செவ்வாய், 24 ஜூலை, 2018

கூடே - ஒரு இழக்கக்கூடாத சுகானுபவம்!
கூடே!

பொதுவாக சினிமா பார்ப்பதே மிகக் குறைவு.
விமர்சனம் எழுதுமளவு ஞானமெல்லாம் சத்தியமாக கிடையாது!
ஏதோ, வருடத்துக்கு ஒரு படம்!
அதிலும் பாமரத்தனமான ரஜினி படங்கள் பார்ப்பதே விருப்பம்!

இந்த நிலையிலும் கொஞ்சம் அவிட தேசத்துப் படங்கள் அவ்வப்போது ஈர்ப்பதுண்டு!

இது இந்தப்படத்துக்கு விமர்சனம் என்பதைவிட,
அது ஏற்படுத்திய சலனம் பகிர்வதும்,
அதன்மூலம் மேலும் சிலர் பார்க்க நேர்வதும்
இந்தப்படம் தந்த அற்புத அனுபவத்துக்கு ஒரு சின்னக் கைமாறு!

பிரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா - காஸ்டிங் பார்க்கும்போதே எதிர்பார்ப்பைக் கிளர்த்திய படம்!

நேற்றைய இரவுக்காட்சி!

கொஞ்சம் பிறழ்ந்திருந்தாலும் ஒரு ஃபாண்டஸி படமாகியிருக்கும்!

கொஞ்சம் வயது வித்தியாசம் அதிகமான அண்ணன் தங்கை பாசம் சொல்லி ஒரு பூ மலர்வதுபோல் மெல்ல மணக்க ஆரம்பிக்கிறது படம்!

டெலிபோனில் கேட்ட துக்க சேதியோடு இறுக்கமான முகத்துடன் பிருத்விராஜின் பாலைப் பயணத்தில் ஆரம்பிக்கிறது இந்தக் கவிதை!

படிப்பு சறுக்க, குடும்ப சூழலின் கட்டாயத்தில் தூர தேசத்தில் சம்பாதிக்கப்போன இளைஞன் பிருத்வி!

குடும்பத்தோடு ஒட்டாத இறுக்கமான முகத்தோடும் உடல்மொழியோடும் வந்திறங்கும் பிருத்வி கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்து க்ளைமேக்சில்தான் வாய் விட்டு சிரிக்கிறார்!

எவ்வளவு இயல்பாக வளையவருபவரை நடிக்கிறார் என்று சொல்லவே கஷ்டமாக இருக்கிறது!

நல்ல மலையாள நடிகர்கள் என்றால் எனக்கு ஃபஹத் ஃபாஸில், துல்கர் இந்தப் பெயர்கள்தான் உடனே நினைவுக்கு வரும்
அது எவ்வளவு பிழை!

படம் பார்த்து வெளியே வரும்போது பிருத்விதான் அது என்பதே மறந்துபோய் ஜோஷுவாதான் நியாபகத்தில்!
கொஞ்சமும் நாடகத்தனம் இல்லாத இம்மியளவும் மிகையில்லாத நடிப்பு!

அற்புதம்!


மலையாளிகள் கொடுத்து வைத்தவர்கள்!
அவர்களின் சினிமாவில் நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்!
சூப்பர் ஸ்டார்களுக்கோ, நாளைய முதல்வர்களுக்கோ அங்கே இடம் இல்லை!

நான்கு வருடங்களுக்குப் பிறகு நஸ்ரியா!

என்ன ஒரு கம்பேக் படம்!

குறும்பும் அன்பும், ஓயாத பசியும் ஜென்னி
கொஞ்சம் பெங்களூர் டேஸ், கொஞ்சம் ராஜா ராணியை நியாபகப்படுத்தினாலும், அதை இந்தக் கேரக்டரின் இயல்பாக ஏற்றுக்கொள்ள வைத்த அழகிய திரைக்கதை
அஞ்சலி மேனனுக்கே அதற்கான முழு க்ரெடிட்!

அப்பா அம்மாவைப் பார்க்கும்போது கண்களில் தெறிக்கும் இயலாமை, அண்ணன் மீதான அளவற்ற அன்பு, காதலன் கிருஷ்ணாவாக வரும் ரோஷன் மேத்யூவிடம் காதல் தெறிக்க வேனில் நெருங்கி உட்காரும் பாந்தம்!
நஸ்ரியா வாழ்ந்திருக்கிறார்!

இனி
பிரபஞ்சப் பேரழகி பார்வதி!

சின்னச்சின்ன வசனங்கள்தான்
ஆனால் அவை எதற்கு இவருக்கு?
அவர் வாயைத் திறந்து பேச ஆரம்பிக்குமுன்பே பக்கம் பக்கமாக வசனம் பேசிவிடுகின்றன கண்கள்!

வசனம் அவர் கண்களுக்கு முன்னால் வெறுமனே திரையில் ஓடும் சப் டைட்டில்தான்!

வழக்கம்போல் பார்வதிக்கு பதிலாக சோஃபியின் காதல், சோஃபியின் துயரம், சோஃபியின் ஆற்றாமை, சோஃபியின் பெருமிதம், சோஃபியின் பூரிப்பு இவை மட்டுமே படத்தில்!

பிருத்விராஜின் தந்தையாக நடித்திருக்கும் ரஞ்சித்
வெறித்தனம்!
மகன் மீதான அத்தனை நேசத்தையும் வெறும் உடல் மொழியால் மட்டுமே கோடி காட்டும் அப்பா பாத்திரத்தில் ஜொலிக்கிறார்!

பாலைவன எண்ணெய்க் கிணற்றில் ஆரம்பிக்கும் படம் ஒரு உறங்கும் குழந்தையின் முகத்தில் முடிகிறது!

ஹேப்பி ஜர்னி என்கின்ற மராத்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இந்தப்படம்!

ஏற்கனவே பெங்களூர் டேஸ் படத்தில் கலக்கிய இயக்குனர்தான் இதற்கும்!

ரீமேக் படம் எப்படி மண்மணம் மாறாமல் எடுக்கவேண்டும் என்று ஃப்ரேம் பை ஃப்ரேம் காட்டியிருக்கிறார்
ஒரிஜினல் மலையாளப்படம்
மராத்தி ரீமேக் என்பதை சொன்னால் நம்பவே முடியாத அளவு நேட்டிவிட்டி!

விருமாண்டி சந்தானத்தின் மகள் திருமணத்தில் காக்ரா சோளியும் வடக்கு சம்பிரதாயங்களும் என ஒட்டாமல் அப்படியே காப்பியடித்து வாந்தியெடுக்கும் "பிரம்மாண்ட" இயக்குனர்கள் தமிழ் திரையுலகின் சாபம்!

வசனங்கள் யாவும் ஒற்றை வரி அல்லது இரண்டு வரி  - அவ்வளவே!

சோகம், நையாண்டி, குதூகலம் எல்லாமே அவ்வளவு கூர்மையாய் ஒற்றை வரியில்!

படத்தின் இன்னொரு அதிசயம் லிட்டில் ஸ்வயம்ப்பின் ஒளிப்பதிவு!

பாலைவன நெடுஞ்சாலையில் ஆரம்பித்து, ஊட்டி மலை ரோட்டில் சங்கமிக்கும் ஃப்ரேமில் ஆரம்பித்து கடைசிவரை அட்டகாசம் செய்திருக்கிறது கேமிரா!

ஊட்டியின் சந்துபொந்தெல்லாம் தெரியும் என்ற என் இறுமாப்பை அடித்து நொறுக்கியிருக்கிறார்!

இத்தனை அழகா ஊட்டி
ஒவ்வொரு காட்சியும் கவிதை
அதிலும் பார்வதி வரும் ஒவ்வொரு காட்சியும் போர்ட்ரைட் தரம்
ஒரு ஓவியம் போல் அத்தனை அழகு!

மொத்தத்தில்,

ஒரு கமர்ஷியல் படத்துக்கு உண்டான காதல், பாடல்கள், கல்லூரி கலைவிழா என்று அத்தனை அம்சங்களும் உள்ள ஒரு படம்
ஆனால் ஆர்ட் ஃபிலிம் தரத்தில்!

ஜாலம் செய்திருக்கிறார் இயக்குனர் அஞ்சலி மேனன்!

ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்துவிட்டுப்போன தடம் போல சொல்ல முடியாத விதத்தில் மனதில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது படம்!

படம் என்பதைவிட, ஒரு சிலிர்க்கவைக்கும் அனுபவம்!

பூப்பூக்கும் அழகைப்போல் நிதானமான வாசனையான ஒரு அனுபவம்!

தவிர்த்துவிட முடியாத, மனதுக்குள் அசைபோட்டு சுவைக்கவைக்கும் கவிதை!

மலையாளிகள் கொடுத்துவைத்தவர்கள் !

வாழ்கிறார்கள்!