வெள்ளி, 22 டிசம்பர், 2017

அதிபரைக் கொல்ல முயன்ற பிக்பாக்கெட்!"அதிபரைக் கொலை செய்ய முயன்றன வழக்கிலிருந்து அரசன் உட்பட அனைவரும் விடுதலை!"
காலையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் ஊடகங்களிலும் ஒருமித்த குரலில் அலறின!

வழக்கம்போல இதிலும் வாதங்களும் எதிர் வாதங்களும் வரிசை கட்டி வர, “இனாஃப் ஆஃப் திஸ் ட்ராஷ்”  என்று முனகியவாறு சர்க்கரை இல்லாத கடுங்காப்பியை ஒரு கோப்பையில் எடுத்துக்கொண்டு காற்றாட பால்கனியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்!
ஏனோ அன்று வேலையில் மனம் ஒட்டவில்லை!
கடும் கசப்பும் சூடுமாய் காஃபி தொண்டைக்குள் இறங்க, ரவியின் மனதில் காட்சிகள் விரிய ஆரம்பித்தன!அது ஒரு வினோதமான நாடு!

முன்னூறு ஆண்டுகள் வெள்ளைக்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தேசம், தன்னை உய்வித்த மஹானையே களபலி கொடுத்துவிட்டு இன்று கொள்ளைக்காரர்களுக்கு விரும்பியே அடிமைப்பட்டுக் கிடக்கிறது!

கொள்ளையடிப்பதும் திருடுவதும் வாழ்க்கை முறை என்று எப்போதோ உளமார ஒத்துக்கொண்ட மக்கள் வாழும் தேசம்!

தங்களுக்குள் மொழி, இனம், மதம் சாதி, நிறம் என்று கிடைத்த காரணங்களையெல்லாம் வைத்து மோதிக்கொண்டு, பழம்பெருமை பேசி சிறுகச் சிறுகச் செத்துவரும் இனம்!

அங்கு ஆட்சி முறை என்பது ஒரு வினோதமான அமைப்பு!

ஆங்காங்கு மாநிலங்களில் சிறுசிறு பிக்பாக்கெட் திருடர்கள் ஆண்டுகொண்டிருக்க, மத்தியில் அவர்களை ஆட்டுவிக்கும் ஒரு தலைமைக் கொள்ளை கும்பல்!

இவை அனைத்தையும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஒரு திருவிழாவில் தேர்ந்தெடுத்து, அந்தத் திருடர்கள் கையில் தங்கள் வீட்டு சாவியை மகிழ்வாய்க் கொடுத்துவிட்டு தங்களுக்குள் அடிதடியைத் தொடரும் ஆட்டுமந்தைக் கூட்டம்!
இந்தக் கூட்டத்திலும் ஒட்டாது ஒரு கூட்டம் அந்த தேசத்தின் தென்கோடி முனையில்!
அங்கிருப்பவர்களுக்கு ஒரு வினோதமான மனநிலை!

அடுக்கு மொழியும், அழகாய் இருப்பதும்தான் ஆள்வோரின் லட்சணம் என்று தங்களுக்குள் முடிவு செய்துகொண்டு, அண்டை மாநிலங்களோடோ, மொத்தமாய் ஆளும் மத்தியக் குழுவோடோ, எந்தக் காலத்திலும் ஒரு இணக்கம் பேணாத கூட்டம்!

நாளடைவில், சிகப்பாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வினோத நம்பிக்கையில், தனக்கான ஆண்டைகளை அரிதாரம் பூசும் கூட்டத்துக்குள் தேட ஆரம்பித்தது!

அவர்களும் கிடைத்த வாய்ப்பை உறுதியாகப் பற்றிக்கொண்டு ஒருநாள் சாராயக்காசை பிச்சையாக எறிந்து ஆளும் உரிமையை சுலபமாய் அபகரித்துக்கொண்டார்கள்!

இப்படியே வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது!

மத்தியில் ஒரு கொள்ளைக்கூட்டம் நிரந்தரமாகப் பாய்விரித்துப் படுத்திருந்தது!
அதன் தலைமை மட்டும் ஒற்றைக் குடும்பத்தின் கையில் ஐந்து தலைமுறையாக பாதுகாப்பாய் இருந்தது!

எதிர்த்து நின்ற மற்றொரு கொள்ளைக்கூட்டம் அவ்வப்போது தலைமையைக் கைப்பற்றினாலும், அது ஒரு தற்காலிக நிலையாகவே இருந்தது!

காலம் எப்போதும் ஒரே பருவநிலையோடு இருப்பதில்லையே?

அண்டைநாட்டு விவகாரத்தில் ஒரு தவறான நிலைப்பாட்டை எடுத்த ஆளும் கூட்டத் தலைவன் கொல்லப்பட, வாரிசு உரிமை அடிப்படையில் அவரது மனைவி தலைமை ஏற்க, ஒரு சட்டச் சிக்கல் வந்ததில், ஒரு மௌன சாமியார் கைப்பாவை அதிபரானார்!

அதே நேரத்தில், அதன் எதிரியான கூட்டத்தில், ஒரு இளம் அமாவாசைத் தலைவன் மெல்லமெல்ல நாகராஜ சோழன் ஆகிக்கொண்டிருந்தான்!
அவனைப் பொறுத்தவரை, வெல்வதற்கு எவரையும் கொல்லலாம், எந்தப் பாதகத்தையும் செய்யலாம்!

அவனது ராஜகுரு அடிக்கடி சொல்வதுண்டு,
" எவ்வளவு கேவலமான வழிமுறையும் வெற்றிக்குப்பின் மறக்கப்படும்! வெற்றிதான் முக்கியம்!!"
அது அவருக்கே தீங்கானது அடுத்த கதை!

இந்தக் கொள்ளைக்கூட்டங்களையும் அச்சுறுத்த ஒரு தன்னாட்சி அமைப்பு இருந்தது!

அதை எப்படியோ கைப்பற்றினான் நாகராஜசோழன்!

ஒரு அதிகாலையில் அந்தத் தன்னாட்சி அமைப்பின் வழிகாட்டுதலில் அனைத்து ஊடகங்களும் ஒன்றுபோல் அலறின!

“அடுத்து அதிபராகப்போகும் நாகராஜசோழனைக் கொல்ல சதி!
மத்தியில் ஆளும் கூட்டத்தின் ஆதரவோடு தென்கோடி முனைக்கூட்டத்தின் திட்டம்!”

துரதிர்ஷ்டவசமாக, அந்த தென்கோடிக் கூட்டத்தின் தலைவருக்கு மக்கள் மத்தியில் ஒரு தீராத அவப்பெயர்!

‘தேனை எடுத்தேன், புறங்கையை நக்குவதை தவிர்க்க முடியவில்லை!’ என்ற அவரது வசனமும்,
எதிர்த்து நின்ற கூட்டத் தலைமையின் வசீகரமும்
அவரை மக்களின் ஒரு சாரார் மனதில் எதிரியாய் உருவகித்து வைத்துவிட்டது - நிரந்தரமாய்!

இத்தனைக்கும், தேனை எடுக்க ஆரம்பித்த எதிர் அணி தலைமையும், அதை ஆட்டிவைத்த கூட்டமும் மொத்தத் தேனையும் பிடுங்கிக்கொண்டதோடு, வீடு புகுந்தும் திருட ஆரம்பித்தார்கள்!

ஏனோ, அழகில் மயங்கிக்கிடந்த மக்கள் கூட்டம், தானாகவே உடைமைகளை எடுத்து அவர்கள் காலடியில் வைத்துவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை இனாமாகப் பெற்றுக்கொண்டது!

அதன்பின் காட்சிகள் விறுவிறுப்பாக அரங்கேற ஆரம்பித்தன!

வருங்கால அதிபரைக் கொல்ல முயன்றதாக, அரசன் என்ற தென்கோடிப் பிரதிநிதியும், சகாக்களும் கைது செய்யப்பட்டார்கள்!அரிதாரக் கூட்டமும், நாகராஜசோழனும், மாநிலத்திலும் மத்தியிலும் இதைச் சொல்லியே அடுத்த ஐந்தாண்டுத் திருவிழாவில் அதிபர் ஆனார்கள்!

வசீகரமாய்ப் பேசியே அதிபரான நாகராஜசோழனை தன்னாட்சி அமைப்பின் தலைவர் சந்தித்தார்!

"நீதிமன்றம் அவசரப்படுகிறது!
குற்றத்தை நிரூபிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறது! என்ன செய்ய?"

“வழக்கை நடத்து!”

“எப்படி அதிபரே?”

“சுலபம்! அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?”

“உங்களைக் கொலை செய்யத் திட்டமிட்டது!”

“அதைச் சொல்லியே வழக்கை நடத்து!”

“நீதிமன்றம் ஆதாரம் கேட்கிறது அதிபரே!”

“இப்படிச் சொல்லுங்கள்!
அரசன் வழக்கமாய் பிக்பாக்கெட் அடித்த தொகையில் ஒரு கத்தி வாங்க திட்டமிட்டார்!
அந்தக் கத்தியை வைத்து சில கொலைகளைச் செய்து பணம் பறிக்கவும்,
அந்தப் பணத்தை வைத்து வெடிகுண்டுகள் வாங்கவும்,
அந்த வெடிகுண்டு வீசி பீரங்கிகளைக் கைப்பற்றவும்,
அந்த பீரங்கிகளைக் கொண்டு விமானங்களைத் தகர்க்கவும்,
தகர்த்த விமான பாகங்களைக்கொண்டு ராக்கெட் செய்யவும் திட்டமிட்டார்கள்!
அந்த ராக்கெட்டை வீசி என்னைக் கொல்ல சதி செய்தார்கள்!
அவ்வளவுதான்!”

தலை சுற்றி அமர்ந்தார் தன்னாட்சி அமைப்பின் தலைவர்!

“அதிபரே, நீதிமன்றம் இப்படி ஒரு அபத்தக் கட்டுக்கதையை ஏற்காது.
எல்லோரையும் போல அரசனும் பிக்பாக்கெட் அடித்தார் என்று மட்டும் குற்றச்சாட்டை வைத்தால், அவருக்கும் அவரது கூட்டத்துக்கும் தண்டனை வாங்கித்தருவது சுலபம்!”
“இப்படி ஓர் முட்டாள் கதையை நீதிமன்றம் நம்பாது!”

“யாருக்கு வேண்டும் நீதிமன்றத்தின் நம்பிக்கை?
எதிலும் பரபரப்பு தேடும் மக்கள் இதை நம்புகிறார்கள் அல்லவா? அது போதும்!
இதைவிட எத்தனயோ பெரிய கதைகளையும் கேள்வியே கேட்காமல் நம்பியவர்கள் அல்லவா?
அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே இலக்கு! அது முடிந்துவிட்டது!”

“வழக்கு?” முணுமுணுப்பாய்க் கேட்டார் தன்னாட்சி அமைப்பின் தலைவர்!

“இனி அரசன் பாடு, உங்கள் பாடு!
இதே கதையைச் சொல்லி வழக்கை இழுத்தடியுங்கள்!
அரசனுக்கு சாமர்த்தியம் இருந்து தப்பிவிட்டால், அவர் தலைவரோடு கைகோர்த்துக் கொள்வோம்!

அரிதாரக் கும்பலின் தலைமை சரிந்ததிலிருந்து அந்தக் கும்பல் தள்ளாடுகிறது! அது இனி நமக்கு வேண்டாச் சுமை!

அடுத்த திருவிழாவுக்குள் அந்தக் கூட்டத்தை வேரோடு அறுத்து, தென்கோடியில் நான் கால் ஊன்ற வழி பாரும்!

முடிந்தால், அதற்காக சிறையில் இருக்கும் அவரது சகாவை கஸ்டடியில் எடுத்து விசாரியும்!

அந்த அடிமைக்கூட்டத்தை மிரட்டித் தோளில் ஏறி நாம் அடுத்த தேர்தலை சந்திக்கலாம்!”

“அப்போது அரசன் மீதான தங்கள் குற்றச்சாட்டு?”

“அது பழம் கதை! போன திருவிழா சரக்கு!
அடுத்த திருவிழாவுக்காக அஸ்திரத்தை கூர் தீட்டும்!
பழைய ஆயுதத்தை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும்!”

புன்னகைத்து விடை கொடுத்தார் நாகராஜசோழன்!

தலை குனிந்து வெளியேறினார் தன்னாட்சி மன்றத் தலைவர்!

மறுநாள் நடந்ததுதான் ஆரம்ப வரிகள்!

கண் விழித்த ரவி, தனக்குத் தோன்றியதை மளமளவென்று கிறுக்கத் தொடங்கினான்!

தலைப்பு

அதிபரைக் கொல்ல முயன்ற பிக்பாக்கெட்!”செவ்வாய், 28 நவம்பர், 2017

தகப்பனாகப் பள்ளிக்குச் செல்லும் அவஸ்தை!

ஆசிரியையோடு ஒரு சந்திப்பு!


அப்பா, இன்னைக்கு எங்க மிஸ் உன்னை ஸ்கூலுக்கு வரச்சொன்னாங்க!

எதிர்பார்த்ததுதான்!

காலைல மேத்ஸ் மார்க் ஷீட்டை வாங்கிப் பார்த்தப்போவே தெரியும்இப்படி ஏதாவது இருக்கும்ன்னு!

சாயங்காலம் எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதனால காலைலயே பார்த்துடறேன்!

இல்லப்பா மிஸ் ஈவினிங்தான் வரச்சொன்னாங்க!

பரவால்ல!  வா! நான் பார்த்துக்கறேன்!

ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை இது நடக்கறதுதான்!
ஒரு மாசம் நல்ல மார்க் வாங்குனா அடுத்த மாசம் தலைகீழா குதிக்கும்!

ரவி பொதுவா இந்தமாதிரி ஸ்கூல் மீட்டிங்ல்லாம் தவிர்த்துவிடுவான்!

இந்தமுறை மனைவி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க!
நீங்கதான் செல்லம் கொடுத்து அவனைக் கெடுக்கறீங்கன்னு கம்ப்ளைண்ட்! அதுனால நீங்களே போங்க!

இந்த பள்ளிக்கூட ஃபார்மாலிட்டி எல்லாம் ரவிக்கு கொஞ்சம் அலர்ஜி!

பெரிய வெள்ளைக்கார சீமாட்டிங்க மாதிரி இங்கிலீஷ்லதான் பேசுவாங்க! பேரன்ட்ஸ்ஸும் அப்படித்தான் பேசணும்!

ரவிக்கு கோபம் வந்தாத்தான் இங்கிலீஸே நியாபகம் வரும்!

"அது என்னப்பா சொல்லிவெச்ச மாதிரி கோபம் வந்தாமட்டும் இங்கிலீஸ்?" இது மகள் அடிக்கடி கேட்கும் கேள்வி!

சரி, சமாளிப்போம்ன்னு போயாச்சு!

Hallo Madam, I’m Siva’s father.

I know! The only parent who kisses his son of this age every morning while dropping at school gate!
I remember that I told him to ask you to come around 4.

இதன்பின் நடந்த உரையாடலின் தமிழ் வடிவம்!

இல்லை, எனக்கு ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு!

பரவாயில்லை! இந்த முறை சிவா மேத்ஸ் மார்க் பார்த்தீங்களா?
வாட் டூ யூ ஃபீல் அபௌட் இட்?

இதில் நினைக்க என்ன இருக்கு? அடுத்த மாதம் நல்ல மார்க் வாங்கிடுவான்!

எப்படி? ஏதாவது ட்யூசன் ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா?

இல்லை மிஸ்! எனக்கு பசங்க ட்யூசன் போய் படிக்கறது அவ்வளவு உடன்பாடில்லை!

ஒரு வினோத ஜந்துவை பார்ப்பதுபோல் ஒரு பார்வை!

அடுத்த வருடம் அவனுக்கு பப்ளிக் எக்ஸாம் ஸார்?

சோ வாட்? அவனே படிச்சுக்குவான் மிஸ்!

ஸ்ட்ரேஞ்! எப்படி சொல்றீங்க?

அவன் டல் ஸ்டூடண்ட் இல்லைதானே?

ஆமாம்! அவன் செய்யறது எல்லாமே கேர்லெஸ் மிஸ்டேக்ஸ்!

அவ்வளவுதானே? அது தானா சரி ஆயிடும்!

உங்களுக்கு இந்த மார்க் வருத்தமாகவே இல்லையா?

நிச்சயமா இல்லை! அவன் பெயர் ராமானுஜன் இல்லை! சிவா! அவனுக்கு எது வருதோ அதை செய்யட்டும்!

ஸாரி ஸார், நீங்க பொறுப்பில்லாம பேசறீங்கன்னு எனக்குப் படுது
இப்போ இருக்கற காம்பெடிட்டிவ் ஸ்டேட்ல ஈவன் 99.5% மார்க் கூட போதாது ஸார்!

எதுக்கு?

நல்ல காலேஜ்ல இடம் வாங்க!

மேடம், அவன் அந்த ரேஸ்ல இல்லை!
அவனுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதை படிக்க அவனே தகுதிப்படுத்திக்குவான்! எனக்கு நம்பிக்கை இருக்கு!

சரி, அவன் என்ன ஆகணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?

அதை நான் ஏன் நினைக்கணும்? அவனுக்கு எல்லா அவென்யூவையும் காட்டியாச்சு! அதில் அவன் தேர்ந்தெடுக்கட்டும்!
இப்போதைக்கு ஆடிட்டரோ, ஐஏஎஸ்ஸோ ஆக ஆசைன்னு சொல்றான்!
மே பீ அடுத்த வருடம் அவன் முடிவுகள் மாறலாம்
ஒருவேளை, அவனுக்குப் பிடித்த இசைத்துறை கூட செலெக்ட் பண்ணலாம்!

ம்யூசிக்கா? ஸார், ஆர் யூ சீரியஸ்?

ம்ம்.. அவன் பாதை அதுதான் அப்படின்னா, ஒரு பேசிக் டிகிரி படிக்க சொல்லிட்டு, ட்ரினிட்டி தேர்வெல்லாம் எழுதச் சொல்லலாம்!

மன்னிக்கணும் ஸார்! இவ்வளவு இர்ரெஸ்பான்சிபிள் ஃபாதரை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை!

ரெஸ்பான்சிபிள்ன்னா என்ன பண்ணனும் மிஸ்?
என்னோட கனவுகளை, என்னோட ஆசைகளை அவன் மண்டைக்குள்ள திணிக்கணுமா
அதுதான் பொறுப்புன்னா அது எனக்கு இல்லாம இருக்கறதே நல்லது!
அவனுக்கு எது இயல்பா வருதோ, அவனுக்கு எது பிடிச்சிருக்கோ, அதில் அவன் போகட்டும்! அதுதான் அவனுக்கு நல்லது!

அப்போ ஸ்கூல்ல நாங்க சொல்லியே தரவேண்டாமா?

எல்லோருக்கும் சொல்லித்தரும்போது அவன் சந்தேகம் கேட்டா சொல்லித்தாங்க
எனக்கு ஸ்கூல்ல குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கம், நட்போடு பழகும் முறை, இதெல்லாம் சொல்லிக்கொடுத்தா போதும்! அதுதான் முக்கியம்!

ஆனா, அவனுக்கு கான்சென்ட்ரேசன் பத்தலை ஸார்!

அது எனக்கும் புரியுது மிஸ்! அதுக்குத்தான் அவனை  ஞாயிறன்று கூட்டிப்போறேன்

ஏதாவது கவுன்சிலிங்?

இல்லை! அவனுக்கு பிடிச்சமாதிரி டூ வீலரில் ஒரு லாங் ரெய்டு
கோத்தகிரி ரோட்ல
எங்கேயாவது ரம்மியமான இடத்துல நிறுத்தி, செக்ஸ் பத்தி பேசப்போறேன்!

வ்வ்வாட்!

ம்ம்! அதுக்கு ஏன் இவ்வளவு ஷாக் ஆகறீங்க?

அவனுக்கு பதினைந்து வயசு!
டீவில நேப்கின், காண்டம் எல்லா  விளம்பரமும் பார்க்கறான்! வீட்டுல மாசம் ஒருதடவை அம்மாவோ அக்காவோ வயத்துவலின்னு சொல்லி சுருண்டு படுக்கறதும் பார்க்கறான்!
எலெக்ட்ரிக் கடைல ஒரு ப்ளக் வாங்கப்போனா மேலா, ஃபீமேலான்னு கேக்கறதையும் .. அப்போ அவனுக்கு வர்ற சந்தேகங்கள்தான் அவன் கவனத்தை சிதைக்குதோன்னு ஒரு சந்தேகம்!

மேலும் இது அவன் தெரிந்துகொள்ளவேண்டிய வயசு!
சத்தியமா உங்க ஸ்கூல்ல அதை சொல்லிக் கொடுக்கப்போறதில்லை!

அதுக்காக, அப்பாவே இதெல்லாம் எப்படி?

மேடம், நாம படிக்கற வயசுல பொண்ணுகளோட உட்கார வைக்கறது ஒரு வயசுல தண்டனை, இன்னும் கொஞ்சம் வயசானதும், பொண்ணுங்களோட பேசுனாலே தண்டனை!
இப்படி எதிர் பாலினம் ஒரு அசிங்கமாகவும், எட்டாக்கனி ரகசியமாகவும்தானே இருந்துச்சு?
நாமே முட்டிமோதி அரைகுறையாய் தப்புத்தப்பாய் தெரிந்துகொண்டதுபோல இந்தத் தலைமுறையும் தெரிஞ்சுக்கணுமா?
ஒரு பெண்ணோட அவஸ்தைகள் புரிஞ்சாதான் ஒரு நல்ல ஆணா வளரமுடியும்!
கண்டகண்ட வீடியோ பார்த்தோ, பசங்களுக்குள்ள பேசியோ தெரிஞ்சுக்கறதை, நாமே தெளிவா, புரியறமாதிரி சொல்லிக்கொடுக்கலாமே?

எப்படி இதை ஆரம்பிப்பீங்க? கூச்சமா இருக்காதா?

இருக்கும்தான்! அவனுக்கு நித்யாமேனன் ரொம்பப் பிடிக்கும். அதிலிருந்து லீட் எடுத்து பேசவேண்டியதுதான்!

உங்களுக்கு?

எனக்கு நித்யாமேனன் பிடிக்காது! உங்கள மாதிரி ஒல்லியா உயரமா இருக்கறவங்களைத்தான் பிடிக்கும்!
சாரி! மனசுல பட்டதை சொன்னேன்!

இட் ஈஸ் ஓகே!

அவன்கிட்ட எப்படி பேசறீங்கன்றதை எனக்கும் சொல்லமுடியுமா? ஒரு பேப்பரில் எழுதிக் கொடுங்களேன் ஒருநாள், ப்ளீஸ்!

எதுக்கு?

என் பையனுக்கும் சொல்லத்தான்!
அதுகூட வேண்டாம்!
என் போன் நம்பர் ... அவன் கூட பேசும்போது இதை டயல் பண்ணி ஆன்ல வச்சுக்கறீங்களா எனக்கு அவன் ரியாக்சனும் தெரியறது பெட்டர்! மேலும் இதை உங்களிடம் எழுதி வாங்குவதும் எனக்கு கூச்சமாக இருக்கும்!

ஸ்யூர்!

யூ ஆர் ஏன் ஆவ்சம் ஃபாதர்!

இல்லை மிஸ்! ஒவ்வொரு குழந்தையும் ஆவ்சம்!
அதை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும்!
சரி, நான் கிளம்பட்டுமா?

ஸார்! உங்களோட நான் என்ன பேசினேன் அப்படின்னு பிரின்ஸிபால்கிட்ட ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்!
என்ன சொல்ல?

இப்போ நாம பேசுனதை அப்படியே சொல்லுங்க! அதுதானே உண்மை!

அவங்க ஏதும் தப்பா எடுத்துக்கிட்டா?

என்கிட்டே சொல்லுங்க! நான் வந்து பார்க்கறேன்!

தாங்க்யூ!
சண்டே போனால் மறக்காம கால் பண்ணுங்க!

ஓகே!
ஒன்னு சொல்லலாமா?

சொல்லுங்க!

யு ஆர் ஜஸ்ட் லுக்கிங் க்ரேட் இன் திஸ் சாரி!

இதையும் பிரின்சி கிட்ட சொல்லவா?

ஹா ஹா! அவங்க பொறாமையை தூண்டறது உங்களுக்கு நல்லதில்லை!
பை!

வெளியே வந்து வண்டியை எடுக்கும்போது, இன்றைய அப்ரைசல் மீட்டிங் எந்த லைன்ல போகணும்ன்னு ஒரு க்ளூ கிடைத்திருந்தது!

மெல்லிய விசிலோடு அன்றாடத் தலைவலிக்கு கிளம்பினான் ரவி!