ஒரு லால்குடி உருவான கதை!
இந்தக்கதை
ஒரு இசை ஆர்வலன் வயலின் கத்துக்கிட்டது பற்றி!
சரி,
இப்போ எதுக்கு அவன் வயலின் கற்ற கதை?
இந்த
டூலா எழுதறது கொட்டாவி விடற மாதிரி!
ஒருத்தரைப்
பார்த்து ஒருத்தருக்கு அடக்கமுடியாம வர்றது!
இன்னைக்கு
சிவனேன்னுதான் இருந்தேன்! ஆஸ்திரேலியால இருந்து ஒருத்தர் மூக்கை சொறிந்துவிட்டதால் வந்த வினை!
நண்பர்
கானா பிரபா @kanapraba தன் மகளை பியானோ க்ளாஸ் கூட்டிப்போனது பற்றி எழுத, இது என்னுடைய ரிஃப்ளெக்சன் கொட்டாவி!
இருங்க!
முதல்ல நம் கதை நாயகனுக்கு ஒரு உருவம் கொடுத்துக்குவோம்!
பெயர்?
பெயர்ல
என்னங்க இருக்கு?
கமலஹாசன்
சொன்னமாதிரி A rose is a
rose by any name!
சரி!
ஒரு வசதிக்கு ரவின்னே வெச்சுப்போம்!
ரவி,
ஒருமாதிரி கொலாஜ் சித்திரம்!
வெவ்வெறு
வண்ணங்களில், வடிவங்களில் வெட்டி ஒட்டிய பேப்பர் உருவம்போல!
இது
இப்படித்தான் அப்படின்னு நாம் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள தண்ணியில வெந்த மைதாமாவு மாதிரி கையிலிருந்து வழுக்கிக்கிட்டு ஓடுற கேரக்டர்!
ஓரளவுக்கு
அவன் கூடவே இருந்து பார்த்ததால எனக்குத் தெரிஞ்ச ஒரு பிக்சர்!
அவனோட
ஆக்டிவிட்டீஸ் இதுதான்!
இதை
வெச்சு ஒரு சித்திரம் உங்க மனசுக்குள்ள வந்தா (!?) அதுதான் ரவி!
மறக்காம
சோடாபுட்டி கண்ணாடியும், எந்தநேரமும் கலைஞ்ச தலையும் கூட சேத்துக்குங்க!
ஆரம்பத்திலிருந்தே
எப்போது என்ன செய்வான் என்ற வரைமுறைக்குள் அடங்காதவன் ரவி!
மொதல்ல
நல்ல பக்கம்!
அண்ணா நகர்
எஸ் பி ஓ ஏ ஸ்கூல் க்ரவுண்ட்ல சின்மயானந்தா சொற்பொழிவு,
ஜெர்மன் திரைப்படவிழா, பிரிட்டிஷ் கவுன்சிலில் குறும்படம், சிற்றரங்கத்தில் கூத்துப்பட்டறை நாடகம், வாலாஜா சாலை கணையாழி அச்சகம், லலித் கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி இங்கெல்லாம் அழுக்கு ஜீன்ஸும் முரட்டு காதி குர்தாவும், மறக்காமல் தோளில் தொங்கும் ஜோல்னாப் பையுமாக,
வெள்ளை
குர்தாவும் வேட்டியுமாய் தியாசபிக்கல் சொஸைட்டியில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உரையாடல்களில் நடக்கும் நாளெல்லாம் முதல் வரிசையில் நாள்
தவறாமல்,
தோன்றியபோதெல்லாம்
பட்டு வேட்டியும் சட்டையுமாக திருவாலங்காடு, சென்னமல்லீஸ்வரர் கோவில் என்று விபூதியும் குங்குமமுமாக,
இது அய்யம்பேட்டை அறிவுடைநம்பி
கலியபெருமாள்
சந்திரன்!
இன்னொருபக்கம்
பாரகன் தியேட்டரில் ஒரு வாரம் ஏழு நாளும் தினசரி இரவுக்காட்சியில் காட்சிக்குப்
போய் பிடித்த முதல் பாடல் முடிந்ததும் லுங்கியோடு பீச்சில் அரட்டை!
ப்ளூ
லாகூன் படம் ப்ரூக் ஷீல்ட்ஸ்க்காக வெறும் பத்தே பத்து தடவை!
சேப்பாக்கம்
ஸ்டேடியத்தில் எப்போது கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் தவறாமல் பெரிய சைஸ் ஜால்ராவும் நண்பர் கூட்டமுமாக ஆட்டம்!
ஸ்டெஃபி
கிராஃப் விளையாடும்போது மட்டும் நம்ம ராமசுப்பு மாதிரி, டென்னிஸ் ஆர்வலன்!
(ரெண்டு
பாலும் எப்படி ஒரே கைல பிடிக்கறாங்களோ!)
நுங்கம்பாக்கம்
ஹைவே ஆட்டோ ஸ்டாண்டில் தோழியை கமெண்ட் அடித்த ஆட்டோக்காரனோடு தெரு சண்டை! பரிசாக எமரால்டு தியேட்டரில் திகட்டாத முத்தம்!
முட்டுக்காட்டில்,
சத்தியம் தியேட்டரில், அண்ணா மேம்பாலத்தில், நடு ஜாமத்தில் நண்பர்கள் பட்டாளத்தோடு கேக் வெட்டி பர்த்டே பார்ட்டி!
லலிதா
ஓட்டும் RX 100 ல் அவளுக்கும் சுதாவுக்கு
நடுவில் சாண்ட்விச்சாக தொற்றிக்கொண்டு மகாபலிபுரம், சில்வர் ஸேண்ட்ஸ், கோவளம் என்று வாரம்தோறும் பறப்பதும், நிலவு நனைந்த கடற்கரைகளில் விரசமில்லாமல் கை கோர்த்து கவிதை
பேசித் திரிவதும் என
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி
கலியபெருமாள்
இந்திரன்!
இப்படிப்பட்ட
ஒருத்தனையும் பிடிவாதமாக காதலித்து கை பிடித்தாளே ஒரு
மகராசி!
இன்னைக்குவரைக்கும்
அந்தப் பெண்ணின் முட்டாள்தனத்துக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் தெரியல!
விடுங்க!
அது அவங்க தலையெழுத்து!
ஒரு
பிம்பம் வரத்தான் ரவி பற்றி இத்தனை விவரணை!
கல்யாணத்துக்கு
அப்புறம் ரவி ஒழுங்காத்தான் இருந்ததாய் நியாபகம்!
குமுதம்,
விகடன், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வாசலில் கோலநோட்டு, தேவி தியேட்டரில் சினிமா, மறக்காமல் வாசலில் மல்லிகைப்பூ, உட்லண்ட்ஸில் டிஃபன் என்று டிபிகல் நடுத்தரவர்க்க குடும்பஸ்தனாக ஒருமாதிரி செட்டாயிருந்த ரவியை விதி பழைய நண்பன் கணேஷ் ரூபத்தில் இந்தக் கதைக்குள் இழுத்துவிட்டது!
கல்யாணப்
பத்திரிக்கை வைக்க வந்தவன் மூடிக்கிட்டு காஃபி குடிச்சுட்டுப் போகாம,
"ரவி,
அப்புறம் அந்த வயலின் க்ளாஸ் என்ன ஆச்சு?" அடடே, உங்களுக்குத் தெரியாதா சிஸ்டர், இவன் ஒரு வருஷம் வயலின் கத்துண்டான். சொல்லவே இல்லையா?"
கொளுத்திப்
போட்டுட்டுப் போனவனுக்குத் தெரியாது அது கணேஷை கழட்டி விட்டுட்டு லலிதாவோட ஊர் சுத்த சொன்ன டுபாக்கூர் கதைன்னு!
அவன் எப்போ நகருவான்னு காத்திருந்த பெண்டாட்டி அனத்தல் ஓயவே இல்லை!
ஒரு
லால்குடி ஜெயராமன் அளவுக்கு இல்லைன்னாலும், எல் சுப்பிரமணியம் அளவுக்காவது ரவியை ஆக்கிவிடுவதுன்னு பானை பிடிச்ச பாக்கியசாலி முடிவு!
அவங்க
இருந்தது, தமிழ்நாட்டின் ஒரு வினோத பிரதேசம்!
எருமை
மாடு, மாமி, பீவி மூணுமே தலா சரியா 33.33333 சதவிகிதம் நிறைஞ்சிருந்த ட்ரிப்ளிகேன்! (திருவல்லிக்கேணின்னா இப்போ திருவள்ளுவருக்கே தெரியாது!)
எப்படியாவது
வயலின் கத்துக்கொடுக்கற மாமாவோ மாமியோ கண்டுபிடிச்சே ஆகணும்ன்னு கங்கணம்!
(மாமி
ப்ரிஃபரபில் - இது ரவி)
சந்து
சந்தா புகுந்து புறப்பட்டதுல ஒரே வாரத்தில் மூக்கோட்டை மாதிரி ஒரு சந்துல ஒரு தகர போர்டு!
வயலின் கற்றுக்கொடுக்கப்படும்!
சிவன்மலை
மாதிரி படியேறிப் போய் காலிங்பெல் அடிச்சா, தளதளன்னு ஒரு மாமா!
மார்ல
ஒரு வஸ்திரமும் இல்லாம பூணூல் மட்டும்!
“ஓ!
பேஷா கத்துக்கலாமே! நாளைக்கே வாங்கோ!
காலம்பற
வந்துட்டேள்ன்னா பெட்டர்! ஆறு டு ஏழு சௌகரியப்படுமா?”
யோவ்!
புதுசா கல்யாணம் ஆனவனுக்கு அதுதான்டா செகண்ட் ஷிஃப்ட் நேரம்!
எங்க
பேசவிட்டா பெட்டர் ஹாஃப்?
“தாராளமா!
நாளைக்கே அனுப்பிடறேன்!”
அதுக்கப்புறம்
எல்லாமே தடபுடல்தான்!
அப்போவே
போய் மவுண்ட் ரோட்ல ஒரு வயலின் வாங்கிட்டு, பார்த்தசாரதி கோவில்!
அங்கிருந்து
ரத்னா கேஃப் ரசகுல்லா வாங்கிக்கிட்டு சித்தப்பா வீட்ல போய் சாஷ்டாங்க நமஸ்காரம்!
“உங்க
மகன் நாளைல இருந்து வயலின் க்ளாஸ் போறார்!”
நல்லவேளை,
சித்தப்பாவோட நமட்டு சிரிப்பை அம்மணி பார்க்கலை!
லால்
மொஹம்மது ஸ்ட்ரீட்ல வயத்துப் பிள்ளை கிட்ட மட்டும்தான் சொல்லல!
“எங்க
வீட்டுக்காரர் நாளைக்கு வயலின் க்ளாஸ் போறார்!”
எல்
கே ஜி அட்மிஷன் கிடைத்த
குழந்தையாய் ரவி!
வளர்த்துவானேன்!
விடியற்காலைல
எழுந்து குளிச்சு, விபூதி வெச்சுக்கிட்டு,
அதுக்குள்ளே
கேசரி ரெடி, அதையும் ஒரு கட்டு கட்டிட்டு,
கையில
நோட்டும், பையில பழம் பாக்கு வெத்தலை, குருதட்சணை நூத்தியொரு ரூபாய், வயலின் எல்லாம் எடுத்துக்கிட்டு நாலு தெரு தள்ளிப் போய் மறுபடி சிவன்மலை ஏறி பெல் அடிச்சா,
கதவைத்
திறந்தது ஒரு அக்மார்க் அக்ரஹாரத்து தேவதை!
காதுக்குள்ள
இளையராஜா வயலின், தந்தன தம்தன தாளம் வரும்!!
“அப்பா,
உங்க புது ஸ்டூடண்ட் வந்தாச்சு!”
என்னடா
இது ஜென்ஸி குரல் இங்கே?
ரவி
ஒருமாதிரி தேனில் நனைந்த எருமை மாடு மாதிரி மெய் மறந்து நிற்க,
மாமா, "உள்ளே வாங்கோ!"
மறக்காம
வலது காலை எடுத்துவெச்சு உள்ளே போனான் கள்ளப்பயல்!
தட்சணையை
வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்ணுனவர், "காஃபி சாப்பிடறேளா?"
பதிலுக்கெல்லாம்
காத்திருக்காம,
"புஷ்பா, ஒரு காஃபி கொண்டாம்மா!"
ஆஹா,
என்னமா பேரு வெச்சிருக்காரு மனுஷன்!
பூவை
புஷ்பான்னுதானே சொல்லணும்!
புஷ்பா
கைல இருந்து கவனமா கைபடற மாதிரி காஃபி வாங்கும்போது மாமா "அன்னைக்கு உங்க கூட வந்தவா யாரு உங்க அக்காவா?"
அவா
எல்லோருமே புத்திசாலி இல்லைன்றது அப்போதான் ரவிக்கே புரிஞ்சது!
ஆமாம்ன்னுதான்
தலையை ஆட்டுனதா நியாபகம்!
பார்வை
முழுக்க புஷ் மேல!
“கல்யாணம்
ஆயிடுச்சா?”
இல்லைன்னு
புரிஞ்சுக்கிற மாதிரி ஆமாம்னு ஒரு தலையாட்டல்!
டம்ளரை
திருப்பிக்கொடுக்கும்போது
"தேங்க்ஸ்!
ரெண்டுதடவை சர்க்கரை போட்டுட்டீங்க போல!"
இந்த ஸ்ட்ரோக்
எல்லாப்
பொண்ணுங்களுக்குமே
புரியுமே!
எத்திராஜ்ல
செகண்ட்
இயர்
படிக்கற
பொண்ணுக்கு
புரியாதா
என்ன!
ஜண்டை
வரிசை சரளி வரிசைன்னு வயலின் ஒரு பக்கம்!
எதேட்சையா,
எதேட்சையாதான் நாலு நாள் கழிச்சு ஸ்டார் தியேட்டர் பஸ் ஸ்டாப்ல புஷ்பா, கள்ளப்பயல் ரவி கவாஸாகி பஜாஜ்ல!
அன்னைக்கும்
அடுத்த நாளும் மட்டும்தான் பல்லவன்!
அப்புறம்
கவாஸாகி பின் ஸீட் புஷ்பாவுக்கு!
வயலினும்,
பைக்கும் ஒழுங்காதான் போய்க்கிட்டிருந்தது!
வயலின்
ரூட் மாறல, பைக்குத்தான் கொஞ்சம் ட்ரைவ் இன் வழியா போக ஆரம்பிச்சது!
வீட்டில்
வயலின் ப்ராக்டிஸ்!
“அக்கா,
உங்க வீட்ல கதவுல மாட்ன எலி சத்தம் கேட்குது?”
குசும்பு!
கீழ்வீட்டு தாவணி!
கொஞ்சம்
டபுள் எக்ஸெல் சைஸ்!
புஷ்பாவுக்கு
முன்னாடி ரூட் விட நினைச்ச தேவதை! இப்போ புஷ்பா நிலாவுக்கு முன்னாடி இது அழுது வடியற குண்டு பல்ப்!
கொஞ்ச
நாள்ல
"எலி கத்தற சத்தம் இப்பல்லாம் ஹீட் வந்த பூனை மாதிரி கேட்குது!" இது டபுள் எக்ஸ் எல்!
இடைப்பட்ட மூணு மாசத்துல நல்ல முன்னேற்றம்! வயலினில் மட்டும் அல்ல!
எல்லா
கதைக்கும் ஒரு முடிவு இருக்கும்தானே!
எழிலகம்
ஆவின் பார்லர்ல புஷ்பா கை மருதாணி மேல
விரலால கோலம் போட்டுக்கிட்டே "நாளைக்கு சினிமாவுக்கு போலாமா புஷ்?"
முதுகுப்பக்கம்
ஏதோ உறுத்த, திரும்பினால், சித்தப்பா குடும்பத்தோடு, கூடவே
"ஹை,
உங்க அக்கா வந்திருக்காங்க ரவி!"
பொது
இடத்தில் நாகரீகம் கருதி மேனர்ஸ் மெயின்டைன் செய்யப்பட்டது!
அது கவாஸாகி
பஜாஜில் புஷ்பாவின் கடைசி பயணம்!
ஊரெல்லாம்
சுற்றிவிட்டு பதுங்கிப் பதுங்கி ரவி வீட்டுக்கு வந்தபோது மணி பத்து!
அடியெல்லாம்
விழுந்த நியாபகம் இல்லை!
ஆனால்
பக்கத்துத் தெருவில் பறந்துபோய் விழுந்த வயலின் மூணு துண்டாக உடைந்தது அந்த இருட்டிலும் நன்றாகவே தெரிந்தது!
வயலின்
உலகம் ஒரு மேதையை இழந்தது!