சனி, 31 டிசம்பர், 2016

ஜெயராஜ் மரணமும் சசிகுமாரும்!ஜெயராஜ் மரணத்தில் ஏன் இத்தனை மர்மங்கள்? 

அந்த மரணத்தால் மிகப்பெரிய பலனை அனுபவிப்பது சசிதான் எனும்போது எல்லோர் சந்தேகமும் சசிகுமார் மீது பாய்வது இயற்கைதானே?

ஜெயராஜ். ஆரம்பத்திலிருந்தே ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்து, மர்மமாகவே இறந்தும்போனார்!

ஜெயராஜ் ஒரு நாடகக் கலைஞருக்கு மகனாகப் பிறந்தவர்!

நன்றாகப் படித்து ஒரு நல்ல பதவியில் அமரவேண்டும் என்ற லட்சியம் அப்பாவின் கட்டாயத்தால் நாடகக் கொட்டகையில் முடிந்தது!

நடிக்கவந்த இடத்தில், தன் அழகாலும் திறமையாலும் நிலா என்ற பெயர்பெற்ற ஸ்திரீபார்ட்டோடு அதிகம் ஜோடி சேர்ந்து நடித்ததில், ஏறத்தாழ அவரது கணவராகவே மக்கள் மனதில் இடம் பெற்றார்!

சட்டென்று ஷோபி என்ற இன்னொரு வேற்றுமொழி நடிகையோடு மனமொத்துப்போய் நிம்மதியாக நாடகக்கொட்டகையை மறந்து வாழ்ந்துவந்தார்!

காலம் இப்படி ஒரு அமைதியான கதையை வேடிக்கை பார்க்காதே!
நிலா, நாடகத்தில் நடிக்கும்போதே, ஷேர் மார்க்கெட்டில் ஈடுபாடு கொண்டவர்.

தம்பிதுரை என்பவர் நடத்திவந்த கம்பெனியில் தயாநிதி என்பவர் இயக்குனராக இருந்தார்! தம்பிதுரை மறைவுக்குப்பின் சில உள்ளடி வேலைகள் செய்து தானே நிர்வாக இயக்குனராகி அந்த கம்பெனியை ன் வசமாக்கினார்!

அதில் கவுரவ இயக்குனராக இருந்த நிலா, ஒரு கட்டத்தில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தார்!

தயாநிதி, நிலா, இருவருமே, தத்தம் கம்பெனிகளை திறமையாக நிர்வகித்து, அகில இந்தியக் கம்பெனிகள் தங்களுக்குப் போட்டியாக வராமல் பார்த்துக்கொண்டார்கள்!


நிலா இருக்கும்வரை, தயாநிதிக்கு எந்தஒரு மேஜர் காண்ட்ராக்ட்டும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்!

இந்த நிலையில்தான் ஜெயராஜ் வாழ்வில் அந்தத் திருப்பம் வந்தது!
நிலா, தன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள ஜெயராஜுக்குத் தூது அனுப்பினார்!

கம்பெனியிலோ, வியாபாரத்திலோ சுத்தமாக அவருக்கு ஈடுபாடே இல்லை.
ஷோபியோடு நிம்மதியாக வாழ்வதே அவர் விருப்பமாக இருந்தது!

ஆனால் நிலாவின் பிடிவாதம் ஊர் அறிந்தது!
சாம பேத தண்டப் பிரயோகத்தில் ஜெயராஜை இழுத்துவந்தார்.

விருப்பமே இல்லாது வந்த ஜெயராஜ் சீக்கிரத்திலே அதிகார சுகம் தந்த போதையில், நிலாவுக்கு எதிராகவே உள்கட்சி அரசியல் செய்யவும் துணிந்தார்!

எல்லோருக்கும் வரும் மரணம் நிலாவுக்கும் வர, சிலபல சில்லறை வேலைகளோடு, அந்தக் கம்பெனிக்கு நிர்வாகி ஆனார் ஜெயா!

தயாநிதி, ஜெயா இருவரும் மாறிமாறி தமிழக காண்ட்ராக்ட்களை அள்ள, தேசியக் கம்பெனிகள் மிக்ஸர் சாப்பிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தன!

நிலாவின் மேலிருந்த ஆத்திரம் ஜெயாவை அகங்காரம், ஆணவம், அகந்தை என வேறுதளத்துக்கு இட்டுச்செல்ல,
கம்பெனியில் அனைத்து இயக்குனர்களையும் தன் காலில் விழும் அடிமைகளாகவே நடத்திவந்தார்!

அவர்களும் வருமானம் வரும்போது தன்மானமாவது வெங்காயமாவது என்று அடிமை வேஷத்தையே திறம்படப் போட்டு, காண்ட்ராக்ட், கமிஷன் என்று கொடிகட்டிப் பறந்தார்கள்!

இந்தக் கதையில் அடுத்த திருப்பம்!

நிலாவால் ஜெயாவை வேவுபார்க்க அனுப்பப்பட்ட வேலைக்காரன் ட்ரைவர் சசிகுமார், சிறிது சிறிதாக ஜெயாவின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு அவரது உடன்பிறவா சகோதரன் ஆனான்!


எல்லோரையும் அடிமையாய் நடத்தும் ஜெயராஜ், சசியிடம் எதனாலோ கட்டுப்பட்டுப் போனார்!

சசியும், அவர் உறவுக்கூட்டமும் ஜெயராஜை முழுமையாக அடிமைப்படுத்தியது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் சற்றும் தயக்கமே இல்லாமல் ஈடுபட்டு அந்தக்கும்பல் பணத்தை அள்ளியது!

அம்பானி, அதானிக்கே சவால்விடும் அளவில் அந்தப் பிச்சைக்கார கும்பல் தமிழகத்தைக் கூறுபோட்டு வளைத்தது!

ஜெயக்குமாரின் அக்கா குடும்பம் ஜெயராஜை  அண்டாமல் அந்தக் கும்பல் சாமர்த்தியமாக வேலிபோட்டுப் பிரித்தது!

யாருமற்ற தான் யாருக்காக சொத்து சேர்க்கிறோம் என்பதே தெரியாமல், உற்சாகமாக இந்த கும்பலோடு கொள்ளையில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றபோதும், ஜெயா, தன் கம்பெனியின் கோடிக்கணக்கான பங்குதாரர்களின் நலனை எண்ணாமல், இந்தக் கும்பலின் கூடாரத்தில் சந்தோஷமாக, இயல்பாக இணைந்துகொண்டார்!

கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமார் நியமிப்பவரே கம்பெனியின் இயக்குனர்கள், அதிகாரிகள் ஆகமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டபோதும், ஒரு டிரைவரின் காலை நக்கிப் பிழைக்க அந்த டைரக்டர்களும் பழகிப்போனார்கள்!

இந்த நிலையில், ஊழ்வினை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்காய் உருவெடுக்க, அதன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராது என்பது வெளிப்படையானது!

அப்போது, யாருக்கும் புரியாத மர்மமாய் ஜெயராஜ் காய்ச்சல் என்ற பெயரில் மருத்துவமனைக்கு ஒரு நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டார்!

அதுதான் ஜெயராஜை உலகம் கடைசியாகப் பார்த்தது!

எழுபத்தைந்து நாள்!
சசியின் மொத்தக் கட்டுப்பாட்டில் ஜெயாவுக்கு மருத்துவம் நடப்பதாய் நாடகம் நடந்தது!

அவரது அக்கா மகனான தீபன் உட்பட யாருமே பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது!

கேள்வி கேட்கவேண்டிய மத்தியக் கட்டுப்பாட்டு நிறுவனமோ, சசியின் கண்ணசைவில் ஆடியது!

அதன் பிரதிநிதிகள் சசி சொல்வதை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் ஆனார்கள்!

எழுபத்தைந்து நாள் அவகாசத்தில் ஜெயராஜின் கைரேகைகள் தேவையான அளவு  உருட்டப்பட்டன!

சசியின் பேரங்கள் முடிந்தபின் ஜெயராஜின் இருப்பு தேவையற்றதானது!
மேலும் ஒரு நாடகத்தில், உச்சகட்டக் காட்சி அரங்கேற, ஜெயராஜ்மாரடைப்பால்”  காலமானார்!

மத்தியப் பிரதிநிதி மிளகாய் நாயுடு நாள் முழுக்கக் கூட இருந்து எல்லா ஏற்பாட்டையும் சுமுகமாக முடித்துக்கொடுக்க,

பிணம் அனாதையாய் மருத்துவமனையில் கிடக்க, இங்கே, கம்பெனிக்கு டைரக்டர்கள் நியமனம் அர்த்தராத்திரியில் அரங்கேறியது!

இந்த உலகத்தில் எங்குமே நடந்திராதவகையில் நள்ளிரவில், கொஞ்சமும் மனஉறுத்தல் இன்றிப் பிணத்தின் மேல் பதவியேற்றன அடிமைகள்!

அவசரம் அவசரமாக ஜெயராஜ் சசி கைகாட்டி இடத்தில் எரியூட்டப்பட, உண்மைகள் அவரோடே எரிந்துபோயின!

கம்பனியை வசப்படுத்தியதோடு, ஜெயராஜின் அப்பா சம்பாதித்த சொத்து உட்பட, எல்லாவற்றையும் கேள்வி கேட்பாரின்றி தன் வசப்படுத்தியது சசியின் கொள்ளைக்கூட்டம்!

ஜெயராஜின் அக்கா மகன் தீபனும் பத்திரிக்கைப் பேட்டி கொடுப்பதோடு தன் கடமை முடிந்ததென்று ஒதுக்கிக்கொள்ள,
கம்பெனியின் கோடிக்கணக்கான பங்குதாரர்களை மயிருக்கு சமானமாக மதித்து, அவர்களை சசிக்கு அடிமை ஆக்கியது காலில் விழுந்து புரண்டு சுகம் கண்ட அடிமைக்கூட்டம்!

இழவு விழுந்து முப்பதுநாள் கூட முடியாத நிலையில், கோலாகலமாக விழா எடுத்து சசியை நிர்வாக இயக்குனர் ஆக்கியது அடிமைக்கூட்டம்!

போதாக்குறைக்கு, ஜெயராஜுக்கு தொழில் கற்றுக்கொடுத்ததே அந்த ட்ரைவர்தான் என்றும்,
கம்பெனியைக் கட்டிக்காத்ததே சசிதான் என்றும்,
ஜெயா வெறும் அறிவுகெட்ட முண்டம் என்றும்
கூசாமல் ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்து தங்கள் விசுவாசத்தை நிரூபித்தது அடிமைக்கூட்டம்!

காசு மட்டுமே ஊடக அறமாகக்கொண்ட ஊடகங்களும் கல்லாவை நிரப்பிக்கொண்டு ஆமாம்சாமி பாட்டுப்பாடின!

கேள்வி கேட்கவேண்டிய மத்திய நிர்வாகமோ, தனக்குத் தலையாட்டும் முப்பத்துஒன்பது மற்றும் பதினோரு அடிமைகளும், கண்டைனர் கணக்கில் பணமும் போதுமென்று ஒதுங்கிக்கொண்டது!

நீதிமன்றமே முன்வந்து ஜெயா மரணம் குறித்து ஏன் அக்கா மகன் தீபன் வழக்குத் தொடரவில்லை என்று ஆதங்கமாய்க் கேட்டது!
சசியின் பதவியேற்புக் கோலாகலங்களில் அந்தக் கேள்வியும் காற்றில் கரைந்தது!

அவ்வளவுதான்!

சுபம்!

பி கு:

இந்தக்கதையை படித்துப்பார்த்த என் பதின்ம வயது மகன் கேட்ட கேள்விகள்!

1.      ஜெயா உறுதியானவர், திறமையானவர் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலும் உனக்கு, ஆரம்பம் முதலே, அடுத்தவர் இழுத்த இழுப்புக்குத்தானே வளைந்து கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லையா?

2.      கோடிக்கணக்கான பங்குதாரர்கள் ஜெயராஜ் மீது உயிரையே வைத்திருப்பதாகவும், அவர் சிறை சென்றபோதே தீக்குளித்ததாகவும் கதை சொல்கிறாயே, இன்று அவர் மரணத்துக்கு அவர்கள் யாருமே ஏன் வீதியில் இறங்கிப்போராடவில்லை?


3.      தயாநிதிக்கு உண்மையில் மக்கள்மேல் அக்கறை இருந்திருக்குமானால், இந்த அவலத்தைத் தடுக்க ஏன் எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்?

4.      மாற்றுக்கம்பெனியை கைப்பற்றத் துடிக்கிறார் என்ற கெட்டபெயர் வரும் என்ற பயம் மட்டுமே காரணமா? இல்லை சசியோடு ஏதும் கள்ள உடன்படிக்கையா?

5.      ஜெயா இருக்கும்போதே ஆட்டம்போட்ட இந்தக் கொள்ளைக்கூட்டம் இனி ஆடப்போகும் ஆட்டத்தின் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் கடமை அவருக்கு இல்லையா?

6.      தமிழக மக்களுக்கு இனி விமோசனமே இல்லையா?வழக்கம்போல் காற்றில் கரைந்தன கேள்விகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக