திங்கள், 16 ஜனவரி, 2017

நீட் என்னும் குலக்கல்வித் திட்ட நுழைவாயில்!
நாடு முழுவதும் பொதுவான நுழைவுத்தேர்வு!

அதில் தகுதி பெறுவோருக்கே தொழிற்கல்விப் படிப்பில் அனுமதி!

கேட்பதற்கு எவ்வளவு உயர்வாக இருக்கிறது!

இவ்வளவு உயர்ந்த நோக்கத்தையா விமர்சிக்கிறார்கள்?

இவர்கள் எதிர்மறை மனநிலை கொண்டவர்கள்!

அரசு எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குறுகிய மனப்பான்மையில், நாடு வல்லரசாவதை விரும்பாத பிற்போக்குவாதிகள்!

மேம்போக்காகப் பார்த்தால் இதுதான் உண்மை!

தகுதியுள்ளவனுக்குத்தான் உயிர்காக்கும் மருத்துவப் படிப்பு படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்ய அனுமதி!

இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது?

ஏன் இந்தக் கூச்சல்?

வழக்கம்போல், வெளியே சொல்லும் நோக்கம் உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டது!

அதுதான் காரணம்!

ஒரு சின்னப் புள்ளி விபரம்!

2009 ல் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வென்றவர்களில் 16 சதவிகிதம் தமிழர்கள்! 2015ல் வெறும் ஆறு சதவிகிதம்!

ஒரு இருபது வருடங்களுக்குமுன், டெல்லியில் சென்ட்ரல் செகரட்ரியேட்டில் பெரும்பான்மை தமிழர்கள்!

இப்போது தலைநகரில் தமிழ் கேட்க வேண்டுமானால் நாடாளுமன்றத்துக்குத்தான் போகவேண்டும்!

அங்கும், காஷ்மீர் பூட்டிபுல் காஷ்மீர் என்று ஒரு தீந்தமிழ்க் குரலில் மதுர கானம் கேட்கலாமே ஒழிய, விவாதங்கள் எதையும் கேட்கமுடியாது!

ஐஐடி ஐஐஎம் போன்ற இடங்களிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை
கணிசமாகக் குறைந்திருக்கிறது!

இந்த நிலைக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் என்றொரு கண்றாவி அமைப்பில் கழகங்களுக்கு கூஜா தூங்குபவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதும், புற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகளும்தான் காரணம்!

தனியார் பள்ளிகளின் வியாபாரத்துக்காக, அரசுப்பள்ளிகள் தரம் திட்டமிட்டுக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது!

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கந்து வட்டியிலும் பிற தொழில்களிலும் செலுத்தும் கவனத்தை பாடம் நடத்துவதில் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளப்பட்டார்கள்!

தனியார் பள்ளிகள் ஓரளவு பெயர் வாங்கிவிட்டாலே அவற்றின் கட்டணங்கள் எகிற ஆரம்பித்தன!

இன்று ஓரளவுக்கு பெயர் வாங்கிய தனியார் பள்ளிகளில், யூகேஜி சேர்க்கைக் கட்டணம் ஒரு லட்சத்துக்கு மேல்!

தனியார் பள்ளிகளின் ஒரே குறிக்கோள், மருத்துவக்கல்லூரியில் தங்கள் மாணவர்களில் ஒரு சிலரையாவது திணிப்பது!

அப்போதுதான் அவர்களுக்கு சில்லறை தேறும்!

இதற்காகவே, நாமக்கல், ராசிபுரம் ஏரியாவிலிருக்கும் கோழிப்பண்ணைக் கொட்டகைகள் அவசரமாக காலி செய்யப்பட்டன!

அவற்றில் சீருடை அணிந்த பிராய்லர் கோழிகள் அடைக்கப்பட்டன!

IGCSE, CBSE, மெட்ரிக் என மெல்ல மெல்ல உயர்ஜாதிகள் பிரிக்கப்பட்டன!

மெட்ரிக் மாணவர்களுக்கு சமச்சீர் என்ற மெல்லக்கொல்லும் விஷம் ஊட்டப்பட்டது!

எதையுமே ஆழமாகப் போதிக்காத ஒரு அரை வேக்காட்டு பாடத்திட்டம்!
அதில் கழகங்களுக்கிடையேயான குடுமிப்பிடி சண்டை வேறு!

வேண்டாவெறுப்பாகப் பிள்ளை பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்த கதை!

அரசுப்பள்ளி மாணவர்கள் சமச்சீர் கல்வியில் சாதாரணமாக ஸ்கோர் செய்ய, CBSE பிராய்லர்கள் தடுமாற ஆரம்பித்தன!

பேப்பர் சேஸிங் போன்ற சிலபல வேலைகளுக்குப்பின்னும், வெறும் நூறு ரூபாய் கட்டிப்படித்து வரும் அரசுப்பள்ளி மாணவர்களை இந்த லட்சாதிபதிகளால் முழுமையாக வெளியேற்ற முடியவில்லை!

இவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டும் லட்சங்கள் ஒரு சின்ன முதலீடுதான்!
அரசுப்பள்ளி வாசல் வழியாகப் போவதே அவமானம் என்று நினைக்கும் இவர்கள் எல்லோருடைய சாலைகளும் பயணிப்பதே அரசு மருத்துவக்கல்லூரி நோக்கித்தான்!

தனியார் மருத்துவக்கல்லூரிகள் ஓரு செமஸ்டருக்கு வாங்கும் கட்டணம் அரசுக் கல்லூரியின் ஐந்து வருட மொத்தக்கட்டணம்போல் 100 மடங்கு!

கஷ்டப்பட்டு லட்சங்களில் ஃபீஸ் கட்டி விடியவிடிய மனப்பாடம் செய்து தக்கிமுக்கி சீட் வாங்கும் இவர்கள் பக்கத்தில் நோகாமல் அரசுப்பள்ளி மாணவன் சிலர் வந்து உட்காருவது அவர்களுக்கு சகிக்கமுடியாது இருப்பது நியாயம்தானே?

சரி, மார்க் வாங்கமுடியாத தனியார் பள்ளி மாணவர்கள் எங்கே போவது?

அதற்குத்தானே நாங்க இருக்கோம் வாங்கன்னு தனியார் மருத்துவக்கல்லூரிகள் கடை விரித்திருக்கின்றன!

தனியார் மருத்துவக்கல்லூரிகள் தமிழகம் அளவுக்கு எங்கும் பெருகவில்லை!

கள்ளச்சாராய அதிபர்கள் எல்லோரும் சொல்லிவைத்தாற்போல் மருத்துவக் கல்லூரி அதிபர்கள், கல்வி வள்ளல்கள் என்று ஆனார்கள்!
மேலும் சில வருடங்களில் அவை பல்கலைக் கழகங்களாய் வளர்ந்து, சாராய சாம்ராட்டுகள் வேந்தர்களானார்கள்!நீட் பற்றிச் சொல்லவந்துவிட்டு வேறு ஏதோ கதை சொல்கிறான் என்றுதானே தோன்றுகிறது?

இது அடிப்படை!

இனி நீட் வந்த கதைக்குப்போவோம்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவிகிதம் மாநிலத்துக்கு! 15 % மத்திய அரசுக்கு!

தமிழகத்தில் இருக்கும் 2750 அரசு மருத்துவக்கல்லூரி இடங்களில் 2318 தமிழக மாணவர்களுக்கு, 412 இடங்கள் மட்டும் மத்திய கோட்டாவுக்கு!

இது பொறுக்குமா நம் டெல்லி முதலாளிகளுக்கு?

அவர்கள் கையில் எடுத்தது அனைத்திந்திய நுழைவுத் தேர்வு என்ற ஆயுதத்தை!

இது முதல் வரியில் சொன்னதுபோல் மிக நல்ல நேர்மையான திட்டம்தான்!

ஆனால் அதற்குமுன், நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் என்பது ஏன் கட்டாயம் ஆக்கப்படவில்லை?

இருப்பவன், இல்லாதவன் எல்லோருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை இல்லையா?

எனில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதானே முறையாக இருக்கும்?

இதை ஏன் செய்யவில்லை இந்த மத்திய மாநில அரசுகள்?

மாநிலத்தில் வழங்கப்படும் சமச்சீர் கல்வியின் தரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்!

The NEET syllabus 2017 is prepared after reviewing syllabus of various state boards as well as those prepared by the Central Board of Secondary Education (CBSE), Council Board of School Education (COBSE) and National Council of Education Research and Training (NCERT). Further, NEET 2017 syllabus has been made after the recommendations from the Medical Council of India (MCI) and is strictly based on topics, chapters and subjects taught during 10+2/HSC level.

அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் கேள்விகள் CBSE  பாடத்திட்டத்தின்கீழ் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன!

இது அரசுப்பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கான வாய்ப்புகளை முற்றிலும் மறுதலிக்கும் திட்டம்!

பணம் கொடுத்து CBSE பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இனி மருத்துவர் ஆகமுடியும்!

இல்லையேல் NEET நுழைவுத்தேர்வுக்கென இப்போது புற்றீசல்போலப் புறப்பட்டிருக்கும் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிக்கவேண்டும்!

 இவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி கொள்ளைக்கார்களைப்போல் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் இன்னொரு உப கொள்ளைக்காரர்கள்!

இப்போது ஓரளவுக்கு இந்த நுழைவுத் தேர்வின் தீமை புரிய ஆரம்பித்திருக்கும் என்று நம்புகிறேன்!

இனி சில நடைமுறைகளும் அவற்றின் மீதான சந்தேகங்களும்!

அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்ட பின்புதானே பொது நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும்?

இல்லையேல், நுழைவுத்தேர்வில் கேள்விகள் ஏழை மாணவர்கள் படிக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் அல்லவா தயாரிக்கப்படவேண்டும்?

அந்தக் கல்வித்திட்டம் தரமற்றது  எனில், அந்தத் தரமற்ற கல்வியை அவர்கள் மேல் திணித்தது யார் குற்றம்?

பன்னிரு வருடங்கள் ஒரு உபயோகமற்ற பாடத்திட்டத்தை அவர்கள் தலையில் திணித்துவிட்டு, இப்போது நீ தொழிற்கல்வி கற்கத் தகுதியற்றவன் என்று சொல்வது ஏழை மாணவர்களின் வாழ்வுரிமை பறிக்கும் செயலல்லவா?

தேவையானால், நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களில் படித்துத் தேர்வெழுதட்டும் என்பது, பன்னிரண்டு வருடம் உனக்கு குப்பையை போதித்தேன், இந்த சிலமாதங்களில் வேறு தரமான கல்வியை காசுகொடுத்துப் படித்து, அதை பனிரெண்டு வருடம் பயின்றவனோடு மோது என்பது என்ன நியாயம்?

ஒருவனை சாப்பாடே போடாமல் வளர்த்து, கடைசிநாளில் இரண்டு முட்டைகளை உடைத்துக்கொடுத்து, ஒரு பயில்வானுடன் மோதவிடுவதுபோல் இது!

உண்மையில் நீட் தேர்வு நாடுதழுவிய தரமான தொழிற்கல்விக்குத்தான் எனில்
முதலில் பள்ளிகளில் எல்லோருக்கும் நாடுதழுவிய ஒரே பாடத்திட்டத்தை கட்டாயமாக்கட்டும் மத்திய அரசு. அதை வெற்றிகரமாக அமல்படுத்திவிட்டு
பிறகு பொது நுழைவுத்தேர்வை மகிழ்வோடு கொண்டுவரட்டும்!

மாநிலத்துக்கு 85 % கோட்டா என்பது இல்லாமல் போகும்போது, அப்படியே ஒரு மாணவன் நுழைவுத்தேர்வெழுதி வெற்றி பெற்றபின், அஸ்ஸாமிலோ, பஞ்சாபிலோ இடம் கிடைத்தால், அங்கு போய் ஐந்து வருடம் தங்கிப்படிக்குமளவு அவனுக்கு வசதி ஏது?

எனில், அந்த வசதி உள்ளவன் மட்டும் படித்தால் போதும் என்கிறதா இந்தத்திட்டம்?

இந்த நுழைவுத்தேர்வுக்கு ஆதரவாக வைக்கப்படும் இன்னொரு வாதம்!

தரமற்ற கல்வியைப்படித்தவன், தகுதியற்றவன் மருத்துவனாவது ஏழைகளின் உயிரோடு விளையாடும் செயல்!

உண்மை!

இது மிக உயரிய கவலை!

ஏழை என்பதால் தகுதியற்ற முட்டாள் மருத்துவர் சிகிச்சையால் சாகவேண்டுமா?

முற்றிலும் நியாயம்!

இந்த ஃபைவ் ஸ்டார் தனியார் மருத்துவக்கல்லூரிகள் பற்றி சிறிது பார்ப்போமா?

தனியார் மருத்துவக்கல்லூரியில் 100 சீட் இருக்கிறது  என்று வைத்துக்கொள்வோம்!

அதில், 65 % சீட்டுகள் அரசு கோட்டாவுக்கும் 35 % மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கும்!

இதில் இன்னொரு சலுகை, சிறுபான்மை மருத்துவக் கல்லூரியாக இருந்தால், அரசுக்கும், அவர்களுக்கும் தலா 50 %

இந்தச் சலுகை எப்படி வழங்கப்படுகிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்!
சேலத்தில் விநாயகர் பெயரில் துவங்கப்பட்ட ஒரு தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம்!

(இதன் வேந்தர் பற்றி எழுதினால் ஒரு பெரிய க்ரைம் நாவல் எழுதலாம்!)


இவர்களின் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாட்டில், பாண்டியில் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும்  சிங்கப்பூர் எல்லாஇடத்திலும் சேர்த்து சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன!

அவர் உலகறிந்த இந்து!

ஆனால், பதிவேடுகளில் அவர் ஒரு ஜெயின் என்று பதியப்பட்டு, அந்த பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்தில் 50 % கோட்டாவை அனுபவிக்கிறது!

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே
அநேகமாக வெளியே தெரியாமல் எல்லா தனியார் மருத்துவக்கல்லூரிகளும் சிறுபான்மை அந்தஸ்து பெற்று 50% கோட்டா பெற்றிருக்கும்!

சரி, அரசுக்கோட்டாவில் இடம் பெரும் மாணவர்கள் அரசுக்கல்லூரிக்கு நிகராகவா கட்டணம் செலுத்துகிறார்கள்?

இல்லை! அவர்களுக்கு தனி ஃபீஸ்!

அவன் குறைந்தபட்சம் வருடம் சில லட்சங்கள் கட்டணம் செலுத்தவேண்டும்!
எனில் ஏழை மாணவன் அங்கு படிப்பதெப்படி?

அகரம் ஃபவுன்டேஷன் போன்ற தனியார் அமைப்புகளிலோ, ஹிந்து விகடன் போன்ற பத்திரிக்கை வாயிலாகவோ பிச்சை எடுத்துக் கற்கலாம்!

பிச்சை புகினும் கற்கை நன்றே!

அரசு இதை வேடிக்கை பார்க்குமேயன்றி வேறேதும் செய்யாது
அதற்குத்தான் சாராயம் காய்ச்சி விற்கும் மகத்தான சமூகக்கடமை இருக்கிறதே!

இந்த பிரைவேட் கோட்டாவில் சேரும் மாணவர்களின் கல்வித் தகுதி என்ன?

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்!

99.9 சதவிகிதம் எடுத்தவனை விட, 60 சதவிகித மதிப்பெண் எடுத்தவன் புத்திசாலி!

அவன் படித்து வழங்கும் சிகிச்சை ஏழைகளின் உயிர் காக்கும்!

அதுவும், கோடிகள் செலவு செய்து படிப்பவன், ஏழைகளுக்குத்தான் மருத்துவ சேவை செய்வான்!

நம்பித்தானே ஆகவேண்டும்.

அப்போலோ போன்ற நட்சத்திர மருத்துவமனைகள் ஏழைகளுக்குத்தானே சிகிச்சை அளிக்கின்றன?

சமீபத்தில் நடந்த 75 நாள் சிதம்பர ரகசிய மரணத்துக்கு அவர்கள் வசூலித்த கட்டணம் வெகு சில கோடிகள் மட்டுமே!

தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கட்டணம் நீட் தேர்வு கட்டாயம் என்றானபின் இரு மடங்காகியிருக்கிறது!

வருட ட்யூசன் ஃபீஸ் மட்டும் 15லிருந்து 25 லட்சம்வரை!

சென்னையைச் சேர்ந்த ஒரு முதுபெரும் சாராய அதிபரின் கல்லூரி இன்னொரு திட்டத்தைக் கொண்டுவந்து, இப்போது அநேகமாக எல்லா தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் பின்பற்றப்படுகிறது!

நீங்கள் MBBS சேரும்போதே, ஒரு பெரிய தொகையைக் கட்டிவிடவேண்டும்!

(பத்து வருடம் முன்பு இது அறிமுகப்படுத்தப்பட்டபோதே, ஒருகோடி ரூபாய்)
உங்களுக்கு விருப்பமான மருத்துவ முதுகலைப்பட்டமும் முடித்தே வெளியே வரலாம்!

அவன் சேரும்போதே, முதுகலைப் பட்டம் வாங்குமளவு நன்கு படிப்பான் என்பது எப்படி உறுதியாகத் தெரியும்?

தேர்வு வைப்பதும், மதிப்பெண் வழங்குவதும் இவர்களேதானே?

ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகவோ, குழந்தை மருத்துவ நிபுணராகவோ இவர்கள் தரமான சிகிச்சை அளிப்பார்கள், பன்னிரண்டு வருடம் அரசே வெட்கம் கெட்டு ஒப்புக்கொள்ளும் தரமற்ற பாடத்திட்டத்தில் படித்துவந்தும், இவர்களோடு MBBS படித்துபோட்டியிட்டு, உயர்கல்வி தகுதி அடிப்படையில் பெற்றுப் பட்டம் பெறுபவர் தரமற்ற மருத்துவர்!

என்ன ஒரு கீழ்மையான வாதம்?

கோடிகளில் பணம் இருப்பவன் ஏழைகளின் உயிரோடு இத்தனை வருடமாக விளையாட அனுமதிக்கப்படுவது எளிமையாக மறக்கப்பட்டு, சமச்சீர் கல்வித்திட்டம் தரமற்றதென்று கண்டுபிடிக்கப்பட்டு, அதில் பயில்பவனுக்கு மருத்துவப்படிப்பு உரிமை மறுக்கப்படுகிறது!

கோடிகளில் செலவு செய்து படிப்பவன் தரமான மருத்துவம் பார்ப்பானா
அல்லது 
மருந்துக்கம்பெனிகளோடு கை கோர்த்துக்கொண்டு முதலீட்டை எடுக்கப்பார்ப்பானா என்பது யாவருக்கும் பதில் தெரிந்த எளிய கேள்வி!

இவ்வளவு முதலீடு செய்து படிப்பவன் பிணத்துக்கு மருத்துவம் பார்த்து கல்லாக்கட்டுவது அவன்வரையில் நியாயம்தானே?

பெரும் பணக்காரனோ, அல்லது ஏற்கனவே மருத்துவமனை வைத்துக் கொள்ளையடித்த மருத்துவர்களின் செல்லக் குழந்தைகளோ மட்டுமே, இனி மருத்துவக்கல்வி படிக்கமுடியும் என்பது,

அறுபது ஆண்டுகளுக்குமுன் ராஜாஜி கொண்டுவர முயன்ற குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்தவில்லையா?

இது அடுத்த கட்டமாக பொறியியல் படிப்பிற்கும் வருகிறது என்பது உபரித் தகவல்!

மருத்துவமும் கல்வியும் என்று அரசாங்கத்தின் கையிலிருந்து தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு,
ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாராயம் காய்ச்சி விற்கும் ஈனத்தொழில் அரசுக்குச் சொந்தமானதோ அப்போதே வீழ்ந்தது நம் அறம்!

சல்லிக்கட்டு, கிரிக்கெட், திரிஷா என்று நமக்கு சமூகப்பொறுப்போடு ஊடகங்கள்  பரபரப்புத் தீனி போட்டுக்கொண்டிருக்க,
சத்தமின்றி ஏழைகளின் கல்வி உரிமையைப் பிடுங்கும் முயற்சிக்கும், மறைமுக குலக்கல்வித் திட்டத்துக்கும் இந்த பினாமி அரசும் அடிமைக்கூட்டமும் சம்மதம் சொல்லிவிட்டன!

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதானமாக வரும் நீட் நுழைவுத்தேர்வு பயிற்சிமையங்களின் வெவ்வெறு விளம்பரங்களை என்னவென்றே புரியாமல் கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் நாம்!

பிரதான எதிர்கட்சிக்கு மட்டுமல்ல,
கட்சி வேறுபாடு களைந்து அனைவருக்கும் இந்தக் கயமையை எதிர்த்துப் போராடவேண்டிய கடமை இருக்கிறது!

உங்கள் சந்ததிக்காக!
உங்கள் அடிப்படை உரிமைக்காக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக