திங்கள், 24 அக்டோபர், 2016

பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்!"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே.."
என்ற விருத்தத்தோடு ரேவதி ராகத்தில் வரும் பாடலை எழுதியவராகத்தான் பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி அவர்கள் எனக்கு அறிமுகம்!

கடவுள் என்னைப் படைத்தவன் எனில் அவனோடு பேசத் தரகர்கள் எதற்கு என்பதே எல்லா சாமியார்கள், குருமார்கள் போன்றோர் பற்றிய அபிப்ராயம் எனக்கு - எப்போதுமே!

ஆனால், தயானந்த சரஸ்வதி பற்றி என் அபிப்ராயம் மாற முதல் காரணம் அவரது இசை ஞானம்!

ரஜினியின், அத்வானியின், மோடியின் ஆன்மீக குரு என்று சொல்லப்படுபவர் ஒரு லோக்கல் சாமியர் அளவுக்குக்கூட விளம்பரப்படுத்திக்கொள்ளாதது கொஞ்சம் ஆர்வம் தூண்டியது இரண்டாவது காரணம்!

போ.. சம்போ வைத் தொடர்ந்து, அவரது சில பாடல்களின் ஒலிநாடாவைக் கேட்க நேர்ந்ததோடு, அவரது புத்தகங்கள் சிலவற்றையும் படிக்க நேர்ந்ததில் என்றாவது அவரைக்காண முயலவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது!

ஆனால், என் நெருங்கிய பிராமண நண்பர் ஒருவரோடு காஞ்சிமடம் சென்ற அனுபவம் இந்த ஹை ப்ரொஃபைல் சாமியார்களிடம் ஒரு அலர்ஜியை ஏற்படுத்தியிருந்தது!

ஒருநாள், எங்கள் இசைப்பள்ளியில் மாணவ மாணவியர்க்கான பாட்டு, நடனப்போட்டிகளுக்குப் பரிசளித்து, கச்சேரி செய்ய மஹாராஜபுரம் திரு. ராமச்சந்திரன் அவர்களை அழைத்திருந்தோம்!

எதேட்சையாக அந்தத் தேதியில் ஸ்வாமிஜி ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சேலம் வருவதாக அறிந்து, அவரை நம் பள்ளி விழாவில் சிறிதுநேரம் கலந்துகொள்ளச் செய்யமுடியுமா என்று கேட்க, அது தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட நாளானது!

சரியாக பத்து நிமிடம் மட்டுமே சுவாமிஜி இருப்பார்! அதில் முடிந்தால் ஒரு சிற்றுரை வழங்கலாம் என்ற நிபந்தனையோடு அனுமதி கிடைத்தது!

சேலம் ஆஸ்ரம நிர்வாகியின் "ஸ்வாமிஜி படியேறமாட்டார்" என்ற ஆட்சேபணையை மீறி, முதல் மாடியில் ஒரு சிறிய மேடை!

சரியாக சொன்ன நேரத்துக்கு வந்து நின்றது ஸ்வாமிகளின் கார்!

அப்போதுதான் முதல்முறையாக அந்த அருள் உருவத்தைப் பார்த்தேன்!

பழைய அனுபவங்கள் காரணமாக, என் பிராமண நண்பர்கள் இருவரை திரு. ராமச்சந்திரன் அவர்களோடு முன்னால் நிறுத்தி, பின்னால் நின்றிருந்தேன்!

மாலையுடன் அவரை நெருங்கிய நண்பரிடம் நீங்கள்தான் இந்தப் பள்ளி தாளாளரா என்று புன்னகையோடு கேட்க, நான் தயங்கி முன்னால் வர, முதல் அதிசயம் நடந்தது!

என் தோள் மீது கை வைத்து , "பிறகு நீங்கள் ஏன் பின்னால் நிற்கிறீர்கள்?"
கேட்டபடியே என் கையைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவெனப் படியேற ஆரம்பித்தார்!

முதல் முதலாக சாமியார்கள் பற்றிய என் பிம்பம் கலைந்தது!அடுத்த ஒன்றரை மணிநேரம், என் வாழ்வின் மகத்தான கணங்கள்!

போகலாம், போகலாம் என்று பலமுறை அவரது உதவியாளர் சொன்னபோதும், அரைமணிநேர எளிய உரைக்குப்பிறகு எல்லாக் குழந்தைகளோடும் சிரித்து உரையாடி, பாடச்சொல்லிக் கேட்டு, அவர் வண்டியேறிக் கிளம்பும்போது, ஒருநாள் ஆஸ்ரமத்துக்கு வா என்று தலைமேல் கை வைத்து ஆசீர்வதித்துப் போனார்!

எல்லோரும் அதிசயத்தில் உறைந்துதான் போயினர்!

அடுத்த இரண்டாவது மணித்துளியில், ஸ்வாமிஜியின் உதவியாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

"நாங்கள் கிளம்பிவிட்டோம்! குழந்தைகள் அனைவருக்கும் ஸ்வாமிஜி ஆசிகளைச் சொல்லச்சொன்னார்! உங்களை நேரம்
கிடைக்கையில் அவசியம் ஆசிரமத்திற்கு வரச்சொன்னார்!"

தன் தகப்பனார் மஹாராஜபுரம் சந்தானம் காலத்திலிருந்து ஸ்வாமிஜியுடன் நெருங்கிய நட்பிலிருக்கும் ராமச்சந்திரன் அவர்களாலேயே இதை நம்பமுடியவில்லை!

அந்த வாரமே கோவை ஆனைகட்டி ஆசிரமத்திற்குச் சென்று என் வழக்கமான கூச்ச சுபாவத்தோடு ஸ்வாமிகளின் கீதைப் பிரசங்கக் கூட்டத்தில் கடைசி வரிசையில் உட்கார, உதவியாளர் சாமிநாதன் ஓட்ட நடையில் என்னிடம் வந்தவர், கையைப் பிடித்து அழைத்துச் சென்று முன் வரிசையில் உட்காரவைக்க, புன்னகையோடு தலையசைத்து என் வணக்கத்தை ஏற்றுக்கொண்டார் சுவாமிஜி!

பிரசங்க சுவாரஸ்யத்தில் அருகில் உட்கார்ந்திருந்தது யாரென்று பார்க்கவில்லை!

ஒரு சின்ன இடைவேளையில் திரும்பிப் பார்க்க, என் பக்கத்தில் எனக்கு சமமாக பக்கத்தில்.. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் அவர்கள்!

சமத்துவம் என்பதன் தூக்கிவாரிப்போடும் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது! சிறு நடுக்கத்தோடே உட்கார்ந்திருந்தேன்!

பிரசங்கம் முடிந்து, தன் குடிலுக்குக் கிளம்பிய ஸ்வாமிஜி, என்னை முறுவலோடு அழைத்து முன்னாள் ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்தார்!
என் பெயரைச் சொல்லி, "இவர் சேலத்தில் ஒரு இசை நாட்டியப்பள்ளி நடத்திவருகிறார்! ஆடிட்டரும்கூட!"

நம்பவே முடியாமல் கூடவே நடந்துபோன என்னை ஒரு கனியைக் கொடுத்து ஆசீர்வதித்தவர், "ரொம்ப சந்தோஷம்! தங்கிப் போகிறாயா ?"
"இல்லை ஸ்வாமி! நாளைக்கு பெங்களூர் போகவேண்டும்!"
"அப்போ, சீக்கிரம் கிளம்பு! யானை நடமாட்டம் ஆரம்பித்துவிடும்! ஜாக்கிரதையாகப் போய் சேர்ந்ததும் சாமிநாதனுக்கு ஒரு ஃபோன் பண்ணிவிடு!"

என் கண்ணில் வழிந்த நீரைத் துடைக்கக்கூட எனக்குத் தோன்றவில்லை!

அதன்பின் சில சமயங்களில் நான் சென்றபோது ஸ்வாமிஜி அமெரிக்கா, ரிஷிகேஷ் என்று போன சமயங்கள் தவிர்த்து மற்ற சமயங்களில் ஒரு நண்பனைப்போல் பெயரிட்டு வாஞ்சையோடு அழைத்துப் பேசுவார்!

ஒருமுறை காஞ்சிப் பெரியவரை சந்திக்கப்போய் நடந்தவற்றை ஒரு குறையாக என் ஆதங்கமாக அவரிடம் கொட்டிவிட்டேன்!

ஒருநிமிடம், கூர்மையாக என்னை உற்றுப் பார்த்தவர் நிதானமாகச் சொன்னார்!
"அவர் கலியுகத்தின் கடைசி முனிவர்! இப்போது அவர் இல்லை! வாழும் காலத்தில் அவர் குரல் கேட்க நேர்ந்தவகையில் நீ பாக்கியசாலி!
விதவையைத் துறவிகள் சந்திக்க அந்தக்கால சநாதன தர்மம் சொன்னபடி, இந்திராகாந்தியையே அவர் பிரதமராக இருந்தபோது ஜலத்துக்கு அப்புறமாக இருந்து சந்தித்தார்!

அவர் சார்ந்த மடத்தின் விதிமுறைகளை அவர் எந்தவிதமான காம்ப்ரமைசும் இல்லாமல் ஏற்று, ஒரு நூலிழை அளவும் வழுவாது கடைபிடித்தவர்!

உண்மைத் துறவி அவர்! அவரோடு என்னையெல்லாம் ஒப்பிடுவதே பாவம்!"

எனக்கு அவரோடு விவாதிக்கத் தோன்றவில்லை! 
இன்றைய பெரியவர், பால பெரியவர், இன்னும் சிலர் பற்றி அவர் பகிர்ந்தவற்றை இங்கு பதிவிடல் முறையாகாது!

ஒருமுறை, என் வாழ்வில் ஒரு மிகப்பெரும் சூறாவளி சூழ்ந்த நேரம்!

திக்கற்று என்ன செய்வதென்று தெரியாது ஏறத்தாழ பைத்தியம் பிடித்த நிலை!

ஏதோ உணர்ச்சி உந்த ஆசிரமத்திற்கு புறப்பட்டுப் போகும்போது, திரும்ப வந்து நம் கதையை முடித்துக்கொள்ளலாம் என்ற  முடிவோடுதான் போனேன்!

அன்று திருமதி. அனுராதா ஸ்ரீராம் அவர்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்ததால் அவர் கச்சேரி! அது முடிந்ததும் ஸ்வாமிஜியிடம் ஆசி வாங்கிக்கொண்டு "நான் கிளம்புகிறேன் ஸ்வாமி!"

என்னிடம் ஒரு வார்த்தை பேசாமல், சாமிநாதன் பக்கம் திரும்பியவர் "இன்று இவர் இங்குதான் தங்கப்போகிறார்! ரூம் ஏதும் இருக்கிறதா?"
"இல்லை ஸ்வாமி, இவா, அனுராதாதான் ஏழு மணிக்குக் கிளம்பறா!"
"சரி, அந்த ரூமை சுத்தப்படுத்தி இவருக்குக் கொடு!"
என்பக்கம் திரும்பியவர் சொன்னார், "வீட்டுக்குத் தகவல் சொல்லிவிடு! நாளைக்கு வருவதாக! கொஞ்சம் பொறு, எட்டு மணிக்கு சாப்பிடப்போகலாம்!"

சொல்லிவிட்டு அறைக்குள் போய்விட்டார்!

சரியாக எட்டு மணிக்கு சாப்பிட டைனிங் ஹால் போனோம்!

அங்கு என்ன வழக்கம் என்றால், அவரவர் தட்டை அவரவரே கழுவி, உணவை எடுத்துக்கொண்டு, தரையில் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, தட்டை சாம்பல் போட்டுத் துலக்கிவைத்துவிடவேண்டும்!

அன்று ஸ்வாமிஜியும் அதையே செய்ததும், எங்களோடு உட்கார்ந்து சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைத்ததும் எனக்கு மட்டும்தான் ஆச்சர்யமாக இருந்தது!

ஆசிரமத்தில் அனைவருக்கும் அது அன்றாட நடைமுறை!

மறுநாள் காலை நான்கு மணிக்கு மணியடித்தது!

விரைக்கவைக்கும் குளிரில் பல் தேய்த்துவிட்டு, டைனிங் ஹாலுக்கு டீ சாப்பிடப் போனால், எனக்கு முன்னால் டம்ளரைவைத்துக்கொண்டு க்யூவில் முக்காடு போட்ட உருவம்!

எனக்குக் குளிர் போன இடம் தெரியவில்லை! டீ குடித்து, இயல்பாய் கழுவிவைத்துவிட்டுச் சொன்னார்!

ஆசிரமத்தைச் சுற்றி ஒரு நடை போ! குளித்துவிட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணி வாக்கில் குடிலுக்கு வா!

அமெரிக்காவில் சொந்தமாக ஆசிரமம் வைத்திருப்பவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரை பக்தர்களாகப் பெற்றவர், எச்சில் டம்ளர் கழுவி வைப்பதும் ஒன்றுமே இல்லாத என்னோடு சகஜமாய் உரையாடுவதும்! கனவைவிட பிரமிப்பு!

சரியாக ஒன்பது மணிக்குக் குடிலுக்குப் போனேன்! ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் கூட்டம்!

பதினோரு மணிக்கு என்னைப் பார்த்தவர், "நேற்று உன் கண்ணில் சஞ்சலத்தைப் பார்த்தேன்! எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்! கடவுள் காரணமின்றி எதுவும் செய்வதில்லை! 

லைப்ரரிக்குப் போய் ஏதாவது படி! இசை கேள்! மாலை பிரசங்கம் முடிந்து ஊருக்குப்போ!

மாலை விடை பெற்றபோது, தலை மேல் கை வைத்து ஆசீர்வதித்தார்! "தைரியமாக எதையும் எதிர்கொள்! போய்வா!"

என்ன ஏது என்று வேறு ஒரு வார்த்தை கேட்கவில்லை!

ஒன்பது மணிக்கு ஸ்வாமிநாதன் ஃபோன்! "வீட்டுக்குப் போய்ட்டீங்களா? குருஜி கேட்டார்!"

அதன்பின் வந்த சூறாவளியை நான் எதிர்கொண்டதும், பல அனுபவங்களுக்குப்பிறகு பல வருடங்களுக்குப்பின் ஆஸ்ரமம் சென்றபோது ஸ்வாமிஜி பெரிதும் தளர்ந்திருந்தார்! ஆனால் அதே தெய்வீகப் புன்னகை!

தலையசைத்து ஆசி வழங்கி, என் கையில் ஓர் எலுமிச்சங்கனியை வைத்த அவர் பேசும் உடல்நிலையிலும், நான் பேசும் மன நிலையிலும் இல்லை!

அதுதான் அவரை நான் கடைசியாக தரிசித்தது!

ரிஷிகேசத்தில் 2015 செப்டம்பரில் அவர் முக்தியடைந்தபோது என் கவசம் உடைந்ததாய் உணர்ந்தேன்!

சமீபத்தில் ஒருநாள் திடீரென்று ஏற்பட்ட உந்துதலில் ஆசிரமத்திற்குப் போனேன்!

பழைய ஆட்கள் யாருமில்லையே தவிர, எல்லாம் அப்படியேதான் இருந்தது!

புது மேனேஜர் யாரென்றுகூடக் கேட்காமல், போய் டீ குடித்துவிட்டு வாருங்கள், பிறகு பேசலாம் என்றார்!

டீ குடிக்கும் வரிசையில் எனக்குமுன் வேறு யாரோ!

பிறகு அலுவலகம் வந்து அந்த மேனேஜரிடம் என்னைப் பொதுவாக அறிமுகப்படுத்திக்கொண்டேன்!

"இன்று மாலை பிரசங்கத்துக்கு இருக்கிறீர்களா?"

"இல்லை சார்! நான் கிளம்புகிறேன்! நான் ஆசிரமத்திற்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்!"

"செய்யலாமே, உங்கள் பகுதியில் இருக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுங்கள்!"

என் முகம் போன போக்கில் என்ன புரிந்துகொண்டாரோ, "அதனால் ஏதாவது உங்களுக்கு பொருளாதார இழப்பு இருக்குமானால் அதற்கான நியாயமான இழப்பீட்டை ஆசிரமம் கொடுக்கும்!"

அசையாமல் சற்று நேரம் உட்கார்ந்திருந்தவன் கை கூப்பி எழுந்தேன்!

"புது ஸ்வாமிஜியைப் பார்க்கிறீர்களா!"
"இல்லை நண்பரே! எனக்கு அவர் இடத்தில் வேறொருவரைப் பார்க்கும் தைரியமில்லை!"

"புரிகிறது நண்பரே!"

"அதனால்தான் பூஜ்யஶ்ரீயின் குடிலை அப்படியே பாதுகாக்கிறோம்! புது ஸ்வாமிகள் இதோ, இந்தக் குடிலில்தான் இருக்கிறார்!" சொல்லிக்கொண்டே கார்வரை வந்தவர் சொன்னார் "நேரம் கிடைக்கும்போது வாங்க!"

என்றாவது போகவேண்டும்!பி கு:

இதுவரை, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளில் அந்த ஆசிரமத்திற்கு ஒற்றை ரூபாய் கூட நான் கொடுத்ததில்லை! பெற்றவற்றுக்கு அளவே இல்லை! என் வாழ்க்கை உட்பட!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக