திங்கள், 26 மார்ச், 2018

கால் கிலோ காஃபித்தூள்!


ஒரு உரையாடல்!


சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா  சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ ........
வியாழன், 15 மார்ச், 2018

ஸ்டாலினை எரிக்கத் துடிக்கும் கொள்ளிகள்!


இணைய உடன்பிறப்புகளின் உண்மை நோக்கம் என்ன?தங்கள் புகழ் வெளிச்சத்தை அரசியல் நுழைவுக்கு துருப்பு சீட்டாக நடிகர்கள் பயன்படுத்துவது எனக்கு உவப்பில்லை!

 ஆனால், நடைமுறையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்குப் புதிதில்லை!

இப்போது ஆளும் கட்சியும், அதற்கு முன் ஆண்ட கட்சியும் வெள்ளித்திரை வெளிச்சம் இல்லாவிடில் இவ்வாவு தூரம் துளிர்த்திருக்கவே முடியாது!


1967 ஜனவரி மாதம் எம் ஜி ராமச்சந்திரன் குண்டடி பட்டு கழுத்தில் கட்டோடு ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த கோலம் தமிழகத்தின் பட்டி தொட்டியிலெல்லாம் போஸ்டராகி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 137 தொகுதிகளை பெற்றுத் தந்த ஆரம்பம் முதல்,

1996ல் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்ற விமர்சனம் 173 தொகுதிகளை வாரித்தந்தது வரை நடிகர்களை மிகச் சரியாக உபயோகித்துக்கொண்ட கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்!

இன்று (சில) நடிகர்கள் (மட்டும்) அரசியலுக்கு வருவதை அந்தக் கட்சியே எதிர்ப்பது ஆச்சரியம் இல்லை
காலம் எல்லா கோணங்களையும் பார்வைகளையும் மாற்றவல்லது! ஆனால் அதில் வெளிப்படும் வன்மம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது!

வரலாறு அவ்வளவு சீக்கிரமாகவே மறந்துபோகும் விஷயமல்ல நண்பர்களே!

முத்தமிழ் வித்தகருக்கும் ஸ்டாலினுக்கும் தெரியும் 1996ல் ஒரு ஒற்றைவரிப் பேட்டி எத்தனை முறை திமுக விளம்பரங்களில் இடம்பிடித்ததென்று!

இன்று அநாகரீகமாகப் பேசுவோருக்கு தலைமையிடம் சாதிக்க ஏதாவது இருக்கலாம்!
அதற்குமுன் திருக்குறளின் பதினோராவது அதிகாரம் செய்ந்நன்றியறிதல். அதற்கு கலைஞரின் உரையை மட்டுமாவது கஷ்டப்பட்டு படித்துவிட முயலுங்கள்!

எம்ஜியார் விஷயத்தில், ஜெயா விஷயத்தில்,  உங்கள் ஆத்திரம் என்ன விளைவை ஏற்படுத்தியது என்ற வரலாற்றை உங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கொஞ்சம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்!

ஸ்டாலினுக்கு இப்போது காலம் கனிந்திருக்கிறது! குட்டிகளின் குரைப்பு அவரை பாதிக்கவேண்டாம்!

1984 சட்டசபை தேர்தலின்போது நடந்த சில நாடகங்களை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பார்ப்போமா?

இப்போது நடக்கும் கேரக்டர் அசாசினேஷன் முயற்சிகள் எல்லாம் நமக்கு எவ்வளவு பழக்கப்பட்ட பழைய உத்திகள் என்பது பாவம் இன்றைய இணையதள அறிஞர்களுக்கு தெரியாது!

ஏனெனில் அதில் 90 விழுக்காட்டினர் அப்போது பிறந்திருக்கவே மாட்டார்கள்! ஆனால், மூத்த கழகத் தோழர்களிடம் சற்றே கேட்டு வரலாற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கலாம்!

டிசம்பர் 24 1984 தேர்தல் தேதி!
அக்டோபர் 31ம் தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார்!

அப்போது எம்ஜியார் அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்!

நாடெங்கும் அனுதாப அலை! தமிழகத்தில் அது உச்சத்தில்!

இப்போதுபோல் உடனடி, நேரடி ஒளிபரப்பு வசதிகள் ஏதும் இல்லாத காலம்!


எம்ஜியார் நலமுடன் இருப்பதாக அதிமுக பிரச்சாரம் செய்கிறது
இல்லை, அவர் இறந்துவிட்டார் என்று திமுக எதிர் பிரச்சாரம்!

வேறு வழியின்றி, அதை நிரூபிக்க அதிமுக சில புகைப்படங்களை வெளியிடுகிறது!

அன்றும் கீழ்மையான முயற்சியைத்தான் கையில் எடுத்தது திமுக!

அந்தப் படங்கள் போலி என்று நிரூபிக்க, மாண்டுபோன இந்திரா காந்தி எம்ஜியாரை சந்திப்பதுபோல் ஒரு புகைப்படத்தை முரசொலி வெளியிட, விளைவு எதிர்மறையானது!

அப்போது விரக்தியில் கலைஞர் ஒரு அபத்தமான பிரச்சாரத்தை மேற்கொண்டார்!

எம்ஜியார் மறைந்துவிட்டார்! அதிமுக அதை மறைத்து நாடகம் ஆடுகிறது என்றவர்,
திடீரென்று, 
அப்படி என் நண்பர் உயிரோடு திரும்பிவந்தால், நானே அவர் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்! அவர் வரும்வரை என்னை ஆட்சி செய்ய அனுமதித்து எனக்கு வாக்களியுங்கள்!”  என்று கெஞ்ச ஆரம்பித்தார்!

மக்கள் 132 தொகுதிகளை எம்ஜியாருக்கும் வெறும் 24 தொகுதிகளை அவரது நண்பருக்கும் கொடுத்தார்கள்!

அதன்பிறகு கலைஞருக்கு முதுமையோடு முதிர்ச்சியும் வந்தது!

எம்ஜியார், ஜெயலலிதாவை விட கலைஞரே மேல் என்ற நிலைப்பாட்டில் எப்போதும் இருந்த என்போல் நடுநிலைவாதிகளை அது மெதுவாக திமுகவை ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது!

ஸ்டாலினின் தெளிந்த, நிதானமான நிலைப்பாடுகள்,
அவரது நாற்பது ஆண்டுகால அயராத உழைப்பு,
சுற்றியிருந்த எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட ஊழல் களங்கத்தின் நிழல் கூட தன்மீது அண்டவிடாத அரசியல்
என,
இன்றைய தமிழக முதல்வர் வேட்பாளர்களில் கட்சி அபிமானம் தாண்டி யோசிக்கத் தெரிந்த அனைவரின் விருப்பமாக ஸ்டாலின் வளர்ந்துவருவது எதிர்க்கட்சிகளை உறுத்தியது பிழை இல்லை!

ஆனால் அவரது இணையத் தொண்டர் படைக்கு ஏன் உறுத்தியது என்றுதான் புரியவில்லை!

கடந்த சில நாட்களாக ரஜினி என்ற தனி மனிதர் மேல் அவர்கள் வாரி இறைக்கும் சேறும், அதற்காக அவர்கள் இறங்கும் தரமும் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது!


ஒருவேளை, கோபாலபுரத்துக்கு ரஜினியின் கடைசி விசிட்டின்போது ஸ்டாலினின் உடல்மொழியும் முகபாவமும் இவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியதோ
அல்லது 
எத்தனைதான் நாகரீக வேடமிட்டாலும், தாங்கள் இன்னும் வீரபாண்டியார், ஈரோடு ராஜா போன்றவர்கள்தான் என்று நமக்கு உணர்த்தும் முனைப்போ தெரியவில்லை!

திமுக என்றால் அராஜகம் என்ற பழைய முகத்தை புதுப்பித்துக்கொள்ளும் ஆவல் காரணமாகவும் இருக்கலாம்!

தேவையே இல்லாமல் ரஜினி பேசினாலும், பேசாவிட்டாலும் இவர்கள் சலங்கை கட்டி ஆட ஆரம்பித்து இப்போது அது எல்லா எல்லைகளுக்கும் கீழே போய்விட்டது!

மெண்டலான், சொட்டையன் என்று ஆரம்பித்த நாகரீகம் இன்று ராதிகா ஆப்தே சொல்வதுரஜினியைத்தான் என்று தீர்ப்பெழுதும்வரை கொண்டு சென்றிருக்கிறது!

எதற்காக இந்த பதட்டமும் பயமும்?

அவரை உதாசீனப்படுத்துவது தானாக அவரை இன்னொரு சீமான், சரத்குமார் போல் ஆக்கியிருக்கும்!

இன்னும் அரசியலுக்கே வராதவர் மீது அனுதாபம் ஏற்படுத்த எதற்காக இந்த வீண் முயற்சி?

ஒருவேளை, அவர்கள் அழகிரியின் இணைய ஸ்லீப்பர் செல்களோ என்பதை முதலில் ஸ்டாலின் கண்டுபிடிக்கட்டும்!

தாங்கள் கல்லெறியும் முன் கண்ணாடி வீட்டுக்குள் இருப்பதை ஒருமுறை உணர்ந்துகொள்ளட்டும்!

கஷ்டப்பட்டு ஸ்டாலின் கட்டமைத்திருக்கும் நாகரீக அரசியல் பிம்பத்தை உடைப்பது நிரந்தரமான தற்கொலைக்கு சமம்!

இலாகா இல்லாத ஒற்றை மந்திரி பதவி எம்ஜியாரை காலத்துக்கும் கலைஞர் காலடியில் வைத்திருந்திருக்கும்!

ஒருநாள் பொறுமையாக இருந்திருந்தால் ஜெயலலிதா தானாக ராஜினாமா கடிதத்தை வீசி எறிந்துவிட்டு அரசியலை விட்டே விலகியிருப்பார்!

கலைஞரின் பிடிவாதமும் அவசர புத்தியும் அவருக்கும் தமிழக மக்களுக்கும் இழைத்த கொடுமையை இன்று இவர்கள் ஸ்டாலினுக்கு உண்டாக்கத் துடிக்கிறார்கள்!

ஸ்டாலின் விழித்துக்கொள்ளாவிடில் இந்தக் கொள்ளிகள் அவரை எரித்துவிட்டே ஓயும்!