வெள்ளி, 16 ஜூன், 2017

முத்துச்சாமி
முத்துசாமிக்கு முழிப்பு வந்தபோது மணி ரெண்டு ரெண்டரை இருக்கும்

என்னேரம் பாரு, இருட்ல வெறிச்சுக்கிட்டு அந்த பீடியை குடிச்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தா எல்லாம் செரியாயிடுமா? இந்தக் குடியானவனுக்கு ஏன்தான் இப்புடிப் புத்தி போவுதோ ன்னு மொனங்கிக்கிட்டே இருக்கற காமாட்சி பக்கத்துல அசையாம கெடந்தா!

எந்தத் தூக்கத்துலயும் கொஞ்சமா சீல விலகுனாக்கூட விருட்டுன்னு இழுத்துப் போத்திக்குவா!

“ஏண்டி, அப்புடிப் பொத்திப்பொத்தி வெச்சு என்னத்தக் கொண்டுபோகப்போறே? எல்லாத்தையும் எனக்குக் காமிச்சுத்தான நாலு பெத்தே?”

“யோவ். அது பொம்பள செம்மம் எடுத்துவந்ததுக்கு வெலை !

உம்பட ஆட்டத்துக்கு ஆடித்தான் நாலு பெத்து, அதுல மூணுக்கு நெல்லுப்பால் குடுத்த பாவம், இன்னைக்கு இருக்கற ஒன்னும் எங்கயோ அசலூர்ல உக்காந்துக்கிட்டு அப்பனும் ஆத்தாளும் இருக்காங்களா செத்தாங்களான்னு தெரியாம இருக்குது.’

“விடு கழுதையை, உனக்கு வேணும்னா சொல்லு, இன்னொன்னு பெத்துக்குவோம் இன்னைக்கு நெல்லுப்பாலு ஊத்த எம்பட ஆத்தாவும் இல்ல!

பொச கெட்டுத் திரியாத மூடிக்கிட்டுப்படு. கிழவனுக்கு பேச்சுக்கு ஒரு கொறச்சலும் இல்லை! காலேல கோழி கூப்புட ஈரோட்டுக்குப் போகோணும்!”

சீலையை பாதம் வரைக்கும் இழுத்து விட்டுக்கிட்டு திரும்பிப் படுத்துக்கிட்டா!

இது நேத்து ராத்திரி நடந்த கூத்து!

இதோ, இப்போ சீல வெலகுனது தெரியாம குளுந்துபோய் கெடக்கறா.

எப்போ நடந்துச்சோ, கெழவி இன்னைக்கென்ன சன்னமா உடற கொறட்டைகூட இல்லாம இப்படித் தூங்கறாளேன்னு கை  நீட்டித் தொட்டபோதுதான் குளிர்ந்துபோய்க் கெடக்கறது தெரிஞ்சுதுஎப்புடியும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகியிருக்கும்!

ஏனோ முத்துசாமிக்கு அழுகாச்சி வரல!

என்னமோ, எதிர்பார்த்தது நடந்தது மாதிரி ஒரு நிம்மதியாக் கூட இருந்தது!

சொல்லிக்கிட்டேதான் இருப்பா, பாதகத்தி!

ஒத்தப்புள்ள இருந்தாத்தான் சொத்துப் பிரியாம இருக்கும்ன்னு பின்னாடி பொறந்த மூணுக்கும் நெல்லுப்பால் குடுத்த உனக்கு, உங்க ஆத்தாவுக்கு வந்தமாதிரி படுகெடையா கெடந்துதான் சாவு வரும்,
உனக்கு கேட்டபோதெல்லாம் கால விரிச்ச பாவத்துக்கு, பெத்த மூணு புள்ளைங்கள கண்ணு முழிக்கறதுக்கு முன்ன மண்ணுக்குக் குடுத்துட்டு மறுகிக்கிட்டே கெடந்த இந்த முப்பது வருஷ தண்டனை போதும்.
நான் தூக்கத்துலயே போயிருவேன்.
உனக்கு பீ மூத்தரம் வழிச்சுக் கொட்டக்கூட ஆளில்லாம தனியாத்தான் கெடந்து சாவப்போறே!
எனக்கு உன் கைக் கொள்ளி கெடைக்கும். உனக்கு அம்பேரிக்காவுல இருக்கற மகன் வராம தருமக் கொள்ளிதான்.

சத்திய வாக்கு மாதிரி சொல்லிக்கிட்டே திரிஞ்சா.

இதோ, கடவாய் ஓரம் ஒரு குறுஞ்சிரிப்போட நீட்டிப் படுத்துட்டா!

என்ன செய்யறது?
இப்போ என்ன செஞ்சு என்ன
விடியட்டும், நாட்டாமை வீட்டுப்பையன்கிட்ட சொன்னா கோவாலுக்கு போன் போட்டு சொல்லீருவான்!

அவன் எப்புடியும் வரப்போறதில்ல
போனதடவை வந்தபோதே,
அதிருக்கும் ஒரு ஆறு வருஷம், சொல்லீட்டுப் போய்ட்டான் 
“இனி நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். இந்த ஊரு அழுக்கும் புழுதியும் என் வெள்ளக்காரப் பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் ஒத்துக்கல.”

இத்தனைக்கும் கோயமுத்தூர்ல ரூம் போட்டுத் தங்கிக்கிட்டு ஏசி காருலதான் வந்தாங்க.
காரவிட்டே அந்த மகராசியும் அவ பெத்த புள்ளையும் எறங்கல

இதே புழுதிக்காட்டுல புண்ணும் செறங்குமா திரிஞ்சவந்தான்டா நீயி. என்னமோ அமெரிக்காவுலயே பொறந்து வளந்தவனாட்டம் பேசறே?

அப்பா, அதுக்குன்னுதான் இப்போ உன்னைப் பாக்கவே வந்தேன். என்ன பணம் வேணும்ன்னு சொல்லு, ரவிகிட்ட சொல்லி பேங்குல போட்டுட்டுப் போறேன். இந்த உதவாக்கரை நிலத்த வந்த வெலைக்கு வித்துட்டு நல்லதா ஒரு முதியோர் இல்லத்துல போய் தங்கிக்கங்க!

கொண்டாந்த காப்பித் தண்ணிய அவன் மூஞ்சீலயே வீசிட்டு, முத்துசாமி பக்கம் திரும்பிச் சொன்னா
இந்த நாய்க்கு குடுக்கற நெலம் துண்டுபடக்கூடாதுன்னுதானே நீயும் உங்க ஆத்தாளும் கண்ணு முழிக்காத உசுருகள பலி குடுத்தீங்க. இப்போ சாவுடா கவுண்டா!”

“டேய், நாதேரி நாயே, அப்பன் படுத்திருந்த கயித்துக்கட்டல்ல என்னமோ பீத்துணிமேல உக்காந்திருக்கற மாதிரி உக்காந்திருக்கறே?
 எந்திருச்சு ஓடிப்போயிரு, இன்னொருதடவ அப்பன் ஆத்தான்னு பிளசரப் போட்டுக்கிட்டு வந்தே, உன்னை நானே அறுத்து நெலத்துல வீசீறுவேன். யாருக்குடா வேணும் உன் காசும் பவுஸும். போ, வெள்ளக்காரிய மோப்பம் புடிச்சுக்கிட்டு அங்கேயே சாவு!”

சொன்னதொன்னே சாக்குன்னு எந்திருச்சுப் போனவந்தான்!

இன்னைக்கு வரைக்கும் நாட்டாமை வீட்டுப் பையனுக்கு எப்போவாச்சும் போன் பண்ணி பேசறதோட சரி!

அவன் கேக்கறானோ இல்லையோ, இவன் வந்து உங்க மவன் உங்கள ரொம்ப விசாரிச்சான், சீக்கிரம் வந்து பாக்கறேன்னு சொன்னான்னு ஏதாச்சும் சொல்லுவான்!

காமாச்சி அதுக்கும் ஒருதடவை பளிச்சுன்னு சொல்லிட்டா,
இதப்பார் ரவி, கண்ட நாயப்பத்தி பேசறதுன்னா இனிமே இங்க வராதே. வந்தமா, வரக்காப்பியோ, டீத்தண்ணியோ குடிச்சமான்னு போயிரு”ன்னு!
அதோட அந்தப் பேச்சும் நின்னுபோச்சு!

இந்த ஒரு வருசமா மழத்தண்ணி ஒரு சொட்டு கீழ உழல!

மேட்டாங்காடு எல்லாம் வரம்பு தட்டிப் போச்சு!

இன்னைக்குத்தான் ஒழவுமாட்ட யாவாரியக் கூட்டிக்கிட்டு வந்து காட்டுனான் முத்துசாமி!

சுள்ளி பொறுக்கப் போயிருந்த காமாட்சி சும்மாட்டோட சுள்ளிக் கட்ட எறிஞ்சுட்டு வந்தா.
"இந்தா, யாரக்கேட்டு மாட்ட விக்கறே, நல்லா இருந்தவரைக்கும் அந்த சீவந்தா நமக்கு அரைவயித்துக் கஞ்சியாச்சும் ஊத்துச்சு!

வெள்ளம இல்லாத காலத்துல அதுக்கு நாம்பதான தொணை?

அத விட்டுட்டு இப்போ, காடு கரம்பா போனா அடிமாட்டுக்கு விக்கறேன்னு வந்து நிக்கறையே, மாட்ட வித்த காசுல எத்தன நாளைக்கு சோறு திம்பே?

வா,  இன்னைக்கும் எனக்கு ஒடம்பு நல்லாத்தான் இருக்குது!
ஐவேஸுல போய் நின்னா லாரிக்காரனுக்கு ஒதுங்கலாம்.

என்ன வித்துத் தின்னுட்டு அப்புறம் மாட்டுமேல கையவை!

கோனாரே, இனி இந்தப்பக்கம் மாடு புடிக்கறேன், ஆடு புடிக்கறேன்னு வந்தீரு, மருவாதி கெட்டுப்போவும்!"

மூஞ்சில ஈயாடாம உக்காந்திருந்தான் முத்துசாமி!

ரவைக்கு சுடுசோறு பொங்கிப்போட்டுட்டு அவளே சொன்னா,
“எதுக்கு இப்புடி பொண்டாட்டிய தின்னவராட்டம் உக்காந்திருக்கீரு?
நாளைக்கு ஈரோட்டுல சித்தாள் வேலைக்கு ஆள் வேணும்ன்னு சொல்லீருந்தாரு நாயக்கரு. ரெண்டு பேரும் போவோம்,
மழத்தண்ணி பேயரவரைக்கும் கல்லு மண்ணு சொமந்து சோறு திம்போம். எதுக்கு இப்புடி பித்துப் புடிச்சமாதிரி உக்காந்துக்கிட்டு?”

இன்னும் விடியக்கூட இல்லை!
மகராசி போய் சேந்துட்டா!

விடிஞ்சதும் வெட்டியானுக்கும், சக்கிலிக்கும் சொல்லிப்போட்டு வந்துட்டா, மத்ததெல்லாம் தம்போக்குல நடக்கும்!

மேசெலவுக்கு வேணும்னா மாட்டத்தான் கோனாருக்கு  விடணும்!

மெதுவா வாசலுக்கு வந்தபோது கெழக்க லேசா வெளிச்சம் வர ஆரம்பிச்சுது!

ஒரு டீத்தண்ணி குடிச்சா நல்லாருக்கும்ன்னு பட்டுச்சு!

"வாசப் படல சாத்திக்க" ன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சபோதுதான் உறைச்சுது!

அப்படியே, குந்தவெச்சு உக்காந்தவாக்குல வாய்விட்டு அழுக ஆரம்பிச்சாரு!

சத்தங்கேட்டு தெருக்கோடில நின்ன பட்டக்காரர் வீட்டு மணி திரும்பிப்பாத்துட்டு பயந்து ஓட ஆரம்பிச்சுது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக