வியாழன், 23 பிப்ரவரி, 2017

குமாரும் சிகப்பு ரோஜாக்களும்!குமாரும் ராஜேஸ்வரி மிஸ்ஸும்!
எங்கள் பள்ளியில் குமாரை அடையாளம் கண்டுபிடிப்பது வெகு சுலபம்!

நண்டும் சிண்டுமாக ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களில் பத்தாவது படிக்கற பையன் மாதிரி வளர்த்தி!

எந்தக் கூட்டத்திலும் அவன் தலை தனியாகத் தெரியும்!

“மிஸ், மறைக்கிது மிஸ்!” இது ப்ரேயர்ல இருந்து க்ளாஸ் ரூம் வரைக்கும் கேட்கும் குரல்!

குமார் ஒருதரம் திரும்பி முறைத்தால் சட்டென்று வந்த குரல் அடங்கிவிடும்!

அவன் என்னடான்னு கொஞ்சம் சத்தமாகக் கேட்டால்,  கேட்ட பையனோ பெண்ணோ காலோடு மூத்திரம் போய்விடுவது சாதாரண நிகழ்வு!

மாமா சைஸில் இருந்துக்கிட்டு, அவன் டிராயர் போட்டுக்க்கிட்டு வருவது சில டீச்சர்களுக்கே கொஞ்சம் சங்கோஜமா இருக்கும்!

அதுவும் ஜெயா டீச்சருக்கு அவனைப் பார்த்தாலே கொஞ்சம் உதறல்தான்!

பள்ளிக்கூடம் முடித்து நேராக டீச்சர் வேலைக்கு வந்ததால் இவனைப் பார்க்கும்போதே கொஞ்சம் வெட்கமும் பயமுமாக நகர்ந்துவிடுவார்!

இத்தனைக்கும் அவனுக்கு வயது பத்தோ பதினொன்றோதான்!
ஏதோ ஹார்மோன் கோளாறு!

ரொம்பநாள் குழந்தை இல்லை என்று தவமாய் தவமிருந்த ராமசாமிக்கவுண்டரின் ஒரே சீமந்த புத்திரன்!

பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பால் போதாமல் பிள்ளை அழ, கண்பட்டுப்போகும் என்று வீட்டுக்குள் தூக்கிப்போய் ஒரு டம்ளர் பசும்பாலை சங்கில் புகட்டி திண்ணைக்கு வந்த பத்தாவது நிமிஷம் மறுபடி அழுகை!

மாமியார்க்கிழவி வேறு, “காலாகாலத்தில் பெற்றுக்கொள்ளாட்டாலும் தப்பிப்பிறந்த பிள்ளைக்கு ஒழுங்கா பால் கொடுக்கக்கூட துப்பில்லை” ன்னு மோவாயை இடித்துக்கொண்டு போகும்!

ஆறுமாசக் குழந்தை அலட்சியமாய் ஒரு லிட்டர் பால் ஒரு நாளில் குடிப்பது என்ன விதமான மாயம்ன்னு புரியாமலே கொஞ்சநாள் கிழவிக்கும் மருமகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது,

ஒரு நாள் கவுண்டர் ராத்திரி கொஞ்சம் எசகு பிசகாக பெண்டாட்டியோடு இருந்தபோது அவன் கத்திக் கூப்பாடு போட்டபோதுதான் அவருக்கே தெரிந்தது!

“சனியனே, பிள்ளைக்கு ஒழுங்கா பாலைக் கொடுக்காம அப்படி என்னடி புடுங்கிக்கிட்டிருந்தே” ன்னு வேலை கெட்டுப்போன கோபத்தில் கத்தியபோது, வராண்டாவில் படுத்திருந்த கிழவிதான் சொன்னாள்!
“இந்தப்பிள்ளைக்கு ஒரு மாட்டுப்பால் முழுசும் காணாதுடா ராமு!”

மறுநாள் காலைல ஆத்தாளும் பெண்டாட்டியும் மாறிமாறிச் சொன்ன கதையைக் கேட்டு, உடனே வண்டி கட்டச்சொல்லி சென்னிமலை கம்பவுண்டர்கிட்ட பையனை தூக்கிக்கிட்டுப் போனாங்க!

அப்போ சென்னிமலைல பெரிய டாக்டர் அந்த கம்பவுண்டர்தான்!
யார் கூப்பிட்டாலும் வீட்டுக்கே வருவார்!

உடம்புக்கு என்னவாக இருந்தாலும் ஒரு ஊசி நிச்சயம்!

அப்புறம் அவுன்ஸ் கிளாசில் அளந்து மிக்ஸர்ன்னு அப்போ சொல்லும் ஒரு மருந்து!
ஆரஞ்சுக்கலர்ல, பெப்பர்மிண்ட், பஞ்சுமிட்டாய், துளசி,  ஓமத்திராவகம் இப்படி எதை நினைக்கிறோமோ அந்த வாசம் அடிக்கும்!

எனக்கு சும்மாவே அது ரொம்பப்பிடிக்கும்!
ஒருமாதிரி நாக்கில் சுறுசுறுன்னு இருக்கும்!

யார் வீட்டில் மிக்ஸர் பாட்டிலைப் பார்த்தாலும் எடுத்து வாய் எடுக்காம ஒட்டக் குடிச்சுட்டு ஓடிப்போய்விடுவேன்!
ரெண்டுதடவை அதிகமா மூச்சா போகுமே தவிர வேற ஒன்னும் பண்ணாது!

இது எப்படி சர்வரோக நிவாரணி மாதிரி எல்லா நோயையும் தீர்க்கும்ன்னு யாரும் கேட்டதில்லை!
ரெண்டு கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சுக்கிட்டு வந்து ஊசியும் போட்டு ஒத்தை ரூபாய் வாங்கிக்கிட்டுப் போறவரை யாருக்குத்தான் கேள்வி கேட்க மனசு வரும்!

அவர் ஸ்டெதாஸ்க்கோப்பை குழந்தை வயிற்றில் வைத்துப்பார்த்துவிட்டு,
"கொழந்தை ஏதோ பயந்திருக்கிறான்!
பிராட்டியம்மன் கோவில் போறவழியில கோரிக்குப்போய் பாய்கிட்ட மந்திரிச்சுக்கிட்டு போங்க!"

கவுண்டருக்கு சொல்லணுமா என்ன!
பாய்கிட்ட மந்திரிச்சுக்கிட்டு வந்த மறுநாளே,
முனியப்பனுக்கு கிடா, காளியாத்தாளுக்கு சேவல், முருகனுக்கு பொங்கல்ன்னு மாத்திமாத்தி ஒரு மாசம் சைவமும் அசைவமுமா ஊரையே புரட்டி எடுத்துட்டார்!

கம்பவுண்டருக்குத்தான் பாவம் வீடு வீடாப்போய் மிக்ஸர் கொடுத்து மாளலை!

இதில் அவர் வயித்தால போகுதுன்னு யாருக்கும் சொல்லாம ஈரோடு போய் டாக்டர்கிட்ட ஊசி போட்டுக்கிட்டு வந்தது தனிக்கதை!

இந்தக் களேபரத்துனால ஊருக்குள்ள கவுச்சி வெலை கொறைஞ்சதும், குமார் ரெண்டுமாட்டுப் பால் குடிச்சும் அழ ஆரம்பிச்சதும்தான் மிச்சம்!

இது கிடா வெட்டியோ, மந்திரிச்சோ, பரிகாரம் செய்தோ தீரும் விஷயம் இல்லைன்னு புரியறதுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு
மூணு வயசு வரை தாய்ப்பால் போஷாக்கு, கூடவே கண்ணில் பட்டது எல்லாம் கபளீகரம்!

நாலு வயசுல பள்ளிக்கூடத்தில் சேர்த்த வந்தபோது, தலைமை ஆசிரியர் இது தொடக்கப்பள்ளி, ஹைஸ்கூல் சென்னிமலைல இருக்குன்னு சொல்லி கவுண்டர்கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்ட வசவு ஏழு தலைமுறைக்குப் போதும்!

படிப்பை விடுங்க!
கெடக்கற சொத்துக்கு படிப்பு மாட்டுக்குக் கோவணம் போல தேவையில்லாத விஷயம்!

நாலு பசங்களோட பழகட்டும்ன்னு கொண்டுவந்து விட்டதா சொன்னாலும், வீட்டில் இருந்தால் சாப்பிட்டுக்கிட்டே இருக்கிறான் என்பதுதான் முக்கிய காரணம்!

குமார்கிட்ட ஒரு நல்ல விஷயம்! கண் பார்த்ததை கை செய்யும்!

தென்னம் ஓலையைக் கிழித்து அவன் செய்யும் விசில், கிளி, கிளுகிளுப்பை எல்லாமே அழகு கொஞ்சும்!
ஆறு வயசுப் பையன் செய்ததுன்னா யாருமே நம்ப மாட்டாங்க!

ஆனா சகிக்கவே முடியாத ஒரு கெட்டபழக்கம் - பொஸசிவ்னெஸ்!

அவனுக்கு யாரைப் பிடிச்சிருந்தாலும் அவங்களோட வேற யாரும் பேசக்கூடாது என்பதைவிட, அவர்கள் வேறு யார்கூடப் பேசினாலும் மண்டை வீங்கற அளவுக்கு கொட்டிவெச்சுருவான்!

அவன் க்ளாஸ்ல லட்சுமி, சரவணன், மணி, இவங்க மூணு பேரும் அவனுக்கு அப்படிப்பட்ட கொத்தடிமைக!
வீட்டிலிருந்து முறுக்கு, கடலை மிட்டாய் எல்லாம் கொண்டுவந்து பாசமா கொடுப்பான்!
 ஆனா அந்த மூணுபேரும் இவனைத்தவிர வேற யாருகிட்டயும் சிரிச்சுப் பேசறது பார்த்தால் அறையோ குட்டோ நிச்சயம்!
அவங்களும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கக்கூடாது!

கவுண்டச்சி ஒருநாள் கவுண்டர்கிட்ட சிரிச்சுப் பேசி ஆறு பல்லு பதிஞ்சு ரத்தமா வர்ற அளவுக்கு ஒரு கடி வாங்குன தழும்பு இன்னும் கன்னத்துல இருக்கு!

எப்படியோ இவனை ஹைஸ்கூலுக்கு துரத்திவிட்டால் போதும்ன்னு ஸ்கூல்ல எல்லோருக்குமே ஆசை!
ஆனா கவுண்டர் நாலாம் வகுப்புல வேணும்னே ஃபெயில் ஆக்கிவிடச் சொல்லிட்டாரு!
அவ்வளவு தூரம் போற அளவுக்கு அவனுக்கு இன்னும் வயசாகலைன்னு காரணம்!
இத்தனைக்கும் பண்ணையாள் ஒருத்தன் சைக்கிள்லதான் கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு கூட்டிக்கிட்டுப் போவான்!

அவன் அஞ்சாம் வகுப்பு வந்தபோதுதான் பிரச்னை ஆரம்பித்தது!

ரெண்டு செக்சனுக்கும் லேடி டீச்சருங்கதான்!
ஒன்னு, ஜெயா டீச்சர்! இன்னொன்னு ராஜேஸ்வரி மிஸ்!

ஜெயா டீச்சர் ஹெச் எம்கிட்ட கண்ணீர்விட்டு அழுது தப்பிச்சுட்டாங்க!

ராஜேஸ்வரி மிஸ் ஒருமாதிரி கேயார்விஜயா சாயல்!
 கொஞ்சம் ஸ்டைல் அடிச்சுக்கிட்டு, காதோரம் ரோஜாப்பூ எல்லாம் வெச்சுக்கிட்டு ஒரு சைஸாதான் வருவாங்க!

குமாருக்கு  கிளாசுக்கு வந்ததுமே அவங்களை ரொம்ப பிடிச்சுப்போச்சு!
வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே இருப்பான்!

ஒருதடவை ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனான்னு ரேவதிக்கு மிஸ் ஒரு முத்தம் கொடுத்ததுக்கு அன்னைக்கு முழுக்க பல்லைக் கடிச்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தான்!

சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது பின்னாடி இருந்து ஒரே தள்ளு, ரேவதிக்கு முன்னாடி பல்லு ரெண்டும் ஒடைஞ்சு பத்துநாள் பள்ளிக்கூடத்துக்கே வரலை!

மறுநாள் டீச்சர் சேர் முழுக்க இங்க்!
அன்னைக்கு ஹெச் எம்கிட்ட வாங்குன அடிக்கு வேற பையனா இருந்தா செத்தே போயிருப்பான்!
கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வராம அசையாம நின்னான்!

ஒருவாரம் மிஸ் அவன் பக்கமே திரும்பலை!

கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சகஜம் ஆனபோதுதான், தேவகிரி தியேட்டர்ல சிகப்பு ரோஜாக்கள் படம் பார்க்க கவுண்டர் குடும்பத்தோட போனாரு!

எங்க ஊருக்கு ரீல் எல்லாம் தேய்ஞ்சு கீறல் விழுந்ததுக்கு அப்புறம்தான் படமே வரும்
அப்போ என்னவோ புதுப்படம் வந்ததுல தேர்க் கூட்டம்!

படம் பார்த்துட்டு வந்ததுல இருந்து குமார் ஏனோ ரொம்ப அமைதி ஆயிட்டான்! ஆனா, ராஜேஸ்வரி டீச்சரைப் பார்க்கும் பார்வைல ஏதோ வித்தியாசம் எங்களுக்கே தெரிஞ்சது!

என்னேரமும் எந்தப்பக்கம் போனாலும் அவங்களையே பார்த்துக்கிட்டே இருந்தவன், ஒருநாள், தென்னங்கீத்தை கிழிச்சு அழகா ஒரு பூ செஞ்சு அவங்களுக்கு கொடுத்தான்!

டீச்சர் சிரிச்சுக்கிட்டே அவன் கன்னத்தை தட்டிக் கொடுத்துட்டு வாங்கிக்கிட்டாங்க!

மறுநாள்தான் அந்த விபரீதம் நடந்தது!

நடந்துக்கிட்டே பாடம் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தாங்க டீச்சர்!

அதை விதின்னுதான் சொல்லணும்!
கரெக்ட்டா மூணாவது பெஞ்சைத் தாண்டும்போது குமார் காலுக்குப் பக்கத்துல விழுந்தது அவர் தலைல வெச்சிருந்த ரோஜாப்பூ!

குனிஞ்சு அதை எடுத்த குமார், அதுக்கு சத்தமா ஒரு முத்தம் கொடுத்துட்டு, சட்டை பாக்கெட்ல வைக்கப் போனான்!

மொத்த க்ளாஸும் ஓன்னு சத்தம் போட்டு சிரிக்க, மிஸ்ஸுக்கு மூஞ்சியெல்லாம் செவந்துபோச்சு!

அவங்க வந்து வலுக்கட்டாயமா அந்தப்பூவை அவன் பாக்கெட்டிலிருந்து எடுக்க
குமார் எந்திருச்சு பிடுங்கப்போக
மிஸ் நிலை தடுமாறி கீழே விழ
குமார் அவங்கமேல ஏறி அந்தப் பூவைப் பறிக்கும் மூர்க்கத்தில் அவங்கமேல விழ
ஒரு ரசாபாசமான நிலைல மிஸ்ஸோட ரெண்டுதடவை உருண்டு
எப்படி நடந்தது என்றே புரியாமல் மிஸ்ஸோட ப்ளவ்ஸ் தோள்பட்டைல கிழிஞ்சுடுச்சு!

மொத்த வகுப்பும் அப்படியே உறைஞ்சுபோய் உட்கார்ந்திருக்க, மிஸ் அழுதுக்கிட்டே ஓடிப்போய்ட்டாங்க!

ஒரு நிமிஷம் நிதானிச்ச குமார் ஒரே ஓட்டமா ரோட்டுக்கு ஓடிட்டான்!

மறுநாள் காலைல பாவடிக் கிணத்தில் மிதந்த குமாரை எடுத்தபோது, இறுக்கி மூடியிருந்த அவன் கைவிரல்களுக்குள் அந்த ரோஜா!


இதில் இன்னைக்கு வரைக்கும் நம்பமுடியாமல் உறுத்திக்கிட்டே இருக்கற ஒரு விஷயம், குமாருக்கு ரொம்ப நல்லா நீச்சல் தெரியும்ங்கறதுதான்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக