வெள்ளி, 6 டிசம்பர், 2019

என்கவுண்டர் சட்டப்படியான தீர்வா?
சட்டத்தை எப்படி போலீஸ் கையில் எடுக்கலாம்?

இந்த என்கவுண்டர் நடந்திருக்கக்கூடாது.

இது சரியான தீர்வல்ல.

கொல்லப்பட்டவன் அப்பாவியாக இருக்க வாய்ப்பிருக்கிறது!

இதில் வேறு யாராவது உடந்தையாக இருந்திருந்தால் எப்படிப் பிடிப்பார்கள்?

- இது அத்தனையுமே மிகச் சரியான கேள்விகள்!

பாலியல் வன்முறை என்ற கட்டத்தை தாண்டி, தடயமே இல்லாமல் எரிப்பது என்ற அடுத்த கொடூரத்துக்கு குற்றவாளிகள் முன்னேறியிருக்கிறார்கள்

ஆனால், நம் நீதிமன்றமும் சட்டங்களும் இன்னும் போன நூற்றாண்டிலேயே இருக்கின்றன!

1.       கொலை போன்ற கிரிமினல் குற்றங்களுக்கு எக்காரணம் கொண்டும் ஜாமீன் வழங்கக்கூடாது

2.       நிரூபணம் செய்யவேண்டியது  (Onus / Burdon of proof ) குற்றம் சாட்டியவர்களோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு - சூழலுக்கு ஏற்ப.

3.       அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடித்துவிடவேண்டும்!

4.       இரு தரப்பும் எந்தக் காரணம் கொண்டும் வாய்தா கேட்கக்கூடாது.

5.       தண்டனையை நிறுத்திவைக்க / முறையீடு செய்ய அனுமதி இல்லை.

6.       அதிகாரிகளோ, அரசியல்வியாதிகளோ எக்காரணம் கொண்டும் போலீஸ் விசாரணையில் குறுக்கிடக்கூடாது!

7.       அப்படி குறுக்கீடு செய்பவர்களும், லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளும் விசாரணைக்கு முன் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்!

8.       விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் சாகும்வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்!

இப்படி எந்த சட்டத் திருத்தமும் கொண்டுவருவது கனவில்கூட சாத்தியமில்லை!

அடுத்த நாளே, அதே இடத்தில் வேறொரு பெண் இதே போல எரிக்கப்பட்டுக் கிடந்திருக்கிறார்

அது மீடியாவின் பார்வைக்கோ, நம் பரபரப்பு விவாதத்துக்கோ  எடுத்துக்கொள்ளப்படவில்லை!

ஏன் என்பதற்கு எனக்கு விளக்கமும் தெரியவில்லை!

நேற்று இதைவிடக் கோரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது!

இதேபோல் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட இருவர், ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்!

சாட்சியை மறைக்க இப்படி ஒரு அழகான வழி இருப்பது அவர்களுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது பாவம்!

கூட சிலரைக் கூட்டிகொண்டுபோய், புகார் கொடுத்த பெண்ணைக் கொளுத்திவிட்டார்கள்!
90 சதவிகித தீக்காயத்தோடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இந்நேரம் இறந்திருக்கவே 100 சதவிகிதம் வாய்ப்பு!

இனிமேல், இப்படி வன்புணர்வு செய்பவர்கள், ஆற்றங்கரையில் வைத்து எரித்துவிட்டு, சாம்பலையும் கரைத்துவிட்டுப் போகட்டும்!

சட்டம் நிதானமாக, சொரிந்துகொண்டு, தன் பழைய பல்லவியை பாடிக்கொண்டிருக்கட்டும் - 
"ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது - எனவே, போதிய சாட்சிகள் இல்லாததால் ......"

சட்டத் திருத்தத்துக்கு வாய்ப்பில்லை!

சமுதாயம் மாற வாய்ப்பே இல்லை!

எனில், என்ன செய்வது?

முடிந்தால், காசு பணம், பதவி, செல்வாக்கு எல்லாம் சேர்த்துக்கொண்டு நாமும் இதை முயன்று பார்க்கலாம்

முடியாதவர்கள் பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு நடிக சண்டை போடலாம்!

இந்த என்கவுண்டர் இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூவைக் கொண்டாடுவதுபோல

அவ்வளவுதான்!

மனித உரிமை பற்றியெல்லாம் பெரிதாக உணர்ச்சிவசப்பட்டு கவலைப்பட வேண்டியதில்லை!

காசோ, செல்வாக்கோ இருப்பவனுக்கு இதெல்லாம் நடக்கப்போவதில்லை!
நாமும் இதை அதிகபட்சம் அடுத்த பரபரப்புக்குப்பிறகு நினைவில் வைத்திருக்கப்போவதில்லை!பொள்ளாச்சி சம்பவத்தில் ஒரு மாண்புமிகு அமைச்சரே திருவாய் மலர்ந்ததாக கேள்விப்பட்டேன் - பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று!

எனவே, இல்லாதவனுக்கும், கேள்வி கேட்க வக்கில்லாதவனுக்கும் மட்டும்தான் இந்த என்கவுண்டர் புண்ணாக்கு எல்லாம்!

மற்றவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை!

வன்கொடுமை செய்யலாம்
வீடியோ எடுக்கலாம்
மிரட்டிக் காசோ சுகமோ வாங்கலாம்!

சட்டம் போதிய பாதுகாப்புத் தரும்!

அந்தப் பெண்ணுக்கு அறிவு எங்கே போனது

இருட்டியதற்குப்பின் அவருக்கு சாலையில் என்ன வேலை?

அவர் ஏன் முகத்துக்கு பவுடர் அடித்திருந்தார்?

அவர் உள்பாவாடை ஏன் மஞ்சள் கலரில் இருந்தது

அவர் துப்பட்டா ஏன் விலகியிருந்தது

வீட்டுக்கு ஃபோன் செய்ததற்கு பதிலாக அவர் ஏன் போலீசுக்கு போன் செய்யவில்லை?

வல்லுறவு கொள்ளப்படும்போது ஏன் அவர் ஒத்துழைக்காமல் எதிர்த்தார்?

நமக்கென்ன,
கேள்விகளா கேட்கத் தெரியாது?

மேலும், நமக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சேலம் அரசு மருத்துவமனை தாதிக்கு எந்த நீதி கிடைத்தது?

- அத்தனை சட்டங்களும், சாட்சியங்களும் இருந்தும், நீதிமன்றத்தில், அந்தப் பெண்ணின் தகப்பனே " செத்தது என் மகளே அல்ல" என்றுதானே சொல்ல முடிந்தது?

சிங்கமும், அதன் குட்டிகளும் சாகும்வரை சந்தோசமாகத்தானே இருந்தனபியில் பாலியல் குற்றம் சாட்டியவர் குடும்பமே விபத்துக்களில் பூண்டோடு அழிகிறது!

இந்த அரசியலைப் பேச ஆரம்பித்தால், எல்லாக் கட்சியும் அரிவாளோடு ஓடிவரும்

காலகாலமாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வராத ஆபத்து இப்போதும், இனி எப்போதும் வரப்போவதில்லை!

இல்லாதவனுக்குக்கூட தண்டனை கொடுக்கக் கூடாது என்றால், சட்டம் எப்போதுதான் தன் கடமையைச் செய்வது?

அதிகார வர்கத்தின் அசிங்கப்பட்ட  முகத்தை காப்பாற்றிக்கொள்ள இது ஒரு தற்காலிக சமாளிப்புதான்!

எனவே, வீண் பதட்டம் தேவையில்லை!

வழமைபோல,
Sons of lesser Gods இதிலும் ஒரு உபகரணமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளனர்

அவ்வளவே!
சொல்ல மறந்துவிட்டேனே-
ஜெய் ஹிந்த்!