Wednesday, 19 September 2018

பொருட்பால் - ஆறாம் பாகம்  
102. நாணுடைமை

1011. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
தகாதன செய்ய நாணுவதும், நற்குணப் பெண்கள் இயல்பாய் நாணுவதும் வெவ்வேறு வகையானவை

1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
உணவு உடை போன்றவை எல்லோரிடமும் உண்டு தீயவை செய்ய நாணுதலே உயர்ந்தோரின் தனி நற்குணம்

1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
உடலுக்கு உயிர்போல சான்றாண்மைக்கு நாணமெனும் நற்பண்பு உறுதுணை

1014. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை
பிழைக்கு நாணும் பண்பு சான்றோர்க்கு அணிகலன் அஃதில்லாத பெருமித நடை நோய்போல் இழுக்கு

1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு
தனக்கு வரும் பழிக்கு மட்டுமன்றி, பிறரின் பழிக்கும் அஞ்சுவோர் பண்பின் இலக்கணம்

1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
பிழை செய்ய நாணுதல் என்னும் காவல் அரணோடே இந்தப் பரந்த உலகில் இயங்குவர் பண்புடையோர்

1017. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
தீமை செய்ய நாணும் குணமுடையோர் மானம் காக்க உயிரையும் விடத்துணிவர்

1018. பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
பழி வரும் தீஞ்செயலைச் செய்ய நாணாதவனை விட்டு அறம் வெட்கப்பட்டு விலகிவிடும்

1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
நேர்மை தவறக் குலம் கெடும் அதற்கு நாணாதிருந்தால் எல்லா நலமும் கெடும்

1020. நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
தீயன செய்ய நாணாதவர் உலகில் நடமாடுவது உயிரின்றி கயிற்றில் ஆடும் பொம்மை போன்றது 

103.     குடிசெயல் வகை

1021. கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
கடமையை சோர்வின்றிச் செய்யும் மனஉறுதியைவிட உயர்ந்த பெருமை உலகில் இல்லை

1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
தெளிந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு அயராது உழைப்பவர் வீடும் நாடும் உயரும்

1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
தன் குடிமக்கள் உயர ஓயாது உழைப்பவனுக்கு தெய்வம் தானே முன்வந்து உதவும்

1024. சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு
தன் குடி உயர்வதற்கான செயலை காலத்தே செய்வோருக்கு வெற்றி தானே வந்து சேரும்

1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
குற்றமின்றி மக்களுக்காக உழைக்கும் தலைவனை மக்கள் தம் உறவென மதிப்பர்

1026. நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
நல்லாண்மை என்பது நாட்டையும் வீட்டையும் நன்முறையில் நிர்வகிக்கும் திறமை

1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
போரில் படை நடத்தும், குடிகளை காக்கும், பொறுப்பு ஆற்றலுடையோருக்கே கிடைக்கும்

1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
நாடும் வீடும் உயர உழைப்பவர்கள் காலநேரம் பார்த்து சோர்ந்தால் அனைத்தும் கெடும்

1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
சார்ந்தோருக்கு இடர் வராது காப்பவன் குடிகள் துன்பம் தாங்கும் இடிதாங்கி

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
துன்பத்தை தாங்க தக்க துணையில்லாத குடி கோடாரிக்கு மரம்போல் வீழும்

104. உழவு

1031. சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
எவ்வளவு இன்னல்கள் அதில் இருந்தாலும் உலகிலுள்ள எல்லாத் தொழிலிலும் உழவே உயர்வானது

1032. உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து
பிற தொழில் செய்வோரின் பசியையும் தீர்க்கும் செயலால் உழவன் உலகுக்கு அச்சாணி

1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
உழவர்களே சார்பற்று வாழ்பவர். பிற தொழிலோர் உணவுக்கு கையேந்துபவரே

1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
பல அரசுகளுக்கும் நிழல் தந்து காக்கும் வலிமை உழவெனும் குடைக்கு உரியது

1035. இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
சுயமாய் உழுது வாழ்பவர் பிறரிடம் கையேந்தாததோடு, வருவோருக்கும் வழங்கி மகிழ்வர்

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை
உழவர் தொழிலைக் கைவிட்டால் முற்றும் துறந்த முனிவரும் வாழ்வை இழப்பர்

1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
புழுதி காற்பங்காகும்வரை உழுது விதைத்தால் பிடியளவு எருவும் தேவையில்லை

1038. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
உழுதலைவிட உரமிட்டு களைநீக்கி நீரிடல் நன்று. அதைவிட பயிரை பாதுகாத்தல் மிக நன்று

1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்
மனைவியைப்போல நிலமும் அக்கறையோடு கவனிக்க மறந்தால் விளைச்சலின்றிப் போய்விடும்

1040. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
ஏதுமில்லா ஏழை என்று சோம்பித் திரிவோரைப் பார்த்து பூமித்தாய் ஏளனமாய் சிரிப்பாள் 
105. நல்குரவு

1041. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
வறுமையை விடப் பெரிய துன்பம் எதுவெனில் அது வறுமை மட்டுமே

1042. இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
வறுமை எனும் பாவி ஒருவனை தீண்டினால் அவனுக்கு எக்காலத்திலும் நிம்மதி இருக்காது

1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
வறுமையால் வரும் பேராசை பரம்பரைப் பெருமை, புகழ் இரண்டையும் கெடுக்கும்

1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
நற்குடிப் பிறந்தோரையும் வறுமை எனும் கொடுமை தகாத சொற்களை பேசவைத்துவிடும்

1045. நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
வறுமை எனும் துயரம் மற்ற பல துன்பங்களை அடுக்கடுக்காய் பிரசவிக்கும்

1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
நல்ல கருத்துக்களை ஆராய்ந்து சொன்னாலும் அதை ஏழை சொன்னால் எடுபடாது

1047. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
வறுமையால் அறநெறி தவிர்ப்பவனை பெற்ற தாயும் வெறுத்து விலக்கி வைப்பார்

1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
கொல்வதுபோல் நேற்று வருத்திய வறுமை இன்றும் வருமோ என்று அஞ்சி ஏங்குவான் ஏழை

1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
நெருப்பில்கூட படுத்து உறங்கிவிடலாம் ஆனால் வறுமையில் உறக்கமும் வாராது

1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
ஒழுக்கக்கேடால் வறுமையுற்றவர் உயிர்வாழ்வதே உப்புக்கும் கஞ்சிக்கும் கேடு


106. இரவு

1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
இரந்து கேட்டவரைவிட கொடுக்கும் நிலையிலிருந்தும் மறைத்து இல்லை என்பாருக்கே இழிவு

1052. இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
மன மகிழ்வோடு கொடுப்பவரிடம் யாசித்துப் பெறுவதும் இன்பமானதே

1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
கடமை உணர்வும் வெளிப்படை மனமும் கொண்டவரிடம் உதவி கேட்டுப் பெறுவதும் அழகே

1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
கள்ளத்தனம் கனவிலும் அறியாதவரிடம் ஒன்றைக் கேட்டுப்பெறுவது ஈகை போல் இனிது

1055. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது
வறியவர் கேட்டுப்பெற முடிவது இருப்பதை மறைக்காது கொடுப்பவர் இருப்பதால்தான்

1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்
இருப்பதை மறைக்கும் நோயற்றோரை பார்க்கும்போதே வறுமை நோய் ஓடிவிடும்
  
1057. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து
இழிவாய்ப்பேசி அவமதிக்காது வழங்குவோரைக் கண்டு இரப்போர் மனம் மகிழும்

1058. இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
யாசிப்போரை உதாசீனம் செய்வோர் மரத்தில் செய்த பதுமைபோல் உணர்வற்றோர்

1059. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
இரப்போர் உலகில் இல்லாதுபோனால் வள்ளல்களுக்கு புகழ் அற்றுப்போகும்

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
வேண்டும்போதெல்லாம் கிட்டாது என்பதற்கு தன் வறுமையே சான்றென பொறுத்தல் நன்று


107. இரவச்சம்

1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
இருப்பதை மறைக்காமல் மகிழ்வாய் கொடுப்பவரிடமும்கூட கேட்டுப் பெறாமை வெகு உயர்வு

1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
இரந்து வாழ்தல் சிலருக்கு விதியெனில் இவ்வுலகைப் படைத்தவன் கெட்டழியட்டும்

1063. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்
உழைக்காது யாசித்து வறுமையை போக்கலாம் என்று நினைப்பதைவிட கொடுமை வேறில்லை

1064. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு
வழியிலா வறுமையிலும் இரந்து பிழைக்க எண்ணாத பண்புக்கு இந்த உலகமே ஈடில்லை

1065. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்
உழைத்து சம்பாதித்துக் குடிக்கும் நீராகாரத்தை விட அமுதமும் இனிமையில்லை

1066. ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்
தவிக்கும் பசுவுக்கு நீரை யாசித்துக் கேட்டாலும் அது யாசித்த நாவிற்கு இழிவு

1067. இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று
இருப்பதை மறைத்து இல்லை என்போரிடம் யாசிக்காதே என யாசிப்பவரை யாசிக்கிறேன்

1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
வறுமைக்கடலில் பிச்சை எனும் வலுவிலா தோணி இல்லை எனும் கல்நெஞ்சு மோத உடையும்

1069. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
இரப்பவரைக் காண உருகும், ஈகை மறுப்பவரைக் காணவோ உள்ளமே உடையும்

1070: கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
இரப்போருக்கே உயிர் போகிறதே, இல்லை என்போருக்கு உயிர் எங்கிருக்கும்

108. கயமை

1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
கயவரும் உருவத்தில் நல்லவர்போல் தோற்றமளிப்பது மனிதரன்றி வேறு உயிரினத்தில் காணாதது

1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
நல்லன அறிந்தோரைவிட எதைப்பற்றியும் கவலைப்படாத கயவரே ஒருவகையில் அதிர்ஷ்டசாலி

1073. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
கட்டுப்பாடின்றி விரும்புவதெல்லாம் செய்வதில் கயவர்கள் கடவுளைப் போன்றவர்கள்

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
தன்னிலும் கீழோரைக் கண்டு தாம் மிக உயர்ந்தவரென்று கர்வம் கொள்வர் கயவர்

1075. அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
பயத்தாலும் நினைத்தது கிடைக்கவும் மட்டுமே ஒழுக்கமாக இருப்பதாய் நடிப்பர் கயவர்

1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்
ரகசியங்களை தேடிப்போய் பிறரிடம் சொல்வதில் கயவர்கள் தமுக்கடிப்பவர் போன்றோர்

1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு
அறையும் முரடர்க்கன்றி யாருக்கும் எச்சில் கையையும் உதறமாட்டார் கயவர்

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்
கேட்டதும் தருவோர் சான்றோர் கரும்பென பிழிந்தால் மட்டுமே தருவோர் கீழோர்

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
பிறர் உண்பதை, உடுப்பதைக் கண்டு பொறாமையில் பழிசொல்வதில் வல்லவர் கயவர்

1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து
வரும் துன்பத்திலிருந்து தப்ப தன்னையே விலை பேசி விற்கவும் தயங்கார் கயவர்No comments:

Post a comment