செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பொருட்பால் முதல் பாகம்


39. இறைமாட்சி

381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
நல்ல படை, மக்கள்,செல்வம்,அமைச்சர், நட்பு,பாதுகாப்பு ஆறும் அமைந்த அரசன் ஆண் சிங்கம்!

382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
அஞ்சாமை, கொடை, அறிவு, ஊக்கம்- நான்கும் குறைவின்றி இருப்பது அரசனின் பண்பு.

383. தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
ஆட்சியாளருக்கு, காலம் தவறாமை, கல்வி, துணிச்சல் என மூன்று பண்புகளும் தேவை.

384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
அறநெறி தவறாது, தவறுகள் நீக்கி, வீரத்தோடு மானமும் பெரிதெனக் கொண்டவனே நல்ல அரசன்.

385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
நிதிஆதாரம் வகுத்து, வந்ததைக் காத்து, மக்கள் மேன்மைக்கு செலவிடல் அரசுக்கு அழகு.

386. காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேன்
மீக்கூறும் மன்னன் நிலம்
காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் கூறாமையும் கொண்ட அரசனின்ஆட்சி விரிவடையும்.

387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
இன்சொல்லுடன் பொருள் தந்து குடிகளைக் காக்கும் அரசுக்கு உலகே வசமாகும்

388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
நீதி வழுவாது குடிகளைக்காக்கும் அரசன் மக்களால் இறையெனப் போற்றப்படுவான்.


389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
குறைகள் சொல்பவர் நியாயமும் மதித்து நடக்கும் அரசனை, உலகமே பணியும்.

390. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
கொடை, அருள், நெறியாட்சி, குடிகளைக் காத்தல் உள்ள அரசு ஒளியுற்றுவிளங்கும்


40. கல்வி

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்பதைப் பிழையின்றிக்கற்று, அந்த நெறிப்படி நல்வாழ்வு வாழவேண்டும்.

392. எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
எண்ணும் எழுத்துமான கல்வியறிவு வாழும் மனிதருக்கு இரு கண்களைப் போன்றது.

393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கற்றவரே கண்ணுடையார். கல்லாதோருக்கு அறிவு நோக்கு இல்லா இருகண்களும் புண்.

394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
மகிழ்வாய்ப் பழகி, பிரிகையில் அதை எண்ணித் துயருறும்படி நடத்தல் அறிஞர்க்கு அழகு.

395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
செல்வர்முன் ஏழைபோல், ஆசானைப் பணிந்து கற்பவர் உயர்ந்தோர் மற்றோர் இழிந்தோர்

396. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணலில் தோண்டிய அளவு நீர் ஊறுவதுபோல் கல்வி கற்கும் அளவுக்கு அறிவு பெருகும்.

397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
எங்கு சென்றாலும் சிறக்கவைக்கும் கல்வியை சாகும்வரை கல்லாதவரை என்ன சொல்ல?

398.  ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி, அவன் ஏழு பிறவிக்கும் உதவத் துணையாய் வரும்.

399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
தான் இன்புற்ற கல்வி உலகை இன்புறுத்தக் கண்டு அறிஞர்,மேலும் கல்வியை விரும்புவர்.

400. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
கல்வியைப்போல் அழிவற்ற செல்வம் உலகில் வேறு எதுவுமில்லை.


41. கல்லாமை

401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
நல்ல நூலறிவின்றிக் கற்றவர்சபையில் பேசுவது, கட்டம் வரையாது தாயம் ஆடுதல்போல.

402. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
கல்லாதவர் உரையை விரும்புவது, மார்பில்லாப் பெண் மேல் ஆசைப்படுவதுபோல.

403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்
கற்றவர்முன் வாய்மூடி அமைதியாயிருந்தாலே கல்லாதவரும் நல்லவரென மதிக்கப்படுவர்.

404. கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்
கல்லாதவன் அறிவாளியாய் இருந்தாலும் அவனைக் கல்வியில் சிறந்தவனாய் ஏற்கமாட்டார்கள்


405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
கல்லாதவன் போடும் தற்புகழ்ச்சி வேடமெல்லாம் கற்றவர்முன் பேசும்போது கலைந்துபோகும்.

406. உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்
கல்லாதவர்கள் ஏதும் விளையாத களர்நிலம் போல, உயிரற்ற நடைப்பிணம் போன்றவர்கள்.

407. நுண்மான் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண்  புனைபாவை யற்று
நுட்பமான நூலறிவற்றவன் அழகும் வளர்ச்சியும் மண்ணால் செய்த பொம்மை போன்றதேயாகும்.

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
மூடர்களிடம் சேரும் செல்வம், நல்லவரை வாட்டி வதைக்கும் வறுமையினும் மிகக் கொடியது.

409. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு
கற்பதறால் வரும் உயர்வு, பிறப்பாலான உயர்வு தாழ்வை அழித்துவிடும்.

410. விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
நூலறிவு பெற்றவருக்கும், பெறாதவருக்குமான வேறுபாடு, மனிதனுக்கும் விலங்குக்குமானதுபோல.42. கேள்வி

411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
கேள்வியறிவு என்ற செல்வமே எல்லாச் செல்வங்களையும் விடச் சிறந்ததாகும்

412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
செவிக்கு உணவான நல்ல விஷயங்கள் கிடைக்காதபோது வயிற்றுக்கும் சிறிது உணவிடப்படும்

413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
செவியுணவான கேள்விச்செல்வம் நிரம்பியவர் அவியுண்டு வாழும் தேவருக்கு சமம்.

414. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை
கல்லாவிடினும் கற்றவரிடம் கேட்டறிவது நடை தளர்ந்தவனுக்கு ஊன்றுகோல் போல் உதவும்.

415. இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
ஒழுக்கம் மிக்கவர் அறிவுரை,வழுக்கும் நிலத்தில் ஊன்றுகோல்போல் நாம் வாழ உதவும்

416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ நம் வாழ்வில் அவ்வளவு தூரம் மேன்மைகிடைக்கும்

417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
கூர்ந்த மதியுடையோர், பிழையாகப் புரிந்தவற்றையும் அறிவின்றிப் பேசார்.

418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
நல்லவற்றைக் கேட்காத செவி மற்றவை கேட்கும் தன்மையிருந்தும் கேளாத செவிட்டுக் காதே.

419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது
தெளிந்த கேள்வியறிவு அற்றவர் பணிவும் பண்பும் உடையவராவது கடினம்.

420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்
செவி உண்ணும் கேள்விச்சுவை அறியாது, வாயின் சுவைக்கு வாழ்வது சாவதற்கு சமம்43. அறிவுடைமை

421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
அறிவு நமக்கு அழிவு வராது பகைமையிடமிருந்து காக்கும் அரண் போன்றதாகும்.

422. சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
மனம் போகும் போக்கில் அதைச் செல்லவிடாது தீமை நீக்கி நல்வழியில் செலுத்துவது அறிவு

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை.

424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
சொல்வதை எளிதாய்ப் புரியச் சொல்லி, கேட்பதை நுட்பமாய்ப் புரிவது அறிவு

425. உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
உலகில் உயர்ந்தோர் நட்பு ஆரம்பத்தில் மகிழ்வும் பின் வருத்தமும் தராது சீராக இருக்கும்

426. எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
உலகம் நடக்கும் உயரிய வழி பிறழாமல் அவ்வழி வாழ்வதே நல்ல அறிவுடைமையாகும்.

427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அறிவுடையோர் ஒவ்வொன்றின் விளைவுகளையும் ஆராய்ந்து செயல்படுவர். அறிவற்றோர் அப்படி அல்ல.

428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
அஞ்சத் தக்கதுக்கு அஞ்சாதிருப்பது மடமை. அதற்கு அஞ்சி, தவிர்த்து வாழ்பவன் அறிவுடையோன்

429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறமுடையவருக்கு நடுங்கவைக்கும் துன்பம் வராது.

430. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
எல்லாம் பெற்ற அறிவில்லாதவனைவிட ஏதுமில்லாத அறிவுடையவர் பெருமைக்கு உரியவர்.

44. குற்றங்கடிதல்

431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
அகங்காரம், கோபம், இழிநடத்தை இல்லாதவர்களின் பெருமை உண்மையில் உயர்வானது

432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
கொடையின்மை, பெரியோரை வணங்காத் தன்மை,தீயவற்றில் மகிழ்வு -இவை தலைவனுக்குக் கூடாதவை

433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
பழிக்கு அஞ்சுபவர் தினையளவு குற்றமும் பனையளவாய் எண்ணித் தவிர்ப்பர்

434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை
குற்றமே அரசை அழிக்கும் பகையாகும். எனவே மனதாலும் குற்றம் புரியாமை அரசருக்கு அழகு.

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
தவறு நேருமுன்பே காக்கத்தெரியாத அரசு, நெருப்புமுன் வைக்கோல்போல் அழியும்

436. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
தன் குறை நீக்கிப்பின் பிறர் குறை சொல்லும் அரசுக்கு என்ன குறைவரும்?

437. செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
நல்லவை செய்யாமல் சேமிக்கும் கருமியின் செல்வம் பயனின்றிப் பாழ்பட்டுப் போகும்

438. பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
பொருள்சேர்ப்பதே வாழ்க்கை என வாழும் கஞ்சத்தனமே எல்லாவற்றினும் பெருங்குற்றம்

439. வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை 
எவ்வளவு உயர்ந்தாலும் அகங்காரம், தற்பெருமை, நன்மை தராத செயல் அரசனுக்கு உதவாது.

440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
தன் விருப்பத்தைப் பகைவர் அறியுமுன் நிறைவேற்றுபவனிடம் பகைவர் சூழ்ச்சி பலிக்காது


45. பெரியாரைத் துணைக்கோடல்

441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
அறத்தில் சிறந்த மூத்த அறிஞர்கள் நட்பைத் தேடி அடைதல் அரசர்க்கு அழகு.

442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
வந்த துயரம் நீக்கி, மேலும் துயர் வராது காக்கும் தன்மையுள்ளோர் துணை அரண்.

443. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
பெரியவர்களைப் போற்றி அவர்களைத் தம்மவராக்கிக்கொள்வது எல்லாவற்றினும் பெரிய பேறு

444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
தம்மைவிட அறிஞர்களை உறவாக்கி, அவர்கள் காட்டும் வழி நடப்பது பெரிய வலிமையாகும்.

445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
கண்போல் காத்து எதையும் கண்டறிந்து கூறும் அறிஞர் நட்பு அரசனுக்கு நன்மை தரும்

446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
தகுதியான அறிவுடையோரின் வழி நடப்பவனுக்குப் பகைவர் தீங்கு செய்ய முடியாது

447. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரோ
கெடுக்குந் தகைமை யவர்
கடிந்து அறிவுரை கூறும் மேலோர் துணை நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்குமில்லை

448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிவுரை சொல்வார் இல்லாத அரசு தானாகவே கெட்டழிந்து போகும்

449. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
முதலீடில்லாமல் லாபம் இல்லாததுபோல் பெரியோர்கள் துணையில்லாதவர்க்குப் பலனில்லை

450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
நல்லவர் தொடர்பைக் கைவிடல் பலர் பகையைத் தனித்துத் தாங்குவதற்கு சமம்.


46. சிற்றினம் சேராமை

451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
தீய குணத்தாரோடு சேர பெரியோர் அஞ்சுவர். சிறியோரோ, அக் கீழோரோடு உறவாடுவர்

452. நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
சேரும் நிலத்து இயல்படையும் நீரென அறிவும் சேர்வோர் தன்மை அடையும்

453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்
மனிதர்க்கு அறிவு மனத்தாலும், யாரெனும் அடையாளம் சேரும் இனத்தாலும் வரும்

454. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
ஒருவன் அறிவு அவன் மனத்தால் வருவதாய்த் தோன்றினாலும் அவன் சேரும் இனத்தால் வருவதாகும்

455. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
சேரும் இனம் தூயதாக இருந்தால் மட்டுமே ஒருவனது எண்ணமும் செயலும் தூய்மையாகும்.

456. மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
மனத்தூய்மை உள்ளோருக்கு புகழும் நல்லினம் சேர்வோர்க்கு நற்செயலும் பலனாகும்

457. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்
மனநலம் நற்செல்வம். நற்சேர்க்கையோ மனிதனுக்கு எல்லாப் புகழையும் கொண்டுவரும்.

458. மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
மனஉறுதி வாய்ந்தவராயினும் சான்றோரின் வலிமை அவர் சேரும் இனத்தால் அமையும்.

459. மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
மனத்தூய்மை மறுமையிலும் இன்பம் தரும். சேரும் இனத்தால் அது இன்னும் இனிமை பெறும்

460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
சேர்க்கையில் நல்ல இனம்போல துணையும் தீய இனம்போல் துன்பமும் வேறில்லை

47. தெரிந்து செயல் வகை

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
செயல் செய்யுமுன் அது தரும் நஷ்டம்,பின்விளைவை ஆராய்ந்து லாபம் கணக்கிடவேண்டும்

462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்
தேர்ந்த அறிஞரோடு ஒருசெயலை ஆய்ந்து செய்பவர்க்கு முடியாததே இல்லை

463. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்
லாபம் வருமென்ற எண்ணத்தில் இருக்கும் முதலை பணயம் வைத்து இழக்கமாட்டார் அறிவுடையோர்

464. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்
இழிவுக்கு அஞ்சுபவர்கள் பின்விளைவை ஆராயாமல் ஒரு செயலைத் தொடங்கமாட்டார்கள்

465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
சரிவரத் திட்டமிடாது மோதுதல் பகைவரை வலிமையோடு நிலைபெறச் செய்துவிடும்.

466. செய்த்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யத்தகாதன செய்வதால் மட்டுமன்றி செய்யத் தக்கவை செய்யாததாலும் அழிவு வரும்

467. எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு
சிந்தித்தபிறகே செயலைத் தொடங்கவேண்டும். தொடங்கியபின் சிந்திக்கலாம் என்பது பிழை.

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
முறையான முயற்சியில்லாத செயல் எத்தனைபேர் துணையிருந்தாலும் முடியாது கெடும்

469. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
ஒருவரின் பண்பு தெரியாமல் அவருக்கு உதவியாய் நன்மை செய்வதும் தவறாகவே முடியும்.

470. எள்ளாம எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு
பிறர் இகழாத, தகுதிக்குப் பொருந்தும் செயல்களைச் செய்பவரையே பெரியோர் புகழ்வர்

48. வலியறிதல்

471. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
செயல், தன், பகைவர், இருபுறமும் துணை வலிமை அறிந்தே செயல்படவேண்டும்.

472. ஒல்வ தறிவார் தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
ஒன்றைச் செய்யுமுன் அதை முழுமையாய் ஆராய்ந்து செய்தால் முடியாததே இல்லை.

473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
தம் வலிமை அறியாது வேகமாய் செயலைத் தொடங்கி, முடிக்கமுடியாது கெட்டவர் பலர்

474. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
பிறரை மதியாமல், தன் பலமும் அறியாமல் செருக்குடன் வாழ்பவன் விரைந்து அழிவான்

475. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
மயிலிறகே ஆனாலும் அளவுக்கு மீறி ஏற்றினால் எடை மீறி வண்டியின் அச்சு முறியும்

476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
தன்னை மிக உயர்வாய் நினைப்பவர் மர நுனியைத் தாண்டி ஏறுபவர் கதியை அடைவர்

477. ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
தம் வரவுக்கேற்ப பிறருக்கு அளவோடு வழங்கி வாழ்வதே தம் பொருளைக் காத்து சீராக வாழும் வழி.

478. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை
வரவு சிறிதாயினும் செலவு அதனைவிட எப்போதும் குறைவாக இருந்தால் வாழ்வில் தீமை ஏதுமில்லை.

479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
தன் பொருள் அளவுக்குள் வாழாதவன் வாழ்க்கை இருப்பதுபோல் இருந்து மறைந்துபோகும்

480.  உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
தன்னிடமுள்ள பொருளின் அளவறியாமல் பிறருக்கு அள்ளி வழங்குபவன் வளம் விரைந்து கெடும்.

49. காலமறிதல்

481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
பலமான கோட்டானை காகம் பகலில் வெல்வதுபோல் காலத்தே பகை வெல்பவன் அரசன்

482. பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
காலம் அறிந்து செயல்படுவது வெற்றியை எப்போதும் நம்மோடு கட்டிவைக்கும் கயிறாகும்.

483.  அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
செயலை முடிக்கும் கருவியும் காலமும் அறிந்து செய்தால் முடியாத செயலென்பதே உலகில் இல்லை.

484. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
சரியான காலத்தையும் இடத்தையும் அறிந்து செய்தால் உலகம் முழுதையும்கூட அடைய முடியும்.

485. காலங் கருதி இருப்பவர் கலங்காது
ஞாலங் கருது பவர்
அதற்கான காலம் கனியக் காத்திருந்து காலத்தே முயல்பவர்களால் உலகத்தையும் வெல்ல முடியும்.

486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
காலம் வரும்வரை வலியவர் கொள்ளும் அமைதி முட்டிவீழ்த்த ஆடு பின்வாங்குவதுபோல்.

487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
தீயவரை அழிக்க உள்ளே சினம் மறைத்து காலம் வரக் காத்திருப்பர் அறிவுடையோர்.

488. செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தல
பகைவருக்கு அழிவுகாலம் வரும்வரை பொறுமையோடிருந்து அவர்களைத் தடையின்றி அழிப்பது அறிவு

489. எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
அரிய காலம் கைகூடும்போது அப்போதே செயற்கரியவற்றை செய்து முடித்தல் வேண்டும்.

490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
கொக்குபோல் காலம் வரக் காத்திருந்து, வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்

50. இடனறிதல்

491.  தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
சரியானஇடம் அறியாமல் தாக்கத் தொடங்குவதும் பகைவரை எளிதாகஎண்ணி இகழ்வதும் பிழை

492. முறண்சேர்ந்த மொய்ம்பி ளவர்க்கும் அறண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்
வெல்ல வலிமை இருந்தாலும் பாதுகாப்பான இடத்தில் இருப்பது வெற்றி தரும்

493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
வலிமையற்றவனும் தக்க இடத்திருந்து தாக்கினால் வலிய பகையையும் வெல்லமுடியும்.

494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
தக்கஇடத்திலிருந்து தாக்கினால், பகைவர்கள் வெல்வதை நினைக்கவும் மாட்டார்கள்

495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
நீருக்குள் எதையும் வெல்லும் முதலை தரையில் தன் பலமிழந்து எளிதாக தோற்கும்

496. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
தேர் கடலிலும் கப்பல் தரையிலும் ஓடாதென்பதுபோல் இடமறிந்து செயல்படுவது அறிவு.

497. அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்
செய்யவேண்டியதை நன்குஅறிந்து இடமறிந்து செய்பவர் வெல்லத் துணிவுமட்டும் போதும்

498. சிறுபடையான் செல்லிடஞ் சேறின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
சிறிய படையும் இடம் பார்த்துத் தாக்கினால் பெரும்படையையும் வெல்ல முடியும்

499. சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லறிது
காவல் அறணும் படைபலமும் இல்லாத எதிரியையும் அவன் இடம் போய் வீழ்த்தல் கடினம்

500. காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்தக் களிறு
வேல் ஏந்திய வீரரைக் கொல்லவல்ல யானை சேற்றில் சிக்கினால் அதை நரிகளும் கொல்லும்!51. தெரிந்து தெளிதல்

501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
அறம் தவறாது பொருள் இன்ப ஆசை,உயிர்பயம் இல்லாதவனே எந்த வேலைக்கும் தக்கவன்

502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
நற்குடிப் பிறந்து பழிக்கு அஞ்சிக் குற்றம் செய்யாதவனே நல்ல தலைவன்

503. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
அரிய நூல் பல கற்ற குற்றமற்றவரையும் கூர்ந்து நோக்க, அவர் குறையும் தெரியவரும்.

504. குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
ஒருவரின் குணம், குற்றம் இரண்டையும் அறிந்து அதில் அதிகமானதைக்கொண்டு அளவிடவேண்டும்.

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்
ஒருவர் செய்யும் செயல்களே அவர்கள் தரத்தை மற்றோர் அறியவைக்கும் உரைகல்.

506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
சுற்றமில்லாதவரை பதவியில் வைத்தால் அவர் யாரைப்பற்றிய நாணமுமின்றி நெறிகெட்டு நடப்பர்

507. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்
அறிவில்லாதவரை அன்பினால் பதவியில் வைத்தால் அது முட்டாள்தனமான விளைவையே தரும்

508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
ஒருவனைப்பற்றி ஆராயாமல் துணையாக்கிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கும் தீமையைத் தரும்.

509. தேறற்க யாரையுந் தேறாது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
ஒருவரைத் தெளிவாகஅறியாமல் பதவி அளிக்கவேண்டாம் தெளிந்தபின் சந்தேகம் கொள்ளவேண்டாம்

510. தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
ஆராயாது ஒருவரை ஏற்பதும் ஆய்ந்து ஏற்றோர்மேல் ஐயப்படுவதும் தீராத துன்பம் தரும்


52. தெரிந்து வினையாடல்

511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
நன்மை தீமை இரண்டையும் ஆய்ந்து அதில் நன்மை மட்டும் செய்பவனே தலைவனாகத் தக்கவன்.

512. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை
வரவு வரும் வழிகளை வகுத்து இடையூறு அகற்றி நாட்டை வளம்பெறச் செய்பவனே சிறந்த தலைவன்

513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
அன்பு அறிவு செயல்திறனோடு பேராசையற்றவனே நல்ல தலைவனாகத் தேர்வாகத்தக்கவன்

514. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படுகையில் மாறுபடும் தலைவர்கள் பலர் உளர்

515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
ஆய்ந்தறிந்து வேலை செய்வோனையேபொறுப்பான பணியில் அமர்த்தவேண்டும்.

516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்
செயலின் தன்மை, செய்பவன் தரம் இவற்றை ஆய்ந்து அதை காலத்தே செய்து முடிக்க வேண்டும்.

517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்
ஒருசெயலை எவ்வாறு செய்துமுடிப்பார் என்பதை அறிந்தே அவரிடம் அதை ஒப்படைக்கவேண்டும்

518. வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
செயலைச் செய்யும் திறன் உள்ளவனா என்று அறிந்தே ஒருவனிடம் அச்செயலை ஒப்படைக்கவேண்டும்
519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
திறமிக்க ஊழியன்பற்றிய பொய் வதந்தியை நம்பும் தலைவனைவிட்டு செல்வம் நீங்கும்

520. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
உழைப்போர் நலமே உலகின் செழிப்பு எனவே அவர் நிலை தாழாது தினமும் காப்பது ஆள்பவர் கடமை.


53. சுற்றந் தழால்

521. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
ஒருவன் எல்லாம் இழந்து நிற்கையிலும் பழையபடி நல்லுறவு பேணுவது சிறந்த சுற்றமே ஆகும்

522. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
எப்போதும் அன்பு குறையாத சுற்றம் அமைந்தவனுக்கு வளர்ச்சியும் இன்பமும் பெருகும்.

523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
உறவோடு மனமாறக் கலவாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்து நீர்போல் நிலையற்றது

524. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
தன்சுற்றம் அன்போடு சூழ வாழ்வதே ஒருவன் பெற்ற செல்வத்தால் கிட்டும் பலன்

525. கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றும் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்
இன்சொல்லும் கொடைத் தன்மையும் உள்ளவன் என்றும் சுற்றம் சூழ வாழ்வான்

526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் இருப்பவனே உலகில் நல்ல உறவு சூழ வாழ்பவன்

527. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
தான் பெற்றதை மறைக்காது பகிர்ந்துண்ணும் காகம் போல் குணமுடையவருக்கே செல்வம் சேரும்

528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
எல்லோரையும் ஒன்றெனக்கருதாமல் திறமைக்கேற்ப மதிக்கும் அரசனை உலகம் போற்றும்

529. தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்
ஏதும் காரணம் கூறி நம்மை நீங்கிய உறவினர் அது பொய்யென உணர்ந்தால் திரும்ப வருவர்

530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்
காரணமின்றிப் பிரிந்தவர் திரும்பவந்தால் அவரை ஆய்ந்து ஏற்கவேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக