புதன், 19 செப்டம்பர், 2018

பொருட்பால் - நான்காம் பாகம்!79. நட்பு

781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
நட்பைவிட சேர்க்கத்தக்க செல்வமோ நம்மைக் காக்கும் பாதுகாப்போ வேறில்லை

782. நிறைநீர நேரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
அறிஞர் நட்பு பிறைபோல் தோன்றி நாள்பட வளரும் பேதையர் நட்போ தேய்பிறையாய் தேயும்

783. நவில்தொரும் நூனயம் போலும் பயில்தொரும்
பண்புடை யாளர் தொடர்பு
படிக்கப்படிக்க நல்ல நூல்போல பழகப்பழக இன்பம் தரும் பண்பாளர் நட்பு

784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
சிரித்து மகிழ மட்டுமல்ல, வழி தவறுகையில் அறிவுரைத்துத் திருத்தவே நட்பு

785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
நட்பு கொள்ள நெருக்கமோ அருகிருப்பதோ தேவையில்லை ஒத்த சிந்தனை மட்டுமே போதும்

786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
முகம் மலரப் பழகுவது நட்பல்ல, அன்பில் மனம் கனிந்து மலரப் பழகுவதே உயர்ந்த நட்பு

787. அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
தீயவழி செல்லாது தடுத்து துயர் வருகையில் உடனிருந்து பகிர்வது நட்பு

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
உடை நழுவுகையில் காக்கும் கை போல நண்பனுக்கு துயர் வருகையில் தன்னிச்சையாய் காப்பதே நட்பு

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
மன வேறுபாடின்றி தன்னால் முடிந்தவாறெல்லாம் துணைநின்று உதவுவது நட்பு

790. இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
ஒருவரையொருவர் செயற்கையாகப் புகழ்ந்துகொள்வது நட்பிற்குப் பெருமையில்லை
  
80. நட்பாராய்தல்

791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
ஆராயாது கொள்ளும் தீய நட்பு விடுபட முடியாத கேடுகளை ஏற்படுத்தும்

792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
பலமுறை ஆராய்ந்து பின் கொள்ளாத நட்பு சாவைப்போல தீராத் துயரம் தரும்

793. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
குணம், குடிப்பிறப்பு, குறைகள், சுற்றம் அறிந்தபின் நட்பு கொளல் நன்று

794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும்
நட்பு நற்குடிப் பிறந்து பழிக்கு அஞ்சுபவன் நட்பை விலை கொடுத்தும் பெறலாம்

795. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்
தவறு செய்கையில் வன்மையாய் கண்டித்து அறிவுரை சொல்வோர் நட்பைக் கொளல் நன்று

796. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
வாழ்வில் தீமை வரும்போது விளையும் நன்மை, நண்பர்களின் உண்மை முகத்தை அறியமுடிவது

797. ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
ஒருவருக்கு மிக நல்ல செல்வம் என்பது அறிவற்றோர் நட்பைத் துறப்பதே

798. உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
ஊக்கம் குறைக்கும் எண்ணத்தை, துயரில் நழுவும் நண்பனை, நினையாமை நலம்

799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
கேடு வந்தபோது கைவிட்ட நட்பை சாகும்போது நினைத்தாலும் நெஞ்சைச் சுடும்

800. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
பிழையிலாரோடு நட்பு கொளல், பிழையானவர் நட்பை விலை கொடுத்தாவது நீங்குதல், நலம்


81. ழைமை


801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
பழைமை என்பது நெடுநாள் நட்பின் உரிமையில் பிழைபட நடப்பினும் பொறுத்தலேயாகும்

802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்
பழைய நண்பர்களின் உரிமைச் செயல்களை மகிழ்ந்து பொறுத்தல் சான்றோர்க்கு அழகு

803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை
பழகிய உரிமையில் நண்பன் செய்ததை தானும் விரும்பிச் செய்ததாய் காட்டிக்கொள்வது நட்பு

804. விழைதகையான் வேண்டி இருப்பர் கொழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
நட்பின் உரிமையோடு நண்பர் செய்த செயலின் விளைவை மகிழ்வோடு ஏற்பர் அறிஞர்

805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
நாம் வருந்தும் செயலை உண்மை நண்பர் செய்தால் அது அறியாமையால் அன்றேல் உரிமையால்

806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
நீண்டகால நண்பர் அறியாமல் கேடு செய்தாலும் விலகாதிருப்பது நட்பு

807. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
தனக்கே எதிராய் மாறினும் அன்புடையோர் நண்பர் மீதான நேசத்தை விலக்க மாட்டார்

808. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
நண்பனின் பிழையை பிறர் கூற நம்பாதவரையே ஏமாற்றுபவரோடு பழகிய நாட்கள் வீண்

809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
உரிமையோடு பழகிய நட்பை எந்நிலையிலும் கைவிடாதவரை உலகம் மதித்துப் போற்றும்

810. விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
பழைய நண்பர் பிழையே செய்தாலும் அவர்மீதான அன்பை விடாதவரை பகைவரும் நேசிப்பர்

82. தீ நட்பு

811. பருகுவர் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
பண்பற்றோர் நம்மை அன்பு வெள்ளத்தில் நனைத்தாலும் அவர் நட்பை தவிர்த்தல் நன்று

812. உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
பலனுக்காக மட்டும் நட்பாகி பலனிலாதபோது விலகும் நட்பு இருந்தாலென்ன போனாலென்ன?

813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
பலனைக் கருதி நட்பு கொள்வோரும் விலைமகளும் கள்வரும் ஒரே இனத்தோர்

814. அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
போர்க்களத்தில் கீழே தள்ளி தப்பியோடும் குதிரை போன்றோர் நட்பைவிட தனித்திருப்பது மேல்

815. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
எத்தனை உதவி செய்தாலும் நமக்கு உறுதுணையாகாத கீழோர் நட்பு இல்லாமையே நலம்

816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
முட்டாளின் மிகை நெருக்கத்தைவிட அறிஞனின் பகை கோடி மடங்கு மேலானது

817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
போலியாய் சிரித்து நடிக்கும் நட்பைவிட பகை தரும் துன்பம் பலமடங்கு நன்மையானது

818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடால் சோர விடல்
செய்யவேண்டிய செயலை செய்யாது நடித்துக் கெடுப்போர் உறவை மெல்ல அறுத்துவிடல் நலம்

819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
சொல்லும் செயலும் வெவ்வாறாய் மாறுபடுவோர் நட்பு கனவிலும் துன்பம் தரும்

820. எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
தனித்திருக்கையில் நயந்து பலர் இருக்கையில் இகழ்வோர் நட்பு சிறிதும் கூடாது
  
83. கூடா நட்பு

821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மனதார அன்பிலாது நடிப்போர் நட்பு வெட்டுவதற்காகவே தாங்கும் பட்டடைக் கல் போன்றது

822. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
உறவுபோல் தோன்றி மனதில் உறவென்று நடிப்போர் நட்பு விலைமாது மனம்போல அசிங்கமானது

823. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது
நல்ல நூல் பல கற்றிருந்தாலும் மன ஒற்றுமையற்றோர் சிறந்த நட்பாளராவது அரியது

824. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
முகத்தில் சிரிப்பும் மனதில் பகைமையும் கொண்ட வஞ்சகரின் உறவுக்கு அஞ்சவேண்டும்

825. மனத்தின் அமையா தவர் எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று
மனம் ஒன்றாது செய்வோர் செயல் வெற்றி பற்றி அவர் சொல்லை நம்புதல் பெரிய தவறு

826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
நண்பர்போல் இனிமையாகப் பேசினாலும் பகைவரின் சிறுமை ஒருநாள் வெளிப்பட்டுவிடும்

827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
தாக்குவதற்காகவே வளையும் வில்போன்று நம்பத் தகாததே பகைவரின் பணிவும் குழைவும்

828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
பகைவரின் வணங்கும் கைக்குள் ஆயுதமும் சிந்தும் கண்ணீரில் வஞ்சகமும் மறைந்திருக்கும்

829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
வெளியே நட்பாய் நடித்து உள்ளே பகை வளர்ப்போரோடு அதுபோலவே நாமும் பழகல் நன்று

830. பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்
பகைவரிடம் பழக நேரின் மனதில் இன்றி வெளியே மட்டும் நட்பாய் இருந்து பின் அதையும் விடல் நலம்
  
84. பேதைமை

831. பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
அறியாமை என்பது நலம் தருவதை தவிர்த்துவிட்டு தீங்கு செய்வதை விரும்பி நாடுவது

832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
தனக்குப் பொருந்தாத, பயன்தராத செயல்களில் ஈடுபடுவதே மிகப்பெரிய மடமை

833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
தவறுக்கு வெட்காமை, நல்லன விரும்பாமை, அன்பற்றிருத்தல், காப்பது காவாமை மூடர் பண்பு

834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
படித்து, உணர்ந்து, பிறருக்கு போதித்து, தான் அதன்படி வாழாதவன் பெரும் அறிவிலி

835. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
அறிவற்றோன் தன் பிழைகளால் ஏழ்பிறவிக்குமான நரகத்தை இப்போதே தேடிக்கொள்வான்

836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
நேர்மையில்லாத மூடர் ஒரு செயலைத் தொடங்கினால் அதுவும் கெட்டு தானும் கெடுவார்

837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
அறிவற்றவரிடம் குவியும் செல்வம் யாரோ அனுபவிக்க, தகுந்த உற்றோருக்கு உதவாது போகும்

838. மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
மூடன் கையில் செல்வம் கிடைத்தால் பித்துப் பிடித்தவன் கள்ளுண்டதுபோல் ஆடுவான்

839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
அறிவற்றோர் நட்பு ஒருவகையில் இனிது, பிரிய நேர்கையில் வருத்தமே தராததால்

840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
அறிஞர் கூட்டத்தில் மூடன் நுழைவது அசுத்தமான காலை கழுவாது படுக்கையில் வைப்பதுபோல


85. புல்லறிவாண்மை

841. அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
அறிவின்மையே இகழத்தக்க பெரிய இல்லாமை. பிற இன்மைகளை உலகம் இந்தளவு இகழாது

842. அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
அறிவற்றவன் மகிழ்ந்து வாரி வழங்குவது பெறுபவர் நல்வினை காரணமாகவே

843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
அறிவற்றோர் அறியாமையால் தனக்குத்தானே செய்துகொள்ளும் தீமை பகைவரும் செய்யாதது

844. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
தன்னைத்தானே அறிவாளி என்று வியந்து மயங்குவதே மிகப்பெரிய அறியாமை

845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
அறிவற்றோர் அறியாததை அறிந்ததுபோல் காட்டிக்கொள்வது அவர் அறிந்தவற்றையும் சந்தேகிக்கவைக்கும்

846. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
தன் குற்றமறிந்து நீக்காமல் ஆடை அணிவதாலேயே மானம் மறைத்தோம் என நினைப்பது மடமை

847. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
நல்வழி காட்டும் அறிவுரைகளை ஏற்காத அறிவிலிகள் தமக்குத் தாமே தீங்கு தேடிச் செய்வோர்

848. ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
தனக்கும் தோன்றாது சொல்புத்தியும் இல்லாத அறியாமை மூடருக்கு சாகும்வரை உள்ள நோய்

849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டாணாம் தான்கண்ட வாறு
தன்னைத்தானே அறிஞனாய் எண்ணும் அறிவற்றவன் தனக்கு அறிவுரை சொல்பவனை அறிவிலி என்றே கருதுவான்

850. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தகையா வைக்கப் படும்
உலகோர் உண்டென்பதை வீம்பாக இல்லையென்பவன் உயிரற்ற பேயனாய் இகழப்படுவான்

86. இகல்

851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
எல்லா உயிரோடும் இணங்கிப்போகாத பகையுணர்வு தீமை தரும் பண்பு

852. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
கருத்து மாறுபட்டு வெறுப்பானவை செய்தாலும் பகையோடு அவனுக்கு தீங்கு செய்யாததே நற்பண்பு

853. இகலென்னும் அவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
மனவேறுபாடு எனும் நோயை மனதிலிருந்து நீக்கினால் மாறாப் புகழ் கிடைக்கும்

854. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
பகையுணர்வு எனும் பெரும் துன்பம் மனதைவிட்டு நீங்குவதே சிறந்த இன்பம் தரும்

855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
மனவேறுபாடு தோன்றுகையில் அதற்கு இடம் கொடாதவரை வெல்லுவோர் யாருமில்லை

856. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
அனைவரோடும் முரண்பட்டே வாழ நினைப்பவர் வாழ்வு விரைவில் தடம் புரண்டு அழியும்

857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
நெஞ்சில் பகையுணர்வு கொண்டோர் நல்வழி காட்டும் மெய்ப்பொருளை உணரமாட்டார்கள்

858. இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு
மனதில் பகையுணர்வு தோன்றின், அதை ஒழிப்பவர் நன்மையும் ஏற்பவர் தீமையும் அடைவர்

859. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
நன்மை நாடுவோர் மன வேறுபாட்டை வெறுப்பர். தனக்குத் தானே தீமை தேடுவோர் அதை விரும்புவர்

860. இகலானாம் இல்லாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
பகையுணர்வால் துன்பமும் நட்புணர்வால் அளவில்லா நன்மைகளும் பலனாய் விளையும்

  
87. பகை மாட்சி

861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
தன்னைவிட வலியவரை விடுத்து எளியவரை முதலில் போரிட்டு வெல்வதே நல்லது

862. அன்பிலன் ஆற்றின் துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
மக்களிடம் அன்போ, பலமான துணையோ, சுய வலிமையோ அற்றவன் எப்படி பகையை வெல்வான்?

863. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
அச்சமும் அறியாமையும் கொண்டு இணக்கமும் இரக்கமும் அற்றவன் பகையால் எளிதில் வீழ்வான்

864. நீங்கான் வெகுளி நிறையிலான் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
கோபத்தையும் மனதையும் அடக்கத் தெரியாதவனை எவரும் எங்கும் எளிதாய் தோற்கடிப்பர்

865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது
நல்வழி செல்லா நல்லன செய்யா பழிக்கஞ்சா பண்பிலான் பகையால் எளிதே அழிவான்

866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
ஆராயாமல் கோபம் கொள்பவன், பேராசை கொண்டவன் பகைவனானால் அவனை எளிதில் வெல்லலாம்

867. கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
கூட இருந்தே தகாதன செய்வோர் பகையை பணம் கொடுத்தாவது பெறவேண்டும்

868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து
நற்குணங்கள் அற்று குற்றங்கள் புரிபவன் துணையிழந்து பகையால் வீழ்வான்

869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
அறிவற்ற கோழைகள் பகைவராயின் எதிர்ப்போரை வெற்றி இன்பம் தொடர்ந்திருக்கும்

870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

திறனற்ற எதிரிகளைக்கூட எதிர்க்கத் தயங்குவோரை புகழ் நெருங்காமல் விலகும்


88. பகைத்திறம் தெரிதல்

871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
பகைமை எனும் தீய பண்பை நாம் விளையாட்டாகக்கூட மனதில் விதைக்கக்கூடாது

872. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
வில் ஆற்றல் கொண்ட வீரரைக்கூட பகைக்கலாம், சொல்லாற்றல் கொண்ட அறிஞரைப் பகைத்தல் தீது

873. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
தனித்து நின்று பலர் பகையை வலிந்து தேடிக்கொள்பவன் மூடனைவிட அறிவற்றவன்

874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு
பகைவரையும் நண்பராக மாற்றும் பண்பும் பழக்கமும் உடையோரை உலகம் போற்றும்

875. தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
பகைவர்கள் பிளவுபடின் துணையிலாதோர் அதில் ஒருவரை நண்பராக்கிக்கொளல் நன்று

876. தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
பகைவனைப்பற்றி அறிந்தோ அறியாதோ இருந்தாலும், இடர் வரும்போது சீண்டாதிருப்பது நலம்

877. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
துன்பத்தை நாமாக நண்பருக்குச் சொல்வதும் பலவீனத்தை பகைவரிடம் வெளிப்படுத்துவதும் பிழை

878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
வழிவகை உணர்ந்து தம்மை பலப்படுத்தி ரகசியம் காப்போர்முன் பகைவர் ஆணவம் அழியும்

879. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
முள்மரத்தை சிறிதாக இருக்கையிலும் பகையை வளருமுன்பும் அழித்தல் அறிவுடைமை

880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
பகைவரின் ஆணவத்தை அழிக்கமுடியாதவர் வெறும் மூச்சுவிடுவதால் வாழ்வதாய் அர்த்தமில்லை


89. உட்பகை

881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
நோய் தருமானால் நிழலும் நீரும்கூட உடனிருந்து கேடு செய்வோர் உறவுபோல தீமையானதே

882. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
வெளிப்படையான பகைவரைவிட உடனிருந்தே கெடுக்கும் வஞ்சகரிடம் எச்சரிக்கை அதிகம் தேவை

883. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
உட்பகையிடம் தற்காத்துக்கொள்ளாவிடில் அது பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கத்திபோல் அழிக்கும்

884. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்
மனம் கெட்டு உட்பகை உணர்வு ஏற்படின், அது உற்றவர் யாவரையும் பகையாக்கிவிடும்

885. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்
நெருங்கிய உறவே உட்பகையானால் அது இறப்பைப்போல துன்பம் தரும்

886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
உடனிருப்போர் பகை கொண்டால் வரும் அழிவை வெல்வது மிகவும் கடினம்

887. செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
உட்பகை கொண்டோர் சிமிழின் மூடிபோல் வெளியே சேர்ந்திருந்தாலும் உள்ளுக்குள் பிரிந்தே இருப்பர்

888. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி
அரத்தால் தேய்க்கப்படின் மெலிந்து அழியும் உலோகம்போல உட்பகை புகுந்த குலம் அழியும்

889. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
எள்ளின் பிளவைவிட சிறிய உட்பகையும் நாளடைவில் பேரழிவை ஏற்படுத்திவிடும்

890. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று
உள்ளம் ஒன்றாதவரோடு இணைந்து வாழ்வது சிறிய குடிலுக்குள் பாம்போடு வாழ்வதுபோல்


90. பெரியாரைப் பிழையாமை

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
செயலை முடிக்கும் வலிமையுள்ளவரை இகழாதிருப்பது எல்லாவற்றிலும் பெரிய பாதுகாப்பு

892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்
அறிவில் உயர்ந்தோரை மதிக்காது நடந்தால் அதனால் பெரும் துன்பம் வரும்

893. கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
அழிய நினைப்பவன் பகையை நொடியில் அழிக்கும் ஆற்றல் உள்ளவனை பகைப்பான்

894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
தம்மிலும் ஆற்றல் உள்ளோரை பகைத்தல் அழிவை விரும்பி அழைப்பது போலாகும்

895. யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
வலிமையான அரசின் பகைக்கு உள்ளானவர் எங்கு தப்பிச் சென்றும் பிழைக்க இயலாது

896. எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
தீயினால் சுடப்படினும் பிழைக்கலாம் அறிவுடையோரை அவமதித்து வாழ்தல் அரிது

897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
பெரும் செல்வமும் வசதியான வாழ்வும் ஆன்றோர் கோபத்தின்முன் பலனற்றுப்போகும்

898. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
மலைபோல் ஆற்றலுள்ள அறிஞரை அழிக்க நினைப்போர் தம் குடியோடு தாமே அழிவர்

899. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும்
கொள்கையில் உயர்ந்த பெரியோர் சினந்தால் வலிமையான அரசும் பாதியிலேயே அழியும்

900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

எவ்வளவு வலிமை துணையிருந்தாலும் கற்றறிந்த ஆன்றோர் சினத்துக்கு ஆளான அரசு தப்பமுடியாது

91. பெண்வழிச் சேறல்

901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
இல்லறத்தில் திளைத்து கடமையை மறந்தவர்கள் புகழடைய இயலாது

902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
கடமையைச் செய்யாமல் பெண் பின்னால் அலைபவன் நிலை இறுதியில் நகைப்புக்கிடமாகும்

903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுந் தரும்
குணமற்ற மனைவியிடம் பணிந்து நடப்பவன் நல்லோர்முன் வெட்கி நிற்பான்

904. மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
குடும்ப வாழ்வில் அஞ்சி வாழ்பவனின் வெளியுலகச் செயல்களும் சிறப்புற அமையாது

905. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
மனைவியின் கண்டிப்பில் அஞ்சி வாழ்பவன் நல்லோருக்குச் செய்யும் கடமை செய்யவும் அஞ்சுவான்

906. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்
பண்பிலாத மனைவிக்கு அஞ்சுபவன் சிறப்பாக வாழ்ந்தாலும் அது அவனுக்குப் பெருமையில்லை

907. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
பெண்ணிடம் அடிமைப்பட்டவனின் ஆண்மையைவிட பெண்ணின் நாணமே உயர்வானது

908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
பெண்ணிடம் பணிந்து கிடப்பவர் நண்பருக்கு உதவவோ நற்செயல் புரியவோ மாட்டார்

909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்
பெண் சபலத்தில் அடிமையாய் உழல்வோனிடம் அறமும் செல்வமும் இருக்காது

910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
சிந்தனையும் உறுதியும் உள்ளோர் காமத்திற்கு அடிமையாக மாட்டார்கள்

92. வரைவின் மகளிர்

911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
பொருளுக்காக வேண்டி இனிமையாகப் பேசும் பெண்களின் உறவு துன்பமே தரும்

912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
பொருளுக்காக இனிமையாய் பேசி நடிக்கும் பெண்களின் உறவை தவிர்ப்பது நலம்

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
பொருளுக்காக முயங்கும் பொதுமகளிரை அணைப்பது இருட்டறையில் அறியாப் பிணத்தை புணர்வதுபோல்

914. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
அருளை விரும்பும் அறிஞர் பொருள் விரும்பும் பொதுமகளிரை மனதாலும் தீண்டார்

915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
இயல்பிலேயே அறிவுடையோர் பொதுமகளிர் தரும் சுகத்தை நாடமாட்டார்

916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
புகழ்மிக்க சான்றோர் இகழத்தக்க உடல்விற்றுப் பிழைப்போரை கனவிலும் தீண்டார்

917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
அன்பின்றி பொருளுக்காக முயங்கும் பொதுமகளிரை மன உறுதி அற்றோரே நாடுவர்

918. ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
வஞ்சக பொதுமகளிரிடம் வீழ்வது அறிவிலிகளின் மதி மயக்கமாகும்

919. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிர் தோள்கள் மூடர்கள் விரும்பித் தழுவும் நரகம்

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
பொதுமகளிர் உறவு, கள், சூதாட்டம் இவை தரித்திரத்தை கொணர்ந்து சேர்க்கும்

93. கள்ளுண்ணாமை

921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
மதுவுக்கு அடிமையாகி புகழ் இழந்தோரிடம் பகைவர்கள் அஞ்சமாட்டார்கள்

922. உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
சான்றோரின் மதிப்பைப் பெற ஆசையற்றோரே மது அருந்துவர்

923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
மதுவில் மதி மயங்குபவனை பெற்ற தாயே விரும்பமாட்டார் எனில் சான்றோர் எப்படி மதிப்பர்?

924. நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
மது போதையில் உழல்பவரிடம் நாணம் எனும் நல்ல பண்பு இல்லாது ஓடும்

925. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
விலை கொடுத்து மது வாங்கி அருந்தி தன் நிலை மறந்து மயங்கிக் கிடப்பது மூடத்தனத்தின் உச்சம்

926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
மதுவுண்டோர் நஞ்சுண்டவர் போல உறங்குதலும் இறந்து கிடப்பதைப்போலத் தோன்றும்

927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
மறைவாய் அருந்தினாலும் ஊரார் எள்ளி நகைக்க மது ஏதேனும் அடையாளம் காட்டிவிடும்

928. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்
மது அருந்துவதில்லை என்று சொல்லும் பொய் மது மயக்கத்தில் வெளிப்பட்டுவிடும்

929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
மது அடிமைக்கு அறிவுரை சொல்வது நீரில் மூழ்கியவனைத் தேட தீப்பந்தத்தோடு போவதுபோல

930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

குடிகாரன் குடிக்காதபோது குடித்தவன் தள்ளாட்டம் கண்டு திருந்த நினைக்க மாட்டானா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக