சீவாளி
சபாபதி
சார்!
என்ன
ஒரு மனிதர்! எப்படிப்பட்ட வித்வான்!
சேலம்
அரசு இசைப்பள்ளில நாதஸ்வர ஆசிரியர்!
நட்டமா
நிறுத்திவெச்ச தவில் மாதிரி இருப்பார் சபாபதி!
குள்ளமான
உருண்டை உடம்பு! நாதஸ்வரம் வாயில வச்சு ஊதும்போது முட்டிக்கு கீழ வரும்! அவ்வளவு குள்ளம்!
"தரைக்குப்
பக்கத்துல இருக்கறதுனாலதான்டா என்னோட சங்கீதத்துல மண்வாசனை ஜாஸ்தியா இருக்கு!"
விசேஷ நாட்கள்ல
சேலம் ஊத்துமலைல அவரோட மல்லாரி
இல்லாம முருகன் ஒரு
அடி எடுத்து வைக்கமாட்டார்!
நாலு மணிக்கு
மேல ஆள் பக்கத்தில்
வரும்போதே ஜவ்வாது வாசனையை மீறி பழவாசனை அடிக்கும்!
தண்ணி
இல்லாமல் அவரைப் பார்ப்பது பள்ளிக்கூடத்தில் மட்டும்தான்!
பகலில்
சார் வேற மாதிரி!
வாய்
நிறைய வெற்றிலை, கும்பகோணம் சீவல், ஏலக்காய், கிராம்பு!
முழங்கைக்கு
மேல் சுருட்டிவிட்ட ஜிப்பா, தழைய கட்டிய எட்டுமுழ வேட்டி! டிபிகல் சங்கீத வாத்தியார்!
பசங்களுக்கு
அவர் பாடம் நடத்தறத பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். கூடவே ஒரிஜனல் தஞ்சாவூர் நையாண்டி!
"சும்மா
சீவாளிய சப்பிக்கிட்டு காத்த துப்புனா சங்கீதம் வராது தம்பி! எச்சில் பண்ண அது ஒன்னும் உங்க ஆட்டக்காரி மாரில்லை! அதெ நெனச்சுக்கிட்டு இத சப்பிக்கிட்டு நிக்காத
ராஜா!”
இதுல
ஆட்டக்காரி வேற யாருமில்லை!
அதே ஸ்கூல்ல டான்ஸ் டீச்சர் வனிதா!
ஏனோ அவருக்கு அவங்களைக் கண்டாலே ஆகாது! நக்கலும் வசவுமாக காது கூசுமளவுக்கு பேசுவார்!
ஏன்
சார் இப்படி பேசறீங்கன்னு யாராவது கேட்டா போச்சு! அன்னைக்கு முழுக்க கேட்டவரையும் இழுத்துவெச்சு வசவு மழை பெய்யும்!
இத்தனைக்கும்
அவங்க ஒருதடவைகூட சாரை மரியாதை குறைச்சலாக பேசியதே இல்லை!
ஒருதடவை
தவில் மாரியப்பன் சார் இதெல்லாம் ரொம்பத் தப்புண்ணா, பாவம் அந்த டீச்சர்ன்னு எதார்த்தமா சொல்லப்போக, ஏன், உனக்கும் அவ ஆட்டிக் காட்டிட்டாளா, இடுப்பை
ன்னு கேட்டதோட இல்லாம, அதுக்கப்புறம் வந்த நாலு கச்சேரிக்கு அவரை கூட்டிக்கிட்டுப் போகாம ஈரோட்டிலிருந்து லோகநாதனை வரச்சொல்லிட்டார்!
அண்ணா
என்னை மன்னிச்சுடுங்கன்னு காலிலேயே விழுந்த பிறகுதான் மூஞ்சி கொடுத்துப் பேச ஆரம்பிச்சார்!
ஆனா
நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சா, அது வேற ஆள்!
வாத்தியத்தில்
வர்ற சத்தம் மாதிரி இல்லாம ஒவ்வொரு சொல்லும், சங்கதியும்
தனித்தனியா கேட்கும்!
சமயத்துக்கு
க்ளாரினெட், சாக்ஸஃபோன் ஏன் புல்லாங்குழல் மாதிரிகூட கேட்கும்!
ஸ்வரம்
பாடும்போது ஒவ்வொரு உருப்படியும் அப்படியே தனித்தனியா வரும்!
ஒருநாளைக்கு
ஒருதடவையாவது மொத்த ஸ்கூலும் அமைதியா கேட்கும்!
ஆனா
கச்சேரிக்கு போன இடத்தில் எதுக்கு கோபப்படுவார்ன்னு யாருக்குமே தெரியாது!
ஒருதடவை
ஒத்து ஊதறவருக்கு மாலை போடலைன்னு கோபிச்சுக்கிட்டார்!
இன்னொரு
இடத்தில் ஒத்துக்கு மாலை போட்டபோது அவனும் நானும் ஒன்னான்னு ஒரே சத்தம்!
ஏன்
சார் இப்படின்னு கேட்டா, அவனுக்கு நம்ம சங்கீதம் கேட்க கொடுப்பினை இருக்கணும்டா! அதைவிட்டுட்டு கொடுக்கற காலணா சம்பாவனைக்கு நம்மளை விலைக்கு வாங்கிட்டோம்னு நினைக்கக்கூடாது பாரு! அதுக்காகத்தான் இது! அலட்டிக்காம சொல்லுவார்!
சாயங்காலம்
ஃபேர்லேண்ட்ஸ் முருகன் கோவில்ல மரத்தடியில ஒரு ஜமா சேரும்!
ரவி,
ராகவன், முத்துகிருஷ்ணன், கணேசன், சேகர் ன்னு ஒரு பெரிய கூட்டம்! எல்லாமே இருபது, இருபத்தைஞ்சு வயசு பசங்க!
இதில்
கணேஷ் மட்டும்தான் இசைப்பள்ளி மாணவன்!
மத்தவங்க,
இன்ஜினீயர், ஆடிட்டர், பட்டதாரின்னு வேற கும்பல்!
இவங்க
ஏன் சபாபதி சார் கூட்டத்துல சேரணும்?
எல்லா உறவிலும்
நட்பிலும் ஒரு இணைப்புப்
புள்ளி இருக்கும்!
இங்கே
அது, இளையராஜா!
யாராக
இருந்தாலும் வெகண்டையா பேசற சாருக்கு, இளையராஜா மட்டும் மொட்டை சாமி!
அவன்
யாருன்னு நெனச்சே, அந்த ஆளு மனுஷனே கிடையாது! மொட்டைப்
பண்டாரம் முருகன்தான் இப்போ இளையராஜாவா பொறந்திருக்கிறான்!
அவங்க
ஆத்தா பாலுக்குப் பதிலா சங்கீதத்தை அழுத்தி அழுத்தி ஊட்டியிருக்கறா!
வக்காளி!
என்ன ஒரு ஞானம்டா!
இப்படி
ஆரம்பிக்கும் பேச்சு, கோவில் நடை அடைக்கற வரைக்கும் போகும்! ஏதோ ஒரு பாட்டை மட்டுமே எடுத்து அலச ஆரம்பிச்சா அத்தனைபேரும் கேட்டுக்கிட்டே உட்கார்ந்திருப்பாங்க!
எப்படியும்
வாரம் ஒருதடவை கோவில்புறா படத்துல வர்ற சங்கீதமே, என் ஜீவனே.. அந்தப்பாட்டை உருகி உருகிப் பாடுவார்!
ஹிந்தோளம்னா
இப்படி இருக்கணும்டா! 24 கேரட் சொக்கத்தங்கம்டா இது! எப்படி வளையுது பாரு!
ஒரு
பிசிறு இருக்கா, அந்த நாதஸ்வரம் எப்படி இழையுது பாரு! இந்த ஒரு பாட்டு போதும்டா! அப்படியே கேட்டுக்கிட்டே செத்துப் போயிரலாம்!
நல்ல
தாம்பத்யம் வாச்சவன் சம்போகத்தும்போதே செத்துப்போகணும்! என்ன மாதிரி வாய்க்காத கட்டைக இந்தப் பாட்டை வாசிக்கும்போதே செத்துப்போகணும்!
ரவிதான்
கேட்பான்! "என்ன சார், நாதஸ்வரம் வருதுங்கறதுக்காக இந்தப் பாட்டுக்கு வக்காலத்து வாங்கறீங்களா?"
நான்
என்னடா நாதஸ்வரத்தை கட்டிப்புடிச்சுக்கிட்டா பிறந்தேன்? அப்படி பிரிச்சுப்பாக்க எனக்குத் தெரியாது! அது பாப்பாரவுக பண்ற வேலை! சங்கீதத்தை உன்னுது என்னுதுன்னு பிரிச்சு, என்னுதுதான் ஒசத்தின்னு மடிசார் கட்டி பூட்டிவைக்கறது அவனுகதான்!
எனக்கு
எல்லாமே ஒண்ணுதான்டா!
மறுநாள்
சாயங்காலம் டேய், எத்தனை பேருக்கு சகலகலாவல்லவன் பாட்டு தெரியும்?
எல்லாருமே
ஏறத்தாழ கோரஸா சொன்னாங்க!
எனக்குத்
தெரியும்!
அதுல
அந்த மலேசியா வாசுதேவனும் ஜானகியும் பாடுவாங்களே அந்தப்பாட்டு?
யாராச்சும்
பாடுங்க ..
ஒரு
பெரிய கள்ள மௌனம்! யாரும் கோயில்ல உட்கார்ந்து அதை பாடத் தயாரா இல்லை!
ஆனா
சார் விடமாட்டாரே! அவருக்கு அன்னைக்கு இந்தப்பாட்டுதான் அப்படின்னு மனசுக்குள்ள முடிவாயிருச்சு!
டேய்,
கணேசா, நீ பாட்றா!
மென்னு,
முழுங்கி பாட ஆரம்பிச்சான் கணேசன்
- நிலாக்காயுது,
நேரம் நல்ல நேரம்..
வழக்கம்போல
ரவிதான் அதிகப் பிரசங்கத்தை ஆரம்பித்தான்!
இதுதான்
இளையராஜாகிட்ட பெரிய குறை!
தட்டு
நெறைய சோத்தப்போட்டு கொஞ்சம் நரகலை நடுவே வெச்சுருவாப்ல!
இந்த
முக்கல் முனகளெல்லாம் அந்த ஆள் தரத்துக்கு தேவையா!
ஐயா,
சிவாஜிகணேசா, இந்தப் பாட்டு படத்துல வந்தப்ப கண்ணை மூடிக்கிட்டீங்களா?
டேய்,
பூபதி, அந்த அனத்தல் சத்தமெல்லாம் நீ குடுடா?
ஒரு
சாஃப்ட் வேர் என்ஜினீயர், கோவில்ல உட்கார்ந்து அந்த சவுண்டை கொடுக்கறது அன்னைக்கு நடந்தது!
இது
உங்களுக்காக மொட்டைச் சாமி பண்ணுன காம்ப்ரமைஸ்டா!
இந்த
மரமண்டைகளுக்கு எப்படியாவது சங்கீதத்தை மண்டைல ஏத்திறனும்னு உனக்குப் புடிச்ச பாஷைல சொல்லியிருக்கிறார்!
ஆசானே,
இளையராஜாவுக்கு சோப்பு போடுங்க, வேணாம்னு சொல்லல! ஆனா, இந்த ஜானகி முக்கலுக்கெல்லாம் முட்டுக் கொடுக்காதீங்க!
இந்த
எழவு பாட்டுக்கும் சங்கீதத்துக்கும் என்ன சம்பந்தம்?
முள்ளும்
மலரும்ன்னு ஒரு படம்!
அதுல
அடி பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் இளமை அப்படின்னு ஒரு பாட்டு போட்டான் மொட்டை சாமி!
எத்தனை
பேருக்கு அந்தப்பாட்டு தெரியும்?
அற்புதமான
மத்யமாவதி!
ஒரு
பய கண்டுக்கல!
இதோ,
இந்தப்பாட்டு, கல்யாணம், கருமாதி எல்லா இடத்துலயும் ரெக்கார்ட் தேஞ்சுபோற அளவுக்கு ஓடுது!
இதுதான்டா
உங்க ஞானம்! உங்களுக்கு இது போதும்ன்னு செருப்பைக் கொண்டு அடிச்சிருக்கான்! அவனை குறை சொல்ல வந்துட்டீங்க ஆட்டிக்கிட்டு!
கணேசா,
மத்யமாவதிக்கு கொஞ்சம் ஸ்வரம் சொல்லுடா!
அன்னைக்குத்தான்
இளையராஜாவை விமர்சிக்க நமக்கு யோக்கியதையே இல்லைன்னு ரவி முடிவு பண்ணியது!
மொத்தப்பாட்டும்,
சுத்தமான மத்யமாவதி!
தாயளி,
இவனுக்கு தோனியிருக்குது பாருடா! மத்யமாவதியை இந்த நாய்களுக்கு இப்படித்தான் புரியவைக்க முடியும்னு!
போனவாரம்
கச்சேரியில நித்யஸ்ரீ அரைமணிநேரம் ஸ்வரம் பாடுன மத்யமாவதியைவிட இது சுத்தமான ராகம்!
உங்க
நாராயண மூர்த்தி மாமாகிட்ட போய் கேளு! அந்த நாதஸ்வரக்காரன் இப்படி சொல்றான், அது உண்மையான்னு! ஆனா கெழவன் ஒத்துக்கமாட்டான்!
நாராயணமூர்த்தி,
சேலத்துல ஒரு பிரபலமான வித்வான்! கிட்டப்பா, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், செம்மங்குடி, ஜி என் பி
காலத்து ஆள்!
சேலத்தில்
சங்கீத கச்சேரி எங்கே நடந்தாலும், முன்வரிசை நடு சீட் நாராயணமூர்த்தி மாமாவுக்குத்தான்!
கச்சேரி
பாடிய வித்வானுக்கு பொன்னாடை போர்த்தவோ, மாலை போடவோ அவரைத்தான் கூப்பிடுவார்கள்! அவரும் அன்றைக்கு கச்சேரி பற்றி ஒரு சின்ன விமர்சனம், அந்தநாள் நியாபகம் என்று ஏதாவது பேசுவது கச்சேரியில் ஒரு அம்சம்!
அவருக்கு
வாத்தியக் கச்சேரிகள் என்றால் கொஞ்சம் இளப்பம்தான்!
ஒருதடவை கன்னியாகுமாரி வயலின் கச்சேரிக்கு வந்தவர் வெளிப்படையாகவே போட்டு உடைத்துவிட்டார்!
"எனக்கு
இந்த மொண்ணை வாத்தியங்கள்ல அவ்வளவு ஈடுபாடு கிடையாது! வாத்தியங்கள் பக்கவாத்தியமா இருக்கலாமேயொழிய மெயின் ஐட்டமா அதை வைச்சு கொண்டாடறது அவ்வளவு சிலாக்கியமான விஷயம் கிடையாது! ஊறுகாய் நல்லா இருக்குன்னு அள்ளி சாப்பிடமுடியாது!”
அன்னைக்கு
சபாபதி சார் நல்ல மூடுல இருந்தார்!
ஐயரே,
நான் நாதஸ்வரத்தை எடுக்கறேன், உங்க கச்சேரில என்ன சொல் வருதோ, அதை நாதஸ்வரத்துல கேட்க முடியுமா இல்லையான்னு பார்ப்போம்!
சங்கீதத்தில
ஏது சாமி ஒசத்தியும் தாழ்ச்சியும்?
உமக்கு
புரிஞ்சு ரசிக்கிற தன்மை இல்லைன்னு சொல்லும்!
சபாபதி
சாரை அன்னைக்கு இழுத்துக்கிட்டு வர்றதுக்குள்ள பெரும்பாடா போச்சு!
மறுநாள்
ரவிதான் போய் நாராயண மூர்த்திகிட்ட மன்னிப்பு கேட்டுவந்தான்!
அந்தக்
குடிகாரனோட சேராதடா! எத்தனை வித்வத் இருந்து என்ன பிரயோஜனம், மனுஷாள மதிக்கத் தெரியவேண்டாமா?
நாதஸ்வரம்
அசுர வாத்தியம்! அதை வாசிக்கறவா புத்தி அப்படித்தான் இருக்கும்!
இதை
அப்படியே வந்து சபாபதி சார்கிட்ட சொல்லியிருந்தா ரணகளம் ஆகியிருக்கும்!
ஆனால்,
அதற்குப்பின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் நாராயண மூர்த்தி மாமாகிட்ட மாலை வாங்கிக்க மறுத்துவிட்டார் சார்!
ஒருநாள்
அதையும் கேட்டுவிட்டான் ரவி!
ஏன்
சார் உங்களுக்கு அவர் மேல இவ்வளவு வெறுப்பு?
டேய்,
உனக்கெல்லாம் கண்ணைத் திறந்து பார்க்கவே தெரியாதா? உன் படிப்பு இதையெல்லாம் புரிஞ்சுக்கற அறிவை தரலையா?
அந்தக்
கிழவன் எத்தனை பேருக்கு சங்கீதம் கத்துக்கொடுத்திருக்கிறான்?
அதில் எத்தனைபேர் அடுத்த ஜாதிப் பசங்க?
என்னை
எத்தனைதடவை கேட்டிருக்கே, நீங்க இவ்வளவு சுத்தமா வாய்ப்பாட்டு பாடறீங்களே, ஏன் ஒரு கச்சேரி பண்ணக்கூடாதுன்னு?
எங்கே,
எனக்கு சேலத்துல ஒரு மேடை தரச்சொல்லு பார்ப்போம்!
கருப்பா
இருந்தா அவனுக்கு சங்கீதம் சொல்லித் தரமாட்டானுகடா!
நம்ம
ஊர்லயே ரெண்டு பசங்க ஒரு பெரிய வித்வான் கிட்ட பாட்டு
கத்துக்கப் போனாங்க! அந்தப் பரம்பரையே சங்கீதக்காரனுக! ஆனா என்ன ஆச்சு, ஒருத்தனுக்கு வாய்ப்பட்டு சொல்லிக்கொடுத்தாரு, இன்னொருத்தனுக்கு உனக்கு பாட்டு வராது மிருதங்கம் கத்துக்கோன்னு அனுப்பிச்சுட்டாரு!
ஏன்னு
தெரியுமா? அவன் கருப்பா இருந்தான், முதுகை தட்டிக்கொடுக்கும்போது கயிறு தட்டுப்படல. அதுதான் கரணம்!
உங்க
சங்கீதம் அவ்வளவு ஒசத்தின்னா ஏன்டா அத வெளிய வந்து
பாடறீங்க?
இப்போ
கூப்பிடு சுந்தர்ராஜனை, இதோ, இந்த கோவிலிலேயே ரெண்டுபேரும் வாய்ப்பாட்டு கச்சேரி பாடுவோம்!
உங்க
மாமாவையே விமர்சனம் பண்ணச்சொல்லுவோம்! வர்றானா கேளு!
நான்லாம்
சுயம்புடா! எவனுக்கும் வேட்டி தொவச்சுப்போட்டு சங்கீதம் கத்துக்கல!
அப்படி
எல்லாரும் வரமுடியாது! பின்பாட்டுப்பாடி முன்னாடி வந்து உட்காந்து முக்கத் தெரியாத ஆளு நான்!
என்னை
சாதி பார்த்து பாட்டு சொல்லிக்கொடுக்காதவன் இன்னைக்கு ஒரு தேங்காய் முடிக்கும், ரேயான் துணிக்கும் பாட்டுப்பாடி திரியறான்! எனக்கென்னடா, ராஜா மாதிரி அரசாங்க சம்பளம்! நான் சீவாளியை வாயில் வெச்சாலும் வெக்காட்டியும் சாகிற வரைக்கும் முப்பதாம் தேதி காசு வந்துரும்! முருகன் என்னை கைவிடமாட்டான்டா!
சுந்தரராஜன்,
ஈரோடு இசைப்பள்ளி பாட்டு வாத்தியார்! ஓரளவு நல்ல சங்கீத ஞானம்! பெரிய இடத்தில் சங்கீதம் படிச்ச ஆளுன்ற கெத்து கொஞ்சம் அதிகம்!
ஏனோ,
அவரைக் கண்டாலே சாருக்கு பிடிக்காது!
எப்போடா
வெள்ளிக்கிழமை ஆகும்ன்னு கைல புடிச்சுக்கிட்டு கிடப்பான்போல! வாரக்கடைசின்னா உங்க டான்ஸ்காரி வீட்ல வந்து உழுந்து கெடக்கும் அந்த நாயி!
அவர்
சொல்வதில் அப்படி ஒன்றும் உண்மை இல்லை! டீச்சர் டான்ஸுக்கு அவர் பின்பாட்டு பாடுவது என்று ரெண்டுபேரும் சேர்ந்து சில கச்சேரி பண்ணியது உண்டு!
அதுக்காக
அடிக்கடி வருபவரை இப்படி வம்பு இழுப்பது சாருக்கு வாடிக்கை!
வேண்டான்டா,
இப்போ அந்த வீட்டு வழியா போகவேண்டாம்! அந்த ஈரோட்டுக்காரன் அங்கே படுத்துக்கிடப்பான்! அப்படி சொல்லியே டான்ஸ் டீச்சர் வீட்டு வழியா சனிக்கிழமை சாயங்காலத்துக்கு மேல் போகமாட்டார்!
ஒருதடவை
சிரிச்சுக்கிட்டே ரவி கேட்டும்விட்டான்! உங்களுக்கு ஏன் சார் பொறாமை, அவருக்கு முடியுது அவர் போறார்! நீங்க ஏன் டீச்சரையும் அவரையுமே எந்நேரமும் நினைச்சுக்கிட்டே இருக்கீங்க?
யாரு,
அவனுக்கா? எங்கே, ஒரு நிமிஷம் தம் கட்டி மேல் சட்ஜமம் பாட சொல்லு பார்ப்போம்? அங்கேயும் போய் தடவிக்கிட்டுத்தான் கிடப்பான்!
ஏன்,
நீதான் ட்ரை பண்ணிப்பாரேன் உங்க டீச்சரை!
கசந்து
வழிந்தது ரவிக்கு! என்ன மாதிரி மனிதர் இவர்?
எத்தனை
ஞானம் இருந்தென்ன? ஒரு பெண்ணை எப்படி மதிப்பது என்றுகூடவா தெரியாது?
அவர்
இவர் வழிக்கே வருவதில்லை!
ஒருநாள் இவர் வாசித்துக்கொண்டிருக்கும்போது
வகுப்பறை வாசலில் நின்று கிறங்கிப்போய் கேட்டுக்கொண்டிருந்தார் பாவம்!
வாசிப்பை
நிறுத்தி கண்ணைத் திறந்து பார்த்தவர் எத்தனை தரம் தேவடியா என்று சொன்னார் என்று கணக்கே இல்லை! காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு வசவு! போகச்சொல்லுங்கடா அந்த தே.. மு..யை என்று ஆரம்பித்து
இன்ன வார்த்தை என்று இல்லை!
அழுதுகொண்டே
போன டீச்சரை எல்லோருமே போய் கேட்டுப்பார்த்தார்கள் பேசாமல் தனசேகர் சாரிடம் புகார் கொடுங்கள் என்று!
கையெடுத்துக்
கும்பிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்!
இந்த
அரசு இசைப்பள்ளி ஒரு வினோதமான அமைப்பில் இயங்குகிறது!
கலை
பண்பாட்டுத்துறை நேரடி கண்காணிப்பில் இயங்கும் அது மண்டல அளவில் ஈ டி கட்டுப்பாட்டில்தான்
வரும். நான்கு
மாவட்டங்களுக்கு ஒரு மண்டலம்! ஈரோடு, சேலம் எல்லாமே திருச்சி கட்டுப்பாட்டில்!
அங்கு ஈடி தனசேகரன்!
எல்லோரிடமும் நன்றாகவே பழகக்கூடியவர்! எல்லோருக்கும் அவர் மேல் நல்ல மரியாதை! அவருக்கு சபாபதி சார் மேல் மிகுந்த ஈடுபாடு! உயரதிகாரியே ஆனாலும் சபாபதி சாரிடம் ரொம்பவுமே மரியாதையாகத்தான் பேசுவார்!
ஆனால், அவர்கிட்டயும் சபாபதி சார் இப்படித்தான் நடந்துக்குவார்! அவன் இன்ஸ்பெக்சன் வர்றதே அவளைப் பார்க்கத்தான் என்று கூசாமல் பேசுவார்!
டான்ஸ்
டீச்சர் விஷயம் மட்டும் இல்லைன்னா சார் சொக்கத்தங்கம்!
அன்னைக்கு
அப்படித்தான் வழக்கம்போல இளையராஜா பாடல்களுக்கு ஸ்வரம் பிரித்துக் காட்டிக்கொண்டிருந்தார் சார்!
அம்மா
என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே என்று நிதானமாகப் பாடியவர், இது என்ன ராகம் என்று ரவியை கேட்டார்!
அன்றைக்கு ரவியும் ஏதோ ஒரு கடுப்பான மனநிலையில் இருந்தான்! ஆனாலும், தனக்குத் தெரிந்த கேள்வி வந்த சந்தோஷத்தில் உற்சாகமாக சொன்னான்!
கல்யாணி!
சூப்பர்டா!
உனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கு! கல்யாணியை இவ்வளவு நுணுக்கமா செதுக்குனது இவன்தான்டா!
கடுப்பிலிருந்த
ரவி வாயிலிருந்து வார்த்தை வழிந்துவிட்டது!
கேவி
மகாதேவன் போடாத கல்யாணி ராகப் பாட்டா?
ஒரு
நிமிஷம் அங்கே ஒரு சின்ன நிசப்தம்! அந்தக் கூட்டத்தில் அன்றைக்குத்தான் முதல் கலகக் குரல்- அதுவும் மொட்டை சாமிக்கு எதிராக!
இதோ,
இந்த மேதாவி ஏதோ சொல்றாரு! சொல்லுங்க சாமி, இதைவிட நல்ல கல்யாணி எந்த சினிமா பாட்டுல வருது?
சாருக்குத்தான்
டான்ஸ் பிடிக்காதே, அதனால அவருக்கு தெரியல போல!
திருவருட்செல்வர்
படத்துல மன்னவன் வந்தானடி..
டேய், இதை
நானே பலதடவை சொல்லியிருக்கிறேன்!
அந்தப்பாட்டை
சுசீலா பிரிச்சு மேஞ்சிருப்பாங்க! ஒரு கர்னாடக வித்வான் கூட அப்படி ஸ்வரம் பாட முடியாது!
ஆனாலும்
உங்களுக்கு கே வி எம்முக்கு
க்ரெடிட் கொடுக்கத் தோணல பார்த்தீங்களா சார்?
ஏன்
அப்பேர்ப்பட்ட சுசீலாவை விட்டுட்டு ஜானகியை ப்ரொமோட் பண்ணிக்கிட்டிருக்கார் ராஜா?
சாருக்கு
முகம் சிவந்தே போனது.
ஏன்,
தேர்கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி, பாட்டை யாருக்குக் கொடுத்தார் ராஜா?
அட்டகாசமான ஹம்ஸத்வனி!
ஆனா
ஏன் அந்தப்பாட்டு அவ்வளவு பிரபலம் ஆகலே?
அந்த
அம்மாவுக்கு இப்போ குரல் போயிடுச்சு! அதுதான் உண்மை! ப்ரியாவிலேயே டார்லிங் டார்லிங் பாட்டை எத்தனை பட்டி டிங்கரிங் பார்த்து தேத்தியிருப்பாரு ராஜா?
உனக்கு
வேறு ஏதோ கடுப்பு! அதைச் சொல்லு!
அன்னைக்கு அந்தப்பாட்டுக்கு ஆடுன பத்மினியை இன்னைக்கு ஆடவைக்க முடியுமா?
நீ உங்க டான்ஸ்
டீச்சரை நினைச்சுக்கிட்டு நேத்து டிவில பத்மினியை பாத்திருப்பே அதுதான் இன்னைக்கு இப்படி பேசறே!
சார்!
உங்க வக்கிரத்தை இனிமேலும் கேட்க எனக்கு முடியாது!
உங்களுக்கு அவங்க மேல ஏதோ ஒரு நிறைவேறாத வெறி!
அந்த ஆத்திரம்தான் எந்நேரமும் அவங்களை தூத்தவைக்குது!
உங்களுக்கு உண்மையிலேயே தில் இருந்தா அந்த டீச்சரை கட்டி ஆளப்பாருங்க!
அவங்ககிட்ட போய் பெருந்தன்மைன்னா என்னன்னு கத்துக்கோங்க!
சொல்லிக்கிட்டே
வேகமா நடக்க ஆரம்பிச்சுட்டான்!
முதுகுக்குப் பின்னால் சுத்தமா கேட்டுது சாரோட குரல்!
இவனுக்கும்
அவ கதவை தொறந்துட்டா போல!
அதுக்கப்புறம்
நாலு நாள் அவன் அந்தப்பக்கமே போகல!
அடுத்தநாள்
ராத்திரி கணேஷ் வந்தான்! சார் உங்களை கட்டாயம் நாளைக்கு வரச்சொன்னார்
இனி
நான் வரமாட்டேன்னு போய் சொல்லிடு கணேசா. சொல்லிட்டு வேகமா வீட்டுக்குள்ள போய்ட்டான்!
ஏனோ
சார் நினைப்பாகவே இருந்தது! நாளைக்கு போய் பார்க்கணும்! நெனைச்சுக்கிட்டே தூங்கிப்போனான்!
படபடன்னு
கதவை தட்ற சத்தம் கேட்டு மணியைப்பார்க்க நாடு ஜாமம்!
மூணு மணி!
யார்
இந்நேரத்துல?
கதவைத்
திறந்தால், ராகவன்!
சபாபதி சார்
போய்ட்டாருடா!
இந்நேரத்துல
உனக்கு எப்படிடா தெரிஞ்சுது?
ராத்திரி
ரொம்பநேரம் வாசிச்சுக்கிட்டிருந்தார்!
சஹானா
அப்படி வழிஞ்சு ஓடுச்சு!
தூக்கம் வருதுன்னு ஒரு மணிக்குத்தான் எல்லோரும் போனோம்!
இப்போ,
ஏனோ சார் வீட்ல லைட் எரியுது, கதவு திறந்தே இருக்குதுன்னு அம்மா எழுப்புனாங்க.
போனா,
வாயில் சீவாளியோட அப்படியே சாஞ்சு கிடக்கறார்!
உயிர் போய் எப்படியும் ஒருமணி நேரம் இருக்கும்!
கணேசனை அங்கே நிறுத்திட்டு வந்தேன்!
அவசரமாய்
சட்டையை மாட்டிக்கொண்டு போகும்போது கேட்டான், யாருக்காவது சொல்லணுமா?
முதல்ல
தனசேகர் சாருக்கு சொல்லிடலாம்!
இந்நேரத்திலயா?
பரவாயில்லை!
அதுதான் நல்லது!
ரொம்ப
நேரம் அடிச்சு, ஓயும்போது எடுத்தார்!
சேதி
கேட்டு ஒரு நிமிஷம் ஒண்ணுமே பேசல!
சரி,
நான் உடனே புறப்பட்டு வர்றேன்!
நீங்க
ஹெச் எம் வீட்ல போய் சொல்லிடுங்க,
அதுக்கு முன்னால, வனிதா மேடத்துக்கு சொல்லிடுங்க
அவங்களுக்கு
எதுக்கு சார் இந்நேரத்துல!
ஒரு
சின்ன மௌனத்துக்குப் பிறகு சொன்னார்
அவங்க அவரோட
பெண்டாட்டி!
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமை!!!
ReplyDelete