செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

வஸந்த்துக்கு வந்த காதல்! (சுஜாதா மன்னிக்க!)


செம்புலப் பெயல் நீர்போல!
(திரு. சுஜாதா அவர்களுக்கு நன்றிகளுடன்!)எட்டாம் நம்பர் கோர்ட்டில் ரங்காச்சாரி பேசுவதை கொட்டாவியை அடக்கிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான் கணேஷ்!
பக்கத்தில் IT ஜர்னல் பைண்ட் வால்யூமுக்குள் மொபைலை வைத்து ஏதோ வீடியோ பார்த்துக்கொண்டு புன்னகைத்திருந்த வஸந்த்!

இந்த ஆளையெல்லாம் எப்படிடா கவர்ன்மென்ட் பிளீடர் ஆக்கினாங்க?
எப்படியும் நம்ம தோக்கப்போற கேஸு! எதுக்கு இந்தக் கிழவனோட மல்லாடணும்?
பேசாம பார்ட்டியை அக்செப்ட் பண்ணிக்கிட்டு பெனால்டி கட்ட சொல்லிடலாமா?

பாஸ், மனசாட்சி இல்லாம பேசாதீங்க! மார்வாடிகிட்ட எத்தனை தரம் நெய் சொட்ட ஸ்வீட் வாங்கி சாப்பிட்டிருப்போம்!
விடுங்க! கிழம் பினாத்திட்டுப் போகட்டும்!

டேய், அந்த ஆள் வெறும் கேஸ் ரெஃபரன்ஸ் அடுக்கிட்டே போறாண்டா! ஏதாவது டிராமா பண்ணி ஒரு வாய்தா வாங்கித் தொலை!
எந்தநேரமும் போர்ன் வீடியோ!

போங்க பாஸ்! போர்ன் எல்லாம் உங்க காலம்! இப்போ வைரல் ப்ரியா வாரியர்தான்!
அந்தக் கண்ணுக்கு ரங்காச்சாரி சொத்து மொத்தமும் எழுதி வைக்கலாம்!

ச்சை! இன்னைக்கு ஏழாவது கோர்ட்ல மாதவன் கேஸ் வருதுடா! ஏதாவது பண்ணி அந்த ஆளை நிறுத்தித் தொலை!

அவ்வளவுதானே பாஸ்! இப்போ பாருங்க!

அப்ஜெக்சன் யுவர் ஆனர்!
இது ஏற்கனவே முடிஞ்ச கேஸ்! இந்த கோர்ட்டோட பொன்னான நேரத்தை அரசு வக்கீல் விரயம் செஞ்சுக்கிட்டிருக்கார்!
Godrej & Boyce Manufacturing Co Ltd vs. DCIT கேஸ்ல மே 2017 சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் ப்ரெசிடென்ஸ் இருக்கு! நீங்க இந்த க்ஷணமே இந்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் யுவர் ஆனர்!

ஒரு நிமிஷம் ஸ்தம்பிச்ச பார்வை பார்த்த ரங்காச்சாரி
யுவர் ஆனர், எனக்கு அந்த கேஸ் படிக்க கொஞ்சம் அவகாசம் வேணும்னு ஜகா வாங்க,

ஜட்ஜ் புன்னகையோடு,
நீங்க என்ன சொல்றீங்க வஸந்த்?

எனக்கு ஆட்சேபணை இல்லை ஆனால், அடுத்த வாரம் முழுக்க நாங்க பிஸி!
வாய்தா கொடுக்கறதுன்னா மார்ச் கடைசில ஒரு தேதி வேணும்!

மார்ச் 23. பைனல் டேட் ஃபார் சம்மிங் அப்!

ரங்காச்சாரி சோர்ந்துபோய் உட்கார,

எங்கிருந்துடா பிடிச்சே அந்த ஜட்ஜ்மெண்டை?

யாருக்குத் தெரியும் பாஸ்! சும்மா அள்ளிவிட்டேன்!
வாங்கோ மாமா! - இது ரங்காச்சாரிக்கு!

டேய் வஸந்தகுமாரா, மாமி உன்கிட்ட தரச்சொன்னா!

நட்ட நடு ஹாலில் கோட்டுக்குள்ளிருந்து ஒரு பாட்டிலை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு மூக்கை நீவிக்கொண்டே அவர் நகர்ந்ததும் கணேஷ் ஏறத்தாழ உறுமினான்
என்ன எழவுடா இது?

மாமியும் நானும் ட்விட்டர் ஃபிரெண்ட்ஸ் பாஸ்!
மாவடு போட்டோ ஷேர் பண்ணியிருந்தா, அதான் மாமாகிட்ட கொடுத்து விடச் சொன்னேன்!

முட்டாளே, நான் அதை கேட்கல. அந்த ஜட்ஜ்மெண்ட் நிஜமா, இல்லையா?

யாருக்குத் தெரியும் பாஸ், நீங்க வாய்தா வாங்கச் சொன்னீங்க, அது நடந்துச்சா இல்லையா!

டேய், உனக்கு எல்லாமே விளையாட்டா? அடுத்த ஹியரிங்ல அசிங்கம் ஆகாதா? முட்டாள், முட்டாள், வரவர உன் கிறுக்குத்தனம் அதிகமாகிட்டே போகுது
பேசாம நீ வேற ஆபீஸ் பார்த்துக்கோ எனக்கு இவ்வளவு சிறுபிள்ளைத்தனம் உதவாது!

பாஸ், நிஜமாத்தான் சொல்றீங்களா?

ஆமாம்! போய்த்தொலை!

கொஞ்சநேரம் அடிபட்ட பார்வை பார்த்துக்கொண்டிருந்த வஸந்த் விருட்டென்று எழுந்தான்!
கண்ணில் கொஞ்சம் கண்ணீர் கரையிட்டிருந்ததோ?

சரி பாஸ்! இப்போவே கிளம்பறேன்!

ஊறுகாய் பாட்டிலை எடுத்துக்கொண்டு சரேலென்று அவன் விலகிய திசையையே நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கணேஷ்!

கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டோமோ?

மதியம் முழுக்க வஸந்த் கூப்பிடவே இல்லை!
கணேஷ் கூப்பிட்டபோது பெண்குரல் அவன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகச் சொன்னது!


மாதவன் கேஸை ஏதோ ஒப்பேற்றிவிட்டு கேண்டீனில் ஒரு ப்ளாக் காஃபி வாங்கிக்கொண்டு உட்காருகையில் வஸந்திடமிருந்து மெசேஜ்
“Thanks for everything. Letter on office table”

உடனே கூப்பிட, மறுபடி நாட் ரீச்சபிள்!

தன்னைத் தானே திட்டிக்கொண்டு ஆபீஸ் வரும் வழியில்தான் தோன்றியது. என்ன வாழ்க்கைடா இது
காலம் போன காலத்தில் இன்னும் பேச்சுலர் லைப். இருந்து என்ன சாதிக்கப்பபோகிறோம்!

கொஞ்சநேரம் மெரினாவில் காரை பார்க் பண்ணிட்டு இருட்டை வெறித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான்!
யாரோ கன்னத்தில் சுரண்டுவதுபோலிருக்க,
பீச்சுக்கு நேர்ந்துவிட்ட பத்து ரூபாய் பதிவிரதை ஒருத்தி!

இன்னா ஸார் எதுனா வோணுமா? நூறு ரூபா குடு ஸார் போதும்!

அவசரமாக ஆக்ஸிலேட்டரை மிதித்து கற்பைக் காப்பாற்றிக்கொண்டு ஆபீஸ் வந்தபோது இருட்டு கண்ணில் அறைந்தது!

வஸந்த் இன்னும் வந்திருக்கவில்லை!

இன்னைக்கு ஏன் இந்த வாய் நமக்கு என்று மண்டையில் அடித்துக்கொண்டு கதவைத் திறந்து லைட் போட, மாவடு ஊறுகாய் பாட்டில் வெய்ட் வைக்கப்பட்டு காற்றில் துடித்துக்கொண்டிருந்தது வஸந்த் கடிதம்!

கவலையாய் எடுத்தவன் புன்னகைத்தான்!

பாஸ், கவலைப்படாதீங்க!
நான் கோர்ட்டில் கொடுத்த ஜட்ஜ்மெண்ட் நிஜம்தான்! லா ஜர்னல் புக் மார்க் பண்ணி பக்கத்தில் வைத்திருக்கிறேன்!
It was pertaining to section 14a of income tax act 1961.
ரிலீஃப்தான் கிடைத்திருக்கிறது. நாம் ஜெயிச்சுட்டோம்! சும்மா விளையாடிப்பார்த்தேன்!
கோவிச்சுக்கிட்டீங்க! பரவாயில்லை!
நேக்கும் உங்கள விட்டா யார் இருக்காபோகணும்ன்னு தோணலையே!!!
ஆனாலும் எனக்கு கோபம்தான்!
ஃப்ரிஜ்குள்ள டக்கீலா இருக்கு!
ஒரு ஷாட் போதும் உங்களுக்கு! மாமி அனுப்பிச்ச ஊறுகாய் சாறு நல்ல காம்போ!
அடிச்சுட்டுப் படுங்க! வர லேட் ஆகும்!
காலைல பார்ப்போம்! - வஸந்த்!


புன்னகைத்துக்கொண்டு வஸந்த் மேஜையிலிருந்து ஒரு படம் போட்ட புத்தகத்தை எடுத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான்!

என்ன பாஸ், இவளை நெஞ்சுமேல போட்டுக்கிட்டு தூங்கறீங்க!

சத்தம் கேட்டு விழித்தபோது பக்கத்தில் வஸந்த்! மணி பார்த்தான்! ஒன்னரை!

இன்னேரம் வரைக்கும் எங்கடா போய் சுத்திட்டு வர்றே?

ஷார்லு கூட ஒரு ஜாயிண்ட்க்கு போயிட்டு வர லேட் ஆயிடுச்சு பாஸ்!
அவளுக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சு! கொண்டுபோய் ரூம்ல இறக்கிவிட்டுட்டு வர்றேன்!
வர்றவழில ஒரு நல்ல ஷாலுமால் ஒன்னு! அதுதான் லேட்!

என்ன எழவு பாஷைடா இது?
அது என்ன பேரு ஷார்லு?
பேசாம ஒரு கல்யாணத்தை பண்ணித் தொலைச்சுக்க!

அதுதான் பாஸ் நானும் யோசிக்கறேன்!
திங்க் ஐயம் இன் லவ் வித் ஷார்லு!

டேய், என்னடா நிஜமாவே வெக்கப்படறே?
அது எப்படிடா உங்களுக்கு இந்த வயசுல இந்த லவ் எல்லாம் பண்ண முடியுது? அதுவும், நீ? எல்லாமே உனக்கு சிங்கிள் ஷாட்தானே!

அசிங்கமா பேசாதீங்க பாஸ்!
ட்விட்டர்ல ஒரு பொண்ணு பொணத்துக்கு தாலி கட்டுற சூப்பர் செண்டிமெண்ட் வீடியோ பார்த்து நான் திருந்திட்டேன்!
திருமூலரோ திருவள்ளுவரோ சொன்னமாதிரி, கற்பிற் பெருஞ்செல்வம் யாதுல
இனி அப்படித்தான் வாழறதுன்னு முடிவு!

ஆனா போன மாசம் வேற எதோ ஸ்வர்ணலட்சுமின்னு ஒரு பேர் ஓடிக்கிட்டு இருந்துச்சு?

அது போனமாசம் பாஸ்!
பார்ட்டி யாருன்னு நினைச்சீங்க?
நம்ம ரங்காச்சாரி பொண்ணு! அம்மா மாதிரியே நல்ல வளப்பம்!

அப்புறம் ஏன்டா அதை விட்டே?

நான் என்ன பண்ணட்டும்? அவளுக்கு நல்லா தடிமாடு மாதிரி ஒரு புருஷன் அமெரிக்கால இருந்து வந்து தொலைச்சுட்டானே?
மாட்டுக்கறி எல்லாம் திம்பான் போல, ஆறரை அடிக்கு முரட்டு பிராமணன்!
அதுதான் என்னவோ சொல்லுவாங்களே, அந்த ஜாடிக்கு ஏத்த மூடியோ, உரலுக்கு ஏத்த உலக்கையோ! எங்கிருந்தாலும் வாழ்கன்னுட்டு வந்துட்டேன்!

என்ன எழவெடுத்த உவமைடா இது?
சுஜாதா புக் ரொம்பப் படிச்சு சீப்பா பேசிப்பழகிட்டே!

ஆசானை குறை சொல்லாதீங்க பாஸ்! இப்போ நான் ஒரு ஜோக் சொல்றேன்! இதை எழுதுனது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!

"தம்பியை குளிக்கவைத்துக்கொண்டிருந்த அம்மாகிட்ட அக்கா ஒரே அழுகை, எனக்கு அதுமாதிரி ஒன்னு வேணும்!
அம்மா சொன்னா, நீ சமத்தா இருந்தேன்னா உனக்கும் பெரிய பொண்ணு ஆனதும் ஒன்னு கிடைக்கும்!
பேப்பர் படிச்சுட்டிருந்த அப்பா சொன்னார்,  சமத்தா இருந்தா ஒன்னுதான் கிடைக்கும்! இல்லைன்னா நிறைய கிடைக்கும்!"

த்தூ! ஏன்டா இப்படி? யாரு, சாருவா?

நம்பமாட்டீங்க பாஸ்! இந்துமதி மாமி, அதுவும் அக்மார்க் குடும்பக்கதைல!
எல்லாருமே மாறியாச்சு! நீங்கதான் இன்னும் புத்தகத்திலேயே படம் பார்த்து கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க!

சரி, மதியம் ஏன்டா அப்படி ஸீன் போட்டுட்டுப் போனே?

நான் கேட்டா நீங்க விடவா போறீங்க?
ஷார்லு மதியம் ரூமுக்கு வா, உனக்கு ஒன்னு காட்டறேன்னா!
பாதிதான் காட்டினா, மீதி கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்ன்னு ஒரே பிகு!

ஏன்டா இப்படி அலையிறே கிடந்து?

பாஸ், சரோஜாதேவியெல்லாம் படிச்சு உங்க மைண்ட் ரொம்ப கரப்ட் ஆயிடுச்சு! அவ காட்டறேன்னு சொன்னது அவளோட புக்ஸ் கலெக்சன்!

எங்களோடது நிஜமான தெய்வீகக் காதல் பாஸ்!
நாளைக்கு வேலண்டைன்ஸ் டே!
அவங்க ஃபேமிலி காலைல கல்கத்தா ஃபிளைட்ல வராங்க!
பிக் அப் பண்ணி கன்னிமாரால விட்டுட்டு வர்றேன்!
சாயங்காலம் அவளுக்கே ஒரு சர்ப்ரைஸா பொண்ணு கேட்க என் சார்பா நீங்கதான் வர்றீங்க!

டேய், ஆர் யூ சீரியஸ்? வழக்கம்போல ஜோக்தானே?

இல்லை பாஸ்! இந்தத்தடவை கொஞ்சம் ஜுரம் வந்தமாதிரி, கிறுக்கு பிடிச்சமாதிரி இருக்கு! லவ்வுதான் போல! அதுதான் அரங்கேற்றம் பண்ணிடலாம்ன்னு!

அந்தப் பொண்ணுக்கு தெரியுமா?

எங்கே, இன்னும் ப்ரபோஸ் பண்ணவே இல்லை, புதுசா ஸ்ட்ரைட்டா பேரன்ட்ஸ்கிட்டயே பேசுவோம்! கொஞ்சம் சர்ப்ரைஸ் எலிமெண்ட் வேணும் பாஸ் வாழ்க்கைக்கு!

காலைல கண் விழித்தபோது வஸந்த் இல்லை
வழக்கம்போல் பாத்ரூம் கண்ணாடில ஸ்லிப்!

பாஸ்! வருங்கால மாமனார் மாமியாரை பிக் அப் பண்ணப் போறேன்!
அக்கார்ட் சாவியைத் தேடாதீங்க!
நீட்டா ஷேவ் பண்ணிட்டு ரெடியா இருங்க, நல்ல நேரம் சாயங்காலம் நாலரை டு அஞ்சறை  பொண்ணு கேட்கப் போகலாம்
சமத்தா நல்ல ட்ரெஸ் ஏதாவது போட்டுக்கோங்க! கட்டாயம் தலை வாரிக்கோங்க! பை!

கொஞ்சம் பொறுப்பாகவும், கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாகவும் உணர்ந்தான்!

கடைசியா வஸந்த்தும் விட்டுப் போகப்போகிறான்
இன்னும் எந்த ராஜகுமாரிக்கு காத்திருக்கிறேன்!

வஸந்த் வரும்போதே தேன் குடிச்ச நரி மாதிரி வந்தான்!
பிளாக் பாண்ட், கருநீல சட்டை, டக் இன் பண்ணி, தலைமுடியை ஒருமாதிரி படிய வாரி,

இப்போவே மாப்பிள்ளை மாதிரிதான்டா இருக்கே!

அவசரம் அவசரமா பிரகாஷ் பவன்ல ஒரு இட்லிவடை சாப்பிட்டுவிட்டு கோர்ட்!

வழக்கத்துக்கு மாறா வஸந்த் கொஞ்சம் சைலண்டா இருக்கற மாதிரி பட்டுச்சு!

என்னடா?

டென்ஷன் பாஸ்! வாழ்க்கைல முக்கியமான முடிவு எடுக்கப்போறேன்!

ஆர் யூ சீரியஸ்?

எஸ் பாஸ்! அப்படித்தான் தோணுது!

மதியம் சாப்பிடும்போதும் அமைதியாவே இருந்தான்!
கணேஷ்தான் பொறுக்கமுடியாமல் கேட்டான்!

எத்தனை மணிக்குடா கிளம்பறோம்?

..றோம் இல்லை பாஸ்! ..றேன்!

ஏன்டா, என்ன ஆச்சு?

பாஸ், இன்னைக்கு அவங்க அப்பா அம்மா கூட அவ தங்கையும் வந்தா!
என்னா மாலு பாஸ் அது! அப்படியே ஃப்ரெஷ்ஷா பூத்த பூ மாதிரி!

வெஸ்ட் பெங்கால் நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் ஜூரிட்டிக்கல் சைன்ஸ்ல செகண்ட் இயர் லா படிக்குது!
பேர கேட்டா, 
மலர்!
மொத்தமாவே அப்படித்தான் இருக்கு பாஸ்! ஸ்வே, நான் அப்படியே ஆடுறேன் பாஸ்!

சத்தியமா அது பொண்ணு இல்லை, பொண்ண்ண்ண்ண்ணு!
அவ பக்கத்துல ஷார்லு பித்தளை மாதிரி இருக்கு!

முடிவு பண்ணிட்டேன்!
ஆயுசுக்கும் அது என்னது, என்னமோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே, ம், அவலை நினைச்சுக்கிட்டு உரலை இடிச்சுக்கிட்டு இருக்க முடியாது!
அதுமாதிரி, அவளை நினைச்சுக்கிட்டு ....

அதனால
இன்னும் பத்து நாள் இருப்பாங்களாம்!
ட்ரை பண்ணிப் பார்க்கலாம்ன்னு இருக்கேன்! மாட்டுனா மலர்,

இல்லைன்னா?

ரெண்டுமே வேண்டாம் பாஸ்! அது சிக்கல்! பக்கத்துல பிரியாணிய வெச்சுக்கிட்டு புளியோதரை சாப்பிடமுடியாது!

காலைல வரைக்கும் அம்பிகாபதி அமராவதி ரேஞ்சுக்கு பேசினாயே?

பாஸ், அது மலருக்கு முன்! இப்போ சீன் மாறிடுச்சு பாஸ்! பெரிதினும் பெரிது கேள்.- சொன்னது யாரு? 

நாளைக்கே வேற ஒரு மயில் வந்தா என்ன பண்ணுவே?

வரட்டும் பாஸ்! பிரியாணி அலுத்துப்போனா பாஸந்தி சாப்பிடுவோம்! 
வாழ்த்தி அனுப்புங்க பாஸ்!
கரெக்ட் ஆச்சுன்னா, அதையும் நீங்கதான் பொண்ணு கேட்க வரணும்!
என்ன, ஒரு வருஷம் தேவுடு காக்கணும், அதுக்குள்ளே ஷார்லுக்கு ஒருத்தன் கிடைக்கணும்!
நல்லவேளை பாஸ்!
இன்னைக்குத்தான் ப்ரபோஸ் பண்ணி பொண்ணு கேட்கலாம்ன்னு இருந்தேன்!
தப்பிச்சேன்! கடவுள் ஃபிளைட்ல மலரை அனுப்பிச்சார்!

மலரே, நின்னை ஞான் ப்ரேமிச்சு!

வரட்டா?
சொல்ல மறந்துட்டேனே,
ஹாப்பி வேலண்டைன்ஸ் டே பாஸ்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக