வியாழன், 31 ஜனவரி, 2019

சின்னத்தம்பி, கறுப்பி - மகள் எழிலி!“யோவ், எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா நீ? இருக்கற எடத்துல என்ன கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்கலாம். அந்தப் பட்டணத்து ஆளுங்க இருக்கற திசைக்கே போகவேண்டாம்!”

கறுப்பியின் குரல் சின்னத்தம்பி காதில் விழுந்தமாதிரியே தெரியவில்லை!

சின்னத்தம்பி - இந்தப்பெயர் கூட அந்தப் பட்டணத்து ஆளுக வெச்சதுதான்!

அவங்களுக்கு இந்தக் காட்டுக்கூட்டத்துல வெக்கற பேரெல்லாம் புரியறதுமில்ல, புடிக்கறதுமில்ல!

சர்ரு புர்ருன்னு ப்ளஷர் காரு, ஜீப் இதுல இந்த இடத்துக்கு அவனுக வர ஆரம்பிச்சு, என்ன, ஒரு அறுபது வருஷம் இருக்குமா?
அதுக்குள்ளே இழவுவீடு மாதிரி ஆக்கிட்டானுக இந்த இடத்தை!

சின்னத்தம்பிக்கு நல்லா நியாபகம் இருக்கு!
அவனோட அப்பா சொல்லியிருக்கிறார்!

எப்படி இருந்துச்சு இந்த இடம்!
இங்க எல்லாருக்கும் எப்போதுமே தேவைக்குமேலதான் எல்லாமே கெடச்சுக்கிட்டு இருந்துச்சு!
சின்னத்தம்பி பொறக்கறதுக்கு முன்னாடி அவங்க அப்பன், பாட்டன், பூட்டன் எல்லாரும் ஆண்டு அனுபவிச்ச இடம்தான் இது!

இங்க யாரும் தேவைக்குமேல ஆசைப்படறதும் இல்ல, பேராசை புடிச்சு எதையும் நாலு தலைமுறைக்கு சேத்து வைக்கறதும் இல்லை!

சரி, சின்னத்தம்பி வாயாலையே அவன் கதைய கேப்போமா!


தேவைக்கு மட்டும் சம்பாத்தியம்! மத்த நேரங்களல்ல குடும்பத்தோட நிம்மதியான உலாத்தல்! நிம்மதியாகத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு வாழ்க்கை!

திடீர்ன்னு கருகருன்னு புகையை கக்கிக்கிட்டு சில வண்டிக வந்துச்சு! வெறும் டவுசரும் தொப்பியும் போட்டுக்கிட்டு ஜீப்பு வண்டீல வந்தானுக

அவனுகள பார்த்தாலே இந்த மண்ணுக்கு ஆனவனுகன்னு தெரியல! வேகவெச்ச கெழங்குமாதிரி வெளேர்ன்னு இருந்தானுங்க!
ஓஹ்! மார்வலஸ் பிளேஸ்! அப்படி இப்படின்னு எதோ பேசிக்கிட்டு போய்ட்டாங்க!

கொஞ்ச நாளிலேயே தார் வண்டிய உருட்டிக்கிட்டு வந்து இந்த எடத்துல ரோடு போட்டானுக!

எங்க சனமெல்லாம் என்ன நடக்குதுன்னு நின்னு கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்ததோட சரி! அப்போ தெரியாது இந்த ஆளுக எங்க அடிமடியில கைவைக்க வந்திருக்கானுகன்னு!

கொஞ்சநாள் அவனுக சொகுசா இருக்க எங்க இடத்தையெல்லாம் உருக்கொலைச்சானுக!

மஞ்சளானையும், புள்ளிக்கருப்பனையும் நீள நீள கொழா துப்பாக்கியால சுட்டுக் கொன்னானுக பாவிக!

எங்களுக்கும் மஞ்சளான் கூட்டத்துக்கும் ஆகாது! ஆனாலும் அவனுக அழியறதை எங்கனால  பாக்க முடியல!

இந்த இடமே, எல்லோருக்கும் எல்லாமே கிடைச்சு நிம்மதியா வாழ உருவானதுதானே! அவரவர் பசிக்கு விதித்ததை கொல்வதும் தின்பதும் இந்த இடத்தோட எழுதாத சட்டம்!

எங்க பாட்டன் தலையை தலையை ஆட்டிக்கிட்டே சொன்னாரு!
இந்த பேராசை பிடிச்ச இழிபிறவிக நம்மள அழிக்காம அடங்கமாட்டானுங்க!
எல்லாத்தையும் அழிச்சுட்டு கடைசியா அவனுகளும் அழிஞ்சுபோவானுக!”

அதுக்கப்பறம் எங்க தாத்தாவை எப்படியோ கோவில் வேலைக்கு புடிச்சுக்கிட்டுப் போய்ட்டானுக!

ராசா மாதிரி கம்பீரமா சுத்திவந்த ஆளு!
அரைக்காசுக்கும், அளவு சோத்துக்கும் அடிமையா போயிட்டாரு!

எங்க தாத்தன மாதிரி பலரையும் கோவில் வேலைக்கு இழுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!

அந்தப் பாழாப்போன சாமிக்கு எங்ககிட்ட வேலை வாங்கறதுல என்ன சந்தோஷமோ, இல்லை, இந்த பட்டணத்து ஆளுகளுக்கு எங்களை வேலைக்கு வெச்சுக்கறதுல என்ன பெரிய கௌரவமோ, எங்க சந்ததியில பலபேரு கோவில்ல யாசகம் வாங்கற வேலைக்குப் போய்ட்டாங்க!

பெருசா இருந்தா மட்டும் போதாது, சாதுவா இருக்கறது எவ்வளவு தப்புன்னு எங்க ஆளுகளுக்கு புரியறதுக்குள்ள நெலமை கைமீறிடுச்சு!

ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய ஒழிச்ச கதையா, எங்க இடத்துக்கு சுத்திப்பாக்கறேன்னு வந்த படுபாவிக கொஞ்சம் கொஞ்சமா நாங்க நடக்கற வழியெல்லாம் வேலிபோட்டு மறிச்சானுக! எங்க வெகுளி சனம் வேலியில கைவெச்சா கரண்டு வெச்சு எரிச்சானுக!

எங்க ஊர, எங்க சாப்பாட்ட, எங்க நெலத்த எங்க கண்ணுமுன்னாடியே புடிங்கிக்கிட்டு எங்களுக்கு ஏதோ பிச்சை போடறமாதிரி, நாங்க இந்த எல்லைக்குள்ளேதான் இருக்கணும்ன்னு அவனுகளே முடிவு பண்ணுனானுக!
எங்க வயித்துப்பாட்டுக்கு கொஞ்சம் தடம் மாறி வந்தா, லாரி, பஸ்ஸு, ரயிலு எல்லாத்தையும் ஏத்திக் கொன்னானுக! ஏண்டா அநியாயம் பண்றீங்கன்னு கோவப்பட்டா, துப்பாக்கியால சுட்டானுக!

கேட்டா, அவனுகதான் ஒசந்த பிறவிகளாம்!
யாரு?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ன்னு படிச்சுட்டு, உலகம் முழுசுமே எங்க இனத்துக்குத்தான் அப்படின்னு மத்த எல்லாரையும் கொன்னுபோடற கொலைகாரப் பாவிக! இவுனுகளுக்கு கும்பிட நூறு சாமி வேற!
…த்தூ!

ஒரு எழுவது எம்பது வருசத்துக்குள்ள இந்த பூமியவே சுடுகாடு ஆக்கிட்டானுக!

இதா, இப்போ கறுப்பி எதுக்கு கத்திக்கிட்டு இருக்கறா தெரியுமா?

எங்க அப்பன் எனக்கு ஆசையா தந்த தீனியெல்லாம் இப்போ இங்க கிடைக்கறது இல்லை! வயித்துப்பாட்டுக்கு எதோ கொஞ்சமும், குடிக்க நாலுவாய் தண்ணியும் இருந்தா போதும் அப்படிங்கற நிலைக்கு எங்களை கொண்டுவந்துட்டானுக!

எங்க பண்டமெல்லாம் இப்போ அவனுகளுக்கு!

என் மக எழிலி (நான் வெச்ச பேரு! நல்ல இருக்கா? இந்த மண்ணுக்கான பேரு!) என் பால்யக் கதை கேட்டுட்டு, அப்பா, எனக்கும் அந்த தீனியை திங்கணும்போல இருக்குதுன்னு கேட்டுப்புட்டா

சின்னக் கொழந்தை பாவம்! அது என்ன உங்கள மாதிரி, காருக்கும் தேருக்கும் காசுக்குமா ஆசைப் பட்டுது?

எங்க எடத்துல எங்க தேவைக்குமேல கெடச்சுக்கிட்டிருந்ததை கொஞ்சூண்டு சாப்பிட்டுப் பார்க்கறேன்னுதான் கேட்டுச்சு!

இந்த மண்ணுல பொறந்து இந்த மண்ணையே காப்பாத்தி இந்த மண்ணுக்கே சேவை செய்யற எங்க கொழந்தைகளுக்கு அந்த உரிமை இல்லையா?

கறுப்பி அடங்கமாட்டா, எனக்குத் தெரியும்! ஆனா எழிலிக்கு அவ கேட்டதை வாங்கித் தர்லைன்னா எனக்கெதுக்கு இந்த ஒடம்பும் உசுரும்?

சாயங்காலம் எழிலிக்கு கறுப்பி விளையாட்டு காட்டிக்கிட்டிருந்தா!
சத்தமே போடாம தீனி தேடி கிளம்பிட்டேன்!

எனக்குத் தெரியும் அதெயெல்லாம் இந்த பட்டணத்து ஆளுகதான் வெச்சிருக்கறானுகன்னு!


நாலுநாள், உயிருக்கு துணிஞ்சு, அவனுக ஊருக்குள்ள தேடி அலைஞ்சேன்

என்னதான் நெஞ்சுல ஈரமில்லாத பயலுகன்னாலும், என்னைப் பார்த்தா அவனுகளுக்கு கொஞ்சம் பயம்தான்!

என்னை என்னென்னவோ செஞ்சு வெரட்டப் பாத்தானுங்க
இந்தத் தடவை, என் எழிலி கேட்டது இல்லாம நான் ஊருக்குப்போறமாதிரி இல்லை!

அப்போதான் இந்த டவுனுக்கார அயோக்கியனுகளுக்கு ஒரு வழி தெரிஞ்சது!

கோவில் வேலைக்கு வந்து இங்கேயே தங்கிப்போன என்னோட ஆளுக, அவனுக புள்ளைங்கன்னு நாலஞ்சுபேர கூட்டிக்கிட்டு வந்தானுக!

எங்க ஆளுகதான் ரெண்டு தலைமுறையா தாங்க யாருன்றதையே மறந்துட்டாங்களே!
அந்த அடிமை சோத்துக்கு ஆசைப்பட்டு என்னை குண்டுக்கட்டா கட்டி கொண்டுபோய் கண்காணாத தேசத்துல ராவோட ராவா எறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க!

நாலுநாளா அன்னம் தண்ணி இல்லாம அலைஞ்சு ஒருவழியா, ஊருக்கு வந்து கூப்பிடறேன்
எழிலி, மகளே!”

அப்பதான் பெரிய கருப்பு வந்து சொல்லுச்சு,
“நாங்க என்னப்பா பண்ணட்டும், உன் பொண்டாட்டி பிள்ளை ரெண்டுபேரும் எத்தனை சொல்லியும் கேட்காம அந்த டவுனுக்கார ஊருக்குள்ள உன்னைத் தேடிப் போயிருக்குதுக! அதுகளுக்கு என்ன ஆச்சோ!”

எனக்கு ஈரக்கொலை அந்துபோச்சு!
அந்த ஈரமில்லாத ஈனப்பாவிக அந்த அப்பாவி புள்ளையையும் என் மகளையும் புடிச்சு என்ன பாடு படுத்தப்போறானுகளோ!

இதோ, நானும் அவங்களை தேடி அலையுறேன்
எங்கயாவது கண்ணுல பட்டா சொல்லுங்க சாமி! உங்க கண்ணுலயே படாம நாங்க எங்கயாவது போய் பொழச்சுக்கறோம்!

உங்க சோக்காளிககிட்ட சொல்லுங்க! அவங்கள ஏதும் பண்ணி எங்கயாவது கொண்டு விட்டுறாதீங்க! மூணு சீவன் உயிரத்துப் போயிடும் சாமி! கொஞ்சம் கருணை காட்டுங்க!

சின்னத்தம்பி பேசி முடிச்சு தலையை ஆட்டிக்கிட்டே போயிட்டான்!

பாவம், அவன் பொண்டாட்டி பிள்ளைகளை அவனோட சேர விடுவாங்களா

எனக்குத் தெரியல!

ஆனா ஒன்னு மட்டும் உண்மை!

தன்னைத்தவிர மத்த உயிரினமெல்லாம் அழிய நினைக்கற பாவத்துக்கு மனுஷ குலம் துள்ளத் துடிக்க கொடூரமா அழியப்போகுது!

அப்போதான் சாமின்னு, தர்மம், சத்தியம்ன்னு சிலதெல்லாம் இருக்குன்னு நம்பமுடியும்!


Ref: 

https://t.co/hvXDdNwSCG

https://t.co/YdqVdUAGO1

https://twitter.com/TamilTheHindu/status/1090878192712204288சனி, 19 ஜனவரி, 2019

யாத்திரியின் வனயட்சி!யாத்திரியின் வனயட்சி!யாரோ பாதியாய்க் கடித்து வீசிய அப்பத்தைப்போல குறை வெளிச்சத்தோடு கூடவே வந்துகொண்டிருந்த நிலாவைத் தவிர துணைக்கு  யாருமே இல்லை - ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு!

இந்த மூன்று நாள் அடர்வனப் பயணத்தில் இன்று ஏதோ விசேஷமாக நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது!

வழக்கமாக ஒட்டிக்கொண்டு வரும் குடும்பம் இல்லாது எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தனியே கிளம்பி இதோ, மூன்று முழு நாட்களை ஒட்டியாகிவிட்டது
அலுத்துப்போய், உறங்கத் தோன்றும்போது எதிர்ப்படும் சிற்றூரில் ஏதோஒரு அழுக்கு விடுதியில் தங்கி, விடியுமுன் கிளம்பி தொடரும் இலக்கற்ற பயணம்!

பெரும்பாலும் ஏதோ ஒரு வனத்துக்குள் கையிலிருக்கும் பழங்கள், ரொட்டி என்று பசிக்கும்போது எதையாவது மென்றுகொண்டு, காரிலும், நிறுத்திவிட்டு கால் வலிக்கும் வரை நடந்தும் கழித்த மூன்று நாட்கள்!

பெரும்பாலும் போராடித்தான் அனுமதி பெற வேண்டியிருந்தது!

தங்க, உண்ண செலவு அதிகம் இல்லாத, அனுமதிக்கு லஞ்சம் கொடுக்கத்தான் ஏகப்பட்ட செலவு வைத்த பயணம்! அதிலும், விலங்குகள் தாக்கினால் தாங்கள் பொறுப்பில்லை என்ற மிரட்டலோடு!

தனிமை தந்த தைரியமும் சுதந்திரமும் வனத்துக்குள் அலுக்காமல் சுற்றவைத்தது!

கடந்துவந்த சில யானைகளும், தூரத்தில் தெரிந்த ஒற்றைக் கரடியும் பெரிதாக அச்சுறுத்தவில்லை! புலி வருமோ என்ற குறுகுறுப்பு மட்டும் அதிகாலைகளிலும் இதுபோல் இரவுகளிலும்!

மணி பார்த்தபோது பத்துமணி இருபத்தைந்து நிமிடம் என்று ஒளிர்ந்தது வாகனத்தில் இருந்த கடிகாரம்!

ரவிக்கு இன்னுமே, இந்த மொக்கையாய் எண்களைக் காட்டும் கடிகாரங்கள் ஏனோ எரிச்சலைத் தரும்!

இந்தமுறையாவது ஊருக்குப் போனதும் முட்கள் சுற்றிவரும் கடிகாரம் ஒன்றை வாங்கி வைக்கவேண்டும் என்று நூற்று எட்டாவது முறையாய் நினைத்துக்கொண்டே ஜன்னல் வழியாக எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே மெதுவாக காரை நகர்த்திக்கொண்டிருந்தான்!

இருளும், பனியும், குளிரும் நடுக்க, கதகதப்புக்கு ஏங்கியது உடம்பு!
வீம்புக்கு ஒரு ஸ்வெட்டர் கூட எடுத்துவைத்துக்கொள்ளாமல் புறப்பட்டது எத்தனை முட்டாள்தனம்?

ஒருமணி நேரத்துக்குமுன் சுளையாக முன்னூறு ரூபாய் வாங்கிக்கொண்டு இந்தக் காட்டுவழி சாலையில் அனுமதித்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் சொன்னான், அடுத்த ஊர் வருவதற்குள் நன்றாக பனி இறங்கிவிடும், அதுவும் அந்தக் குக்கிராமத்தில் தங்க எந்த வசதியும் இருக்காது என்று!

பேசாமல் அவன் சொன்னதுபோல் அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு தூங்கி எழுந்து வந்திருக்கலாம்!

என்னதான் கால்போன போக்கில் வனத்துக்குள் அலைந்து அலுப்பாக இருந்தாலும், ஒன்பது மணிக்கெல்லாம் தூங்க முடியாது என்பதோடு, இவ்வளவு அற்புதமான இரவை அந்த மலையாளியோடு கழிப்பது அவ்வளவு உவப்பானதாக தோன்றவில்லை!

கிரீச்சிடும் ராக்கோழி சத்தம் சகிக்கமுடியாமல் பாட்டைப் போட, இது இரவா பகலா என்று ஜானகி கேட்கும் கேள்விக்கு ஜேசுதாஸ் கவிதையாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்!

சட்டென்று வெகு அருகில் ஒரு வீட்டின் மின்மினி வெளிச்சம்!

ஊர் ஆரம்பிக்குமுன் அதோடு ஒட்டாமல் வரும் ஒற்றை வீட்டுக்கு எப்போதுமே ஒரு தனி கவர்ச்சி!
அந்த வீடு ஏறத்தாழ கானகத்துக்கு கரை வைத்ததுபோல் காட்டோடு ஒட்டியிருந்தது!

ஒரு சிற்றூர் அருகில் இருப்பதற்கான அடையாள வெளிச்சம் சற்று தள்ளியே தெரிந்தது!

வீட்டு வாசலில் யாரோ அசைவதுபோல் இருளில் தெரிய, சட்டென்று காரை நிறுத்தினான் ரவி!

வண்டியை விட்டு இறங்காமலே,  பாட்டின் இரைச்சலை மீறி  ஞான் இந்த ஒரு ராவில் இங்கு தங்க ஏலுமோ” என்று ஒரு அரைகுறை மலையாளத்தில் கேட்டபோதுதான், அந்தக் குரல் கேட்டது
அம்மே, யாரானு அது?”

அதிகாலை காட்டுக்குள் கேட்ட குயிலின் சாயலை ஒத்திருந்த குரல் வந்த திசையில் திரும்ப, பளிச்சென்று கண்ணைத் தாக்கியது வெளிச்சம்!

கதவைத் திறந்தவள் பின்னாலிருந்து கசிந்த விளக்கொளியில் நின்ற பெண் வடிவம் கண்ணைக் கூசியது!

அப்ப்பா! என்ன ஒரு வனப்பு!

கேரளப் பெண்களுக்கே உண்டான பளீர் நிறம், என்னை மட்டும் பார் என்று அதட்டிக் கேட்கும் கண்கள்
கதவில் படர்ந்த கொடிபோல் வடிவம்
சாட்டைபோல் நீளமான கைகள்
சேரநாட்டு பாரம்பர்ய ஒற்றை ஆடைக்குள் அடங்காது திமிரும் இளமை!
வ்வ்வாட் உமன்! 

சுதாரித்து அதே கேள்வியை அந்தப்பெண்ணிடமும் கேட்கசட்டென்று வந்தது பதில்!
ஸாரி! திஸ் ஐஸ் நாட்   லாட்ஜ்!”

அந்த அழகின் தாக்கத்திலிருந்து மீளுமுன்பே எதிர்பாராது வந்த நுனிநாக்கு ஆங்கிலம் தடுமாற வைத்தது!

சட்டென்று எஞ்சினை அணைத்து கீழிறங்கினான் ரவி!

ஐயம் ரவி, கமிங் ஃப்ரம்என்று ஆரம்பித்தவனை இடை மறித்தது குயில் - தமிழிலேயே பேசுங்கள், நான் படித்தது கோவையில்தான்!

நன்றி! ஒரு திட்டமில்லாத வனப்பிரஸ்தம் - மூன்றாவது நாள் பயணம் இன்று!
கண்ணில் தென்படும் இடத்தில் ராத்தங்கி விடியுமுன் கிளம்பி அடுத்த வனம்! இன்று இன்னும் பயணம் தொடர உடம்பில் தெம்பில்லை! போதாக்குறைக்கு பசி வேறு!
இன்று இரவு இங்கே தங்க இடம் கொடுத்தால், அதிகாலை கிளம்பிவிடுகிறேன். அதற்கு என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன்!

ஒருகணம் உற்றுப்பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு சொடுக்கியது!

வனப்பிரஸ்தம் - மிகப்பெரிய வார்த்தை ஊர் சுற்றுவதற்கு! இந்த வீடு உங்களுக்கு அவ்வளவு சவுகரியப்படாது!

இல்லை எனக்கு சாய்ந்துகொள்ள ஒரு பாய் போதும் - ப்ளீஸ்!

சரி, உள்ளே வாருங்கள்!
சொல்லிக்கொண்டே படியிறங்கி வந்தவளின் தாங்கொணாத சுகந்தம் தடுமாறவைத்தது!

“காரை அப்படியே ஓரமாக நிறுத்திவிட்டு வாருங்கள் சொல்லிக்கொண்டே சுவாதீனமாக கதவைத் திறந்து உள்ளே இருந்த ஒற்றைப் பையை கையில் எடுத்துக்கொண்டாள்

அவ்வளவுதானா லக்கேஜ்?”

“அதுவே அதிகம்!”

சொன்னவனை விநோதமாகப் பார்த்தாள்!

உள்ளே நுழைந்தபிறகுதான் தெரிந்தது அந்த வீடு அத்தனை சிறியது என்று!

ஒரு சின்ன படுக்கையறை, அதில் ஒற்றைக் கட்டில்!

ஹால் என்று சொல்லத்தகுந்த பத்தடிக்கு பத்தடியில் ஒரு சின்ன டிவி, ஒற்றை நாற்காலி, அந்த இடத்துக்கு சற்றும் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான புத்தக அலமாரி! ஏறத்தாழ முழுக்க நிரம்பியிருந்தது!

இத்தனை புத்தகங்கள் யாருடையது?

இங்கு நானும் அம்மாவும் மட்டும்தான்! அம்மாவுக்கு அவ்வளவாக படிக்க வராது!

சொல்லிக்கொண்டே கேட்டாள்
பசிக்கிறது என்று சொன்னீர்கள்! இங்கு இப்போது கொஞ்சம் மீதியான சோறும், கருவாட்டுக் குழம்பும்தான் இருக்கிறது! கொஞ்சம் ரசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்! அது போதுமா?”

தாயே அன்னபூரணி, என் யானைப்பசிக்கு அதுவே அமுதம்!

சரி, பின்னால்  போய் முகம் கழுவி வாருங்கள், குழம்பை  கொஞ்சம் சூடு பண்ணி வைக்கிறேன்! டவல் இருக்கிறதா, தரவா?

இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே பையிலிருந்து காலையில் சுருட்டி வைத்த துண்டை எடுக்க,

வேண்டாம், இதை எடுத்துப் போங்கள் - சொல்லியவாறே நீட்டிய துண்டில் அவளின் சுகந்தம்!

மறுக்கத் தோன்றாது வாங்கிக்கொண்டு தயங்கியவனை, 
வாருங்கள், வழி காட்டுகிறேன்

இடைவழியில் நுழைந்ததும் கண்ணைத் தாக்கியது இருட்டு!

இடதுபுறம் ஒரு சிறிய சமையலறை, சற்று தூரத்தில் இருந்த கதவைத் திறக்க, கொல்லைப்புறம்! டிபிக்கல் கேரளா வீடு!

உள்ளே லைட் ஸ்விட்ச் இருக்கிறது - சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் போய்விட்டாள்!

ஐஸ் கத்திபோல் இருந்தது தண்ணீர்
வாரி முகத்தில் அடித்துக்கொண்டு பூ வாசம் வீசும் டவலில் முகத்தை ஒற்றிக்கொண்டே நுழைந்தவனை தடுத்து நிறுத்தியது குரல்!
உங்களுக்கு சமையல்கட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதில் ஆட்சேபணை இல்லையே?

மை ப்ளெஷர் - சொல்லிக்கொண்டே வந்தவனை அவசரமாக தடுத்து சொன்னாள்
குனிந்து வாருங்கள், நிலைப்படி இடிக்கும்!”

சம்பிரதாயமாக தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பாடு!

குளிருக்கு வெதுவெதுப்பாய்  கருவாட்டுக் குழம்பு! தூக்கலாய் தேங்காயெண்ணெய் வாசனையோடு!

சொல்லுங்கள்! ஏதோ வனப்ரஸ்தம் என்று பெரிய வார்த்தை எல்லாம் சொன்னீர்கள்?

இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாதாரணன்களில் நானும் ஒருவன்! என்றைக்காவது லௌகீக அழுத்தம் தாங்கமுடியாமல், தோதாக விடுப்பும் கிடைத்தால், இப்படி காடுகளில் உலாத்தல் - மிச்ச வாழ்க்கையையும் அலுப்பின்றி வாழுதல் நிமித்தம்!

இந்த முறை குடும்பமும் கூட வராது தனிப்பயணம்!
கிடைத்த இடத்தில் கட்டையைச் சாய்த்துக்கொண்டு ஓடிய இரண்டு நாட்களுக்குப்பின், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தினத்தில் ஒரு வன யட்சி கையால் கருவாட்டுக் குழம்பு!

புத்தக அலமாரியை ஒரு பெண்ணைப்பார்ப்பதுபோல் ஆவலோடு பார்த்தீர்கள்! வாசிப்பில் நாட்டம் ஏதாவது?

கான்க்ரீட் வனத்தில் அதுதானே ஆசுவாசம்! ஜானகிராமனும், அசோகமித்திரனும் மீன்குழம்பும் சோறும்! இரா முருகன், இந்திரா பார்த்தசாரதி கல்யாண்ஜி, வண்ணநிலவன், கி ரா - ரசமும் பொரியலும்!

பிறமொழிகளில்?

எழுதப்படிக்க தமிழும் ஆங்கிலமும் மட்டுமே
ஆர்ச்சர் என் ஆதர்ஷம்
மலையாள மொழி பெயர்ப்பில் வாசுதேவன் நாயர்!

சும்மா என்னை இம்ப்ரெஸ் செய்ய சொல்லாதீர்கள்!

உங்களை இம்ப்ரெஸ் செய்து எனக்கென்ன ஆகிறது? இரண்டாம் இடம், வானப்பிரஸ்தம் இரண்டும் எப்போதும் என் புத்தக அலமாரியில் முன்னாடி இருக்கும்!

சூப்பர்! பாதிராவும் பகல்வெளிச்சமும் படித்துப்பாருங்கள்  இன்னும் நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!

அப்படிக் கண்ணகலப் பார்க்காதீர்கள்! எனக்கு நீச்சல் அரைகுறையாகத்தான் தெரியும்!

புன்னகையோடு சொன்னாள்  “ Flirting ஆண்களுக்கு சாகும்வரை தோற்காத ஒரே அஸ்திரம்!

அடிபட்ட பார்வையோடு தலைகுனிந்து சாப்பிட ஆரம்பித்தான் ரவி!

மெல்ல எழுந்து வந்து தலை கலைத்துச் சொன்னாள் - நான் விளையாட்டுக்குச் சொன்னேன்!

சாப்பிட்டு கைகழுவ எழுந்தபோது இருவருக்கும் இடையே சௌஜன்யம் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது!

ஹாலுக்கு வந்ததும், “கொஞ்சநேரம் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருங்கள் பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு வருகிறேன்!”

நாற்காலியில் மடித்து வைத்திருந்த புடவையை கையில் எடுத்தவாறே, "இது ஜமுனாவின் புடவை அல்ல- அம்மாவுடையது!" 
முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை!

அட! திஜா வரிகள்
நானும் அப்படி ஒரு சூழலை எதிர்பார்க்க பாபு அல்லவே!

சிரித்துக்கொண்டே உள்ளே நகர்ந்தவளை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்!

ஈரக்கையை புடவையில் துடைத்தவாறே வந்தவள் கேட்டாள் "பால் தீர்ந்துவிட்டது. கட்டஞ்சாயா குடிக்கிறீர்களா?"

இப்போதுதானே சாப்பிட்டேன்? இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமே?

ஸாரி! உங்களை கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்லமுடியாது
அம்மாவால் கீழே படுக்கமுடியாது! இடுப்பு வலி! கொஞ்சம் பார்வை, காது ரெண்டுமே மந்தம்!

உங்களுக்கு இங்கேயே பாய் விரித்துவிடுகிறேன்! நானும் அம்மாவும் உள்ளே படுத்துக்கொள்கிறோம்!

பேசிக்கொண்டே கீழே பாயை விரித்துப்போட்டாள்!

உட்காருங்களேன், கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கலாம்!

சரி! ஆனால் இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம், நீ என்றே சொல்லுங்கள்!
சொல்லிக்கொண்டே பாயில் உட்கார்ந்தாள்!

அப்போதுதான் இன்னொரு நாற்காலி இல்லை என்று உறைக்க, அவசரமாய் தானும் தரையில் இறங்கி உட்கார்ந்தான் ரவி!

சரி, சொல்லு, உன் பெயர் என்ன?

இப்போதுதான் சொன்னீர்களே, வனயட்சி! என்னைப்பற்றி சொல்ல வேறு என்ன இருக்கிறது?
தரை சில்லென்று இருக்கும், இப்படி பாயில் வந்து உட்காருங்கள்!

இந்த அனுமதிக்கு என்ன காரணம்? என் வயதா?

"நிச்சயமாக இல்லை! உங்கள் வயதொத்த பல கள்ளப் பிராந்தன்களை நான் பலமுறை கடந்துவந்திருக்கிறேன்! தெரியாமல் பட்டுவிட்டதாய் நடிக்கும் அவர்களின் விரல்களின் நடுக்கம், தலைகோதும் உங்கள் விரல்களில் இல்லாததும்,  பாவனையாகக்கூட  விரல்கள் கீழிறங்க முயலாததும் புரியாத அளவு முட்டாளில்லை நான்!
Dickens சொன்னதுபோல உங்கள் தொடுகை a touch that never hurts!
ஒருவேளை, Doubt is a pain and faith is its twin brother என்பதுதான் காரணமாக இருக்கும்!"
முகத்தில் மீண்டும் அதே புன்னகை! 

Gibran, திஜா, கல்யாண்ஜி என்று கோட் செய்யும் ஒரு பேரழகியை இந்த வனத்தில் சந்திப்பேன் என்று கனவில்கூட  நினைக்க முடியாது! இந்த இரவு அற்புதங்களின் சுரங்கம் போல!

உண்மையைச் சொன்னால், உன்னை முதலில் பார்த்தபோது புத்தக அலமாரியைப் பார்ப்பதுபோல்தான் நானும் பார்த்தேன்!

தெரியும்! ஆனால் அதில் ரசனையும் லயிப்பும் தெரிந்ததேயன்றி காமம் தென்படவில்லை!
பெண்கள் பார்வைகளை படிப்பதில் கில்லாடிகள்! அதில் நான் பிஹெச்டி!
 
சரி  இப்படியேதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறோமா, உங்களுக்குப் பிடித்த மலையாளப்படம் எது?

எனக்கு ஆல்டைம் ஃபேவரைட் வைஷாலி!

அகைன் வாசுதேவன் நாயர்! அருமை!

எனக்கு அதோடு இருட்டின்றே ஆத்மாவு, எந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி!

ஊருக்குப்போனதும் தேடிப்பார்க்கிறேன்!

வனத்தில் அலைந்தபோது எடுத்த புகைப்படங்கள் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

மன்னிக்கவும்! அதெல்லாம் குடும்பத்தோடு வரும்போதுதான்!
தனியே வரும்போது கண்வழி பருகாது லென்ஸ் வழி பார்ப்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் என்று நினைக்கிறேன்!
மேலும், ஒரு சட்டத்துக்குள் அடைத்துக்கொள்ள வனம் ஒன்றும் ஓவியனின் கிறுக்கல் அல்ல!

! இப்படி ஒரு பார்வை! சரி, உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்!

அந்த மொபைலை எடு!

பக்கத்தில் வந்து ஒட்டியவாறு உட்கார்ந்து விழிவிரியப் பார்த்துக்கொண்டிருந்தாள் - மொபைலில், இது என் மனைவி, மகள், மகன்  என்று காட்டிக்கொண்டு, கொடைக்கானலில் எடுத்த பிற படங்களை காட்டியபோது!

மூச்சுக்காற்று முகத்தில் சுடும் நெருக்கம்! சட்டென்று கேட்டாள்
ஒரு பாட்டுப் பாடுங்கள்!

ஏனோ ரவிக்கும் பாடவேண்டும் போலத்தான் தோன்றியது
மனத்துக்குப் பிடித்த பாடல் - மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்படவேண்டும்....

அருமை! நன்றாக இருக்கிறது உங்கள் குரல்!

சும்மா சொல்லாதே!

இல்லை பிபிஎஸ் குரலுக்கு பக்கத்தில் இருக்கிறது உங்கள் குரல்!

நீங்கள் காரை நிறுத்தும்போது ஒரு பாட்டு ஓடியதே அதை பாடுங்கள்!

இரண்டாவது முறை பெண்குரல் வரும்போது, இயல்பாய் இணைந்துகொண்டாள்
இது வனமா மாளிகையா...

வாணி ஜெயராம் - எனக்குப் பிடித்த பாடகி! உங்களுக்கு?

சுசீலா! அதற்கு சில படிகள் கீழேதான் மற்றவர்களெல்லாம்!

உண்மை! ஆனால், ஜேசுதாஸ் பாடல் பாடுகையில் உங்களுக்கு பிசிறு தட்டுகிறது! வேறு ஒரு பிபிஎஸ் பாட்டே பாடுங்கள்!

நேரம் போவது தெரியாமல் பாடிக்கொண்டே இருந்த கிறக்கத்தில், ரவி தோளில் சாய்ந்தவாறே தூங்கிப்போனாள்! 

மெதுவாக கன்னம் தட்டி எழுப்பிச் சொன்னான் "போய் படுத்துக்கொள்!"

இல்லை! இன்றைக்கு நான் இங்கேதான் படுத்துக்கொள்ளப்போகிறேன்!

இங்கேயா?

ஏன், என்ன தவறு? எப்படியும் நீங்கள் என் அனுமதி இல்லாமல் என்னை ஏதும் செய்யப்போவதில்லை!

உனக்கு எப்படித் தெரியும்?

சொல்லுக்கும் அதை உணர்ந்துகொள்ளும் அர்த்தத்துக்கும் இடையில் நேசம் தொலைந்து போகிறது!
என் நம்பிக்கை வார்த்தை வடிவில் உணர்த்த முடியாதது! மேலும்,  
உடல்களைப் பகிர்ந்துகொள்ளுமளவு நாம் இன்னும் நெருங்கவில்லை என்பதோடு, அப்படிப் பகிர்ந்துகொண்டால் இந்த இரவும் உறவும் நீர்த்துப்போகும் என்பதுதான் விசித்திரமான உண்மை!

உன் உரையாடலின் அடர்த்தி என்னை மூச்சு முட்ட வைக்கிறது! 
நீ பேசுவது எப்போதுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் பேசவேண்டும் என்ற திட்டமா?

உன் உரையாடலின் அடர்த்தி என்னை மூச்சு முட்ட வைக்கிறது! இதையேதான் அவனும் சொன்னான்! என் கழுத்தில் ஒரு நுகத்தடியைக் கட்டிவிட்டு காசைத்தேடி ஓடிப்போனவன்!

எங்கிருக்கிறார் அவர்?

அரபி தேசத்தில் எங்கோ ஒரு எண்ணெய்க்கிணற்றில் இயந்திரங்களோடு இயந்திரமாய்
வருடம் ஒருமுறை சிலநாட்கள் இங்கு வந்து என் மீதும் அதுபோலவே இயங்கும் இயந்திரமாய்!

இளமையை, ரசனையை விற்றுக் காசு கொண்டுவந்துபோடும் அந்த எந்திரத்துக்கான என் புனிதத்தை என் காலிடுக்குச் சந்தில் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அதை விடுங்கள்  
என் அருகாமை உங்களை ஏதும் தொந்தரவு செய்யுமெனில், நான் எழுந்து போய்விடுகிறேன்
எனக்கு ஏனோ உங்கள் அண்மை பிடித்திருக்கிறது
அன்பை வார்த்தை இன்றிச் சொல்லும் உங்கள் நெருக்கம் பிடித்திருக்கிறது! அது தவிர வேறு ஏதும் எண்ணங்கள் தோன்றினால், இப்போதே சொல்லிவிடுங்கள், விலகிவிடுகிறேன்!

முதுகழுந்தும் உன் மாரைவிட, உன் மூச்சின் சுகந்தமும்
இந்த இருளோடு போட்டி போடும்  உன் பிருஷ்டம் தொடும் முடியின் அரப்பும் தேங்காயெண்ணனையும் கலந்த வாசனையும் என்னை இது வேறு எதோ காமம் கலவா உவகை உலகத்துக்கு இட்டுச் செல்வதாக உணர்கிறேன்!

இப்போது என் முறையா, உங்கள் உரையாடலின் அடர்த்தி எனக்கு மூச்சுமுட்டச் செய்கிறது!

யாருடைய கனவினிலோ அத்துமீறி நுழைந்து எட்டிப்பார்ப்பதுபோலத்தான் இருக்கிறது இந்த இரவும், நம் உரையாடலும்!

நறுக்கென்று கிள்ளிவிட்டுச் சொன்னாள்! உறைக்கிறதுதானே, அப்போ நிஜம்தான்!

வலிக்குதுடீ .. டக்கென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான் ரவி!

பரவாயில்லை, இயல்பாய் இருங்கள்! எனக்கு நடிப்புக்கள் அலுத்துப்போச்சு!

நான் இப்படியே சாய்ந்து தூங்குகிறேன்!  
காலையில் உங்களை ஒரு ரகசியமான இடத்துக்கு கூட்டிப்போகிறேன்! அதற்கு விலையாக உங்களுக்கு தூக்கம் வரும்வரை ஏதாவது பாடிக்கொண்டிருங்கள்

கையை இழுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டு தோள் சாய்ந்து படுத்தவள் ஐந்து நிமிடத்தில் அயர்ந்து தூங்கிப்போனாள்!

காலையில் கண்விழித்தபோது பக்கத்தில்அவள் இல்லை

சமையலறையிலிருந்து சலனம் கேட்டு குரல் வந்தது!
நேற்றிரவு கொடுக்க மறந்த கட்டஞ்சாயா ரெடி!

காலைக்கடன் முடித்து பல் துலக்கி வாருங்கள்! சாயாவுக்குப்பின் குளிப்பதற்கு வெளியே போகலாம்!

ஆனால், நான் கிளம்பவேண்டுமே?

உங்களை யார் பிடித்துவைக்கப்போகிறார்கள்?
குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு கிளம்புங்கள்
மீன் வாங்க வருகிறீர்களா?

ஸ்கூட்டியில் இயல்பாய் அவள்பின் உட்கார்ந்து போனபோது ஜென்ம ஜென்மமாய் பழகுவது போலொரு இயல்பான அன்னியோன்யம்!

எவ்வளவு அடம் பிடித்தும், எதற்கும் ரவியை பணம் தர விடவில்லை!

வீட்டுக்கு வந்ததும் அம்மாவை சமைக்கச் சொல்லிவிட்டு - அம்மா மீன்குழம்பு எக்ஸ்பர்ட் - வனத்துக்குள் ஒரு ஒற்றையடிப்பாதையில் பேசிக்கொண்டே நடை!


சட்டென்று ஒரு திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த அருவி
கச்சிதமாக ஒரு இருபது இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் விழுந்துகொண்டிருந்தது
அடர்ந்த மரங்களுக்கிடையே வகிடெடுத்ததுபோல் ஒரு வெள்ளைக் கோடு!

விறுவிறுவென்று ஓடைக்குள் இறங்கிப்போனவள், இயல்பாய் கை நீட்டினாள், வாங்க ரவி, இங்கே கொஞ்சம் வழுக்கும்!

ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்த அருவியின் குளிருக்கு உடல்களின் சூடு கதகதப்பை தர, நேரம் போனதே தெரியாமல் ஓடிப்போயின இரண்டு மணி நேரங்கள்!

வீட்டுக்கு வந்து துவட்டி, சாப்பிட்டுக் கிளம்பும்வரை அதிகம் பேசவில்லை!

அற்புதமான மீன்குழம்பும் கொதிக்கும் சாப்பாடும்கூட அவள் அண்மை தந்த நிறைவின் பக்கத்தில்கூட வரவில்லை!

கிளம்பும் நேரம் வந்தபோது அடம்பிடிக்கும் நாய்க்குட்டியாய் நகர மறுத்தது மனம்!

கிளம்புகிறேன்
இந்த நாள் சாகும்வரை என் ஆன்மாவில் உறைந்திருக்கும்!

உன்னோடு சேர்ந்து உறங்கியதையும், அருவியில் ஆடிக்களித்ததையும் காமம் கலவாது கடந்தேன் என்பதை நம்புமளவு பக்குவப்பட்ட பார்வை இருக்கும் யாரோடாவது பகிர்ந்துகொள்ள நேரலாமேயன்றி இது என்னுடைய நாட்குறிப்பின் ரகசியமாகவே உறைந்துபோகும்!

கிளம்புங்கள் ரவி,

யாரோடு சிரிப்பைப் பகிர்ந்தீர்கள் என்பது மறந்துவிடும், ஆனால் யாரோடு அழுகையைப் பகிர்ந்தீர்கள் என்பது மரணத்திலும் மறக்காது!
இந்த உறவு இனியும் நீள்வது சாத்தியமற்றது.  

உங்கள் மொபைலிலிருந்து உங்கள் எண்ணை உங்கள் அனுமதி இன்றி எடுத்துக்கொண்டேன்!
இதற்கு அர்த்தம் உங்களை தொடர்பு கொள்வேன் என்பதல்ல!
மனித மனத்தின் விசித்திர உந்துதல் காரணமாக உங்களை, உங்கள் குரலை என்றேனும் பார்க்கவோ கேட்கவோ தவிர்க்க இயலாது விழையும்போது நான் உங்களை அழைக்கலாம்! அதற்கான சாத்தியம் இல்லவே இல்லை என்றபோதும்!

பர்ஸை நோக்கி நகர்ந்த கையை அவசரமாகப் பிடித்துத் தடுத்தவளின் விழிகள் தளும்பியிருந்தன!

பணம் என்னிடம் தேவைக்குமேல் இருக்கிறது! அதை கொடுத்து இந்த உறவை கொச்சைப்படுத்தாதீர்கள் ரவி ப்ளீஸ்!

பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்தவளின் பார்வையில் படாதபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தபோது 
சட்டென்று தோள் பிடித்துத் திருப்பி இறுக்கி அணைத்து நகர்ந்தாள்!

காரைக் கிளப்பி கொஞ்சதூரம் வந்தபின் 
நெற்றியில் பதிந்த ஈரத்தின் சூடு ஆயுளுக்கும் மறையாது என்று தோன்றியபோதுதான் அவள் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளவில்லை என்பது உறைத்தது
ஆனால் வனயட்சி என்பது தவிர வேறு எந்தப்பெயரும் அவளுக்குப் பொருந்தாது என்றே தோன்றியது!

வேறு எங்கும் போக மனமின்றி நேராக வீடு வந்தவன், அலுவலகம் வந்ததும் மடிக்கணினியை எடுத்து டைப் செய்ய ஆரம்பித்தான்..

யாத்திரியின் வனயட்சி!