சைக்கிளை
நிறுத்தி உள்ளே வரும்போதே குமார் சொல்லிக்கிட்டே வந்தான்!
"பெருமாள்
கோவிலுக்குப் புது அர்ச்சகர் வந்திருக்கிறார்!"
“அதுக்கென்ன
இப்போ, நீ வேணும்னா போய்
என் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிக்கிட்டு வா! இன்னைக்கு சீட்டே அமையல!
நீ
சீட்டைப் போடு மாப்ள. இன்னும் ரம்மி சேரவே இல்லை!”
“அவருக்கு ரெண்டு
பொண்ணு
இருக்கு!”
“மாப்ள! சீட்டு
அப்புறமா
ஆடிக்கலாம்.
நீ
வாடா!
சொல்லு பொண்ணுங்க
எப்படி?”
இதுதான்
நடன சபேசன்!
பாவடில
கல்லு மேல சீலையை காயப்போட்டிருந்தாலே ரெண்டு நிமிஷம் நின்னு பாத்துட்டு வருவாப்ல!
பதினாலு
வயசிலிருந்து, ஐம்பது வயசு வரைக்கும் கலர்த்துணி கண்டா நின்னு வழியாம வந்ததே கிடையாது!
பேங்க் எக்ஸாம்
எழுதிட்டு ரிசல்ட்டுக்காக வருஷக்கணக்கா காத்துக்கிட்டு இருக்கார்!
தற்சமயம்
ஊர்
சுத்திக்கிட்டு, சேவல் பண்ணை ன்னு பட்டப்பேர் வெச்ச பிரஸ்ல சீட்டாட்டம்,
தமிழ்நாடே
கொண்டாடுன காதல் ஓவியம் படத்துக்கு “அந்தணச் சிறுவனும் அந்தோணிச் சிறுமியும்” ன்னு புது நாமகரணம்
செஞ்சு ஊரெல்லாம் போஸ்டர் ஓட்டுன தேவகிரி தியேட்டர்ல
சனி ஞாயிறு காலைக்காட்சி மலையாளப்படம்,
ராத்திரி
தவறாம அருக்காணி கடைல புரோட்டா ஆஃப் பாயில், கோழி வறுவல்!
தினமும் சாயங்காலம்
கிழமையைப் பொறுத்து மாரியம்மன், ஈஸ்வரன், முருகர், பெருமாள் கோவிலுக்கு சிநேகிதப் பட்டாளத்தோட பக்தி உலா!
எந்தக்
கோவிலுக்கு எந்தப்பொண்ணு எந்த நாள், எந்த நேரம் வரும், இதெல்லாம் அத்துபடி! அந்த நேரத்துக்கு கரெக்ட்டா ஆஜர்!
அந்தப்
பட்டாளம் ஒரு நாள் கூட சாமிபார்த்துக் கும்பிட்டதில்லை!
அதிலும்
நம்ம ஹீரோ, எப்படியாவது டார்கெட் பொண்ணுகூடவும், கூட
வர்ற சிநேகிதி, பக்கத்து வீட்டு அக்கா, அம்மா பாட்டி யாராக இருந்தாலும் அவங்க கூடவும் ஏதாவது பேசாம வந்ததே இல்லை!
அவங்களும்
பெரிய வீட்டுப்பையன்னு கடனேன்னு நின்னு தலையாட்டீட்டு போவாங்க!
அந்த
சிநேகிதப் பட்டாளம் ஒரு டிபிக்கல் அவியல்.
வேலை
இருக்கறவன், இல்லாதவன், படிச்சவன், படிச்சுக்கிட்டே இருக்கறவன் இப்படி பதினாறு முதல் முப்பது வயசு வரைக்கும்!
அதுல
ஒரே ஒரு இடைச்செருகல், உப நாயகன் ரவி!
நடன சபேசனுக்கு அண்ணன் மகன்!
எட்டாவது
படிக்கையிலேயே எப்படியோ சித்தப்பன் கோஷ்டில ஐக்கியம் ஆன பிஞ்சில் பழுத்தது!
செட்ல
புழங்கும் எல்லா விஷயமும் புரிஞ்சும் புரியாத வயசு!
இதோ
பட்டாளம் இன்னைக்கு செவ்வாய்க்கிழமை முருகர் கோவிலை ஸ்கிப் பண்ணிட்டு பெருமாள் கோவிலுக்கு கிளம்பிடுச்சு!
பெருமாள்
கோவிலுக்கும் நடன சபேசன் குடும்பத்துக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்!
வைகுண்ட
ஏகாதசி அன்னைக்கு பெருமாள் கோவிலில் ஊரே கூடியிருக்குது.
நடனசபேசனோட
பாட்டி கோவிலுக்கு வந்ததும் பெரிய வீட்டம்மா வந்திருக்குன்னு ஊரே வழிவிட, நேரா பெருமாளை சேவிச்சுட்டு பிரகாரம் சுத்தி வரும்போது, பெருமாளுக்கு நேர் பின்னால் சுவற்றில் தலை வைத்துக்கொண்டு நின்னது அப்படியே நேரடியா வைகுண்டம் போய்டுச்சு!
அந்தம்மாவுக்கு
மோட்சம் கிடைச்சுதோ இல்லையோ, அன்னைக்கு ஊருல யாருக்கும் பெருமாள் தரிசனம் கிடைக்கல!
நடை அடைச்சதுல பெருமாளுக்கும் அன்னைக்கு நைவேத்தியம் கிடைக்காம பட்டினி!
அப்போ இருந்து பெரிய வீட்டிலிருந்து யாராவது கோவிலுக்கு வந்தால் பெருமாளுக்கே வயித்தைக் கலக்கும்!
கோவிலை
ஒட்டியே அர்ச்சகருக்கு வீடு கொடுத்திருந்தாங்க!
மூக்கோட்டை மாதிரி ஒரு பத்துக்கு எட்டு! அதுக்குள்ளயே சகலமும்!
அதனால
பொதுவா அர்ச்சகர் வீட்டுப்பெண்கள் தலை வாரி சிக்கெடுக்கறதும் பேன் பார்க்கறதும் கூட பெருமாள் கோவிலில்தான்!
அன்னைக்கும்
அப்படித்தான் செவ்வாக்கிழமை யார் பெருமாள் கோவிலுக்கு வரப்போறாங்கன்னு கொஞ்சம் விச்ராந்தியா மூணு பேரும் பேன் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்க, வேணுகோபால் ஐயங்கார் தன் பங்குக்கு குடுமியை அவிழ்த்து சிக்கெடுத்துக்கிட்டிருந்தார்!
திடீர்ன்னு
நடன சபேசன் அண்ட் கோ என்ட்ரி!
பொண்ணுக
வாரிச் சுருட்டுக்கிட்டு ஓட, மூத்தது நேரா வந்து நடன சபேசன் மேல இடிச்சுட்டு ஓட, காதல் ஓவியத்து வெள்ளுடை தேவதைகள் எல்லாம் காதுக்குள்ள தந்தன தந்தன தாளம் வரும்ன்னு பாட, உடனே காதல் வசப்பட்டார் நம்ம நாயகன்!
பெருமாள்
கோவில் நடன சபேசன் வீட்டிலிருந்து கூப்பிடுதூரம்!
தினமும்
பெருமாள் கோவிலுக்கு நடன சபேசன் தனி விஜயம்!
எண்ணி
ஒரே வாரத்துல நியூட்டனின் மூன்றாவது விதிப்படி தானும் காதலில் விழுந்தாள் பூங்கோதை - அர்ச்சகரின் முதல் பெண்!
பஞ்சாயத்து
ஆபீஸில் மட்டும் டீவி இருந்த இருண்ட காலம்! பூங்கோதைக்கு புத்தகம் படிக்கும் வழக்கமும் கிடையாது!
ஐயர்
வீட்டுப்பொண்ணுங்கறதாலும்,
ஊருக்குப் புதுசா வந்தவங்கங்கறதாலும் பெருசா பொண்ணுக சிநேகிதமும் கிடைக்கல!
கள்ளப்பயல் பார்க்கவும் கொஞ்சம் ரகுவரன் சாயல்! போதாதா காதலில் விழ?
இவ்வளவு
சொல்லிட்டு பூங்கோதை பற்றி ஏதும் சொல்லாம போனா பெருமாளே மன்னிக்கமாட்டார்!
தமனா
நிறம் இல்லைன்னாலும், ஸ்ருதி நிறம், அனுஸ்கா உயரம், எல்லாமே அளவா அமைஞ்ச உடல்வாகு!
உயரம்
காரணமாவோ என்னவோ, கொஞ்சம் கூன் போட்ட நடை!
ஆனால்
ஒரே ஒரு குறை!
மூக்கு!
பார்த்தவுடனே
கருடாழ்வார்ன்னு பசங்க பேர் வைக்குமளவு நீளம்!
ராமசாமி
டீக்கடை, மிலிட்டரியார் டீக்கடைன்னு ஒரே வாரத்துல, அந்தப்பொண்ணு பேரு கருடாழ்வார்ன்னே எஸ்டாபிளிஷ் ஆயாச்சு!
இடையில்
நாளொரு முத்தமும் பொழுதொரு கட்டிப்பிடி வைத்தியமுமாக கருடாழ்வாருக்கும் நடன சபேசனுக்கும் காதல் வளர ஆரம்பித்திருந்தது!
போனஸாக
எட்டாவது படிக்கும் ரவிக்கும், ஏழாவது படித்த சின்னக் கருடாழ்வார் கிருஷ்ணவேணிக்கும்!
“சித்தப்பு,
எனக்கென்னவோ கிருஷ்ணவேணி உங்க ஆளவிட அழகுன்னு படுது!”
“இதுக்குத்தான்டா
சின்னப்பசங்க சாவகாசம் ஆகாதுன்னு சொல்றது!”
“சரி,
விடுங்க, நான் கிருஷ்ணவேணிய ஸ்கூல்ல பார்த்துக்கறேன்!
இனி
பாவடிக் கிணத்துக்கும் மலங்காட்டுக்கும் என்னைத் துணைக்குக் கூப்பிடாதீங்க!”
இது
எப்பேர்ப்பட்ட அஸ்த்திரம்ன்னு ரவிக்கு நல்லாத் தெரியும்!
நடனசபேசனும்
கருடாழ்வாரும் பாவடிக் கிணத்து படிக்கட்டிலும், மலங்காட்டிலும் மண்டையைப் பொளக்குற உச்சி வெய்யில்ல ஒதுங்கும்போது ரவிதான் காவல்!
பாவடிக்
கிணத்துல வருஷம் பத்து பக்கெட் தண்ணி ஊறினா அதிசயம்!
அதனால
அங்க கூட்டம் வராது!
மலங்காடு
மலை அடிவாரக்காடுன்னாலும், அந்தப் பெயருக்கு இன்னொரு காரணம் இருக்கிறது!
தினசரி
காலைல ஊருல பாதிப்பேர் குத்தவெச்சு உக்கார்ற இடம்!
மத்த
நேரத்துல ஆடு மேய்க்கறவனோ, வயிறு சரியில்லாதவனோ தவிர யாரும் வரமாட்டாங்க!
ரெண்டுமே அவங்க
அமர
காதலுக்குத்
தோதான
இடம்!
ரவி
கண்ணைவிட்டு மறையும் தூரம் போனதுமே, உச்சு, உச்சுன்னு முத்தம் குடுக்கற சத்தம் வர்றது வழக்கம்!
பொறுக்கமுடியாம
ரவி சொல்லுவான்,
“சித்தப்பு,
கொஞ்சம் சத்தம் குறைவாவே இருக்கட்டும்!
உங்க
சத்தம் கேட்டு, யாரோ கூப்பிடறாங்கன்னு ஜிம்மி வந்துருது!”
கொஞ்சநேரம்தான்!
மறுபடி ஆரம்பிக்கும்!
திரும்பி
வரும்போது ரவி கேப்பான்
“ஏன்
சித்தப்பு, இப்படி எருமை மாடு செவுத்துல உரசறமாதிரி உரசிக்கறதும் ஓயாம முத்தம் குடுக்கறதும்தான் லவ்வா?”
“போடா!
நீ சின்னப்பையன்! உனக்கு இதெல்லாம் புரியாது!”
“சரி,
நிஜமா நீ கருடாழ்வாரை கல்யாணம்
பண்ணிக்கப்போறியா சித்தப்பு?”
“ஆமாடா,
எப்படியாவது ஐயரா கன்வர்ட் ஆகியாவது அவளை கட்டிக்கப்போறேன்!”
“அலைகள்
ஓய்வதில்லைல கார்த்திக் பூணூலை கழட்டிப்போடறான், நான் மாட்டிக்கப் போறேன்! அவ்வளவுதான் வித்தியாசம்!”
“பார்த்து
சித்தப்பு, எதைப் பண்ணினாலும் சீக்கிரம் பண்ணித்தொலை. உங்களுக்கோசரம் காவலுக்கு வெய்யில்ல நின்னே நான் கறுத்துப்போய்டுவேன்!”
“கவலைப்
படாதடா, வீட்டுக்கு முதல் மாப்பிள்ளையா நான் போனதும், கிருஷ்ணவேணிய உனக்குக் கட்டி வெச்சுடறேன்”.
“நீங்க
உங்க கவலைய மட்டும் படுங்க, எங்க கல்யாணத்த நாங்க பார்த்துக்கறோம்.”
ஆனால்
நடன சபேசன் கொஞ்சம் சீரியஸாத்தான் லவ் பண்ணாரு போல!
திடீர்ன்னு
ஒருநாள் மீசையை மழிச்சுக்கிட்டு யாருக்கும் தெரியாம சென்னிமலை அடிவாரக் கடைல ஒரு பூணூலையும் வாங்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டாப்பல!
“ஏன்டா,
இப்போ நான் ஐயங்கார் மாதிரி இருக்கறனா?”
“அத்தை கல்யாணத்துல
வாசிச்ச
மோளத்தான்
மாதிரி
இருக்கே
சித்தப்பு!”
“இதுக்கு
எங்க ஆத்தாளே பரவாயில்லடா! பொண்டாட்டியைத் தின்னவனாட்டம் இருக்கேன்னுதான் சொல்லுச்சு!”
“அதெல்லாம்
சரிதான் சித்தப்பு, ஐயங்கார்ன்னு சொல்லிக்கிட்டு அருக்காணி கடை ஆஃப் பாயில் எப்படி சாப்பிடுறீங்க?”
“போடா,
கல்கத்தாவுல ஐயருங்க மீனே சாப்பிடறாங்க!”
இந்த
மொட்டை வெய்யில் காவியக் காதல் சந்திப்புக்கு மேல, அப்பப்ப கவிதையா லெட்டர் எல்லாம் வேற எழுதி, மறக்காம சோத்துப் பருக்கை போட்டு ஒட்டி ரவிகிட்ட கொடுத்துவிடுவாரு!
அதைப்
பிரிச்சுப் படிக்கும் கருடாழ்வாருக்கு மூஞ்சி இன்னும் செவந்துபோகும்!
ஒருநாள்
நைஸா தண்ணி தொட்டு லாவகமா பிரிச்சு படிச்சுப் பார்த்ததுல பாதி புரியல!
ஆனா,
அதில் ஒரு புது வார்த்தை இருந்தது.
கத்துக்கற
ஆர்வத்துல தமிழய்யாகிட்ட வகுப்புல கேட்டான்!
“ஐயா
ஒரு சந்தேகம்!”
“கேளு!”
“அல்குல்ன்னா
என்ன ஐயா?”
அன்னைக்கு முழுக்க,
காதுக்குள்ள
கொய்யுன்னு
பூச்சி
கத்தற
சத்தம்
மட்டும்தான்
கேட்டுது!
அப்படி ஒரு
அறை!
வந்த
வெறுப்புல லெட்டரை கருடாழ்வார் கைல கொடுக்காம பெரியப்பா கைல (நடன சபேசனோட அண்ணன்) கொடுத்துட்டான்!
அவர்
என்ன பேசினாரோ என்னவோ, ஒரே வாரத்துல மெட்ராஸ்ல இருந்து அவங்க மாமா வந்தாரு!
“சபேசா,
என் மகளை உனக்குக் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கிறேன்!”
இந்த
ட்விஸ்ட் நடனசபேசன் எதிர்பார்க்காதது!
மெட்றாஸ்ல
அவர் பெரிய பதவில இருந்தார்!
அவராவது
நமக்குப் பொண்ணு கொடுக்கறதாவது அப்படிங்கற நெனப்புல அவரு பொண்ணை சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்ங்கற ரேஞ்சுல டீல் பண்ணிக்கிட்டு இருந்த நம்ம ஹீரோவுக்கு இந்த டீல விட மனசில்லை!
“கருடாழ்வார
என்ன பண்ணப்போற சித்தப்பு?”
“டேய்,
எத்தனை நாளைக்கு பெருமாள் கோவில்ல சக்கரைப்பொங்கல் சாப்பிட முடியும்?”
“அடப்பாவி,
அப்ப என் கிருஷ்ணவேணி?”
“போடா,
போய் படிக்கற வழியப்பாரு! இன்னும் பால்குடி மறக்கல! அதுக்குள்ளே கல்யாணமா!”
“இரு
சித்தப்பு, ஐயர் கிட்ட போட்டுக் கொடுக்கறேன்!”
அதுக்கு
அவசியமே இல்லாம ரெண்டு நாள்ல கிருஷ்ணவேணி வந்து கூப்பிட்டா
"டேய்!
உன்னை அக்கா கூப்பிடறா!"
அதுக்குள்ளே
எப்படி பெருமாள் கோவில் வரைக்கும் மெட்றாஸ் மேட்டர் போச்சு ன்னு கொஞ்சம் பயத்தோட போனா, அங்க கதை வசனமே வேறயா இருக்கு!
“ரவி,
எனக்கு அமெரிக்கால இருக்கற அத்தை பையன் கூட கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு!
இந்த
லெட்டரையெல்லாம் கொண்டுபோய் உன் சித்தப்பாகிட்ட கொடுத்துரு!”
கூடவே
கொஞ்சம் ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் கிளிப்ன்னு என்னென்னவோ!
லெட்டரையெல்லாம்
அங்கேயே கிழித்துப் போட்டுட்டு,
பொட்டு,
புண்ணாக்கையெல்லாம் கிருஷ்ணவேணி கைல கொடுத்துட்டு வந்துட்டான்!
இப்படி ஒரு
காவியக்காதல்
மதராஸுக்கும்
அமெரிக்காவுக்கும்
பிச்சுக்கிட்டுப் போய்டுச்சு!
ரவிக்கும்
தமிழய்யா பொண்ணு கிருஷ்ணவேணியவிட பெட்டர்ன்னு பட்டதால பெரிசா ஒன்னும் வருத்தமாத் தோணலை!
இது
நடந்து ஒரு அஞ்சு வருஷம் இருக்கும்!
ஒருநாள்
சென்னிமலை தேர்க்கடைல ஒரு அல்ட்ராமாடர்ன் ஆண்ட்டி, ரவி கையைப் பிடித்து இழுத்து "நல்லா இருக்கறயா ரவி?"
"நீங்க?"
என்னைத்
தெரியலையா ரவி?
கொஞ்சம்
உத்துப் பார்த்ததும் தெரிந்தது
“நீங்க கருடாழ்வார்தானே?”
சே! இண்டீசண்ட் ஃபெல்லோ ன்னு வேகமா போய்ட்டாங்க!
அது சரி!