வெள்ளி, 30 ஜூன், 2017

முகம்மது பின் லோடியின் ராஜ்யத்தில்!

முகம்மது பின் லோடி!


தலைநகரம்!

அமைதியின்றி அமர்ந்திருக்கிறார் மன்னர் முகம்மது பின் லோடி!

ஏதோ தகவலை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் தெரிகிறது!

அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள்!

“நம் சித்து விளையாட்டுக்கள் ஏன் அந்தத் தென்கோடி முனையிலிருக்கும் மக்களிடம் மட்டும் எடுபட மறுக்கின்றன?”
“தனக்கேற்ற தளபதிகள் அங்கு யாருமே அமையாதது ஏன்?”

இன்று பிரதான ஆலோசகர் ஆலம் ஷா ஒரு தீர்வோடு வந்து சந்திப்பதாய் சொல்லியிருக்கிறார்!

இதோ, அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பி இன்றோடு எட்டு நாட்கள் ஆகிவிட்டன!

பயணத் திட்டம் ஏதுமின்றி, இயல்புக்கு மாறாக இப்படி ஊரோடு அடங்கி உட்கார்ந்திருப்பது கை நடுக்கத்தை ஏற்படுத்தி அவர் கோபத்தை இன்னும் தூண்டி விட்டிருக்கிறது!

“யாரங்கே”

கூச்சல் கேட்டு ஓடிவந்த காரியதரிசி, “தேநீர் வேண்டுமா அரசே!”

“எனக்கே தேநீரா?

 உகாண்டாவுக்கும் உக்ரேனுக்கும் இன்று மாலைக்குள் பயணத்துக்குத் தயார் செய்யச் சொல்லியிருந்தேனே என்ன ஆயிற்று?”

“மன்னா, தாங்கள் இதுவரை அங்கு நான்குமுறை வந்துபோய்விட்டதால், என்ன காரணம் சொல்லி உங்களுக்கு அழைப்பு விடுப்பதென்று தூதரக அதிகாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள்!”

“ராஜாங்க அழைப்பு விடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசிக்க என்று சொல்லச்சொல்!

நாளை காலைக்குள் நான் விமானம் ஏறியாக வேண்டும்!

வாங்கிவைத்த புது பச்சைநிற ஷெர்வானி வீணாகக் கிடக்கிறது!”

தலையசைத்து காரியதரிசி திரும்ப, ஜன்னல் வழியே ஆலம் ஷா வருகிறாரா என்று பார்க்க ஆரம்பித்தார்!லோடி,

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு மக்கள் தேர்ந்தெடுத்த அரசர்!

பேசாமலே ஊமையாய்க் காலம் தள்ளிய முந்தைய அரசர் மீதிருந்த இனம் புரியாத வெறுப்பு,
ஊடகங்களின் திட்டமிட்ட புகழ் வெளிச்சம் 
அபாரமான மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரப்பிரிவு
இவற்றின் அசரவைக்கும் பிரச்சாரம்!

இவை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் லோடியை ஒரு தேவதூதனாக கட்டமைத்திருந்தன!

பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசிய தோரணை, மக்களுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர் என்ற பிம்பம், அவர் குறுநில மன்னராக இருந்த மாநிலத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவதாய் செய்யப்பட்ட விளம்பரங்கள்!

மக்கள் இந்த அறுபத்து நான்கு ஆண்டுகால ஜனநாயகத்தில் இன்றுதான் தங்களுக்கேற்ற ரட்சகனைக் கண்டடைந்ததாய் பூரித்து, மிருக பலத்தோடு அவரை ஆட்சியில் உட்காரவைத்தனர்!

இதோ, மூன்று முழு வருடங்கள் ஓடிவிட்டன!

நாடு தழுவிய அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில்!

அதை சந்திப்பதில் ஒன்றும் பெரிய சிக்கல்கள் இல்லை!

தங்களை வழிநடத்த பிரதான எதிர்க்கட்சி தேர்ந்தெடுத்திருக்கும் இளைய ராஜகுமாரன் இருக்கும்வரை லோடிக்கு இன்னும் நூறு தேர்தல்களிலும் எதிர்ப்பு இருக்கப்போவதில்லை!

இருந்தும் ஓரத்தில் கொஞ்சம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது!

இளவரசரின் சகோதரி வந்தால் மாக்கள் என்ன செய்யும் என்பது சின்னக் கேள்விக்குறி!

இந்த மூன்று வருடத்தில்,

பொதுக்கூட்ட மேடைகளில் சிங்கமெனக் கர்ச்சித்த அகண்ட மார்பும், தினவெடுத்த தோள்களும் நாடாளுமன்றத்தில் பூனைபோல் பதுங்கிக் கிடக்கும் அவலத்தை நாடு நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது!

எந்த விவாதத்திலும் மன்னர் பேசி மக்கள் பார்க்கவே இல்லை!

தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் தொலைதூர நாடுகளிலும் ஓயாது இன்னும் கர்ஜனை செய்யும் மாவீரர், நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திலும் வாயே திறப்பதில்லை!

மக்களால் மௌனசாமியார் என்று மறுதலிக்கப்பட்ட இன்னொரு தாடிக்காரர் கேட்கும் கேள்விகள் பதிலற்றுத் திரும்பும் அவலம் இந்த மூன்றாண்டுகளில் மக்களுக்குப் பழகிப் போய்விட்டது!

ஆனால், அதை மக்கள் யோசிக்கவே அனுமதிக்காமல், எப்போதும் மக்களை ஒரு பரபரப்பான சூழலில் வைத்திருக்கத் தெரிந்திருக்கிறது லோடியின் விளம்பர மற்றும் வியாபாரப் பிரிவுக்கு!

எந்தவித முன்னேற்பாடும் செய்துகொள்ளாமல், தன் முதல் அதிரடியை ஆரம்பித்தார்!

ஒரு நள்ளிரவில் மிகை மதிப்பு நாணயங்கள் செல்லாது என்று அறிவித்தார்!

நிச்சயம் அதற்கான ஹோம் ஒர்க்கை செய்துவிட்டே இதைக் கையில் எடுத்திருப்பார் என்று நம்பியவர்களை தன் குளறுபடிகளால் மண்டையில் அடித்தார்!

சினிமா தியேட்டரிலும், ரேஷன் கடைகளிலும் நின்று பழக்கப்பட்ட ஜனக்கூட்டம், தங்கள் பணத்தில் ஒற்றை நோட்டை எடுக்க, விடியவிடியத் தெருவில் நின்றது!

ஆனாலும், தங்கள் ரட்சகர் தங்களுக்கு நல்லதே செய்வார் என்று நம்பினர் மக்கள்!

அம்பானி, அதானி எல்லோரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துவிட்டனர். எனவே, நீங்களும் விட்டுக்கொடுங்கள் என்று முதல் அஸ்திரத்திலேயே அம்பானி அதானிகளோடு தாங்களும் இணை வைக்கப்பட்ட பெருமிதத்தில் விழுந்த மக்கள்,
இந்த சிரமங்களும், நாட்டின், கூடவே தங்களின், முன்னேற்றத்துக்குத் தரும் சின்ன விலை என்றே நம்பித் தொலைத்தார்கள்!

மிகக் கேவலமான திட்டமிடல் மற்றும்  எந்தவித முன்னேற்பாடும் இல்லாத அறிவிப்பால், திட்டத்தின் நோக்கமே பாழானது!

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் இந்த நாணய மதிப்புக்குறைப்பு நடவடிக்கை என்று ஊமைச் சாமியார் என்று வர்ணிக்கப்பட்டவர் பாராளுமன்றத்தில் கர்ஜிக்க, சிங்கம் அந்தப்பக்கமே வராமல் தலைமறைவானது!

கொஞ்சம் கொஞ்சமாக ஐம்பத்தாறு இன்ச் மார்பு சுருங்கித் தளர்வதை மக்கள் உணர ஆரம்பித்தது லோடியை முன்னிறுத்தி விளம்பரப்படுத்திய கூட்டத்துக்கு உறைக்க ஆரம்பித்தது!

உடனே, ஆரம்பித்தது ஆயிரம் ஆண்டு கால உத்தி!

பிரச்சினையை திசைதிருப்ப, என்னேரமும் மக்களை பரபரப்பாகவே வைத்திருந்தால் போதும் என்பதையும், மக்களின் மறதி தங்களின் மாமருந்து என்பதையும் உணர்ந்த ஆலோசனைக்குழு, அதற்கான களத்தை உடனே கட்டமைத்தது!

ஒழுக்கம், கற்பு பாரம்பர்யம் என்று ஒரு அஸ்திரம் முதலில் எடுக்கப்பட்டது!

காவிகள் கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு  பலநூறு ஆண்டுகள் பின்னால் போய் இடுப்பில் இலைதழைகளைக் கட்டிக்கொண்டு கையில் தடியோடு அலைந்தனர்!

ஆணையும் பெண்ணையும் எங்கு இணையாகப் பார்த்தாலும் வெகுண்டுபோய் அடி வெளுக்க ஆரம்பித்தார்கள்!

நாடே நம்பமுடியாமல் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை வேடிக்கை பார்த்தது!

அது கொஞ்சம் ஓய்ந்ததும் அடுத்துத்  தனக்கு மிகவும் பழக்கப்பட்ட மத ரீதியான பிரிவினை ஆயுதத்தைக் கையில் எடுத்தார்!

நினைத்ததுபோலவே அது மிகச் சிறப்பாக வேலை செய்தது!

நாடுமுழுக்க திடீர் பசுநேசர்கள் தோன்றினார்கள்!

வெட்டிக் கூறுபோட்டு வெளிநாட்டுக்கு அனுப்பும் தங்கள் புரவலர்கள் தலையசைப்போடு உள்நாட்டில் மட்டும் மாட்டுக்குத் தாய்வேஷம் போட்டுவிட்டனர்!

எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு காவி கட்டிக்கொள்ளும் வடக்கு உடனே உடனே என்று தலை சாய்த்தது!

லோடியின் கவைக்குதவாத, உணர்ச்சிவசப்பட்ட எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகளால் ஏற்பட்ட தொல்லைகளை வசதியாக மறந்து, வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டு மாட்டுக்குக் குடைபிடிக்கக் கிளம்பியது!

எந்த நாட்டிலும் பெரும்பான்மையாக இருக்கும் மதம் தீவிரவாதத்தைக் கையிலெடுப்பது எத்தனை பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு அண்டை நாடுகளிலேயே உதாரணங்கள் இருந்தும், மற்ற மதத்திலிருக்கும் சில சில்லறைத் தீவிரவாதிகளைக் காரணம் காட்டி இந்த முட்டாள்தனமான மூர்க்கம் ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் பட்டது!

முகலாயப் படையெடுப்பின் நிழல்கூட விழாத தென்கோடி ராஜ்ஜியம் எப்போதும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் இருப்பது!

இங்கு இதுவரை பிரிவினை வாதத்தின் கூக்குரல்கள் ஈடுபட்டதே இல்லை!

இங்கும் லோடிக்கு அமைந்தது ஒரு அற்புதமான தளம்!

சென்ற தேர்தலின்போது, ஒத்த சிந்தனையும் தோழமையும் இருந்தாலும் லோடியா, லேடியா என்று மல்லுக்கட்டி நின்ற தோழி, 
உடல்நலம் குன்றியோ, தற்கொலை செய்துகொண்டோ, கொலை செய்யப்பட்டோ 
இறந்தபோது, அதை உலகுக்கு அறிவிக்க லோடியின் தூதுவராக வந்தார் வெங்காய வியாபாரி!

அந்த மர்மநாட்களில் என்ன நடந்ததோ, அவசர அவசரமாக அந்தப் பெண்மணி புதைக்கப்படும்வரை இரண்டு நாட்களும் அந்த இடத்தை விட்டு அகலாமல் காவல் காத்தார் வெங்காய வியாபாரி!

இன்றுவரை அந்த மரணத்தின் மர்மமுடிச்சு அவிழ்க்கப்படவில்லை என்பதோடு, அந்தப் பெண்ணின் அடிமைக்கூட்டம் மூன்றாய்ப் பிரிந்து லோடியின் காலில் விழுந்து கிடந்தது!

அவர்களுக்கு அதில் ஏதும் பிரச்னை இல்லை!

எப்போதும் குனிந்து வளைந்து காலையே பார்த்துக்கொண்டு தானுண்டு தன் கொள்ளைகள் உண்டு என்று காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு விழும் கால் மாறியது எந்தக்குழப்பத்தையும் தரவில்லை!

நிமிர்ந்து முகம் பார்க்கும் வழக்கம் இல்லாதது எத்தனை சவுகரியம்!

ஆனாலும் அந்த அடிமைக் கூட்டத்தை அச்சத்திலேயே வைத்திருக்க முடிவு செய்த லோடி, பிரதான ஆலோசகர் அறிவுரையின்படி சில சித்து வேலைகளைச் செய்து வருமானவரித்துறை, புலனாய்வுத்துறைகளை அனுப்பி மூன்று குழுக்களையும் போட்டி போட்டுக்கொண்டு எப்போதும் தன் காலடியில் கிடக்கவைத்தார்!

இப்போது வெறும் கண்ணசைவிலேயே ஏறத்தாழ தன்னுடைய ஆட்சியே நடந்தாலும், நேரிடையாக அங்கு நிரந்தரமாகக் காலூன்ற இதைவிட ஒரு சாதகமான சமயம் வாய்க்காது என்பதால்,  எல்லோருக்கும் நல்லவனாக முயலும் ஒரு ஆன்மீகம் பேசும் நாடக நடிகரை வீடுதேடிப்போய் பேசிப்பார்த்தார்!

வழக்கம்போல் வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் ஊறவைத்து அவர் பரிமாற, நாத்திகம் பேசும் இன்னொரு நடிகருக்கும் வலை விரித்துப்பார்த்தார்!

அவரும் திடீர் ஞானோதயம் வந்தவராக அரசியல் பேசிப்பார்த்தார்!

ஏனோ, தன் இன்டலக்சுவல் வேடம் களைவது பிடிக்காமல், தன் மறைமுக ஜாதிப்பெருமை பேசும் வழக்கமான பாணிக்கே அவர் திரும்பிவிட, இன்னும் அந்த ஆன்மீகவாதியின் வருகையை நம்பியே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தாங்கமுடியாமல்தான் இப்போது ஆலம் ஷாவிடம் அந்தப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் வருகைக்குக் காத்திருக்கிறார்!

இந்தக் காத்திருப்பு எல்லாமே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ராஜகுரு தேர்தல் வரைக்கும்தான்!

அதிலும்தான் எத்தனை சிக்கல்!

உண்மையில் அரசராகியிருக்க வேண்டிய லோடியின் குருநாதர், கால் நூற்றாண்டு காலமாக அரியாசனத்துக்காக ஆவலோடு காத்திருக்கும் மோத்வானியை,இரக்கமே இல்லாமல் ஏறி மிதித்துவிட்டே  அரியணை ஏறினார் லோடி!

அப்போது மோத்வானிக்கு ராஜகுரு பதவி தருவதாக சமாதானப்படுத்திவிட்டே இவரை அரசராக்கியது ஆட்டுவிக்கும் அமைப்பு!

அப்போதே ராஜகுருவாக அவரை அனுமதிப்பதில்லை என்பதை மனதில் முடிவு செய்துகொண்ட லோடி, தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மோத்வானி மீதான சிபிஐ வழக்கை தூசிதட்டி எடுத்தார்!

புரவலரின் கண்ஜாடை புரிந்த ஊடகங்கள் பேயாட்டம் போட்டன!
புன்னைகையோடு ரசித்துக்கொண்டிருந்தார் லோடி!

நினைத்தது நடந்தது!
ராஜகுரு போட்டியிலிருந்து வேதனையோடு விலகினார் மோத்வானி!

ஆனாலும், தான் நினைத்தவரை ராஜகுரு ஆக்கப் போதுமான பெரும்பான்மை இல்லாமல் தவித்த லோடி, பல்லைக் கடித்துக்கொண்டு தென்கோடி அடிமைகளை வீட்டுக்கு விரட்டாமல் சகித்துக்கொண்டார்!

அடிமைகளையும் சும்மா சொல்லக்கூடாது!

போட்டி போட்டுக்கொண்டு நேரில் வந்து காலில் விழுந்து முறைவைத்துத் தொழுது போயினர்.

எதிர்க்கட்சிகள் வாயை அடைக்க, ஒரு தலித்தை ராஜகுரு ஆக்குவது என்ற முடிவும் நீர்த்துப்போக மிக ராஜதந்திரமாக, மாற்று மதத்தினர் மீது வெறுப்பும் வன்மமும் கொண்ட ஒருவரை தலித் என்ற அலங்காரப் போர்வைக்குள் மறைத்து முன்னிறுத்தியது வழிநடத்தும் கூட்டம்!

அவர் தேர்ந்தெடுக்கப்படவும், அடிமைகளின் வாக்குகள் அவசியம் என்பதால், அடுத்த மாதம்வரை அவர்களுக்கு ஆயுள் நீட்டிப்பு!

அதற்குப்பின், ஏதோஒரு அடிமைக்கூட்டத்தின் முதுகில் ஏறி சவாரி செய்வதா, அல்லது பலகாலமாக  முயல்வதுபோல் நடிகரை முன்னிறுத்தி, கூட்டணி அமைப்பதா என்பதை முடிவு செய்யும் நேரம் நெருங்கிவிட்டது!

அப்படி நடிகர் ஒத்துவரும் பட்சத்தில், சிதறுண்டு கிடக்கும் மூன்று அடிமைக்குழுவையும் உருத்தெரியாமல் அடிக்க, ஆயிரம் ஊழல் ஆதாரங்களை முன்பே திரட்டி வைத்தாகிவிட்டது!

அந்தக் கட்சியே காணாமல் போனால் பின், பழைய பரம்பரை எதிரி மட்டும்தான்!

வேகமாக உள்ளே வந்தார் ஆலம் ஷா!

என்னாயிற்று ஆலம் ஷா?

மன்னிக்கவேண்டும் அரசே, நடிகர் முடிவெடுப்பதற்கு இன்னும் இருபது வருடம் ஆகும்போல!

மேலும், அப்படியே அவர் வந்தாலும், நம்மை முழுமையாக ஆதரிப்பார் என்று என்னால் நம்பமுடியவில்லை!

எனில், நடிகரின் பரமவிரோதி அந்த மருத்துவரை வசை பாடலை ஆரம்பிக்கச்சொல்!

முன்னாள் நடிகர், ஈழம் பேசி வயிறு வளர்க்கும், மூளை மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டத்தை வழிநடத்தும் அந்த நபரை இன்னும் வேகமாகப் பேசச்சொல்!

நமக்கு ஆதரவு தரமாட்டார் எனில் அவர் வராதிருப்பதே நமக்கு நலம்!

ஆனால், பிரதான எதிர்க்கட்சியின் பின்னால் மக்கள் போய்விடுவார்கள் என்று உளவுத்துறை சொல்கிறது அரசே?

எப்போதும் உளவுத்துறை சொல்வதற்கு எதிர்மாறாகத்தானே நடக்கும் ஆலம்,

இல்லை, இந்தமுறை அவர்கள் சொல்வது சரிதானோ என்று ஐயமாக இருக்கிறது!

நீயே பயப்படுவதால், வேறு வழிதான் தேடவேண்டும்!

அலைக்கற்றை என்று காற்றில் படம் வரைந்தோமே அதன் தீர்ப்பைத் தயாரிக்கச் சொல்!

அரசே, அது சற்றே சிரமம்! நமது தரப்பு மிகவும் கேவலமாக நீதிமன்றத்தில் அவமானப்பட்டிருக்கிறது!

நம் நாட்டில் குமாரசாமிகள் எங்கும் உண்டு ஆலம்!

தற்காலிகமாக ஒரு தீர்ப்பைச் சொல்லச் சொல்!
அப்பீலில் அவர்கள் மீள்வதற்குள் தேர்தல் முடிந்துவிடும்!

இன்னொரு விஷயம் அரசே!

உக்கிரப் பிரதேசத்தில் உங்களுக்கு ஒரு போட்டியாளரை நாமே உருவாகிவிட்டோமோ என்று தோன்றுகிறது!

ஆலம், அவர் இன்னும் அரசியலில் அரிச்சுவடியில் இருக்கிறார்!

இப்போதுதான் பசு, தலித் என்று பழங்கதை பேசிக்கொண்டிருக்கிறார்!

அப்படி அவர் உருவெடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்!

அரசியல் குரு மோத்வானியைவிடவா இவர்?

மேலும் இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் ஒற்றை வரி, ஓகோ என்ற வாழ்க்கை என்ற திட்டம், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மக்களை வேறு எதையுமே சிந்திக்கவிடாமல் பைத்தியக்கார நிலையிலேயே வைத்திருக்கும்!
அது போதும் அடுத்த தேர்தல் வரை!

கவலையை விடு!
ராஜகுரு தேர்தல் வேலைகளை முடுக்கிவிடு, நான் ஒரு வாரம் சுற்றுப்பயணம் நாளை கிளம்புகிறேன் ஆலம்ஷா !

அப்படியே அரசே!

இன்னொரு விஷயம்!

நான் போகும் நாட்டுக்கு வழக்கம்போல், தற்செயலாக அதானியை வரச்சொல்!

அங்கு கனிமங்களுக்குக் குறைவில்லை!
நம் அரச வங்கியின் அந்த நாட்டுக்கிளை யாருக்குக் கடன் கொடுப்பதென்று தடுமாறிக்கொண்டிருக்கிறதாம்!

புன்னகைத்தவாறே உடை மாற்றப் போனார் முகம்மது பின் லோடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக