புதன், 11 ஜனவரி, 2017

இனம் அழிக்கும் முயற்சியே சல்லிக்கட்டுக்குத் தடை!சல்லிக்கட்டு என்கிற ஏறுதழுவுதல் சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது! அதனால் அதைத் தடை செய்வது எங்கள் பாரம்பரியத்தை அழிப்பது என்ற கருத்தில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை!

அதுமட்டுமல்ல, உடன்கட்டை ஏறுதல் கூட நம் வழக்கில் இருந்திருக்கிறது, அதனால் அதைத் தடை செய்தது மட்டும் சரியா என்ற குதர்க்கவாதத்தை பதில் சொல்லி வளர்க்க எனக்கு இஷ்டமில்லை!

எது நல்லது, எது அல்லது என்பதில் புரிதல் இல்லாமல் வாதத்துக்குப் பேசுவது விரயம்!

ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகச் சொல்பவர்கள் மனநலம் குறித்து பரிசோதித்துக்கொள்வது நல்லது!

குதிரைப்பந்தயங்களில்,
ஒட்டகப் பந்தயங்களில்,
மட்டுமல்ல,
கோவில் யானைகள் எப்படித் துன்புறுத்தப்படுகின்றன என்பது இவர்களுக்குத் தெரியாது என்றால் பீட்டா என்ற பெயரை பீடை என்று மாற்றிக்கொள்வது நல்லது!

யானைகள் காட்டில் வாழப் பிறந்தனவா, அன்றி கோவிலில் பிச்சை எடுத்து சம்பாதிக்கப் பிறந்தவையா என்று கேட்டால் மதவிரோதி என்பார்கள்!

அந்தக் கோவிலில் வாழ்வதாய்ச் சொல்லும் கடவுள்களுக்கு இதில் புரிதல் இருந்தால் எப்போதோ காலி செய்துவிட்டுப் போயிருக்கும்!
கண்டிப்பாக புளியோதரைக்கும் சர்க்கரைப்பொங்கலுக்கும் ஆசைப்பட்டு கண்டும் காணாததுபோல் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்காது!

மனிதர்கள் உயிர் இழக்கிறார்கள்! அவன் வீட்டில் தாலி அறுபடுவது உங்களுக்கு விளையாட்டா என்பவர்கள் மற்ற விளையாட்டுக்களில் ஏற்படும் உயிரிழப்போடு ஒப்பிட்டு முடிவுக்கு வரட்டும்!

குறிப்பாக சனிக்கிழமை இரவுகளில் மூக்குமுட்டக் குடித்துவிட்டு, டாஸ்மாக்கிலிருந்து தத்தம் வாகனங்களில் தார் ரோட்டில் வீர விளையாட்டு கொத்துக்கொத்தாய் காவு வாங்குவதில் தமிழ்நாடுதான் முதல் இடம்!

சனிப்பிணங்கள் தனியாய்ப் போகாமல் ரோட்டில் அப்பாவியாய்ப் போகும் சிலரையும் துணைக்கு இழுத்துப்போகின்றன!

எனினும் பீட்டா பற்றியோ, சல்லிக்கட்டு  பற்றியோ பலரும் எழுதி அலுத்துவிட்ட நிலையில் நான் சொல்லப் புதிதாக ஏதுமில்லை!

இந்தப் பதிவு அதைப்பற்றி அல்ல!
இது வேறொரு அரசியல் பற்றி!

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற போர்வையில், வயல்களில் ரசாயனங்களை அள்ளித்தெளித்து நம் பாரம்பரிய நெல்வகைகளில் தொண்ணூறு விழுக்காட்டைத் தொலைத்துவிட்டோம்!

விளைவு,
கருவில் இருக்கும்போது போட ஆரம்பித்த தடுப்பு ஊசியும் சொட்டுமருந்தும் பாடையில் போகும்வரை தொடர்கிறது!

என் பாட்டன் தொண்ணூறு வருடம் வாழ்ந்து ஒரு ஊசிகூடப் போட்டுக்கொள்ளாமலே போய்ச் சேர்ந்துவிட்டார் பாவம்!
இன்று மாரடைப்பு இருபது வயதில் வருகிறது!
பிறக்கும் குழந்தைக்கு நீரிழிவு சாதாரண நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது!

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை ஆராய்ந்தால் இன்னொரு கதை கிளம்புகிறது!
ஜெர்சி பசுவின் பாலில் நீரிழிவைத் தூண்டும் ரசாயனங்கள் இருக்கிறது என்கிறார்கள்!


இது உண்மை இல்லை என்று ஆயிரம் தரவுகளோடு வருவார்கள் நீரிழிவு மருந்து விற்று லட்சம் கோடிகள் பார்த்த பன்னாட்டு வியாபாரிகள்!

நீங்கள் பல் துலக்க உபயோகித்த உமிச்சாம்பல், கரி, உப்பு, வேப்பங்குச்சி இதையெல்லாம் அசிங்கம் என்று பிடுங்கிப்போட்டுவிட்டு, கண்ட ரசாயனத்துக்கும் உங்களை அடிமைப்படுத்திவிட்டு,
இப்போது நம்மையே கேட்கிறார்கள் - உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பிருக்கிறதா, வேம்பிருக்கிறதா என்று!

அவர்கள் பேஸ்ட்டில் இப்போது அதெல்லாம் இருக்கிறதாம்,
 டூத் பிரஷ்ஷில் கரி இருப்பது கூடுதல் தகுதி!

நாமும் இன்னும் வெட்கம் கேட்டுக் கேள்வியே கேட்காமல் அதையெல்லாம் வாங்கிப் பல்லில் பூசிக்கொள்கிறோம்!

அதை வாங்கச் சொல்வது காஜல் அகர்வாலாயிற்றே!

இதுபோல் சோப்பில் மஞ்சள், கற்றாழை, ஷாம்பூவில் செம்பருத்தியும் சீகைக்காயும்!

நல்லது.
இப்போது மசால்தோசை பர்கர் வந்துவிட்டது இன்னொரு சிறப்புச் செய்தி!

இதே அரசியல்தான் சல்லிக்கட்டு தடையிலும்!

நம் நாட்டு மாடு ரகங்கள் பல அழிந்துவிட்டன!
காங்கேயம் காளைகள் அழிவின் விளிம்பில்!

ஏன் இப்படி?

காளைகளின் உபயோகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகின்றன!
உழவுக்கும், வண்டி இழுக்கவும் பயன்பட்ட காளைகளை இயந்திரங்கள் ஓரம்கட்டிவிட்டன!

இன்னும் காளைகள் உயிர்ப்போடு, கவுரவச் சின்னமாக இருப்பது சல்லிக்கட்டுக்காக மட்டுமே!

ஒரு பொலிகாளை தன ஆயுளில் நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகளை உருவாக்கும்! இது உறுத்தாதா என்ன நம் வியாபாரிகளுக்கு!

இருக்கவே இருக்கிறது மிருக வதை தடுப்புச் சட்டம்!
சல்லிக்கட்டு எனும் ஒரு இடத்தை அடித்துவிட்டால், காளைகள் பயனற்றுப்போகும்!

இப்போதே காளைகள் வெறும் செலவு என்று, ஆண் சிசுக்கொலை செய்யப்படுகின்றன!

ஆவின் உறைபனி விந்து நிலையங்களில் கலப்பின, இறக்குமதி மாடுகளின் விந்து தொண்ணூற்றைந்து சதவிகிதமும், நாடு மாடுகளின் விந்து பத்து சதவிகிதத்துக்கும் கீழ் விற்பனை ஆகின்றன என்கிறது புள்ளிவிபரம்!

ஆண்களே இல்லாத ஒரு இனம் என்ன செய்யும்? கொஞ்சம் கொஞ்சமாகக் கலப்பினமாகி, முழுக்க இறக்குமதி ரகமாக மாறும்!

இதில் எத்தனை கோடி?

கிழக்கிந்தியக்கம்பெனிகள் நம் நாட்டை இம்முறை அழுத்தமாகவே பிடித்துவிட்டன!

சல்லிக்கட்டு உங்கள் பாரம்பர்யம் என்பதற்கு சில சான்றுகள்!

கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும் 
புலலாளே,ஆயமகள்
அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர்துறந்து
நைவாரே ஆயமகள்

கொலைமலி சிலைசெறி செயிர்அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்.
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்;
அவருள்,மலர்மலிபுகழ் எழ,
அலர்மலி மணிபுரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருந்தினான் மன்ற அவ் ஏறு

மணிவரை மருங்கின் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும்,
மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்பு போல
வான்பொறி பறந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித்திங்கள் போல்
வளையுபு மழிந்த கோடு அணி சேயும்,
பொருமுரண் முன்பின் புகல்ஏறு பலபெய்து-
அரிமாவும்,பரிமாவும்,களிறும்,கராமும்,
பெருமலை விடாரகத்து,ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரையகம் போலும்-


சிந்திக்கத் தெரிந்தவர்கள் நாம்!
இது மிருகவதை என்று சல்லிக்கட்டுக்கு தடை!

எனில், இவை?
(கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொண்டு பின்வரும் படங்களைப் பாருங்கள்!)பொங்கலும் சல்லிக்கட்டும் நல்லவிதமாக முடியட்டும்,
நீட் தேர்வுகள் பற்றி விரிவாய்ப் பேசுவோம்!

நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக