வெள்ளி, 22 டிசம்பர், 2017

அதிபரைக் கொல்ல முயன்ற பிக்பாக்கெட்!"அதிபரைக் கொலை செய்ய முயன்றன வழக்கிலிருந்து அரசன் உட்பட அனைவரும் விடுதலை!"
காலையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் ஊடகங்களிலும் ஒருமித்த குரலில் அலறின!

வழக்கம்போல இதிலும் வாதங்களும் எதிர் வாதங்களும் வரிசை கட்டி வர, “இனாஃப் ஆஃப் திஸ் ட்ராஷ்”  என்று முனகியவாறு சர்க்கரை இல்லாத கடுங்காப்பியை ஒரு கோப்பையில் எடுத்துக்கொண்டு காற்றாட பால்கனியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்!
ஏனோ அன்று வேலையில் மனம் ஒட்டவில்லை!
கடும் கசப்பும் சூடுமாய் காஃபி தொண்டைக்குள் இறங்க, ரவியின் மனதில் காட்சிகள் விரிய ஆரம்பித்தன!அது ஒரு வினோதமான நாடு!

முன்னூறு ஆண்டுகள் வெள்ளைக்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தேசம், தன்னை உய்வித்த மஹானையே களபலி கொடுத்துவிட்டு இன்று கொள்ளைக்காரர்களுக்கு விரும்பியே அடிமைப்பட்டுக் கிடக்கிறது!

கொள்ளையடிப்பதும் திருடுவதும் வாழ்க்கை முறை என்று எப்போதோ உளமார ஒத்துக்கொண்ட மக்கள் வாழும் தேசம்!

தங்களுக்குள் மொழி, இனம், மதம் சாதி, நிறம் என்று கிடைத்த காரணங்களையெல்லாம் வைத்து மோதிக்கொண்டு, பழம்பெருமை பேசி சிறுகச் சிறுகச் செத்துவரும் இனம்!

அங்கு ஆட்சி முறை என்பது ஒரு வினோதமான அமைப்பு!

ஆங்காங்கு மாநிலங்களில் சிறுசிறு பிக்பாக்கெட் திருடர்கள் ஆண்டுகொண்டிருக்க, மத்தியில் அவர்களை ஆட்டுவிக்கும் ஒரு தலைமைக் கொள்ளை கும்பல்!

இவை அனைத்தையும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஒரு திருவிழாவில் தேர்ந்தெடுத்து, அந்தத் திருடர்கள் கையில் தங்கள் வீட்டு சாவியை மகிழ்வாய்க் கொடுத்துவிட்டு தங்களுக்குள் அடிதடியைத் தொடரும் ஆட்டுமந்தைக் கூட்டம்!
இந்தக் கூட்டத்திலும் ஒட்டாது ஒரு கூட்டம் அந்த தேசத்தின் தென்கோடி முனையில்!
அங்கிருப்பவர்களுக்கு ஒரு வினோதமான மனநிலை!

அடுக்கு மொழியும், அழகாய் இருப்பதும்தான் ஆள்வோரின் லட்சணம் என்று தங்களுக்குள் முடிவு செய்துகொண்டு, அண்டை மாநிலங்களோடோ, மொத்தமாய் ஆளும் மத்தியக் குழுவோடோ, எந்தக் காலத்திலும் ஒரு இணக்கம் பேணாத கூட்டம்!

நாளடைவில், சிகப்பாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வினோத நம்பிக்கையில், தனக்கான ஆண்டைகளை அரிதாரம் பூசும் கூட்டத்துக்குள் தேட ஆரம்பித்தது!

அவர்களும் கிடைத்த வாய்ப்பை உறுதியாகப் பற்றிக்கொண்டு ஒருநாள் சாராயக்காசை பிச்சையாக எறிந்து ஆளும் உரிமையை சுலபமாய் அபகரித்துக்கொண்டார்கள்!

இப்படியே வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது!

மத்தியில் ஒரு கொள்ளைக்கூட்டம் நிரந்தரமாகப் பாய்விரித்துப் படுத்திருந்தது!
அதன் தலைமை மட்டும் ஒற்றைக் குடும்பத்தின் கையில் ஐந்து தலைமுறையாக பாதுகாப்பாய் இருந்தது!

எதிர்த்து நின்ற மற்றொரு கொள்ளைக்கூட்டம் அவ்வப்போது தலைமையைக் கைப்பற்றினாலும், அது ஒரு தற்காலிக நிலையாகவே இருந்தது!

காலம் எப்போதும் ஒரே பருவநிலையோடு இருப்பதில்லையே?

அண்டைநாட்டு விவகாரத்தில் ஒரு தவறான நிலைப்பாட்டை எடுத்த ஆளும் கூட்டத் தலைவன் கொல்லப்பட, வாரிசு உரிமை அடிப்படையில் அவரது மனைவி தலைமை ஏற்க, ஒரு சட்டச் சிக்கல் வந்ததில், ஒரு மௌன சாமியார் கைப்பாவை அதிபரானார்!

அதே நேரத்தில், அதன் எதிரியான கூட்டத்தில், ஒரு இளம் அமாவாசைத் தலைவன் மெல்லமெல்ல நாகராஜ சோழன் ஆகிக்கொண்டிருந்தான்!
அவனைப் பொறுத்தவரை, வெல்வதற்கு எவரையும் கொல்லலாம், எந்தப் பாதகத்தையும் செய்யலாம்!

அவனது ராஜகுரு அடிக்கடி சொல்வதுண்டு,
" எவ்வளவு கேவலமான வழிமுறையும் வெற்றிக்குப்பின் மறக்கப்படும்! வெற்றிதான் முக்கியம்!!"
அது அவருக்கே தீங்கானது அடுத்த கதை!

இந்தக் கொள்ளைக்கூட்டங்களையும் அச்சுறுத்த ஒரு தன்னாட்சி அமைப்பு இருந்தது!

அதை எப்படியோ கைப்பற்றினான் நாகராஜசோழன்!

ஒரு அதிகாலையில் அந்தத் தன்னாட்சி அமைப்பின் வழிகாட்டுதலில் அனைத்து ஊடகங்களும் ஒன்றுபோல் அலறின!

“அடுத்து அதிபராகப்போகும் நாகராஜசோழனைக் கொல்ல சதி!
மத்தியில் ஆளும் கூட்டத்தின் ஆதரவோடு தென்கோடி முனைக்கூட்டத்தின் திட்டம்!”

துரதிர்ஷ்டவசமாக, அந்த தென்கோடிக் கூட்டத்தின் தலைவருக்கு மக்கள் மத்தியில் ஒரு தீராத அவப்பெயர்!

‘தேனை எடுத்தேன், புறங்கையை நக்குவதை தவிர்க்க முடியவில்லை!’ என்ற அவரது வசனமும்,
எதிர்த்து நின்ற கூட்டத் தலைமையின் வசீகரமும்
அவரை மக்களின் ஒரு சாரார் மனதில் எதிரியாய் உருவகித்து வைத்துவிட்டது - நிரந்தரமாய்!

இத்தனைக்கும், தேனை எடுக்க ஆரம்பித்த எதிர் அணி தலைமையும், அதை ஆட்டிவைத்த கூட்டமும் மொத்தத் தேனையும் பிடுங்கிக்கொண்டதோடு, வீடு புகுந்தும் திருட ஆரம்பித்தார்கள்!

ஏனோ, அழகில் மயங்கிக்கிடந்த மக்கள் கூட்டம், தானாகவே உடைமைகளை எடுத்து அவர்கள் காலடியில் வைத்துவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை இனாமாகப் பெற்றுக்கொண்டது!

அதன்பின் காட்சிகள் விறுவிறுப்பாக அரங்கேற ஆரம்பித்தன!

வருங்கால அதிபரைக் கொல்ல முயன்றதாக, அரசன் என்ற தென்கோடிப் பிரதிநிதியும், சகாக்களும் கைது செய்யப்பட்டார்கள்!அரிதாரக் கூட்டமும், நாகராஜசோழனும், மாநிலத்திலும் மத்தியிலும் இதைச் சொல்லியே அடுத்த ஐந்தாண்டுத் திருவிழாவில் அதிபர் ஆனார்கள்!

வசீகரமாய்ப் பேசியே அதிபரான நாகராஜசோழனை தன்னாட்சி அமைப்பின் தலைவர் சந்தித்தார்!

"நீதிமன்றம் அவசரப்படுகிறது!
குற்றத்தை நிரூபிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறது! என்ன செய்ய?"

“வழக்கை நடத்து!”

“எப்படி அதிபரே?”

“சுலபம்! அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?”

“உங்களைக் கொலை செய்யத் திட்டமிட்டது!”

“அதைச் சொல்லியே வழக்கை நடத்து!”

“நீதிமன்றம் ஆதாரம் கேட்கிறது அதிபரே!”

“இப்படிச் சொல்லுங்கள்!
அரசன் வழக்கமாய் பிக்பாக்கெட் அடித்த தொகையில் ஒரு கத்தி வாங்க திட்டமிட்டார்!
அந்தக் கத்தியை வைத்து சில கொலைகளைச் செய்து பணம் பறிக்கவும்,
அந்தப் பணத்தை வைத்து வெடிகுண்டுகள் வாங்கவும்,
அந்த வெடிகுண்டு வீசி பீரங்கிகளைக் கைப்பற்றவும்,
அந்த பீரங்கிகளைக் கொண்டு விமானங்களைத் தகர்க்கவும்,
தகர்த்த விமான பாகங்களைக்கொண்டு ராக்கெட் செய்யவும் திட்டமிட்டார்கள்!
அந்த ராக்கெட்டை வீசி என்னைக் கொல்ல சதி செய்தார்கள்!
அவ்வளவுதான்!”

தலை சுற்றி அமர்ந்தார் தன்னாட்சி அமைப்பின் தலைவர்!

“அதிபரே, நீதிமன்றம் இப்படி ஒரு அபத்தக் கட்டுக்கதையை ஏற்காது.
எல்லோரையும் போல அரசனும் பிக்பாக்கெட் அடித்தார் என்று மட்டும் குற்றச்சாட்டை வைத்தால், அவருக்கும் அவரது கூட்டத்துக்கும் தண்டனை வாங்கித்தருவது சுலபம்!”
“இப்படி ஓர் முட்டாள் கதையை நீதிமன்றம் நம்பாது!”

“யாருக்கு வேண்டும் நீதிமன்றத்தின் நம்பிக்கை?
எதிலும் பரபரப்பு தேடும் மக்கள் இதை நம்புகிறார்கள் அல்லவா? அது போதும்!
இதைவிட எத்தனயோ பெரிய கதைகளையும் கேள்வியே கேட்காமல் நம்பியவர்கள் அல்லவா?
அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே இலக்கு! அது முடிந்துவிட்டது!”

“வழக்கு?” முணுமுணுப்பாய்க் கேட்டார் தன்னாட்சி அமைப்பின் தலைவர்!

“இனி அரசன் பாடு, உங்கள் பாடு!
இதே கதையைச் சொல்லி வழக்கை இழுத்தடியுங்கள்!
அரசனுக்கு சாமர்த்தியம் இருந்து தப்பிவிட்டால், அவர் தலைவரோடு கைகோர்த்துக் கொள்வோம்!

அரிதாரக் கும்பலின் தலைமை சரிந்ததிலிருந்து அந்தக் கும்பல் தள்ளாடுகிறது! அது இனி நமக்கு வேண்டாச் சுமை!

அடுத்த திருவிழாவுக்குள் அந்தக் கூட்டத்தை வேரோடு அறுத்து, தென்கோடியில் நான் கால் ஊன்ற வழி பாரும்!

முடிந்தால், அதற்காக சிறையில் இருக்கும் அவரது சகாவை கஸ்டடியில் எடுத்து விசாரியும்!

அந்த அடிமைக்கூட்டத்தை மிரட்டித் தோளில் ஏறி நாம் அடுத்த தேர்தலை சந்திக்கலாம்!”

“அப்போது அரசன் மீதான தங்கள் குற்றச்சாட்டு?”

“அது பழம் கதை! போன திருவிழா சரக்கு!
அடுத்த திருவிழாவுக்காக அஸ்திரத்தை கூர் தீட்டும்!
பழைய ஆயுதத்தை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும்!”

புன்னகைத்து விடை கொடுத்தார் நாகராஜசோழன்!

தலை குனிந்து வெளியேறினார் தன்னாட்சி மன்றத் தலைவர்!

மறுநாள் நடந்ததுதான் ஆரம்ப வரிகள்!

கண் விழித்த ரவி, தனக்குத் தோன்றியதை மளமளவென்று கிறுக்கத் தொடங்கினான்!

தலைப்பு

அதிபரைக் கொல்ல முயன்ற பிக்பாக்கெட்!”