யார் சாபம் இது?
திருச்செந்தூர்
போயிட்டு நைட் ரெண்டு மணிக்குத்தான் வந்து படுத்திருந்தான் சக்திவேல்!
கண்ணு தீ
மாதிரி எரியுது!
இந்தப் பதினைஞ்சு நாளாவே இப்படித்தான்!
தமிழ் நாட்டுல தெரிஞ்ச, தெரியாத எல்லாக்கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு!
இதுவரைக்கும்
மொட்டை போடுறதா வேண்டுன கோவிலுக்கெல்லாம் மொட்டை போட்டா, இன்னும் மூணு வருசத்துக்குத்
தலைல முடியே இருக்காது!
இன்னும் பதினைஞ்சு
நாள் இப்படித்தான்!
என்ன செய்ய!
எதைத் தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலைமை!
எப்படியாவது இந்தச் சங்கிலி அறுந்தால் போதும்!
அப்படித்தான்
கோடங்கி சொல்லியிருக்கிறான்!
“ஒருவருஷம் நீ கொஞ்சமும்
எதிர்பார்க்காத சாவு, அதற்கு அடுத்த வருஷம் சாவு இல்லைன்னா, இந்த சாபம் விலகிடுச்சுன்னு
அர்த்தம்!”
“என்ன கேட்டாலும்
தாறேன் எப்படியாவது இதை நிறுத்த முடியாதா”ன்னு வெட்கத்தை விட்டு அவன் காலில்
விழுந்ததுதான் மிச்சம்!
"ஒரு பழைய வஸ்த்திரம்,
ஒத்தை ரூபாய் காசு! இதுக்குமேல வாங்கினா, சுடுகாடு தாண்டறதுக்குள்ள ஜக்கம்மா என்னை
ரத்தம் கக்க வெச்சுருவா!
நடக்கும்ங்கறத சொல்றதுதான்
என் வேலை! அதை நிறுத்த நான் கடவுளில்லை!
போ! ஊர் ஊராப் போய் எல்லா
சாமி காலிலும் விழு!
உன் பாட்டன், முப்பாட்டன்
செஞ்ச பாவத்தை எந்த சாமியாவது கழுவும்!"
"அந்தக் கபோதிக செஞ்ச
பாவத்துக்கு இப்போ நாங்க பலியாகணுமா?"
ஏன்? அவனுக சம்பாரிச்ச
சொத்து மட்டும் இனிக்குது, சாபம் கசக்குதா?
பேசமுடியாம
திரும்பி வந்தவன் இப்படிக் கோவில் கோவிலா அலையறான்!
“சக்திவேலு, கொஞ்சம் எந்திருச்சுக்
கெளம்பு சாமி! வெள்ளென கெளம்புனாதான உச்சிகால பூஜைக்கு திருச்செங்கோடு போகமுடியும்!”
ஏங்கெழவி இப்படிக் காதுக்குள்ளையே
அனத்திக்கிட்டுக் கெடக்கறேன்னு
போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு திரும்பிப் படுத்தான்!
“அடேய், இந்த வீட்டுல இந்த வருஷமும்
ஒரு எழவு விழுந்துரும்ன்னுதான்டா உன்னை இந்தக் கெஞ்சு கெஞ்சிக்கிட்டிருக்கறேன்!”
“சனியனே, உனக்குத்தான்
தொண்ணூறு வயசு ஆகிப்போச்சுல்ல!
நீ நாண்டுக்கிட்டுச்
செத்துப்போவேன்! இந்தவருஷ கோட்டா முடிஞ்சுதொலையும்!”
முனகிக்கொன்டே
எழுந்து உட்கார்ந்தான் சக்திவேல்!
சொல்லீட்டானே தவிர, அவனுக்கும் மனசு அடிச்சுக்கிட்டே கிடந்தது!
இல்லாட்டி சக்திவேலாவது,
காலைல ஆறு மணிக்கு எழுந்திருப்பதாவது!
சொன்னா யாரும்
நம்பமாட்டீங்க! ஆனா, போன அஞ்சு வருஷமா, அந்த வீட்டில் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் ஒரு
உயிர் பறிபோய்க்கிட்டு இருக்கு!
முதல் வருடமே,
ஐப்பசி கடைசி சனிக்கிழமை கோடாங்கி சாமத்துல வந்து குறி சொன்னான்னு ஆத்தா சொல்லுச்சு!
