செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பொருட்பால் - இரண்டாம் பாகம்54. பொச்சாவாமை

531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
பெருமகிழ்வில் ஏற்படும் தன் மறதி அடங்காச் சினத்தால் வரும் தீமையைவிடக் கொடியது.

532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
தீராத வறுமை அறிவை அழிப்பதுபோல் மறதி ஒருவன் புகழை அடியோடு கொன்றுவிடும்

533. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு
மறதி உடையோர்க்குப் புகழில்லை என்பது எல்லா அறிஞர்களும் ஒப்பும் உண்மை

534. அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு
பயம் கொண்டவனுக்கு எந்த அரணும் மறதி உடையவனுக்கு எந்த உயர்வும் பயனற்றவை

535. முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்
முன்பே யூகித்துக் காத்துக்கொள்ள மறந்தவன் துன்பம் வந்தபின் எண்ணிக் கலங்குவான்

536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்
மறதியற்ற மனம் போல ஒருவனுக்கு வாழ்வில் நன்மை தரும் விஷயம் வேறொன்றுமில்லை

537. அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்
மறதியின்றி ஈடுபாட்டுடன் செயல்படுபவனுக்குச் செய்ய முடியாத செயல் ஏதுமில்லை.

538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்
புகழ்தரும் உயர்கடமைகளை கடைப்பிடிக்க மறந்தால் என்றும் நன்மையில்லை

539. இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
 மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
மமதையில் கடமையை மறந்தோர் அப்படி வீழ்ந்தோரை எண்ணி திருந்தவேண்டும்

540. உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்
இலக்கை எந்நேரமும் ஓயாமல் நினைத்திருப்பவன் அதை ஒருநாள் அடைவது எளிய சாத்தியம்

55. செங்கோன்மை

541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
குற்றம் எதுவென்று ஆராய்ந்து எப்புறமும் சாயாது வழங்குவதே உயர்ந்த நீதி

542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
உயிர்கள்வாழ மழை தேவைப்படுவதுபோல் குடிமக்கள் நல்வாழ்வுக்கு மன்னனின் நேர்மை தேவை

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
மறைநூல்களுக்கும் நல்லறத்துக்கும் ஆதரவாய் இருப்பது நல்லாட்சி செய்யும் அரசே.

544. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
குடிமக்களை அரவணைத்து நேர்மை தவறாமல் நல்லாட்சி செய்பவரை உலகம் பணிந்து வணங்கும்

545. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
நீதி தவறாத அரசு அமைவது நாட்டுக்குப் பருவமழை பெய்து விளைந்த விளைச்சல் போன்றது

546. வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
ஆள்பவர்க்கு வெற்றி தருவது ஆயுதமல்ல. மக்கள் நலன் காக்கும் நேர்மை தவறாத நல்லாட்சியே.

547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
நீதி தவறாது நேர்மையான ஆட்சி செய்யும் அரசனை அந்த நேர்மையே என்றும் காக்கும்

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
எளிமையும், வாய்மை தவறாத நீதியும் இல்லாத அரசு தானே தாழ்வுற்று அழிந்துபோகும்

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
மக்களைக் காத்தலும் தவறு செய்தாரை பாகுபாடின்றித் தண்டித்தலும் அரசின் கடமை

550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
கொடும் குற்றவாளிகளை அரசு தண்டிப்பது களையை நீக்கி பயிரைக் காப்பதைப் போன்றது


56. கொடுங்கோன்மை

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
அறவழி நடக்காது மக்களை வருத்தும் அரசன் கொலைகாரனைவிடக் கொடியவனாவான்

552. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
அதிகாரத்தை வைத்து மக்களிடம் பணம் பறிக்கும் அரசன் வழிப்பறிக் கொள்ளையனுக்கு நிகர்

553. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
மக்கள் நலம் பேணி நல்லாட்சி செய்யாத அரசு ஆளும் நாடு மெல்ல மெல்ல அழிந்துபோகும்

554. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கூடிச்
சூழாது செய்யும் அரசு
முறையற்ற ஆட்சி செய்யும் மன்னன் செல்வத்தையும் மக்களையும் ஒருசேர இழப்பான்

555. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
கொடுமை தாளாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் அரசின் செல்வத்தை வேரோடு அழிக்கும்

556. மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
நேர்மை தவறாத நல்ல நிர்வாகத் திறனற்ற அரசு புகழ் இழந்து அழிந்துபோகும்

557. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
மழையின்மை பூமிக்கும் நேர்மையற்ற அரசு மக்களுக்கும் கொடும் துயரம்

558. இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
நேர்மையற்ற கொடுங்கோல் அரசின்கீழ் வசதியோடு வாழ்வதும் ஏழ்மையைவிடக் கொடியதே

559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
நீதி தவறிய அரசு ஆளும் நாட்டில் பருவமழையும் காலத்தே பெய்யாது வளம் குன்றிக் கெடும்
 
560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
ஆள்பவன் முறையற்ற நாடு பசுக்கள் கறவாமலும் அறிஞர்கள் அறநெறி மறந்தும் கெடும்


57. வெருவந்த செய்யாமை

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
குற்றத்தை ஆராய்ந்து திருந்தும்படி தண்டனை அளிப்பதே நல்ல அரசுக்கு அழகு

562. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
கடுமையாய் கண்டித்து மென்மையாய் தண்டிக்கும் அரசு மக்களை நெறிப்படுத்தி நிலைக்கும்

563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
மக்களை அச்சுறுத்திக் காட்டாட்சி செய்யும் அரசு கவிழ்ந்து காணாது போகும்

564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
கொடுங்கோல் என மக்கள் அஞ்சுமாறு ஆளும் அரசு விரைந்து தானே அழியும்

565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து
யாரும் அணுகமுடியாத கடுமையானவனின் செல்வம் பேயின் கையிலிருப்பதுபோன்றது

566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
கடுஞ்சொல்லும் கருணையற்ற உள்ளமும் கொண்டவன் செல்வம் நிலைக்காது அழியும்

567. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
கடுமொழி, வரம்பற்ற கொடும் தண்டனை வழங்கல் இவை அரசின் வலிமை அறுக்கும் அரம்

568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு
சக அமைச்சர்களை மதித்து கருத்தறியாது சினத்தோடு ஆளும் அரசு தானே கெட்டழியும்

569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
முன்னேற்பாடாய் பாதுகாப்பு செய்யாத அரசு இடர் வரும்போது அஞ்சியே அழியும்

570. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
அறிவற்றோர் துணையோடு நடக்கும் கொடுங்கோல் ஆட்சி இந்த பூமிக்குப் பெரும்பாரம்

58. கண்ணோட்டம்

571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
அன்பும் இரக்கமுமான அழகுள்ள மனிதர்கள் இருப்பதாலேயே உலகம் அழியாதிருக்கிறது

572. கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
அன்பாலும் கருணையாலும் உலகம் இயங்குகிறது. அதில்லாதவர் இருத்தல் பூமிக்குப் பாரம்

573. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண்
பாடலோடு பொறுந்தாத இசைபோலவே கனிவான பார்வை இல்லாத கண்ணும் பயனற்றது

574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்
அன்பும் கருணையும் காட்டாத கண் முகத்தில் வெறுமனே இருப்பதைத் தவிர என்ன பலன்?

575. கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்
கருணையும் அன்பும் வழிவதே கண்ணிற்கழகு. அதில்லாத கண் புண்ணுக்கு நிகரானது
576. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்
கண்ணிருந்தும் அதில் கருணையும் அன்பும் இல்லாதவர் அசைவில்லா மரத்துக்கு நிகரானவர்

577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
அன்பைக் காட்டும் பார்வை உள்ளோரே கண்ணுள்ளவர். அதில்லாதோர் கண்ணற்றவரே

578. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு
கடமை தவறாது அன்பும் கருணையும் கெடாது வாழ்வோருக்கு இந்த உலகமே முழு உடைமையாகும்

579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
தன்னை அழிக்க நினைப்பவரிடமும் கருணை காட்டுதல் உயர்ந்தோரின் பண்பாகும்

580. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தகு
நாகரிகம் வேண்டு பவர்
கருணையும் அன்பும் உடையோர் அன்புக்குரியவர் நஞ்சைத் தரினும் புன்னகைத்து உண்பர்
59. ஒற்றாடல்

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
நல்ல உளவுத்துறையும் தெளிந்த நீதிநூல்களும் ஆட்சியாளருக்கு இரு கண்கள் போன்றவை

582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
உளவுத்துறை மூலம் எல்லோர் நிலையும் எப்போதும் அறிவது நல்லஅரசின் கடமை

583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்
உளவுத்துறை மூலம் உண்மைகள் அறிந்து தயார்நிலையில் இல்லா அரசு நிலைக்காது

584. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று
ஆள்வோர், எதிரி, வேண்டுவோர் வேண்டாதார் பாகுபாடு பாராமை உளவுக்கு கடமை

585. கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
சாதாரணத் தோற்றத்தோடு, யார் மிரட்டினாலும் அஞ்சாது, ரகசியம் காப்பதே ஒற்றனுக்கு அழகு

586. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று
எந்த வேடம் பூண்டும் எந்த துயரையும் தாங்கி வினை முடிப்பவனே நல்ல ஒற்றன்

587. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று
ரகசியமாய்ச் செய்ததை அவர் வாயிலாகவே கேட்டறிந்து உண்மையைக் கண்டறிபவனே சிறந்த உளவாளி

588. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
ஒரு ஒற்றன் தரும் தகவலையும் இன்னொருவர் மூலம் ஆராய்ந்தறிவதே அரசுக்கு அழகு

589. ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்
ஒருவரையொருவர் அறியாத மூன்று உளவாளிகள் சொல்வது ஒன்றுபோலிருந்தால் அது உண்மையாகும்

590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை
உளவாளியை ஊரறியப் பாராட்டுதல் ரகசியத்தைத் தானே வெளிப்படுத்தலாகிவிடும்


60. ஊக்கம் உடைமை

591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
ஊக்கம் உடையவரே உடையவர் அதில்லாது வேறு எல்லாம் பெற்றிருந்தாலும் அவர் ஏதுமில்லாதவரே

592. உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
மனஉறுதிதான் மனிதனுக்கு நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலையற்று நீங்கிவிடும்

593. ஆக்கம் இழந்தோமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
மன உறுதியுடையோர் செல்வத்தை இழக்க நேர்ந்தாலும் இழந்தோமெனக் கலங்கமாட்டார்கள்

594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
சோர்வில்லாத மனோதிடம் உள்ளவனை நன்மையும் செல்வமும் தாமாகவே தேடிப்போய்ச் சேரும்

595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
நீரின் உயரத்துக்கேற்ப அமையும் தாமரையின் காம்புபோல நம் எண்ணத்தளவே உயர்வடைவோம்

596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
எப்போதும் உயர்வையே எண்ணி, கைகூடாவிடினும் தளராது அதை அடைய முயலவேண்டும்

597. சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
அழிவே வரினும் தளராத ஊக்கமுடையார் அம்பு துளைத்தாலும் அயராத யானை போன்றோர்

598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
தர்மம் செய்யும் மனம் இல்லாதவர் தாம் உயரியவர் எனப் பெருமைகொள்ளத் தகுதியற்றவர்

599. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
பருத்த உடலும் கூரிய தந்தமும் உள்ள யானையும் மனஉறுதி மிக்க புலி தாக்கிட அஞ்சும்

600. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
மன உறுதியற்றோர் உருவத்தில் மனிதரை ஒத்திருந்தாலும் மனதால் வெறும் மரம் போன்றவர்கள்


61. மடி இன்மை

601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
குலப்பெருமை என்னும் ஒளிவிளக்கும் சோம்பல் என்ற இருள் படிய அணைந்துவிடும்

602. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
தன் குடும்பத்தை உயர்த்த நினைப்பவர் சோம்பல் கொள்ளச் சோம்பி ஊக்கத்தோடு உழைக்க வேண்டும்

603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு மந்து
அழிவுக்குத் துணையாகும் சோம்பேறித்தனம் கொண்டவன் குடி அவனுக்குமுன்பே அழியும்

604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
முயற்சியற்ற சோம்பேறிகளின் குற்றம் பெருகி அவர்தம் குலப்பெருமை அழியும்

605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
தாமதம், மறதி, சோம்பல் அளவுகடந்த தூக்கம் இவை அழிவுக்கு அழைத்துச்செல்லும் படகுகள்

606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
மண்ணாளும் அரசன் உறவே கிடைத்தாலும் சோம்பேறி பெருமையடைவது மிக அரிது

607. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
முயற்சி செய்ய மனமற்ற சோம்பேறிகள் பிறர் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

608. மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்
நற்குடிப் பிறந்தவனாயினும் சோம்பல் கொண்டால் அவன் பகைவனுக்கு அடிமையாவான்

609. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
சோம்பலை விட்டு மீண்டவன் குடும்பம் சிறுமைகள் அழிந்து தானே உயரும்

610. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
சோம்பலில்லாத மன்னன் திருமால் அளந்த மூவுலகையும் தன் காலடியில் வைத்து ஆள்வான்


62. ஆள்வினை உடைமை

611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
நம்மால் செய்யமுடியாது என்று மலைக்கவைத்த செயலையும் சாதிக்க விடாமுயற்சி உதவும்

612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு
தயங்கி, பயந்து, முயற்சியை பாதியில் கைவிடுபவரை உலகம் கைவிட்டுவிடும்

613. தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
பிறருக்கு உதவும் பெருந்தன்மை தளராத முயற்சி உடையவரிடமே மிகுந்திருக்கும்

614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
முயற்சியற்றவன் பிறருக்கு உதவ முயல்வது கோழை வாளைச் சுழற்றுவதுபோல் பயனற்றது

615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
தன்னலமின்றி வினைமுடிப்பவன் உற்றார் அனைவரையும் தாங்கும் தூண்போன்றவன்

616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
முயற்சி செல்வத்தையும் முயலாமை வறுமையையும் மனிதனுக்குக் கொணர்ந்து சேர்க்கும்

617. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்
சோம்பேறியிடம் மூதேவியும், சோம்பலிலா உழைப்பாளியிடம் சீதேவியும் குடியிருப்பார்கள்

618. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி
குறையோடிருப்பது பிழையன்று கற்றுணர்ந்து அதற்கேற்றபடி செயல்படாதிருப்பதே பிழை

619. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
கடவுளை வேண்டிப் பெறமுடியாத வெற்றியையும் உழைப்பு தவறாமல் பெற்றுத் தரும்

620. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
மனம் தளறாத முயற்சியுடையவன் விதி என்பதை புறமுதுகிட்டு ஓடவைக்கும் வலிமையுடயவன்63. இடுக்கண் அழியாமை

621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
துன்பத்தை வெல்லக்கூடிய ஆற்றல் தருவது அதை மகிழ்வோடு எதிர்கொள்ளும் மன உறுதி மட்டுமே

622. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
வெள்ளமாய் வரும் துன்பமும் அது தீர்க்கும் வழி ஆராய்ந்து அறிந்தவுடன் ஓடிவிடும்

623. இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
துன்பம் வரும்போது துவளாது போராடுபவர் அத் துன்பத்தை தோல்வித் துயரடையச் செய்வர்

624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
தடங்கலிலும் வண்டியை இழுக்கும் எருதுபோல் உழைப்பவனை துன்பம் தீண்டவே அஞ்சும்

625. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
தொடர்ந்து எத்தனை துன்பம் வந்தாலும் கலங்காதவனிடம் துன்பம் தோற்று ஓடிப்போகும்

626. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமன்
றோம்புதல் தேற்றா தவர்
செல்வம் வருகையில் தனக்கெனாது தானம் செய்வோர் வறுமை வரினும் அதற்கென வாடுவதில்லை

627. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
உடலுக்குத் துன்பம் வருவது இயல்பென உணர்ந்தோர் அதற்காக வருந்துவதில்லை

628. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்
இன்பத்தைத் தேடி அலையாமல் துன்பத்தை இயல்பென்று ஏற்பவன் என்றும் வருந்துவதே இல்லை

629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்
இன்பம் வருகையில் துள்ளிக்குதிக்காதவன் துன்பம் வருகையில் துயரம் கொள்வதில்லை

630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
துன்பத்தையும் இன்பமெனத் தாங்கிக்கொள்பவர் பகைவரும் போற்றும் பெருமையடைவர்

64. அமைச்சு

631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தரசு
செயலுக்கான கருவி, காலம், முறை, செயல் அனைத்தும் அறிந்து செய்பவனே நல் அரசன்

632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு
மனஉறுதி குடிகளைக் காத்தல் நீதிநூலறிவு அறவோர் துணை முயற்சி உள்ளோனே அரசன்

633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
பகைவரைப்பிரித்து உள்ளோரைக் காத்து பிரிந்தோரை சேர்த்தல் அமைச்சருக்கழகு

634. தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு
செயலைத் தேர்ந்து, ஆராய்ந்து, முடிவை உறுதிபடச் சொல்லுதல் அமைச்சருக்கு அழகு

635. அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை
அறநெறி அறிந்து, சொல்லும் செயலும் ஆற்றலுடையோனே அறிவுறை கூறும் துணை

636. மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை
நுண்ணறிவும் மதிநுட்பமும் உள்ள அமைச்சரை எத்தகைய சூழ்ச்சியாலும் வெல்லவே முடியாது

637. செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்
எத்தனை நூலறிவிருந்தாலும் இருக்கும் இடத்தின் இயல்புக்கு இசைவாய் செயல்படவேண்டும்

638. அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
சுய அறிவோ சொல் புத்தியோ இல்லாஅரசனுக்கும் அஞ்சாது கருத்து சொல்பவன் நல்லமைச்சன்

639. பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
தவறான ஆலோசனை தரும் அமைச்சரைவிட எழுபதுகோடி பகைவர் அருகிலிருப்பதே மேலானது

640. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்
செயல்திறனற்ற அமைச்சர் நன்கு திட்டமிட்ட செயலையும் அரைகுறையாகவே செயல்படுத்துவர்65. சொல்வன்மை

641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
சொல்வன்மையைவிட ஒருவன் தன் வாழ்வில் பெறக்கூடிய மிக உயரிய செல்வம் வேறு ஏதுமில்லை

642. ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
நன்மையும் தீமையும் சொற்களால் விளைவதால் தீயசொல் சொல்லாமல் காத்தல் நன்று

643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
கேட்டவர் மயங்கவும் கேளாதவர் தேடிவந்து கேட்பதுமாய் அமைவதே நல்ல சொல்வன்மை

644. திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்
சொல்லின் பொருளறிந்து பேசுவதைவிடச் சிறந்த அறமும் செல்வமும் வேறு ஏதுமில்லை

645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
சொல்லும் சொல்லை வெல்லும் சொல் இல்லாதவாறு அறிந்து சொல்வதே நாவன்மை

646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்
பிறர் கேட்க விழையும் பேச்சும் பிறர் சொற்பிழை கருதாத புரிதலும் நன்று

647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சா நெஞ்சுடையோனை யாரும் வெல்வதென்பது மிக அரிது


648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
வகைப்படுத்தி சுவையாய்ச் சொல்லும் திறனுடையோனை உலகம் பின் தொடரும்

649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
சுருங்கச் சொல்லி விளங்கவைக்க அறியாதோரே ஓயாது பல சொற்களைப் பேசியவாறே இருப்பர்
650. இணரூழ்ந்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்
கற்றதை பிறர் உணரும்படி உரைக்க இயலாதோர் கொத்தாக மலர்ந்தும் மணம்வீசாத மலர் போன்றோர்


66. வினைத் தூய்மை

651. துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
நல்ல துணை அமைவது வாழ்வில் இன்பம் தரும் நல்ல செயல்களோ விரும்பிய எல்லாம் தரும்

652. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
புகழும் நன்மையும் தராத செயல்களை எந்தக் காலத்தும் செய்யாது விட்டொழித்துவிடல் வேண்டும்

653. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மலர்
மேன்மேலும் உயர நினைப்போர் தம் புகழைக் கெடுக்கும் செயலை வாழ்நாளில் செய்தல் கூடாது

654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
தெளிந்த அறிவும் உறுதியும் உள்ளோர் துன்பமே வரினும் தப்புவதற்கு முறையற்றதைச் செய்யார்

655. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
நினைத்து வருந்தும்படியான செயலை செய்யாமை, செய்தால் மீண்டும் செய்யாமை நன்று

656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பெற்றதாயை வாட்டும் பசி தணிக்கக்கூட சான்றோர் பழிக்கும் செயலைச் செய்தல் தவறு

657. பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
பழிக்கு அஞ்சாது இழிந்தன செய்து வாழும் செல்வ வாழ்வைவிட நேர்மையாளர் வறுமை சிறந்தது


658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
தகாத செயலை ஆதாயம் கருதிச் செய்வோர் அச்செயல் நிறைவேறிடினும் துயரமே அடைவர்

659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நட்பா லவை
பிறர் அழப் பறித்தவை அழவிட்டு மறையும் நேர்வழி சேர்த்தவை இழந்தாலும் மீளும்

660. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலந்துணீர் பெய்திரீஇ யற்று

தீயவழியில் பொருள் சேர்ப்பது பச்சைமண் குடத்தில் நீரை சேமிப்பதுபோல்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக