சனி, 20 மே, 2017

ரஜினிகாந்த்துக்கு ஒரு மடல்
வணக்கம் திரு. ரஜினிகாந்த் அவர்களே!

மன்னிக்கவும்!
உங்களை எந்த அடைமொழியில் விளிப்பது என்ற சந்தேகத்தில் பெயர் சொல்லி அழைக்க நேர்ந்தது.

உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் யாரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசுவது மரியாதை குறைச்சல் என்ற விநோத மனப்பாங்கு இருக்கிறது

உங்களை சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை!
அந்த அடைமொழிதான் ஒரு நல்ல நடிகனைக் கொன்றது என்ற கோபம் எனக்கு மிக உண்டு!

நாளைய முதல்வரே என்று விளிப்பது உங்களைக் கேலி செய்வதாகப் படும் வாய்ப்பே அதிகம் என்பதால், எனக்கு  வேறு வழி தெரியவில்லை!

பாருங்கள்! உங்களுக்கு எழுத ஆரம்பிக்கும்போதுஆரம்பமே குழப்பம்!

உங்களைப்போலல்லாமல் நேரடியாக விசயத்துக்கு வருவோம்!
நீண்ட இடைவெளிக்குப்பின் ரசிகர்களை சந்தித்திருக்கிறீர்கள்!

மகிழ்ச்சி!

ஆனால், இந்த சந்திப்பு எதன் நிமித்தம் என்பதுதான் இப்போது பெரும் விவாதப்பொருளாகியிருக்கிறது!

உங்கள் படத்தின் ப்ரொமோஷனுக்கு என்பதே பெருவாரியானோர் கருத்து!

அவர்கள் அப்படி நினைக்க நீங்கள்தான் காரணம் என்பதை நீங்களே மறுக்கமாட்டீர்கள்!

உங்கள் கடந்தகால செயல்பாடு அப்படி!

உங்கள் படத்துக்கு என்று இருந்த ஒரு நிகரற்ற ஓப்பனிங் குறைந்துகொண்டு வருவதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியாததில்லை!

என் தாத்தா உங்கள் ஆரம்பகாலப் படங்களை விரும்பிப்பார்த்தார்.

அதிகம் திரைப்படங்கள் பார்க்காத என் தந்தை உங்கள் படங்கள் என்றால் தொலைக்காட்சிப்பெட்டியை விட்டு விலகாமல் பார்ப்பது கண்டு நான் வியந்ததுண்டு!

நல்லவனுக்கு நல்லவன், நெற்றிக்கண், போக்கிரி ராஜா, மூன்று முகம் இவை என் வாழ்வில், ரசிகர் மன்ற டிக்கெட் வாங்கி நான் பார்த்த படங்கள்!

நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆனபின்பு எனக்கு உங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து போனாலும், நான் திரையரங்கம் போய் பார்க்கும் படங்களைப் பட்டியலிட்டால் அதில் 95 சதவிகிதம் உங்கள் படமாகத்தான் இருக்கும் -
எந்திரன் போன்ற குப்பைகளைத் தவிர்த்து!

என் மகன் கபாலி பார்த்ததிலிருந்து, இன்னுமே, மகிழ்ச்சி என்ற வார்த்தையை மிக அதிகம் உபயோகிக்கிறான்!

நாளை, என் பேரனும் உங்களை ரசிக்கும் வாய்ப்பே அதிகம்!

இப்படி தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படும் வரம், எந்த நடிகனுக்கும் இதுவரை வாய்த்ததில்லை!

அதற்கு உங்கள் நடிப்பின் இயல்புத்தன்மை ஒரு காரணம்!

நீங்கள் ஒரு நடிகனாய்த் துருத்தித் தெரிந்த படங்கள் மிகக்குறைவு என்பது உங்கள் பலம்!

ஆனால், இனிமேலும் வயதுக்கேற்ற படங்களைத் தேடி நடிக்காமல், ஷங்கர் பின்னால் போய்க்கொண்டிருந்தால், உங்கள் வார்த்தையில் சொல்வதென்றால்,
ஆண்டவன்கூடக் காப்பாற்ற முடியாது!

உங்கள் படம் ஓடுவதற்காக நீங்கள் ரசிகர்களை சந்திப்பதைவிட, நல்ல இளம் இயக்குனர்களை சந்தியுங்கள்!

உங்களைவிடப் பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்த, உங்கள் நண்பர் அமிதாப் அதைத்தான் செய்தார்!

ஷங்கர் போன்று மறைமுகப் பிரச்சாரம் செய்பவர்களையோ, ரஞ்சித் போல நேரிடைப் பிரச்சாரம் செய்பவர்களையோ விட்டுவிட்டு நல்ல கதைகளை வைத்திருக்கும் இளைஞர்களை நாடுங்கள்!

நீங்கள் எத்தனைதான் கோணங்கித்தனம் செய்து அடக்கிவைத்தாலும், உங்கள் எல்லாப்படங்களிலும் ஏதோ ஒரு இடத்தில் தலை காட்டும் அந்த நடிகனை அவர்கள் காப்பாற்றிக்கொடுப்பார்கள்!

ரசிகர் சந்திப்பை நீங்கள் அதற்காக நடத்தியிருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்!

அதைவிடுத்து அரசியலில் இறங்க இந்த சந்திப்பு எனில்,

மன்னிக்கவும், நீங்கள் உங்களுக்கு வந்த ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு, இப்போது இல்லாத வாய்ப்பைத் தேடி ஓடுகிறீர்கள் என்றே படுகிறது!

இன்று தமிழக அரசியலில் அப்பட்டமாக ஒரு வெற்றிடம் இருப்பது உண்மைதான்!

ஆனால் அது உங்களுக்கானதா?

ஆற்றில் இறங்கினால் முதலை இருக்குமோ என்று யோசித்தே இருபது ஆண்டுகளாக அழுக்கடைந்து போய்விட்டீர்கள்!

இனி அரசியல் வெள்ளத்தில் முதலையைவிட, உங்கள் முதுமையை வெல்வதுதான் பெரும் சோதனையாக இருக்கும்!

மார்க்கெட் இழக்கும் நேரத்தில் நடிகர்களின் புகலிடம் அரசியல் என்று தப்புக்கணக்குப் போட்ட பல நடிகர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!

உடனே, எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் உதாரணம் தேடாதீர்கள்!

எம்ஜியார் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் இருந்தார்!

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், அவர் மார்க்கெட்டை அரசியல்தான் உருவாக்கிக் கொடுத்தது!

திரையில் அவர் நடித்ததே இல்லை!
வாழ்க்கையில் ஒரு நொடிகூட அவர் நடிக்காமல் இருந்ததே இல்லை!

அவர் பிணத்துக்குக்கூட மணிக்கணக்கில் மேக் அப் போடுமளவு நிஜவாழ்க்கையில் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார்!

அவர் முதலமைச்சராக ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை! அவர் முதல்வரானதே ஒரு விபத்து!

உங்களுக்கு, உங்கள் படத்திலிருந்தே உதாரணம் சொல்கிறேன்!

அண்ணாமலை கடைசிவரை அஷோக்கிற்கு அடிமையாகவே இருந்திருப்பான்! - அஷோக்கின் அப்பா பொறாமைப்பட்டுத் தூண்டிவிடாதிருந்தால்!

என்ன, உங்கள் படத்தில் அஷோக்கிற்கு அப்பா!
 நிஜத்தில்  அஷோக்கிற்குப் பிள்ளைகள்!

கடைசிவரை அண்ணாமலையை அஷோக் வெல்லவே முடியாமல் போனது சரித்திரம்!ஜெயலலிதா கதை வேறு!

எம்ஜியார் வலிந்து இழுத்துவந்து அரசியலை அவர் மீது திணித்தார்!

விருப்பமின்றி வந்தார்! இரட்டை இலை அவருக்கு விருந்து போட்டு உபசரித்தது!

எம்ஜியாரின் வாரிசு என்ற ஒற்றைத் தகுதி, மேலும் அவருக்கான ஒரு வலிமையான லாபிஅவரை உயரத்திப் பிடித்தது!

உங்களைப்போல் தயங்கி யோசித்துக்கொண்டிருக்காமல் நீட்டிய கையை இழுத்து எறிந்துவிட்டு, உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு, தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டார்!

அவர்களுக்குப்பின் ஓரளவு வென்றவர் விஜயகாந்த்!

ஒரு தவறான முடிவு, இன்று அவரை எங்கே என்று தேடவைத்துவிட்டது

அவர் மனைவி பெயரில் உங்களுக்கான ஒரு எச்சரிக்கை இருக்கிறது!

உங்கள் படம் ஓட வேண்டுமானால், நடிகர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பதுபோலவே சம்பந்தமில்லாத வேறு சிலருக்கும் சில கோடிகளைக் கொடுத்தே ஆகவேண்டும் என்பது ஏற்படுத்தப்பட்டுவிட்ட விதி!

அதன் காரணகர்த்தா நீங்கள்!

நீங்கள் என்னதான் அவர்களை வல்லவர், நல்லவர், படித்தவர், போராளி என்று புகழ்ந்தாலும், அவர்கள் அந்த வசூலை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை!

எனவே, அதற்கு இந்த மெனக்கெடல் என்றால் எங்கள் அனுதாபங்கள்!

இல்லை, இந்த சந்திப்பு அரசியல் நுழைவுக்கு முன்னோட்டம் என்றால், பூப்பாதையா சிங்கப்பாதையா என்பதை உடனே முடிவு செய்ய காசைச் சுண்டுங்கள்!

கடவுள் விருப்பப்பட்டால், பூ விழட்டும், இல்லை சிங்கம் வரட்டும்!

காசை பாக்கெட்டை விட்டு வெளியே எடுத்து சுண்டுங்கள்!

கடவுளுக்கும் உங்களைப்போல் குழப்பமென்றால், மேலே போகும் காசைப் பிடித்து வைத்துக்கொள்ளட்டும்!

அரசியலுக்கு வருவதென்றால், விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராகிவிடுங்கள்!

இந்த சில நாட்களில் பல வசை பாடல்களைக் கேட்டிருப்பீர்கள்!
அவை சிறு துளிதான்!

உங்கள் குடும்பம் முதல், உங்கள் உள்ளாடை வண்ணம் வரை எள்ளல் செய்யப்படுவதை முறுவலோடு தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கும், உங்களை ஊக்குவிப்போருக்கும் இருக்கிறதா என்று சிந்தியுங்கள்!

உங்களால் பயன்பெறத் துடிப்போர் அதற்குத் தகுதியானவர்தானா என்பதை சிந்தியுங்கள்!

ஜெயாவுக்குப்பிறகு, தங்கள் சிந்தனையை, சித்தாந்தத்தை அரியணை ஏற்ற அவர்களுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்!

அதற்கான விலையை நீங்கள்தான் கொடுக்கவேண்டியிருக்கும்அவர்களல்ல!
நீங்கள் பாதை மாறுவதாக ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் அவர்களுக்கு மூர்க்கமுகம் முளைத்துவிடும்!

பாஜக முத்திரை விழுமென்று உங்கள் வீடு தேடிவந்த மோடியின் பெயரை புகழவேண்டியோர் பட்டியலில் விட்டுவிட்டதற்கு எங்கள் மருத்துவர் அக்காவின் இன்றைய எதிர்வினை அதை உங்களுக்குக் கோடி காட்டியிருக்கும்!

அன்னை விந்தியா தனிக்கட்சி ஆரம்பித்தாலே தாங்கிக்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் நாங்கள்!

உங்களை வரவேண்டாம் என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை!
எனவே, உங்கள் முடிவை நீங்கள் எடுங்கள்!

எங்கள் ஆண்டவர்களை கனவுத் தொழிற்சாலை வடிவமைப்பது அரை நூற்றாண்டு வழக்கம்! 

அது தொடர்வது ஆண்டவன் சித்தமானால் அதைத் தடுக்க நாங்கள் யார்?

நதியில் இறங்கி நீராடுங்கள் - கரை ஏறுவதும் மூழ்கிச் சாவதும் உங்கள் சாமர்த்தியம்!

போர் வரும் என்று காத்திருக்காதீர்கள்!

இது நில்லாது நடந்துகொண்டிருக்கும் போர்!

இறங்கி வாளைச் சுழற்ற இப்போதும் தாமதமாகிவிடவில்லை!

இப்போது இருப்பதாய் நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஆட்சியைவிட ஒரு மோசமான ஆட்சியை யாராலுமே தரமுடியாது!

அதையே தாங்கிக்கொண்டு, ஐபிஎல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

எனவே, உங்களால் முடிந்த நன்மையோ, தீமையோ செய்யுங்கள்!
எதையும் எதிர்க்காமல் தாங்கும் வலிமை எங்களுக்கு மிக அதிகம்!

இப்போது எங்கள் முன் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளின் கல்யாண குணங்களுக்கு நீங்கள் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை!

ஊழலை மட்டும், ஒழிப்பீர்களா, ஒளிப்பீர்களா என்ற ஒன்று மட்டுமே சந்தேகம்!

தீர்க்க வாருங்கள்!

வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக