வியாழன், 6 செப்டம்பர், 2018

ஆதலினால் (கவனமுடன்) காதல் செய்வீர்!ஆதலினால் (கவனமுடன்) காதல் செய்வீர்!இரண்டு சம்பவங்கள்!

இரண்டும் எனக்கு மிக நெருங்கிய நட்பும் உறவும் சார்ந்த இடங்கள்!

சற்றும் கற்பனை கலக்காமல் பெயர்களையும் இடத்தையும் மாற்றி 100 % உண்மை சம்பவங்களின் தொகுப்பு!

அது ஒரு அழகிய சிற்றூர்!

முழுக்க நாகரீகத்தின் சாயல் படியாமல் இன்னும் கொஞ்சம் கிராமியங்களை மிச்சம் வைத்திருக்கும் அழகிய ஊர்!

சராசரிக்கு மேலான வசதியான குடும்பம்!

உள்ளூரிலேயே சொந்த தொழில், விவசாயம் என்று வருமானத்துக்கு குறைவில்லாதவர் ராமநாதன்!

வேலை முடிந்த நேரங்களில் ஓய்வென்பது அவருக்கு கோவில் காரியங்கள்! சமீபத்தில் கூட குலதெய்வம் கோவிலுக்கு சிலை செய்வதில் முழுக்க முன்னின்று எந்தப் பலனும் கருதாமல் உழைத்தவர்.

குங்குமச் சிமிழ் போல அழகிய மனைவி!
குழப்பமில்லா அழகிய தாம்பத்யத்தில் ஒரே மகள்!

வடிவு!
பெயருக்கேற்ற பேரழகி!

கடந்து செல்லும் யாரையும் ஒரு பெருமூச்சுடன் நின்று பார்க்கவைக்கும் வடிவமும் வனப்பும்!

குறைவில்லா செல்வத்துக்கு ஒரே மகள் என்று செல்லமாய் வளர்ந்த பெண்!
பக்தி, ஒழுக்கம், பெற்றோர் மேல் குன்றாத பாசம் என்று அப்பழுக்கில்லா வளர்ப்பு!

ப்ளஸ் டூவில் வாங்கிய நல்ல மதிப்பெண் அதிக போராட்டம் இல்லாமல் அவள் விரும்பிய பொறியியல் படிப்பை பெற்றுத் தந்தது!

மூன்றாண்டு எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஒரே ஓட்டமாக ஓடியது!

ஒற்றை மகளை பிரிந்திருக்க மனமில்லாமல் நினைத்தபோதெல்லாம் ராமநாதன் தாம்பதியினர் சென்னைக்கு ஓடுவதும், ஒரு நாள் அதிகப்படி விடுமுறை கிடைத்தால் வடிவு ஊருக்கு பறந்தோடிவருவதும் ..

கண் பட்டதோ இல்லை கடவுளுக்கு உறுத்தியதோ, யாருக்குத் தெரியும்!

இப்போது இறுதியாண்டு!

கல்லூரி ஆரம்பித்த முதல் வாரமே வந்து அப்பாவை கைப்பிடியாய் சென்னைக்கு இழுத்துப்போனாள்!

மகள் ஏதோ கல்லூரி விஷயமாக கூட்டிச் செல்வதாய் கூடச் சென்றார் ராமநாதன்!

ரூமுக்குப் போய் அமர்க்களமாய் அலங்கரித்துக்கொண்டு வடிவு கூட்டிச் சென்றது பதிவாளர் அலுவலகத்துக்கு!

எல்லா ஏற்பாடுகளும் அங்கு தயாராக இருக்க, மறுத்தால் அங்கேயே தற்கொலை செய்துகொள்வதாய் மிரட்டிய மகளின் அழுகையை காண சகிக்காமல் மனைவிக்கும் சொல்லாமல் சாட்சிக் கையெழுத்துப் போட்டார் ராமநாதன்!

ஊருக்கு வந்தபின் அந்தப் பையனின் ஊருக்கு மனைவி, மற்றும் முக்கிய உறவினர்களோடு போனபோதே பொறி கலங்கியது!

இவர்களின் வசதிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத இடம்!
சற்றும் பிடிகொடுத்து பேசாத பையனின் பெற்றோர்!

ஒருவழியாக படிப்பு முடிந்ததும் சம்பிரதாயமான திருமணம் என்ற அரைகுறை வாக்குறுதியோடு ஊர் திரும்பினர்!

இப்படி ஒரு காரியத்தை தன் ஒற்றை மகளிடம் எதிர்பாராத ராமநாதன் வீட்டுக்குள்ளேயே முடங்க, ஆறுதல் சொல்லி வேலையைப் பார்க்க நடமாட வைத்தார் மனைவி!

காத்திருந்த விதி சரியாக வேலை செய்தது!

மூன்றே மாதங்களில் மகளின் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு அதிகாலை அழைப்பு!

பதறி சென்னைக்கு விரைந்தனர் தம்பதி!

ஒரே திசையில் வெறித்துப் பார்த்துக்கொண்டு அறை மூலையில் உட்கார்ந்திருந்த மகளைப் பார்க்க இரண்டு உயிரும் சில நிமிடங்கள் துடிப்பை மறந்தது!

இடைப்பட்ட காலத்தில் பையன் குடும்பம் மிகச் சரியாக காய் நகர்த்தியிருக்கிறது!

சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு பறந்துவிட்டான் பையன்!
இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்ற ஒற்றை துண்டுசீட்டு மட்டுமே!

எண்பது நாள் கரு வடிவு வயிற்றில்!

சென்னையில் இருக்கும் உறவுக்கார மருத்துவர் உதவியோடு கருவைக் கலைத்து மகளை வீட்டுக்குக் கூட்டிவந்து பத்து நாட்கள் ஆகிறது!

வந்ததிலிருந்து இலக்கில்லா நேர் பார்வை!

ராமநாதனை பார்க்கும்போது மட்டும், " நீங்கள் என் அப்பாதானே, செருப்பில் அடித்து கையெழுத்துப் போடமாட்டேன் என்று இழுத்துவந்திருக்கக் கூடாதா" என்ற ஓயாத கதறல்!

ஒற்றை வாரிசு குலைந்துபோன இடி தாங்க முடியாமல் கலைந்து கிடக்கிறது அன்புக்கூடு!

கள்ளச்சிரிப்போடு ஆறுதல் சொல்வதாய் அவ்வப்போது கிளறிவிட்டுப் போகும் உறவுக்கூட்டம்!

அக்கறையோடு கூடவே அடைகாக்கும் சில உண்மை உறவு!

மூன்று ஜீவனையும் பார்த்து கலங்கிய மனதோடு வந்த இரண்டாவது நாள் வந்தது அடுத்த இடி!

தங்கை மகன் திருமண வரவேற்பு!

சற்றே காற்றாட வாசலில் நின்றிருந்தான் ரவி!

ஏறத்தாழ ஐந்து வருடங்களாகப் பார்க்காத நண்பர் மனைவியோடு வர, கைபிடித்து அழைத்துப்போனான் ரவி!

சரியாக ஐந்து நிமிடம் மட்டும் இருந்தவர்கள், உடனே புறப்படவேண்டும் என, புரியாமல் பார்த்தான் ரவி!

"அப்படி என்ன அவசரம்?"
தயங்கித் தயங்கிச் சொன்னார் " முருகன் வீட்டுக்குப் போகவேண்டும்!"

முருகன்
இருவருக்கும் பொதுவான நண்பர்
பொது மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற மருத்துவர்!

வாழ்க்கை வெள்ளத்தில் ரவியோடு தொடர்பற்றுப்போய் ஏறத்தாழ பத்தாண்டு ஆகியிருந்தது!

"என்னாச்சு, ஏதாவது விசேஷமா?"

தயங்கித் தயங்கி வந்த பதிலை கேட்டிருக்க வேண்டாமோ?

அவர்கள் கிளம்பிப்போனது கூட உறைக்காமல் பிரமித்து உட்கார்ந்திருந்தான் ரவி!

முருகன்
அதிர்ந்துகூட பேசாத ஒரு அமைதியான நண்பன்
யாருக்கும் மனதாலும் கேடு நினைக்காத பிறவி
எந்தக் கெட்ட பழக்கமும் எக்காலமும் இல்லாத பிறவி!
யார் வீட்டுக்கு வந்தாலும் அன்பாய் உபசரிக்கும் தன்மை!

ஒரு மகனும் அதற்குப்பின் ஐந்தாண்டு கழித்து ஒரு மகளும்!

தமிழ் மேல் கொண்ட பற்றில் பையனுக்கு வைத்த பெயர் -
இளஞ்சேரன்!

எவ்வளவு அழகான பெயர்!

அப்பனைப்போலவே அறிவு! அம்மாவைப்போல் அடக்கம்! எல்லோரிடமும் பணிவு!

எந்த ஒரு சிபாரிசும் அழுத்தமும் இல்லாமல் வாங்கிய மதிப்பெண் பெற்றுத் தந்த மருத்துவக்கல்வி!

சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து வந்து அப்பாவோடு கிளினிக்கில்!

குறையொன்றும் இல்லாமல் ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை!

விதி மேற்படிப்பு ரூபத்தில் வந்தது!

நான்காண்டு பட்ட மேற்படிப்பு!

முதலாண்டில் அறிமுகமானார் இளங்கலை இறுதியாண்டு மாணவி லதா!

இருவருக்கும் ஏற்பட்ட ஈர்ப்பை முதலில் சொன்னதே நண்பனாய் வாழ்ந்த தந்தையிடம்!

இரண்டுபக்கமும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போலொரு பயணம்!

பட்ட மேற்படிப்பு முடிந்ததும் திருமணம் என்று இருவீட்டு உடன்படிக்கை!

இரண்டுவருடம் ஒரே கல்லூரியில் சிறகடித்துப் பறந்தன காதல் கிளிகள்!

சிக்கலில்லாத காதல் கதையில் என்ன சுவாரசியம் இருக்கிறது ஆண்டவனுக்கு!

என்ன காரணம் என்பதே தெரியாமல் பிரிவு வந்தது!

எல்லாவற்றுக்கும் இளஞ்சேரனை காரணம் சொல்லிப் பிரிந்தாள் லதா!

மனமுடைந்து ஊருக்குவந்து அப்பா மடியில் விழுந்து கதறியது காயம் பட்ட நெஞ்சம்!

"தற்செயலாய்" லதாவின் திருமண நாளன்று பைக் விபத்தில் தலையில் காயம் பட்டு சித்தம் கலங்கியது இளஞ்சேரனுக்கு!

அல்லும் பகலும் மாறிமாறி அடைகாத்து தேற்றினர் பெற்றோர்!

ஒருவழியாக ஓராண்டுக்குப் பின்,
"அப்பா, நான் போய் படிப்பை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்!"

மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார் முருகன்!

அப்போதும் மகனை தனியே அனுப்ப மனமில்லாமல் திருமணமாகாத தன் சகோதரனை உடன் அனுப்பி தனி வீடெடுத்து தங்கவைத்தார்!

சரியாக ஒரு மாதம்!

பையனின் நள்ளிரவு வாட்ஸாப் ஸ்டேட்டஸ்  "I hate my life"

விடிகாலை தற்செயலாய் அதைப்பார்த்த முருகன் உடனே மகனுக்கு தொடர்புகொள்ள
அணைத்து வைக்கப்பட்டிருந்தது ஃபோன்!

பதறி பக்கத்து அறையில் படுத்திருந்த சகோதரனுக்கு ஃபோன் போட

அவரும் ஓடிப்போய் கதவைத் திறந்து பார்க்கும்போது,

காலம் கடந்திருந்தது!

போஸ்ட்மார்ட்டம் முடிந்து அந்த இரவில்தான் உடல் ஊருக்கு வருகிறது என்று தகவல் சொல்லிப் போயிருந்தார் நண்பர்!

மறுநாள் திருமணம் எப்போது முடியும் என்று காத்திருந்து அதற்கடுத்த நாள் போய்ப் பார்த்த காட்சியை என்ன சொல்ல?

யாரிடமும் பேசாமல் நீர் வடியும் கண்களோடு முருகன்!

" யாரும் அழாதீர்கள்! சேரன் சாமியிடம்தான் போயிருக்கிறான்!" என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு அவர் மனைவி!


இந்த இரண்டு கூடும் சிதறிப்போக எது காரணம்?

காதலா?

வாழ்வது, சாவது என்ற இரண்டு முடிவின்போதும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அந்நியமா அன்பை மட்டுமே கொட்டி வளர்த்த பெற்றோர்?

இந்த இளமைகளின் அவசர கோல முடிவுகளின் தண்டனை ஏன் அந்த வயதான பெற்றோருக்கு?

வாழ்க்கையை சந்திக்குமுன் சிந்திக்க சொல்லித் தர தகுதியற்றவையா கற்ற கல்வியும் பெற்ற அன்பும்?

குழந்தைகள் நிழலில் முதுமை என்ற நியாயமான பேராசை பெற்றோருக்கு இருப்பது அப்படி இமாலய பிழையா?

ஒரு தோல்வியை எதிர்கொள்ள முடியாத கோழை மனம் எப்படி இந்தக் குழந்தைகளுக்கு வந்தது?

விதி என்ற ஒற்றை வார்த்தை எந்த வகை ஆறுதலும் சொல்லமுடியா பதில்!

கடவுள் தன் இருப்பைத் தொலைத்த கணங்களா
அன்றி
தன் இருப்பை வலியுறுத்திய கணங்களா இவை?

என்றாவது பதில் கிடைக்க வாய்ப்பே இல்லாத கேள்விகளை சுமந்து அலைகிறது வாழ்க்கை!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக