புதன், 3 மே, 2017

யட்சி!‘பாஸ்.....!”

“என்னடா, கோர்ட்ல வந்து விசில் அடிக்கறே?”

“பாஸ், அப்படியே ரைட்ல திரும்பிப்பாருங்க நீங்களும் விசில் அடிப்பீங்க!”

திரும்பியபோதே, விரும்பவைத்த பெண் வடிவம்!

நாக்கு நுனிவரை வந்த விசிலைக் கஷ்டப்பட்டு விழுங்கினான் கணேஷ்!
வாட் எ  உமன்!

நேராக அவர்களைப்பார்த்துத்தான் வந்தது பெண் சிற்பம்!

“கணேஷ்?”

“எஸ், வாட் கேன் வி டூ வித் யூ?”

“சும்மார்றா. சொல்லுங்க, என்ன வேணும், இப்போ நாங்க கொஞ்சம் பிஸி!”

“பாஸ் சும்மா சொல்றார்! நாங்க இன்னும் ஒரு வாரம் உங்களுக்கு ஃப்ரீ!”

“இல்லை! நானும் கொஞ்சம் பிஸி! இப்போ எனக்கு உங்ககூட ஒரு பத்து நிமிஷம் பேசணுமே!”

“ஸாரி! சாயங்காலம் ஆபீஸில் பார்க்கலாம்!”

“என்ன பாஸ், இப்படி வெட்டி விடறீங்க!
அழகான பெண்களுக்கு ஒதுக்காத நேரம் விரயம்ன்னு அவ்வையாரே ..

மொறைக்கறீங்க! ஓகே மிஸ், அப்போ சாயங்காலமே பார்ப்போம்!
இப்போ பாஸுக்கு அந்த ரங்காச்சாரியை பார்த்தே ஆகணும்!”

“சரி, சொல்லுங்க, எனக்கும் ஒரு காஃபி குடிக்க டைம் வேணும்!”

கறுப்புக் கோட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளமாய் இருந்த கேண்டீனில் ஒரு மூலை டேபிளில் உட்கார்ந்ததும்,

“சொல்லுங்க!”

“என் பெயர் யட்சி!”

“வேற பேரு வெச்சிருந்தாதான் ஆச்சர்யம்!”

“அவனைக் கண்டுக்காதீங்க, நீங்க சொல்லுங்க!”

“போன மாசம் எங்க அப்பாவை யாரோ சுட்டுக் கொன்னுட்டாங்க!”

“என்னங்க, முத்தம் கொடுத்துட்டாங்கன்ற மாதிரி சொல்றீங்க!”

“யாரு?  தொழிலதிபர் ரமேஷ்?”

“எப்படி பாஸ்?”

“டிவி நியூஸ்ல பார்த்தேன். அவங்க முகத்துல பார்க்கும்போது சாயல் தெரிஞ்சது! நீ எந்தப்பொண்ணு மொகத்தைப் பார்த்திருக்கே!”

"சொல்லுங்க!" இது யட்சிக்கு!

“எனக்கு எங்க மேனேஜர் சிவா மேல சந்தேகம்!”

“போலீஸ் கிட்ட சொன்னீங்களா?“

“சொன்னேன். அவங்க விசாரிச்சுட்டு அப்படித் தோணலைன்னு சொல்றாங்க!”

“யாரு இந்தக் கேஸ டீல் பண்றது?”

“ஏசி ராஜேந்திரன்!”

“அப்ப சரியாத்தான் இருக்கும்!
நீங்க கவலைப்படாதீங்க! குற்றவாளியைப் பிடிச்சுருவாங்க! அப்போ ...”

“இருங்க, இதுல நாங்க எங்க வந்தோம்?”

“எனக்கு ஏனோ சிவாதான்  கொலை செஞ்சிருப்பான்னு தோணுது! நீங்கதான் கண்டுபிடிக்கணும்!
உங்க ஃபீஸ் எவ்வளவுன்னாலும்..”

“விடுங்க! நட்புதான் முக்கியம்! ஃபீஸ் யாருக்கு வேணும்?”

“டேய்!”

“இருங்க பாஸ், உங்களால முடியாததா!”

“நீ இருந்து டீடைல் வாங்கிக்கிட்டு வா, நான் ரங்காச்சாரி ஹியரிங் முடிச்சுட்டு வர்றேன்!”

“அவசரம் இல்லை பாஸ், நான் நம்ம யட்சியோட போய் சம்பவ இடத்தை ஒரு பார்வை பார்த்துட்டு  நேரா ஆபீஸ்க்கு வந்துடறேன்!”

“மிஸ், இவனைக் கூட்டிக்கிட்டுப் போங்க, ரொம்பப் பேசுவான், பார்த்து!”

பென்ஸ் காரில் பின்சீட் ஏற்கனவே சொர்க்கம், இதில் பக்கத்துல யட்சி வேறு!

“யட்சு, நீங்க பிளேக் ஓபியம் யூஸ் பண்றீங்களா?”

“இல்லை, ஜவ்வாது!”

“நீங்களும் வார்றீங்களே!”

“மிஸ்டர் வசந்த், எனக்கு இந்த ஃப்ளிர்ட் எல்லாம் எப்போவோ போரடிச்சிருச்சு!
எங்க போனாலும் மாரைப் பார்க்கற ஆம்பளைங்க எனக்கு பதிமூணு வயசிலிருந்து பரிச்சயம்!

இப்போ, உங்களுக்கு என்ன டீடைல் வேணும்?

ப்ரெட்டி சீக்ரெட் 36, லெவிஸ் 34, ஹஸ்பப்பீஸ் 9. இதுதான் என் சைஸ்!

இனி, மத்த விஷயத்தைப் பார்க்கலாமா?”

“சாரிங்க. நான் கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்கறேன்!”

“அப்படி அடிபட்டமாதிரி மூஞ்சிய வெச்சுக்காதீங்க!
எனக்கு இன்னும் அப்பா செத்த சோகமே தீரல!
அதுதான்!”

“சரி, சொல்லுங்க. சிவா பத்தி!”

“அவன் எங்க அப்பாகிட்ட வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம்தான் ஆகுது! ஆனா, அப்பாவுக்கு ட்ரஸ்டட் லெஃப்டினண்ட்!
அவரோட நம்பர் டூ அக்கவுண்ட் எல்லாமே அவனுக்குத்தான் தெரியும்!
குட் லுக்கிங், ஹாண்ட்ஸம், குட் அட் பெட் டூ!

என்ன அப்படிப் பார்க்கறீங்க?
வீ ஹேட் செக்ஸ் ஒன்ஸ்!

அத விடுங்க! அவன்தான் கடைசியா அப்பாவைப் பார்த்துப் பேசினது
அன்னைக்கு ராத்திரி எங்க அப்பா சுடப்பட்டிருக்கார்!

எனக்கென்னவோ, அவரோட எல்லா அந்தரங்கமும் தெரிஞ்ச அவன் இதைப்பண்ண சான்ஸ் அதிகம்ன்னு படுது!”

பார்ப்போம்! வாங்க உங்க அப்பா ரூமுக்குள்ள போவோம்!

பாரன்சிக் ஆளுங்க அடிச்ச பவுடர்கூட கலையாமல் இருந்தது அந்த ரூம்!

ரூம்ன்னு சொல்றது துரோகம்!
ஹை கோர்ட் ஹாலைவிட ஒரு ரெண்டு அடி ஜாஸ்தி!

"என்னங்க, உங்க அப்பா பெட்ரூம்ல ஓடிப்பிடிச்சு விளையாடுவாரா?
கதவைத் திறந்துக்கிட்டு கிட்ட வந்து சுடவே அரைமணி ஆகும்போல!"

ஒரு மாதத்தில் தடயங்கள் எல்லாம் மழுப்பப்பட்டு, இப்போது அந்த ரூம் ஷோரூம் கண்டிஷன்ல இருந்தது!

"இங்க தேடறது ஆத்தங்கரைக்குப் பூனையைப் பிடிச்சுக்கிட்டுப் போறமாதிரி வெட்டி வேலை!

அந்த சிவா பத்தி எல்லா விஷயமும் வேணும்!
போன் நம்பர், அட்ரஸ், பழக்கவழக்கம் இப்படி!
சைஸ் எல்லாம் வேண்டாம்!"

"இன்னுமா அதை மறக்கலை நீங்க, கேஸ் முடிஞ்சதும் வாங்க, நீங்க நான் கணேஷ், ஆல் ஹாவ் பார்ட்டி!"

"பாஸை எதுக்கு தொந்தரவு பண்ணனும், லெட் அஸ்!"

"ஓகே! கொலைகாரனை கண்டுபிடிங்க,
நான் அடுத்த மாசம் லண்டன்ல போய் செட்டில் ஆகப்போறேன், அப்பா இல்லாத இந்த நாடே எனக்கு வேண்டாம்! கம்பெனியோட எல்லா க்ஷேரையும் விக்க ஏற்பாடு பண்ணிட்டேன்!”

“என்னங்க, அழகான பொண்ணுங்க எல்லாரும் இந்த நாட்டை விட்டுப்போனா, நாங்க என்ன பண்ணறது?
அதுவும் லண்டன்! மல்லையா வேற அங்கதான் இருக்கார்!”

“அத விடுங்க! நான் கிளம்பறதுக்குள்ள அப்பாவைக் கொன்னவன் யாருன்னு தெரியணும்
நீங்க கண்டுபிடிச்சா, உங்களோட ஒரு பார்ட்டி -  ஆன் தி ராக்ஸ், தென் எனக்கு ஓக்கேன்னா ... இந்த ரூம் ஓகேதானே வஸந்த்?"

"உங்களைப் புரிஞ்சுக்க இன்னொருதடவை லா படிக்கணும்போல!
டிராப் பண்றீங்களா, இல்லை, கால் டாக்ஸி பிடிக்கணுமா!"

சாயங்காலம் விசிலடிச்சுக்கிட்டே ரூமுக்கு வந்தா, கணேஷ் விரித்த புத்தகம் மாரில் கிடக்க, தூங்கிக்கிட்டிருந்தான்!

“பாஸ்! ஒரே நாள்ல கொலைகாரனைப் பிடிச்சாச்சு!"

"என்னடா, எந்தக்கேஸ்?"

"அதுசரி, நம்ம யட்சி கேஸ் பாஸ்!"

"அதுக்குள்ளயா, எப்பட்றா?"

"சிம்பிள் பாஸ்! சிவா யார்கூடல்லாம் பேசியிருக்கான்னு ஏர்டெல்ல நம்ம ரவி மச்சினிகிட்ட விசாரிச்சேன்!

தினமும், யார்கூடவோ நைட் முழுக்க கடலை! நம்பரை விசாரிச்சா, யாரோ பத்மினி, அடையார் விலாசம்!
அடுத்தது, கொலை நடக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாடி அடிக்கடி வேற ஒரு நம்பர்!

யாருன்னு பார்த்தா, பழைய மூர்மார்க்கெட் பார்ட்டி, முகேஷ்!
ஒரே ஒரு பக்கார்டி வாங்கிக்கொடுத்து விசாரிச்சேன்!
ரெண்டு மாசம் முன்னால யாரோ அவன்கிட்ட காலாஷ் நிக்காஃப் ரைஃபிள் ஒன்னு வாங்கியிருக்காங்க!
சிவா போட்டோ காட்டுன உடனே சொல்லிட்டான். இவன்தான்னு!"

"இதை ஏன் போலீஸ் கண்டுபிடிக்கல?"

"இந்த நம்பர் அவனோடது இல்லை!
அவன் ரூம் மேட்டுது!
அதனால இந்த நம்பர் பத்தி போலீஸ் விசாரிக்கலை!

யட்சிகிட்ட எதேட்சையா கேட்டேன், சிவாவுக்கு வேற நம்பர் ஏதாவது இருக்குதான்னு.
அப்போ சொன்னா, என்னைக்கோ ஒருநாள் அவன் ரூம் மேட் நெம்பர் கொடுத்தான்னு!
எனக்கு என்னவோ, அதை முதலில் விசாரிக்கணும்ன்னு பட்சி சொல்லுச்சு!
இப்போ, மாட்டிடுச்சு!”

:ஓகே! இப்போ யார், ராஜேந்திரனா, யட்சியா?”

“பாஸ், யட்சிதானே நம்ம கட்சி?

சரி, மொறைக்காதீங்க, ஒரு சின்ன எதுகை மோனை!”

“மொதல்ல நம்ம யட்சுவை வரச்சொல்லுவோம்!”

பேசிக்கொண்டே நம்பரை டயல் செய்த வஸந்த்தை புன்னகையோடு பார்த்தான் கணேஷ்!

“இந்த பொம்பளைங்க பின்னாடி அலையறத விட்டேன்னா, நீ என்னை தூக்கி சாப்பிட்டுருவடா!”

“கண்ணதாசனே சொல்லியிருக்கார் பாஸ்!
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
சிலேடை பாருங்க பாஸ், அவர் சொன்னது கண்ணா, கன்னா?”

“நீ திருந்தவே மாட்டடா!”

உள்ளே வந்ததும் யட்சி கேட்ட கேள்வி, "அவன்தானே?"

முழு விபரம் கேட்டதும் ஒரே அடம், ":நான் முதலில் அவன்கிட்ட பேசணும்! ஏன் ஏன் இப்படி செஞ்சான்? அது தெரிஞ்சதுக்கப்புறம் போலீஸ் அவனை அரெஸ்ட் பண்ணட்டும்!"

ராஜேந்திரன் மஃப்டில ரெண்டு இன்ஸ்பெக்டரை அனுப்புவதாய் ஒப்புக்கொள்ள, மறுநாள் மாலை நீலாங்கரை பீச் ஓரமாக ஒரு காபிஷாப்பில் சந்திப்பது என்று முடிவானது!

யட்சியே சிவாவுக்கு போன் செய்து வரச்சொல்ல, காஃபிஷாப்பில் மையமான டேபிளில் சிவாவும் யட்சியும் உட்கார ஏற்பாடு செய்துவிட்டு, கொஞ்சம் தள்ளி, ஒரு டேபிளில் தயாராக துப்பாக்கியோடு இரண்டு இன்ஸ்பெக்டரும், மூலையில் ஒரு டேபிளில் கணேஷும் வஸந்தும்!

ராஜேந்திரன் சொன்னதுபோல, இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான ரிஸ்க்?

“உன்னாலதான்டா இதெல்லாம்! மொதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்சாதான் இப்படி பொம்பளைங்க பின்னாடி சுத்துறத நிறுத்துவே!”

“பாகுபலி பார்க்க யாராவது மேக்ஸ் காம்ப்ளெக்ஸை வாங்குவானா பாஸ்?
கல்யாணம் அதுமாதிரிதான்! முட்டாள்தனமான லக்ஸுரி!”

அப்போது திடீர்ன்னு சிவா, தன் பாக்கெட்டிலிருந்து அந்த ரைபிளை எடுக்க, யட்சி பிடுங்க முயல, இந்தக் களேபரத்தில் சைலென்சரின் சின்ன சீற்றம் கேட்க, நெற்றியில் ரத்தப்பொட்டு வழிய விழுந்தான் சிவா!

ஏர்போர்ட்டில் யட்சி லண்டன் ஃபிளைட்டில் ஏறுமுன் ஒரு நூறுதடவை சொல்லியிருப்பாள்!

“தேங்க் யூ கணேஷ், நீங்களும் ராஜேந்திரனும் இல்லைன்னா நான் இந்நேரம் ஒரு கொலைகாரியா ஜெயில்ல இருப்பேன்!”

“பரவாயில்லை! ஒரு கொலைகாரனிடம் தப்பிக்க தற்காப்புக்குத்தானே நீங்க சுட்டீங்க!”

“இருந்தாலும், கேஸ் ஆகாமல் இன்ஸ்பெக்டர் சுட்டதாக கேஸை முடித்துக் கொடுத்த உங்களுக்கும் ராஜேந்திரனுக்கும் நான் என்ன நன்றி செய்ய?”

“ஒன்னும் வேண்டாம்! சென்னைக்கு வரும் உத்தேசம் இருந்தால், எனக்கு ஒரு நல்ல Graf von Faber-Castel பேனா வாங்கிட்டு வாங்க!”

“என்ன வஸந்த், எதுவுமே பேச மாட்டீங்களா?”

“போங்க யட்சு, கடைசிவரைக்கும் அப்பா ரூமை மட்டுமே திறந்து காமிச்சுட்டுப் போறீங்க! உங்க பேச்சு நான் கா!”

“தேங்க்ஸ் போத் ஆஃப் யூ, ஒரு கொலை கேசில் நான் மாட்டாமல் காப்பாற்றியதற்கு!”

சிரித்துக்கொண்டே விமானம் ஏறிய யட்சி, டேக் ஆப் ஆன பத்து நிமிடத்தில், வாஷ்ரூம் போய், மொபைலிலிருந்த இரண்டாவது சிம் கார்டை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஸ் பண்ணிவிட்டாள்!

போலியாய் பத்மினி பேரில் வாங்கிய சிம்!

முட்டாள் சிவா!
இந்த வயதில் சின்னவீடு செட் பண்ணி, அவளுக்கு சொத்தை எழுதப்பார்த்த என் அப்பனைப்போட துப்பாக்கி வாங்கித் தரச் சொன்னால், இப்படி அந்த வக்கீல் சுலபமா கண்டுபிடிக்கற மாதிரியா வாங்குவான்? இந்த லட்சணத்தில் சொத்தில் வேறு பங்கு வேண்டுமாம் அந்த முகரைக்கு!

என்ன செய்ய?
ரெண்டாவது குண்டில் அவன் பெயரை எழுதியிருக்கிறான் இறைவன்!

புன்னகைத்தவாறே தூங்கிப்போனாள் யட்சி!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக