புதன், 19 செப்டம்பர், 2018

பொருட்பால் - ஐந்தாம்பாகம்


94. சூது

931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
சூதாட்டத்தில் வெல்வது தூண்டில் இரையை மீன் விழுங்குவதுபோல அழிவையே தரும்

932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
ஒன்றை வென்று நூறை இழக்கும் சூதாடிகள் வாழ்வில் நன்மை விளைவது ஏது?

933. உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
ஓயாமல் சூதாடுபவன் செல்வமும் வலிமையும் அவனைக் கைவிட்டு அழிந்துபோகும்

934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்
பல துன்பங்களில் ஆழ்த்தி புகழைக் கெடுத்து வறுமை தரும் சூதைவிட தீமை ஏதுமில்லை

935. கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
சூதாட்டக்கருவி, திறமையை விடாது போற்றுவோர் எல்லாம் இழந்து ஏதுமிலார் ஆகிவிடுவர்

936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்
சூதாட்ட வலையில் விழுந்தோர் வயிறார உண்ணவும் முடியாமல் மனம் வருந்துவர்

937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
சூதில் காலம் கழிப்பவன் பரம்பரை செல்வமும் நற்பண்பும் அவனைவிட்டு அழிந்துபோகும்

938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ
அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும்
சூது சூது பொருளை அழித்து பொய் சொல்ல வைத்து இரக்கம் கெடுத்து துயரில் தள்ளும்

939. உடைசெல்வம் காணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
கல்வி, செல்வம், உணவு, உடை, புகழ் இவை ஐந்தும் சூதாடுபவனை விட்டு விலகும்

940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்
நோயுறும்போது வரும் உயிராசையும் பொருள் இழக்கையில் சூதின் மேல் வரும் பற்றும் ஒன்றே95. மருந்து

941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
வாதம், பித்தம், சிலேத்துமம் இதில் ஒன்று கூடினாலோ குறைந்தாலோ நோய் உண்டாகும்

942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
உண்ட உணவு செரித்தபின்பே அடுத்து உண்பவன் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

943. அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
உண்டது செரித்ததையும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட ஆயுளைத் தரும்

944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
உண்டது செரித்ததை அறிந்து உடலுக்கு கேடுதராத உணவை மட்டுமே உண்ணல் வேண்டும்

945. மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
ஒவ்வாத உணவை மறுத்து, ஒப்பும் உணவையும் அளவோடு உண்பவருக்கு நோயெனும் தொல்லை இல்லை

946. இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
அளவோடு உண்பவர் நலமாய் வாழ்வர் அளவுக்கு அதிகம் உண்பவரோ நோய்க்கு ஆளாவர்

947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
பசியின் அளவே தெரியாமல் அதிகம் உண்டால் நோய்களும் அதிகம் வரும்

948. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
நோயும் அது வந்த காரணமும் தீர்க்கும் வழியும் அறிந்து மருத்துவம் செய்தல் வேண்டும்

949. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
நோயாளி வயது, நோயின் தன்மை, குணமடைய ஆகும் காலம் இவை எண்ணி மருத்துவர் செயல்படவேண்டும்

950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
நோயாளி, மருத்துவர், மருந்து, அதை தயாரிப்பவர் என நான்கின் கலவையே மருந்தின் தன்மை

96. குடிமை

951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
எண்ணம் சொல் செயல் நேர்மையும் அடக்கமும் நற்குடிப் பிறந்தோரிடம் இயல்பாக இருக்கும்

952. ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
நற்குடிப் பிறந்தோர் ஒழுக்கம் வாய்மை பணிவு மூன்றையும் விலக்கமாட்டார்

953. நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
முகமலர்ச்சி, கொடையுள்ளம், இன்சொல், புறம் பேசாமை இவை நற்குடிப் பிறந்தோர் இயல்பு

954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
நற்குடிப் பிறந்தோர் கோடி செல்வம் வருமாயினும் கீழ்மையான செயலை செய்யமாட்டார்கள்

955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று
நற்குடிப் பிறந்தோர் வறுமை வந்தாலும் பிறருக்கு உதவும் பண்பை விடமாட்டார்கள்

956. சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
பண்புடன் வாழ நினைப்போர் வறுமையிலும் தீய நினைவோடு தகாதன செய்யார்

957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
நற்குடிப் பிறந்தோரின் சிறு குறையும் நிலவின் களங்கம்போல் பெரிதாய் தெரியும்

958. நலத்தின்கண் நாரின்மை தோன்றினர் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
நற்குடிப் பிறந்தவன் அன்பும் பண்புமற்றிருந்தால் அவன் குலமே சந்தேகத்துக்கு உள்ளாகும்

959. நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தவர்வாய்ச் சொல்
நிலத்தின் இயல்பை பயிரும் குலத்தின் இயல்பை அதில் பிறந்தோர் சொல்லும் காட்டும்

960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
பிழை செய்ய அஞ்சுவதும் பணிவுடைமையும் நன்மை தந்து குலப்பெருமை காக்கும்97. மானம்

961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
மிக அவசியமான செயலாயினும் இழிவு தரும் செயல்களை தவிர்க்கவேண்டும்

962. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
புகழோடு குலப்பெருமையை காக்க நினைப்பவர் புகழுக்காக இழிந்தவை செய்யார்

963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
நிலை உயரும்போது பணிவும் அது குன்றும்போது வளையாத தன்மான உயர்வும் வேண்டும்

964. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
உயர்நிலையிலிருந்து தரம் தாழ்ந்தவரை தலையிலிருந்து உதிர்ந்த முடியென மதிக்கும் உலகு

965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
மலைபோல் கம்பீரமாக வாழ்பவர் குன்றிமணி அளவே இழிந்த செயல் செய்தாலும் தாழ்ந்துபோவார்

966. புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை
இகழ்பவர் பின் சென்று பணிந்து நிற்கும் நிலை இம்மையிலும் மறுமையிலும் புகழ் தராது

967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
மதியாதாரை சார்ந்து வாழ்வதைவிட இறந்துபோவது மேலானது

968. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
மானம் இழந்தபின் இறவாமல் உடலைச் சுமந்து வாழ்வது இழிவு

969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
உடலில் முடி உதிர்ந்தாலே உயிர்வாழா கவரிமான் போல மானமிழப்பின் உயிர் துறப்பர் மேலோர்

970. இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
இகழ்ச்சி நேர்ந்தால் தாங்காமல் உயிர் துறக்கும் மானம் உள்ளோரை உலகம் புகழ்ந்து போற்றும்


98. பெருமை

971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
வாழ்வுக்கு ஒளி தருவது திறமையே அதில்லாது வாழும் வாழ்வு இழிவானது

972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
பிறப்பு யாவருக்கும் சமம் செய்யும் தொழிலில் திறமையே உயர்வு தரும்

973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
நற்பண்பு இல்லாத மேல்நிலையில் உள்ளோர் மேலோரோ நற்குணம் உள்ள கீழ்நிலையில் உள்ளோர் தாழ்ந்தாரோ இல்லை

974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
ஒழுக்கநெறி தவறாமல் தன்னைக் காத்து வாழ்பவர் கற்புநெறி தவறாத பெண்ணைப்போல் உயர்ந்தவர்

975. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்
பெருமைக்குரிய திறமை படைத்தோர் அரிய செயல்களை உரிய முறையில் செய்து முடிப்பர்

976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு
அறிவுடையோரை போற்றி பின்பற்றும் தன்மை அறிவிற் சிறியோர் உணர்வில் இருக்காது

977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்
சிறுமை குணம் கொண்டோர் சிறப்பான நிலை அடைந்தாலும் அகந்தை கொள்வது இயல்பு

978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
பண்புடைய பெரியோரிடம் பணிவு இருக்கும். பண்பற்றோர் தற்புகழ்ச்சி கொண்டே அழிவர்

979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
பெருமை கொள்ளக் காரணமிருந்தும் அடக்கமாயிருத்தல் மேன்மை ஒன்றுமில்லாமலே தலைக்கனம் கொள்வது சிறுமை

980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
பிறர் குறைகளை விட்டு நிறைகளை பாராட்டுவது மேன்மை. குறை மட்டுமே கூறித் திரிவது சிறுமை
99. சான்றாண்மை

981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
கடமைகளை பண்போடு மேற்கொண்டு வாழ்வோருக்கு நற்பண்பு இயல்பாகவே இருக்கும்

982. குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று
நற்பண்புகளே சான்றோரின் அழகு. ஏனைய புற அழகுகள் உண்மை அழகல்ல

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்
அன்பு, தீயன செய்ய நாணம், ஒழுக்கம், இரக்கம், வாய்மை இவை சான்றாண்மையை தாங்கும் தூண்கள்

984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
உயிர்க்கொலை செய்யாமை தவம், பிறர் பிழைகளை மட்டும் சுட்டி அவரை வருத்தாமை நற்பண்பு

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
ஆணவமற்ற பணிவே திறமையாளர்களின் ஒப்பற்ற கருவி. அது பகைவரையும் நண்பராக்கும் ஆயுதம்

986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
தம்மின் சிறியோரிடமும் தன் பிழையை ஒப்புக்கொள்வது அறிவுடைமையை அறிய உதவும் உரைகல்

987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
தீங்கு செய்தவருக்கும் நன்மையே செய்யாவிடில் நற்பண்பு கொண்டிருந்து என்ன பயன்?

988. இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
மன உறுதி என்னும் பெருஞ்செல்வம் உள்ளவருக்கு வறுமையும் இழிவு தராது.

989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்
கடமைகளை கண்ணியமாய் செய்யும் மேலோர், ஊழிக்காலத்திலும் நிலை மாறாத கடல் போன்றோர்

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை
சான்றோரின் நற்பண்பு குறையுமானால் பூமியே அந்த பாரம் தாங்காது அழிந்துபோகும்
100. பண்புடைமை

991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடையோராக வாழ எளிய வழி

992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
அன்புடைமையும் நற்குடிப் பிறப்பும் பண்பாளரை உருவாக்கும் அடிப்படைகள்

993. உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
உடலமைப்பு மனிதரைப்போல் இருப்பது உயர்வல்ல நற்பண்புகள் ஒத்திருப்பதே மனிதம்

994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு
நீதியோடு நல்லன செய்து பிறருக்கு உதவும் பண்பாளர்களை உலகம் வணங்கிப் போற்றும்

995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
விளையாட்டாக இகழ்ந்து பேசுவதும் வருத்தம் தரும். பண்புடையோர் பகைவரையும் ஏளனமாகப் பேசமாட்டார்

996. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்
பண்புடையோர் வாழ்வதால் உலகம் இயங்குகிறது இல்லாவிடில் மண்ணோடு மண்ணாகியிருக்கும்

997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
அரம் போல கூர்மையான அறிவிருந்தாலும் மக்கட்பண்பில்லாதவர் ஓரறிவு மரத்துக்கு சமமானவர்

998. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
நம்மோடு பகை கொண்டு தீமையே செய்வோரிடமும் பண்பின்றி நடந்துகொள்வது இழிவான தன்மை

999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
பிறரோடு பண்போடு கலந்து பேசி மகிழத் தெரியாதோரின் பகல்கூட இருண்டே இருக்கும்

1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று
பண்பிலாதவன் பெற்ற செல்வம் களிம்பேறிய கலத்தில் வைத்த பால்போல் கெடும்

101. நன்றியில் செல்வம்

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
செல்வத்தை சேர்த்து அதை அனுபவிக்காமல் இறந்துபோனால் அச்செல்வத்தால் என்ன பயன்?

1002. பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
பொருளால் அனைத்தும் ஆகுமென்று பதுக்கி பிறருக்குக் கொடாத கஞ்சனின் வாழ்வு முழுமையற்றது

1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
நற்பெயரை விரும்பாமல் பொருள் சேர்ப்பதே இலக்காக வாழ்வோர் பூமிக்கு பாரம்

1004. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
யாராலும் விரும்பத்தகாது வாழ்பவன் இறந்தபின் பிறருக்குத் தன்னை நினைவுறுத்தும் என எதை நினைப்பான்?

1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்
அனுபவித்தும், கொடுத்தும் மகிழாதவனிடம் கோடி செல்வம் சேர்ந்தாலும் பயனில்லை

1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்
தானும் அனுபவிக்காது, தகுதியுள்ளோருக்கும் கொடுக்காது சேர்க்கும் செல்வம் நோயைப் போன்றது

1007. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
வறியவனுக்கு உதவாத செல்வம், அழகிய மங்கை தனியாகவே இருந்து முதுமை அடைவதுபோல் வீண்

1008. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
எவராலும் விரும்பப்படாதவன் பெற்ற செல்வம் ஊர் நடுவே பழுத்திருக்கும் நச்சு மரம் போல தீங்கானது

1009. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
அறவழி மறந்து கொடாமலும் அனுபவியாதும் சேர்த்து வைத்த பொருளை மற்றோரே அனுபவிப்பர்

1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து
கொடுத்துப் புகழ் பெற்ற செல்வர் சிறிது வறுமையடைவது கூட மழை மேகம் பொய்ப்பதுபோல் கொடியது
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக