ஞாயிறு, 20 மே, 2018

ஜனநாயகத்துக்கு இன்னுமொரு வெற்றி

ஜனநாயகம் வென்றது!

இப்படித்தான் சொல்கிறது இணையம்!

கர்நாடக தேர்தல் ஆரம்பித்தபோதிலிருந்து எனக்கு அப்படி ஒன்றும் அதில் சுவாரஸ்யம் இருக்கவில்லை
எடப்பாடி ஸ்வாமிகள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும்போது, ஓடாத காவிரியைப்பற்றி கவலைப்பட்டு ஆவதென்ன என்று கண்ணில் கிடைத்த கோவிலில் பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்துகொண்டு கிராமத்தில் ஒருநாள் என்ற கலாச்சர நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்து அனாடமி கற்றுக்கொண்டிருந்தேன்!

விளம்பர இடைவேளையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க செய்தி சேனலை மேய
அட, நம்ம ஆப்கிபார்!
ஏதோ ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார்!

பீல்டு மார்ஷல் கரியப்பா வீட்டு குழாய்த்தண்ணீரை நேரு எப்படி தடுத்து நிறுத்தினார் என்பதை கேட்டபோது  அவர் பேரனின் பிள்ளை நாளை எல்லையில் நம் ராணுவவீரர்களை எப்படி கொடுமைப்படுத்துவார் என்ற கவலையில் அன்று இரவு தூக்கமே இல்லை!

மறுநாள் எல்லா சேனலில் செய்தித்தாள்களிலும் கரியப்பா கதையில் கரி பூசியபோதுதான் தெரிந்தது பயபுள்ள பிரதமரானாலும் சரித்திரம் படிக்க முயலவோ, பொய் சொல்லக் கூசவோ இல்லை என்பது!

நாளை தமிழ்நாட்டில் நடக்கப்போகும் தேர்தலில், கட்டபொம்மனை நேரு எப்படி சூழ்ச்சி செய்து காட்டிக்கொடுத்தார், வீர்சவார்கர் எப்படி தீரமாய் அதை எதிர்த்தார் என்ற சுவாரஸ்யமான கதை நமக்குத் தெரியவரும்
கூடவே, அவருக்கு இணையான இன்னொரு  வரலாற்றுப் பேரறிஞர் ரஷ்யாவில் ஏகே 74 துப்பாக்கி வாங்கிக்கொடுத்து பிரபாகரன் என்ற தீவிரவாதியை தான் நெறிப்படுத்திய கதையை சொல்லும்போதுதான் எங்காவது வேறு மாநிலத்துக்கு வந்தேறியாய் போய்விடலாம் என்று தோன்றும்!
விடுங்கள். அதற்கு இன்னும் சமயம் இருக்கிறது!

ஆனால் அதற்குப்பிறகு கர்நாடக தேர்தல் கூட்டங்களை பார்க்க நான் தவறவில்லை
எப்போதுமே என்போன்ற குடிமக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத மோடிஜி, சிவாஜிகணேசன் எவ்வளவு மோசமான நடிகர் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்தார்! அதிலும், என்னிடம் மோதாதீர்கள்- நான் மோடி என்று வீரவசனம் பேசியபோதும், தான் கனவு காணும் இந்தியாவை நேரு எப்படியெல்லாம் சிதைத்தார் என்று கண் கலங்கியபோதும், நாம் எத்தனை ஆஸ்கர்களை அறியாமல் இழந்து ஒரு மகாநடிகனை டீ விற்கவும், நாடாளவும் உபயோகப்படுத்தியிருக்கிறோம் என்பது புரிந்தது!
இப்படி இருந்தால் ஆயிரம் மோடிகள் வந்தாலும் நாடு வல்லரசாகாது!

மோடியின் மாறுபட்ட நடிப்பில், எடியூரப்பா, சீதாராமையா (ஆனால் சும்மா சொல்லக்கூடாது, மோடிக்கு இந்த மனிதரின் ஒவ்வொரு பதிலடியும் எம் ஆர் ராதா வசனம்போல் அத்தனை அறிவார்ந்த நையாண்டிக் கூர்மை), குமாரசாமி என்ற யார் நடிப்பும் எடுபடவில்லை!

நாடறிந்த வில்லன் அமித்ஷா கூட ஏதோ சொல்லுங்க எஜமான்னு கைத்தடியாகத்தான் வந்துபோனார்! அப்படி ஒரு பர்ஃபாமன்ஸ்!

தேர்தல் முடிவுக்கு முந்தைய நாள் குமாரசாமியின் "காங்கிரஸோடு செத்தாலும் கூட்டணி இல்லை" என்ற ஆவேசப்பேட்டி தோனியின் கடைசி பால் சிக்ஸர்!

இத்தனை கோலாகாலமும் தேர்தல் முடிவுகளில் புஷ்வாணமாய் போனதுதான் சோகம்!

இதில் மும்பை வீதியில் பசியோடும் பயத்தோடும் சுற்றித்திரிந்த ஒரு இஸ்ரோ விஞ்ஞானியின் கதைவேறு!

கடைசியாக ஏவப்பட்ட சேட்டிலைட் மூலம், நாட்டின் எந்த மூலையில் எந்த ஒரு ரிமோட், மொபைல், காலிங்பெல் பட்டன்களோடு, கக்கூஸ் ஃப்ளஷ் அவுட் பட்டனை தட்டினாலும் அது கர்நாடக வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரு ஓட்டாக விழும் என்றிருந்ததை தேர்தல் நாளன்று காலை பத்தரை மணிக்கு கண்டுபிடித்து தான் அதன் பாஸ்வார்ட் மாற்றியதால், சங்கிகள் தன்னை வெறிகொண்டு தேடுவதாகவும், இன்று மாலைக்குள் தான் கொல்லப்படுவேன் என்றும் கதறி அழுததும், அந்த திரில்லரை எழுதியவர் அவருக்கு நான்கு இட்டிலி வாங்கிக்கொடுத்ததையும் படித்து கண்கலங்கி ஃபார்வார்ட் செய்ய மறந்ததும் வேறு தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது! நல்லவேளை,  அவர்மட்டும் பத்தரை மணிக்கு அதை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், 2G போல ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடி வாக்குகள் பதிவாகி எல்லோருக்கும் ஒரு நிமிஷம் அப்படியே தலை சுத்தியிருக்கும்!

இந்தமுறை அதிசயமாய் பல கருத்துக்கணிப்புகள் எதிர்பார்த்தது போலவே தொங்கு சட்டமன்றம் அமைய, வீறுகொண்டெழுந்தது மீடியாவும் தமிழ் சந்தும்!

அதெப்படி சர்க்காரியா பரிந்துரைப்படி கவர்னர் முதலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம் என்பதில் ஆரம்பித்து, இருபத்து மூன்று தொகுதிகளில் டெபாசிட் போன பாஜக எப்படி மக்களின் தேர்வாக இருக்கமுடியும், நூற்றுப்பத்து இடங்களில் டெபாசிட் போய் முன்னணியில் இருக்கும் குமாரசாமி அல்லவா மக்களின் முதல்வர் என்ற வழக்கமான விபரீத வியாக்கியானம் செய்தன!

சின்ன முணுமுணுப்பும் வழக்கம்போல் கும்பலாக காவி சாயம் பூசி ஒழிக்கப்பட்டது

இதையே கொஞ்சம் இப்படி கற்பனை செய்து பார்ப்போம்
அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 104 சீட்டும், எடப்பாடி சாமி 74 சீட்டும், மய்யம் 52 சீட்டும் பெறுவதாக வைத்துக்கொள்வோம்! தேர்தலுக்கு முன்பு புரிந்தும் புரியாமலும் ஒருவர் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டிருந்த மையமும் இலையும் மேலிட உத்தரவால் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தால், நாம் வைக்கும் பொங்கல் எப்படி இருக்கும்?

சரி, இணைய ஜனநாயகம் பற்றி இன்னொருநாள் பேசுவோம்!
இப்போதைக்கு நடந்த கதைக்கு வருவோம்!

வழக்கம்போல் விகிதாச்சார பெரும்பான்மை பற்றி ஒரு சுற்று அலசி முடித்தார்கள்!

அதன்பின் கோவா, மணிப்பூர், மேகாலயாவில் மோடிஜி, அமித்ஜி ஆடிய சித்து விளையாட்டுக்கள் பற்றி இவர்களும் 2005 ஜார்கண்ட், 1995 குஜராத் என்று இவர்களும் லாவணி பாட, சந்து சீரழிந்தது!

ஒருவழியாக குமாரசாமிக்கு யோகம் அடிக்க, செத்தாலும் கூட்டணி வைக்க மறுத்த காங்கிரஸ் அவரை தோளில் சுமக்கத் தயாரானது!

குமாரசாமியும், ரெட்டி பிரதர்ஸும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது பாவம் சீதுக்கு தெரியவில்லை!

ஆனாலும், ஆளுநர் என்றொரு சான்றோர் இருப்பதை மறந்துவிட்டார்கள்! அவர் தன் அதிகாரத்தை கையில் எடுத்தார்

தேர்தல் நடக்கும்போதே பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா (இயந்திரத்தின்மேல் அத்தனை நம்பிக்கை!) பதவியேற்க அழைக்கப்பட்டார்!
பெரும்பான்மையை நிரூபிக்க வெறும் ஒரு வருடம் அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி பதினைந்து நாள் அவகாசம் கொடுத்தார்!

ரெட்டி சகோதரர்கள் பெட்டியை திறந்துகொண்டு ஜனநாயகம் காக்க களமிறங்க, ஜனநாயகம் சாகாமல் 104 எப்படி 112 ஆகும் என்று புரியாமல் குதிரை சந்தை திறக்கப்பட, இந்தமுறை ஏனோ  நீதிமன்றம் ஆப்கிபாருக்கு ஆப்படித்தது!

ஒரே நாள் அவகாசம் ரெய்டு அடிக்கவோ, பேரம் பேசவோ வாய்ப்புக் கொடுக்காத நிலையில், தன் தலைவன் வழியில் கண்ணீர் மல்க உரையாற்றி ராஜினாமா செய்தார் எடியூரப்பா!

கர்நாடகாவில் தான் கையிலெடுத்த மதவாத துருப்பு சீட்டு கைகொடுக்காத நிலையில் தற்காலிகமாக தோல்வியை ஒப்புக்கொண்டார் சந்தான பாரதி! (எனக்கு சந்தானபாரதி மேல் எந்த வெறுப்போ பகையோ இல்லை. சாயலில் இருப்பது அவர் பிழை!)

இனி, கொள்கைக்கூட்டணி ஜனநாயகம் வென்றது என்று குதிக்கும்
தாங்கள் செய்தது எப்படிப்பட்ட அசிங்கம் என்பதை மறந்து!

காங்கிரஸ் தோளிலேறி சவாரி செய்து போரடிக்கும்போது குமாரசாமி எங்கு தாவுவார் என்பது கடவுளுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமகனுக்கும் தெரியும்!

தாங்கள் யாருக்கு வாக்களித்தோம்
இப்போது தங்கள் முதல்வர் யார் என்று தமிழக மக்களோடு கர்நாடக மக்களும் ஒரே படகில் சவாரி செய்வார்கள்!

பழனிசாமிகளும் குமாரசாமிகளும் அவரவர் அதிர்ஷ்டத்தை கொண்டாடிக் கொள்ளையடிக்க, எல்லாத் தேர்தல்களிலும்போல் மக்களும் ஜனநாயகமும் தோற்றுப்போய் வேடிக்கை பார்ப்பார்கள்!

பிரதமர் சொன்னால், அவர் வீட்டில் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்வேன் என்று ஜனாதிபதி ஜெய்ல்சிங் பிரஸ் மீட்டில் பெருமையோடு சொன்ன நாட்டில் கவர்னர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு வால் பிடிக்கவும், வாய்ப்புக்கிடைத்தால் நிர்மலா தேவிகளை பிடிக்கவும் செய்வார்கள்!

அவரவர் சார்புநிலைக்கேற்ப ஜனநாயகம் வென்றது, தோற்றது என்று கூவி அரசியல் ஓநாய்கள் தங்கள் முறைக்காக நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கும்!

ஜனநாயக நெறிமுறைகள் நடுத்தெருவில் கூட்டு வன்முறை செய்யப்படும்!
ஜெய்ஹிந்த்!

திங்கள், 7 மே, 2018

அப்பா........


அப்பா…….


வழக்கத்தைவிட ஏனோ அன்றைக்கு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது ரவிக்கு.

தூக்கம் வராமல் சும்மா புரண்டுகொண்டிருப்பது எப்போதுமே பழக்கமில்லை. அதுவும் இந்த நான்கு மாதங்களாக ஒரு அசாதாரணமான சூழல்!

விடியவிடிய ஏதாவது ஒரு லைட் எரிந்துகொண்டே இருப்பது வாடிக்கையாகப் போனது.

லைட் வெளிச்சத்தில் தூக்கம் வருவது கொஞ்சம் லேட்டானாலும் முணுக்கென்று ஏதாவது சத்தம் கேட்பதுபோல் தோன்றினாலே விருட்டென்று எழுந்து, உடனே பார்வை அப்பா படுத்திருக்கும் கட்டிலுக்கு போவதும்!.

இப்போதும் எழுந்து தலைமாட்டில் தடவி கண்ணாடியை மாட்டிக்கொண்டு காலண்டர் முருகனுக்கு ஒரு அவசர வணக்கத்தை வைத்துவிட்டு அனிச்சையாகத் தலை அப்பாவின் மார்புக்கூட்டுக்கு தாவியது!

அரைகுறை வெளிச்சத்தில் அவர் சுவாசம் சீராக வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு பெருமூச்சோடு நகர்ந்தான்!

காலைக்கடன்களை முடித்துக்கொண்டு காஃபி கோப்பையோடு உறங்குபவர்களை தாண்டி வாசலுக்கு நடக்கும்போது அம்மாவிடம் அசைவு தெரிந்தது.
அவ்வளவுதான் அவரது கோழித்தூக்கம்!

ஒவ்வொருநாள் உட்கார்ந்தவாக்கிலேயே தூங்கிக்கொண்டிருப்பவரை பார்க்கும்போது பாவமாக இருக்கும். உடனே அப்பாவைப் பார்க்க அடிவயிறு பிசையும்.

எப்படி இருந்த மனிதர்!

ஆறடி உயரமும் இப்போது வெறும் எலும்புக்கூடாய் வெறும் தோல் மட்டுமே போர்த்தி, மார்புக்கூடும், முதுகுவரை ஒட்டிய வயிறும் அசைவதுதான் ஜீவித்திருப்பதன் ஒற்றை அடையாளமாக படுக்கையோடு படுக்கையாக கிடப்பது அவருக்கு எந்தவிதத்தில் தண்டனையோ தெரியவில்லை. ஆனால், அவர் பக்கம் பார்வையைத் திருப்பும்போதெல்லாம் தீக்கோலால் சுட்டதுபோல் மனதுக்குள் ஒரு வலி! இதுதான் ரவிக்கான தண்டனை!

தீபாவளிக்கு மொத்தக் குடும்பமும் கோத்தகிரி போனதுதான் அவர் கடைசியாக வெளியே வந்தது!

உலகத்தின் பாதி நாடுகளை சுற்றிவந்த அந்த மனிதர் அந்த மூன்று நாட்களை அதிசயமாய், ஆனந்தமாய் குழந்தைகளோடு அனுபவித்து வாய் நிறைய சிரிப்போடும் புன்னகையோடும் வலம் வந்தது அத்தனை பெருமிதமாக இருந்தது!

அம்மாவிடம் சண்டைபோட்டு (ஒடம்புக்கு சேராதுங்க) ஒரு குழந்தைபோல பிரியாணியும் வறுவலும் சாப்பிட்டதும், அந்தக் குளிரிலும் எல்லோருக்கும் முன்னால் ஊர் சுற்றக் கிளம்பியதும் ஏதோ நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது!

யார் கண் பட்டதோ, ஊருக்கு திரும்ப வந்ததிலிருந்தே அவர் ஒரு நிலையில் இல்லை!

முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கி போய்விடுவதும், இப்போதே சிலோன் போகவேண்டும், ரங்கசாமிப்பிள்ளையிடம் பணம் வாங்கிவர வேண்டும் என்று  அடம் பிடிப்பதும்! கூடவே ஓயாத புலம்பல்!

அந்த ரங்கசாமிப்பிள்ளை இப்போது உயிரோடு இருக்கவும் வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாத குழந்தைப் பிடிவாதம்!

யார் தடுத்தும் கேட்காமல் விறுவிறுவென்று கிளம்புபவரை தடுக்க பெரும் பிரயத்தனம்!

அரை நூற்றாண்டு ஊர் உலகமெல்லாம் சுற்றி சம்பாதித்ததை அங்கங்கே நண்பர்களை நம்பி முதலீடு செய்ததும், சொல்லிவைத்ததுபோல் அத்தனைபேரும் கைவிரித்து கழுத்தறுத்ததும் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து வைத்திருந்தது இப்போது வெடித்துக் கிளம்ப, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை நம்ப முடியாமல் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் ஊசலாட்டம்!

முடியவில்லை என்று படுத்தவரிடம் ரவி தீர்க்கமாய்ச் சொன்னான்
"இத பாருங்கப்பா, எனக்கு இன்னும் கொஞ்சநாள் நீங்க வேணும், செத்துக்கித்துப் போனீங்க, கொலை பண்ணிடுவேன்!"

சிரித்துக்கொண்டே அவன் தலையைக் கோதி சொன்னார் "நான் அப்படியெல்லாம் போக மாட்டேன்டா லூசு!"

டாக்டர்கள் அவர்களுக்குத் தெரிந்த நோயின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, கலர் கலராய் மாத்திரைகளை அள்ளிக்கொடுத்ததுதான் மிச்சம்!

ஒருநாள், சட்டென்று நாடித்துடிப்பு சரசரவென்று இறங்க ஆரம்பித்து, பக்கத்து மருத்துவமனையில் ஐசியு வாசம்!

எண்ணி ஆறு நாட்கள்!

“சாரி ரவி, எங்களால் ஆனதெல்லாம் செய்து பார்த்துவிட்டோம்!  என் கடைசி சந்தேகமும் தீர்த்துக்கொள்ள அவருக்கு கால் வீக்கத்துக்கு காரணம் தேடி டாப்ளர் டெஸ்ட் செய்து பார்த்ததில், காலில் அத்தனை ரத்தக்குழாய்களும் ரத்தம் உறைந்து கட்டிக்கொண்டிருப்பது தெரியவந்தது!
இந்த வயதுக்குமேல் அதற்கு சிகிச்சை இல்லை! அந்த ரத்தக் கட்டிகளின் துகள் உடல் முழுக்கப் பயணிப்பதில் மூளை உட்பட எங்காவது போய் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கிக்கொள்வதில் உடலின் எந்த உறுப்பும் செயலிழக்கலாம்! அதன் ஒரு பகுதிதான் அவரது வலதுபுறம் முற்றாக இப்போது செயலிழந்ததும், கோமாவுக்கு முந்தைய நிலையை அடைந்ததும்!”

“இப்போ என்ன சொல்லவர்றீங்க டாக்டர்?”

“இனி அவர் உயிர் பிழைக்க வழி இல்லை.
இன்னும் ஒருநாளோ, இரண்டு நாளோ, உயிர் போவது வீட்டில் போகட்டும்! வீட்டுக்கு எடுத்துப்போய்விடுங்கள்!
உங்களிடம் பொய் சொல்லி இங்கு வைத்திருந்து பணம் கரைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை!”

ஓரளவு எதிர்பார்த்த பதில்!

ஆனாலும் அப்படி விட்டுவிடக்கூடிய மனிதரா அவர்?

ஒரு மாதம் முன்பு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று அவனது தங்கை வந்திருந்தபோது தனியே அழைத்து சொல்லியிருக்கிறார்
“எனக்கு வேற யாரைப்பத்தியும் கவலை இல்லை! உங்க அண்ணனை நினைத்தால்தான் பயமா இருக்கு! இன்னுமே அவனுக்கு உலகம் புரியல! எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் அவனை பார்த்துக்கணும்!”

இதை தங்கை சொல்லிக் கண் கலங்கியது நேற்றுப்போல் இருக்கிறது!

உண்மைதான்! ஆரம்பத்திலிருந்தே அவன் அவருக்கு கொஞ்சம் ஸ்பெசல்தான்.

பல விஷயங்களில் அவன் வாழ்க்கையும் அவரைப்போலவே!
பத்து வருடங்களுக்கு முன் ஒரு மிகப்பெரிய சிக்கலில் அவன் தவித்தபோது, உறவைவிட நெருக்கமாக இருந்த நட்பெல்லாம் ஒரே நாளில் காணாமல் போக, உறவுகளும் தனக்கென்ன என்று ஒதுங்கி நின்றபோது, ஒற்றை மனிதனாய் அத்தனையும் தோளில் தூக்கிச் சுமந்து ஒரு கீறலுமின்றி அவனை மீட்டு வந்தவர் அவர்!

“அவர் மட்டும் இல்லாவிட்டால் நான் இருந்த இடத்தில் புல் முளைத்து பத்து வருடம் ஆகியிருக்கும்” - இது ரவி அடிக்கடி தன் மகளிடம் சொல்வது! அப்படிப்பட்ட மனிதரை, சாகவிடுவது அவ்வளவு சுலபமா என்ன?

வீட்டுக்கு கொண்டுவர ஆம்புலன்ஸில் ஏற்றுகையில், அங்கிருந்த நர்ஸ் ரவியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கினார்  "தாத்தா நடந்து வந்தார், அவரை இப்படி படுகிடையாய் அனுப்புகிறோமே!"

வீட்டில் ஒரு மினி ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்!

ஆக்சிஜன் சிலிண்டர், BP, பல்ஸ் மானிட்டர், மூக்கின் வழி டைம் டேபிள் படி திரவ உணவு, மணிக்கொருமுறை சோதித்து குறித்துவைக்கப்பட்ட ரத்த அழுத்தம் மற்றும் சுகர் லெவல்! இருபத்து நாலு மணிநேர நர்ஸிங் கேர்!

ஒரே ஒரு புத்திசாலித்தனமான மூவ்!

தனி அறையில் இத்தனையும் அடைக்காமல், ஹாலில் படுக்கவைத்தது அற்புதமாய் வேலை செய்தது!

நாளைவரை தாங்கமாட்டார் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டவர், பேரக்குழந்தைகள் நடமாட்டத்திலும் பேச்சு சத்தத்திலும்  ஒரே வாரத்தில், சாய்த்து உட்கார வைக்கப்பட்டு வாய்வழியே அவருக்குப் பிரியமான காஃபி ஸ்பூனால் புகட்டப்படுமளவு தேறலானார்!

உடல் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லாவிடினும், அப்பா, ஆஃபீஸ் போய்ட்டுவர்றேன் ன்னு சொன்னால் தலையாட்டும் அளவும்,
பேரனோ, பேத்தியோ குட்மார்னிங் தாத்தா என்று முத்தம் கொடுத்து, எனக்கு, என்று கேட்கையில் முத்தம்தர முயலும் அளவும்.

வீட்டுக்கு வந்து பார்த்த டாக்டர் அதிசயித்துத்தான் போனார்!

“ஆனால், ரவி, நீங்க ரொம்ப பேராசை படறீங்க! இதுவே அவரது அதிகபட்ச ரெகவரி! இதற்குமேல் எதையும் எதிர்பார்க்காதீர்கள்!”

“இல்லை டாக்டர், எனக்கு அவர் முன்போல் நடமாட வேண்டாம்! தூக்கி உட்காரவைத்தால் சக்கர நாற்காலியில் உட்காரவும், வாய்வழியே கொஞ்சம் ஆகாரம் எடுத்துக்கொள்ளவும் செய்தால் போதும்! உண்மையை சொன்னால், I cannot afford to loose him doctor please!”

மிக்க அனுபவசாலியான மிக நெருக்கமான உறவு மருத்துவர், மற்றும் மருத்துவரான தங்கை கணவர் எல்லோருமே, அவரை வேறு எங்காவது மேல்சிகிச்சைக்கு மாற்றுவது கொலை செய்வதற்கு சமம்! ஒரு பத்து கிலோமீட்டர் பயணத்தைக்கூட அவர் உடல் தாங்காது என்று மொத்தமாக மறுத்துவிட, வீட்டில் வைத்தே நம்பிக்கையோடு மருத்துவம் தொடர, அப்போதுதான் இன்னொரு இடி விழுந்தது!

அப்பா வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் ரவியின் மனைவி ஒரு விபத்தில் சிக்க, அவரும் படுத்த படுக்கை!

பார்க்கவந்த, ஜோதிட அனுபவமுள்ள ஒரு நெருங்கிய உறவினர் வற்புறுத்தி ஜாதகங்களை வாங்கிப்பார்த்துவிட்டு அந்த குண்டைத் தூக்கிப்போட்டார்!

"சூரியதிசை நடப்பதால், ரவியும் அவரும் ஒரே வீட்டில் இருப்பது அவருக்கும் ரவிக்கும் நல்லதில்லை! இந்த வீட்டில் ஒரு மரணம் நிச்சயம்! அது அவராக இல்லாத பட்சத்தில் அவரது நேரடி வாரிசுக்கு ஆபத்து அதிகம்! அதற்கான அறிகுறிதான் இந்த விபத்தும், அவர் பேரனுக்கு கண்ணில் அடிபட்டதும்! அதற்குமேல் உங்கள் விருப்பம்!"

ரவி வீட்டில் இல்லாதபோது இது நடந்திருக்கிறது!

வீட்டுக்குப் போனதும், தங்கை ஒரே அழுகை! விஷயம் புரிந்ததும் "அவரையெல்லாம் எதற்கு கூப்பிட்டு ஜோசியம் கேட்கறீங்க? உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா?" ரவியின் கூச்சலுக்கு அப்போதைக்கு பதில் இல்லை!

ஆனால் அப்பா கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிவருவது தொடர்கதை ஆனது!

கொஞ்சம் கொஞ்சமாக கூப்பிட்ட குரலுக்கு தலையசைப்பது நின்றுபோனது!

நான்கு மாதங்கள் இப்படியே ஓட, வழக்கமான வருகைக்குப்பின் டாக்டர் தயங்கித் தயங்கிச் சொன்னார்!

"ரவி, பீ பிராக்டிகல்!
இப்படி அவரை வைத்திருப்பது அவருக்குத்தான் வேதனை! அவர் உடல் உபாதையைக்கூட சொல்லமுடியாத நிலையில் எதற்காக இந்த தொடர் மருத்துவ சிகிச்சை? ஒரு டாக்டராக நான் இதை சொல்லக்கூடாது! இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான்! பேசாமல் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்! ஒருநாளோ, இரன்டு நாளோ, தானாக .."

ரவி அதை முற்றாக நிராகரித்தான்! வெளிநாட்டிலிருந்து அப்பாவின் மருத்துவ செலவு முழுக்க பார்த்துக்கொண்ட ரவியின் தம்பியும்!

Let us give him the fairest chance to live. அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்! அவர் எப்போது நம்மைப் பிரியவேண்டும் என்பதை அவரும் கடவுளும் முடிவு செய்யட்டும்!

அதற்குப்பின் இரவுகளில் தூங்கப்பிடிக்காமல் இருட்டில் வெளியே போய் உட்கார்ந்து இருளை வெறிப்பது ரவிக்கு வாடிக்கையானது!

எதற்காக அவருக்கு இந்த தண்டனை? எல்லோருக்கும் உதவி செய்தது தவிர யாருக்கும் கெடுதல் செய்யாத மனிதர்! இவருக்கு இவ்வளவு கொடுமையான நிலையா? கதறித் தீர்த்த பெரியப்பா மகனுக்கு ரவி ஆறுதல் சொல்ல வேண்டிவந்தது!

"யாருக்குத் தெரியும், முன் ஜென்ம வினை எல்லாவற்றையும் இப்போதே கழித்துவிட்டு, தூய ஆத்மாவாக இனி பிறப்பே இல்லாத நிலைக்கு அவர் போகிறாரோ என்னவோ!"

ஆனால், அந்த ஆறுதலையும் அசைத்துப் பார்க்கும் சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்!

வழக்கம்போல் அவர் கேட்கிறாரா என்ற கவலையில்லாமல், அவர் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான்! "அப்பா, கவலைப்படாதீர்கள்! எல்லாம் சரியாகிவிடும்! சீக்கிரமே நீங்கள் உடல்நிலை தேறி வேலூருக்கு, உங்க வீட்டுக்கு போகப்போகிறீர்கள்! தைரியமாக இருங்கள்!"

சொல்லும்போதே புரிந்துகொண்ட பாவனை ஏதுமில்லாமல் கண் விழிக்காது கிடந்தவரைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த பத்தாவது நிமிடம், கேர் டேக்கர் குரல்!

"சார், அப்பாவை வந்து பாருங்க!"
மூச்சுக்கு திணறியவரை உடனே பக்கத்து மருத்துவமனைக்கு எடுத்துப்போக,

"இல்லை ரவி, தம்பிக்கு சொல்லிவிடு! இனி வழியே இல்லை!"

வீட்டுக்கு வந்ததும், ஒரு கடமையைப்போல் மூச்சு மட்டும் பிடிவாதமாக ஓடிக்கொண்டு, உணவுக்குழல் திரவ உணவையும் ஏற்க மறுத்து கிடந்த நிலையில் முந்தையநாள் மாலை, நூற்றுக்கணக்கில் எறும்புகள் வலதுகை மேல்
எந்த சுரணையும் இல்லாமல் நிச்சலனமாய் படுத்திருந்தவரைப் பார்த்த ரவிக்கு குமுறிவந்த அழுகையை நிறுத்துவதே பெரும்பாடானது!

அவன் அழுவதைக் காண அவர் சகிக்கமாட்டார்!

விடியவிடிய தூங்கவும் தோன்றாமல் இந்தக் கொடூர அவஸ்தையை கண்கொண்டு பார்க்க மனமில்லாமல், ஆபீஸுக்கு கிளம்புமுன், அப்பா பக்கத்திலேயே கிடக்கும் அம்மாவை கொஞ்சம் வெளியே போகச் சொல்லிவிட்டு
அப்பாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு மெதுவாகச் சொன்னான்!

‘அப்பா!
போதும்ப்பா!
இதுக்கு மேல இந்தக் கொடுமை உங்களுக்கு வேண்டாம்!
உங்களை உறுத்துவதும், போகவிடாமல் தடுப்பதும் என்னன்னு எனக்குத் தெரியும்!
என்னைப்பற்றி கவலைப்படவேண்டாம்!
நிச்சயம் இனி நான் புத்திசாலித்தனமாக நடந்துக்குவேன்!
நான் அன்னைக்கு சொன்னதை மறந்துடுங்க! இது உங்களுக்கு வேண்டாம்!

நீங்க எங்கே போகப்போறீங்க? என்னை விட்டு உங்களால எங்கே போகமுடியும்? நீங்க என் கூடவேதான் இருக்கப்போறீங்க! இந்த நிலை உங்களுக்கு வேண்டாம்ப்பா! நிம்மதியா போய்ட்டு வாங்க!
நான் பார்த்துக்கறேன்! ப்ளீஸ்ப்பா!”

கண்ணில் துளிர்த்த நீரை சிரமப்பட்டு விழுங்கினான்!

“இல்லைப்பா! நான் அழுதா உங்களுக்கு தாங்காது! நான் அழலை! நீங்க நிம்மதியா போய்ட்டுவாங்கப்பா!”

ஒரே ஒரு நொடி அவர் கை தன் கையை அழுத்துவது போல் உணர்ந்தான் ரவி!

சட்டென்று அவர் முகத்தைப் பார்க்க, சின்னப் புன்னகை நெளிந்ததுபோல் ஒரு பிரமை!
அது பிரமையாகத்தான் இருக்கவேண்டும்!

அன்று முழுக்க ஆபீஸில் ஒரு வேலையும் செய்யத் தோன்றாமல் ஏதோ வெறுமையும் நிம்மதியுமாக உட்கார்ந்திருந்தான்!

அப்பா கை சூடு இன்னும் உள்ளங்கையில் இருப்பதுபோல் ஒரு உணர்வு!

மாலை நாலு மணிக்கு சட்டென்று அப்பா கூப்பிடுவதுபோல் தோன்றியது 
ரவீ ....

சரியாக அப்போது கைபேசி அலறியது!
வீட்டிலிருந்து .....