“டேய் காசி, எனக்கென்னமோ பயமா இருக்குதுடா,
இன்னைக்கு சாமத்துல வந்த கோடங்கி, இந்த வீட்டுக்கு ஒரு தோஷமிருக்குது, வரிசையா, ஒவ்வொரு
கார்த்திகை மாசமும் ஒரு உசுரு காவு வாங்கப்போகுது! இந்த வீட்டோட கடைசி வாரிசு தலை சாயற
வரைக்கும் இது நடக்கும்ன்னு மூணுதடவை சொல்லிட்டுப் போனான்டா! எனக்கென்னமோ பயமா இருக்குது
ராசா”ன்னு அப்பாகிட்ட
பொலம்புச்சு!
“ஏம்மா
காலங்காத்தால உசுர வாங்கறே, அந்த நாயி காசுக்காக ஏதாச்சும் அடிச்சு விட்டிருக்கும்!
நீயே
பாரு, மத்தியானமா வந்து பரிகாரம் செய்யறேன்னு நிக்கும்!”
சொல்லிக்கிட்டே
வயலுக்குப் போய்ட்டாரு!
ஆனா, அந்தக்கோடங்கி
அதுக்கப்புறம் வரவே இல்லை!
ஆனா, நல்லா
இருந்த சித்தப்பா, கரைக்ட்டா தீபத்துக்கு முந்துன நாள் செத்துப் போய்ட்டாரு!
உள்ளூர்ல
பள்ளிக்கூடத்து வாத்தியாரு.
கர்லாக்கட்டை
எல்லாம் சுத்தி உடம்பை நல்லா வெச்சிருந்த மனுஷன்!
நாப்பத்திமூணு
வயசு வரைக்கும் ஒரு தலைவலி, காய்ச்சல்ன்னு படுத்ததில்லை!
ரெண்டு மைல்
தூரம் பள்ளிக்கூடத்துக்கு நடந்துதான் பள்ளிக்கூடத்துக்குப் போவார்!
அன்னைக்கும்
குளிச்சிட்டு வந்து தலை தொவட்டிக்கிட்டே, ஆத்தாகிட்ட கேட்டாரு,
“அப்பன அனுப்பிச்சு பத்து
வருசமாச்சு, நீ எப்போ கெளம்பப்போறே கெழவி “
“போடா போக்கத்தவனே, நல்ல நாள் வருது
பேச்சப்பாரு!”
கெழவி வாயை
மூடறதுக்குள்ள அப்படியே மடங்கி உட்கார்ந்தார்!
வழக்கம்போல ஏதோ காமெடி பண்ணறாரு அப்படின்னு
சிரிச்சுக்கிட்டே சின்னம்மா போய்த் தொட்டா, அப்படியே சாஞ்சுட்டாரு!
அவர் செத்துட்டாருன்னு
நம்பவே பத்து நிமிஷம் ஆச்சு!
டாக்டர் வந்து
பார்த்துட்டு,
“சிவியர்
ஹார்ட் அட்டாக்! உயிர் போயி கால் மணிநேரம் ஆச்சு!”
யாருக்குமே
அதை நம்ப முடியலை!
சபேச வாத்தியார்
இப்படி செத்துப்போவார்ன்னு ஊரில் யாருமே எதிர்பார்க்கவில்லை!
கெழவிதான்
தலைதலையா அடிச்சுக்கிட்டு அழுதுச்சு!
“கோடங்கி சொன்னான், கோடங்கி சொன்னான்னு
நான் எத்தனை சொல்லியும் ஒரு நாயாவது நம்புச்சா?
இப்போ என் குலவிளக்கு அணைஞ்சுபோச்சே!
நான் என்ன பண்ணுவேன்!”
பத்தாம்நாள்
காரியம் முடிஞ்சதும், அப்பன் போய் சித்தோட்டு ஜோசியனைக் கூட்டிக்கிட்டு வந்தாரு!
வீட்டுல எல்லார்
ஜாதகத்தையும் பொறுமையா பார்த்துட்டு சொன்னார்!
“சொல்லறேன்னு
தப்பா நினைக்காதீங்க! உங்க முன்னோர் ஆடுன ஆட்டமும், வாங்கிக் குவிச்ச சாபமும் அப்படி!
இப்போ,
அதோட அறுவடைக் காலம்!
எந்தப்
பத்தினி சாபமோ, எந்தப் பாவத்தோட விளைவோ, இந்தமாதிரி அகால மரணம் இந்த வீட்டுல ஆரம்பிச்சிருக்கு!
வீட்டுல
பாதி ஜாதகம் சரியில்லை! இது தொடரும்ன்னுதான் படுது!”
“இதுக்கு
ஏதும் பரிகாரம் இருக்கா ஜோசியரே?”
“சாமி
கும்புடுங்க!
அப்ப
நான் உத்தரவு வாங்கிக்கவா?”
சட்டென்று
எழுந்துபோய்ட்டாரு ஜோசியரு!
ஆனா, சக்திவேலுக்கு
இதெல்லாம் நம்பறமாதிரியே இல்லை!
அப்பன்கூட
ஏதோ அரைகுறையாத்தான் நம்பினார் போல!
அந்த வருஷம்
யாருமே அதைப் பெருசா எடுத்துக்கல!
ஆத்தாதான்
ஒருநாள் விடாம பெருமாள் கோவில்ல போய் விளக்கு வெச்சுட்டு வரும்!
ஆனா, சரியா
அடுத்த ஐப்பசி மாசம், சக்திவேல் தூக்கம் வராம பொரண்டுக்கிட்டிருந்த ஒரு விடிகாலை!
திடீர்ன்னு
குடுகுடுப்பை சத்தம்!
“இந்த வீட்டுல ஒரு துஷ்டி
விழப்போகுது, இனி வருஷம் ஒண்ணா இந்தக் குடும்பமே கருவறுத்துப் போகப்போகுது. இது ஜக்கம்மா
சொல்லு!”
ஒரு நிமிஷம்
அரண்டுபோய் துள்ளி எழுந்து பார்க்கும்போது, தெருக்கோடி தாண்டிப் போயிட்டான்!
மூஞ்சி இருண்டுபோய்
நின்னுக்கிட்டிருந்த ஆத்தாகிட்ட கேட்டான்!
"என்ன ஆத்தா இது?"
"நான் என்னத்தடா சொல்லட்டும்?
உன் பாட்டன் காலம் வரைக்கும், நம்ம
வீடு ஆம்பளை சிங்கமெல்லாம் என்ன ஆட்டம் போட்டுச்சுன்னு அந்த மகமாயிக்குத்தான் தெரியும்!
மாளாத காசு இருக்கற திமிரு!
தின்னு தின்னு ஒடம்புல ஊறின கொழுப்பு!
ஊருக்கு நூறு கூத்தியா!
காசுக்கு வர்ற அந்த நாய்க பத்தாதுன்னு
ஊருக்குள்ள ஒரு குடியானச்சி பளிச்சுன்னு இருக்கக் கூடாது!
வெறிநாய் மாதிரி பாஞ்சுருவானுக!
காசைக் குடுத்தோ, உசுர எடுத்தோ, சத்தம்
வராம பாத்துக்குவானுக!
தாத்தன் எப்படி ஆத்தா?
அந்தப் பத்தீருவான் என்னைக் கட்டிக்கிட்ட
ராத்திரியே ஊர் மேயப்போய்ட்டு நடுசாமத்துக்கு வந்தான்!
முதுகெல்லாம் நகக் கீறலோட எம்மேல வந்து
உழுந்தான்!
அன்னைக்கே, அரளிவிதையை அரைச்சுக் குடிக்கவோ,
அவனுக்கு ஊத்தவோ தைரியமில்லாம ஆறு புள்ளைங்க பெத்தேன்!
எனக்குப் பொறந்தது ஆறு! ஊருக்குள்ள
எத்தனையோ!
அவனுக்கென்ன, அறுவது வருஷம் கல்லுக்குண்டாட்டம்
இருந்துதான் செத்தான்!"
"எங்க அப்பன், சித்தப்பன்லாம்
எப்படி?"
"முன்னேரு சரியாப் போனா, பின்னேரு நேராத்தான
போவும்?
உங்கப்பனை நான் அடிச்சு வளர்த்த, மத்ததுகளும்
ஒழுங்காத்தான் இருக்குதுன்னு நம்பறேன்!"
அந்த வருஷம்
எல்லாருக்கும் அன்னைக்கே போய் KMCH ல மெடிக்கல் செக் அப் பண்ணிக்கிட்டு வந்து என்ன
பிரயோசனம்?
ரெண்டாவது
சித்தப்பன் பெண்டாட்டி பாவடிக்கிணத்துல தடுமாறி விழுந்து மண்டை உடைஞ்சு அங்கேயே செத்துப்போனப்ப
கார்த்திகை எட்டு!
அதுக்கப்புறம்,
மூணு வருஷத்துல மூணு உசுரு!
சொல்லி வெச்ச
மாதிரி கார்த்திகைலேயே!
அழுது புரண்டு
கேரளா மாந்த்ரீகம் வரைக்கும் பாத்தாச்சு!
என்ன செஞ்சும்
நிறுத்தமுடியலை!
மூணு வருஷமா
கண்ணிலேயே படாத கோடங்கியை இந்த ஐப்பசில சுடுகாட்டுல வெச்சுப் புடிச்சு கெஞ்சினப்போதான்
சொன்னான்!
ஊரூராய் போய்
கோவில்ல விழுன்னு!
பக்கத்து
வீடு பரணிப் பிள்ளை வீடு!
அந்த கோமதி
அக்கா அவ்வளவு அழகு!
ஏனோ, பரணிப்பிள்ளை
இருபது வருஷத்துக்கு முன்னாடி நாண்டுக்கிட்டு செத்துப்போனாரு!
இன்னைக்கு
வரைக்கும் யாருக்கும் காரணம் தெரியாது!
ஒத்தைப் புள்ளை
ரமேசு!
சக்திவேலுக்கு
சோக்காளி!
ஆனா ஏனோ அவனைக்கண்டா
அப்பனுக்குப் பிடிக்காது!
எப்போ பார்த்தாலும்
அவன்கூட என்னடா சுத்தறேன்னு கத்திக்கிட்டே இருப்பாரு!
ஆனா, ரமேசு
இல்லாம சக்திவேலு வாசப்படி தண்டமாட்டான்!
இந்தப் பதினைஞ்சு
நாளும் ரமேசும் இவன் கூடவேதான் ஊரூரா சுத்தறான்!
கோமதி அக்கா
அப்பன் இல்லாதப்ப வந்து அம்மாகிட்டயும் ஆத்தாகிட்டயும் அரட்டை அடிச்சுக்கிட்டிருக்கும்!
அப்பன் தலை
தூரத்துல தெரிஞ்சாலே, எந்திருச்சுப் போயிடும்!
எந்த நேரமும்
அந்த முண்டச்சிகிட்ட என்ன அரட்டை?
அப்பனும்
சுள்ளுன்னுதான் விழுவாரு!
அதையும் ஆத்தாகிட்ட
கேட்டுட்டான்
“ஏன் ஆத்தா அப்பன் இப்படி
இருக்கறாரு?”
"உன்னையும் ரமேஷையும் மாதிரி உங்க அப்பனும்
பரணிப்பிள்ளையும்!
மலங்காட்டுக்குப் போகையில கூட சோடி
போட்டுக்கிட்டுப் போவானுக!
திடீர்னு அவன் தூக்கு மாட்டிக்கிட்டு
செத்ததுல இருந்து உங்கப்பன் அவளைப் பார்த்தாலே இப்படித்தான் எரிஞ்சு உழுறான்!
அந்தப்பையன் ரமேசு மூஞ்சீலகூட முழிக்காத
அளவுக்கு என்ன ஆத்திரமோ?
கூடவே சுத்துனவன் செத்ததுக்கு அவன்
பொண்டாட்டிதான் காரணம்ன்னு நெனைக்கறானோ என்னமோ!
இந்தக் கல்லுளி மங்கன்கிட்ட யாரு கேட்கறது!"
அடிச்சுப்புடிச்சு
கெளம்பி திருச்செங்கோடு போய் நூத்தியெட்டு தேங்காய் ஒடச்சுட்டு வரும்போதே, நாளைக்கு
கூடுதுறைக்குப் போலாம்டா ரமேஸுன்னு சொல்லிட்டுதான் வந்தான்!
அடுத்த பதினாலு
நாளும் பண்ணாரி, சிவன்மலை, கும்பகோணம்ன்னு ஓடிப்போச்சு!
இதோ, இன்னைக்கு
கார்த்திகை முப்பது!
இந்த ஒருநாளை
ஓட்டிட்டா போதும்!
அந்த சங்கிலி
அறுந்துடும்!
மதியத்துக்குமேல
ஆத்தா மூஞ்சியில்கூட சிரிப்பும் நிம்மதியும் தெரிஞ்சுது!
"வாடா ரமேசு,
ஈஸ்வரன் கோவிலுக்குப் போய் வெளக்குப் போட்டுட்டு வந்துரலாம்!"
பைக்கை எடுத்துக்கிட்டு
ரெண்டுபேரும் கிளம்புனாங்க!
கோவிலுக்குப்
போயிட்டு வரும்போது, சக்திவேல்தான் ஓட்டிக்கிட்டு வந்தான்!
நாடார் கடை
மேடு தாண்டும்போது, ரமேஷ் ஏதோ சொன்னான்னு திரும்பிக் கேட்டுட்டு நிமிர்ந்து பார்க்கும்போதுதான்
அந்த லாரியைப் பார்த்தான்.
அவ்வளவு
பக்கத்துல!
இதோ, நடந்தே நடந்திருச்சு
அந்த நம்பமுடியாத சாவு!
கோமதி அக்கா
நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கிட்டு அழுதுச்சு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக