Friday, 28 September 2018

வரதன் - (அந்நியன்) மலையாள சினிமாவின் அடுத்த படி!


வரதன்!


கடைசி அரை மணி நேரத்தைத் தவிர மீதி எல்லாமே இதுவரை மலையாள சினிமா கூட தொடாத கவிதை!

வளைகுடா நாட்டில் ஒரு இனிய தம்பதிகள் என்று தொடங்கும் கதை கேரளாவுக்கு வரும்வரை வழக்கமான ஃபகத் ஃபாசில் படத்து நிதானம்!

அதன்பிறகு முழுக்க ஐஸ்வர்யா லட்சுமிக்கான படம்!

லிட்டில் ஸ்வயம்ப் (கூடே) ஒளிப்பதிவு மொத்தக்கதையையும் நம்மைஉணரவைக்கிறது”!

ஐஸ்வர்யா லட்சுமியை ஓயாது தொடரும் வேட்கையும் காமமும் தாபமும் பொறாமையும் குடியிருக்கும் கண்கள் நம் மீதே ஊறுவது போல் அருவெறுப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் உணரவைக்கிறது ஒளிப்பதிவு!

இத்தனைக்கும், காட்சிப்படுத்த ஆயிரம் காரணங்கள் இருந்தும் ஒரு காட்சியும் நாகரீக எல்லை மீறாமல் அந்த ஆணிய அத்துமீறல்களை நமக்கே நேர்வது போல் நம் உணர்வுகளில் உட்கார்ந்துகொள்கிறது காமிரா!

ஒரு சுய சார்போடு நகரும் பெண் எதிர்கொள்ளும் கலாச்சார காவலர்கள், பழைய ஒருதலை காதலர்கள், எப்போதும் காமம் பேசும் ஆண்களின் கண்கள் என ஒரு பெண்ணின் தவிப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தி, ஒரு தேர்ந்த பெங்காலி இயக்குனர் தரத்தில் கதையை நகர்த்துகிறார் இயக்குனர் அமல்!


கடைசி அரைமணி நேரம் ஃபகத் ஃபாசிலுக்கு என்று ஒதுக்கப்பட்டதுதான் இந்தப் படத்தை தரையிறக்குகிறது!

அதுவரை நிச்சயம் இதுவரை தமிழ், மலையாள சினிமா தொடாத உயரத்தில் மிதக்கும் படம் கமர்சியல் காரணங்களுக்காக தரையிறங்குகிறது!

கடைசி அரைமணி அப்படி ஓர் பரபர பட்டாசு!

சீட்டின் நுனியில் ரசிகனை உட்காரவைப்பதில் வெற்றிபெறுகிறார் இயக்குனர்!

அநேகமாக மொத்த திரையரங்கமும் எழுந்துநின்று கைதட்டுகிறது!

பெண்ணின் மீதான அத்துமீறலை ஆண் மட்டுமே கையாள முடியும் என்று காலம் காலமாக சிருஷ்டிக்கப்பட்ட அதே முன்முடிவில் ஏறி ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது கதை!

ஆனால்,

முதல் ஒருமணிநேர காட்சிப்படுத்தலின்பின், பெண்ணியம் சார்ந்த பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்வினை கணவனை சார்ந்தே என்ற முடிவு மிகப்பெரிய ஏமாற்றம்!

அத்தனை அழகியலையும், உணர்வுப்பூர்வமான காட்சிப்படுத்தலையும் வீணடிக்கிறது கமர்சியல் க்ளைமேக்ஸ்!

அந்த காம்ப்ரமைஸ் கமர்சியல் காரணங்களுக்கு எனில், தயாரிப்பாளர் நஸ்ரியா இன்னும் கொஞ்சம் துணிந்திருக்கலாம்!

ஒருவேளை தோல்விப்படமாய் போயிருந்தாலும் மலையாள திரையுலகின் திருப்புமுனை படங்களில் ஒன்றாகியிருக்கும் வரதன்!

முதல் பாதி ஏற்படுத்தும் அதீத எதிர்பார்ப்பை உணராதவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த ஃபகத் ஃபாசில் படம்!

உணர்ந்தவர்களுக்கு அந்த அனுபவமே போதுமானது - இயக்குனர் மீது இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த!

பி கு:
இத்தனை குறை சொன்னாலும், தமிழ் திரை கொண்டாடிய எல்லாப் படங்களையும் விட சிறந்த படம் இது!

மலையாள திரையுலகம் வெகுவிரைவில் இந்திய சினிமாவின் உயர் அடையாளம் ஆகும் என்பதற்கு இந்தப்படத்தின் முதல் பாதி ஒரு அற்புதமான ட்ரைலர்!
வாழ்த்துக்கள் ஃபகத்.No comments:

Post a comment