வியாழன், 10 நவம்பர், 2016

மோடி வித்தை நாடகமா?கடந்த சிலநாட்களாகவே மிகப் பரவலாக விமர்சிக்கப்படும் விஷயம் பற்றிய என் புரிதல்!

இந்தியாவைப்போல் ஏழை, பணக்காரர் இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கும் நாடுகள் வெகு அரிது!

பரம ஏழைகளும் உலக அளவில் பெரும்பணம் படைத்தவர்களும் இப்படி ஊடும் பாவுமாய் இழையோடிய சமூகம், பெரிய அளவில் புரட்சியோ, வன்முறையோ இன்றி இத்தனை ஆண்டுகள் சுமுகமாய் இருப்பது இந்தியாவில்தான் சாத்தியம்!

பெரும் பணம் படைத்த 20 சதவிகிதம் பேரிடம் இந்தியாவின் 84 சதவிகித சொத்துக்கள் இருப்பதாகவும், கீழ்மட்ட 30 சதவிகிதத்தினரிடம் வெறும் ஒரு சதவிகித (1 %) சொத்து மட்டுமே இருப்பதாகப் புள்ளி விபரம் சொல்கிறது!

இந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பினால் திண்டாடி அலைந்தது அடித்தட்டு மக்கள்தான் என்பது வெளிப்படை!

அவர்கள் தங்கள் கையிலிருக்கும் மிகச்சில ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள, மேலும் சிலநாட்கள் தடுமாற வேண்டியிருக்கும்!

- இது அப்பட்டமாக, வெளிப்படையாகத் தெரியும் நிலவரம்!

உண்மையும் அதுதானா? பணம் படைத்தவர்கள் யாரும் பாதிக்கப்படவே இல்லையா?

இன்று பணம் படைத்தவர்கள் யாரும் வங்கிகளிலும், பெட்ரோல் பங்க்குகளிலும் வரிசையில் நின்று அல்லாடவில்லை! 
அதிகாலையில் டீக்கடைகளில் கடன் சொல்லவில்லை!

எனில் பாதிக்கப்பட்டது கீழ்த்தட்டு மக்கள் மட்டும்தானா?

நிச்சயமாக இல்லை!

இந்த ஒரே நடவடிக்கை காரணமாக நாட்டில் கறுப்புப்பணமே இல்லாமல் முற்றாக ஒழிந்துவிடும் என்று நம்புவது முட்டாள்தனம் என்பதில் சந்தேகமே இல்லை!

அதே சமயம் இது திமிங்கலங்களுக்கும், முதலைகளுக்கும் விரிக்கப்பட்ட வலை அல்ல! சில கொழுத்த மீன்களுக்கான உறுதியான வலை!

கறுப்புப்பணம் பங்குப்பத்திரங்களாக, முதலீடுகளாக, வெள்ளி, தங்கக் கட்டிகளாக, வெளிநாட்டு முதலீடுகளாக உருமாறியிருக்கும் என்ற வெளிப்படை உண்மைகூடவா அரசுக்குத் தெரியாதா என்ன?

ஆனால் அதே அளவு கரன்சி நோட்டுக்களாகவும் பதுக்கப்பட்டிருப்பதும் உண்மை!

இந்த அறிவிப்பை விமர்சிப்பவர்கள் எல்லோரும், ஏதோ அந்த மூன்று கண்டெய்னர்கள் மட்டுமே நம் நாட்டின் கடைசி கரன்சி என்ற ரீதியில் பேசுவதுதான் ஆச்சர்யம்!

ரியல் எஸ்டேட்டிலும் கட்டுமானத் துறையிலும் சரிபாதி பரிமாற்றம் கறுப்புப்பணம்தான் என்பது குழந்தைகளும் அறியும் உண்மை!

எனக்குத் தெரிந்த ஒரு சுமாரான அளவிலான ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வைத்திருக்கும் பணம் எந்த நாளிலும் பத்துக்கோடிக்குக் குறையாமல் பார்த்துக்கொள்வார்!

அவரது கட்டுமான செலவில் குறைந்தது 25 -30 % கணக்கில் வராததுதான்!

இவர்போல, தமிழகத்தில்மட்டும் ஆயிரக்கணக்கில்!

இப்போது அந்தப் பணமெல்லாம் எந்தவகையிலும் வெளுப்பாகப் போவதில்லை!

திருப்பூர், வேடசந்தூர் நூல் மில்களில் 50 % வியாபாரம் பில் இல்லாமல் துண்டு சீட்டில் மட்டுமே என்பது எழுதப்படாத விதி!

நம் கல்வித் தந்தைகளும், கல்வி வள்ளல்களும் வசூலிக்கும் நன்கொடைகள்  வங்கிகள் மூலமா பரிவர்த்தனையாகிறது?

மூட்டை மூட்டையாக பணம் அடுக்கிவைக்கப்படுவதை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன்!

அடுத்து, உலகின் முதன்மையான புனிதத் தொழிலில் இருக்கும் மருத்துவர்கள்! அதிலும் இப்போது கொடிகட்டிப் பறக்கும் இன்ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனைகள்!
ஒற்றைப் பிரசவத்திற்கு ஏறத்தாழ ஒருகோடிவரை பணமாக வசூலிக்கும் இவர்களில் பலருக்கு வருமானவரி என்றால் என்னவென்றே தெரியாது!

இரண்டுகைகளையும் எப்போதுமே நீட்டிக்கொண்டே இருக்கையில் உட்கார்ந்திருக்கும் அரசு அதிகாரிகள், காவல்துறை கண்ணியவான்கள், அரசியல்வியாதிகள், கந்துவட்டித் தொழிலதிபர்கள் - இவர்களெல்லாம் கரன்சிகளை அடுக்கித்தான் உருள்கிறார்கள்!

இந்த கொழுத்த மீன்களுக்கான வலை விரிப்பே இது!

கறுப்புப்பண ஒழிப்பில் முதல் அழுத்தமான படி இது!

இன்று புழக்கத்திலிருக்கும் சுமார் 17,55,000 கோடியில் மதிப்பில் 45% ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்! 40% ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்!

இதில் ஏறத்தாழ 40 சதவிகிதம் நோட்டாகப் பதுங்கியிருப்பவை!

சற்றேறக்குறைய ஆறு லட்சம் கோடி!

இது குறைவான தொகையா என்ன?

இதுபோக, 2015 - 16 ல் கணக்குப்படி பிடிபட்ட 6,50,000 கள்ள நோட்டுகளில் 4,00,000 நோட்டுகள் ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்!

பிடிபடாதவை எத்தனை கோடிகளோ!

இந்த அறுவை சிகிச்சை மேலே சொன்ன எல்லாத் திருடர்களுக்கும் மறைவிடத்தில் கொட்டிய தேள்!

இன்று ஏறத்தாழ 1,35,00,000 ஐநூறு ரூபாய் நோட்டுகளும், 65,00,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாதென்று அறிவித்த குறைந்த கால அவகாசத்தில் இட்டுநிரப்ப உயர் மதிப்பீட்டில் நோட்டுகளை வெளியிடுவதே சிறந்த வழி!

அச்சடிக்க குறைந்த செலவேயாகும், பாதுகாப்பு அம்சங்கள் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது மக்களின் வரிப்பணம் வீணாவதைக் குறைக்கும்!
மேலும் உபயோகிப்பதும் புழக்காட்டமும் குறைவு என்பதால், திரும்பத் திரும்ப அச்சடிக்கும் செலவும் குறைவு!

அரசே அறிவித்தபடி, இந்த நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்படுவதால் கண்காணிப்பதும் சுலபம்!

என் கணிப்பு சரியானால், சில வருடங்களிலேயே இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும்!
எனவே இவை பதுக்கப்படும் சாத்தியங்களும் குறைவே!

மட்டுமல்ல, இந்த அதிர்ச்சி, இனி டெட் மணி என்று சொல்லக்கூடிய, பணமாகப் பதுக்கப்படும் வழக்கத்தை நிச்சயம் சில வருடங்களுக்காவது தடுக்கும்!

இதனால் லஞ்ச ஊழல்கள் குறையுமா, அல்லது விட்டதைப் பிடிக்கும் ஆவேசத்தில் பன்மடங்கு பெருகுமா என்பது இனி அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தே அமையும்!

எனில், இந்த வலைக்குத் தப்பிய திமிங்கலங்களும், முதலைகளும் தப்பித்தேதான் திரியுமா?

முதல் நடவடிக்கையின் வீரியம் குறையாமல் அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் இதே தீவிரத்தோடு முன்னெடுக்குமேயானால் - இல்லை!

அடுத்த சில மாதங்களில் முதலீடுகள் அனைத்தையும் ஆதார் அட்டையோடு இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்றே அவதானிக்கிறேன்!

அப்படி இணைக்கப்படாத முதலீடுகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும்!

எனில், எல்லா உள்நாட்டு முதலீடுகளும் வரி வளையத்திற்குள் வரும்!

அடுத்து, வெளிநாட்டு முதலீடுகளையும் கணக்கில் கொண்டுவரும் நடவடிக்கை!

இந்த மாற்றங்களால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடாவிட்டாலும் இன்றைய கோளாறுகளில் பல சீர் செய்யப்படும்!

இப்போதைய நடவடிக்கையின் உடனடி பலனாக, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளின் முறையற்ற விலையேற்றம் உடனே குறையும்!

கடந்த சில நாட்களாக செலவுக்குப் பணமற்றுத் தவித்த தனி நபர்களும், தங்கள் பணியாளர்களுக்கு சம்பளமும் கூலியும் தரமுடியாமல் தவித்த, தவிக்கும் நிறுவனங்களும் இனி வங்கி மூலம் பரிவர்த்தனைகளை அதிகரிக்க, பணப் பரிமாற்றம் பெருமளவு குறையும்!

வங்கிப் பரிமாற்றங்கள் அதிகரிக்கும்போது, வெறும் ஒரு சதவிகிதம் பரிமாற்ற வரி விதிப்பு, நாட்டின் பொருளாதாரத்தை புது உயரங்களுக்கு இட்டுச்செல்லும்!

மற்ற நேரடி, மறைமுக வரி விதிப்புகள் குறைவது விலைவாசி உயர்வை பெருமளவு கட்டுப்படுத்தும்!

ரூபாயின் சர்வதேச மதிப்பு உயரும்!

சரி, இதெல்லாம் ஏன் 1948 மற்றும் 1976 வருடங்களில் எடுக்கப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளால் நடக்கவில்லை?

தொடர் நடவடிக்கைகள் சரியாக இல்லாததே காரணம்!

நான் எதிர்பார்க்கும் எல்லா மாற்றங்களும் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் உறுதியாக இருப்பதைப் பொறுத்தே!

மதவாதத்திலும், ஹிந்தித் திணிப்பிலும் காட்டும் மூர்க்கமான முனைப்பை, இதுபோன்ற நல்ல விஷயங்களிலும் மோடி அரசு காட்டும் என்று நம்புவோம்!

நம்பிக்கைதானே வாழ்க்கை!


ஏன் வெளிநாட்டுக் கறுப்புப்பணம் உள்நாட்டுக்கு வந்து என் கணக்கில் பதினைந்து லட்சம் சேரவில்லை என்ற கேள்விக்கு,

நீதித்துறையின் மாண்பு சர்வதேச அளவில் சீர்குலையும் சூழலைத் தவிர்க்கவே அந்த நடவடிக்கை தள்ளிப்போனது என்பதுதான் உண்மையான பதில்!

சில மாற்று ஏற்பாடுகள் மறைமுகமாகச் செய்யப்படுவதாய் வரும் செய்திகளும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்தியா நான் வாழும் காலத்திலேயே வல்லரசாகும்! 
நம்புவோம்!
வாழ்க பாரதம்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக