புதன், 25 ஜனவரி, 2017

இனி நிம்மதியாக மரணிப்பேன்!"இனி பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டுவா!" 
ஸ்டவ்வை பற்றவைக்க லைட்டரை எடுத்த ஆத்மா பாட ரவி முறைத்தான்

"உனக்கு எல்லாமே விளையாட்டுஇளைஞர்கள் ஏன்தான் இப்படி 
இருக்கிறீர்களோ!"

"கல்யாணம் ஆகிவிட்டது என்பதற்காக நூற்றுக்கிழவி போல பேசாதே ரவி!"
சிரித்துக்கொண்டே அடுப்பில் இட்லிப் பாத்திரத்தை வைத்துவிட்டு வந்து 
உட்கார்ந்தான் ஆத்மா!

இருவரும் நோவா கிரகத்தில் குடியேறுவோருக்கான வீடுகள் கட்ட வந்த 
தமிழக இளைஞர்கள்!

எட்டு வருட காண்ட்ராக்ட்
இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இரண்டுமாத விடுப்பில் கம்பெனி 
செலவில் பூமிக்குப் போக அனுமதி!

மாதம் ஒருமுறை பாரம்பரிய உணவு சமைத்துக்கொள்ள அனுமதி!

இன்றைக்கு இருவரும் தங்கள் கோட்டாவை வைத்து இட்லியும் 
உருளைக்கிழங்கு மசாலாவும்!

நேற்று அரிசி வாங்க விண்ணப்பம் கொடுத்தபோதுஅங்கிருந்த 
வயதானவர் பொறாமையோடு சொன்னார்!
"தம்பிசம்பாதிப்பதெல்லாம் சாப்பாட்டிலேயே செலவு 
செய்துவிடாதீர்கள்!"

அவர் சொல்வது ஆதங்கத்தில் என்றாலும் உண்மைதான்.

இட்லி அரிசி கிலோ நானூறு இந்தியன் ரூபாய்!
கிட்டத்தட்ட நாலாயிரத்தி ஐநூறு அமெரிக்க டாலர்!

"சரிஉருளைக்கிழங்கு வேகும்வரை ஏதாவது தேவதைக்கதை சொல்லு ரவி
உனக்குத்தான் கதைகள் சொல்வதில் அத்தனை ஆசையாச்சே!"

மெல்லச் சிரித்த ரவி
"இல்லை ஆத்மாஇப்போது நான் உனக்கு சொல்லப்போவது 
தேவர்களின் கதை!"

உண்மையில் நடந்த கதை!
என் கொள்ளுத் தாத்தா கண்ணாறக் கண்ட கதை!

சரியாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டு!

சென்னையைக் கடல் கொள்வதற்கு இரண்டு வருடம் முன்பு
அதாவது 2017 ஜனவரி மாதம்!

எல்லா நாளையும் போலத்தான் விடிந்தது அந்த நாளும் –
வரலாற்றில் தான் ஒரு பொன்னாளாகப் பதியப்படப்போவதை 
அறியாமலே!

இன்றைக்கும் ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் 
ஜல்லிக்கட்டுக்கு ஒரு சில்லறை அமைப்பின் பேச்சைக் கேட்டு முட்டாள் அரசாங்கம் தடை செய்திருந்த நேரம்!

சல்லிக்கட்டு வேண்டும் என்று இளைஞர்கள் அப்போதைய மெரினாவில் கூடப்போவதாக உளவுத்துறை சொன்ன தகவலை முற்றாக அலட்சியப்படுத்தினார் அப்போதைய முதல்வர்!

தன்னுடைய பதவியைத் தக்கவைத்துக்கொள்ள சித்துவேலைகள் 
செய்யவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது!

"விடுங்கள்அரைநாள் கூச்சல் போட்டுவிட்டுவெய்யில் உறைக்க ஆரம்பித்ததும்டாஸ்மாக்குக்கோ விஜய் படத்துக்கோ 
போய்விடுவார்கள்!"

காலம் வேறு கணக்கைப் போட்டு வைத்திருந்தது!

கொஞ்சம் கொஞ்சமாக எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியாமல் 
கூட்டம் கூட்டமாக மெரினா நிறைய ஆரம்பித்தது!அரசும்கட்சிகளும் சுதாரித்துக்கொள்வதற்குள் எண்ணிக்கை 
லட்சத்தைத் தாண்டியது!

பெண்களும் குழந்தைகளும் என குடும்பம் குடும்பமாக கூடியது ஒருவகையில் அரசுக்கு ஆறுதல் தந்தது!

எப்படியும் ஆறுமணிக்கு சீரியல் ஆரம்பித்தவுடன் கூட்டம் 
கலைந்துவிடும்!

"சீரியல்?"

"ம்அப்போது இளைஞர்கள் சினிமாக் கொட்டகைகளிலும்  பெண்கள் 
அப்போது வீடுதோறும் இருந்த முட்டாள் பெட்டி முன்பும் தங்கள் 
மாலைகளைக் கழிப்பது விதி!"

"எலெக்ட்ரானிக்தகவல் தொடர்புத் துறைகள் அப்போதுதான் வளர்ச்சி அடைய ஆரம்பித்திருந்த காலம்!

சினிமா என்பது அப்போது திரையரங்குகளிலும்டிவியிலும்கையில் 
சுமந்து திரிந்த ஸ்மார்ட் ஃபோன்களிலும் பார்த்த விஷயம்!

இப்போதுபோல் விர்ச்சுவல் ரியாலிட்டி என்று ஹோலோக்ராஃபிக் நடிகர்கள் நம் வீட்டில் வந்து நடித்துக்காட்டும் தொழில் நுட்பமோவிரல் நுனியில் பொருத்திக்கொண்டு லேசாடிக் காலர்கள் மூலம் 
நேரிடையாக பிம்பத்தை வரவழைத்துப் பேசும் தொழில்நுட்பமோ அறியாத காலம்!

பெண்கள் என்றால் சீரியல் பார்ப்பதும்ஆண்கள் என்றால் குடிப்பதும் ரசிகர் சண்டை போடுவதும் என்று ஒரு பொதுவான புரிதல் இருந்த காலம்!

என் கொள்ளுத்தாத்தா அடிக்கடி சொல்லுவாராம் - இந்த இளைஞர்கள் உருப்பட மாட்டார்கள் என்று!

அதைத்தானே அரசாங்கமும் நினைத்திருக்கும்?

மறுநாள் விடிந்தபோதுதான் அரசுக்கு உரைத்திருக்கிறது.
இது வழக்கமாக கூடும் கூட்டம் இல்லை என்பது!

ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது!
மெரினாவில் கூடிய கூட்டம் இரண்டு லட்சத்தை தாண்டியது!

எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் தன்னெழுச்சியாக இளைஞர் 
படை குடும்பம் குடும்பமாகத் திரண்டது!

அத்தனை வருடமாக சல்லிக்கட்டு தடை விலக்க ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத அரசும் கட்சிகளும் தாங்கள் காணும் காட்சி கண்டு திகைத்தன!

அவர்கள் கூட்டும் கூட்டம் கோஷங்கள் போட்டுவிட்டுகொடுக்கும் காசையும் பிரியாணிப் பொட்டலத்தையும் வாங்கிக்கொண்டு நேராக 
சாராயக்கடைக்குப் போய்விடும்!
இதுதான் இதுவரை அவர்கள் பார்த்த கூட்டம்!

ஆனால் இது வேறுவகை எழுச்சி என்பது அப்போதுதான் அவர்களுக்கு உறைக்க ஆரம்பித்தது!

"சல்லிக்கட்டு அவ்வளவு முக்கியமானதா ரவி?
அதற்காகவா அவ்வளவுபேர் திரண்டார்கள்!"

"அது ஒரு குறியீடுதான் ஆத்மா!
காலம்காலமாக தங்கள் உரிமைகள் வஞ்சிக்கப்படுவதும்,அரசியல்வாதிகள் அழும்பிள்ளைக்கு நிலவைக்காட்டுவதுபோல் 
ஏதாவது கதை சொல்வதும் அவர்களை ஒரு சரியான காரணத்துக்காக 
காத்திருக்கவைத்தது!
வகையாக மாட்டியது சல்லிக்கட்டு!"

"தவிர சல்லிக்கட்டு ஏன் அவசியம் என்பதை எளிமையாகச் சொல்கிறேன்.
பசுமைப்புரட்சி என்று சொல்லிகலப்பினப் பயிர்களை விதைத்து மண்ணில் ரசாயனங்களை வரம்பின்றி அள்ளிக்கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக நம் பாரம்பரிய நெல் வகைகளை இழந்து நோய்களை மாற்றாகப் பெற்றோம்!

பன்னாட்டு விதைஉரக்கம்பெனிகள் பலலட்சம் கோடிகளை அள்ளஅவர்களுக்கு இணையாக மருந்து தயாரிப்பு நிறுவங்களும் 
கொழித்தன!

இருபது வயதில் ஹார்ட் அட்டாக் வருவதும்பத்து வயதில் புற்றுநோய் வருவதும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது!
நீரிழிவு இந்தியாவின் தேசிய வியாதி ஆயிற்று!

ஒவ்வொன்றாக அழித்த அரக்கர்கள் கண்ணில்பல்லாயிரம் கோடி 
புரளும் பால் வியாபாரம் உறுத்த ஆரம்பித்தது!பசுவை தெய்வம் என வணங்குவதாய் சொன்ன நாடு மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் பெற்றது யாருக்கும் முரணாகத் தெரியவில்லை!

கொஞ்சம் கொஞ்சமாக காளைகளின் உபயோகம் அற்றுப்போய்காளை வளர்ப்பு என்பது வருமானமற்ற செலவு என்றானது!

பசுக்கள் சினை பிடிக்க என்ன வழி?
இங்குதான் வேலை செய்தது அசுரர் மூளை!

ஜெர்ஸி காளைகளின் விந்தணுவை நம் நாட்டுப்பசுக்களுக்கு ஊசி மூலம் செலுத்திகொஞ்சம் கொஞ்சமாக நாட்டு மாட்டினத்தை அழிக்க ஆரம்பித்தார்கள்!
இதுபோக ஜெர்ஸி பசுக்களும் பால் அதிகம் தரும் என்ற பரப்புரையோடு இறக்குமதி ஆகின!

குட்டைத் தென்னைகுறுவை சாகுபடி என்று பாரம்பர்யம் மறந்த மக்கள் இதையும் சகஜமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துதங்கள் வீட்டு மகாலட்சுமிகளுக்கு வெள்ளைக்கார விந்தணுக்களை ஏற்றுவதை சுலபமாக அனுமதித்தனர்!

ஒரிசாவில் பாரம்பரிய மாட்டினம் முற்றாக அழிந்தது!
தமிழக மாட்டினங்களிலும் 90 சதவிகிதம் அழிந்தது!

"சரிஇதற்கும்சல்லிக்கட்டுக்கும்?"

"சம்பந்தம் இருக்கு தம்பி!"

காலை வளர்ப்புக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது
மேலும் அவற்றை வீரியமாய் வைத்திருக்க இந்த விளையாட்டுக்கள் தேவைப்பட்டன!

பிராய்லர் கோழிபோல் நின்ற இடத்தில் நின்றுகொண்டிருந்தால் அதில் என்ன வீரியம் இருக்கும்?

ஒரு ஆரோக்கியமாக காளைதன் ஆயுளில் ஆயிரக்கணக்கில் நாட்டு மாடுகளை பிறப்பிக்கக் காரணமானது!

விடுவார்களா வியாபாரிகள்?

ஆண்களே இல்லாத தேசத்துப் பெண்கள் எந்த வகையின் வம்சம் வளர்க்க?

காளைகளை காட்சிப் பட்டியலிலும்பசுவை வீட்டு விலங்கிலும் சேர்த்தார்கள்

இந்த முரண்கூட உறுத்தவில்லை அடிமை அரசியல்வாதிகளுக்கு!

ஆறு நாட்கள் அசையாமல் கூடிய இடத்திலெல்லாம் இன்னும்இன்னும் என்று வயது வரம்பின்றிக் கூட ஆரம்பித்தது மக்கள் வெள்ளம்!

ஒரு சிறு அசம்பாவிதமோசலசலப்போ இன்றிஒரு கூட்டுத் தலைமையில் குவிய ஆரம்பித்த மக்களைபேச்சுவார்த்தைக்கு 
அழைத்தது அரசு!

"பேச என்ன இருக்கிறதுகேட்டதைக் கொடு!  அமைதியாகக் கலைகிறோம்என்றது மக்கள் படை!

அதற்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதுபோல் ஒரு எழுச்சி ஏற்பட்டதைக் கேள்விப்பட்டிருந்த மத்திய அரசும்பிற மாநிலங்களும் மிரள ஆரம்பித்தன!

இது தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கட்சிகளும் விழித்துக்கொள்ள ஆரம்பித்தன!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விட இது வீரியமானது என்பதை அரசு உணர்ந்தது!
அதற்குப் பின்னால் ஒரு வலுவான அரசியல் கட்சி இருந்தது
ஆனால் இது தன்னெழுச்சியான கூட்டம்!

கட்டுக்கோப்பும்அஹிம்சையும் தங்கள் ஆயுதம் எனக்கொண்டு போராடிய மக்கள்பொதுமக்களுக்கு சிறு இடைஞ்சலும் இன்றி 
அறவழியில் போரைத் தொடரஅடிவயிறு கலங்க ஆரம்பித்தது மத்தியில் ஆண்ட அரசுக்கு!

அதுவரை தமிழகப் பிரதிநிதிகளை சந்திப்பதையே தவிர்த்த அரசர் மோடிகாலைநேரத்தில் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் குறித்தார்!

பிறகு?

"நீ போய் இட்லியைப் பார்
கவிதாவுடன் பேசிவிட்டு கதையைத் தொடர்கிறேன்!"

ஆத்மா சமையல்கட்டுக்குள் யோசனையோடு நுழையலேசாடிக் 
காலரில் கவிதாவை அழைத்தான் ரவி!

ஹோலோக்ராபிக் பிம்பமாய் சேரில் வந்து அமர்ந்தாள் கவிதா!

"எப்படி இருக்கிறாய் ரவி?"

"வீடு ஏன் இப்படி பசுமாடு கன்று போட்ட இடம்போல் கிடக்கிறது?"

"வந்ததும் குறை சொல்லாதே கவிதா?"

"வேறு என்ன செய்யட்டும் ரவிஉனக்கு இந்திய இளைஞர்களின் தேசிய வியாதி!

எப்படியாவது பணம் சேர்த்து அந்தப்பணத்தை என்ன செய்யப்போகிறாய் ரவி?

கல்யாணம் ஆகி என்னை முழுதாகப் பார்க்கும் நினைவுகூட இல்லாமல் ஓடிப்போனாய்!

எப்போது வருவாய் என்பது எனக்கும் தெரியாது

சத்தியமாக இளமையைத் தொலைத்தபின்தான் வரப்போகிறாய்!
அப்போது நாமிருவரும் கால் நீட்டிப்போட்டு பல்லாங்குழியும் பரமபதமும் விளையாடலாம்!"

"கவிதாநம் நன்மைக்கு ..."

"எது நம் நன்மை ரவி?

இப்படி வாழும் காலத்தில் பிரிந்து இருப்பதா?

நான் வேண்டுமானால்உங்கள் மாடுகளைப்போல ஒரு 
வெள்ளைக்காரன் விந்தணுவை ஏற்றி பிள்ளை பெற்றுக்கொள்ளவா?"

"வதைக்காதே கவிதா
இந்தமுறை விடுமுறையில் வந்தால் அங்கேயே தங்கிவிடுகிறேன்."

"அதை நீ செய்யாவிட்டால்உன்னை விவாகரத்து செய்துவிட்டு ஆத்மாவைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்!

ஹாய் ஆத்மாஇப்போதே இந்தியாவுக்கு வந்துவிடுகிறாயா?

அங்கேயே தங்குவதாக இருந்தால்இந்த முட்டாள் துரதிர்ஷ்டசாலியை 
விவாகரத்து செய்துவிட்டு உனக்கு நூறு பிள்ளைகள் பெற்றுக்கொடுக்கிறேன்!

இன்னும் அதிக சேதாரம் ஆகாமல்தான் இருக்கிறேன்!"

"ஹாஹா நீ என்ன காந்தாரியா கவிதாஎனக்கு என்  அத்தை மகள் 
காத்திருக்கிறாள்!"

"நீயாவது கல்யாணத்திற்குப்பிறகு அங்கேயே இருந்து வாழ்க்கையையும் வம்சவிருத்தியையும் பார்!"

"சரிநான் கிளம்புகிறேன் ரவி!
நெற்றியைக்காட்டு ஒரு காற்று முத்தம் தருகிறேன்!"

"வருகிறேன் ஆத்மா!"

சிரித்துக்கொண்டேஇட்லி தட்டோடு வந்து உட்கார்ந்த ஆத்மா
"கதை சுவாரஸ்யமாக இருக்கிறது ரவிமேலே சொல்!"

"அதற்குப்பின் நடந்தவை எல்லாமே அப்பட்டமான அரசியல்!-

சல்லிக்கட்டுக்கு மாநில அரசு ஒரு அவசரச்சட்டம் கொண்டுவந்து தற்காலிகமாக வாயை அடைப்பது என்று முடிவானது!

இதை ஏன் இத்தனைநாள் செய்யவில்லை என்ற எளிய கேள்விக்கு பதில் சொல்ல அரசுக்குத் திராணியில்லை!

ஒரு நாட்டின் பிரதமரும், முதல்வரும் அளித்த வாக்குறுதியை இளைஞர் கூட்டம் நம்பமறுத்தது ஒன்று போதும் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கைச் சீர்கேடு!

ஆரம்பத்திலிருந்தே எத்தக் கட்சியையும் உள்ளேவிடாத இளைஞர்கள், 
கூட்டுத் தலைமை என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஆரம்பத்திலிருந்து இதற்குப் போராடிய சிலரைத் தங்கள் பிரதிநிதிகளாய் முன்னிருத்திய ஒரு சின்ன சறுக்கலை அரசு மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது!

இந்த வெற்றி இளைஞர்களுடையது
அதில் தங்களுக்கு எந்தப் பங்குமில்லை என்பதை எந்த அரசியல் கட்சியாலுமே ஜீரணிக்கமுடியவில்லை

முதலில், கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் உள்ளனர் என்ற அபத்த வாதத்தை முன்வைத்தனர்!

கூடிய லட்சக்கணக்கானோரும் கட்சி சார்பற்றவர்களா அல்லது ஆளும் கட்சியினர் மட்டும் கூடி அரசை எதிர்த்தார்களா என்ற எளிய கேள்வியில் அது அடிபட்டது!

அடுத்தபடியாக, அப்போதைய பிரதமரையும் தற்காலிக முதல்வரையும் விமர்சித்துக் கோஷம் போடுகிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள்!
ஆள்பவர்களைத்தானே கேள்வி கேட்கமுடியும் என்றால் ஆண்டவர்களை ஏன் கேட்கவில்லை என்று பெட்டை நியாயம் பேசினார்கள்!

அதுவும் எடுபடாத நிலையில், மத்தியிலும் மற்ற மாநிலங்களிலும் எப்போதுமே வியாபாரமாகும் மதவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

ராமர் கோவில் கட்டுவோம் என்பவர்கள் எங்கோ ஓரத்தில் ஒருவர் பிரிவினை பேசினார் என்று, இளைஞர்கள் தங்கள் பிரதிநிதி என்று முன்வைத்தவரை ஒரு இளைஞரை வைத்தே அதைச் சொல்லவைத்தனர்!

என்ன காரணத்தாலோ, முந்தையநாள் தான் கோவையில் பேசியதற்கு நேர்மாறாக எந்தவித ஆதாரமும் இன்றி எங்கோ நடந்ததாய்ச் சொன்னதை போராட்டத்தின் மொத்த நோக்கம்போல் பூதாகரமாக ஊதிக்காட்டி, தான் விலகுவதாக அறிவித்தார்!

ஆளுங்கட்சி விளம்பரத்திற்கும் அன்றாடப் பரபரப்புக்கும் ஆளாய்ப் பறக்கும் ஊடகங்கள் அதை திரும்பத்திரும்ப ஒளிபரப்பி முதல் குழப்ப விதையை விதைக்க இளைஞர் பட்டாளம் திகைத்துத் தடுமாறியது!

இந்தப்போராட்டம் வெற்றிகரமாக, களங்கமின்றி முடிவது தங்கள் எதிர்காலத்திற்கு நல்லதில்லை என்பதை உணர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ரகசியமாய் கைகோர்த்தன!

நாளை இதுபோல் ஊழலுக்கு எதிராக போராட அழைத்தால், இப்படிக் குடும்பம் குடும்பமாகக் கூடுவது தங்கள் அஸ்திவாரத்தையே அசைக்கும் என்பது புரியாத முட்டாள்களா அவர்கள்!

எனவே ரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டன

கட்சிப்பாகுபாடின்றித் தாங்கள் நடத்தும் சிலமணிநேரக் கூட்டங்களிலேயே அந்த இடங்கள் பன்றிப்பண்ணை இருந்த இடம்போலாவதும், அந்த வட்டாரத்திலிருக்கும் சாராயக் கடைகள் சாதனை விற்பனை புரிவதும் பார்த்தே பழகிப்போன அரசியல்வியாதிகள்,

அதுபோல் நூறுமடங்கு கூட்டம் ஆறுநாள் முழுக்க அசையாதிருந்த இடம் கோவிலைப்போல சுத்தமாக இருந்ததும், சாராயக்கடைகளின் விற்பனை பாதாளத்தில் சரிந்ததும் கண்டு தலை சுற்றித்  தவித்தன!

குள்ளநரிகள் கூடிப்பேசின!

ஏழாம்நாள் அதிகாலை நேரத்தில் இளைஞர்களை வலுக்கட்டாயமாக வெளியேற வைத்தது காவல்துறை!

காரணமே இன்றி, காவல்துறை வன்முறைப்பாதையில் திரும்புவதுகண்டு வெள்ளந்தி இளைஞர் படை தாற்காலிகமாகப் பின்வாங்கியது!

ஒரு காந்தியையே தாங்காத அரசியல்வாதிகள், கோடிக்கணக்கான காந்தியவாதிகளைக் கண்டு கர்ப்பம் கலங்கினார்கள்!

கூட்டம் பெருமளவு கரைந்ததும், தங்கள் ஏவல் நாய்களை ஏவிவிட்டன அரசியல் கட்சிகள்!
காக்கிச்சட்டை போட்ட ரவுடிகளும், கரைவேட்டிப் பொறுக்கிகளும் வெறியோடு வன்முறை விதைத்தன!

காவல்துறையே தேடித்தேடித் தீ வைப்பதையும், கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்குவதையும் வேதனையோடும் கண்ணீரோடும் திகைத்துப் பார்த்தது இளைஞர் படை!

இளைஞர்களுக்கு ஆபத்தில் உதவிய மீனவர் குடும்பங்களை அழித்து வெறியாட்டம் போட்டது ஏவல்துறை!

தங்கள் திட்டம் பலித்தது என்று ரகசியமாய் கூத்தாடின அரசியல் கட்சிகள்!

ஆறு நாட்கள் லட்சக்கணக்கில் கூடியிருந்தபோது சிறு சலசலப்பும் இல்லது அறவழி நின்ற இளைஞர் கூட்டம் வன்முறையில் ஈடுபடுவதாய் அபத்தமாகப் புரிந்துகொண்ட நடுநிலைகளும் சித்திக்க மறந்து அறிவுரைகளை அள்ளி வீசி அமைதி காத்தன!

“சரி, இந்தப் போராட்டத்தை வரலாறு எப்படிப்பதிவு செய்தது?”

“சிப்பாய்க் கலகத்தின் ஆரம்ப வித்து வேலூரில் விழுந்ததை பதிவே செய்யாத வடஇந்திய வரலாற்று வல்லுநர்கள் இதைத் தோல்வி என்றே பதிவிட்டன!”

“அதன்பிறகு இதுபோல் ஏதாவது போராட்டம் நடந்ததா?”

“பொறு தம்பி! இதுவே என் கொள்ளுத்தாத்தா அப்போது பிரபலமாக இருந்த ட்விட்டர் ஊடகத்தில் பதிவிட்டதோடு என்றும் மறையாத அச்சு ஊடகத்தில் எடுத்து வைத்ததால் தெரிந்தது!

இதற்குப்பின் இதுபோல் ஏதும் அறப்போர் நடந்ததா என்பதை அறிந்து சொல்கிறேன்!

ஆனால், இது பற்றி என் கொள்ளுத்தாத்தா தன் மகளிடம் சொன்னதை அவர் வார்த்தைகளிலேயே சொல்லிக் கதையை முடிக்கிறேன்!

“அந்த அறப்போர் வெற்றியா இல்லையா என்பதைவிட
இதில் உயர்ந்தவர் யார் என்பதுதான் பெரிய விஷயம்!

ஆறுநாட்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தும் ஒரு சிறிய அசம்பாவிதமும் இல்லாமல் போராடிய அனைவருமா?

அல்லது தங்கள் வீட்டுப்பெண்ணை தனியே அனுப்பிய பெற்றோரா?

அதைவிட மிக உயர்வாய் அந்த நம்பிக்கைக்கு சிறிதும் களங்கம் வராது காத்த இளமைப் பட்டாளமா!”

எல்லாத் தகப்பனுக்கும் வரும் ஒரு கவலை எனக்கும் உண்டு!

நாளுக்குநாள் மோசமாகும் சமுதாயம், சினிமா, ரசிகர் சண்டை, கெட்ட வார்த்தைகள் என்று சீரழியும் அடுத்த தலைமுறையை நம்பியா என் குழந்தைகளை விட்டுச் செல்கிறேன் என்பது!

இந்த ஆறு நாட்கள் அனுபவத்துக்குப் பின் இப்படி ஒரு உயர்வான தலைமுறையை நம்பி விட்டுச் செல்வது எனில்,
நாளையே நிம்மதியாகக் கண்ணை மூடுவேன்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக