சனி, 3 பிப்ரவரி, 2018

பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள ஆசைப்படும் பாமரனின் கேள்விகள் சில!

எதையுமே கேள்வி கேட்டுத் தெளிவதுதானே பகுத்தறிவு!


சமீப காலங்களில் ஏதும் எழுதத் தோன்றாத சூழல்!

இருந்தும்,  பலவருடங்களாக உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு விஷயம் பற்றி இன்று சற்றே ஓய்வான மனநிலையில் எழுதத் தோன்றியது!

சமீபத்தில் கவிதாயினி திருமதி. கனிமொழி அவர்கள் ஒரு கவித்துவமான பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார்!
அது இணையத்தில்கூட வெகுவான பாராட்டுக்களைப் பெற்றது!
குறிப்பாக பெண்ணியம் பேசும் சில புரட்சியாளர்களிடம்!

“எனக்கோ, தலைவருக்கோ இறை நம்பிக்கை எள்முனையளவும் இல்லை! என் தாயின் இறை நம்பிக்கை அவரது சுதந்திரம்! அதில் யார் குறுக்கிட்டாலும் நான் அவருக்காகப் போராடுவேன்!”

மிக முற்போக்கான கருத்தும் கூட!

தனிமனித சுதந்திரத்தில், அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரத்தில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது வெளிப்படை!

அதுவும், நம் குடும்ப அமைப்பில் இன்றும், தங்களுக்கான உரிமைகள் நம்பிக்கைகள் ரசனைகள் இவற்றை பெண்கள் பேணுவது மிக சிரமம் என்பதே யதார்த்தம்!

அருமையான வரவேற்கத்தகுந்த கருத்து!

சில நாட்களிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் ஏறத்தாழ இதே கருத்தை முன்வைத்தார்!

“என் மனைவியின் இறை நம்பிக்கையை எங்கள் திருமணம் நடந்த காலத்திலிருந்தே நான் கட்டுப்படுத்தியதில்லை! அது அவர் சுதந்திரம்!”

நன்று!

தமிழகத்தில் இன்று வாழும் ஒப்பற்ற மூத்த தலைவரின் குடும்பம் பெண் சுதந்திரத்திற்கு வழங்கும் முன்னுரிமை மெச்சிப் போற்றத்தக்கது!

ஆனால், எதையும் கேள்வி கேட்டுத் தெளியும் முனைப்பு என்னை சில கேள்விகளை முன்வைக்கத் தூண்டுகிறது!

கொஞ்சம் பின்னோக்கிய அரசியல் நினைவில் இருப்போருக்கு ஒரு சம்பவம் நினைவில் இருக்கலாம்.

அந்தியூர் செல்வராஜ் என்றொரு திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர் ஒருமுறை அன்றைய முதல்வர் தலைவர் திரு. கருணாநிதி அவர்களை வரவேற்க சென்றபோது நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்திருந்தார்!

தன்னயே உரிய நையாண்டியோடு கலைஞர் கேட்டார், "என்னய்யா உன் நெற்றியில் தீப்பிடித்திருக்கிறது!"

அன்றே, இந்த மாபெரும் பகுத்தறிவு விரோத செயலால், அவரது கட்சிப்பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன!

அந்தத் தீ தன் வீட்டுப் பெண்களின் நெற்றியில் பிடித்திருந்தது அவருக்குத் தெரியவில்லை என்று குதர்க்கமாக நினைப்பதைவிட,

அது பெண்களின் நெற்றியில் இருந்தால் பொட்டு, ஆண்கள் நெற்றியில் என்றால் பகுத்தறிவைப் பிடித்த தீ என்று தலைவர் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்!

ஆனால் அன்றைய காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த இன்னொரு சட்டமன்ற உறுப்பினர் எப்போதுமே நெற்றியில் பளிச்சென்ற குங்குமப்பொட்டோடு வலம் வருவது வழமை!

அவருக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்க்கப்பட்டது!

தலைவருக்கு மிக நெருக்கமான அவர் பெயர் பி டி ஆர் பழனிவேல் ராஜன்!இந்த முரண்பாடுதான் எனக்கு எப்போதுமே உறுத்தல்!

இறை நம்பிக்கை என்பது சகித்துக்கொள்ளக் கூடிய, அல்லது போராடியாவது காப்பாற்றக்கூடிய தனி மனித உரிமை என்பது, ஒரே காலகட்டத்தில் ஆட்களைப் பொறுத்து மாறியது எப்படி?

அந்தியூராருக்கு பதவியைப் பறித்த குங்குமம் மதுரைக்காரருக்கு பதவியைக் கொடுத்தது எப்படி என்பது இன்றுவரை எனக்குப் புரியாப்புதிர்!

இந்து மதத்துக்கு அப்பாற்பட்ட இறை நம்பிக்கை குறித்த முரண்பாடுகளை நான் இங்கு பட்டியலிட விரும்பவில்லை!

ஆனால், ஒரே மதத்தில், ஒரே காலகட்டத்தில் இறை நம்பிக்கை தண்டிக்கப்படுவதும், மன்னிக்கப்படுவதும் எந்த அளவுகோளின்படி?

எனில், மனிதர்களின் நம்பிக்கை, பகுத்தறிவு மற்றும்  உரிமைகளை அவர்களின் தகுதிகள்தான் தீர்மானிக்கின்றனவா?

இது முதல் கேள்வி!

இறை மறுப்பாளர்கள் சாதி வலைக்குள் அகப்பட்டுக்கொள்ளலாமா?

இறைமறுப்பின் முக்கிய நோக்கமே மனிதர்களுக்குள் சாதி மத ரீதியான பாகுபாடுகளை வேரோடு அறுப்பதுதானே?

இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, மதவேறுபாடுகளைவிட சாதி வேறுபாடுகள்தான் ஆழமாக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதானே?எனில், சாதி என்ற பெரும் தீயைக் கண்டால் முதலில் அதையல்லவா கொளுத்தவேண்டும்?

அதைவிடுத்து,

பொன்னே விளையினும் சாதிக் கூட்டங்களில் பகுத்தறிவாளர் காலெடுத்து வைக்கலாமா?

இது என் இரண்டாவது கேள்வி!

திராவிடர் கழகம் இந்த விஷயத்தில் இன்றும் திமுகவைவிட பலமடங்கு வீரியத்தோடு இயங்கிவரும் அமைப்பு!

அதற்கு எந்த சூழலிலும் தன் இறை மறுப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை என்ற முற்போக்கு சித்தாந்தங்களில் சமாதானம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தமே இல்லை!

அவர்களின் தலைவர் திரு. வீரமணி பெரியாரின் ஒரே நேரடி வாரிசாக அறியப்படும் தீச்சுடர்!

அவர் நடத்தும் வீரியமான கொள்கைப் போராட்டங்களில் முக்கியமானது தாலி மறுப்புப் போராட்டம்!

மிக அற்புதமான விஷயம் அது!


ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் அடிமை இல்லை என்று பொட்டிலடித்தாற்போல் சொல்லும் காரியம்!

அதில் கலந்துகொண்ட அத்தனை பெண்களும் தங்கள் மனதுக்கு முழு உவப்போடுதான் அந்தச் செயலை செய்தார்களா?

அந்த வீட்டு ஆண்கள் அவர்களை எந்த விதத்திலும் நிர்பந்தம் செய்யாமல், கொள்கைப் பிடிப்போடு அதில் கலந்துகொள்ள வைத்தார்களா?

அப்படித்தான் என்று திருமதி. கனிமொழி அவர்கள் உறுதியாக நம்புகிறாரா?

தாய்க் கழகம் ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வு, தன் தாயைப்போன்ற பெண்களின் சுதந்திரத்தை மறுக்காமல் நடக்கிறதா என்ற அக்கறை அவருக்கு இல்லையா?

ராசாத்தி அம்மாவின் உரிமைக்குப் போராட கனிமொழி இருக்கிறார்! அந்தப் பெண்களின் உரிமைக்குப் போராட யார் இருக்கிறார்கள்?

அங்குதானே கனிமொழி போன்ற போராளிகள் இன்னும் வீரியத்தோடு தேவைப்படுகிறார்கள்?
கீழ்மட்டத் தொண்டர்களின் மனைவிகள் தலைவர்கள் வீட்டுப் பெண்களைவிட அதிக பகுத்தறிவும் தெளிவும் பெற்றுள்ளனரா?

இது மூன்றாவது கேள்வி!

தலைவன் என்பவன் யார்?

தன் கொள்கைகளை அனைவருக்கும் புரிந்துகொள்ளும்படி விளக்கி அவர்களை கட்டாயப்படுத்தாமல் தானாகாவே  உணர்ந்து அதன்படி நடக்கவைப்பவன்தானே உண்மையான தலைவன்?

தன் மனைவிஅடிமைச் சின்னத்தை தொங்கத் தொங்க அணிந்துகொண்டு, மூடநம்பிக்கையின் அடையாளமான நெற்றிப்பொட்டோடு வலம் வருவது மூடநம்பிக்கை என்பது ஐயா வீரமணி அவர்களுக்குத் தெரியாதா?

பெண் உரிமை என்பது தலைவர்கள் வீட்டில் மட்டும்  மூடநம்பிக்கையை அனுமதிக்கிறதா?

அல்லது, தன் அறிவார்ந்த விவாதங்களை, பரப்புரைகளை, கொள்கைகளை கீழ்மட்டத் தொண்டர்களின் மனைவிகள் புத்திபூர்வமாக புரிந்துகொள்ளும்போது, தன் மனைவி பெண்ணுரிமை என்ற பெயரில் புரிந்துகொள்ள மறுத்து, அல்லது முனையாமல், முட்டாளாய் உலவுவதை தடுக்கமுடியாமல் தடுமாறுகிறாரா?

எனில், அவரைவிட, அவரது தொண்டர்கள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்கள் உரிமையை பாதிக்காமல் சொல்லி மாற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதுதானே உண்மை?

அப்படியானால்,

அவர்களில் ஒருவர்தானே ஐயா வீரமணி அவர்களைவிட தலைமைக்கு தகுதியானவர்கள்?

இது நான்காவது கேள்வி!

கடைசியாக, ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக என்னுள் உறுத்தும் முள்!

அப்போது திரு. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் ஒரு மிகப்பெரிய போராட்ட வடிவைக் கையில் எடுத்திருந்தது!

தெருப்பெயர்களில் இருந்து சாதியை நீக்கும் போராட்டம்!

கண்ணில் பட்ட தெருக்களில் எல்லாம் பெயர்ப்பலகைகளில் சாதிப் பெயர்கள் தார் பூசி அழிக்கப்பட்டன!

தமிழகம் அதில் பரபரப்பாய் இருந்த நேரத்தில் நான் படித்த கல்லூரியில் ஆண்டுவிழா!

அந்தக் கல்லூரியின் மேனேஜிங் ட்ரஸ்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கூட்டம்!

எல்லோரும் பேசி முடித்ததும் கேள்வி நேரம்!

மாணவர்கள் தங்கள் கேள்விகளையும் குறைகளையும் கேட்க, நிர்வாகத்தின் தரப்பில் பதிலோ, விளக்கமோ தரப்பட்டுக்கொண்டிருந்தது!

ஒரு துடுக்கான மாணவர், என்ன நல்ல நேரமோ, பின்வரிசையில் உட்கார்ந்தவாறே ஒரு கேள்வியைக் கேட்டார்!
“ஐயா, ஊரெல்லாம் சாதிப்பெயரை தார் பூசி அழித்துக்கொண்டிருக்கிறார்கள்!
சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்ற நம் கல்லூரியின் பெயரை சிக்கய்யர் கல்லூரி என்று எப்போது மாற்றப்போகிறோம்?”

கல்லூரியின் மேனேஜிங் ட்ரஸ்டி மிகப் பொறுமையாக பதில் சொன்னார்!

“தைரியம் இருந்தால் எழுந்து நின்று இந்தக் கேள்வியைக் கேளடா!
வெளியே வா உனக்கு நான் பதில் சொல்கிறேன்!”

அதன்பின், அந்த மாணவரை யார் கண்ணிலும் படாமல் காப்பாற்றி ஊருக்குக் கூட்டிச் செல்ல நாங்கள் பட்ட பாடும், அவரின் அடையாளம் நிர்வாகத்துக்குத் தெரிந்துவிடாமல் காப்பாற்ற கல்லூரியின் அன்றைய எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய முதல்வர் அனந்த பத்மநாப நாடார் பட்ட பாடும் தனி த்ரில்லர் கதை!

அந்த ட்ரஸ்டி வேறு யாருமல்ல, மானமிகு. வீரமணி ஐயா அவர்கள்தான்.
இந்த நிமிடம் வரை அந்தக் கல்லூரியின் பெயர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரிதான்!ஒருவேளை பின்னாளில் வீரமணி ஐயா கூட வீரமணி யாதவர் என்றே அறியப்படுவாரோ என்னவோ!

உபதேசம் எல்லாமே ஊருக்கு மட்டும்தானா?

இதுதான் ஐந்தாவது கேள்வி!

எதையும் கேள்வி கேட்டுத் தெளிவதே பகுத்தறிவு என்பதால்,
இந்தக் கேள்விகளுக்கு,
நித்யானந்தா மற்றும் ஹெச் ராஜா பாணியில் இல்லாமல்
அறிவார்ந்த பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ....கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக