செவ்வாய், 27 நவம்பர், 2018

நம்மை ஆளத்துடிக்கும் ஆண்டவர்கள்! தொடரின் முதல் பதிவு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!மீண்டும் கொஞ்சம் அரசியல் பேச்சு!  

அரசியல் பேசி வெகுநாள் ஆச்சு!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளை!
ஒருவேளை, சட்டமன்றத் தேர்தலும் கூடவே வரும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை! (ஒரு நப்பாசைதான் - தமிழகத்துக்கு ஏதாவது நல்லது நடக்காதா என்று!)

மேலும், சமீப காலத்து இணையப்பதிவுகள் வேறு ஏற்றிவிட்டதில், இன்னொரு அரசியல் சீரியல் பதிவுகள்!

வழக்கம்போல் முதலில் ஆளும் கட்சி!தமிழகத் தேர்தலில் நமக்கிருக்கும் வாய்ப்பில் இப்போது அதிக வாக்குவங்கியை வைத்திருப்பதாய் அறியப்படும் கட்சி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!

முதலில் கட்சிப்பெயரே ஒரு பொருந்தச்சொல்!

அனைத்திந்திய - இந்திராவுக்கு பயந்து ஒட்டவைத்த ஆறாவது விரல்!

அண்ணா - எங்கள் கட்சிக்கொடியில் இருப்பதால்தான் அவரை உலகுக்கே தெரியும் என்று  திருவாய் மலர்ந்தபோதே, அண்ணா அங்கிருந்து ஓடியே போனார்!

திராவிட - இது அவர்களே ஒவ்வாச்சொல்!

முன்னேற்ற - இதுவேண்டுமானால் அவர்களுக்கு மட்டும் பொருந்தும்!

கழகம் - ழகரம் மாறிவந்துவிட்டது!

அது ஒரு அடிமைக்கூடாரம்!


தான் கேட்டது கிடைக்காத கோபத்தில் எம்ஜியார் ஆரம்பித்த கட்சி இது!

திராவிட முன்னேற்றக்கழகம் ஊதிப் பெருக்கவைத்த தன் பிம்பத்தைக் கலையாமல் பார்த்துக்கொண்டு கட்டிக்காத்தது எம்ஜியாரின் சாதனை!

தனக்குப்பின் யார் என்பதில் எந்தத் தெளிவுமற்று எங்கோ நிம்மதியாக இருந்த பெண்மணியை,
 தன் உடமையை வேறொரு இடத்தில் பார்க்கப் பொறுக்காத ஈகோவில் வலுக்கட்டாயமாக இழுத்துவந்து பொறுப்பைக் கொடுத்து,
பின்விளைவாக அவர் கட்சியை அவர் வசப்படுத்துவதை தவிர்க்க முடியாமல் போய்சேர்ந்தார்!


தன்னை சாகும்வரை முதல்வராய் வைத்து அழகு பார்த்த தமிழகத்துக்கு புரட்சித்தலைவர் தந்த கொடூரமான பரிசு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்!

எனக்கென்று யாருமில்லை,
நான் தவவாழக்கை வாழ்கிறேன்
என்று ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு
அவர் சம்பாதித்த பல்லாயிரக்கணக்கான கோடிகள் நிர்வகிக்க ஆளில்லாமல்! வாங்கிய ஒற்றை ரூபாயில் எத்தனை சொத்து!

நல்லவேளை, அவர் முழு சம்பளம் வாங்கவில்லை!


அவர் விட்டுப்போன அடிமைகள் இன்று தமிழகத்தை நிர்வகிக்க நேரமில்லாமல் அம்மா வழியில் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் - சுருட்டும் தொழிலில் அறுபதடி பாயும் அடிமைக்குட்டிகள்!

விசுவாசம் என்பது மருந்துக்குக்கூட இல்லாமல், காரியம் ஆவதற்காக அடிமை வேடம் போட்ட ஓநாய்கள் கூட்டமே இந்தக் கட்சி!

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று சர்வ சாதாரணமாக ஜெயலலிதா ஆனது ஜெயாவே எதிர்பார்த்திராதது!

என்னேரமும் கூப்பிய கரமும், வளைந்து குனிந்த  முதுகும், நிமிர்ந்த பிருஷ்டமுமாய், காலைக் கண்டதும் ஓடிவந்து சாஷ்டாங்கமாய் விழுந்து புரண்ட அடிமைகளை எழுந்துவந்து உதைத்திருப்பார் - காலோடு புதைக்கப்பட்டிருந்தால்!

அம்முவால் மறைக்கப்பட்ட புரட்சித்தலைவர் புன்னகைத்திருப்பார்!

கவனிப்பார் அற்ற சவலைப்பிள்ளையாக அலைந்துகொண்டிருக்கிறது மாநிலம்!

நிர்வாகம் என்பது மங்குனிகளுக்கு சற்றும் தெரியாத கெட்டவார்த்தை!

சமீபத்து உதாரணம், உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட சீராய்வு மனு!

இனி ஒரு வாய்ப்பில்லை என்னும் நிதர்சனம் புரிந்து, கிடைக்கும் இடத்திலெல்லாம் சம்பாதிக்கும் அசரவைக்கும் வேகம்!

சாராயம் விற்பது தவிர வேறு வருமானமே இல்லாமல் தள்ளாடும் நிதி நிலை!

அபாய கட்டத்தையும் தாண்டி ஐசியூவில் கிடக்கும் மின்சார வாரியம்!

உலகவங்கியின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிதி நிர்வாகம்!

தன்னை ஒரு ஜெயலலிதாவாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார் பழனிசாமி!

அதே ஆடம்பரம்,
மக்களை சந்திப்பதில் அதே அலட்சியம்!

உச்சகட்ட தடித்தனம்,
வெள்ளம் வடிந்தபின் ஆகாய மார்க்கத்தில் நடந்த சிற்றுலா!

என்ன, அன்று மீசையில்லாத இரண்டு ஆண்கள்!
இன்று மீசை வைத்த இரண்டு பெண்கள்!
வித்தியாசம் அவ்வளவுதான்!


சசிகலாவுக்கு சற்றும் சளைத்தவரல்ல தர்மயுத்தம்!

இன்றைய சொத்து மதிப்பில் சசிகலா கூட்டத்தை இப்போதே அவர் முந்தியிருக்கும் சாத்தியக்கூறுகளே மிக அதிகம்!

சம்பந்தி என்பது ரத்தசம்பந்தமான உறவல்ல என்பதைக் கண்டுபிடித்த மாண்புமிகு முதல்வர் அவருக்கு மயிரிழை அருகில்!

பார்ப்போம், இன்னுமுள்ள மூன்றாண்டுகளில் யார் முந்துகிறார்கள் என்று!

புயல் புரட்டிப்போட்ட மக்களை சந்திக்கவேண்டிய நேரத்தில் செண்டை மேளம் முழங்க மாமனார் வீட்டில் கறிசோறு, பொங்கல்!

கட் அவுட் விழுந்து எத்தனை பேர் செத்தாலும், உச்ச நீதிமன்றம் எத்தனை குட்டினாலும், அரையடிக்கு ஒரு கட் அவுட்! சாலைகளை மறித்து தோரணங்கள்!


வரும் வழியெங்கும் மணிக்கணக்கில் போக்குவரத்து நிறுத்தம்!

நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஒரு மனிதர், ஊருக்கே சோறுபோட்ட டெல்டா மாவட்ட மக்கள் புயலால் உருக்குலைந்து போய் அல்லாடிக்கொண்டிருக்கும்  வேளையில்

கொஞ்சமும் கூச்சமே இல்லாமல், நிர்வாகத்திறன் மிகுந்த மாநிலம் என்று ஒரு அபத்தமான விருது வாங்கிக்கொண்டு முப்பத்திரண்டு பல்லையும் காட்டி இளித்துக்கொண்டு போஸ் கொடுக்கவும்
அதை முழுப்பக்க விளம்பரங்களாக எல்லாப் பத்திரிக்கைகளிலும் பிரசுரித்து புல்லரிக்கவும் ஒரு கொடூரமான ஆணவம் வேண்டும்!
ஜெயலலிதாவுக்கே இவையெல்லாம் செய்ய சில ஆண்டுகள் ஆனது!

பழனிசாமி ஆடம்பரம் கற்றுக்கொண்ட வேகம் அபாரம்!

இரட்டை இலை கையிலிருக்கும் ஆணவம், மக்களை ..ருக்கு சமமாக மதிக்கச் சொல்கிறது போல!

சட்டென்று அடித்த சுழற்காற்றில் கோபுரம் ஏறிவிட்டோம் என்று ஆணவப்படபடப்பு ஆபத்தானது முதல்வரே!

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஜெயலலிதா ஆனதற்கும்,

தான் தவழ்ந்து பழகித் தொழ காலடியில் இடம் கொடுத்த தியாகத்தாய் சின்னம்மா சதிகாரி ஆனதற்கும்

எத்தனை சிறிய காலம் தேவைப்பட்டதோ அதைவிட மிகக்குறைந்த கால அவகாசம் போதும்,

மாண்புமிகு முதல்வர் தான் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிவந்து விழ!

முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இத்தனையும் சகித்துக்கொண்டு மேலிருந்து ஆட்டிவைக்கும் எஜமானருக்கே எதிர்வரும் தேர்தல் அத்தனை பிரகாசமானதாக இல்லை!

நாட்கள் பறக்கும் வேகத்தில், தியாகத்தாய் சிறைமீளும் நாளும் தொலைவில் இல்லை!
அன்று உருட்டப்படும் பகடைகளில் காட்சிகள் மாறும்!

தான் அண்ணாந்து பார்த்து கும்பிட்ட ஹெலிகாப்டரில், தானே வலம் வந்து, பழக்க தோஷத்தில் அடிமைகள் அதற்கும் கும்பிடு போடுவதைப் பார்த்த திருப்தியோடு புழலிலோ, வேலூரிலோ வாசம் செய்ய நேரிட கத்தை கத்தையாய் காரணங்கள் இருக்கின்றன முதல்வரே!

சிபிஐ, எந்த எஜமானர் மத்தியில் வந்தாலும் வாலாட்டப் பழகிய ஜீவனாய் மாற்றப்பட்டது விதைத்தவனுக்கே வினையாகும்போது,
ஆடிக்காற்றில் அம்மிகளே பறக்கும்!
குப்பைக்காகிதம் என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!

வழக்கம்போல் கொங்குமண்டலம் காப்பாற்றிவிடும் என்று இறுமாந்திருக்கும் முதல்வருக்கு கொங்குமண்டலம் மட்டுமே தமிழ்நாடு இல்லை என்பது விரைவில் புரியும்!

தனி மனித எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆத்திரத்தில், எந்தக் கொள்கையும் இல்லாது ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி,

இந்தியாவிலேயே முதன்முதலாக ஊழல் வழக்கில் முதல்வர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெருமை உடைய கட்சி,

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் அறையில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட ஆட்சி நடத்தும் ஒரே கட்சி,

இனி,
சிறையிலிருந்து தியாகத்தாய் வந்ததும் சின்னாபின்னம் ஆகுமோ,
அன்றி,
சசிகலா காலடியில் உருளுமோ,
து தமிழகத்தின் தலைவிதியைப் பொறுத்தது!