வியாழன், 31 ஜனவரி, 2019

சின்னத்தம்பி, கறுப்பி - மகள் எழிலி!“யோவ், எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா நீ? இருக்கற எடத்துல என்ன கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்கலாம். அந்தப் பட்டணத்து ஆளுங்க இருக்கற திசைக்கே போகவேண்டாம்!”

கறுப்பியின் குரல் சின்னத்தம்பி காதில் விழுந்தமாதிரியே தெரியவில்லை!

சின்னத்தம்பி - இந்தப்பெயர் கூட அந்தப் பட்டணத்து ஆளுக வெச்சதுதான்!

அவங்களுக்கு இந்தக் காட்டுக்கூட்டத்துல வெக்கற பேரெல்லாம் புரியறதுமில்ல, புடிக்கறதுமில்ல!

சர்ரு புர்ருன்னு ப்ளஷர் காரு, ஜீப் இதுல இந்த இடத்துக்கு அவனுக வர ஆரம்பிச்சு, என்ன, ஒரு அறுபது வருஷம் இருக்குமா?
அதுக்குள்ளே இழவுவீடு மாதிரி ஆக்கிட்டானுக இந்த இடத்தை!

சின்னத்தம்பிக்கு நல்லா நியாபகம் இருக்கு!
அவனோட அப்பா சொல்லியிருக்கிறார்!

எப்படி இருந்துச்சு இந்த இடம்!
இங்க எல்லாருக்கும் எப்போதுமே தேவைக்குமேலதான் எல்லாமே கெடச்சுக்கிட்டு இருந்துச்சு!
சின்னத்தம்பி பொறக்கறதுக்கு முன்னாடி அவங்க அப்பன், பாட்டன், பூட்டன் எல்லாரும் ஆண்டு அனுபவிச்ச இடம்தான் இது!

இங்க யாரும் தேவைக்குமேல ஆசைப்படறதும் இல்ல, பேராசை புடிச்சு எதையும் நாலு தலைமுறைக்கு சேத்து வைக்கறதும் இல்லை!

சரி, சின்னத்தம்பி வாயாலையே அவன் கதைய கேப்போமா!


தேவைக்கு மட்டும் சம்பாத்தியம்! மத்த நேரங்களல்ல குடும்பத்தோட நிம்மதியான உலாத்தல்! நிம்மதியாகத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு வாழ்க்கை!

திடீர்ன்னு கருகருன்னு புகையை கக்கிக்கிட்டு சில வண்டிக வந்துச்சு! வெறும் டவுசரும் தொப்பியும் போட்டுக்கிட்டு ஜீப்பு வண்டீல வந்தானுக

அவனுகள பார்த்தாலே இந்த மண்ணுக்கு ஆனவனுகன்னு தெரியல! வேகவெச்ச கெழங்குமாதிரி வெளேர்ன்னு இருந்தானுங்க!
ஓஹ்! மார்வலஸ் பிளேஸ்! அப்படி இப்படின்னு எதோ பேசிக்கிட்டு போய்ட்டாங்க!

கொஞ்ச நாளிலேயே தார் வண்டிய உருட்டிக்கிட்டு வந்து இந்த எடத்துல ரோடு போட்டானுக!

எங்க சனமெல்லாம் என்ன நடக்குதுன்னு நின்னு கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்ததோட சரி! அப்போ தெரியாது இந்த ஆளுக எங்க அடிமடியில கைவைக்க வந்திருக்கானுகன்னு!

கொஞ்சநாள் அவனுக சொகுசா இருக்க எங்க இடத்தையெல்லாம் உருக்கொலைச்சானுக!

மஞ்சளானையும், புள்ளிக்கருப்பனையும் நீள நீள கொழா துப்பாக்கியால சுட்டுக் கொன்னானுக பாவிக!

எங்களுக்கும் மஞ்சளான் கூட்டத்துக்கும் ஆகாது! ஆனாலும் அவனுக அழியறதை எங்கனால  பாக்க முடியல!

இந்த இடமே, எல்லோருக்கும் எல்லாமே கிடைச்சு நிம்மதியா வாழ உருவானதுதானே! அவரவர் பசிக்கு விதித்ததை கொல்வதும் தின்பதும் இந்த இடத்தோட எழுதாத சட்டம்!

எங்க பாட்டன் தலையை தலையை ஆட்டிக்கிட்டே சொன்னாரு!
இந்த பேராசை பிடிச்ச இழிபிறவிக நம்மள அழிக்காம அடங்கமாட்டானுங்க!
எல்லாத்தையும் அழிச்சுட்டு கடைசியா அவனுகளும் அழிஞ்சுபோவானுக!”

அதுக்கப்பறம் எங்க தாத்தாவை எப்படியோ கோவில் வேலைக்கு புடிச்சுக்கிட்டுப் போய்ட்டானுக!

ராசா மாதிரி கம்பீரமா சுத்திவந்த ஆளு!
அரைக்காசுக்கும், அளவு சோத்துக்கும் அடிமையா போயிட்டாரு!

எங்க தாத்தன மாதிரி பலரையும் கோவில் வேலைக்கு இழுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!

அந்தப் பாழாப்போன சாமிக்கு எங்ககிட்ட வேலை வாங்கறதுல என்ன சந்தோஷமோ, இல்லை, இந்த பட்டணத்து ஆளுகளுக்கு எங்களை வேலைக்கு வெச்சுக்கறதுல என்ன பெரிய கௌரவமோ, எங்க சந்ததியில பலபேரு கோவில்ல யாசகம் வாங்கற வேலைக்குப் போய்ட்டாங்க!

பெருசா இருந்தா மட்டும் போதாது, சாதுவா இருக்கறது எவ்வளவு தப்புன்னு எங்க ஆளுகளுக்கு புரியறதுக்குள்ள நெலமை கைமீறிடுச்சு!

ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய ஒழிச்ச கதையா, எங்க இடத்துக்கு சுத்திப்பாக்கறேன்னு வந்த படுபாவிக கொஞ்சம் கொஞ்சமா நாங்க நடக்கற வழியெல்லாம் வேலிபோட்டு மறிச்சானுக! எங்க வெகுளி சனம் வேலியில கைவெச்சா கரண்டு வெச்சு எரிச்சானுக!

எங்க ஊர, எங்க சாப்பாட்ட, எங்க நெலத்த எங்க கண்ணுமுன்னாடியே புடிங்கிக்கிட்டு எங்களுக்கு ஏதோ பிச்சை போடறமாதிரி, நாங்க இந்த எல்லைக்குள்ளேதான் இருக்கணும்ன்னு அவனுகளே முடிவு பண்ணுனானுக!
எங்க வயித்துப்பாட்டுக்கு கொஞ்சம் தடம் மாறி வந்தா, லாரி, பஸ்ஸு, ரயிலு எல்லாத்தையும் ஏத்திக் கொன்னானுக! ஏண்டா அநியாயம் பண்றீங்கன்னு கோவப்பட்டா, துப்பாக்கியால சுட்டானுக!

கேட்டா, அவனுகதான் ஒசந்த பிறவிகளாம்!
யாரு?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ன்னு படிச்சுட்டு, உலகம் முழுசுமே எங்க இனத்துக்குத்தான் அப்படின்னு மத்த எல்லாரையும் கொன்னுபோடற கொலைகாரப் பாவிக! இவுனுகளுக்கு கும்பிட நூறு சாமி வேற!
…த்தூ!

ஒரு எழுவது எம்பது வருசத்துக்குள்ள இந்த பூமியவே சுடுகாடு ஆக்கிட்டானுக!

இதா, இப்போ கறுப்பி எதுக்கு கத்திக்கிட்டு இருக்கறா தெரியுமா?

எங்க அப்பன் எனக்கு ஆசையா தந்த தீனியெல்லாம் இப்போ இங்க கிடைக்கறது இல்லை! வயித்துப்பாட்டுக்கு எதோ கொஞ்சமும், குடிக்க நாலுவாய் தண்ணியும் இருந்தா போதும் அப்படிங்கற நிலைக்கு எங்களை கொண்டுவந்துட்டானுக!

எங்க பண்டமெல்லாம் இப்போ அவனுகளுக்கு!

என் மக எழிலி (நான் வெச்ச பேரு! நல்ல இருக்கா? இந்த மண்ணுக்கான பேரு!) என் பால்யக் கதை கேட்டுட்டு, அப்பா, எனக்கும் அந்த தீனியை திங்கணும்போல இருக்குதுன்னு கேட்டுப்புட்டா

சின்னக் கொழந்தை பாவம்! அது என்ன உங்கள மாதிரி, காருக்கும் தேருக்கும் காசுக்குமா ஆசைப் பட்டுது?

எங்க எடத்துல எங்க தேவைக்குமேல கெடச்சுக்கிட்டிருந்ததை கொஞ்சூண்டு சாப்பிட்டுப் பார்க்கறேன்னுதான் கேட்டுச்சு!

இந்த மண்ணுல பொறந்து இந்த மண்ணையே காப்பாத்தி இந்த மண்ணுக்கே சேவை செய்யற எங்க கொழந்தைகளுக்கு அந்த உரிமை இல்லையா?

கறுப்பி அடங்கமாட்டா, எனக்குத் தெரியும்! ஆனா எழிலிக்கு அவ கேட்டதை வாங்கித் தர்லைன்னா எனக்கெதுக்கு இந்த ஒடம்பும் உசுரும்?

சாயங்காலம் எழிலிக்கு கறுப்பி விளையாட்டு காட்டிக்கிட்டிருந்தா!
சத்தமே போடாம தீனி தேடி கிளம்பிட்டேன்!

எனக்குத் தெரியும் அதெயெல்லாம் இந்த பட்டணத்து ஆளுகதான் வெச்சிருக்கறானுகன்னு!


நாலுநாள், உயிருக்கு துணிஞ்சு, அவனுக ஊருக்குள்ள தேடி அலைஞ்சேன்

என்னதான் நெஞ்சுல ஈரமில்லாத பயலுகன்னாலும், என்னைப் பார்த்தா அவனுகளுக்கு கொஞ்சம் பயம்தான்!

என்னை என்னென்னவோ செஞ்சு வெரட்டப் பாத்தானுங்க
இந்தத் தடவை, என் எழிலி கேட்டது இல்லாம நான் ஊருக்குப்போறமாதிரி இல்லை!

அப்போதான் இந்த டவுனுக்கார அயோக்கியனுகளுக்கு ஒரு வழி தெரிஞ்சது!

கோவில் வேலைக்கு வந்து இங்கேயே தங்கிப்போன என்னோட ஆளுக, அவனுக புள்ளைங்கன்னு நாலஞ்சுபேர கூட்டிக்கிட்டு வந்தானுக!

எங்க ஆளுகதான் ரெண்டு தலைமுறையா தாங்க யாருன்றதையே மறந்துட்டாங்களே!
அந்த அடிமை சோத்துக்கு ஆசைப்பட்டு என்னை குண்டுக்கட்டா கட்டி கொண்டுபோய் கண்காணாத தேசத்துல ராவோட ராவா எறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க!

நாலுநாளா அன்னம் தண்ணி இல்லாம அலைஞ்சு ஒருவழியா, ஊருக்கு வந்து கூப்பிடறேன்
எழிலி, மகளே!”

அப்பதான் பெரிய கருப்பு வந்து சொல்லுச்சு,
“நாங்க என்னப்பா பண்ணட்டும், உன் பொண்டாட்டி பிள்ளை ரெண்டுபேரும் எத்தனை சொல்லியும் கேட்காம அந்த டவுனுக்கார ஊருக்குள்ள உன்னைத் தேடிப் போயிருக்குதுக! அதுகளுக்கு என்ன ஆச்சோ!”

எனக்கு ஈரக்கொலை அந்துபோச்சு!
அந்த ஈரமில்லாத ஈனப்பாவிக அந்த அப்பாவி புள்ளையையும் என் மகளையும் புடிச்சு என்ன பாடு படுத்தப்போறானுகளோ!

இதோ, நானும் அவங்களை தேடி அலையுறேன்
எங்கயாவது கண்ணுல பட்டா சொல்லுங்க சாமி! உங்க கண்ணுலயே படாம நாங்க எங்கயாவது போய் பொழச்சுக்கறோம்!

உங்க சோக்காளிககிட்ட சொல்லுங்க! அவங்கள ஏதும் பண்ணி எங்கயாவது கொண்டு விட்டுறாதீங்க! மூணு சீவன் உயிரத்துப் போயிடும் சாமி! கொஞ்சம் கருணை காட்டுங்க!

சின்னத்தம்பி பேசி முடிச்சு தலையை ஆட்டிக்கிட்டே போயிட்டான்!

பாவம், அவன் பொண்டாட்டி பிள்ளைகளை அவனோட சேர விடுவாங்களா

எனக்குத் தெரியல!

ஆனா ஒன்னு மட்டும் உண்மை!

தன்னைத்தவிர மத்த உயிரினமெல்லாம் அழிய நினைக்கற பாவத்துக்கு மனுஷ குலம் துள்ளத் துடிக்க கொடூரமா அழியப்போகுது!

அப்போதான் சாமின்னு, தர்மம், சத்தியம்ன்னு சிலதெல்லாம் இருக்குன்னு நம்பமுடியும்!


Ref: 

https://t.co/hvXDdNwSCG

https://t.co/YdqVdUAGO1

https://twitter.com/TamilTheHindu/status/1090878192712204288கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக