திங்கள், 24 டிசம்பர், 2018

தோழர் செல்விக்கு ஒரு கடிதம்!

தோழர் செல்வி!

(முதலில் தோழர் என்ற விளியே எனக்கு அவ்வளவு உவப்பில்லை! வெறும் அழைப்பில் என்ன சமத்துவம் இருக்கிறது? தோழன், தோழி என்று குறிப்பதே என் பத்தாம்பசலி விருப்பம்!)

சபரிமலை காட்டுமிராண்டிகளிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

உங்களைப்போலத்தான் நானும்,
நீதிமன்றத் தீர்ப்பு பாலியல் சமநிலைக்காக என்று உறுதியாக நம்பினேன்!

ஐயப்பனை தரிசிக்க ஏங்கும் கலியுக மீராக்களுக்கும், ஆண்டாள்களுக்கும் ஐயப்பன் எங்கள் நீதியரசர்கள் வடிவில் வந்து அருள் பாலித்து ஆட்கொண்டதாகவே பூரித்துப்போனேன்!

இன்னும் எத்தனை காலம் பக்தித் தீயில் வேகும் எங்கள் பெண் பக்தர்கள் ஐயப்பனைக் காண மெனோபாஸ் வரை காத்திருக்கவேண்டும்?
இது எவ்வளவு பெரிய பாலியல் அநீதி?

ஆண்களுக்கு எல்லா வயதிலும் கிடைக்கும் மோட்சம் ஏன் எம் குல பெண்களுக்கு கிடைக்கக் கூடாது?

பக்திப் பரவசத்தில் திளைக்க ஆணுக்கு மட்டும் எதற்கு முன்னுரிமை!

நீதியரசர்கள் புரிந்துகொண்ட தங்கள் பக்தியை அங்கிருக்கும் பக்தர்கள் புரிந்துகொள்ளாதது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!

அவர்களுக்கு ஏழேழ் ஜென்மத்துக்கும் நரகமே வாய்க்கட்டும்
அன்றி, ஐயப்பனாவது வந்து அவர்கள் கண்ணைக் குத்தட்டும்!ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு நியதிகள் உண்டு
அதை அப்படியே கடைப்பிடிப்பது பக்தர்களின் வழக்கம்!

நீங்கள் அப்படித்தானே, மாலையணிந்து விரதமிருந்து  இருமுடி தாங்கி, சரண கோஷத்தோடு ஐயப்பனை  தரிசிக்கப் போனீர்கள்?
இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் தோழர்!

எங்கள் நீதீமன்றம் இந்தத் தீர்ப்பை பாலியல் சமத்துவம் கருதியே வழங்கியது என்று நம்புகிறேன் தோழர்!

வெற்று பரபரப்புக்காகவோ, தங்கள் கொள்கைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்புக்காகவோ நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க மாட்டார்கள்!

ஆண்டவன் மனிதனைப் படைத்ததிலிருந்தோ,
அல்லது
மனிதன் ஆண்டவனைப் படைத்ததிலிருந்தோ
இறை இருக்கிறதா என்ற விவாதமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது!

உங்களைப்போன்ற பெரும்பான்மைகளுக்கு அது இருக்கிறது அல்லது இல்லை என்பதை கட்சி பிரிந்து நிரூபித்தால்தான் தூக்கமும் வரும்!

இரு  தரப்பும் அதில் ஓரளவு தீவிரமாகவே இருக்கிறீர்கள்!
யாரோ ஒருவர் வெல்ல வாழ்த்துக்கள்!

என்னைப்போலொரு முட்டாள் சிறுபான்மையையும் உலகில் உண்டு!

எங்களுக்கு இறைவன் இருக்கிறானா/இருக்கிறதோ என்ற கவலையெல்லாம் இல்லை!

எங்கள் புரிதல் மிக எளிமையானது!

பக்தி, ஒழுக்கத்தை போதிக்கிறது, பிற உயிர்களுக்கு மனதாலும் தீங்கு செய்யக்கூடாது, நேர்மையும் ஒழுக்கமும் இருக்கும்வரை ஏதும் செய்யாவிட்டாலும்கூட செத்தபிறகாவது சொர்க்கம் தரும்!

நாங்கள் படிக்கும் காலத்தில் நீதிபோதனை என்றொரு (இன்றைய உங்கள் பாஷையில் உருப்படாத) வகுப்பு ஒன்று உண்டு!

இப்போது பாழாய்ப்போன மதிப்பெண் வாங்க உதவாத எந்த வகுப்பும் உதவாக்கரைதானே!
0.00025% மதிப்பெண் வித்தியாசத்தில் உங்கள் வாய்ப்பு ஒளிந்துகொண்டிக்கும் அவலம் நீதிபோதனை போன்ற வகுப்புக்களை நான்சென்ஸ் என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறது!

அந்தக்காலத்தில், சேவைக்காகவே நேர்ந்துவிடப்பட்ட இரு தொழில்கள் இருந்தன! அதில் ஆசிரியப்பணியும் ஒன்று! அதை அப்படியே பின்பற்றிய பிழைக்கத் தெரியாத கூட்டம் எங்களுக்கு வாய்த்த ஆசிரியர்கள்!

அந்த நீதிபோதனை வகுப்பில் எங்களுக்கு இப்ராஹிம் என்றொரு அற்புதமான ஆசான் இருந்தார்!
அவர் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது இது!

பக்தி என்பது இருமல் மருந்தில் கலந்திருக்கும் ஆல்கஹாலைப்போல இம்சையில்லாத போதை!

அளவோடு கொள்ள, குணப்படுத்தும், அளவு மீறினால் அடிமைப்படுத்தும்!

எந்த மதமானால் என்ன, எல்லா மதமும் சொல்லும் ஒழுக்க விதிகளை பின்பற்று! கால மாறுதலில் அர்த்தமற்றுப்போன சடங்குகள் சக மனிதனுக்கு ஊறு விளைவிக்குமெனில் அதை ஒதுக்கி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்!

எந்த சூழலிலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மறக்காதே!

இவ்வளவு எளிமையானதுதான் எங்களுக்கு போதிக்கப்பட்ட இறை நம்பிக்கை!

மன்னிக்கவும்
சொல்லவந்ததை விட்டு வேறெங்கோ மடை மாற்றிக்கொண்டிருக்கிறேன்!

தோழர் செல்வி!
நீங்கள் இறை நம்பிக்கையோடு ஐயப்பனை தரிசித்து உய்யவே சபரிமலைக்குப் போனீர்கள்! அப்படித்தானே?

இல்லை, டு ப்ரூவ் பாயிண்ட் எனில், அதற்கு வேறு களங்கள் இருக்கின்றன!

நீதிமன்றமும், தங்கள் கொள்கை முழக்கங்களை ஸ்தாபிக்க உங்களுக்கு இந்த அனுமதி தரவில்லை!

தாக்கல் செய்யப்படும் வழக்கின் தன்மையும், நோக்கமும் அறியாமல், சரியான நெறிமுறைகளை வகுக்காமல், அரைகுறை தீர்ப்பை வழங்கியிருக்க மாட்டார்கள் எம் நீதி அரசர்கள்!

இப்போது நீதிமன்றமும் பரபரப்புக்கு ஏங்குவதாய் தோன்றுவது வெறும் பிரமை! அது சமூகப் பொறுப்பும், சட்டத்தின் மாட்சியும் கோலோச்சும் இடம்! (இதுவும் என் பக்தியைப்போலொரு விஷயம்தான்!)

விடுங்கள்! அது வேறு டிபார்ட்மெண்ட்!

கடவுள் இல்லை என்று நீங்கள் சபரிமலைக்குப் போய் நிரூபிக்கத் தேவையில்லை தோழர்!

அதை எங்கள் ஆண்டவர்களே செய்துகொண்டிருக்கிறார்கள்!

ஆணவக்கொலைகளும், பாலியல் கொலைகளும்,  அரசியல் அநீதிகளும் இறையின் இருப்பை அசைத்துக் கொண்டிருக்கின்றன!

தன் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளவோ, காத்துக்கொள்ளவோ முயன்று தன்னை நிரூபிக்கட்டும் எங்கள் இறை!

தோழர், உங்களுக்குத் தெரியுமா, மீராக்களுக்கு மட்டுமல்ல  இன்னும் நந்தன்களுக்கே நடராஜ தரிசனம் கிடைப்பதில்லை!

இன்னும் பல கோவில்களில் அல்ல, வீதிகளில் கூட நந்தன்கள் நுழையத் தடை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

இன்னும் ஒரு குறிப்பிட்ட தொழில் அந்த சமூகத்துக்கே என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆலயங்களில் மட்டுமல்ல தோழர்,
சாதி, மத வேறுபாடுகள் எல்லா இடத்திலும் தங்கள் கோரமுகம் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன!

நீங்கள் போராடவேண்டிய களம் அது தோழர்!

உங்களை அனுப்பி வைத்தவர்கள் உங்களை உபயோகித்துக் கொள்கிறார்கள் 
- எங்களைப்போலவே!

கணநேர விளம்பர வெளிச்சத்துக்கு நீங்களும் பலியாடு ஆகிறீர்கள்!

அவர்கள் உங்களை உபயோகிப்பது குறித்து அப்புறம் வருவோம் தோழர்!
நாங்கள் உங்களை எப்படி உபயோகித்துக்கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் பின்னாலும் முன்னாலும் கேமிராவோடு ஓடிவந்த எங்கள் ஊடகங்கள் என்ன செய்கின்றன தெரியுமா?

நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரம் என்ற பெயரில் உங்களை உரித்துக்காட்டுகின்றன!

ஒரு குறிப்பிட்ட வாசனை திரவியத்தை நான் சற்றே என்மீது பீய்ச்சிக்கொண்டால் நீங்களெல்லாம் என் மீது கும்பலாக வந்து விழுவீர்கள் என்று சொல்கிறது!

வேறொரு வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு உங்கள் மகளின் காதலன் வந்தால் அவனோடு படுக்கையில் புரள நீங்கள் தயார் என்று சொல்கிறது!

நீங்கள் அழகாயிருப்பதால்தான் முன்னேற முடிகிறது என்று சொல்கிறது!

நிறமாய் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்கிறது!

ஒரு குறிப்பிட்ட கடையில் நகை வாங்கித் தந்தால்தான் படுக்கையறையில் சேலையை அவிழ்ப்பீர்கள் என்று சொல்கிறது!

மொத்தத்தில் பெண் என்பவள் மூளையல்ல வெற்று உடல் என்று இடைவிடாது போதிக்கிறது, அதையும் நாங்கள் நம்புகிறோம்!

இன்னுமே, பெண் மேடும் பள்ளத்தாக்குமான எங்கள் மேய்ச்சல் நிலம்தான் என்று சொல்லும் எங்களை எதிர்த்து நீங்கள் போராடுங்கள் தோழர்!

உங்களைப் பார்க்கையில் உங்கள் கண்களைப்பார்க்க நாங்கள் இன்னும் பழகவில்லை தோழர்
மாரை வெறிப்பதும்
உங்களை விமர்சிக்க முதலில் உங்கள் ஒழுக்கத்தைத் தூற்றுவது
உங்கள் உயர்வுக்கு உங்கள் உடலைத்தான் மூலதனமாக பயன்படுத்தினீர்கள் என்று கூசாமல் பேசுவது
முதல் காதல் தோற்ற பெண் இரண்டாவது காதல் என்பதே உடல் அரிப்புக்காக என்பது
எங்கள் பத்தாவது காதலையும் ஆட்டோகிராஃப் என்று கொண்டாடுவது, எங்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு நேர்கையிலும் அவன் வீட்டிலிருக்கும் பெண்களின் ஒழுக்கத்தை விமர்சிப்பது 
என்று 
இன்னும் நாங்கள் உங்கள் உபயோகித்துக்கொண்டுதான் இருக்கிறோம் தோழர்!
சமூகம் (நீங்கள் உட்பட) அதை இயல்பென்றே ஏற்கிறது!

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகே, ஒரிஸாவில் ஒரு பழங்குடி இனப்பெண் ஆட்சியாளர் (IAS) ஆகிறார், ஊட்டியில் ஒரு தோடர் இனப்பெண் மருத்துவர் ஆகிறார்!

இந்த பாரபட்ச அநீதியை எதிர்த்துப் போராடுங்கள் தோழர்
அதில் ஒரு நேர்மை இருக்கும்!
இல்லாத கடவுளிடம் உங்கள் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!

ஏறத்தாழ இருபது வருடங்களுக்குமுன்,  தமிழ் சிறுகதைகளின் ஆசான் என்று கொண்டாடப்படும் ஒருவர்,  தன் கதாபாத்திரத்தின்மூலம் பெண் என்றுமே ஆணுக்கு சமமில்லை என்று நிரூபிக்க,
“நான் நின்றவாறே அந்த சுவற்றை நனைப்பேன், உன்னால் முடியுமா” என்றதை இன்னொரு பெண் எழுத்தாளர் விமர்சிக்க,   பத்திரிக்கை உலகம் நகைச்சுவை உணர்வற்றவர் என்று அந்தப் பெண் எழுத்தாளரை எள்ளி நகையாடியது!

பெண் என்றுமே பரிகசிக்க, ருசிக்க பிறந்தவள் என்ற எங்கள் அடிப்படை குரூரத்தை அகற்றப் போராடுங்கள் தோழர்!

மணவிலக்கு பெண்களை ஏன் ஆண்களைவிட மிக அதிகம் விமர்சிக்கிறது, பாதிக்கிறது என்பதில் இருக்கும் பாலியல் அநீதியை கேள்வி கேளுங்கள்!

உங்கள் அந்தரங்க மாதாந்திர அவஸ்தைகளை வைத்து காசு பார்க்க துடிக்கும் விளம்பரவியாதிகளை கேள்வி கேளுங்கள்!

உங்களை அனுப்பி வைத்தவர்கள் உங்களை உபயோகித்துக்கொள்ளும் விதம் பற்றி!

பெண் பக்தர்களும் அனுமதிக்கப்படலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை உபயோகித்து, உங்களை, உங்கள் மனமும் கொள்கையும் ஒவ்வாத பக்தி வேடமிட்டு மலைக்கு அனுப்பியிருக்கிறார்கள்!

பகுத்தறிவு நேர்மையை அடிப்படையாகக் கொண்டது என்பது ஊரறிந்த எளிய உண்மை!

இறைவன் இல்லை என்பது அவர்கள் நிலைப்பாடெனில்,  அதை ஒவ்வொரு கடவுள் உறைவிடத்தும் சென்று நிரூபிக்க முயல்வது வீண் வேலை!

நீங்கள் பெண் என்பதால் உங்களை தங்கள் வியாபாரத்துக்கு உபயோகித்துக்கொள்கிறார்கள் - எங்கள் நகைக்கடை, வாசனைத் திரவிய, உள்ளாடை வியாபாரிகளைப்போலவே!

வெட்டிப் பரபரப்பு பகுத்தறிவில் சேராது!
சமூக ஏற்றத்தாழ்வுகளை தட்டிக் கேட்க வக்கற்றுப்போய், ஐயப்பனுக்கு ஆணுறை கொடுக்க அலைவதுதான் பகுத்தறிவா?
இது பிரச்னையை மடை மாற்றி கல்லாக்கட்டும் சூழ்ச்சி!
அதற்கு நீங்கள் பலியாகாதீர்கள்!

காலம்காலமாக வீட்டுக்குள்ளும் வெளியிலும் மறுக்கப்படும் பெண்ணுரிமையை மீட்டெடுங்கள்!
அதை உங்கள் வீட்டிலிருந்தும், அனுப்பிவைத்த அறிஞர்கள் வீட்டிலிருந்தும் ஆரம்பியுங்கள்!

ஆணுக்குப் பெண் அடிமையில்லை என்பதை நனவாக்குங்கள்!
வெறுமனே தோழர் என்று சொல்வதில் புல்லரித்துத் தேங்கிவிடாதீர்கள்! அதுதான் ஆண்களின் நோக்கம் என்பதை உணர்ந்து மீறிச் செல்லுங்கள்! உனக்கு நான் எவ்விதத்தும் இளைப்பில்லை என்று அறிவார்ந்து நிறுவுங்கள்! அதில் இன்னுமும் பல ஆண்களின் முகத்திரை கிழியும்!
வாழ்த்துக்கள்!! 

இன்றைக்கு சபரிமலைக்கு உங்களை அனுப்பி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள், நாளை மற்ற கேரள கோவில்களுக்கு மேலாடை இல்லாமல் அனுப்பி ஆணுக்கு நிகர் பெண்ணென்று போலி கோஷம் போடுவார்கள்!

சின்ன விளம்பர வெளிச்சத்துக்கு அப்போதும் உங்களை பலியாடாக்காதீர்கள்!

கருவறை சிலை கல், சமாதியில் அழுகுவது பிணம்!
இதுதான் முழுமையான பகுத்தறிவு!

சாதியை ஒழிக்க காதலிக்கச் சொல்வது போன்ற அரைகுறை பகுத்தறிவு வேடதாரிகளின் வியாபாரத்துக்கு நீங்கள் சாதனமாகாதீர்கள் தோழர்!

- அது எங்கள் சிகப்பழகு க்ரீம், நகை, வாசனை திரவிய வியாபாரத்துக்கு அடிமைப்படுவதற்கு  சற்றும் சளைத்ததல்ல!

அன்பான,
- உபி, ரர, சங்கி என்று மாறிமாறி அவரவர் புரிதலில் விமர்சிக்கப்படும்,
இந்தியாவாசன்!


வெள்ளி, 21 டிசம்பர், 2018

நம்மை ஆளத்துடிக்கும் ஆண்டவர்கள் - இறுதிப் பதிவு


இறுதிப்பதிவு!


முதல்வர் நாற்காலிக்கு வேட்பாளரை வைத்திருக்கும் பிற கட்சிகள்!

இந்தப்பதிவே ஒரு தேவையில்லாத ஆணி
திமுக, அதிமுக என்னும் இரண்டு சமுத்திரங்களின் கரையில் கரையக் காத்திருக்கும் மண் கலச நீர்த்துளிகள் பற்றி ஒரு தேவையற்ற அலசல்!

தங்களிடம் முதல்வர் வேட்பாளர் என்றொருவர் இருப்பதாய் உறுதியாக நம்பும் கட்சிகள் பற்றி ஒரு மீச்சிறு அலசல்!சீனியாரிட்டி அடிப்படையில் முதலில்
தேமுதிக:

அது ஒரு கனாக்காலம்!

2011 தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி!

29 தொகுதிகளில் வென்று சட்டமன்றத்தில் திமுகவை புறம்தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்த காலம்!

கை நீட்டி நாக்கைத் துருத்தி கேப்டன் சீறியபோது நினைத்துக்கூடப் பார்த்ததில்லை கட்சி இப்படி முற்றாய்த் தேய்ந்து போகும் என்று!

அடுத்த தேர்தலில் போட்டியிட கட்சி இருக்குமா என்பதே தெரியாமல் நாமும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்!

ரிப் தேமுதிக!அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்:

மன்னார்குடியின் புன்னகை மன்னன், ஆர்கே நகரின் இருபது ரூபாய் சித்தர், சின்னம்மாவின் நேரடி வாரிசு ஆரம்பித்து நடத்தும் கலகக் கழகம்!
பணம் கொழிக்கும் மர்மதேசம்!

சின்னம்மா சிறை மீண்டபின்பு தாய்க்கழகத்தை கபளீகரம் செய்யக்கூடும் என்பதே இதன் ஒரே எதிர்பார்ப்பு!

அப்படி நடந்தால், அதிமுக இதில் கரையும், அன்றேல், இது விரைவில் சிதறும்!பாமக:
அடுத்து, அன்புமணி என்னும் நான் என்று போன தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரே ஆன கட்சி!

எப்போதுமே,ஆற்றின் இரு கரைகளுக்கும் மாறிமாறிப் போகும் பரிசல்!
அம்மாவீட்டு வாசலில் பூங்கொத்தும், ஐயா வீடு வாசலில் சால்வையுமாக ஒரே நேரத்தில் காத்திருந்து எந்தக் கதவு திறந்தாலும் காற்றைப்போல் நுழையும் கட்சி!

ஆண்டபரம்பரை என்று பெருமை பேசி, ஆளத் துணிந்த கட்சி!

இவர்களின் முதல்வர் வேட்பாளர் மீதான சிபிஐ வழக்கு முடியட்டும், தர்மபுரி, கிருஷ்ணகிரி தாண்டி தென் தமிழகம் பக்கம் வரட்டும்
அதுவரை அவர்களின் ஃபாண்டஸி கனவுகளை நாம் ஏன் சிதைக்கவேண்டும்!நாம் தமிழர் கட்சி:

234 தொகுதிகளையும் வென்று, ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்கப்போகும் கட்சி!

ஆமைக்கறி, அரிசி கப்பல், ஏகே 74, பெரியாரின் பேரன், முப்பாட்டன் முருகன், இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணக்க நினைத்த தெலுங்கு மருமகன், தீவிரவாதி பிரபாகரனை போராளியாக நம் மனதில் பதியவைத்த மகான்
இந்திய கிரிக்கெட் அணியோடு மோதி வெல்லப்போகும் தமிழ் நாட்டு பிரதமர்!
இப்படி புன்னகைக்க ஏராள விஷயங்கள்!

கூடவே, இதைக் கேட்டு திசைமாறும் அறியா வயது இளைஞர்களின் சீரழியும் எதிர்காலம்!

விபத்தாகக்கூட வளர விடக்கூடாத ஈழம் விற்று வயிறு வளர்க்கும் வியாபாரியின் முனையில்லா ஆயுதம் இந்தக் கட்சி!மக்கள் நீதி மய்யம்:

எல்லா சிறந்த முதல்வர்களின் கொள்கையும் என் கட்சியின் கொள்கை என்ற அண்ணாயிசத்தை விஞ்சும் அசரடிக்கும் கொள்கை முழக்கத்தோடு அவசர கதியில் ஆரம்பித்த கட்சி!

ஒத்து ஊதுபவரையும் விட்டுவைக்காமல் தன் மொத்த கரகாட்ட கோஷ்டியையும் செயற்குழுவில் அமரவைத்த வித்வானின் கட்சி!

கூட நடித்த நடிகை, பாட்டெழுதிய கவிஞர், கதை வசனகர்த்தா என்று யாரையும் விட்டுவைக்காத ஸ்தாபகர்!

ரிபப்ளிக் டிவி விவாதத்தில், கிழிந்த சட்டையை கோட்டுப்போட்டு மறைக்க முயன்று அறிவுஜீவி முகமூடியை தொலைத்த தலைமை!

மே பீ என்றால் எஸ் என்று அர்த்தம் இல்லை என்று சொன்னவர் இனி சொல்லப்போகும் அர்த்தங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்!

முதல்வர் கனவை காணும் முந்நூறாவது தமிழ் நடிகரின் கட்சி!
அடுத்த தேர்தலில் இருந்தால் பார்ப்போம்!

கிங் மேக்கர்களும் தேசியக் கட்சிகளும்:

முதல்வர் கனவில் ஆரம்பித்து கிங் மேக்கர்களாகவாவது உருவாகப்படுத்திக்கொள்ள முயன்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயலும்

மேடை அழுகையில் விஜய் டிவிக்கு முன்னோடி வைகோ
திருமா
காம்ரேட்டுகள் 
பந்தயத்திலேயே இல்லாதபோது அவர்களை விமர்சிப்பது வீண் வேலை!
தேசியக்கட்சிகள்:

பக்தவட்சலத்தின் வாய்க்கொழுப்பில் கரைந்துபோன காங்கிரஸ், தெற்கே தலைவைத்தும் படுக்காத பாஜக இவை இந்தத் தேர்தலிலும் முறையே திமுக, அதிமுகவின் எக்ஸ்டரா லக்கேஜ்!

ஆனால் சமீபத்தில் தமிழிசை சொன்னதில் எனக்கு மிகுந்த உடன்பாடு!
தமிழகத்துக்கு மிகுந்த நன்மை செய்தவர் மோடி!

ஹெச் ராஜாவை பேசவைத்து, நோட்டாவுக்கும் கீழேயே கட்சியை அழுத்தி வைத்திருப்பதைவிட நமக்கு வேறென்ன நன்மை செய்துவிடமுடியும் பாஜக!வரூம்... ஆனா வராது:

யானைக் கர்ப்பத்தை மீறிய கர்ப்பகாலம்!

இது கர்ப்பமா தொப்பையா என்பதே புரியாப்புதிர்!

நெஞ்சில் பட்டதை நேர்மையாகப் பேசும் குணம் என்ற ஒற்றை எதிர்பார்ப்பையும், யார் பலசாலி என்ற பேட்டியில் சிதைத்து சின்னாபின்னமாக்கிய எதிர்காலத் தலைவர்!

பாஜக எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்று சொன்னேன் என்று வார்த்தை விளையாட்டு வேறு!

டைரக்டர்களின் நடிகருக்கு அரசியல் டைரக்டர் சரியாக அமையவில்லை!
இந்தக் கட்சி என் காலத்துக்குள் ஆரம்பமானால்...

சரி, அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம்!

அதுவரைக்கும், திமுக அதிமுக இரண்டும் ஆடும் கள்ளன் போலீஸ் விளையாட்டை கைகொட்டி ரசிப்போம்!