ஞாயிறு, 6 நவம்பர், 2016

க்ரீன் ட்ரெண்ட்ஸும் சுதேசியும்!
எனக்கு சில கிறுக்குத்தனமான பிடிவாதங்கள் உண்டு.
சில என்பது இங்கு வார்த்தை விரயம் - இது சகதர்மினி பாராட்டுப் பத்திரம்! 

திருவள்ளுவர் கூப்பிடும்போது "இந்த ஆளுக்கு வேற வேலையே கிடையாது! கரெக்டா தண்ணி இறைக்கும்போதுதான் கூப்பிட்டுத் தொலைக்கும்"ன்னு வாசுகி முனகிக்கிட்டே வந்த காலம் தொட்டு இது தொடர்கதை!
அது இந்த ரைட்அப்க்கு வேண்டாம்!

முடிஞ்சவரைக்கும் இந்தியனாக இரு, இந்தியப் பொருள்களையே வாங்கு இது ஒன் ஆஃப் மை பிடிவாத பாலிசி!

ஹிமாலயாஸ் ப்ராடெக்ட்தான் சோப்பு, பேஸ்ட், ஷாம்பு, இன்னபிற காஸ்மெடிக் ஐட்டங்கள்!
சமயத்தில் அதுக்காக வண்டிய எடுத்துக்கிட்டு முப்பது கிலோமீட்டர் போய் வர்றதும் இந்த கிறுக்குத்தன லிஸ்ட்ல உண்டு!

இந்த பாலிசிபடி ஒய்ஃப்க்கு மைக்ரோமேக்ஸ் மொபைல் வாங்கித்தந்ததும், அது அடிக்கடி முடியாமபோய் என் பக்கத்துவீட்டுப் பையன் மாதிரி அல்பாயுசில் ஒரே வருஷத்தில்போனதும், இந்த அஞ்சு வருஷத்துல அவ ஆறு ஃபோன் மாத்தியும், என் ஃபோன் ஆறு வருஷமா எங்க பாட்டி மாதிரி கல்லுக்குண்டாட்டம் கிடப்பதும் வேறு கதை!

சரி! ரைட்டு! நான் இப்படி சுத்திவளைச்சு விஷயத்துக்கு வர்றதுக்குள்ள படிக்கற ஒன்னு ரெண்டு பேரிலும் பாதிப்பேரு காறித்துப்பிட்டுப் போகப்போறாங்க!

வழக்கமா சிவா க்ரீன் ட்ரெண்ட்ஸ்லதான் முடி வெட்டிக்குவாரு!

மல்டிநேஷனல் கம்பெனி இந்தத் தொழில்களிலும் புகுந்து நம்ம நாட்டு அடிமட்டத் தொழிலாளர்களை வயிற்றில் அடிக்குது. அதனால இந்தமாதிரியான கடைகளில் போய் நமக்கு முடிதிருத்திக்கறதில்லைங்கறது இன்னொரு புரட்சிகரமான பாலிசி!

ஆனால் சிவாவுக்குத் துணையா கூடப்போறதுல பாலிசிக்கு பங்கம் வராது. ஏன்னா க்ரீன்ட்ரெண்ட்ஸ் ரிஷப்சனிஸ்ட் பொண்ணு இங்கிலீஸ் பேசினாலும் சுதேசிதானே!

அதுலயும் அந்தப்பொண்ணுக்கு அவ்வளவு பெரிசு ரெண்டு    கண்ணும்!
பெரிய வெள்ளைக்காரத் தொரை ஆபீஸ் மாதிரி எப்போ போனாலும் இங்கிலீஸ் பாட்டு, சுத்தமான வாசனை, ரிசப்ஷன்ல நயன்தாரா தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு, எவன் சொல்லுவான் அது முடி வெட்டற கடைன்னு?

துணைக்குப் போய் தடிதடியா அங்க இருக்கற 2011ம் வருஷத்து இங்கிலீஷ் புத்தகத்தை படிக்கறமாதிரி நயன் தங்கச்சியை கொஞ்சநேரம் மேல் பார்வையா திருட்டுத்தனமா பார்க்க ஆரம்பிக்கும்போதே, இடிக்கோலன் வாசனையோட வந்து நிக்கும் வாரிசு!

பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி ஒரு லெதர் பவுண்ட் பவ்ச்ல வெச்சு அந்தப் பொண்ணு தர்ற பில் நூற்று நாற்பது ரூபாய்!
அந்த சிரிப்புக்கு பத்து ரூபாய் டிப்ஸ்!

"ஏம்பா சினிமால வர்ற லோக்கல் ரவுடி மாதிரி இருக்கே உன் மண்டை, நீ முடி வெட்டிக்கலையா?"
உதாரணம் பாருங்க! அப்படியே அம்மா புத்தி!

"இல்லை தம்பி! நான் லோக்கல் கடைலதான் வெட்டிக்குவேன். போற வழியில போயிட்டு போலாம்!"கடை வாசல்ல வண்டியை நிறுத்தும்போதே பையன் மூஞ்சி அஷ்டகோணல் ஆச்சு!

"இது என்னப்பா இந்தக்கடைல ஒரு ஏசி கூட இல்லை?"

"வாடா டேய்!"

இழுத்துக்கிட்டு உள்ள போனா, சுதேசி மைண்டுக்கே நாத்தமும் மூலை மூலைக்கு முடி குப்பையும் தாங்கமுடியலை!

சரி, நம்ம பாலிசி நம் கடமை!

"தம்பி, ஏதாவது படிச்சுக்கிட்டிரு! அஞ்சு நிமிஷம்!"

இறைஞ்சு கெடக்கற தினத்தந்தியை எடுத்துப் பார்த்துட்டு நக்கலா தலையாட்டுது வாரிசு!

சேர்ல உக்காரவச்சு, ஒருகாலத்துல வெள்ளையா இருந்ததா நம்பமுடியாத துணியை முடி போக உதறி, பொணத்துக்குப் போத்தற மாதிரி போத்தும்போது உண்மையிலேயே பொண நாத்தம்!
குடல் வாய் வரைக்கும் வந்துபோகுது!

ஆனா அடுத்தது அதைவிட நல்ல வாசம் அடுத்தது வரும்ன்னு எனக்குத் தெரியாம போச்சு!

போர்வை போத்திட்டுப்போனவருக்கு பதிலா வேற ஒருத்தர் கத்திரிக்கோலோட பத்தடி தள்ளி வரும்போதே பீடி நாத்தம்!

பக்கத்துல வந்து அவர் முடி வெட்ட ஆரம்பிக்கும்போது தமிழ்நாட்டுக்கே சோறு போட்டுட்டிருக்கற பானத்தோட அற்புத வாசம் புள்ளைத்தாச்சி மாதிரி கொமட்டிக்கிட்டு வருது! காலங்கார்த்தாலயே அரசாங்கத்துக்கு சம்பாத்தியத்துக்கு பொறுப்பா வழி செஞ்சுட்டு வந்திருக்காரு!

மூச்சை அடக்கிக்கிட்டு உட்கார்ந்திருந்தா ஒரு பக்கம் வெட்டி முடிக்கும் முன்னாடியே அவர் போன் "டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாருமில்லை"ன்னு தெய்வீகமா கூப்பிடுது!

அப்படியே திருப்பதி நாவிதர் மாதிரி அம்போன்னு விட்டுட்டுப் போனவர் பத்து நிமிஷம் கழித்து வரும்போது இன்னொரு கோட் பீடி வாசம்! கூடவே ரெண்டு பொட்டலத்த கைல பிரிச்சுக்கொட்டி, பல்லுக்கும் உதட்டுக்கும் நடுவே திணிச்சுக்கிட்டு, படுகேஷுவலா அந்த விரலை என்னைப் போத்தியிருந்த கோடித்துணியிலயே தொடச்சுட்டு, விட்ட எடத்திலிருந்து வெட்ட ஆரம்பிச்சார்!

ஒரு வழியா முடிஞ்சுதுன்னு நினைக்கும்போது, மூஞ்சில ஒரு தண்ணிய அடிச்சார் பாருங்க, அநேகமா நாடு சுதந்திரம் வாங்கியபோது அந்த பம்ப்பை கழுவியிருப்பார் போல!

ஒரு அரை பிளேடை கத்தியில சொருகி வரட்டு வரட்டுன்னு இழுக்கும்போது, தலைக்குமேல் டிவியில் தமன்னாவ ஆஆன்னு பார்த்துக்கிட்டே கத்தியை இழுத்ததில் காதுக்குமேல சின்னதா ஒரு ரத்தக் கோடு!

எல்லாக் கொடுமையும் முடிஞ்சு விட்டால் போதும்னு கிளம்பும்போது,

"பில் எவ்வளவு?"

"நூத்தம்பது ஸார்!"

"என்னது?"

"ஆமா ஸார், கட்டிங் நூத்துமுப்பது, மீதி இருவது டிப்ஸ்!"

வேற வழி?

வெளிய வந்ததும் பையன் கேட்ட முதல் கேள்வி - "பீடி குடிச்சயாப்பா?"

"ஏண்டா டேய்!"

இல்ல, உன்மேல பீடி, சாராயம் எல்லா நாத்தமும் அடிக்குதே, "இதுதான் சுதேசி வாசமாப்பா?"

சரி! அடுத்தமாசம் பாலிசிய லைட்டா சேஞ்ச் பண்ணிக்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக