செவ்வாய், 2 அக்டோபர், 2018

பாலியல் சமத்துவம் பேசிய இரு தீர்ப்புகள்! சட்டப்பிரிவு 497 நீக்கமும் சபரிமலை தீர்ப்பும்!!


சட்டப்பிரிவு 497 நீக்கமும் சபரிமலை குறித்த தீர்ப்பும்!முதலில் சமுதாயம் கொண்டாடித் தீர்த்த தீர்ப்பு - பிரிவு 497 நீக்கம்!

IPC Section: 497.
Whoever has sexual intercourse with a person who is and whom he knows 
or has reason to believe to be the wife of another man, 
without the consent or connivance of that man, 
such sexual intercourse not amounting to the offense of rape
is guilty of the offense of adultery, and 
shall be punished with imprisonment of 
either description for a term which may extend to five years, 
or with fine, or with both. In such case 
the wife shall not be punishable as an abettor.

ஒரு ஆண் பிறன் மனைவியோடு, அவரது சம்மதத்தோடு 
உறவு கொண்டாலும், அது கூடா ஒழுக்கமாக கருதப்பட்டு குற்றவியல் சட்டம் 497 ஆவது பிரிவின்கீழ் தண்டனைக்குரியது. அதற்கு அவருக்கு ஐந்து ஆண்டுகள்வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்! ஆனால் அந்தப்பெண் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர் என்று கொள்ளப்படமாட்டார்!

இதுதான் இந்தப் பிரிவின் சாரம்!

இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப்பிரிவில் 
சம்பந்தப்பட்ட ஆண்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்காத குற்றம் என்பதால், ஜாமீன் வழங்கத்தக்க, கைது நடவடிக்கையோ போலீஸ் தலையீடோ இருக்கக்கூடாத குற்றம்!

இதில்,
முதலாவது விஷயம் ;  இந்திய சட்டப்பிரிவு 198 ன்படி
சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர்  புகாரளித்தால் 
 "மட்டுமே" சட்ட நடவடிக்கை எடுக்கப்படமுடியும்!

அந்தப்பெண்ணின் கணவர் சம்மதத்தோடு இது நடந்திருக்கும்பட்சத்தில் இது குற்ற நடவடிக்கை ஆகாது!

இந்த சட்டப்பிரிவு, பெண் ஆணின் "உடமை" அவள் தன் பூரண சம்மதத்துடனோ, முன்முனைப்புடனோ  இதில் ஈடுபட்டிருந்தாலும், சுய விருப்பமோ, சிந்தனையோ, கருத்தோ கொண்டிருக்குமளவு அறிவற்றவள் என்ற  ஆணாதிக்க பிற்போக்கு சிந்தனையை உறுதி செய்வது வெளிப்படை!

இரண்டாவது விஷயம்: திருமணமாகாத பெண்ணோடோ, விதவைப்பெண்ணோடோ  திருமணமான ஆண் உறவு கொள்வது இந்தப்பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஆகாது

உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனம் (ARTICLE  14 & 15) கூறும் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று சொல்லப்பட்டது.
Article 14: "The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India."
Article 15: "The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex and place of birth or any of them."

 இதை எதிர்த்து வாதிட்ட தரப்போ, இந்த சட்டப்பிரிவை நீக்குவது மேலும் கள்ள உறவுகளை வளர்ப்பதற்கே துணை போகும் என்பதால்,
கிரிமினல் நீதிமுறைகள் மறு வரையறை கமிட்டி 2003 ஆம் ஆண்டு பரிந்துரைகளை அமல்படுத்த கோரியது.

அந்தப் பரிந்துரை: " ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறொருவருடைய துணையுடன் உடலுறவு கொள்வது அடல்டரி என்றே கருதப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்"

இது தற்போதைய சட்டப்பிரிவின் பாலியல் பாகுபாட்டை வெகு எளிமையாக நீக்கும் என்பது அவர்கள் வாதம்!

தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி தீபக் மிஸ்ரா சொன்ன கருத்து, "அடல்டரி இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது, எனினும், சிவில் நடைமுறைப்படி விவாகரத்து கோர அதை ஒரு காரணியாகக் கொள்ளலாம்"
இது கொஞ்சம் விளக்கெண்ணெய்த்தனம்!பிரிவு 497ம் பிரிவு 198 (2)ம் எப்போதும் இணைத்தே பார்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, தன்  மனைவி தகாத உறவில் இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட ஆண் மீது கணவன் புகார் அளிக்க முடியும். ஆனால், கணவன் தகாத உறவில் இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட மனைவி, கணவர்மீதோ, அந்தப் பெண் மீதோ புகார் அளிக்க உரிமை கிடையாது!
இது இன்றைய நிலையில் ஒரு கோமாளித்தனமான விசித்திரம்!

சரி, இந்த பிரிவு இதுவரை எதிர்க்கப்பட்டதே இல்லையா?

இது முதல் முயற்சியிலேயே கிடைத்த தீர்ப்பல்ல!
இது குறித்த முந்தைய வழக்குகள் பற்றி சிறிது  பார்ப்போம்!

பலமுறை இது விவாதிக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் அது தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் வழங்கிய மூன்று முக்கியமான தீர்ப்புகள்:

முதல் வழக்கு இதை பெண்களுக்கு சாதகமான சட்டப் பிரிவென வேறு கோணத்தில் பார்த்தது.

1951ல் யூசுஃப் அஜிஸ் vs பாம்பே அரசு வழக்கில், " இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசன உரிமை வழங்கிய பால் சமத்துவத்துக்கு எதிராக பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது.
இது பெண்கள் திருமணத்துக்கு மீறிய தகாத உறவு கொள்ள அனுமதி வழங்குவதாக இருக்கிறது!' என்று வாதிடப்பட்டது

மூன்று வருட போராட்டத்துக்குப்பின் 1954ல் இந்தப்பிரிவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது!
பெண்களுக்கு விலக்களிக்கும் சட்டப்பிரிவு 15(3) செல்லும் என்றும் தீர்ப்பளித்தது!

இரண்டாவது தீர்ப்பு:

1985ல் ஸௌமித்ரி விஷ்ணு vs இந்திய அரசு  வழக்கில் இந்த பிரிவை நீக்க மறுத்த உச்சநீதிமன்றம்
"இது ஆணுக்கு எதிரான இன்னொரு ஆணின் வன்முறை என்றே கருதத்தக்கது.
திருமண பந்தத்தின் புனிதத்தை காக்கவே, கணவன் தன் மனைவிக்கு எதிராகவோ, மனைவி தன் கணவருக்கு எதிராகவோ இந்தப் பிரிவை பயன்படுத்த அனுமதிக்கமுடியாது"
என்றதோடு, திருமணமாகாத பெண்களை இதற்காக தண்டிப்பதையும் அனுமதிக்க மறுத்தது!

திருமணமாகாத ஒரு ஆண் திருமணமான பெண்ணோடு தகாத உறவுகொள்வது தண்டனைக்குரிய குற்றம்.
ஆனால் திருமணமாகாத பெண் திருமணமான ஆணோடு உறவு கொள்வது குற்றமாகாது!
இரண்டுமே திருமண பந்தத்தின் புனிதத்தை கெடுத்தாலும் இந்தப் பிரிவின்படி பெண்ணை தண்டிப்பது ஒரு பெண் இன்னொரு பெண்ணை களங்கப்படுத்த துணை செய்யும் என்று ஒரு நம்பமுடியாத காரணத்தை சொன்னது!

மூன்றாவது தீர்ப்பு:

1988ல் ரேவதி vs இந்திய அரசு வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம்
இந்தப் பிரிவில் பெண்களை இணைக்காததுசமுதாய நன்மைக்குஎன்றும், “திருமண பந்தத்தின் புனிதத்தை காப்பாற்ற ஒரு வாய்ப்பு”  என்றும் குறிப்பிட்டது!

1971ல் இந்திய சட்ட கமிஷனின் 42வது அறிக்கையும் 2003ல்  சட்ட மறுவரையறைக்கான மலிமத் கமிட்டியும் ஒரே குரலில் 497வது சட்டப்பிரிவில் பால் சமநிலை வேண்டும் என்று பரிந்துரைத்தன.

இப்போது வந்திருப்பது, நான்காவது தீர்ப்பு!

முதல் மூன்று தீர்ப்புகளையும் தள்ளிவைத்து, இந்த சட்டப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது!

இதற்கு முந்தைய மூன்று முயற்சிகளிலுமே இந்த சட்டப்பிரிவு ஆண்களுக்கு எதிரானது என்பதே பிரதான வாதம். இந்தமுறை வழக்குத் தொடுத்தவர் புத்திசாலித்தனமாக இன்றைய ட்ரெண்டின்படி இது பெண்களுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டை எடுத்து வாதிட, நீதிமன்றம் நாங்களும் மாடர்ன்தான் என்று தீர்ப்பெழுதியிருக்கிறது!

இதில் இன்னொரு விசித்திரம்,
இந்தப் பிரிவை நீக்கமுடியாது என்று தீர்ப்பளித்த பெஞ்சில் இருந்தவர் YV சந்திரசூட். இப்போது நீக்கியிருக்கும் பெஞ்சில் அவரது மகன் DY சந்திரசூட்.

அவரது தீர்ப்பில் "இந்த பிரிவு பெண்களுக்கு எதிரானது, முறையற்ற உறவு விஷயத்தில் பெண்களை கணவனின் உடமைப் பொருளாக கருதி முடிவெடுக்கும் உரிமையை ஆண்கள் கையில் விடமுடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார்!

நல்லது.
இந்தப்பிரிவு ஆண் பெண் பாகுபாட்டை தகர்த்தவரை கொண்டாடத் தக்கது! ஆனால் இது சரியான தீர்ப்புதானா என்பதில்தான் எனக்கு சந்தேகம்!

இந்தப்பிரிவு பெண்களுக்கு எதிரானது என்ற பார்வை போன்றே
இது ஆண்களுக்கு எதிராய் பெண்களுக்கு சாதகமானது என்ற பார்வையும் இருக்கிறது என்பதுதான் இதற்கு முந்தைய அப்பீல்கள் சொல்லும் செய்தி!

எல்லாவற்றையும்போல இதுவும் அவரவர் பார்வையில் புரிந்துகொள்ளப்படுகிறது.
அவ்வளவே!

இப்போது கள்ளஉறவு கிரிமினல் குற்றமல்ல என்று சொல்லியிருக்கும் நிலையில் இது பெண்களுக்கு என்ன சம உரிமை கொடுக்கிறது,
எந்தவகையில் பெண்களுக்கு சாதகமானது?

ஒரு சின்ன கற்பனை சூழலை வைத்துப் பார்ப்போம்!

கொழுத்த வரதட்சணை வாங்கி காரும் சொத்துமாக திருமணம் செய்த ஒருவன் இப்படி ஒரு தகா உறவில் ஈடுபடும்போது அந்தப் பெண்ணுக்கான உரிமை என்ன?

சிவில் வழக்காக மணவிலக்கு வழக்குப் போடுகிறார். கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை!
இப்போதைய நிலவரப்படி அவர்மீது கிரிமினல் வழக்கு தொடுக்க முடியாது!
மணமுறிவு வழக்கு இழுத்தடிக்கப்படும் பத்தோ, நூறோ ஆண்டுகளும் அந்தப் பெண்ணின் பணத்தை தின்று கொழுக்கவும் எத்தனை பெண்களோடு உறவு கொள்ளவும் அவருக்கு சட்டப்படி தடை இல்லை!

சிவில் வழக்கு எந்தளவுக்கு வாலைக்குழைக்கும் நாய்க்குட்டி என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்!
நூறாண்டு இழுத்தடிப்பு உத்தரவாதம்!

நாட்டில் பெரும்பான்மை பெண்கள் இணையப் புரட்சி ஜான்சி ராணிகள் இல்லை என்பதுதான் எதார்த்தம்!

இப்போது அவர்களுக்கு இருந்த ஒரே சட்ட பாதுகாப்பை அழித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!

சரி, பெண்கள் எல்லோரும் ஒழுங்கா என்பவர்களுக்கும் இதேதான் பதில்!

2003ஆம் ஆண்டின் பரிந்துரைப்படி தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டம் தண்டிக்கும் என்பதுதான் ஒழுக்கம் என்பதற்கான வரையறைகள் புரியாமலே மாறிக்கொண்டே போகும் சமுதாய அமைப்பில் சரியாக இருக்கும்!

நான் ஏதும் பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டிருப்பதாக வழக்கம்போல் கொடிபிடிப்பவர்கள் தவிர, மற்றவர்கள் இதை  புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகிறேன்!

நம்பிக்கை மோசடி என்பது யார் செய்தாலும் தண்டிக்கத்தக்கதே!

திருமண வரம்புக்கு மீறிய உறவு சரியா தவறா?
கற்பு என்பது என்ன,
இதெல்லாம் பெரும் விவாதப்பொருட்கள்!
அதற்குள் நான் புகவிரும்பவில்லை!
ஆனால் என்வரையில் கற்பு என்பது நேர்மை தவறாமை,
நம்பிக்கை மோசடி செய்யாமை!
நம்பியோருக்கு உண்மையோடு இருத்தல் அவ்வளவே!
இது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது!
உடலுக்கு இந்த வார்த்தையில் வேலையே இல்லை!

திருமண பந்தம் தாண்டிய உறவு விழைவு திருவள்ளுவர் காலத்தே இருந்திருக்கிறது! ஆனால் இன்றுவரை சமூகம் அதை குற்றமாகவே பார்க்கிறது! அது எக்காலத்தும் குற்றம்தான்! நம்பிக்கை மோசடி! தனிமனித உரிமை என்பது ஏமாற்றுவதற்கும் மோசடிக்கும் பொருந்தாது! அப்படி ஆரம்பித்தால், ஒரு கோணத்தில் கொலை செய்வது கூட தனிமனித உரிமைதான்!

ஒரு ஒப்பந்தத்தை மீறும்போது அதிலிருந்து விலகிவிடுவதுதான் நேர்மையும், அதற்கு செய்யப்படும் உச்சகட்ட மரியாதையும்!

சம உரிமை என்பது நீ தவறு செய்தால் நானும் அதைவிடப் பெரியதாகச் செய்வேன் என்று கொடி பிடிப்பது அல்ல!

கணவனோ, மனைவியோ சலித்துப்போனாலோ கசந்துபோனாலோ நேர்மையாய் உதறி எறிந்துவிட்டு
தன் மனம் கவர்ந்த எதிர் பாலினத்தையோ,
சக பாலினத்தையோ (அதையும்தான் இப்போது புரட்சிகரமாய் அங்கீகரித்து நாங்களும் முன்னேறியவர்கள் என்று மார்தட்டியிருக்கிறதே உச்சநீதிமன்றம்!) நாடிப்போவதை யார் தடுக்கிறார்கள்?

உள்ளிருந்துகொண்டு,
துணை வலிமையானதெனில் மறைமுகமாகவோ,
துணை தன்னிலும் கீழானதெனில் திமிரோடு வெளிப்படையாகவோ
கள்ள உறவில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது என்ன வகையான சமநிலை?

இன்னொருவரோடுதான் உறவு என்றானபின் கூட இருப்போரின் உழைப்பை, அன்பை திருடி வாழ்வது எச்சைத்தனம் என்பதில் எந்தப் புரட்சியாளருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை!

ஆணோ, பெண்ணோ, நம்பிக்கை மோசடி, துரோகம் இவை செய்வதற்கு சட்டப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்பதுதான் சிறந்த தீர்ப்பாக இருக்கமுடியும்!

தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும்வரைதான் சமுதாய ஒழுக்கம் காக்கப்படும்!

இங்கு பரவலாக முன்னுதாரணம் காட்டப்படும் முற்போக்கு நாடுகளிலும் முறைதவறிய ஒழுக்கம் அங்கீகரிக்கப்படவில்லை!

அங்கு நம்மைவிட நேர்மை அதிகம்!
பிடிக்காத, ஒவ்வாத உறவிலிருந்து நேர்மையாக விலகியபிறகே இன்னொரு உறவை தொடர்கிறார்கள்!
கள்ள உறவு தண்டனைக்கு அப்பாற்பட்டது என்று யாரும் கொடிபிடித்து கொண்டாடவில்லை!

இந்த அரைவேக்காட்டு தீர்ப்புகளும் சிலாகிப்புகளும் எந்தவகையிலும் கொண்டாடத்தக்கவையோ தாங்களே சொல்லிக்கொள்வதுபோல் புரட்சிகளோ அல்ல!

புறக்காரணிகள் எல்லாமே, குறிப்பாக வீடுதோறும் பார்க்கப்படும் தொலைக்காட்சித் தொடர்கள், முறையற்ற உறவுக்கு ஆயிரம் சாதகங்களைக் கற்பித்துத் திரிவதும், ஒழுக்கவிதிகளை கேள்வி கேட்பதுதான் புரட்சி என்ற அபத்த மனநிலை பெருகிவருவதும் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு இது.

கண்டிப்பாக இந்த சட்டப்பிரிவு ஒருதலைப்பட்சம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், அவன் தவறு செய்தால், நீயும் தவறு செய்யலாம் என்று லைசென்ஸ் கொடுப்பதல்ல நீதிமன்றம்.

யார் தவறு செய்தாலும் தண்டனை ஒன்றுதான் என்று நெறிப்படுத்துவதுதான் நீதிமன்றம். 
இந்தத் தீர்ப்பில் அது மொத்தமாக சறுக்கியிருக்கிறது!சமீபத்து இன்னொரு தீர்ப்பு சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது பற்றியது!

இதில், ஆண் நீதிபதிகள் இதை அனுமதித்தபோது, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியவர் ஒரு பெண் என்பதுதான் கொடூரம்!நம்முடைய பல மத மூட நம்பிக்கைகள் நான் சிறுவயதில் கேள்விப்பட்ட ஒரு கதை போலத்தான்!

ஒரு முனிவர் யாகம் செய்யும்போது ஒரு பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டு இடைஞ்சல் செய்ய,
தன் சிஷ்யர்களை அந்தப் பூனையைப் பிடித்து ஒரு கம்பத்தில் கட்டச்சொல்லியிருக்கிறார்.

காலப்போக்கில் ஏனென்று கேட்காமலே, அந்தப்பூனையை யாகத்துக்குமுன் கம்பத்தில் கட்டுவது வழக்கமாகிப்போனது!

 குருவும் செத்து, பூனையும் செத்தபிறகும்,
யாகத்துக்கு முன் ஊரெல்லாம் தேடியாவது ஒரு பூனையைப் பிடித்து கம்பத்தில் கட்டுவது முக்கியமான சடங்கானது!

இதைப்பார்த்து மற்ற குருகுலங்களும் பின்தொடர, யாகத்துக்குமுன் பூனை தேடுவது முக்கிய சடங்கானது!

இப்படித்தான் இருக்கிறது அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் ஒழுக்கம் கெடும் என்பதுவும்!

மாதவிலக்கு என்பது அசிங்கம் என்று இன்னும் எத்தனைநாள் பொய்யான கற்பிதத்தை சொல்லிக்கொண்டு திரியப்போகிறோம்?

அந்த நாட்களிலும் உடல் வலிமையோடு ஒருபெண் இன்று எல்லா வேலைகளையும் செய்யும்போது கோவிலுக்கு வருவது எப்படி குற்றமாகும்

இதை காரணம் காட்டி, மாதவிலக்கு நாட்கள் இருக்கும் ஏறத்தாழ நாற்பது ஆண்டு காலம்வரை அந்தப்பெண் ஒரு கோவிலுக்கே வரக்கூடாது என்பது முட்டாள்தனமான காட்டுமிராண்டித்தனம்!

பல்லைக்கடித்துக்கொண்டு மனமின்றி நிர்பந்தத்தால் விரதம் இருந்து, மலையேறி இறங்கிய மறுநிமிடம் பம்பையில் ஏதும் சாராயக்கடை, கறிக்கடை இருக்கிறதா, வேறு ஏதும் கிடைக்கிறதா என்று அலைவதுதான் பக்தி எனில் அது கெடுவதில் தவறே இல்லை!

முதலில் கோவில் குருக்களை சட்டை போடச்சொல்லி ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவர முயலட்டும் இந்த உச்ச நீதிமன்றம்!

இன்னொரு குரூரம், கேரள கோவில்களில் ஆண்கள் யாரும் சட்டை அணியக்கூடாது என்பது!

ஆண்களேயானாலும், சிலுக்கு சுமிதாவைவிடப் பெரிய மாரைத் திறந்து போட்டுக்கொண்டு சுற்றிவர நிற்கும்போது எனக்கெல்லாம் பக்தி வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது!

இதற்கொரு நல்ல தீர்ப்பைத் தரட்டும் நம் உச்ச நீதிமன்றம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக