புதன், 19 செப்டம்பர், 2018

பொருட்பால் - மூன்றாம் பாகம்


67. வினைத்திட்பம்

661. வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
தளராத மன உறுதியே ஒருவனது சிறந்த தொழில் நுட்பம் மற்றவை எல்லாமே பலனற்றவையே

662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
தடை வராமல் முன்பே தடுப்பதும் தடை வந்தாலும் தளராததும் ஆன்றோரின் கொள்கைகள்

663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்
செயலை முடிக்கும்வரை ரகசியம் காப்பது இடையில் இடையூறு வராமல் காக்கும்

664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
எதையும் சொல்வது யாருக்கும் எளிது ஆனால் சொன்னதை வெற்றிகரமாய் செய்வதுதான் கடினம்

665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தர்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
உயரிய செயலாற்றல் கொண்டோர் பெருமையும் திறமையும் அரசாலும் போற்றப்படும்

666. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
உறுதியோடு இலக்கு நோக்கிச் செயல்படுவோர் நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிப்பர்

667. உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து
உருவம் கண்டு கேலிசெய்தல் தவறு பெரியதேரைக் காப்பது சின்ன அச்சாணியே

668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்
குழப்பமின்றி முடிவு செய்த செயலை தயக்கமோ தளர்வோ இன்றி விரைந்து முடிக்க வேண்டும்

669. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
முடிவில் நலம் தரும் செயலை என்ன துயர் வரினும் துணிந்து செய்துமுடிக்க வேண்டும்

670. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு
எவ்வளவு வலிமையிருந்தும் செய்யும்தொழிலில் உறுதியற்றோரை உலகம் மதிக்காது

68. வினை செயல்வகை

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
செயலில் ஆராய்ந்தே முனைதல் நன்று முனைந்தபின் தாமதித்தல் கேடுவிளைக்கும்

672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
நிதானமாகச் செய்யவேண்டியதைப்போல் விரைந்து முடிக்கவேண்டியதைத் தாமதித்தல் தவறு

673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்
முடிவதையெல்லாம் உடனே செய்தலும் முடியாதன முயன்று செய்தலும் நன்று

674. வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்
செயல், பகை இரண்டும் முடிக்காது பாதியில் விட அணையாநெருப்பென கேடு தரும்

675. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
செயலைச் செய்யுமுன் அதற்கான பொருள் கருவி காலம் வழிமுறை இடம் இவை அறிதல் நலம்

676. முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
செயலின் பயன், ஏற்படும் தடை, அது தடுக்கும் முறை அறிந்தே செய்தல் நன்று

677. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல்
செயலில் ஈடுபடுபடுமுன் அச்செயலில் சிறந்தவர் அறிவுறை கேட்டறிதல் அறிவுடைமை

678. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
செய்யும் செயல் கொண்டே வேறு செயல் முடித்தல் யானைவைத்து யானை பிடித்தல்போல

679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
நண்பரை உதவிப் பேணுமுன்னர் பகைவரை இணக்கமாக்கிக்கொள்வது செயல் முடிக்க நல்லது

680. உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து
தம்மின் பலசாலியை எதிர்க்க அஞ்சின் பலனறிந்து அவரைப் பணிவது அறிவு

69. தூது

681. அன்புடைமை ஆற்றின் குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
அன்பும் நற்குடிப் பிறப்பும் உயரிய பண்பும் தூதுவனின் தகுதிகள்

682. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று
அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்லாற்றல் மூன்றும் தூதுவனின் முக்கியத்தகுதிகள்

683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு
தன் நாடு வெல்லத் தூது செல்பவன் கல்விஞானத்திலும் சிறந்திருக்கவேண்டும்

684. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
நல்லறிவு, தோற்றப்பொலிவு, தெளிந்த நூலறிவுடையோனே தூது செல்லத் தகுந்தவன்

685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது
தீயவை நீக்கி, மனம் மகிழப் பேசி அரசுக்கு சாதகமாய் செயல்முடிப்பதே தூதருக்கழகு

686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது
கற்பவை கற்று, அஞ்சாமல் சொல்லவேண்டியது சொல்லி காலமறிந்து நடப்பவனே தூதன்

687. கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை
கடமை உணர்ந்து இடமும் காலமும் அறிந்து தெளிவாய் பேசி செயலைச் சாதிப்பவனே சிறந்த தூதன்

688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
ஒழுக்கம், தூய்மை, துணிவு இம்மூன்றும் தூதுவனுக்கு முக்கியமான குணநலன்கள்

689. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
செய்தியைச் சொல்லப்போகும் தூதுவன் தவறியும் பிழையான சொல் சொல்லிடல் கூடாது

690. இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது
மரணமே வருமாயினும் அஞ்சாது அரசுக்கு நன்மை விளையும்படி கடமையாற்றுபவனே சிறந்த தூதன்

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
தீயில் குளிர் காய்வதுபோல் விலகாது நெருங்காது அரசிடம் பழகுதல் மிக நன்று

692. மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்
அரசன் விரும்புவதை தான் அடைய நினையாமை அரசனின் அன்போடு செல்வத்தையும் பெற்றுத் தரும்

693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
அரசுப் பணியில் பிழை செய்து சந்தேகப்பார்வையில் விழுந்தால் மீளுதல் கடினம்

694. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
ஆன்றோர் முன் காதோடு பேசல், உரக்கச் சிரித்தல் தவிர்த்து நடத்தல் பண்பு

695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை
அவரே கூறும்வரை அரசர் பிறரோடு ரகசியம் பேசுகையில் கேட்பதோ தலையிடலோ கூடாது

696. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
அரசர் மனநிலை, நேரம் அறிந்து தவறான சொல் தவிர்த்து தகவல்களைச் சொல்லவேண்டும்

697. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
பயனுள்ள செய்திகளைத் தவிர பலனற்றவற்றை விரும்பிக் கேட்டாலும் சொல்லாமையே பண்பு

698. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்
தம்மின் இளையவர், உறவினர் என்று கருதி இகழாமல் பதவிக்கேற்ப மதித்து நடத்தல் அறிவு

699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்
ஆட்சியாளர் மதிப்பைப் பெற்றுவிட்டோமென தகாதவற்றைச் செய்யார் அறிவுடையோர்

700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
நெடுநாள் பழகிய உரிமையில் தகாதன செய்யும் உரிமை எடுத்துக்கொள்வது கெடுதலே தரும்

71. குறிப்பறிதல்

701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
ஒருவர் கூறுமுன்பே முகக்குறிப்பை அறிந்து செயல்படுபவன் உலகிற்கே அணிகலன் போல

702. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
பிறர் உள்ளுணர்வை தெளிவாய் உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவன் தெய்வத்துக்கு நிகரானவன்

703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்
குறிப்பறிந்து செயலாற்றுவோரை எந்தப்பதவி கொடுத்தும் சேர்த்துக்கொள்வது நலம்

704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
மனதிலுள்ளதைக் கூறாமலே உணரும் திறனுடையோர் உருவத்தால் நிகராய் அறிவால் மேம்பட்டவர்

705. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
முகக்குறிப்பால் எண்ணத்தை உணரமுடியாவிடில் சிறந்த உறுப்பான கண்களால் என்ன பயன்

706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
அருகிலிருப்பதை பளிங்கு பிரதிபலிப்பதுபோல மனதில் உள்ளதை முகம் காட்டிவிடும்

707. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
உள்ளம் நினைப்பதை முதலில் வெளிக்காட்டும் முகத்தைவிட உயர்வு ஏதுமில்லை

708. முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்
மனம் சொல்வதை முகம் பார்த்தே அறியும் துணை உள்ளோர் சேதி சொல்ல பார்வையே போதும்

709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்
பார்வையைப் படிக்கத் தெரிந்தோர் கண்ணைக் கண்டே பகையா உறவா என்றறிவர்

710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற
நுட்பமான அறிவுடையோர் பிறர் மனதில் உள்ளதை அறிய அவர்கள் கண்களே அளவுகோலாகும்

72. அவை அறிதல்

711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
சொற்களின் தன்மை உணர்ந்த அறிஞர்கள் கூடியிருப்போரின் தரமறிந்து உரையாற்றுவர்

712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்
சொல்லின் பயனறிந்து பேசுபவர் சபையின் தன்மைக்கேற்ப உணர்ந்து பேசவேண்டும்

713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்
அவை நிலைமை அறியாது பேசுவோருக்கு சொல்வலிமையும் பேச்சுத்திறமும் இல்லை

714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்
அறிவுடையோர் முன் செறிவோடும் அது குன்றியோர் முன் அவர் தரத்தும் பேசுதல் நலம்

715. நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
தம்மைவிட அறிஞரை முந்திக்கொண்டு அதிகப்பிரசங்கி போல் பேசாதிருப்பது உயர் குணம்

716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
ஆன்றோர்முன் பேசும் பொருளில் பிழையிருப்பது ஒழுக்கக்குறைவுக்கு ஈடானது

717. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் முன்னர் இழுக்கு
அறிஞர் அவையில் பேசும்போதுதான் கற்றோரின் நல்லறிவு புரிந்துகொள்ளப்படும்

718. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
தாமே உணர்வோர் முன் பேசுதல் வளர் பயிருள்ள பாத்தியில் நீர் வார்ப்பதுபோல

719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்
நல்லோர்அவையில் திறம்படப் பேசும் அறிவுடையோர் மூடர்முன் பேசாமை நன்று

720. அங்கணத்துள் உற்ற அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்
அறிவற்றோர் அவையில் அறிஞர் பேசுவது குப்பையில் அமுதம் கொட்டுவதைப் போல்


73. அவை அஞ்சாமை

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
சொல்லின் தன்மையறிந்து பேசுவோர் எத்தகைய அவையிலும் பிழையுறப் பேசமாட்டார்கள்

722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
அறிஞர் அவையில் தன் கருத்தை மனதில் பதியும்படி சொல்பவர் கற்றோரில் மேலோர்

723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்
பகைவரோடு போர்க்களத்தில் மோதி சாகத்துணிந்தவர் பலரும் அறிஞர் அவையில் பேசத் துணியார்

724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
அறிஞர்சபையில் நாம் கற்றதை ஏற்க உரைத்து நாம் அறியாதன அவரிடம் கற்றல் நலம்

725. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங்
கொடுத்தற் பொருட்டு கற்றோர்
அவையில் பேசுகையில் கேள்விகளுக்கு தக்க பதிலுரைக்கும்படி கற்றல் நன்று

726. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
கோழைக்கு வாளால் கற்றோர் அவையில் பேச அஞ்சுபவருக்கு நல்ல நூலால் என்ன பயன்?

727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்
ஆன்றோர் சபையில் பேச அஞ்சுவோன் கற்றகல்வி போர்க்களத்தில் கோழை கையிலுள்ள வாள் போல

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
ஆன்றோர் அவையில் நல்ல கருத்துக்களை மனம் பதியும்படி சொல்ல இயலாதோர் கற்றவை வீண்

729. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
ஆன்றோர் அவையில் பேச அஞ்சுவோர் நூல் பல கற்றிருந்தாலும் கல்லாதோருக்கும் கீழானவர்

730. உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
அவைக்கு அஞ்சித் தான் கற்றதை விளங்கச் சொல்ல இயலாதோர் உயிர் வாழும் சவம் போல
  
74. நாடு

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
குன்றா விளைச்சலும் நல்லறிஞர்களும் அறம் பேணும் செல்வரும் அமைந்ததே நல்ல நாடு

732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
பொருள் வளம் யாவரும் விரும்பும் சூழல் குன்றா விளைச்சல் இவை அமைந்ததே சிறந்த நாடு

733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு
புதுக் குடியோற்றங்களையும் தாங்கி அதற்கேற்ப வரி வழங்குவதே நல்ல நாடு

734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
தீராப்பசி, வியாதி, வெளிப்பகை இவை தாக்கமுடியாமல் தற்காத்து நிற்பதே சிறந்த நாடு

735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
முரண்பாடும் உட்பகையும் தீயோர் ஆதிக்கமும் அற்றதே நல்ல நாடு

736. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
கேடறியாமல், தவறிக் கேடு நேர்ந்தாலும் சரிப்படுத்தும்வளமை உடையதுவே சிறந்த நாடு

737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
குன்றாத நீர்வளமும், நெடிய மலையும், வலிமையான அரணும் நாட்டின் அணிகலன்

738. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
ஆரோக்கியம், செல்வம், விளைச்சல், வளம், இன்பம், பாதுகாவல் நாட்டிற்கு அணி

739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
கடும் முயற்சியால் வளம் தரும் நாட்டைவிட இயற்கையாகவே எல்லா வளமும் அள்ளி வழங்குவதே நல்ல நாடு

740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு
நல்ல அரசு இல்லாத நாட்டில் எல்லா வளங்களும் இருந்தாலும் அது பயனற்று அழிந்துபோகும்


75. அரண்

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
போருக்குச் செல்வோருக்கும் பயந்து பதுங்குவோருக்கும் தேவை பாதுகாவல் அரண்

742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்
ஆழமான அகழி நீர், படர்ந்த நிலம், உயர்ந்த மலை, அடர் வனம் இவையே நாட்டின் இயற்கை அரண்

743. உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
உயரம் அகலம் உறுதி பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு இவை அரணுக்கு இலக்கணம்

744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்
உள்ளே பரந்தும் காக்கவேண்டிய இடம் குறுகியும் பகைக்கு மலைப்பைத் தருவதே நல்ல அரண்

745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்
பகைவர் கைப்பற்ற முடியாமல், தன்னுள் உணவும் போரிட வசதியும் உள்ளதே அரண்

746. எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்
உள்ளிருப்போரைக் காக்க எல்லாப் பொருளும் போரில் வெல்லும் வீரர்களும் உடையதே அரண்

747. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்
முற்றுகையிட்டோ அன்றி ஓரிடம் தாக்கியோ வஞ்சத்தாலோ வீழ்த்த இயலாதது நல்லரண்

748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்
முற்றுகையிடும் வலிமையான பகையை உள்ளிருந்தவாறே வெல்லும் வகையானதே சிறந்த அரண்

749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
போர் மூண்டதும் உள்ளிருந்தே பகையை அழிக்கும்படி பாதுகாப்பு அமைந்ததே சிறந்த அரண்

750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்
எத்தனை வலுவான அரணும் உள்ளிருந்து செயல்படுவோர் திறனற்றிருந்தால் பயனில்லை


76. பொருள் செயல்வகை

751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
தகுதியற்றவரையும் தகுதியுள்ளவராக்கும் வலிமை அவரிடமுள்ள செல்வத்துக்கே உரியது

752. இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள் உள்ளோரை காரணமின்றிப் புகழ்வதும் இல்லோரெனின் இகழ்வதும் உலக இயல்பு

753. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
பொருளெனும் அணையாவிளக்கு எங்கிருக்கும் துன்பஇருளையும் தேடிப் போக்கும்

754. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
நேர்வழியில் தீமை ஏதும் செய்யாமல் ஈட்டிய பொருள் நல்லறமும் இன்பமுமாய் நிலைக்கும்

755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
அருள்நெறியிலோ அன்புவழியிலோ வராத செல்வம் எவ்வளவு பெரிதாயினும் ஏற்பது நன்றன்று

756. உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
வரி, வெல்லப்பட்ட நாடு கட்டும் கப்பம், சுங்கம் இவை அரசின் பொருட்கள்

757. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
அன்பெனும் தாய் பெறும் அருள் எனும் குழந்தை பொருளெனும் செவிலியால் வளரும்

758. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
பணத்தோடு செயலைத் தொடங்குதல் பாதுகாப்பாய் மேலே நின்று போரை காணல் போல

759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்
பொருளீட்டி நல்ல வசதியோடு வாழ்வதே பகைவரின் ஆணவத்தை அழிக்கும் கூர்மையான ஆயுதம்

760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு
நல்வழியில் பொருள் சேர்த்தவருக்கு அறவாழ்வும் இன்பமும் எளிதாய் அமையும்


77. படை மாட்சி

761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
எல்லாவகையிலும் நிறைவான அஞ்சாது போரிடும் படையே ஒரு அரசின் மிகப்பெரிய சொத்து

762. உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது
பகையைவிட வலிமை குன்றினும் அயராது போரிடும் தன்மை மண்ணின் மாந்தருக்குரியது

763. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
கடலெனத் திரண்ட பகையும் வலிய சிறுபடைமுன் பாம்பைக் கண்ட எலிக்கூட்டமென சிதறும்

764. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
போரில் தோற்காது, சூழ்ச்சிக்கு இரையாகாது, தளராத, பாரம்பரிய வீரம் உடையதே பாரில் சிறந்த படை

765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை
மரணமே எதிர்வந்து நின்றாலும் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்பதே சிறந்த படை

766. மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
வீரம், மானம், நன்னடத்தை, தலைமையின் முழு நம்பிக்கை இவை படையைக் காக்கும் நான்கு அரண்கள்

767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து
களத்தில் எதிரியின் முன்னணிப் படையை அழிக்கும் திறனுள்ளதே நற்படை

768. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்
போராற்றல், எதிர்க்கும் வீரம் இதோடு கட்டுப்பாடான அணிவகுப்பு படையின் பெருமை

769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை
அளவில் சிறுத்தோ, தலைமை மீது வெறுப்புடனோ, வறுமையோடோ இல்லாத படை வெல்லும்

770. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும் நல்ல தலைமை படையின் வெற்றிக்கு அவசியம்

78. படைச் செருக்கு

771. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
என் அரசை எதிர்த்து நில்லாதீர். நின்றோர் எல்லாம் மாண்டு கல்சிலையானர்

772. கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
பயந்த முயலைக் குறிதவறாது கொல்வதினும் வீழ்த்த இயலா யானையை எதிர்நின்று பொருதல் வீரம்

773. பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
பகைக்கு அஞ்சா வீரம் பேராண்மை. ஆனால் பகைவரின் துன்பம் தீர உதவுதல் ஆண்மையின் உச்சம்

774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
கைவேல் கொண்டு எதிர்த்த யானையைக் கொன்று போர் தொடர தன் மார் பாய்ந்த வேலை மகிழ்ந்து பிடுங்குதல் வீரம்

775. விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
பகைவர் வீசும் வேல் கண்டு கண் இமைத்தலே கோழைத்தனம் என கருதுவதே வீரம்

776. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குத்தன் நாளை எடுத்து
போரில் காயமடையாத நாளெல்லாம் வீரனுக்கு வீணான நாளே

777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
இறவாப் புகழுக்காய் உயிரையும் தரத் துணியும் வீரனின் கால் கழலே அழகு

778. உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்
இறப்புக்கும் அஞ்சாத வீரன் அரசன் காரணமின்றி சினந்தாலும் தன் கடமை மறவான்

779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்
சபதம் வெல்ல இயலாது போரில் உயிரை இழக்கும் வீரம் தூற்றாமல் போற்றப்படும்

780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து
தன் தலைவன் கண்ணீர் பெருக வீரமரணம் கிட்டுமாயின் அதை இரந்து பெறுதலும் பெருமையே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக