செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

சம்பவாமி யுகே யுகே!மைசூர்:
நகரின் மையத்தில் இருக்கும் ஒரு அழகிய ஷாப்பிங் மால் அது!

வாரநாளின் கூட்டமில்லாத ஒரு முன்மதிய நேரம்!
ஒரு மந்தமான மனநிலை மொத்த ஏரியாவையும் போர்த்திருந்தது!

இரண்டாம் தளத்தில் இருந்த பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைக்கு முன்புறம் சற்றே தள்ளி இருந்த இருக்கையில் உட்கார்ந்து கையிலிருந்த கோக்கை மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருந்தான் பாஸ்கர்!

நாற்பதைத் தாண்டிய வயது! பார்க்கும்போதே நல்ல உயர்குடிப்பிறந்தவன் என்பது தெரிந்தது!

அவன் பார்வை எஸ்கலேட்டரில் நிலைகுத்தி இருந்தது!
யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் என்பது புரிகிறது!
யாரை?

சரியாக அரை மணிநேரம் முன்புதான் தகவல் வந்தது!

சசிரேகா பர்தா அணிந்துகொண்டு ஷாப்பிங் கிளம்பிவிட்டதாக!

கூட்டம் குறைவான அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து அவள் வரும் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

ஒரு லட்சம் ரூபாய் அந்த ஒற்றை போன் காலுக்காகக் கொடுத்திருந்தான்!

இன்றைக்கு நீண்டநாள் கணக்கை முடித்துவிடுவது என்ற முடிவோடுதான் காத்திருக்கிறான்!

இதோ, மெல்ல அந்த எஸ்கலேட்டரில் பர்தா அணிந்த இரண்டு பெண்களும், அவர்களுக்கு சம்பந்தமே இல்லை என்று காட்டிக்கொள்ளும் ஒரு மரியாதைப்பட்ட தூரத்தில் இரண்டு சீருடை அனியாத பெண் காவலர்களும்!

மெல்ல அந்த இடத்தை விட்டு எதிர் திசையில் நகர்ந்தான்!

பர்தா அணிந்த இருவரில் யார் சசி?

அப்போது அந்தக் குரல் கேட்டது!
பத்து வருடங்களில் பலமுறை போனிலும் நேரிலும் கேட்ட அதிகார போதையும் திமிரும் கலந்த குரல்!
"எத்தனை சுடிதார் எடுக்கலாம்?"

சற்றே உயரம் அதிகமாகவும் கொஞ்சம் ஒல்லியாகவும் இருந்த பர்தாவுக்குள் இருந்து அந்தக்குரல் கேட்டது!

இறைவனுக்கு நன்றி!

பாக்கெட்டில் மறைத்துவைத்திருந்த அந்த உறுதியான ஸ்டில்லட்டோவைத் தொட்டுப்பார்த்துக்கொண்டு மெதுவாக அவர்களுக்குப் பின்னால் அந்தக்கடைக்குள் நுழைந்தான்!

அவர்கள் பின்னோடு போகாமல் அவர்கள் முதுகுப்புறம் இருந்த புடவை பிரிவில் "அந்தப் புடைவையை எடுங்கள்!"
வாய் கேட்டுக்கொண்டிருக்க, கண், எதிரில் இருந்த கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருந்தது!

இப்போது பர்தா விலக்கப்பட்ட முகங்கள் கண்ணாடியில் பளிச்சென்று தெரிந்தது!

சசிரேகாதான்!
சற்றே மெலிந்திருந்தாலும், அந்த எரிச்சலூட்டும் திமிர் குறையாத முகம்!

துணைக்கு வந்திருந்த காவலர் இருவரும் கொஞ்சம் தள்ளியிருந்த சோஃபாவில் உட்கார்ந்து கன்னடத்தில் மாட்லாடிக்கொண்டிருந்தார்கள்!

கையில் விரித்தாற்போல் ஒரு புடவை, புடவை மறைவில் உறுதியாகப் பிடித்த கத்தி!

ஒரு எதிர்பாராத கணத்தில் சட்டென்று நகர்ந்த பாஸ்கர், சசியின் தோளைப்பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பினான்!
யாருமே சுதாரிக்குமுன் வயிறு, மார்பு, முகம் என்று கிடைத்த இடத்திலெல்லாம் சொருகி இழுக்க, தரையெல்லாம் ரத்தச் சிதறலாய் விழுந்தாள் சசி!

ஓடிவந்து தடுத்த இரண்டு காவலர்கள் பாஸ்கரின் வலிமைக்கு ஈடு கொடுக்கமுடியாது விலக, கொஞ்சம் நிதானமாகவே நடந்து வெளியேறினான்.

அடுத்த அரை மணியில் சென்னை செல்லும் விமானத்தில் இருந்தான்!
விமானம் நகர, பின்னோக்கி நகர்ந்தன நினைவுகள்!


கோவை:


கோவையின் மிக மதிப்பு மிக்க சில குடும்பங்களில் ஒன்றின் விழுது பாஸ்கர்!

ஏனோ, தொட்ட சில தொழில்கள் நஷ்டத்தில் முடிய, குடும்பம் அவனைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்த நேரம்!

கொடைக்கானலில் அவன் பங்குக்கு வந்த ஒரு அழகிய எஸ்டேட்டை விற்று வேறொரு தொழிலில் முதலீடு செய்ய நினைத்திருந்தபோதுதான் சசிரேகாவின் பார்வையில் அந்த இடம் விழுந்தது!

அதிகார மையத்தை ஆட்டுவிக்கும் மையமாக இருந்த சசி, ஒருமுறை வேறொரு டீலிங் முடிக்க கொடைக்கானல் செல்லும் வழியில் அந்த எஸ்டேட் அவர் பார்வையில் விழுந்தது!

வழக்கம்போல் பேரமே பேசாமல் பாஸ்கர் சொன்ன இருநூறு கோடி விலை ஒப்புக்கொள்ளப்பட்டது!

எந்தக் கேள்வியும் கேட்காமல், ஒற்றைக் கையெழுத்து வாங்காமல் ஐம்பது லட்சம் அட்வான்ஸ் கேஸாக கொடுக்கப்பட்டபோது பாஸ்கர் திகைத்துத்தான் போனான்!

தான் சசி பற்றிக் கேள்விப்பட்டிருந்த தகவல்கள் அத்தனையும் பொய் என்று தீர்மானமான முடிவுக்கு வந்தான்!

அடுத்த மாதமே, சென்னைக்கு வரச்சொல்லி அழைப்பு வர, அதிகார மையம் இருக்கும் வாலஸ் தோட்டத்துக்குள் கொஞ்சம் படபடப்போடுதான் நுழைந்தான்!

புன்னகையோடு வரவேற்றார் சசி!

இன்று நாள் நன்றாக இருப்பதால் இன்றே பத்திரப்பதிவு வைத்துக்கொள்ளலாம் என்றவர், பக்கத்தில் அமர்ந்திருந்தவரை இந்தியன் வங்கி மயிலாப்பூர் கிளை மேனஜர் என்று அறிமுகம் செய்து வைத்தார்!

பாஸ்கரின் அக்கௌன்ட் விபரங்களை வாங்கிக்கொண்டு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் மீதித்தொகை ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும் என்று கூறி எழுந்துபோனார் அவர்!

அதன்பின் மளமளவென்று காரியங்கள் நடந்தன!

அங்கேயே வரவழைக்கப்பட்ட ரிஜிஸ்திரார் முன்பு பத்திரம் பதியப்பட்டது!
மொத்த எஸ்டேட்டும் சசிரேகா, இன்னும் சிலர் பெயரில் பதிவு செய்யப்பட, கைகூப்பி மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டான் பாஸ்கர்!

அன்று மாலையே சொன்னபடி பணம் அவன் கணக்குக்கு மாறுதல் செய்யப்பட்டது!

ஒருகோடியே ஐம்பது லட்சம்!

ஒருகணம் என்ன நடந்தது என்றே புரியவில்லை பாஸ்கருக்கு!

இருநூறு கோடி சொன்ன இடத்துக்கு இரண்டு கோடி!

ஏதோ புரிதலில் பிழை என்று சசிரேகாவின் எண்ணுக்கு போன் செய்ய, வேறு யாரோதான் எடுத்தார்கள்!

அவன் சொன்ன தொகை செட்டில் செய்யப்பட்டுவிட்டது! இனி மேற்கொண்டு பேச ஏதுமில்லை என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது!

அதன்பின் நேரிலும் போனிலும் பலமுறை பேசியபோது, கொஞ்சம் கொஞ்சமாக சசியின் கோரமுகம் வெளிப்பட்டது!

விலக்கிவைத்த குடும்பம் இவனை அழைத்து, தங்களாவது உயிர் வாழ் வேண்டுமானால், இனி சசியை நெருக்கடி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டான்!

அதற்காக அவன் குடும்பமே அவனுக்கு இழப்பீடாக ஐம்பது கோடி தரத் தயாராக இருந்தது!

இதோ, பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள்!

அனாதையாகத் தெருவில் விடப்பட்ட பாஸ்கர் தன் கணக்கை முடித்த திருப்தியோடு, வக்கீல்கள் கணேஷ், வஸந்தைப் பார்க்க சென்னையில் தரை இறங்கிவிட்டான்!

சென்னை:


மாடு கன்னு போட்ட இடம் மாதிரி என்று கணேஷால் வர்ணிக்கப்படும் பாரிஸ் கார்னர் அலுவலகம்!

ஏதோ கேஸ் புத்தகத்தை படித்துக்கொண்டு கணேஷ்,
சோஃபாவில் காலை நீட்டிக்கொண்டு படுத்தவாக்கில் ஒரு அட்டைபோட்ட புத்தகத்தில் வஸந்த்!

முதலில் வஸந்த்தான் பாஸ்கரைப் பார்த்தான்!

“என்ன, பாஸ்கர் சார், அன்னைக்கு வசனம் பேசிட்டுப் போனதுக்கப்புறம் இன்னைக்குத்தான் வர்றீங்க!
பார்த்தீங்களா இந்தத்தடவையும் உங்க டாட்டரைக் கூட்டிக்கிட்டு வரலை!
பழிவாங்கற ஆசையெல்லாம் போயிடுச்சா?”

நிதானமாக எதிர் சோஃபாவில் உட்கார்ந்த பாஸ்கர் சொன்னான்
 "முடிச்சுட்டேன்!"

வ்வ்வ்வாட்?

சசிரேகாவைப் போட்டுத் தள்ளிட்டேன்!

மை காட்!

அவசரமாக டிவியை ஆன் செய்தான் வஸந்த்!

மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிரேகா சிறைக்குள் சக பெண் கைதி ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன!
நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது ஸ்க்ரோல்!

கணேஷ்தான் முதலில் சுதாரித்தான்!

என்ன பாஸ்கர் இது?
எப்படி ஜெயிலுக்குள் போனீங்க?
எப்படி இங்கே வந்தீங்க?

சிம்பிள் ஸார்!
அவங்க அடிக்கடி வெளியே நடமாடும் செய்தி கிடைச்சதும் மைசூரிலேயே டேரா போட்டேன்!

காசு எல்லா பாஷையும் பேசும் கணேஷ் சார்!
அவங்க வெளியே வர்ற நேரம், போற இடம் எல்லாம் தெரியவந்தது!

யஷ்வந்த்பெட் மார்க்கெட்ல நல்ல ஜெர்மன் ஸ்டில்லட்டோ ஒன்னு புடிச்சேன்!
மொத்தம் எட்டு குத்து!

முடிச்சுட்டு நிதானமா வந்துட்டேன்! இதோ, இப்போ இங்க இருக்கேன்!

இம்பாசிபில் மேன்!
இது எப்படி?

வஸந்தும் பாஸ்கரும் சதிப்பார்வை பார்த்து சிரித்துக்கொண்டதை கவனித்த கணேஷ்,
டோண்ட், டோண்ட் டெல் மீ!

இது உன் வேலையாடா முட்டாள்?
எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கே?
இனி இவர் எங்க போய் ஒளிய முடியும்?

சொல்லிக்கொண்டே போனை எடுத்தான் கணேஷ்!

பாஸ், யாருக்கு போன்?

வேற யாருக்கு? ராஜேந்திரனுக்குத்தான்!
ஸார் முதலில் சரண்டர் ஆகட்டும்! அதுதான் அவருக்கு சேஃப்!

பாஸ், என்ன ஆச்சு உங்களுக்கு?
இவர் என்ன செஞ்சார்?

முட்டாளே, கொலைடா, அதுவும் யாரை?

யாரை?

சசிரேகாவைடா!

பாஸ், கொஞ்சம் ப்ராக்டிகலா பேசுங்க!
டிவி பார்த்த்தீங்கதானே?
சசிரேகா சிறையில் கொல்லப்பட்டார்!
சார் எப்படி சிறைக்குள்ள போகமுடியும்? அது யாரோ வேற ரவுடி கஞ்சா கேஸோ, பிராத்தல் கேஸோ செஞ்சது!
இவருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

இல்லை, இது சரியில்லை! நான் ராஜேந்திரனை வரச்சொல்லப்போறேன்!

பாஆஸ்!

விடுங்க வஸந்த்! எனக்கும், பழி வாங்கின திருப்தியோட நான் சரணடையறது சரின்னுதான் படுது!

என்ன சார் திடீர்ன்னு கட்சி மாறுறீங்க?

அதற்குள் ராஜேந்திரனை லைனில் பிடித்திருந்தான் கணேஷ்!

ராஜேந்திரன், கொஞ்சம் என் ஆஃபீஸுக்கு வரமுடியுமா?
உடனே!

கணேஷ், உங்களுக்கு நியூஸ் தெரியாதா, சசிரேகாவை ஜெயில்ல யாரோ கொன்னுட்டாங்க!
ஊரே கலவரமா இருக்கு!
லா அண்ட் ஆர்டர் பிரச்னை! இப்போ நான் வர முடியாது!

ராஜேந்திரன், நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேளுங்க!
சசி ஜெயில்ல கொல்லப்படலை! மைசூர் மால்ல வச்சு அவரைக் கொன்னவர் இப்போ இங்கே உட்கார்ந்து காஃபி குடிச்சுட்டிருக்கார்!

அவரை உங்கிட்ட சரண்டர் பண்ணலாம்ன்னு பிளேன்!
நீங்க பிஸின்னா, நான் வேணும்னா எக்மோர் கோர்ட்ல ஆஜர் படுத்திடறேன்!

ஷிட்!
கணேஷ், டோண்ட் டூ தட்! நான் இப்போ வர்றேன்! அதுக்கு முன்னாடி நீங்க யாருக்கும் சொல்லவேண்டாம்!
இருக்கற குழப்பம் போதும்!

என்ன பாஸ், ராஜேந்திரன் ஜகா வாங்கிட்டாரா?

வஸந்த் புன்னகையோடு கேட்டான்!

என்ன தப்பு செஞ்சார் என் கட்சிக்காரர்?

என்னது, உன் கட்சிக்காரரா!

கோச்சுக்காதீங்க பாஸ், ஒரு சின்ன கோர்ட் ரிகர்சல் பார்ப்போம்!

இப்போ, நீங்க சாரை கோர்ட்ல சரண்டர் பண்றீங்க! சார் என்ன சொல்லுவார்?

ம்ம்... சசிரேகாவை நான்தான் கொலை செஞ்சேன்னு!

எங்கே? பெண்கள் ஜெயிலுக்குள்ளேயா?
பாஸ், ஏதும் கஞ்சா கிஞ்சா அடிச்சிருக்கீங்களா?

டேய்!

கத்தாதீங்க பாஸ்! கர்நாடகா கவர்மெண்ட் அப்படித்தானே சொல்லுது?

ஷாப்பிங் மால்ல வச்சு கத்தியால குத்தியிருக்காருடா!

ஆமாம்! அது வேற யாரோ, யாரையோ!
ஜெயிலில் இருக்கற சசிரேகா, ஷாப்பிங் மாலுக்கு எப்படி வரமுடியும்?
அவர் ஜெயில்ல நடந்த கலவரத்துல செத்துப்போனதுக்கு சார் என்ன பண்ணுவார்?

அவர் காலைல இருந்து என் கூடத்தானே இருக்கார்!
வாங்க பாஸ் - இது ராஜேந்திரனுக்கு!

என்ன கணேஷ், ஃபோன்ல என்னன்னவோ சொல்றீங்க?

அது, அந்த ரங்காச்சரி கேஸ் பேப்பரை விடியவிடியப் படிச்சதுல பாஸுக்கு கொஞ்சம் மண்டை சூடாகிடுச்சு!

ராஸ்கல், கொல்லப்போறேன் உன்னை
இருங்க ராஜேந்திரன், நான் கொஞ்சம் முன்கதையோட சொல்றேன்!

மோவாயைத் தடவிக்கொண்டே கதை கேட்ட ராஜேந்திரன், பாஸ்கர் பக்கம் திரும்பிக்கேட்டார் 
கணேஷ் சொல்றதெல்லாம் உண்மையா?

ஆமாம் ஸார்!

இப்போ என்ன செய்யப்போறீங்க?

நீங்க என்ன சொல்றீங்களோ அதை!

அப்போ, நிம்மதியா தூங்கி எந்திருச்சு ஊருக்குப்போய் சைலண்டா வேலையைப் பாருங்க! இதை யாருகிட்டயும் உளறிக்கிட்டு இருக்காம!

ராஜேந்திரன், வாட் ஐஸ் திஸ்?

பின்ன என்ன பண்ணலாம் கணேஷ்?

ஒருவகைல இது ஒரு பொயட்டிக் ஜஸ்டிஸ்!

சட்டத்தை மதிக்காம அதிகார போதைல தப்பு பண்ணறவங்க ஜெயில்ல போயும் பித்தலாட்டம் பண்ணுனா என்ன அர்த்தம், நம்ம காசு நம்மைக் காப்பாத்தும் அப்படிங்கற திமிர்தானே?

இதை, நானும் நீங்களும் ஸ்டேஷன்லயோ கோர்ட்லயோ வெச்சு தண்டிக்க முடியாது!
இதுக்கு இதுமாதிரி யாராவது பாதிக்கப்பட்டவங்க கெளம்புனாத்தான் உண்டு!

பட், ராஜேந்திரன்?

சொல்லுங்க கணேஷ், இப்போ இவரை கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனா முதல்ல நம்ம ரெண்டுபேரையும் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புவாங்க!

சசிரேகா ஜெயிலில்தான் கொலை செய்யப்பட்டார்ன்னு மொத்த கர்நாடகா போலீஸும் அரசாங்கமும் சாட்சி சொல்லும்!

ஆல்ரெடி கொலைகாரியை ஆயுதத்தோட கைது செஞ்சாச்சு!

இப்போ இந்தக்கதையை யார் நம்புவாங்க?

சாருக்கு ஆதரவா கர்நாடகா சீஎம்மே சாட்சி சொல்லுவார்!

வேணும்னே, எதிர்க்கட்சி ஆட்சியை சீர்குலைக்க மோடி சொல்லிக்கொடுத்து தமிழ்நாடு போலீஸ் பொய் சொல்லுதுன்னு பத்திரிக்கைகள் அலறும்

ஏற்கனவே, நம்ம சீஎம் மூத்திரம் போறதுக்குக்கூட மோடிகிட்ட பர்மிசன் வாங்கறார்ன்னு பேச்சு! இதில் இது வேறயா?

இன்னைக்கு சசிரேகா, ரெண்டு பக்கமும் ஆளும் கட்சிக்கு வேண்டாதவர்! ஒருவகையில சார் அவங்களுக்கு சுலபமா ஒரு தீர்வு கொடுத்திருக்கார்!

யாரு கண்டா, இவருக்கு ஒரு ராஜ்யசபா எம்பி போஸ்ட் கிடைச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை!

அப்போ, அந்த மாலில் பட்டப்பகலில் கொல்லப்பட்டது யாரு?

அது யாரோ ஒரு பெங்களூர் பொண்ணு! காதல் தகராறு! லோக்கல் ரவுடி ஒருமணி நேரத்துக்கு முன்னாடியே ஹூப்லி கோர்ட்ல சரண்டர் ஆயாச்சு!

பொண்ணோட பாடி மைசூர் ஆஸ்பத்திரில ஆடப்ஸிக்கு வெயிட்டிங்!

சொல்ல மறந்துட்டேனே, அந்தக் கடைல இருந்த சிசி டிவி மூணு நாளா வேலை செய்யலையாம்! ஏதோ ஹார்ட் டிஸ்க் ப்ராப்ளம்!

ராஜேந்திரன், சட்டத்தை இவ்வளவு ஈஸியா கைல எடுத்துக்கறது நல்லதுன்னு நீங்க நினைக்கிறீங்களா?

கணேஷ், கோவணம் கட்டாத ஊர்ல கோட்டு போட்டுக்கிட்டு சுத்தறவன்தான் பைத்தியக்காரன்!

கேவலமா இருக்கு ராஜேந்திரன் உங்க பன்ச் டயலாக்!

பரவாயில்லை! பன்ச் வேண்டாம்னா நான் பகவத் கீதை சொல்லறேன் பாஸ்!

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்!

என்டிஆர் வேற எப்போவோ செத்துப்போய்ட்டார்! இனி, கிரீடம் வெச்சுக்கிட்டு சங்கு சக்கரத்தோட கிருஷ்ணரே வந்தாலும் ஜனங்க நம்பமாட்டாங்க!

அதுனாலதான் பாஸ்கர் மாதிரி ஆளுங்க மேல கூடு விட்டு கூடு பாயறார் - சம்பவாமி யுகே யுகே!

ராஜேந்திரன் சார், நீங்க போய் லா அண்ட் ஆர்டரைப் பாருங்க
நான் சாருக்கு ஒரு டகீலா குடுத்து தாச்சுக்க வைக்கிறேன்!

காலைல ரங்காச்சாரி கேஸ் வேற எட்டாவது கோர்ட்ல வருது!

கணேஷ் கோபமாக வீசியெறிந்த புத்தகத்தை சிரித்துக்கொண்டே பிடித்த வஸந்த், ஃபிரிட்ஜைத் திறந்துகொண்டே கேட்டான்,

பாஸ், லார்ஜா, எக்ஸ்ட்ரா லார்ஜா!