“டேய்
பரதேசி! கிழட்டுநாயே!”
பாஸ்கரின்
ஓங்கிய கையைப்பார்த்து பயந்து பதறி விழித்த ராஜு சித்தப்பா அப்படியே ரெண்டு கையையும் முகத்துக்குமுன் வைத்துத் தடுத்துக்கொண்டு தரையில் சரிந்து உட்கார்ந்தார்!
அந்தக்
கண்களில் தெரிந்த பயமும், மிரட்சியும் பாஸ்கரையே ஒரு நிமிடம் தடுமாற வைத்தது!
குளிக்க
முரண்டும் குழந்தையை இழுப்பதுபோல, அப்படியே தரையோடு இழுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்!
யார்
வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைக்கூடப் பார்க்காமல், அப்படியே கழுத்தோடு சேர்த்து லிஃப்டுக்குள் தள்ளி, கதவை சார்த்திக்கொள்ளும்வரைக்கும்
மைதிலி வெளியே வரவே இல்லை!
எப்படி
வருவாள்?
இந்தக்கிழம்
செய்துவைத்திருக்கும்
காரியம் அப்படி!
நினைக்க
நினைக்க அவரை அப்படியே அறைந்து கொன்றுவிடலாம் என்று தோன்றியதை அடக்கமுடியாமல் லிஃப்ட் சுவரில் கையை ஓங்கி அறைந்தான்!
மைதிலி
மட்டுமல்ல, இனி தானும் எப்படி இந்த அபார்ட்மெண்ட்டில் மற்றவர்கள் முகத்தில் விழிப்பது?
பார்த்துப்பார்த்து
வாங்கிய வீடு!
வாங்கி
ஒரு வருடத்தில் அத்தனைபேரோடும் நல்ல நட்பு!
போனமாதம்
நடந்த அசோசியேஷன் மீட்டிங்கில்தான் செகரட்டரி போஸ்ட்க்கு போட்டியில்லாமல் தேர்வானான்!
இன்றைக்கு
வந்து காரை நிறுத்தி அவசர அவசரமாக இறங்கி மூன்றாவது மாடிக்கு விரைந்தபோது சேஷாத்ரி காணாததுபோல் ஒதுங்கிப்போனது சுருக்கென்றது!
காரணம், ராஜு
சித்தப்பா!
ஆத்திரம்
அடங்காமல் நேராக வண்டியை கோயம்பேட்டில் நிறுத்தி,
“இறங்கு”
என்று உறுமினான்!
சீட்டோடு
ஒட்டி உட்கார்ந்துகொண்டு, இறங்க மறுத்துக் கைகூப்பியவரை, கையைப்பிடித்து
வெளியே இழுத்து, கதவை அறைந்து சார்த்தினான்!
கைப்பிடியாய்
இழுத்துப்போய், சேலம் போகும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, கண்டக்டரிடம் வாங்கிய சீட்டோடு வேண்டாவெறுப்பாய் இரண்டு ஐநூறு, கொஞ்சம் நூறு ரூபாயை அவர் பாக்கெட்டில் திணித்துவிட்டு, கண்டக்டரிடம் தனியே ஒரு நூறு ரூபாயைக்கொடுத்துவிட்டு, சேலம் வரை வழியில் எங்கும் அவர் இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்து காரில் உட்கார்ந்து படபடப்பு அடங்க ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான்!
பத்தே பத்து
நாள்!
என்னவெல்லாம் நடந்துவிட்டது!
ஆனால்,
மைதிலி அப்போதே சொன்னாள்!
இன்றைக்கு
ராஜு சித்தப்பாவுக்கு ஓங்கிய அதே கையைத்தான் அன்றைக்கு அவளுக்கும் ஓங்கினான்!
இத்தனைக்கும்
காரணம் ரவி!
அந்த
நாய்தான் இவரை கூட்டிக்கொடு வந்து அந்த அதிகாலையில் காலிங் பெல்லை அடித்தான்!
கதவைத்
திறந்தவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை!
ரவி,
பின்னால், அது யார், ராஜு சித்தப்பாவா!
என்ன
இப்படி இளைத்துப் போய்விட்டார்!
எப்போதும்
தும்பைப்பூ போல வெளுத்த கதர் சட்டை, அழுக்குப்படாத வெள்ளை வேஷ்டியில் ஒரு மைனரைப்போல் வலம்வருபவரா இப்படி அழுக்கு வேட்டியும், கசங்கிய சட்டையுமாய்?
“உள்ளே
வா ரவி”, என்று வழிவிட்டு ஒதுங்கியவன், தயங்கி நின்ற சித்தப்பாவை பாய்ந்து கட்டிக்கொண்டான்!
இதோ,
சரியாக பத்து நாளில், அடிக்காத குறையாக பஸ் ஏற்றியாகிவிட்டது!
“மைது,
யார் வந்திருக்கா பாரு,”
குரல்
கேட்டு வெளியே வந்தவள், "வாங்கண்ணா" ன்னு ரவியைக் கேட்டுக்கொண்டே, “சித்தப்பா!” என்று
தாவி வந்து அவரைக் கட்டிக்கொண்டாள்!
உண்மையில்
அவர் மைதிலிக்குத்தான் சுற்றி வளைத்து சித்தப்பா முறை.
ஆனால்
மொத்த ஊருமே அவரை சித்தப்பான்னுதான் கூப்பிடும்!
பாண்டமங்கலத்தில்
அவர் அத்தனை ஃபேமஸ்!
வயது
ஐம்பதை நெருங்கினாலும் ஏனோ கல்யாணம் செய்துகொள்ளாமலே காலத்தை ஒட்டிவிட்டவர்!
ஏதோ,
காதல் தோல்வி விவகாரத்தில் இப்படி பிரம்மச்சாரியாகவே வாழ்ந்துவிட்டார் என்று சொல்லுவார்கள்!
அதைப்பற்றிக்
கேட்டால், எப்போதும் ஒரு புன்னகைதான் பதில்!
பாகப்பிரிவினையில்
கிடைத்த இருபது ஏக்கரையும் குத்தகைக்கு விட்டுவிட்டு, வீட்டை ஒட்டியே ஒரு சின்ன மளிகைக்கடை வைத்துக்கொண்டு நிம்மதியான வாழ்க்கை!
தானே
பொங்கியதை சாப்பிட்டுக்கொண்டு, என்னேரமும் இளவட்டப் பசங்களோடு அரட்டை, சாயங்காலம் அப்படியே காலாற ஒரு நடை!
முக்கு
டீக்கடையில் மிக்ஸர் டீயோடு உட்கார்ந்து அரசியல் பேச்சு!
இதுதான்
அவருடைய ருட்டீன்!
பாஸ்கரோடு
காதல் விஷயம் மாணிக்கத்துக்குத் தெரியவந்தபோது, மைதிலி இவர் காலில் விழுந்துதான் அழுதாள்!
“அவர்
இல்லாட்டி நான் செத்துடுவேன் சித்தப்பா!”
“வா
பாப்பா நான் அண்ணனோட பேசறேன்!”
படியேறி
வந்து பேசியவரை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தார் மாணிக்கம்!
“இன்னும்
உனக்கு இந்த சாதி கெட்ட புத்தி போகலையா?
உன்னை
மாதிரி என் மகளும் கல்யாணம் ஆகாமலே கிடந்தாலும் கிடக்கட்டும்! அந்த ஈன சாதிப்பயலுக்கு பரிஞ்சுக்கிட்டு
இன்னொருதடவை படியேறுனா சொந்த
சாதி, பங்காளின்னு பார்க்காம வெட்டி வாய்க்கால்ல வீசீறுவேன் நாயே!”
சொன்ன
மாதிரிதான் ஆச்சு!
அவசர
அவசரமா அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, சித்தப்பாதான் ரெண்டுபேரையும் ஒரு ராத்திரியில் ஊரைவிட்டு அனுப்பிவைத்தார்!
சும்மா
அனுப்பவில்லை, கையில் ஒரு லட்ச ரூபாய் – “என் மகளுக்கு சீதனம்” - கொடுத்துதான் அனுப்பினார்!
மறுநாள்
கருக்கலில் ரெண்டுபேரையும் காணாத மாணிக்கம், உண்மையிலேயே ராஜூவை வெட்டி மாரியம்மன் கோவில் சுவற்றோரம் வீசிவிட்டார்!
மூணு
மாசம் ஆஸ்பத்திரியில் கிடந்து மறுபிறவி எடுத்துவந்தார் சித்தப்பா, முகத்தின் குறுக்கே ஒரு வெட்டுத் தழும்போடு!
மாணிக்கம்
அண்ணனையும் விட்டுக்கொடுக்காமல்,
தன்னை வெட்டியது அவரில்லை என்று கோர்ட்டில் சாட்சி சொல்லி கேஸே இல்லாமல் செய்துவிட்டார்!
அது
ஆகிவிட்டது ஒரு ஆறு வருடம்!
இன்னும்
இருவரும் ஊர் மண்ணை மிதிக்கமுடியவில்லை!
“எங்கேயோ
நாசமாமாகப் போகட்டும் அந்த நாய்கள்!
இந்த
ஊர் மண்ணை மிதித்தால் சாவு” என் கையால்தான் என்று உறுதியோடு இருந்தார் மாணிக்கம்!
அம்மா
செத்ததுக்குக்கூட மைதிலி போகவில்லை!
மாணிக்கம்
சொன்னதைச் செய்வார் என்ற பயம்!
ரவி
ஒருவனோடுதான் ஊர்த் தொடர்பு!
அவனும்
நாலு வருஷம் முன்பு பெண்குழந்தை பிறந்தபோது பார்க்க வந்ததோடு சரி!
இதோ,
நாலு வருடம்
கழித்து சித்தப்பாவோடு வந்து நிற்கிறான்!
“சொல்லு
ரவி, என்ன திடீர்ன்னு?”
“இல்லை பாஸ்கர்.
சித்தப்பாவுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி நினைவு தப்பிவிடுகிறது!
காலம்
மறந்து பழைய நாட்களுக்குள் போய்விடுகிறார்!”
“தான்
பண்ணையில் வேலை பார்த்த லட்சுமியைக் காதலித்ததை இத்தனை வருடம் கழித்துக் கதை கதையாய்ப் பேசுபவர், இந்த ஒரு மாசமா எனக்கு என் பொண்ணைப் பார்க்கணும்ன்னு ஒரே புலம்பல்!
நேத்து,
யாருக்கும் தெரியாமல் பஸ் ஏறி சேலம் வரைக்கும் போனவரை எதேச்சையாய் பாபு பார்த்து வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போய் எனக்கு போன் பண்ணுனான்!
சரி,
கொஞ்சநாள் இங்கு இருக்கட்டும்ன்னு கூட்டிக்கிட்டு வந்தேன்!”
“உனக்கு
ஒன்னும் ஆட்சேபணை இல்லையே?”
“என்ன
ரவி, இப்படிக் கேட்டுட்டே, நாங்க வாழற வாழ்க்கையே அவர் போட்ட பிச்சைதானே!”
பேச்சு
சத்தம் கேட்டு எழுந்து வந்த ரேஷ்மியை தாவிப்பிடித்துக் கட்டிக்கொண்டார் சித்தப்பா!
மிரண்டு
கத்திய ரேஷ்மி, அடுத்த ரெண்டு மணிநேரத்தில் தாத்தா தாத்தான்னு அவர் பின்னாடியே சுற்ற ஆரம்பித்தாள்!
அன்னைக்கு
சாயங்காலமே ரவி புறப்பட்டபோது, தனியாக ரூமுக்குள் கூட்டிப்போய், “சித்தப்பாவை அண்ணாவோடயே ஊருக்கு அனுப்பிடலாம்”ன்னவளை அறையக் கையை ஓங்கினதும் பாஸ்கர்தான்!
மறுநாளே,
என்னை நகைக்கடைக்கு கூட்டிக்கிட்டுப்போ பாஸ்கர், என் பேத்திக்கு பத்துப்பவுன் சங்கிலி வாங்கணும்ன்னு ஒரே அடம்!
ஒருவழியா
சமாதானப் படுத்திட்டு ஆஃபீஸுக்குப் போய்ட்டான்!
பேத்தியைக்
கூட்டிக்கொண்டு ரோட்டுக்குப் போனவர், அங்கிருந்த பெட்டிக்கடையில் அவள் கை நீட்டிக் கேட்டதையெல்லாம்
வாங்கித் தந்திருக்கிறார்!
கடைக்காரன்
பணம் கேட்க, சாவகாசமாக வேட்டியைத் தூக்கி, ஜட்டி பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்!
“ஐயையே! தாத்தா
ரோட்டிலே பப்பிஷேம்!” ன்னு வீட்டுக்கு ஓடியிருக்கிறது குழந்தை!
வீட்டுக்கு
வந்தவரை,
“ஏன்
சித்தப்பா இப்படிப்பண்றீங்க”ன்னு கேட்டதுக்கு,
பேத்தியை
இழுத்து மடியில் போட்டுக்கொண்டு,
“இவ
இன்னைக்குத்தான் இப்படிப்பேசறா, உனக்குத் தெரியுமா, சின்னவயசுல சட்டையே போடாம எந்நேரமும் மூக்கை ஒழுக்கிக்கிட்டே சுத்துவா, நாங்க எல்லாமே இவளை ஊளமூக்கி பாப்பான்னுதான் கூப்பிடுவோம்” ன்னு சொல்லி சிரிச்சிருக்கார்!
ஐ,
ஊளமூக்கி மம்மி ன்னு சிரிச்ச குழந்தைக்கு முதுகில் ஒன்னு போட்டு தரதரன்னு இழுத்துப்போய் தூங்கவைத்திருக்கிறாள்!
குழந்தைக்கு
இதெல்லாம் சொல்லித்தராதீங்க சித்தப்பான்னு அவர் கூட சண்டை!
மறுநாள்
காலைல, கொடியிலே காய்ஞ்ச அவளோட ஜாக்கெட் மேலயே, தன்னோட ஜட்டியைப் பிழிந்து காயப்போட்டிருக்கிறார்!
இனி
நான் எப்படி அந்த ப்ளவ்ஸைப் போடட்டும்ன்னு ஒரே கத்தல்!
ஒரு
வாரத்துக்குள்ள வீடே ரணகளம்!
அவர்பாட்டுக்கு
இவள் தூங்கிக்கிட்டிருக்கற ரூமுக்குள் நுழையறதும், ஆடை விலகியிருப்பது புரியாமல் தட்டி எழுப்புவதும் என்று தினசரி ஆஃபீஸ் விட்டு
வீட்டுக்குள் வந்ததும் புகார் பட்டியல்!
ஒருவகையில்
அவர் பாஸ்கருக்கு பெரிதாக எதுவும் உபத்திரவம் செய்யாததால் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மைதிலி. நமக்காக ஏறத்தாழ உயிரை விட்டிருக்கிறார்!
வயசான
காலத்தில் எல்லோரும் இப்படித்தான்!”
ஆனால்,
நேற்று பாஸ்கருக்கு முதல் சுருக்!
“என்னடா
பாஸ்கரா மீசையை சுத்தமா வழிச்சுட்டு, பாப்பாரவங்களாட்டம்?
பேச்சு
கூட அவங்கமாதிரியே பேசறே?”
உண்மைதான்!
பாஸ்கர்
தான் யார் என்பதை இங்கு மறைத்துத்தான் இருக்கிறான்!
மழித்த
மீசையும், பிராமண பாஷையும் சேஷாத்ரி உட்பட பலரையும் அப்படித்தான் நம்ப வைத்திருக்கிறது!
“உங்க
அப்பன் மீசையை முறுக்கி வச்சதுக்கு ஊர்ப்பொதுவுல கட்டிவெச்சு வெளுத்ததாலயா!”
“விடுங்க
சித்தப்பா, பழைய கதை இப்போ எதுக்கு?”
கொஞ்சம்
எரிச்சலோடே சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்!
இன்றைக்குத்தான்
உச்சகட்டம்!
காலையில்
சொல்லாமல் புறப்பட்டுப்போனவர், மதியம்தான் வந்திருக்கிறார்!
வந்தவர்
வழி தெரியாமல் தெருவில் அலைந்துகொண்டிருக்க, எட்டாவது மாடியிலிருக்கும் ராஜகோபால் கண்ணில் மாட்டியிருக்கிறார்!
ஒருவழியாக,
யார் என்ன என்று விசாரித்து, ஒரு பெரிய கும்பலே அவரை அழைத்துக்கொண்டு வந்து காலிங் பெல்லை அடிக்க, கூட்டத்தைப் பார்த்து ஒரு நிமிஷம் மைதிலி பயந்தே போனாள்!
“எங்க
சித்தப்பா போய்ட்டேள்?”
இயல்பாய்த்தான்
கேட்டிருக்கிறாள்!
“பேத்திக்கு
இதை வாங்கப்போனேன்!”
சொல்லிக்கொண்டே
பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்தவர்,
“இரு
இரு, நீயும் என்ன அவன் மாதிரியே பேசறே?”
சுதாரித்த
மைதிலி, எல்லோருக்கும் காஃபி கலக்க உள்ளே போனதுதான் தவறாகிப்போனது!
எல்லோரையும்
உட்காரவைத்து, பாஸ்கர், மைதிலி லவ் ஸ்டோரியை விலாவாரியாய் ஆரம்பித்திருக்கிறார்!
மைதிலி
காஃபியோடு வெளியே வரும்போது சேஷாத்ரி கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்!
“என்ன
சொல்றேள் நீங்க?”
“ஆமாம்!
பாஸ்கர் அப்பா தொழில் அத்தனை சுத்தம்!
ஷேவ்
பண்ணி விட்டான்னா, மூணுநாளைக்கு செரைச்ச தாடை மொழுமொழுன்னு இருக்கும்!”
“அவன்
மவனை இந்தப்பிள்ளை லவ் பண்ணா, அப்பன் சும்மா விடுவானா?
இதுகளை
சேர்த்துவெச்சேன்னு என்னைப் பங்காளின்னுகூடப் பார்க்காமல், வெட்டி வீசிட்டானில்லை!
இங்கே
பாருங்க மூஞ்சில எவ்வளவு பெரிய வெட்டுக்காயத் தழும்பு!”
மைதிலி
வந்ததும் ஒரு அசிங்கமான அமைதி!
கொண்டுவந்து
வைத்த காஃபியை ஒருத்தர்கூட தொடாமல் வெளியேற, பாஸ்கரிடம் ஃபோனில் கத்தினாள்!
"அந்த
பாழாய்ப்போன கிழம் செய்துவைத்த வேலையை நீங்களே பாருங்க! உடனே வீட்டுக்கு வாங்க!"
மொத்தக்கதையும்
கேட்டு, ஆக்ரோஷமாக சித்தப்பா பக்கம் திரும்ப,
வெள்ளந்தியாக பொட்டலத்தை நீட்டிக்கொண்டு சொன்னார் –
“இந்தா
பாஸ்கரா, பேத்திக்கு வாங்கியாந்தேன்!”
வெறி
பிடித்தவனாக அதைப்பிடுங்கி மூலையில் வீசியவன், தொண்டை கிழியக் கத்தினான்! -
“டேய் பரதேசி!
கிழட்டுநாயே!”
அதற்குப்பின்
நடந்ததுதான் இந்த பஸ் ஏற்று வைபவம்!
நாலு
சிகரெட்டை ஊதித்தள்ளி, மனசு கொஞ்சம் நிலைப்பட்டதும் ரவிக்கு ஃபோன் செஞ்சான்!
“அந்தக்
கிழட்டு நாயை சேலம் பஸ்ஸில் ஏத்தி விட்டிருக்கிறேன்! பஸ் விடிகாலை நாலு மணிக்கு வருமாம்!
போய்
கூட்டிக்கிட்டுப் போ!
இனி,
இந்தப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதே!”
மறுமுனையில்
ரவி சொல்லவந்ததைக்கூடக் கேட்காமல் இணைப்பைத் துண்டித்தவன், என்ன செய்வது, மைதிலியை என்ன சொல்லித் தேற்றுவது ஒண்ணுமே புரியாமல் வீட்டுக்கு வந்தான்!
நல்லவேளை,
எல்லோரும் சீரியலில் பிஸி!
வெளியே
யாரும் இல்லை!
வீட்டுக்குப்
போய் சோபாவில் விழுந்தபோதுதான் பார்த்தான்,
ரேஷ்மி கையில்
அந்தப் பொட்டலம்!
பத்துப்பவுனுக்குக்
குறையாத தங்கச் சங்கிலி!
No comments:
Post a comment