திங்கள், 18 மார்ச், 2019

வாரிசு அரசியல்! ஜனநாயகத்தை எரித்து வளரும் தீ!


ஜனநாயகத்தை எரித்து வளரும் தீ!ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் பரபரப்பான பேசுபொருள் வாரிசு அரசியல்!
பிறகு வசதியாக மறந்துபோவதும்!

ஒரு சின்ன உதாரணம்!

இப்போது நான் ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருபவர் மனநிலை எப்படி இருக்கும்? அவருடைய எதிர்காலத் திட்டங்கள் எப்படி இருக்கும்?

இந்த நிறுவனத்திலேயே தொடர்ந்தால், அதிகபட்சம் ஒரு பொதுமேலாளர் நிலைமைக்கு உயர்வதாக இருக்கலாம்.

அல்லது

இங்கு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் வேறொரு பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர முயலாம்.

அதுவும் இல்லை என்றால்

தான் கற்றுக்கொண்டதை வைத்து இதுபோல் தானே ஒரு நிறுவனம் தொடங்கி அதன் நிறுவனர், அதிபர் என்று முதலாளி ஆகலாம்!
ஆனால், எனக்குப்பின் இந்த நிறுவனத்தை தான் கைப்பற்ற நினைப்பார் எனில் அது அயோக்கியத்தனம்!

ஏனெனில், இந்த நிறுவனம் என்னுடையது!

என்னுடைய முதலீட்டில், என், என் குடும்ப லாபத்துக்கும், நலனுக்கும் நான் ஆரம்பித்தது இது!

இதில் உள்ளே நுழையும்போதே, தானொரு வேலைக்காரன் என்ற நிலையை ஒத்துக்கொண்டே இங்கு வேலைக்கு சேருவார்கள்!

இதையே, அரசு வேலை என்று எடுத்துக்கொள்வோம்!

ஒரு கடைநிலை ஊழியனாக சேர நேர்ந்தாலும், தன்னுடைய கல்வித் தகுதி, திறமை இவற்றை வளர்த்துக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்து, காலமும் சூழலும் ஓத்துழைக்க, மிக அதிகபட்சம் நியமன ஐஏஎஸ் வரை பெற்று, சீஃப் செகரட்டரி நிலை வரை உயரக்கூடும்!

அதைத் தவிர்த்து, அங்கிருந்துகொண்டு தான் ஒரு அமைச்சராகவோ, முதல்வராகவோ ஆசைப்படுவது முட்டாள்தனம்!

ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி என்பது இதுபோல் ஒரு லாபமீட்டும் நிறுவனம் அல்ல!

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை!

இங்கு போஸ்டர் ஒட்டுபவன், பெண்டாட்டி தாலியை விற்று கட்சிக்கூட்டம் நடத்தியவன்,
கட்சித் தலைவனாக,
முதல்வராக,
பிரதமராக
உயர முடியும் என்பதே ஜனநாயகத்தின் அடித்தளம்!

நமது முன்னாள் தலைவர்களும், முதல்வர்களும் அப்படி கட்சியின் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள்தானே, அவர்களின் பெருமையாய் நாம் சொல்லித் திரிவதும், போற்றிப்பாடுவதும் அதைத்தானே?

எனில், இன்றைய நிலவரத்தில் அது சாத்தியமா?

எப்படி ஒரு தனிநபர் நிறுவனங்களாக ஆகின அரசியல் கட்சிகள்?

இது ஜனநாயகப் படுகொலை அல்லவா?

குறிப்பிட்ட ஒரு சிலர்தான் தலைவர்களாகவோ, முதல்வர்களாகவோ ஆகமுடியும் என்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கும் செயல் அல்லவா?

நம் மக்களுடைய மனோநிலையை  அப்படி ட்யூன் செய்திருக்கிறார்கள் அந்த சோ கால்டு தலைவர்கள்!

மன்னராட்சி, அதைத் தொடர்ந்த ஆங்கிலேயர் காலத்து அடிமை ஆட்சி, இவை நம் மரபணுக்களில் அடிமைத்தனத்தை ஆழமாக விதைத்திருக்கின்றன!

பார்ப்பானை ஐயரென்ற காலமும் வெள்ளைப்பரங்கியை துரையென்ற காலமும் போய்விட்டதாய் போலிப்பெருமை பேசிக்கொள்ளலாம்!

ஆனால், அந்த அடிமைச் சிறுமதி இன்னும் கொஞ்சமும் அகலாது பார்த்துக்கொள்வதில் நம் தலைவர்கள் சமர்த்தர்கள்!

கட்சிகள் இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவிட்டன!

அவை கணக்கு வழக்கின்றி சம்பாதித்துக் குவிக்கும் சொத்துக்கு வாரிசுகள் உரிமைதாரர் ஆவது இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் மடத்தனத்துக்கு மக்களை தயாராக்கியதில் இருக்கிறது நம் வஞ்சகத் தலைவர்களின் நரித்தனமான சாமர்த்தியம்!

தேசிய அளவில் நேருவைத் தொடர்ந்த இந்திரா (இவர் காமராஜ் அறியாமையில் விதைத்து வளர்த்த சீமைக்கருவேலம் என்பது வேறு விஷயம்), கருணாநிதியை அடுத்து ஸ்டாலின் இருவரைத் தவிர வேறு யாரும் உருவான தலைவர்கள் அல்ல, வாரிசாக இருப்பதால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தலைவர்கள்!

 கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை, தியாகத்தை ஒற்றைக் குடும்பம் அனுபவிக்க மக்களை மந்தைகளாகளே வைத்திருக்க கவர்ச்சி முலாம் பூசி தலைமீது ஏற்றி உட்காரவைக்கப்பட்டவர்கள்!

இந்திரா கொல்லப்பட்டதும், ராஜீவை இழுத்துவந்து பிரதமராக்கியது தன்னம்பிக்கை இல்லாத காங்கிரஸ்!

அதற்குப்பின் அவரது மனைவி சோனியாவை அன்னையாக்கி, அவரது செல்ல மகன் பப்புவை பிரதமராக்கத் துடிக்கிறது வேறு தலைவர்களே இல்லாத நூற்றாண்டுக்கட்சி!

இப்போதும் பப்புவுக்கு முட்டுக்கொடுக்க ப்ரியங்கா, அவருக்கு கைகொடுக்க ராபர்ட் வத்ரா!

சரி, அடிமட்டத் தொண்டன்
கடைநிலை ஊழியனாக வேலைக்கு சேர்ந்து கடைநிலை ஊழியனாகவே சாகும் முட்டாள் வேலைக்காரன்!

மற்ற மாநிலங்கள், காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை!

தமிழ்நாடு என் மண்!
இதைப்பற்றிப் பேசுவோம்!

கருணாநிதி யாருடைய மகனாக, வாரிசாக கட்சித் தலைமையை, முதல்வர் பொறுப்பை ஏற்றார்?

கட்சிக்காக தெருவில் இறங்கிப்போராடிய அடிமட்டத் தொண்டன் கருணாநிதி! அவர் ஏழுமுறை முதல்வராக ஆட்சியில் அமர்ந்ததும், இரண்டுமுறை பிரதமரை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றதும், திமுகவின் உட்கட்சி ஜனநாயகத்தின் சாதனை!

இப்போது எங்கே போனது அந்த ஜனநாயகம்?

அது கொஞ்சம் கொஞ்சமாக மெல்லக்கொல்லும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது!

எந்த அளவுக்கு எனில்,  எந்தத் தகுதியும் இல்லாத ஒரு வடிகட்டிய முட்டாளை மத்தியில் கேபினட் அமைச்சராக்கி தமிழக மானத்தை கப்பலேற்றுமளவுக்கு!

அப்பாவின் நிழலில் சுகவாழ்வு வாழ்ந்த தயாநிதி மாறன், எங்கேயோ கவிதை எழுதிக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்த கனிமொழி இவர்களெல்லாம் எந்த அளவுகோலில் திருச்சி சிவாவைவிட உயரிய தகுதி வாய்ந்தவர்கள்?

இன்று கவனமாக நடிகர் என்று சொல்லாமல் முரசொலி நிர்வாக இயக்குனர் என்று கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்களில் முன்னிலைப்படுத்தப்படும் (இதுதான் விஞ்ஞானப்பூர்வமான….) மூன்றாம் கலைஞர் உண்மையிலேயே அந்தத் தகுதியால்தான் முன்னிறுத்தப்படுகிறாரா?

எனில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் உரிமையாளர் கமல்ஹாசன்,
ராகவேந்திரா கல்யாண மண்டப உரிமையாளர் ரஜினிகாந்த்
என்று முன்னிலைப்படுத்தினால் அமைதி காக்குமா திமுக?

மாவட்டம், வட்டம் மட்டுமல்ல ஒரு வார்டு கவுன்சிலராகக்கூட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள் கையைக் காட்டுபவர்களோதான் வரமுடியும் என்றால் அதற்கு ஜனநாயகக் கட்சி என்று பெயரல்ல!

அதற்கு ஒப்புகையோடு தலையாட்டுவது நமக்குள் ஊறிப்போன பரம்பரை அடிமைத்தனமன்றி வேறல்ல!

இது சுத்தமாக ஜனநாயகத்தை படுகொலை செய்து செய்யப்படும் கவர்ச்சி வியாபாரம்! கோடிக்கணக்கான அடிமைகளின் உழைப்பை சுரண்டிக்கொழுக்கும் பூர்ஷ்வாத்தனம்!

கட்சி, ஆட்சி என்பது மக்கள் சேவைக்கு என்று பித்தலாட்டம் பேசாமல் காசு சம்பாதிக்க சுலபமான வழிமுறை என்பதை தைரியமாக நிறுவிவிட்ட அரசியல்வியாதிகளின் வெற்றி இது!

யோசிக்கும் மூளை சுத்தமாக மழுங்கிப்போன அடிமைக்கூட்டத்தையே அரசியல் கட்சி என்று கொண்டாடுகிறது செத்துப்போன ஜனநாயகம்!

இது ஒரு கட்சி!
இன்னொரு கட்சி இருக்கிறது!

பொருளாளர் கணக்குக் கேட்டு ஆரம்பித்த விசித்திரமான கட்சி!

அது தன் அடிமைகளை பச்சைகுத்திக்கொள்ள நிர்ப்பந்தித்தது!
ஆனாலும் அதில் ஒரு சிறு கருணை!
நெற்றியில் குத்திக்கொள்ளாமல் கையில் குத்திக்கொள்ள கருணையோடு அனுமதித்தது!

அடிமைகளை சாகும்வரை அடிமைதான் என்று நிறுவுமளவு கொழுப்பு ஏறிய கட்சி!

அதன் கோமாளி நிறுவனர் இறந்தபிறகு அதன் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் தன்னையும் வாரிசு என்றுதான் சொல்லிக்கொண்டார்!

எந்தவகையில் என்பதற்கு அவர் கொடுத்த இரண்டு விளக்கங்களும் கேவலத்தின் உச்சம்!

அங்கொரு அடிமைக்கூட்டம் தலைநிமிரவும் திராணியற்று நிலம் பார்த்துக் கிடந்தது!

பன்றிகள் சாகும்வரை வானம் பார்ப்பதில்லை என்று விஞ்ஞானம் சொல்வது உண்மைதான் என்று நிரூபித்த கூட்டம்!

ஆயிரம் ரூபாய் இலவசம் என்று கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்கும் நாட்டில் ஆயிரம் கோடி லட்சம் கோடி என்று நம்பமுடியாத தொகைகளை கொள்ளையடித்துச் சுருட்டிய கூட்டம் எப்படி தொண்டனை அதிகாரத்துக்கு அனுமதிக்கும்?

அதன் வாரிசுகள் இந்தத் தேர்தலில் பட்டம் கட்ட கிளம்பிவிட்டார்கள்!
மக்களின் அடிமைத்தனம் மட்டுமே இவர்கள் அனைவருக்கும் மூலதனம்!

இதை யார் விமர்சித்தாலும் எல்லாக் கட்சிகளும் ஒற்றைக் குரலில் கேட்பது,

அவன் மட்டும் யோக்கியமா?

இதைச்சொல்லவா உங்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும்?

அவன் யோக்கியன் இல்லை என்று உன்னை நாடிவந்தால், நீயும் அதையே செய்வாயெனில் உன்னை நான் ஏன் ஆதரிக்கவேண்டும்?

பெரிய திருடன், சிறியதிருடன் என்ற பாகுபாடுகூட இப்போது இல்லை!

என் பாக்கெட்டில் கைவிட்டு அள்ளிப்போகையில் எனக்கு ஒற்றை நாணயத்தை இறைத்துப் போனவன் அல்லது அதையும் விட்டு வைக்காது கொண்டுபோனவன்! - இதுதான் எனக்கிருக்கும் சாய்ஸ்!

இப்படி முழு மழுங்க முண்டங்களாக மக்களை ஆக்கிவைத்திருப்பதே இந்த எழுபதாண்டு ஜனநாயகம் செய்த சாதனை!

இதில், எல்லாத் தேர்தலிலும் இந்தக் கட்சிக்கே வாக்களிப்பேன் என்று பெருமை பொங்க பேசும் அடிமைத்தனம் வேறு!

ஒருவன் தவறு செய்தால்,
அவனை தண்டிக்க,
கீழிறக்க
தேர்தல் ஒரு சாதனம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், நான் பரம்பரையாக இந்தக்கட்சிக்கே வாக்களிப்பேன் என்பதை பெருமையாகப் பேசுவது இன்னொரு முட்டாள்தனம்!

சாதி, மதம் பார்த்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தபோதே நாம் விழித்துக்கொண்டிருக்கவேண்டும் - இவர்கள் வெள்ளைக்காரனைவிட கேவலமான பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் என்று!

இப்போது அதே சாதி, அதே குடும்பம் என்று கொள்ளையை, பிரிவினையை வேரூன்றி நிற்கின்றன கயமை கட்சிகள்!

அடிமைகளாக இருப்பதுகூடத் தெரியாமல், என் ஆண்டான் பெரியவனா, உன் ஆண்டான் பெரியவனா என்று அடித்துக்கொண்டு சாகிறோம் நாம்!

நான் குறிப்பிட்ட கட்சிகள் வளர்ந்தவை!
அவ்வளவே!

மண்டபத்தை இடித்துவிட்டார்கள், மாற்றம் முன்னேற்றம் என்று வசனம் பேசிவந்தவர்களின் வாரிசுகள் பற்றி நான் பேசவில்லை
ஏனெனில், அவை இந்த விஷ விருட்சங்கள் தனக்காக வளர்த்துவிடும் உப விருட்சங்கள்!

இவை,  இப்படியே, அந்தப் பெருந்தீமைகளைப் பற்றி நாம் யோசிக்கவே விடாமல்,  காட்சி மாறும் இடைவேளைகளில் குட்டிக்கரணம் அடித்து நம்மை விசிலடிக்க வைத்துக்கொண்டிருக்க நியமிக்கப்பட்ட விதூஷகர்கள்!

இதோ, இன்னொரு திருவிழா!

உங்கள் தலைவர்கள் தரையிறங்கி வீதிக்கு வந்து  உங்களை கருணையோடு சந்திக்கும் இன்னொரு தருணம்!

நூறோ, இருநூறோ உங்கள் முகத்தில் மாறிமாறி விசிறியடிப்பார்கள்!

பொறுக்கிக்கொண்டு சாராயக்கடையில் கொண்டுபோய் அவர்களுக்கே கொடுத்துவிட்டு, முகத்தில் மைபூசிக்கொண்டு வாருங்கள்!

அடுத்த திருவிழாவில் கோஷம்போட உயிரோடு மட்டும் இருங்கள்!
உணர்வுகள் உங்களுக்குத் தேவையில்லை!!

வாழ்க ஜனநாயகம்!

வளர்க (சிலர்) மக்களாட்சி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக