ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ட்விட்டர் அளவில் காமத்துப்பால்!


விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன் - தினம் ஒரு குறளுக்கு என் புரிதல் என!

எல்லா விளையாட்டுக்களுக்குமான ஆரம்பப் புள்ளி காமத்துப்பால்தானே! 

மேலும்,

கரும்பில் இனிப்பும் காமத்தின் சுவையும் அடிப்பக்கம்தானே!

தலைகீழாகவும் படிக்கும் பாடம் என்ற தைரியத்தில், 1330வது குறளில் ஆரம்பித்து, கீழிருந்து மேலே பயணித்தேன்!

இதோ, இடையில் தங்கிவிடாமலும், 
மேடுபள்ளங்களிலோ, ஆபத்தான அழகிய வளைவுகளிலோ மயங்கி நின்றுவிடாமலும், 
உச்சந்தலையில் முற்றுப்பெற்றுவிட்டது பயணம்!

காமத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு கட்டத்தில் காமம் தீர்ந்து அறமும் பொருளும் மட்டும் எஞ்சுதல்போல் இன்னும் அவை மட்டும் மிச்சம்!

அவற்றையும் தொடர்ந்து இதுபோல் முடிக்க இறை அருள் கிட்டும் என்ற நம்பிக்கையோடு, முடிந்த காமத்துப்பால் புரிதல் உங்களோடு பகிர்வுக்கு!

140 என்ற எல்லைக்குள் குறளும், எனக்குப் புரிந்த பொருளும்! - சற்றே சிரமமாகத்தான் இருந்தது!

படிக்கப்போகும் உங்கள் சிரமத்தைவிடவா என்று ஆற்றுப்படுத்திக்கொண்டேன்!

இதை தினமும் படித்தும், பகிர்ந்தும் வந்த மிகச் சிலருக்கு என் வந்தனங்கள்!🙏🙏

இனி,👇


109. தகை அணங்குறுத்தல்
அவள் தேவமங்கையோ, மயிலோ, அன்றி மானுடப்பெண்ணோ என்று என் மனம் மயங்குகிறதே
(அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு-1081)

பார்வைக்கு அவளின் எதிர்ப்பார்வை, படை வந்து தாக்கியதுபோல் இருந்தது
(நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து-1082)

இதுவரை அறியாத எமனை, விழி அம்பால் கொல்லும் நற்குண மங்கை என்றறிந்தேன்
(பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு-1083)

காண்போரைக் கொல்லும் இவள் கண்களின் குணம் இவள் அன்புக்கு முரணாக உள்ளதே 
(கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்-1084)

கண்ணாலேயே என்னைக் கொன்று, மருண்டு, படரும் இவள் எமனோ, பெண்ணோ அன்றி மானோ அறியேனே
(கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து-1085)

வளைந்த புருவம் நேராகநீண்டு தடுத்து மறைத்தால் இவள் விழி எனைக் கொல்லும் துன்பம் தராது
(கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்-1086)


அவள் மதர்த்த மார்மீது அணிந்த சேலை மதயானை மத்தகத்தின் மீதணிந்த முகபடாம் போல
(கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்-1087)

களத்தில் பகைவரை விரட்டும் என் வீரம் இவள் பிறைபோல் நெற்றி அழகிடம் அடிமையானதே
(ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு-1088)

மருண்ட பார்வையும் மயக்கும் நாணமும் கொண்ட இப் பெண்மானுக்கு வேறு நகைகள் எதற்கு?
(பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து-1089)

குடித்தால் மட்டுமே மயக்கம் தருவது மது ஆனால் கண்டாலே போதை தருவது காதல்
(உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று-1090)110. குறிப்பறிதல்
அவள் மைவிழிப்பார்வை காதல்நோய் தருவதும் அந்நோய்க்கு மருந்துமாய் இருவகை
(இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து-1091)

அவள் கடைக்கண் கள்ளப்பார்வை எங்கள் காதலில் அவள் பங்கைவிட மிகப் பெரிது
(கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது-1092)

நான் பாராதபோது அவள்ஓரவிழிப்பார்வை எங்கள் அன்புப்பயிருக்கு நீர் வார்த்தது
(நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்-1093)

நான் பார்க்கையில் நிலம் நோக்கி பார்க்காதபோது எனை நோக்கி முறுவலிப்பாள்
(யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்-1094)

எனை நேராகப் பாராது ஒருகண்ணைச் சுருக்கி ஓரவிழியால் பார்த்துச் சிரிப்பாள்
(குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்-1095)

வெளியே அயலார்போல் சுடுமொழி பேசினும் உள்ளுறையும் அன்பு ஒருநாள் வெளிப்பட்டுவிடும்
(உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்-1096)

பகைபோல் சொல்லும் முறைப்புமாய் பொதுவில் நடித்தல் காதலர் இயல்பு
(செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு-1097)

நான் பார்க்கும்போது அன்போடு மெல்லச் சிரிக்கையில் இந்த மெல்லிடையாள் பேரழகி
(அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்-1098)

பிறர்முன் அறியாவர்போல் பார்ப்பதும் உள்ளே காதலோடு ரசிப்பதும் காதலரின் விளையாட்டு
(ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே உள-1099)

கண்ணோடு கண் கலந்து காதல்மொழிகள் பேசியபின் வாய் வார்த்தைகள் பயனற்றுப் போகும்
(கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல-1100)


111. புணர்ச்சி மகிழ்தல்

காண, கேட்க, தொட, முகர, உண்ண என ஐம்புலனுக்கும் பேரின்பம் தருபவள் பெண்
(கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள-1101)

நோய்க்கு மருந்து அதற்கு மாறானதே! ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்தானாள்
(பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து-1102)

காதலியின் மென்மையான தோளில் சாய்ந்து உறங்குவதைவிடவா கோகுலவாழ்வு இனியது?
(தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொள்
தாமரைக் கண்ணான் உலகு -1103)

நீங்கிற் சுடும் நெருங்கின் குளிரும் தீயை எங்கிருந்து பெற்றாள் இவள்
(நீங்கின் தொறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்-1104)

விரும்பியவை என்றும் நலம் தருதல்போல் அவள் தோள் கூடும்போதெல்லாம் சுகம் தருகிறது
(வேட்ட  பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்-1105)

 தழுவும்போதெல்லாம் என் உயிர் துளிர்ப்பதால் அவள் தோள் அமுதம் நிரம்பியது
(உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்-1106)

காதலியைக் கூடி மகிழ்வது ஈட்டிய செல்வத்தை பகிர்ந்துண்ணும் இன்பத்துக்கு நிகர்
(தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு-1107)

காற்றும் தம் இடையில் நுழையாதபடி இறுக்கி அணைத்து சுகித்தல் காதலர்களுக்கு இனிமை தரும்
(வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு-1108)

ஊடலும் சமாதானமாகிப் பின் மிகையன்போடு கூடலும் காதல் வாழ்வு கைகூடியதன் நற்பயன்கள்
(ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்-1109)

கற்கக்கற்க அறியாமை வெளிப்படுவதுபோல் அவளைக் கூடக்கூட என் அன்பு வெளிப்படுகிறது
(அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு-1110)  112. நலம் புனைந்து உரைத்தல்


என் காதலியின் மென்மை அறியாததால் அனிச்சத்தின் மென்மையைப் போற்றுகிறது உலகு
(நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்-1111)

மலர்களைக் கண்டு மயங்கும் நெஞ்சே, இவள் கண்கள் மலரைவிட அழகென்பதைக் காண்
(மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று-1112)

அவள் தோள்கள் மூங்கில், பல் முத்து, நறுமண மேனி மாந்தளிர், மைவிழியோ வேல்
(முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு-1113)

குவளை மலர் பார்வை பெற்றால் இவள் விழிக்கு தான் நிகரில்லை எனத் தலை குனியும்
(காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று-1114)

அனிச்சமலர்க் காம்பை நீக்காது சூடியதில் அவள் மென்மையான இடை வாடி வருந்தியது
(அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை-1115)

முழுநிலவுக்கும் இவள் முகத்துக்கும் வேறுபாடு தெரியாது கலங்கித் தவிக்கும் விண்மீன்கள்
(மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்-1116)

தேய்ந்து வளரும் நிலவைப்போல் அவள் அழகுத் திருமுகத்தில் களங்கம் ஏதுமில்லை
(அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து-1117)

என் அன்புக் காதலி முகம் போல் ஒளிவீசக் கற்றுக்கொண்டால் நீயும் என் காதலை அடைவாய் நிலவே
(மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி-1118)

நிலவே, மலர்விழியாள் முகம்போல் நீயும் அழகுறவேண்டுமானால் இப்படி பலர்காண வாராதிரு
(மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி-1119)

அனிச்சமலரும் அன்னத்தின் இறகும் முள்ளாய் உறுத்துமளவு மென்மையானது அவள் பாதம்
(அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்-1120)113. காதற் சிறப்புரைத்தல்


இனியமொழி பேசும் இவள் முத்துப்பல் வாயூறும் நீர் பாலோடு தேன் கலந்ததுபோல் அருஞ்சுவையானது
(பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்-1121)

எனக்கும் அவளுக்குமான உறவு உடலுக்கும் உயிருக்குமான உறவுபோல் ஒன்றோடொன்று பிணைந்தது
(உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு-1122)


காதலி என்னுள் குடியிருக்க இடம் வேண்டும் என் கருவிழியிருக்கும் பாவையே நீ போ
(கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்-1123)

அழகான என்னவளைக் கூடுகையில் உடலும் உயிருமாகி, பிரிகையில் உயிரற்ற உடலானேன்
(வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து-1124)

ஒளிவீசும் விழியுடைய காதலியின் பண்பு நலன்களை நான் மறந்தால்தானே நினைக்க?
(உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்-1125)
  
என் கண்ணிலிருந்து அகலாது நான் இமைத்தாலும் மறையாத நுட்பமானவர் என் காதலர்
(கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்-1126)
  
கண்ணுள்ளிருக்கும் காதலன் அந்தநொடி மறைவானே என்ற கவலையில் மையிட நான் மறுத்தேன்
(கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து-1127)

நெஞ்சில் குடியிருக்கும் காதலனைச் சுடுமென சூடானவை உண்ணாமல் தவிர்த்தேன் நான்
(நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து-1128)

இமையாது உள்ளே வைத்துக் காக்கும் எனைப்பார்த்தும் அவனை அன்பிலான் எனும் ஊர்
(இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்-1129)

உள்ளத்துள் மகிழ்வாய்வாழும் காதலன் எனைப் பிரிந்ததாய் ஊர் தூற்றல் பிழை
(உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்-1130)114. நாணுத் துறவுரைத்தல்
  
காதல் நோயில் உழன்று வாடுபவருக்கு ஊரறிய அதுபற்றிப் புலம்புவதுதவிர வேறு வழியில்லை
(காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி-1131)

பிரிவுத் துயரைத் தாங்காத உடலும் உயிரும் நாணம் துறந்து வெளிப்படுத்தத் துணிந்தன
(நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து-1132)

நாணமும் ஆண்மையும் கொண்டிருந்த நான் பிரிவால் நாணம் துறக்கத் துணிந்தேன்
(நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றோர் ஏறும் மடல்-1133)

காமம் எனும் பெருவெள்ளம் நாணம், ஆண்மை என்னும் படகுகளை அடித்துச் சென்றுவிடும்
(காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை-1134)

மாலையில் எனை வாட்டும் காதல் நோயையும் அது தணிக்கும் மருந்தையும் அவளே தந்தாள்
(தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்-1135)
  
நள்ளிரவிலும் அவளை நினைத்து வாடி அதை ஊரறிய உரைத்திடவும் துணிந்துவிட்டேன்
(மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்-1136)

கடலளவு காதல் வருத்தினாலும் நாணம் தவறாத பெண்ணைவிடப் பெருமை வாய்ந்த பிறவி ஏது
(கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்-1137)

மன அடக்கமுள்ள இரங்கத் தக்கவளாயினும் அடங்காத என் காதல் ஊரறிய வெளிப்படுகிறதே
(நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்-1138)

யாருக்கும் தெரியாதென்ற நினைப்பில் என் காதல் தெருவில் மயங்கித் திரிகிறது
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு-1139)

காதலால் நான் படும் துயரங்கள் அறியாமல்தான் அறிவற்ற மக்கள் எனைப் பரிகசிக்கின்றனர்
(யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு-1140) 
115. அலர் அறிவுறுத்தல்

என் காதல்பற்றி புறம்பேசுவதாலேயே அது பலிக்கும் என நான் உயிர்வாழ்வதை ஊர் அறியாது
(அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்-1141)

மலர் போல் கண்ணுடைய அவளோடு என்னைப் புறம் பேசி அவளை அடையவைத்து நன்மை செய்தது இந்த ஊர்
(மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்-1142)

எங்கள் காதலை ஊரார் புறம் பேசியதே உறவை அனைவருக்கும் உறுதி செய்யப் போதுமானதாகிவிட்டது
(உறாஅதோ ஊரறிந்த கௌவை அதை
பெறாஅது பெற்றன்ன நீர்த்து-1143)

ஊரார் புறம் பேசுதல் எங்கள் காதலை சுவை சேர்த்து சுவாரஸ்யமாய் வளர்க்கிறது
(கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து-1144)

கள் குடிக்க மயக்குதல்போல் என் காதல் பற்றி ஊர் பேசும்போதே இனிக்கிறது
(களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது-1145)
  
அவனை நான் கண்டது ஒருநாள்தான் அதற்கே ஊர் வம்புக் கிரகணம் பிடித்தலைகிறது
(கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று-1146)

என் காதல் ஊரார் பழிச்சொல்லை எருவாகவும், என் தாயின் கடுமையை நீராகவும் கொண்டு வளர்கிறது
(ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்-1147)

புறம்பேசி என் காதலை ஒழிக்க நினைப்பது நெய் ஊற்றித் தீயை அணைப்பது போல்
(நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்-1148)

பிரியேன் எனச் செல்லிப் பிரிந்தவனை ஊர் தூற்றுகையில் அவனுக்காக நான் எப்படி நாண?
(அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை-1149)

இந்த ஊரே புகழ்ந்து போற்றும் என் காதலனை நான் அடையத் தடை ஏது இங்கு?
(தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்-1150)

  


116. பிரிவு ஆற்றாமை

பிரிந்து பின் வருவேன் என்பதை என்னைவிட்டு அதைத் தாங்கி வாழ்பவளிடம் சொல்
(செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை-1151)

பார்த்தலே இன்பமாக இருந்து இன்றோ அணைப்பிலும் பிரிவை எண்ணி ஏங்குது மனம்
(இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு-1152)

பிரிவுத்துயர் அறிந்தவனும் பிரிவான் எனவே, அவன் பிரியேன் என்பதை நம்பமுடியாது
(அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்-1153)

பிரியேன் என்றவர் பின் எனைப் பிரிந்தால் அவர் சொல்லை நம்பியதென் பிழையா?
(அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு-1154)

பிரிந்தால் மீண்டும் சேர என்உயிர் தங்காது அவனைப் பிரியாது காத்தலே நலம்
(ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு-1155)

பிரிந்துசெல்வதை என்னிடமே சொல்லும் கல்நெஞ்சனா திரும்பிவந்து அன்புசெய்வான்?
(பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அறிதவர்
நல்குவர் என்னும் நசை-1156)

காதலன் எனைப் பிரிந்த சேதியை உடல் மெலிந்து கழன்ற என் கைவளையல் ஊருக்குச் சொல்கிறதே
(துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை-1157)

உறவினர் அற்ற ஊரில் வாழ்வதைவிடப் பெரும் துன்பம் காதலனைப் பிரிந்து வாழ்வது
(இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு-1158)

தீ தொட்டால்தான் சுடும் இந்தக் காதல்நோயோ உன்னைப் பிரிகையில் என்னைச் சுடுகிறது
(தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ-1159)

பிரிந்துசெல்லச் சம்மதித்து பொறுமையோடு காத்திருப்போரும் உள்ளனர்
(அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்-1160)


117. படர்மெலிந் திரங்கல்

காதல்நோயை நான் மறைக்க முயன்றால் அது ஊற்று நீர்போல் பொங்கிப் பெருகுகிறது
(மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்-1161)

காதல் நோயை மறைக்கவோ, அதைத் தந்தவனிடம் நாணத்தால் சொல்லவோ முடியவில்லை
(கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்-1162)

காதலும் அது தந்த நாணமும் இருபுறமும் தொங்கும் காவடியாய் நலிந்து வாடுது உடல்
(காதலும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து-1163)

கடலெனச் சூழும் மோகத்தைக் கடக்க உதவும் படகான காதலன் இல்லாமல் நான் தவிக்கிறேன்
(காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்-1164)

அன்போடிருக்கும்போதே பிரிவால் துயர் தரும் காதலன் என் பகைவனானால் என்ன செய்வானோ
(துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்-1165)

காதலில் கூடல் தரும் இன்பம் கடல் போன்றது பிரிவு தரும் துயரோ கடலினும் பெரிது
(இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது-1166)

மோகக் கடலில் நீந்திக் கரை காண முடியாத துயரில் நானும் தனித்திருக்கும் இரவும்
(காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்-1167)

இரவு அனைவரையும் தூங்கவைத்து என்னைத் தவிரத் துணையின்றி விழித்துக் கிடக்கிறது
(மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை-1168)

முடியாது நீளும் உறக்கமற்ற இரவுகள் அவன் தரும் பிரிவுத் துயரைவிடக் கொடுமையானவை
(கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா-1169)

மனதுபோல் அவனிருப்பிடம் செல்லமுடிந்தால் கண்கள் இன்று கண்ணீரில் நீந்தா
(உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்-1170)118. கண் விதுப்பழிதல்
 அவனைக் காட்டிக் காதல்நோய் தந்த கண்கள் இன்று அவனைக் காணாது என்னிடம் அழுகின்றன
(கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது-1171)

அவனைக்காட்டிக் காதல்கொள்ள வைத்த கண்கள் இன்று நான் வாடக்காரணமானோமென வருந்தின
(தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்-1172)

தானாக அவனைத் தேடிக் கண்டு களித்த கண்கள் இன்று வருந்தி அழுவது நகைக்கத்தக்கது.
(கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து-1173)

தப்பமுடியாக் காதல்நோய் தந்துவிட்டு கண்ணீர் உலர்ந்து தவிக்கின்றன கண்கள்
(பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து-1174)

கடலளவு காதல்நோய் தந்த என் கண்கள் இன்று பிரிவுத்துயரால் உறங்காமல் தவிக்கின்றன
(படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்-1175)

எனக்கு இந்தக் காதல் நோயைத் தந்த கண்கள் தூங்காமல் வாடுவது எனக்கும் குரூர மகிழ்ச்சியே
(ஓஒஇனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இடற்பட் டது-1176)

ஆசையால் அவனை அள்ளிப்பருகிய கண்கள் பிரிவிலின்று கண்ணீரும் அற்று வாடட்டும்
(உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்-1177)

உள்ளத்தால் விரும்பாமல் உதட்டால் நேசித்தவனைக் காணாது உறங்க மறுக்கின்றன என் கண்கள்
(பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்-1178)

அவன் வராவிடில் உறக்கமில்லை வந்தால் பின் உறங்க மனமில்லை. இது என் கண்களின் துயரம்.
(வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்-1179)

காட்டிக்கொடுக்கும் கண்கள் இருக்கும்வரை ஊரார் என் காதலை அறிதல் கடினமில்லை
(மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து-1180)
119. பசப்புறு பருவரல்

 பிரியச் சம்மதித்து அவன் சென்றபின் என்மேனி நலிவதை நான் யாரிடம் சொல்ல?
(நயந்தவர்க்கு நல்காமை நேர்த்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற-1181)

பிரிவால் அவன்தந்த பரிசென்ற பெருமையோடு என் மேனியெங்கும் படர்ந்தது நலிவு
(அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு-1182)

அழகையும் நாணத்தையும் பறித்து, காதல்நோயும் உடல்நலிவும் கொடுத்துச் சென்றான்
(சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து-1183)

நான் நினப்பதும் பேசுவதும் அவனைப்பற்றியே. எனினும் என்உடல் பிரிவில் மெலிந்ததே.
(உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு-1184)

எனைப் பிரிந்து அவன் சற்றே நகர்ந்ததும் என்மேனி அதைத் தாளாமல் வாடி மெலிகின்றதே.
(உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது-1185)

ஒளி குறையத் தழுவும் இருளென அவன் தழுவல் நெகிழ நலியும் என் உடல்
(விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு-1186)

அவனைத் தழுவிக்கிடந்து சற்றே விலக, உடனே என்மேனி வருந்தி வாடியதே!
(புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு-1187)

இவள் பிரிவால் மெலிந்தாள் எனும் யாரும் அவன் பிரிந்ததைக் குற்றம் சொல்லவில்லை.
(பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்-1188)

சம்மதிக்கவைத்துப் பிரிந்தவன் நல்லவனெனில் என்மேனி நலிவுற்றே இருக்கட்டும்.
(பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்-1189)

அனுமதியோடெனைப் பிரிந்தவன் பெயர்காக்க நான்நலிந்தவளாய் அறியப்படல்நன்று
(பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்-1190)
 120. தனிப்படர் மிகுதி

விரும்புபவரால் விரும்பப்படுபவர் விதையில்லாக்கனிபோல் இனிய வாழ்வு பெற்றோர்
(தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி-1191)

காதலர் காட்டும் அன்பு, உயிர்வாழ வானம் அளிக்கும் மழைக்கு நிகரானது.
(வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி-1192)

காதலால் மனதில் இணைந்திருப்பவர்க்கே இனிது வாழ்கிறோம் என்ற பெருமிதம் இருக்கும்
(வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு-1193)

தாம் விரும்பும் காதலனால் விரும்பப்படாதவர் உலகால் விரும்பப்படினும் பாவமானவரே.
(வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வாழப் படாஅர் எனின்-1194)

நாம் காதலித்தல்போல் நம்மைக் காதலிக்காதவன் என்ன இன்பம் தந்துவிடப்போகிறான்?
(நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை-1195)

ஒருதலையாய் இல்லாது காவடித்தட்டு போல் இருமனத்தும் சமமாய் உண்டான காதல் மிக இனியது.
(ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது-1196)

காதல்கொண்ட இருவரில் என்னை மட்டும் தாக்கும் காமன் என் துயர் அறியமாட்டான்.
(பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்-1197)

பிரிந்த காதலன் இன்சொல் கேளாமல் உயிர்வாழ்பவரைவிட கல்நெஞ்சம் கொண்டவர் இல்லை.
(வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் -1198)

காதலன் அன்பின்றிப் பிரிந்திருந்தாலும் அவனைப் புகழ்ந்து பேசக் கேட்பது இனிமை.
(நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு-1199)

அன்பில்லாதவனுக்கு பிரிவுத்துயரைச் சொல்வதைவிட கடலைத் தூர்ப்பது எளிது என் நெஞ்சே
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு-1200)  121. நினைந்தவர் புலம்பல்

நினைத்தாலே பேரின்பம் தரும் காதல், உண்டால் மயக்கும் கள்ளைவிட இனிமையானது.
(உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது-1201)

பிரிந்த காதலரை நினைத்திருப்பதும் ஒரு இன்பமே. எனவே காதல் என்றும் இனியது
(எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்-1202)

தும்மல் வருதல்போல வந்து நிற்கிறதே,அவன் நினைக்கத் தொடங்கி நிறுத்தினானோ?
(நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்-1203)

என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் அவனிருப்பதுபோல் அவன் நெஞ்சில் நான் இருப்பேனா?
(யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்-1204)

தன் மனதில் எனை வரவிடாமல் என் மனதில் குடியிருக்க வெட்கமில்லை அவனுக்கு.
(தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்-1205)
  
அவனோடு கூடியிருந்த நாட்களின் நினைவில் வாழ்கிறேன். வேறெது என்னை வாழவைக்கும்?
(மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்-1206)

எந்நேரமும் நினைத்திருக்கும்போதே பிரிவு வாட்டுகிறதே, மறந்தால் என்ன ஆவேன்?
(மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்-1207)

எத்தனை அதிகம் அவனை நினைத்தாலும் என்னைக் கோபிக்காததே அவன் தரும் இன்பம்.
(எனைத்து நினைப்பினும் காயார் அணைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு-1208)

நாம் ஒருவரென்று கொஞ்சிய காதலன் பிரிந்ததை நினைத்துக் கரைகிறது என் உயிர்.
(விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து-1209)

அகலாதிருந்து பிரிந்த காதலரைத் தேட எனக்கு உதவும்வண்ணம் நீ எப்போதும் மறையாதிரு நிலவே!
(விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி-1210)122, கனவுநிலை உரைத்தல்

உறங்கையில் காதலன் அன்பைத் தூதாகக் கொண்டுவரும் கனவுக்கு என்ன விருந்தளிப்பேன்?
(காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து-1211)

சொல்கையில் கண்உறங்கினால் நான்உயிரோடிருப்பதைஅவனுக்குகனவில் சொல்வேன்
(கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்-1212)

நேரில்வந்து அன்பு செய்யாதவன் கனவிலாவது வந்து அணைப்பதாலேயே என் உயிர் இருக்கிறது
(நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்-1213)

நேரில் வந்து இன்பம் தராதவனைத் தேடி அணைத்து சுகம் தருவதால் கனவு இனிமையானது.
(கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு-1214)

அவனை முன்பு நனவில் கூடியதும், இன்று கனவில்மட்டுமே தழுவுவதும் ஒரே இன்பம் எனக்கு.
(நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது-1215)
  
நிஜம் என்ற ஒன்று இல்லாவிடில் காதலனோடு கனவில் கூடியே என் காலத்தைக் கழித்துவிடுவேனே.
(நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்-1216)

நேரில்வந்து அன்பு செய்யாக் கொடியவன் கனவில் மட்டும் வந்தென்னைக் கொல்வது ஏன்?
(நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது-1217)

தூங்கும்போது தோள்சாயும் காதலன் விழித்ததும் என் நெஞ்சில் மறைகிறான்
(துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து-1218)

கணவனோடு கனவு சுகம் கண்டறியாப் பெண்களே நேரில் எனைக் காண வராத என்னவனைத் தூற்றுவர்.
(நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்-1219)

எனைப் பிரிந்தார் என்று தூற்றுவோர் என்கனவில் அவர் தினமும் வருவதை அறியாதார்.
(நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்-1220)123. பொழுதுகண்டு இரங்கல்

பொழுதே நீ மாலைநேரமல்ல. பிரிவில் வாடும் மகளிரின் உயிர்குடிக்கும் அந்திம நேரம்.
(மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது-1221)

என்னைப்போல் ஒளியிழந்து வாடும் மாலையே, என் காதலன்போல் உன்னவனும் இரக்கமற்றவனோ?
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை-1222)

காதலன் இருக்கையில் என்னிடம் பயந்த மாலைவேளை இப்போது என் உயிரை எடுக்கிறது.
(பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்-1223)

காதலன் இல்லாத் தனிமையில் மாலைவேளை கொலைக் களத்து கொலையாளிபோல் கருணையற்றிருக்கிறது.
(காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்-1224)

காலைக்கு நன்மை செய்து பிரிவில் வாட்டும் மாலைக்கு என்ன தீங்கு செய்தேன்?
(காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை-1225)

மாலைப்பொழுது இவ்வளவு துன்பம் தரும் என்பதை அவனைப் பிரியும் வரை நான் அறியவில்லை.
(மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்-1226)

காதல்நோய் காலையில் அரும்பாகி, பகலில் முதிர்ந்து மாலையில் மலராகிக் கொல்கிறது.
(காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்-1227)

இனிதாக ஒலித்த குழலோசை கொல்லும் மாலையில் விரக நெருப்பாக என்னைச் சுடுகிறது
(அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை-1228)

என்னை மயக்கிவாட்டும் இந்த மாலை இப்போது இந்த ஊரையே மயக்குதல்போல்தோன்றுகிறது
(பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து-1229)

பொருள்தேடிப் போன காதலனை எண்ணி மாயாத என் நெஞ்சம் இந்த மாலை மயக்கத்தில் மடிகிறது.
(பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்-1230)


124. உறுப்புநலன் அழிதல்

பிரிந்து தொலைவு சென்ற காதலனை எண்ணி அழும் கண்கள் அழகிழந்த மலர்களென வாடுகின்றன
(சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்-1231)

பசலையடைந்து அழும் கண்கள் அவருக்கு என்மேல் அன்பில்லை என்பதை ஊருக்குச் சொல்லும்
(நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்-1232)

தழுவிப் பூரித்திருந்த என் தோள்கள் இன்று மெலிந்து எங்கள் பிரிவை ஊருக்குச் சொல்லும்
(தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்-1233)

காதலனைப் பிரிய இளைத்து அழகிழந்த தோள் மேலும் இளைத்து வளை கழன்றோட வாடியது
(பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்-1234)

வளை கழன்று அழகிழந்த என் தோள்கள் பிரிந்த உன்னைக் கொடியவன் என்று ஊருக்குச் சொல்லும்
(கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள் -1235)

வளையல் கழன்று தோள் மெலிய நான் இளைத்ததால் உனைக் கொடியவன் எனல் கேட்டு வருந்தினேன்
(தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து -1236)

இரக்கமற்ற காதலனுக்கு, பிரிவால் வாடும் என் தோள்களின் நிலை உரைப்பாய் நெஞ்சே.
(பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து-1237)

தழுவலின் இறுக்கம் வலிக்குமோ என சற்றே தளர்த்த, அது பொறாமல் அவள் நெற்றி வெளுத்தது.
(முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைத்தொடிப் பேதை நுதல்-1238)

தழுவலின் இடையே குளிர்காற்று நுழைந்த சிறுபிரிவும் தாளாது அவள் கண்கள் பசலை கொண்டன
(முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்-1239)

சிறுபிரிவால் காதலி நெற்றி நிறம் மாறக்கண்டு அவள் கண்களும் துயரால் நிறம் மாறின.
(கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு-1240)


125. நெஞ்சோடு கிளத்தல்

எனைக்கொல்லும் காதல்நோய் தீர்க்கும் மருந்தைக் கண்டுசொல் நெஞ்சே
(நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து-1241)

அன்பில்லாத காதலனை அன்புகொண்டு எப்போதும் நினைத்து வாடும் என் நெஞ்சே நீ நீடூழி வாழ்க!
(காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு-1242)

அவனுக்கு இரக்கமில்லாதபோது இங்குஅவனைநினைத்து எனைக் கொல்வதேன் நெஞ்சே
(
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்1243)

நெஞ்சே,அவனைக் காணக் கண்களையும் கூட்டிப்போ! ஆவலில் அவை என்னை உண்கின்றன
(கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று-1244)

நான் விரும்பியும் எனை நாடாதவரை வெறுத்து என் காதலைக் கைவிட முடியுமா நெஞ்சே?
(செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்-1245)

கூடிக் களிப்பவன்முன்உருகும் நெஞ்சே இப்போதேன் பொய்க்கோபம்? (கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு-1246)

காமத்தை விடு அன்றேல் நாணத்தை விடு! இரண்டையும் வைத்தென்னைக் கொல்லாதே மனமே.
(காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு-1247)

பிரிந்தவன் அன்பைத்தேடி அவன் பின்னால் சுற்றுகிறாயே என் மடநெஞ்சே!
(பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு-1248)

காதலன் உன்னுள் குடியிருக்க, அவரென யாரைத்தேடி வெளியே அலைகிறாய் என் நெஞ்சே?
(உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு-1249)

இணையாமல் பிரிந்த காதலனை மனதில் சுமந்து, மேலும் மெலிந்து அழகை இழக்கிறேன்
(துன்னாந் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்-1250)

  
126. நிறையழிதல்

நாணத்தால் தாழிட்ட மனக்கதவை காதல் வேட்கை கோடாரியாய் உடைத்தெறிகிறது.
(காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுந்தாழ் வீழ்த்தக் கதவு-1251)

காமம் இரக்கமற்றது. ஊருறங்கும் நள்ளிரவிலும் என் மனதை ஆட்டுவிக்கிறது
(காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
 யாமத்தும் ஆளும் தொழில்-1252)

எவ்வளவு அடக்க முயன்றாலும் என் காதல் தும்மலைப்போல வெளிப்பட்டுவிடும்
(மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்-1253)

மன உறுதியை மீறி என் காமம் மறைத்த ஆசையை பொதுவெளியில் வெளிக்காட்டிவிட்டதே
(நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்-1254)

வெறுத்துப் பிரிந்தவன் பின் செல்லாத மானம் காதல்நோயுற்றோருக்கில்லை
(செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று-1255)
  
வெறுத்துச் சென்றவன் பின்னால் என்னைச் செல்லத் தூண்டும் காதல் நோய் மிகக்கொடியது
(செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்-1256)

நான் விரும்பியதெல்லாம் கூடலின்போது செய்யும் காதலன் முன்பு நாணம் வருவதே இல்லை.
(நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்-1257)

என் பெண்மை அரணை உடைக்கும் ஆயுதம் என் காதல் மாயக்கள்வனின் பணிவான கொஞ்சல் மொழி.
(பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை-1258)

ஊடல் கொள்ளவே போனேன். என் மனம் வெட்கமின்றி அவனைக் கூட, நானும் தழுவினேன்
(புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு-1259)

தீயில் உருகும் கொழுப்பனைய நெஞ்சம் காதலனைக் கூடியபின் ஊடல் கொள்ளுமோ?
(நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்-1260)127. அவர்வயின் விதும்பல்

வழிபார்த்துஒளியிழந்தது கண்.பிரிவுக்கணக்கை சுவரெழுதித் தேய்ந்ததென்விரல்
(வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்-1261)

பிரிவுத்துயர் நீக்க காதலனை மறந்தால் என் அழகழிந்து உடல் மெலிவேனடி தோழி
(இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து-1262)

ஊக்கம் துணையாக வெற்றிதேடிச் சென்றவன் எனைத் தேடிவருவான் என உயிர் வாழ்கிறேன்.
(உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்-1263)

என்னைக்கூடிப் பிரிந்தவன் வருகைக்கு என்நெஞ்சம் மரக்கிளையேறிக் காத்திருக்கிறது
(கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறுமென் நெஞ்சு-1264)

கண்ணாற என் காதலனைக் கண்டால், என் மெல்லிய தோளின் வாட்டம் தானே நீங்கும்
(காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு-1265)

 காதலன் திரும்ப வரும்நாளில் என் பிரிவுத்துன்பம் முழுதும் தீர உறவு கொள்வேன்.
(வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட-1266)

என் கண் போன்ற காதலன் வரின் அவரிடம் ஊடுவனோ, கூடிக் கலப்பேனோ அறியேன்.
(புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்-1267)

இந்தப்போரில் இன்றே வென்று வீடு திரும்பினால் மனைவியை பெருவிருந்தாய் அடைவேன்
(வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து-1268)

தூரம் சென்றவன் வரும்நாளுக்கு ஏங்கும் பெண்ணின் ஒருநாள் யுகமாகும்
(ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு-1269)

பிரிவால் உள்ளம்உடைந்தபின் உன்னைப் பெறுவதாலோ கலப்பதாலோ என்னபயன்?
(பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்-1270)


128. குறிப்பறிவுறுத்தல்

எத்தனை மறைத்துத் தடுத்தாலும் உன் மைவிழி எனக்கு உன் காதலைச் சொல்லும்
(கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு-1271)

கண்நிறை அழகும் மூங்கில்தோளும் கொண்ட என் காதலியின் பெண்மை பேரழகு
(கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது-1272)

மணிமாலை கோர்த்த நூல்போல் வெளியில் தெரியாது அவளோடு என்னைக் கோர்ப்பது காதல்
(மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு-1273)

மொட்டினுள் மறைந்திருக்கும் மணம்போல் அவள் புன்னகைக்குள் காதலன் நினைவு
(முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு-1274)

வண்ணவளையணிந்த காதலியின் ரகசியப் பார்வை என் துயர் தீர்க்கும் மருந்து
(செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து-1275)

 அன்போடு அவன் கூடும் வேகம், மீண்டும் எனைப் பிரியப்போவதை உணர்த்துகிறது
(பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து-1276)

நிலமாளும் காதலன் எனைக் கூடும்போதே பிரிய நினைத்ததை அறிந்து கழன்றது என் கைவளையல்
(தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை-1277)

நேற்றுப் பிரிந்த காதலனை நெடுநாள் காணாததுபோல் வாடி, நிறம் மாறியது என் உடல்
(நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து-1278)

பிரிவால் மெலியும் தோளும், கழலும் வளையலும் நோக்கி,எனைத்தொடர காலை நோக்கினாள்
(தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது-1279)

கண்களால் காமம் உணர்த்தி காதலனை இணையக் கெஞ்சும் தன்மை பெண்மைக்குப் பேரழகு.
(பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு-1280)


129. புணர்ச்சி விதும்பல்

நினைத்தாலே இன்பம், கண்டாலே மயக்கம் தரும் குணம் காதலுக்கு-கள்ளுக்கில்லை.
(உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு-1281)

பனையளவு காதல் வளர்ந்தபோதும் தினையளவும் ஊடல் கொள்ளாதிருத்தல் நன்று.
(தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்-1282)

என்னை கண்டுகொள்ளாது அவன் விருப்பம்போல் நடக்கையிலும் என் கண் அவனைக் காணாமல் இராது
(பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல் கண்-1283)

அவனோடு ஊடல் செய்யப்போனால் என் நெஞ்சு அவனோடு கூடத் துடிக்குதடி தோழி!
(ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு-1284)

மைதீட்டையில் மைக்கோல் தெரியாததுபோல் அண்மையில்அவன் குற்றம்தெரிவதில்லை
(எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து-1285)

காதலனைக் கண்டால் அவன் குறைகள் தெரிவதில்லை. காணாதபோதோ குறை தவிர ஏதும் தெரிவதில்லை
(காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை-1286)

அடித்துச்செல்வதறிந்தே நீரில் பாய்தல்போல் தோல்வியறிந்தே ஊடல்கொள்கிறேன்
(உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து-1287)

குடிகாரனுக்கு கள்ளைப்போல, காதலா,வருத்தினாலும் எனை மயக்குதுன் மார்பு
(இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு-1288)

மலரினும் மெல்லியது காதல். வெகு சிலரே அதே இயல்போடு அதை நன்கு ரசனையாய் அனுபவிப்பர்
(மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்-1289)

பார்வையால் ஊடி, எனைப்பார்த்ததும் என்னைவிட விரைந்து அணைத்தாள் காதலி.
(கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று-1290)


 130. நெஞ்சொடு புலத்தல்

எனை நினையா அவனுக்கு அவன்நெஞ்சு துணையிருக்க,நீ ஏன்அவனுக்கு உருகுகிறாய் நெஞ்சே
(அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது-1291)

என்மேல் அன்பில்லா அவன்பின்னே, வெறுக்கமாட்டான் என்று நம்பிச் செல்கிறாயே மனமே
(உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு-1292)

துன்பத்தில் விலகும் நட்பென என்னை விலகி அவன்பின் போவதென்ன என் நெஞ்சே?
(கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்-1293)

ஊடி, பின் கூடி இன்புறாமல் அவனைப் பார்த்ததும் வழிகிறாயே மட நெஞ்சே.
(இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று-1294)

காதலனைக் காணாமல் அஞ்சும். அவர் வந்தால், பிரிவாரோ என அஞ்சும் என் நெஞ்சம்.
(பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும் அறாஅ
இடும்பைத்தென் நெஞ்சு-1295)

 தனிமையில் காதலன் நினைவில் என்னைத் தின்பதுபோல் துன்புறுத்தும் என் நெஞ்சம்.
(தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு-1296)

அவனை மறக்க முடியாமல் தேடியலையும் என் நெஞ்சும் நானும் நாணத்தை மறந்துவிட்டோம்.
(நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு-1297)

ஊடலில் காதலனை இகழ்வது தனக்கே இழிவென அவனைப் புகழ்ந்து உருகும் என் நெஞ்சம்
(எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு-1298)

துன்பம் வருகையில் தன் நெஞ்சே துணை நில்லாவிடில் வேறு யார் துணையாக நிட்பார்?
(துன்பத்திற் குயாரோ துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி-1299)

நம்முடைய நெஞ்சே நமக்கு உறவாயில்லாதபோது, மற்றவர் நம்மிடம் விலகியிருப்பது எளிதுதானே?
(தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி-1300)131. புலவி

ஊடலால் அவனடையும் வேதனையை ரசித்துப்பார்க்கக் கொஞ்சநேரம் தழுவாமல் தவிக்கவிடு.
(புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது-1301)

உணவில் உப்புபோல ஊடல் அளவோடிருக்கவேண்டும். மிகுதியானால் கூடல் இன்பம் ருசிக்காது
(உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்-1302)

ஊடல்கொண்டவரைக் கொஞ்சிக் கூடாமல் விடுவது அவர் துன்பத்தை அதிகரிக்கும்.
(அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்-1303)

ஊடல் கொண்டவர்மீது அன்பு காட்டாதிருப்பது, ஏற்கனவே வாடிய கொடியை வேரோடு அறுப்பதுபோலாகும்.
(ஊடி யவரை உணராமை வாடியற்ற
வள்ளி முதலரிந் தற்று-1304)

மலர்விழி மங்கையர் கொள்ளும் அன்பு கலந்த ஊடல், காதல் கொண்ட பண்புள்ள ஆணுக்கு அழகு
(நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து-1305)

ஊடலும் செல்லக்கோபமும் இல்லாத காமம் அழுகிய பழமும், பிஞ்சும்போல் பயனற்றது
(துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று-1306)

கூடல் இன்பம் அதிகநேரம் நீடிக்காதோ என்ற ஏக்கம், ஊடலைவிடவும் துன்பம் தருவது.
 (ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று-1307)

தமக்காக நாம் வருந்துவதை அறிகின்ற காதலர் இல்லாமல் வீணில் வருந்துவதால் என்ன பயன்?
(நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி-1308)

நிழலில் இருக்கும் நீர்போல் குளிர்ச்சியும் இனிமையுமானது அன்புள்ளவரிடம் கொள்ளும் ஊடல்.
 (நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது-1309)

ஊடல் தணிக்காது என்னை வாடவிடுபவனை நெஞ்சம் கூடத்துடிப்பதற்கு அவன்மீதான ஆசையே காரணம்.
(ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா-1310)


132. புலவி நுணுக்கம்

எல்லாப்பெண்ணும் காமக்கண்ணால் உண்ட மார்பை பாவை நான் தழுவமாட்டேன்.
(பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற்கு பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு-1311)

ஊடலின்போது, நீடூழிவாழ வாழ்த்துவேன் என்று பொய்யாய்த் தும்மினான் காதலன்.
 (ஊடி இருந்தேமாத் தும்மினார் யார்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து-1312)

கொடிமலரை அழகாய்ச் சூட்டிவர, எவளுக்குக் காட்டச் சூடினாய் என்று ஊடினாள்
(கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று-1313)

யாரைவிடவும் உன்னைக் காதலிக்கறேன் எனக்கொஞ்ச,யாரைவிட என்றது யாரை என்று ஊடினாள்.
(யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று-1314)

இப்பிறவியில் பிரியமாட்டோமென,ஆயின்,வரும்பிறவியில் பிரிவோமோ என்றழுதாள் காதலி
(இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்-1315)

உன்னை நினைத்தேன் என,இடையே மறந்து, இன்று நினைத்தாயா? என ஊடினாள்.
(உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புறத்தக் அகன்ற-1316)


நான் தும்ம,தானே வாழ்த்தி, உடனே,யார் நினைக்கத் தும்மினாயென அழுதாள்.
(வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று-1317)

தும்மலை அடக்கக்கண்டு, எவள் நினைத்ததை என்னிடம் மறைத்தாய் என ஊடலில் அழுதாள்.
(தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று-1318)

ஊடலின்போது பணிந்து கொஞ்ச,எவளிடமும் நீ இப்படித்தானோ என கோபம்கொள்வாள்.
(தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று-1319)

இமைக்காது அவளை ரசித்தாலும், எவளை ஒப்பிட்டாயென சினம் கொள்வாள்.
(நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று-1320)
133. ஊடலுவகை

காதலர்மீது தவறில்லா நிலையிலும் ஊடல்கொள்வது, செல்லமாய் அவர் நேசம் வளர்க்கும் வழி.
(இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு-1321)

காதலர் அன்பு சற்று வாடக் காரணமாயினும் ஊடல் தரும் சிறு துன்பம் பெருமைக்குரியது.
(ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்-1322)

நிலம் கலந்த நீர்போல் மனம் கலந்தவருடன் ஊடல்கொள்வதைவிட சொர்க்கம் இல்லை.
(புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து-1323)

இறுகத் தழுவி விலகாதிருக்கவும், அதனால் என் உள்ள உறுதி உடைபடவும் ஊடலே காரணம்.
(புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை-1324)

தன்மீது தவறின்றியும் காதலியின் ஊடலால் அவளை நீங்கியிருத்தல் ஒரு இன்பம்.
(தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து-1325)

உண்பதைவிட, முன்பு உண்டது செரித்தல் சுகம். காதலில் கூடிக்களிப்பதைவிட ஊடுவது இன்பம்.
(உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலும் ஊடல் இனிது-1326)

ஊடலில் தோற்றவரே வென்றவர் என்பது ஊடலின் பின் வரும் கூடலின்பத்தில் உணரப்படும்.
(ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப்படும்- 1327)

நெற்றி வியர்க்கப் பெற்ற கூடல் சுகத்தை, ஊடல் கொண்டு,அதிகமாய்ப் பெறுவோம்!
(ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு-1328)

அழகியவள் ஊடல் கொள்ள, இரவு நீளட்டும் ஊடல் தணிக்க நான் கெஞ்சிக் கொஞ்சும் இன்பம் நீடிக்க!
(ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா-1329)

செல்லச் சண்டைகள், அதனிலும், சண்டைக்குப் பின்னான கூடல், காதலில் பேரின்பம்!
(ஊடுதல் காமத்திற்க் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.-1330)