ஞாயிறு, 28 மே, 2017

மாடு விற்பனைத் தடைச்சட்டம் கண்டிப்பாக சாதி மதச் சார்பற்றது - நம்புங்கள் முட்டாள்களே!

மாடு விற்பனைத் தடைச் சட்டமும்
மாலன் நாராயணன்களும்!இன்றைக்கு ஒரு அதிசயம்! நண்பர் மாலன் நாராயணன் அவர்கள் ஒரு பதிவிட்டிருந்தார்!

வழியில் வள்ளுவர்
இன்றைய உலாவில் எதிர்ப்பட்டது திருக்குறள் -புலால் மறுத்தல்
நன்றி : திரு.மு.கருணாநிதி /திமுக... http://fb.me/zLENcArp
அற்புதம்!

நீண்டநாட்களுக்குமுன் கணையாழி காலத்து அவர் எழுதிய ஆயுதம் சிறுகதை எங்களுக்கெல்லாம் பத்திரிகைத்துறை எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு ஒரு பைபிள்!

அந்தக்கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை!

இன்றும்கூட புத்தக அலமாரியைத் தூசி தட்டும்போது அந்தத் தொகுப்பை புரட்டாமல் வைக்க மனம் வந்ததில்லை!

இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ் என்பது அவருடைய இன்னொரு சிறுகதை!
திசைகள் மாறி மாறி மாலன், மாலன் நாராயணனாகி, இப்போது இன்னொரு இளஞ்செழியனாக அவர் இருப்பது வாழ்வியல் சூழல்!

இந்நிலையில் அவர் கலைஞரை கோட் செய்து பதிவிட்டிருப்பது அந்த பழைய அறிவாளிக் குசும்பு!

மாட்டு வியாபாரத் தடை சட்டத்தில் கருத்து சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்!
போதும் இந்தக் கருத்துக்கந்தன் வேடம் என்று!

திடீரென்று புலால் மறுப்பு அதிகாரத்துக்கு, கலைஞரின் உரையை எடுத்துப் பகிர்ந்து என்  தீர்மானம் சிதைத்திருக்கிறார்!

கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையில் "இன்று" புலால் மறுத்தல் உரையை எடுத்துப் பதிந்திருக்கிறார்.

 நல்ல விஷயம்- அப்படியாவது திருக்குறளைப் படிக்கத் தோன்றியதும், குறள் என்றதும் கலைஞர் நியாபகம் வருவதும்!

இறைமாட்சி, குற்றங்கடிதல், கொடுங்கோன்மை இவற்றுக்கு, கலைஞர் உரை பிடிக்காவிட்டால் வேறு யார் உரையையாவது படித்துப் பகிரட்டும் மாலன்!

மாட்டு இறைச்சிக்குத் தடை இல்லை, மிருகவதை தடுப்புச் சட்டத்தின்படி, சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கின்றன என்று சில அறிவுப்பூர்வமான விளக்கங்கள்!

இருக்கட்டும், அந்த எளிய கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன?
நன்றி: தமிழ் தி இந்து 

1. இறைச்சிக்காகக் கொல்வதற்கு விற்கக்கூடாது. - எனில், இறைச்சி எங்கிருந்து கிடைக்கும்? பன்னாட்டு நிறுவனங்கள் பதப்படுத்தி விற்கும் கடைகளிலாஅவை எங்கிருந்து மாடுகளை வாங்கும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளனவா? அந்த மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படாமல் தற்கொலை செய்துகொண்டனவா?

2. விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டுமே வாங்கவும் விற்கவும் முடியும் - எனில், வயதான மாடுகளை என்ன செய்ய? வயதான மாட்டை விற்கமுடியாது எனில், கறவைக்கும், உழவுக்கும் புது மாடுகளை விவசாயி எங்கிருந்து வாங்குவான்? அதற்கான பணத்தை அரசே அளிக்குமா அல்லது அதானி தருவாரா?
பயன்பாட்டில் உள்ள மாட்டோடு, கிழ மாடுகளையும் பராமரிக்குமளவு இடமும் பணமும் தாராளமாக இருக்கும் விவசாயி ஏன் வறட்சியால் தற்கொலை செய்து கொள்கிறான்?
தற்கொலை செய்துகொள்பவன் எல்லோரும் காதல் தோல்வி, சொந்தக்காரணங்களால்தான் என்று அடிமை அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததுதான் உண்மையா?

3. இறைச்சிக்காக விற்கவில்லை என்ற உறுதிமொழிச் சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்கவேண்டும், கால்நடைகளின் அடையாளங்கள், உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்  -
ஒவ்வொருமுறையும் இது எவ்வளவு தூரம் சாத்தியம்? உழவுக்கும் கறவைக்கும் உதவாத மாட்டை இறைச்சி தவிர எந்தப் பயன்பாட்டுக்கு வாங்குவார்கள்? எனில், அரசே ஒரு நியாயமான விலை கொடுத்து அவற்றை வாங்கிப் பராமரித்து, அவை பரமபதம் அடைந்தபின், நல்லடக்கமும் பதினாறு நாள் கிரியைகளும் செய்து மோட்சத்துக்கு அனுப்பட்டும்!

4.  கால்நடைகளை வாங்குபவர், விற்பவர் இருவரும் தங்கள் நிலத்தின் உரிமைப் பத்திரம் விவசாயி என்பதற்கான அடையாளச் சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும்  -
விவசாயி தவிர்த்து வேறு யாரும் இவற்றை வாங்கமுடியாது என்பது மறைமுகமாக இறைச்சிக்குத் தடை என்பது காரணமில்லை எனில், அரசே இறைச்சியை செயற்கையாகத் தயாரித்து விற்குமா? அல்லது இறக்குமதி செய்து விற்குமா?

மாடுகள் கொல்லப்படாதெனில், தோல் பதனிடும் நிலையங்களுக்கு மூலப்பொருள் எங்கிருந்து கிடைக்கும்? மனிதத் தோலில் இனிப் பொருட்கள் செய்யப்படுமா?

தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு, சாராய ஆலைகளும் கோசாலைகளும் நிறுவப்படுமா?

இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, இனி நாய்க்கறியும் பூனைக்கறியும் ஏற்றுமதி செய்யுமா? அன்றி, உலகில் முதலிடத்தில் இருப்பதால், ஜனத்தொகை குறைப்பு என்று மனிதக்கறி விற்பனை தொடங்கப்படுமா?

5. கால்நடைகளை வாங்கியபின், அவற்றுக்கான ஆவணங்களின் 5 நகல்களை எடுத்து உள்ளூர் வருவாய் அலுவலர், கால்நடை மருத்துவர், கால்நடைகளை நிர்வகித்துவரும் கமிட்டி இவற்றிடம் சமர்ப்பிக்கவேண்டும். விற்பவர், வாங்குபவர், தலா ஒரு நகலை வைத்துக்கொள்ளவேண்டும்
இது ஏறத்தாழ தடை செய்யப்பட்ட வனவிலங்குகளின் தோல், இன்னபிற வியாபாரத்துக்கு விதிக்கப்பட்ட அதே கட்டுப்பாடு!'

எனில்ஒட்டகம், மாடு இவை அரியவகை விலங்கினப் பட்டியலில் இடம்பெறுமளவு அருகிப்போகும் என்பது அரசின் நிலைப்பாடா

கோவில் காளைகளின் உரிமையாளர் அடையாள அட்டையில் அந்தந்தக் கடவுள்கள் புகைப்படமும் கையொப்பமும் இருக்குமா
அவை இறந்தபின் என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு யார் சான்றிதழ் வழங்குவர்?
இந்தக் கமிட்டி, கமிட்டி என்பதில் இருக்கப்போகும் உறுப்பினர்களை யார் நிர்ணயம் செய்வது?

6. இந்தியாவில் ஆண்டுக்கு ஒருலட்சம் கோடிக்கு இறைச்சி வர்த்தகம் நடைபெறுகிறது, இதில், உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது
ஆக, இதுதான் இந்த அரசின் இலக்கு
ஒருலட்சம் கோடி வியாபாரம் இனி பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கு மாறும்விவசாயி, சிறு வியாபாரிகள், தெருவோர இறைச்சி விற்பனையாளர்கள் முற்றாக அழிந்துபோவார்கள்!

என்றோ, எங்கேயோ சித்திரவதை செய்யாமல் அன்பாகக் கொல்லப்பட்டு, டப்பாக்களில் அடைத்து, ஏசி ஷோரூம்களில் விற்கப்படும் இறைச்சி மட்டுமே இனி விற்பனைக்குக் கிடைக்கும்!

இதுதான் இந்த அரசின் உண்மை நோக்கம்!

பலரும் சொல்வதுபோல் இது மதம், சாதி சார்ந்த அறிவிப்பு அல்ல என்று முட்டாள்தனமாக நானும் நம்ப எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன!

1. மிருகவதை தடுப்பு மட்டுமே நோக்கமெனில், கொல்வதற்காகவே வளர்க்கப்படும் கோடிக்கணக்கான கோழிகள் உயிரினத்தில் சேராதா?

2. மீன்கள் மட்டும் என்ன பாவம் செய்தன? அவற்றை அள்ளிக்கொண்டுவந்து கூறுபோட்டு விற்பது பாவமில்லையா?

3. உழவுக்கும், நடவுக்கும், அறுப்புக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஏன் ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றை வளர்ப்பது சட்டவிரோதம் என்று நெறிமுறை கொண்டுவரக்கூடாது?

4. பால், தயிர், நெய், வெண்ணெய் இவை கன்றுக்குட்டிக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உணவு மறுதலிக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுவகைகள் அல்லவா
அவற்றை ஏன் உடனடியாகத் தடை செய்யக்கூடாது?

5. இவை யாவும் வன விலங்குகள் என அறிவிக்கப்பட்டு ஊருக்குள் வளர்ப்பது தடை செய்யப்படுவதுதானே முறையானதாக இருக்கும்?

சாதி, மத வேறுபாடுகள் சற்றும் இல்லாத இந்த சமத்துவ மோடி அரசு இவற்றை உடனே அமல்படுத்தும் என்று மாலன் நாராயணன் போன்ற அறிவுஜீவிகள் உறுதிப்படுத்தி, இந்த அறிவிப்பு கண்டிப்பாக இந்துமதக் கோட்பாடே புரியாத, இந்துத்துவ தீவிரவாத முரட்டு முட்டாள்களுக்காக என்று நம்பும் என்போல் அறிவிலிகளை செருப்பால் அடிக்கட்டும்!

அதைவிடுத்து, புலால் மறுப்பை "மட்டுமே" வள்ளுவனும், தாங்கள் ஆழ்ந்த உறக்கத்திலும் எதிர்க்கும் கலைஞரும் ஆதரிப்பதாகப் போலிப் பிரச்சாரம் செய்யாதிருக்கட்டும்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக