வெள்ளி, 1 ஜூன், 2018

ரஜினி என்னும் மாபாதகன்!தூத்துக்குடி போராட்டத்தில் தீவிரவாதிகள்! - ரஜினி நிலைப்பாடும் இணைய விமர்சனங்களும்!இந்தக் கட்டுரையை படித்தோ படிக்காமலோ மெண்டலானின் சொம்பு என்று சாயம் பூச ஓடிவரும் சாயப்பட்டறை அதிபர்களுக்கு ஒரு சின்ன டிஸ்கி:

திரைப்பட வெளிச்சத்தில் தலைவர்களைத் தேடாதீர்கள் என்று ஓயாமல் கூவிக்கொண்டிருப்பதும்,
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஆரம்பத்திலேயே விமர்சித்திருப்பதும் உங்கள் கண்களில் படாததற்கு நான் பொறுப்பல்ல!
இது இங்கு நடக்கும் வெறுப்பரசியலை விலகி நின்று வெறுமனே வேடிக்கை பார்த்தவனின் பார்வை!

இன்னும் கட்சி ஆரம்பிக்காத தலைவர் ரஜினி இரண்டு நாட்களாக இணையத்துக்குப் பெரும் தீனி!

நல்லது!
யானை இருந்தாலும் இறந்தாலும் அது செய்திதான்!தூத்துக்குடிக்குப் புறப்படும் முன்பாக அளித்த பேட்டியில் அவர் தெளிவாகத்தான் இருந்தார் - பலர் அதையும் விமர்சித்திருந்தபோதும்!

"ஒரு நடிகனாக நான் அங்கு செல்வது அவர்களுக்கு ஒரு ஆறுதல் தரும்!"

நான் போய் வானத்தை வில்லாய் வளைப்பேன் என்று சொல்லாமல், ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பது என் வேலை என்ற நேர்மையான ஸ்டேட்மெண்ட் அது!

தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகாத நிலையில் தன்னை ஒரு அரசியல் தலைவராக முன்னிறுத்தாமல், நடிகனாய் அடையாளம் காட்டிக்கொண்டது நல்ல விஷயம்!

ஆனால்,
தூத்துக்குடியில் அரசியல் பேச முற்பட்டதுதான் அவர் செய்த முதல் பிழை!

எம்ஜியார் சிலை திறப்புவிழாவில் அவரைப்பற்றி கொஞ்சம் வரம்பு மீறி புகழ்ந்து பேசியது போல, இந்தமுறை ஜெயலலிதா!

இறந்துபோவது யாரையும் புனிதப்படுத்திவிடாது சூப்பர்ஸ்டார் அவர்களே!

ஜெயலலிதா ஒரு அப்பட்டமான பாசிஸவாதி என்பதில் அவருக்கே கருத்து வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை!

தனக்கு எதிரான ஒரு சின்ன முணுமுணுப்பையும் குரல்வளையை நெறித்து அடக்கும் ஆணவத்துக்கு ஆளுமை என்று பெயரில்லை!

அவர் காலத்தில்தான் காவல்துறை தன் கோரைப்பற்களை வெளிப்படையாக காட்ட ஆரம்பித்தது!

ஜெயலலிதாவை முன்மாதிரியாக அந்த இடத்தில் புகழப்போக எல்லா அர்த்தங்களுமே அனர்த்தங்கள் ஆனது!

ஒரு அரசியல் தலைவர் பேசும்போது கோர்வை அவசியம்! உங்களிடம் அதற்கான பொறுமை இல்லை! பட்டென்று ஒன்றிரண்டு வார்த்தைகளில் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிடமுடியாது! அது அவரவர் பார்வையில் பொழிப்புரை எழுதவே வழி வகுக்கும்!

அதுதான் தூத்துக்குடி பேட்டியில் நடந்தது!

எல்லாவற்றுக்கும் ஒற்றை வாக்கியத்தில் பதில்!

இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு செயல்திட்டம் இருக்கிறது!
அதிலும் ரஜினி மீது அனைவருக்கும் இருக்கும் அச்சமும் வெறுப்பும் தனி ரகம்!

இணையத்தில் எவ்வளவு நாகரீகமாகப் பேசுபவரும் கெட்டவார்த்தை இல்லாமல் ரஜினி பற்றிப் பேசுவதே இல்லை!

Ø  மக்களின் புனிதப்போராட்டம்,
Ø  வன்முறையில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் அல்ல,
Ø  எந்த அரசும் இனி ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது,
Ø  இத்தனை உயிர்ப்பலிக்குப் பிறகும் ஸ்டெர்லைட்டை திறக்க நினைப்பவன் மனிதனே இல்லை,
Ø  ஒருநபர் விசாரணை கமிஷனில் நம்பிக்கை இல்லை,
Ø  உளவுத்துறையின் தவறே வன்முறைக்கு காரணம்,
Ø  அப்பாவி மக்களின் உயிர் பலியாகியிருக்கிறது
Ø  ஏற்கனவே விவசாயம் நலிந்துகிடக்கிறது, வன்முறை, போராட்டம் என்று தொடர்ந்தால் புதிதாக தொழிற்சாலைகள் எங்கிருந்து வரும்?

- இத்தனை ஒற்றை வரி பதில்களும் மறக்கடிக்கப்பட்டும் மழுப்பப்பட்டும்
Ø  போராட்டக்களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்
என்ற ஒற்றை வரி பிரம்மாண்டமாக்கி ஊடக சாயப்பட்டறையில் அவரவருக்கு பிடித்த வண்ணம் தீட்டப்படுகிறது!

தொன்னூற்றொன்பது நாள் அமைதியாக நடந்த போராட்டம் எப்படி வன்முறையில் முடிந்தது?

இந்தப்போராட்டத்தை வழி நடத்தியது யார்?

கடைசி நாளின் வன்முறைக்கு யார் பொறுப்பு?

வாழ்வா, சாவா என்ற இறுதிப்போர் என்று அறைகூவல் விடுத்த கூட்டத்தை சரியாக கணிக்கத் தவறியது உளவுத்துறை!


இத்தனை ஆயிரம் பேர் கூடுவார்கள் என்ற அடிப்படை புரிதல் ஏதுமின்றி, சம்பந்தமே இல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கையில் காவலர்களை அனுப்பியது யார்?

144 தடை உத்தரவும் போட்டு, போராட்டத்துக்கு அனுமதியும் கொடுத்த அந்த அற்புதமான நிர்வாகி யார்?

இணையத்தில் முதலில் பகிரப்பட்ட படங்களும் வீடியோவும் கூட்டத்தின் கல்லெறித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் காவலர்களும், அவர்களது வாகனமும் ஓட்டம் பிடிப்பதைத்தான் காட்டியது - இணையத்துக்கே உரித்தான "த்தா ஒடுங்கடா" என்ற தலைப்புடன்!


எனில், அந்த வன்முறையைத் தூண்டிவிட்டது யார்
அந்தக் கூட்டத்தை வழி நடத்தியது யார்?
கல்லெறிய அவர்களைத் தூண்டியது யார்?

உயிர் எங்கள் மயிருக்கு சமம், போராடுவோம் முற்றுகையிடுவோம் என்று முஷ்டியை உயர்த்திய எந்தத் தலைவரும் ஏன் அங்கு வழிநடத்த வரவில்லை?

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கல்லெறிந்து கலவரம் செய்ததும் வாகனங்களை எரித்ததும் யார்?
நிச்சயமாக முதல் கல்லை எறிந்தது அப்பாவி பொதுஜனம் அல்ல!

சடசடவென கற்களை வீசி, முதல் நெருப்பை பற்றவைத்து குழு மனப்பான்மையை தூண்டிவிட்டு வன்முறையை ருசி காட்டியபின் பதுங்கிக்கொண்டது யார்?

அடிபட்டவனும், குண்டடி பட்டு மாண்டவனும் நிச்சயம் தீவிரவாதி அல்ல! தூண்டிவிட்டு ஒதுங்கியவன் தீவிரவாதி!

இதை சொன்னால், குண்டடி பட்டவனை, காயம் பட்டவனை ரஜனி தீவிரவாதி என்பதா? என்று யாரோ தன் செயல்திட்டம் நிறைவேற்ற ஆரம்பித்ததை அப்படியே ஆட்டுமந்தைபோல் தங்கள் வெறுப்புக்கு தீனி கிடைத்ததென்று குதியாட்டம் போட்டுப் பரப்பி மகிழ்ந்தது இணையம்!

முதல் குற்றச்சாட்டு அவர் மக்களைப் பார்த்து கையசைத்தார் என்பது!

புறப்படும்போதே அவர் மக்களுக்கு என்னால் சிறிது மகிழ்ச்சி கிடைக்கட்டும் என்று சொல்லிவிட்டு ஒரு நடிகனாகவே போனார்!
இல்லாவிட்டால் மட்டும் இழவு வீட்டுக்குப் போனதால் இறுக்கமான முகத்தோடு போனார் என்று இவர்கள் அவரை புகழ்ந்திருப்பார்களா என்ன?

மருத்துவமனையில் எல்லோரும் மகிழ்ந்து வரவேற்க, மாற்றுக்கட்சியை சேர்ந்த ஒருவன் கேட்ட ஒரு கேள்வியை மட்டும் ஏதோ தூத்துக்குடியே திரண்டு ரஜினியை எதிர்த்ததாக புல்லரித்து மகிழ்ந்தது இணையம்!

பத்துநாள் கழித்து ஆறுதல் சொல்ல வந்தவனையா அல்லது இத்தனை உயிரிழப்புக்களுக்கும் காரணமான அரசியல்வியாதிகளையா, யாரைப் பார்த்து கேட்கப்பட வேண்டிய கேள்வி அது என்பதை வழக்கம்போல் பகுத்தறிந்து பார்த்து,
அந்தக் கேள்வி இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினிக்குத்தான், இத்தனை நாட்களாக ஸ்டெர்லைட் மூலம் ஆதாயமடைந்து இன்று நாடகம் போடும் கட்சித்தலைவர்களுக்கல்ல
என்று முடிவு செய்து குதூகலித்தது இணையமும் மீடியாவும்!

திரைப்படத்தில் போராட்டத்தை ஆதரிப்பதாக நடிப்பவர் நிஜவாழ்க்கையில் அதை எதிர்க்கிறார்!

எவ்வளவு சொத்தை வாதம்?

திரைப்பட நாயகன் தனக்கு நல்லது செய்வான் என்று நம்பி இத்தனைநாள் வாக்களித்த மக்களை அறிவிலி என்று தூற்றும் அதே அறிஞர் கூட்டம்தான் திரைப்படத்தில் செய்வதை ரஜினி நிஜவாழ்வில் ஏன் செய்யவில்லை என்று கேட்கிறது!

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல இவர்கள்!

இவர்களின் ஒற்றை செயல்திட்டம் தாங்கள் முட்டாளாக வெளிப்பட்டாலும் பரவாயில்லை, ரஜினியை எதிர்ப்பது மட்டுமே எனபதுதான்!

காலா படத்துக்கு டிக்கெட் விலை அதிகம் வைப்பார் என்பது அடுத்த குற்றச்சாட்டு!

திரைப்படம் மக்களுக்கு அத்யாவசியத் தேவை கிடையாது!
நாள்தோறும் சத்தமில்லாமல் ஏற்றப்படும் டீசல் பெட்ரோல் விலையை ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை?

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்போவது திரைப்பட டிக்கெட் விலையா அன்றி டீசல் விலையா?

திரைப்பட டிக்கெட் விலை அதிகம் என்றால் அதை புறக்கணியுங்கள்! அதனால் நீங்கள் இழக்கப்போவது என்ன?

முதல் நாளில், முதல் வாரத்தில் பார்த்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் செத்துவிடுவோம் என்று ஏதாவது நிர்ப்பந்தமா?

அதிலும் ஒரு பத்திரிக்கையாளர் எழுதுகிறார்!


"For Kabali in 2016, I was forced to pay Rs 3500 for one ticket!"

அவரை யாரோ கட்டிப்போட்டு டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று நிர்பந்தித்தார்கள் போல! Forced - எனில் அப்போதே காவல்துறையில் தன்னை மிரட்டி டிக்கெட் வாங்கவைத்தவர்கள் மீது புகார் கொடுத்திருக்கலாமே

ஜனநாயகத்தின் நான்காவது தூண், பத்திரிக்கைத் துறையில் பணிபுரியும் ஒருவர், டிக்கெட்டுக்கு 3500 ரூபாய் கொடுத்து, கறுப்புப்பணம் உருவாவதை ஊக்குவித்ததை பெருமையாக வேறு சொல்கிறார்!

இது கவன ஈர்ப்புப் பிச்சையின் உச்சம்!

காவல்துறையை தாக்கியது மன்னிக்கமுடியாத குற்றம்! நாளைக்கு உங்களுக்கே ஏதாவது பிரச்சினை என்றாலும் அவர்களிடம்தான் போய் நிற்பீர்கள் என்று சொன்னது இன்னொரு பிழை என்று சுட்டப்படுகிறது!

காவல்துறை மக்கள் மனதில் மரியாதையைவிட பயத்தை ஏற்படுத்தவே முற்படுகிறது என்பது நம் ஊரின் யதார்த்தம்!

அவர்கள் சீண்டப்படும்போது அவர்களுக்கு வெறி பிடித்துவிடுகிறது!

சட்டென்று உணர்ச்சிவசப்படக்கூடாத ஒரு பணி அது! கட்டற்ற அதிகாரமும் ஆயுதமும் கையில் வைத்திருப்பவருக்கு அளவற்ற பொறுமை முதல் தகுதி!

தன் கை ஆயுதம் அச்சுறுத்தவே அன்றி அப்புறப்படுத்த அல்ல என்பது ஒவ்வொரு ஆயுதம் தாங்கியும் அறியவேண்டிய பாலபாடம்!
அதை கற்க சற்றும் முனையாதது நம் காவல்துறை!

அது தனிக்கதை!ஆனால், அடிபட்ட காவலர்களை காப்பாற்றிய இளைஞர்கள் என்று பகிரப்படும் படங்கள் உண்மையானால், அந்தக் காவலர்களைத் தாக்கியது யார்
பொதுமக்களா அன்றி தீவிரவாதிகளா
பொதுமக்கள் எனில், அவர்களுக்கு அத்தனை தைரியம் கொடுத்தது யார்?

எடுத்ததெற்கெல்லாம் போராட்டம் நடத்தினால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு என்ன செய்வது? தமிழகம் சுடுகாடாகும் - இதைச் சொன்னது தவறு என்று ஒரு வாதம்!

ஒரு தொழிற்சாலை தங்களை பாதிக்காது இயங்கவேண்டும் என்று போராடுவது பிழையில்லை!
அந்தத் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று போராடுவது நிச்சயம் பிழை!

ஸ்டெர்லைட் இடையில் மூடப்பட்டபோது தொழிற்சங்கங்கள் அதை திறக்கவேண்டும் என்று போராடியதும் இதே தூத்துக்குடியில்தான்!


எந்தத் தொழிற்சாலையும் தமிழகத்தில் தொடங்கப்படவேண்டும் என்றால் பர்சண்ட்டேஜ் அடிப்படையில்தான் அனுமதி என்பது உலகறிந்த ரகசியம்!

இதில், ஸ்டெர்லைட் தொடங்க, தொடர யார் அனுமதித்தது என்று லாவணி படுவதைவிட, தொடங்கும்போது மாசு கட்டுப்பாடு வாரியமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் விதித்த கட்டுப்பாடுகளை அந்த நிர்வாகம் அப்பட்டமாக இத்தனை நாள் மீறியபோது அதை கண்டுகொள்ளாமல் அனுமதித்தது யார்

இன்று மூடச்சொல்லி போராடுவதாக நாடகமாடும் எத்தனை அரசியல் கட்சிகளுக்கு அதில் பங்கு?

இதையெல்லாம் விவாதிக்க இணையத்துக்குத் துப்பில்லை!

கண் மறைவான மாசு தெரியாமல்கூட இருக்கலாம்! புகைபோக்கி உயரங்கள் கூடவா இத்தனை நாள் உறுத்தவில்லை?

இத்தனை விதி மீறல்களும் எந்த தைரியத்தில் செய்யப்பட்டு, விரிவாக்கப்பணிகளும் நடக்கின்றன?

நிபந்தனைகளை ஒழுங்காகப் பின்பற்றி தொழிற்சாலை இயங்குவதுதானே முறை
அதைவிட்டு மூடச்சொல்லி போராட்டம் நடத்தினால், இத்தனை ஆயிரம் கோடிகளை இறைத்துவிட்டு வேதாந்தா நீதிமன்றம் போகாதா?

இந்த வலுவற்ற A 4 சீட் நோட்டீஸ் நீதிமன்ற பெஞ்சைத் துடைக்கக்கூட உதவாது என்பது வெற்றிவிழா கொண்டாடுபவர்களுக்குத் தெரியாதா?

மூடு, மூடு என்று போராட்டம் நடத்தும் யாராவது உங்கள் அபிமான முதல்வர் ஆளும் கேரளத்தில் போய் ஒரு தொழில் தொடங்குங்களேன் பார்ப்போம்?

ஏற்கனவே விவசாயம் நலிந்துகிடக்கிறது, வன்முறை, போராட்டம் என்று தொடர்ந்தால் புதிதாக தொழிற்சாலைகள் எங்கிருந்து வரும்
வேலை வாய்ப்பு எப்படி பெருகும்
இது அக்கறையோடு கேட்கப்பட்ட கேள்வியா
அல்லது
கமிஷனுக்காக பேரம் பேசி கண்ணை மூடிக்கொண்டிருந்துவிட்டு இன்று கட்சிகள் மாய்மாலம் செய்வது அக்கறையிலா?

நடவடிக்கை எடுக்கவேண்டிய முதல்வர் எனக்கு டிவி பார்த்தே தெரியும் என்கிறார்!

சட்டமன்றத்தில் விவாதிக்கவேண்டிய பிரதான எதிர்கட்சித் தலைவர் சங்கரதாஸ ஸ்வாமிகளைப்போல் ஊரூராய் போய், மாதிரி சட்டமன்ற நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்!

கேள்வி கேட்கவேண்டியவர்களை விட்டுவிட்டு ஒரு நடிகனைப்பிடித்து உலுக்கி, புல்லரித்துத் திரிகிறது இணையம்!

சாய்ந்தால் சாய்கிறபக்கம் சாயும் இணையம், ஆறுதல் சொல்லவந்ததால் அராஜகத்தின் மொத்த உருவம் மம்தாவை புகழ்கிறது! இப்படித்தான் இருக்கிறது இவர்களின் புரிதலின் லட்சணம்!

கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அரசியல் சுழலில் சிக்கி காணாமல் போயிருக்கக்கூடிய ரஜினியை இரண்டுநாள் மாநாட்டில் நண்டு சுண்டிலிருந்து தலைமை வரைக்கும் திட்டியே பெரிதாக்கியது கழகம்!

இப்போது இணையம் அந்தத் திருப்பணியை தொடர்கிறது!

இந்தப்போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிய தீவிரவாதிகளை ரஜினி அடையாளம் காட்ட முடியுமா என்றொரு கேள்வி கேட்கிறார் இன்னொரு தலைவர்!

நிச்சயம் உங்களுக்கே தெரியும் தமிழகம் முழுவதும் புதிதாக வேர்விட்டுப் பரவும் அந்தத் தீவிரவாதிகளை!

1. இளைஞர்கள் போராட வாருங்கள், முடிந்தால் இந்த அரசு என்னை கைது செய்யட்டும் பார்க்கலாம் என்று கொக்கரித்துவிட்டு முன்ஜாமீன் தேடி நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்தவன் தீவிரவாதி!

2. பொது சொத்தை அடித்து சேதப்படுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கு வர இந்தியர்கள் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் என்று பிரிவினை வாதம் பேசி, கைது செய்யப்பட்டதும், காவிரி நதிநீர் கேட்டு அமைதியாகப் போராடிய என்னைக் கைது செய்கிறார்களே என்று கூவியவன் தீவிரவாதி!

3. 144 தடையுத்தரவும் போட்டுவிட்டு, ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தவன் தீவிரவாதி!

4. துப்பாக்கி சூட்டுக்கு யார் உத்தரவு கொடுத்தது என்பது தெரியாது என்று சொன்ன மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அத்தனை அதிகாரியும் தீவிரவாதி!

5. ரப்பர் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் உண்மையான குண்டை பயன்படுத்த நேர்ந்தது என்று அலட்சியமாகச் சொன்னவன் தீவிரவாதி!

6. மக்களை கலைக்க, வானிலோ, காலிலோ சுடாமல் குறிபார்த்து நெஞ்சிலும் தலையிலும் சுட்டவன் தீவிரவாதி!

7. கடைசியில் துணை வட்டாட்சியர்தான் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி கொடுத்தார் என்று கூசாமல் சொன்னவன் தீவிரவாதி!

8. இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசியெறிந்த எலும்புத்துண்டுக்கு விலைபோய், கண்கூடாகத் தெரிந்த விதிமீறல்களை காணாததுபோல் அனுமதித்த அத்தனை அரசுகளும் அலுவலர்களும் தீவிரவாதி!

9. சமீபகாலமாக மிகவும் அதிகரித்திருக்கும் பிரிவினை, வன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்களை காணாததுபோல் கடந்துபோய் அவற்றின் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவிய ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தீவிரவாதிகள்!

10. தூத்துக்குடி துப்பாக்கிசூடு பற்றி டிவியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று சொன்ன பழனிசாமி தீவிரவாதி!

ஆனால், இவர்கள் எல்லோருக்கும் மேல் இந்திய அளவில் இன்னொரு தீவிரவாதி இருக்கிறார்!

தன் நாட்டு மக்கள் துப்பாக்கிசூட்டில் கொத்துக்கொத்தாய் செத்து விழுந்தும், தனக்கும் தன் கட்சிக்கும் வாக்களிக்கமாட்டார்கள் என்ற வெறுப்பில் இன்றுவரை ஒரு ஆறுதல்கூட சொல்லாத மோடி ஒரு அதி தீவிரவாதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக