சரக்கு மற்றும் சேவை வரி!
ஒரு வழியாக அலை ஓய்ந்துவிட்டது!
மீம் க்ரியேட்டர்களெல்லாம் பிக் பாஸ் பக்கம் ஒதுங்கிவிட்டார்கள்!
இந்த முதல்நாள் முதல்காட்சி விமர்சன வெறி அடங்கட்டும் என்று
காத்திருந்தேன்.
வழக்கம்போல் எல்லை மீறிய பொங்கல்கள்!
இதில் மிகப்பெரிய கொடுமை, தமிழின் நம்பர் ஒன் வாரஇதழ் என்று
அட்டையில் தானேசொல்லிக்கொள்ளும் நூறாண்டு பாரம்பர்யம் உள்ள ஒரு இதழ், தன் இணையதளத்தில்
28 % GST யும் 30% வருமானவரியும் சேர்த்து, 58 % என்று ஒரு கட்டுரை வெளியிடுகிறது.
மேலும், நாடெங்கும் ஒரே வருமானம் இல்லாத நிலையில் ஒரே வரிவிதிப்பு
எப்படி என்று ஒரு அற்புதமான கேள்வியை ஆதரிக்கிறது!
ஒருகாலத்தில் அறிவாளிகள் படிக்கும் இதழ் என்று அதற்கு ஒரு
பிம்பம் வேறு!
தேவையான அளவு விமர்சனங்களும், மீம்ஸ்களும் ஃபோட்டோ ஷாப்களும்
பகிரப்பட்டு, ஒருவழியாய் மோடியை ஒரு முட்டாளாகவும், மீட்பராகவும் படம் வரைந்து பாகம்
குறித்தாகிவிட்டது!
மோடியை இதன் தகப்பனாக்கிப் போற்றவோ, தூற்றவோ வேண்டியதில்லை!
வாஜ்பாயி காலத்தில், 2000ஆம் ஆண்டில் விதை போடப்பட்டு, அவ்வப்போதைய ஆளும் கட்சிகளால்
(காங்கிரஸ் உட்பட) ஆதரிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளால் (மோடி உட்பட) எதிர்க்கப்பட்டு,
இப்போது 2017ல் மோடி அரசு வழக்கம்போல் அவசரக்கோலத்தில் நடைமுறைப்படுத்தியேவிட்டது!
G.S.T.
மத்திய கலால் வரி, வணிக வரி, மதிப்பு கூட்டு வரி,
உணவு
வரி, மத்திய விற்பனை வரி,
ஆக்ட்ராய், பொழுதுபோக்கு வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி,
விளம்பர வரி, இன்னும், போனவரி,
வந்தவரி என்று எல்லாவற்றையும் ஒழித்து, நாடு முழுமைக்கும் ஒரே வரியாக சரக்கு
மற்றும் சேவைவரி!
முதலில்
பல்முனை வரிவிதிப்பு பற்றிக் கொஞ்சம்!
ஒரு
பொருளைத் தயாரிக்க பல நிலைகள்!
மூலப்பொருள்
கொள்முதல், தயாரிப்பு, மற்றும் மதிப்புக்கூட்டல், அழகாக பேக் செய்தல்,
விநியோகஸ்தர்களுக்கு அனுப்புதல், மொத்த வியாபாரிகள், பிறகு சில்லறை வணிகர்கள், ஷோ
ரூம்! இந்தக் கடைசி நிலையில்தான் அது நுகர்வோரை அடைகிறது!
இதுதான்
ஒரு பொருளின் மொத்த சுழற்சி!
இதில்
ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி, அடுத்த கட்டத்தில் அதன் கொள்முதல் விலையோடு
சேர்ந்துவிடுவதால், இறுதியாக விதிக்கப்படும் வரி மட்டுமே வெளிப்படையாகத்
தெரிவதால், அந்தப் பொருளின் மீதான வரி முழுமையாக நுகர்வோருக்குத் தெரிவதில்லை!
இந்த
நிலையில், இதுவரை இந்தியாவில் வரியே விதிக்கப்படாதது போலவும், இப்போது இதுதான்
முதல் வரி விதிப்பு என்பது போலவும், பொருள்களின்மீது விதிக்கப்படும் மறைமுக வரி,
வருமானத்தின்மீது விதிக்கப்படும் நேர்முக வரி இரண்டும் ஒன்றே என்பதுபோல்
எழுதுவதும், பரபரப்புக்காகவும், பத்திரிக்கை வியாபாரத்துக்காகவும் செய்யப்படும்
கீழ்த்தர உத்தி!
இதில்
சோஷியல் மீடியாக்களும் விதிவிலக்கல்ல!
ஒரு
முன்னணி தொலைக்காட்சி சேனலில் ஒரு பொருளாதார நிருபரும் இதே போலொரு கருத்தைப்
பகிர்ந்ததாக அறிந்தேன்!
மக்களை
முழு முட்டாளாகவே வைத்திருப்பதுதான் இவர்களுக்கு வசதி!
மத்திய
அரசு 16 % வரி, அதன்மீது மாநில அரசின் விற்பனை வரி 12 % இவை இணையும்போது மொத்த வரி 29.92 % இதில்
நுகர்வோர் கண்ணில் படுவது 12 % மட்டுமே!
இப்போது
இறுதி விற்பனை நிலையில் ஒரே தவணையாக விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி
(GST) அதிகபட்சமாக 28 % பளிச்சென்று கண்ணில் படுகிறது.
இதுதான்
இத்தனை பொங்கலுக்கும் காரணம்!
இப்போது அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, அனைத்துப் பொருட்கள்
மீதும் (பெட்ரோல், மது வகைகள் நீங்கலாக) - மாநில அரசுகள் எதிர்த்ததால் - ஒரே வரி விதிப்பு
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது!
இதனால் மாநில அரசுகளுக்கு நேரிடும் இழப்பு, அடுத்த ஐந்தாண்டு
காலத்துக்கு மத்திய அரசால் ஈடு செய்யப்படும்.
நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்கும்!
ஒரு பொருள், ஒரே மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கேயே
விற்கப்பட்டால் அதன்மீதான ஜிஎஸ்டி மத்திய, மற்றும் மாநில ஜிஎஸ்டி என்று இரு சம பாகமாக
(18 % எனில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தலா 9%) பிரித்துக்கொள்ளப்படும்!
ஆனால், பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு,
வேறு மாநிலத்தில் விற்கப்பட்டால், அதே 18 %
ஐஜிஎஸ்டி என்ற பொதுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மத்திய அரசுக்கு 9%, பொருள்
விற்கப்பட்ட மாநிலத்துக்கு 9% என்று பிரித்து வழங்கப்படும்!
இதில் இன்புட் டேக்ஸ், அவுட்புட் டேக்ஸ் பற்றியெல்லாம்
எழுதினால் இன்னும் தியரியாக போரடிக்கும்!
மொத்தத்தில், ஒருமுனை வரிவிதிப்பால், கண்டிப்பாகப் பொருள்களின்
விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்!
0%, 5%, 12%, 18%, 28% என்றிருக்கும் வரிவிதிப்புக்களில் 28 % என்பதை
20 அல்லது 22% ஆக்கியிருக்கலாம் என்பது ஒரு குறை!
ஆனால், ஏறத்தாழ 80 விழுக்காடு பொருட்கள் 18% வரிவிதிப்பிற்கு
குறைவாகவே இருப்பது நல்ல விஷயம்!
அதானி, அம்பானியின் பெட்ரோலுக்கு GSTயிலிருந்து விலக்கு
என்பது இன்னொரு குற்றச்சாட்டு!
பெட்ரோல் மற்றும் மதுபானங்களை GST வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது
என்று போராடியது மாநில அரசுகள்!
மாநிலங்களின் வருமானம் பெருமளவு இவற்றின்மீதான வரியை
நம்பியே இருக்கிறது!
GSTயின் அதிகபட்ச வரம்பான 28 % விதிக்கப்பட்டாலே, மாநிலங்களின்
பங்காக 14 %தான் கிடைக்கும்!
ஆனால் தமிழக அரசு பெட்ரோல் மீது 38 %, மது வகைகள் மீது
50 விழுக்காட்டுக்கு மேலும் வரி விதிக்கும்போது, இதற்கு எப்படி ஒப்புக்கொள்ளும்?
ஏன், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில்
14% வரி விதித்து முன்மாதிரியாக இருக்கக்கூடாது?
மாநில உரிமைகள் என்ற வரம்பில்,
மஹாராஷ்ட்ரா அரசு வாகனப் பதிவு கட்டணங்களை 2% உயர்த்தியுள்ளது!
தமிழக அரசு திரையரங்குகளின் மீதான கேளிக்கை வரியை 28 %
GSTக்கு மேல் இன்னொரு 30 % ஆகமொத்தம் 58 % என விதித்துள்ளது!
இதற்குத்தான் இங்கு
மக்களும், திரைப்படத் துறையினரும் அதிக அளவில் பொங்கித் தீர்த்தார்கள்!
ஏழைகளின்
ஒரே பொழுதுபோக்காக சினிமாவின் மீது இந்த வரிவிதிப்பு அநியாயம்
என்ற குரல் விண்ணை முட்டியது!
ஒரு சின்னக் கணக்கு!
நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பம் திரையரங்குக்கு படம்
பார்க்க ஒருமுறை போவதாக வைத்துக்கொள்வோம்!
டிக்கெட், ஆன்லைனில் 153 X 4 = 612 ரூபாய்!
புக்கிங் சார்ஜ் 30 X 4 = 120 ரூபாய்! (அவர்களுக்கு ஆள்
சம்பளம், டிக்கெட் அச்சடிப்பு செலவைக் குறைப்பதால் நியாயமாகத் தள்ளுபடி தரவேண்டும்!)
பாப்கார்ன் 135 X 4 = 540 ரூபாய்! (இது ஐந்து நட்சத்திர
விலையைவிட அதிகம்)
தண்ணீர் ஒரு லிட்டர் 75 X 4 = 300 ரூபாய்! (அனைவருக்கும்
இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கவேண்டும் என்பது சட்டம்!)
காஃபி 85 X 4
= 340 அல்லது பெப்ஸி, கோக் 110 X 4 = 440 ரூபாய்!
பார்க்கிங் 50 ரூபாய்!
மொத்தம், ஏறத்தாழ 2000 ரூபாய்!
இதே குடும்பத்துக்கு ஒருமாத
மாளிகைப்பொருள்களின் விலை இது!
இதுதான் ஏழைகளின் பொழுதுபோக்கா?
சத்தம்போடாமல் டிக்கெட்டின் அடிப்படை விலையை 120 ரூபாய்
என்று உயர்த்திவிட்டார்கள்!
வயதானவர்கள், குழந்தைகள் என யார் போனாலும், குடிக்கத் தண்ணீர்கூட
எடுத்துப்போகக்கூடாது!
பெரும்பாலான திரையரங்குகளில் ஏசி பாதிநேரம் வேலை செய்வதில்லை!
இந்த லட்சணத்தில் இவர்களுக்கு என்ன முகம் இருக்கிறது போராட?
அனைத்து
மாநிலங்களிலும் திரைப்படங்களை உருவாக்கும் திரைத்துறை தொழிற்சாலை, இந்த ஒரு மாநிலத்தில்தான்
வருங்கால முதல்வர்களை உருவாக்குகிறது!
இதில்
தமிழ்ப் பெயர் வைத்தால், வன்முறையை, காதல் என்ற பெயரில் பெண்களைச் சிறுமைப்படுத்துவதை,
சாதியை உயர்த்திப் பிடிப்பதை எல்லாம் வரிவிலக்கோடு செய்யமுடியும் சுதந்திரம் வேறு!
இவர்களுக்கு
இன்னும் 42 % அதிகம் வரி விதித்தாலும் தவறில்லை!
இவர்களுக்குக் குரல் கொடுப்பதைவிட ,
குடிசைத்தொழில்,
20 லட்ச ரூபாய்க்குக் கீழான வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கு வரி விலக்கு என்பதோடு,
28 % என்பதை 24 % ஆக்குவதோ, அல்லது 28 % வரிவிதிப்பு வரம்பில் இருக்கும் சில பொருட்களை
18 % வரம்புக்கு மாற்றக்கோருவதோ நியாயமாக இருக்கும்!
இந்த GST வரிவிதிப்பால் பாலாறும் தேனாறும் ஓடுவது நிச்சயமில்லை!
ஆனால், பல்முனை வரிவிதிப்பை கண்காணிக்க அரசுக்கு ஆகும்
செலவு, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் நாள் கணக்கில் காத்திருப்பதில் ஏற்படும்
மறைமுக விலை உயர்வு, டீசல் செலவு, அங்கு அழப்படும் லஞ்சம் இவையெல்லாம் குறையும்போது
ஏற்படும் விலை குறைப்பு மக்களுக்கு நல்லதுதானே?
மேலும், எளிமையான கணக்கு, அக்கவுண்ட் பராமரிப்பு இவை எல்லாம்
நன்மைகளில் சேராதா?
இரட்டைக் கணக்குகளை பராமரித்து வரி ஏய்ப்பு செய்வது குறைந்து
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கூடும்போது, அரசின் கடன் சுமை குறைவதும் GST தரும் இன்னொரு நல்ல பலன்!
முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் இந்த சரக்கு
மற்றும் சேவை வரி வரவேற்கத் தகுந்ததே!
எந்தப் புரிதலும் இல்லாமல் பழைய வரியோடு GSTயையும் வசூலித்த உணவுவிடுதிகளைக் கேள்வி கேட்காமல் பில்லை எடுத்து வந்து இங்கு பகிர்வதும், கேள்விமுறையே இல்லாமல் அடிப்படையின்றி விலைகளை ஏற்றி லாபம் பார்ப்பதும் சந்தர்ப்பவாதம்!
மோடின்னா அடிப்போம் க்ரூப்புக்கு வேறொரு வாய்ப்பைத் தர மோடி தயாராகவே இருக்கிறார்!
நிதியாண்டை ஜனவரி - டிசம்பர் என்று மாற்றும் தேவையற்ற வேலையை 2018 முதல் செய்யப்போகிறார்.
அப்போது பொங்கிக்கொள்ளலாம், இப்போது பொங்குமுன், GST பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்ளலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக