்கரவர்த்தி அறியமாட்டார்!
அறிந்திருந்தால் நாளை மற்போரில் போகும் உயிர் எப்போதே போயிருக்கும்!
எனவே, இன்னும் நான்குநாளில் நடக்கப்போகும் திருமணத்துக்குத் தயாராக இரு செல்வி!”

“மன்னா! நானொன்றுரைப்பேன் கேளுங்கள்!

நாளை மற்போரில் வீரத்தால் குமணன் வீழ்ந்தால், அதை விதியென ஏற்பேன்!
ஒருக்கால், தங்கள் சூழ்ச்சியால் அவன் வீழின், அதன் சூத்திரதாரிகள் யாராயினும் அவர் கதை முடிப்பேன்!
இது நான் வணங்கும் ஈசன் மேல் ஆணை!”

சொல்லிவிட்டு திரும்பிப்பாராமல் நடந்த மகளை புருவம் சுருங்கப் பார்த்துக்கொண்டே நின்றான் செங்குட்டுவன்!

அன்றிரவு இரண்டாம் ஜாமம்!

பூனைப்பாதம் வைத்து வசந்த மண்டபம் வந்து சேர்ந்தாள் அருந்தவச்செல்வி!

அதற்குமுன்பே வந்து காத்திருந்தான் குமணன்!

“குமணா, என் தந்தை ஏதோ சூது செய்கிறார்!

எனக்கு அச்சமாக இருக்கிறது!”

“என் வீரத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா செல்வி?”  அவள் இடை பற்றித் தன்னருகே இழுத்தவாறே கேட்டான் குமணன்!

“உனக்கு நேர்மை தெரியும் குமணா, சூழ்ச்சி தெரியாது!
என் மனம் ஏனோ அமைதியற்று அலைகிறது!
நிறைய துர்நிமித்தங்கள் என் கண்ணில் படுகின்றன!”

“எனக்கு நீ வேண்டும் குமணா!
வா!
இப்போதே காந்தர்வ விவாகம் பூணுவோம்
இன்றிரவு உன் பிள்ளை என்னுள் விதைக்கப்படட்டும்!”

“செல்வி, என்ன இது அபத்தம்?
நாளை மற்போரில் வென்று உன் கரம் பிடிப்பேன்!
எண்ணி ஒன்பது பௌர்ணமிகளில் உன்னைத் தாயாக்குவேன்!
இப்போது கலங்காது போய் ஓய்வெடு!”

“நாளை நீ வெல்வதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதுதானே குமணா?”

“சூரியன் கிழக்கே உதிப்பதுபோல் அது உறுதியானது செல்வி!”

“எனில் என் வேண்டுதலை ஏற்று, இப்போது என்னுள் உன்னை நிரப்பு!” 
சொல்லியவண்ணம் அவனை மார்புறத் தழுவினள் செல்வி!

சற்று நேரம் அங்கு காற்றும் ஸ்தம்பித்தது!

ஈருடல் ஒன்றாகி இணைந்து, இயங்கிக் குழைந்து பிரிந்தன!

வெட்கப்புன்னகையோடு குமணன் இதழில் முத்தமிட்டு அறைக்கு விரைந்தாள் செல்வி!

எதேட்சையாக உப்பரிகைக்கு வந்த செங்குட்டுவன் கண்ணில், வசந்த மண்டபத்திலிருந்து இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிவது மட்டும் தெரிந்தது!

யோசனையோடு படுக்கைக்குப் போனவன், விடிந்ததும் அரண்மனை பரிசாகரனையும், மருத்துவனையும் அழைத்தான்!

திரும்பச் செல்கையில் இருவர் கையிலும்
ஓர் பொன்முடிப்பு! செங்குட்டுவன் இதழில் ஒரு திருப்திப் புன்னகை!

சூரியன் உச்சிக்கு ஏறுமுன், போட்டி மண்டபம் நிறைந்து வழிந்தது!

சேரமான் பெருமாள் ஒரு மதயானையென வீற்றிருக்க, அரிமாவென அமர்ந்திருந்தான் குமணன்!

பிரதான மந்திரியும், தளபதியும் நேரம் பார்த்துக் கொடியசைக்க, மற்போர் அரங்கத்தில் துள்ளி நுழைந்தனர் இருவரும்!

அரங்க வாயிலில் பரிசாகரன் தந்த கோப்பையை வாங்கிப் பருகி, களம் புகுந்தனர் இருவரும்!

பிரத்தியோக உப்பரிகையிலிருந்து காதலோடும், பதற்றத்தோடும் குமணனைப் பருகிக்கொண்டிருந்தாள் அருந்தவச்செல்வி!

ஆரம்பத்தில் சற்றே சேரமன்னன் கரம் ஓங்கியிருந்தாலும், சிறிது நேரத்தில் குமணன் பிடி இறுகியது!

அப்போதுதான் தன் தலை சுழல ஆரம்பித்ததை உணர்ந்த குமணன், தாமதமின்றி ஒரு புலிபோல் பாய்ந்து சேரனைத் தரை சாய்த்து அவன் மார்பில் ஏறி அமர, அவை திகைத்து ஆஹாகாரம் செய்தது!

செல்வியின் இதழ் புன்னகையில் மலர, அப்போது அது நடந்தது!

“சக்கரவர்த்தி, இந்தாருங்கள்!” கூவியபடி, குறுவாளை வீசினான் செங்குட்டுவன்!

இமைக்கும் நேரத்தில் அதைப் பற்றிய சேரமான் பெருமாள் குமணனின் கழுத்தில் பாய்ச்ச, துவண்டு விழுந்தான் குமணன்!

“கேவலம், எனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசன், என் மார்மீது அமர்வதா?”
கொக்கரித்து, குமணன் சடலத்தை காலால் எத்தினான்!

நீலம் கலந்த செந்நிறக் குருதியை விதிர்த்துப் பார்த்து அமர்ந்திருந்தனர் அவையும், செல்வியும்!

இன்றிலிருந்து நான்காம்நாள் பௌர்ணமி திதியில் என் மருமகனாவார் சேரச் சக்கரவர்த்தி!
அதுவரை திருவிழாக் கோலம் காணட்டும் இந்நாடு!”

சொன்னவாறே செல்வி இருந்த திசை நோக்கி முறுவலித்தான் செங்குட்டுவன்! உள்ளுக்குள் சிலிர்த்தெழுந்தது பெண் சிங்கம்!

ஆனால் ஆழ்கடல் அமைதி முகத்தில், ஆர்ப்பரிக்கும் அலைகள் மன ஆழத்தில்!

மறுநாள் மாலை மயங்கும் நேரம்!
நந்தவனத்தில் நடை பழகிக்கொண்டிருந்த சேரமான் பெருமாள், காற்றில் நுகர்ந்த சுகந்தமும், காதில் விழுந்த கொலுசொலியும் தூண்ட, திரும்பியவன் விழி விரிய நின்றான்!

அலங்கரித்த தேராய், அழகுப்பதுமையாய் தங்கச்சிலையென முறுவலோடு வந்தாள் அருந்தவச்செல்வி!

“சக்கரவர்த்தியின் தனிமையை நான் குலைத்துவிடவில்லையே?”

“என்ன கேள்வியிது?
நீ என் தேவி!
உன் நினைவில்தான் நான் உலாத்திக்கொண்டிருந்தேன்!”

“ஆயின், என்னைப் பேச்சுத் துணைக்கு அழைப்பதை யார் தடுத்தது?”

செல்லச் சிணுங்களில் ததும்பிய அங்கங்கள் கிறுகிறுக்கவைக்க, பேச்சற்று நின்றான் சேரன்!

அருகில் வந்து அவன் கரம் கோர்த்து மார்பில் முத்தமிட்டாள் செல்வி!

“இன்னும் இரண்டுநாள் காத்திருக்கவேண்டுமா இக்கரங்கள் எனை வளைக்க?”
சரசம் கொழுந்துவிட்டெறிந்தது அவள் பார்வையில்!

“இப்போதே இங்கேயே நான் தயார் தேவி!”  தாவி இடையணைத்தான் சக்கரவர்த்தி!

நாளை மூன்றாம் ஜாமத்தில், வசந்த மண்டபத்தில் என் இளமை நெருப்பை அணைப்பீரா என் மன்னா?”

“கரும்பு தின்னக் கூலியா தேவி?”

“எனில் யாரும் அறியாது வந்து காத்திருங்கள்!
இந்த ஜவ்வாது மனம் என்னைக் கிறங்கடிக்கிறது!”

“ஒரு எறும்பு அறியாமல் வருகிறேன் தேவி!”

இருவரும் கரம் கோர்த்து நந்தவனம் விட்டு வருவதை, சேரகுல ராஜகுருவும், மந்திரி பிரதானிகளும் வாய் பிளந்து பார்க்க, தன்னிலை மறந்து நடந்தன ஜோடிக் கிளிகள்!


மறுநாள்!
குமணனுடன் குழைந்து கிடந்த அதே வசந்த மண்டபம்!

மிகச் சிக்கனமான ஆடை! கையகலக் கச்சும், நூலிழை மேகலையுமாய் செல்வி!

ஜவ்வாதில் குளித்துவந்த சேரமன்னன்!


“என்மேல் இத்தனை மோகமா செல்வி?”

“இராதா பின்பு? பாராளும் சக்கரவர்த்திகள் அல்லவா தாங்கள்?”

அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்தான் மன்னன்!

“அன்று மற்போர் அரங்கில் உம் வீரம் கண்டு வியந்தேன்! இன்று உன் வேட்கை கண்டு ஆண்மை வெள்ளத்தில் மூழ்க வந்தேன்!

என் தாகம் தணிக்க மழையென வா!”

இறுக அவனை அணைத்து, தரை சரிந்தாள் பாவை!

இங்கே தொடுங்கள் என அவள் காட்டிய இடம் பார்த்து சிலிர்த்துப்போனான் சேரன்!

மெல்ல அவனைப் புரட்டி, அவன்மீது புரண்டாள்!

மேகலை அகற்ற நீண்ட அவன் கரம் தடுத்து, “நானே களைவேன்” என முனகி, அவன் இதழுடன் இதழ் கலந்தாள் செல்வி!

புத்தம்புது அனுபவத்தில் தேனில் தத்தளித்தது ஆண் வண்டு!

மேகலை அடியில் உடல் மறைவுப் பிரதேசத்தில் செல்வி கரம் நுழைய, கையில் கிடைத்தது மறைத்துவைத்த கையளவே ஆன குறுவாள்!

சத்தம் எழுமுன், அவன் நாவைக் கடித்து, இறுக இதழ் மூடிய பெண்வேங்கை, அவன் அடிவயிற்றில் ஆண்மையைத் துளைத்து திரும்பத் திரும்ப இறக்கியது கூர்வாளை!

ஒலியெழுப்ப முடியா மிருகம்போல் உறுமி உயிர் விட்டது சேர நரி!

உயிர் பிரிந்தது உறுதியான பின்பே எழுந்தாள் அருந்தவச்செல்வி!

துண்டுபட்ட நாவை தடயமின்றி விழுங்கியவள், சிக்கனமாய்ச் சிதறிக்கிடந்த ஆடை பொறுக்கி, நிர்வாணம் மறைத்து விரைந்தாள்!

அறையை அடைந்தவள் சலனமோ பதட்டமோ இன்றி, ஜவ்வாது வாடையும், ரத்த வீச்சமும் அகல நீராடி எழுந்தாள்!

“என்னை மன்னித்துவிடு குமணா!” விழி வழிய மஞ்சத்தில் வீழ்ந்தவள் நிம்மதியாகத் தூங்கிப் போனாள்!

மறுநாள் அங்கம் சிதைந்து நிர்வாணமாய் வசந்த மண்டபத்தில் சேர மன்னன் இறந்துகிடந்தது கண்டு நாடே அதிர்ந்தது!

கதறிப் புரண்டு குமணனை நினைந்து அழுது தவித்தாள் செல்வி!

சேரமன்னனுக்காய் அவள் கண்ணீர் வடிப்பதாய் நம்பியது சேர சேனை!

மறுநாள் சேரன் உடலோடு தானும் கருவூர் கிளம்பினாள் அருந்தவச்செல்வி!

“நந்தவனத்தில் என்னோடு பொருத உம் மன்னரோடு எனக்கு காந்தர்வ விவாகம் நடந்ததென உணர்நதேன்!

ஒருநாள் அவனோடு வாழ்ந்த நினைவில் இனி ஆயுள் முழுக்க அவன் விதவையாகவே வாழ்வேன்! நந்தவனத்தில் என் நாயகன் விதைத்தது வளருமாயின் அது சேர வம்சம் தழைக்க ஈசன் அளித்த வரம்!”

அப்படியே ஆகட்டும் தாயே என வணங்கி நின்றார் ராஜகுரு!

செங்குட்டுவனிடம் திரும்பியவள் மென்மையாகச் சொன்னாள்!
"குட்டநாட்டு வேந்தே! என்னைக் காட்டி வரவழைத்து நாடு பிடிக்கும் வெறியில் என் காதல் கணவனை சூதால் கொன்றவனை இன்னும் ஒரு மண்டலத்தில் சிரம் அறுப்பேன்!" 
"இது அந்த சிவன் மீதாணை!
இன்றிலிருந்து நாற்பத்தெட்டாவது நாளில் சேர சேனையை எதிர்கொள்ளத் தயாராகட்டும் குட்டநாட்டுப் படை!"

"இது அநீதி!"

"எல்லா அநீதிகளும் என் தகப்பன் கற்றுத் தந்தது!"

"செல்வீ..!"

உறுமலாக வந்தது குரல் "ஹூம்! சேரமாதேவி!"

பௌர்ணமி கழிந்து வந்த ஒரு சுபதினத்தில் கருவூர் மஹாராணியானாள் அருந்தவச்செல்வி!

சொன்னதுபோல் நாற்பத்து எட்டாம்நாள் நடந்த போரில் சின்னாபின்னமாயின குட்டநாட்டுப் படைகள்!

நேருக்குநேர் போர்க்களத்தில் எதிர்நின்று, அம்பால் அவன் சிரம் மண்ணில் வீழ்த்தினாள் அருந்தவச்செல்வி!

இன்னொரு பாஞ்சாலி சபதத்துக்கு மௌன சாட்சியானது போர்க்களம்!

பின் குறிப்பு:

இளங்குமணன் அவள் வயிற்றுதித்து இளவரசானதும், அவனை அரியணையேற்றி, பின்னின்று பதினாறு ஆண்டுகள் ஆண்டு, அவனுக்கு முடி சூடிப் பின் அருந்தவச்செல்வி துறவறம் பூண்டதும் இக்கதைக்குப்பின் நிகழ்ந்த நிகழ்வுகள்!
சரித்திரக் குறிப்பு:

கி பி ஒன்பதாம் நூற்றாண்டில் சேரப் பேரரசன் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் மரணமடைந்தது சரித்திரம் சொல்லும் உண்மைப் பதிவு!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக