வியாழன், 2 மே, 2019

ரஜினி என்றொரு மெண்டலான்!
 “மெண்டலான்!”

ஒரு மனிதனைக் குறிக்க எவ்வளவு அழகான உயரிய வார்த்தை!

இணையத்தில் அறிஞர்கள் பயன்படுத்திப் புல்லரிக்கும் வார்த்தை!

அறிவு சுரந்து மூளை வீங்கிப்போன சிலர் அன்போடு அழைத்து அரிப்பை சொரிந்துகொள்ளும் வார்த்தை!

ரஜினியும் சாதாரண ஆளில்லை!

தான் அந்தப் பட்டத்துக்கு எவ்வளவு பொருத்தமானவர் என்பதை பல ஆண்டுகளாக நிரூபித்துக்கொண்டுதான் வருகிறார்!

ஆடை கட்டாத ஊரில் அணிந்தவன் பைத்தியக்காரன் என்பது உண்மைதானே! அப்படி!!


நாற்பது வருடங்கள்!

எனக்குத் தெரிந்து உலக திரைப்பட வரலாற்றில் எந்த நடிகனும் இவ்வளவு நாள் தலை மேல் வைத்துக் கொண்டாடப்பட்டதில்லை!

அப்படி இருக்கும்போது அந்த நடிகர் என்ன செய்யவேண்டும்?

தன் முதலீடும் மூலதனமும் தன் ஒப்பனை முகம்தான் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்!

அதை மட்டுமே மக்களுக்கு காட்டித் திரியவேண்டும்!

செத்தால்கூட மணிக்கணக்கில் சாயம் பூசி படுக்கவைக்கப்பட வேண்டும்!

அதைவிட்டு சொட்டை மண்டையும், கொஞ்சமும் பவுடர் பூசாத முகமுமாக ஊரெல்லாம் சுற்றித் திரியும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பைத்தியம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

எத்தனை படங்களில் கமல்ஹாசனை பெயர் சொல்லியே புகழ்ந்து வசனம் பேசியிருக்கிறார், தன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன படத்தை எவ்வளவு வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார் என்பதை வரலாறு அறியும்!

ஒரு திரைப்பட விழாவுக்குப் போனால், அந்தக் கதாநாயகன் என்ன பேசவேண்டும்?

“எல்லோரும், கதாநாயகியைவிட என்னைத்தான் அழகு என்று சுத்தி வந்தார்கள்! என் அழகுக்கு முன்னால் வேறு யாரும் ஒரு பொருட்டே இல்லை” என்றுதானே ஒரு உண்மையான ஹீரோ பேசவேண்டும்?

இந்த மெண்டலான் என்ன சொன்னார் பாருங்கள்!

வடஇந்தியாவில் கோவிலில் என்னை ஒருவர் என்ன செய்கிறாய் என்று கேட்டார்
சினிமாவில் நடிக்கிறேன் என்று சொன்னேன்!
எந்தப்படம் என்று கேட்டார்!
ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கும் படம் என்றேன்!
அதில் உனக்கு என்ன ரோல் என்று கேட்டார்!
நான்தான் ஹீரோ என்று சொன்னேன்!
அவர் முகமே மாறிவிட்டது
பாவம், ஐஸ்வர்யாவுக்கு, அமிதாப்புக்கு என்ன பணக்கஷ்டமோ என்று முனகிக்கொண்டே போய்விட்டார்!

இப்படியா பேசுவார் ஒரு ஹீரோ?

இது கூட பரவாயில்லை!

கோவிலில் நான் நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்! ஒரு பெண்மணி என் கையில் பத்து ரூபாயை பிச்சையாகப் போட்டார்! நான் ஏதும் பேசவில்லை! நான் வந்து காரில் ஏறும்போது அந்தப்பெண் திகைத்துப்போனார்!

இதுவும் அந்த ஆள் பேசியதுதான்!

இதற்குப்பெயர் மகத்தான தன்னம்பிக்கையும் மிக அரிதான நகைச்சுவை உணர்வும் என்று என்னைப்போல் சில முட்டாள்கள் சொல்வார்கள்!

ஆனால், அவர் மெண்டலான் என்பது அறிஞர்களுக்குத் தெரியும்!

அதை விடுங்கள்! ஏதோ சுய உருவக்கேலி என்று தள்ளிவிடலாம்!

இன்னொரு மேடை!

தொழிலில் தன் பிரதான போட்டியாளர் (அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?) உட்பட எல்லோரும் பேசி முடித்தபின் பேசவருபவர், அப்போதுதான் நடந்து முடிந்திருந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை தரம் தாழ்ந்து மிகக் கேவலமாக விமர்சித்த ஒரு மூத்த நகைச்சுவை நடிகையைப் பற்றி என்ன பேசவேண்டும்?

முதலில் அவரை மேடையில் உட்கார விட்டிருப்பாரா ஒரு நல்ல தெளிவான அறிவுள்ள ஹீரோ?

இவர் பேசியதை பாருங்கள்!

“நான் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை ஒருவர் விமர்சிக்க, அப்போது சீறிப் பாய்ந்து அவரிடம் எனக்கு ஆதரவாக சண்டைக்குப் போனவர் ஆச்சி!”

இந்த ஆள் மெண்டலான் இல்லாமல்  வேறு என்ன?

அத்தனை உயரத்தில் இருக்கும் மனிதனுக்கு  கொஞ்சமாவது பழிவாங்கும் உணர்ச்சி, வெறுப்பு, குரோதம், வன்மம் இதெல்லாம் வேண்டாம்?
இப்படியா, தன்னை கேவலப்படுத்தியவரையும் உயர்த்திப் பேசுவது?

போதாக்குறைக்கு அடுத்த படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்புவேறு கொடுத்தால், இந்த சமூகம் என்ன பேசும்?

அறிவு வேண்டாம் அவருக்கு?

இதில் இன்னொரு விஷயம்!

சாதாரண காய்ச்சல் வந்தால்கூட , இமேஜ் போகும் என்று அதை மறைத்துப் பேசுவதும், ரகசியமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதும் நடிகர்கள், அரசியல்வாதிகள், ஏன், சாதாரண மனிதர்களே செய்யும்போது,
நான் நர்வஸ் பிரேக் டவுனால் பாதிக்கப்பட்டிருந்தபோது…” என்று அவ்வளவு பெரிய, ஊரே மறந்துபோன ஒரு விஷயத்தை, வெளிப்படையாக பேசும் நேர்மைக்கு அவரை மெண்டலான் என்று அழைத்து சொரிந்துகொள்ளாமல் என்ன செய்வார்கள் நம் நேர்மையாளர்கள்!

1. குடி, சிகரெட் இவையெல்லாம் உடம்புக்கு நல்லதில்லை! அனுபவித்தவன் சொல்கிறேன்!

2. அமெரிக்கா போய்விட்டு மொட்டைத் தலையோடு வந்த சூப்பர்ஸ்டார் பேட்டி: முடி வெட்ட உட்கார்ந்து தூங்கிட்டேன்! அதுதான் இப்படி!

3. உனக்குப் பிடித்த டைரக்டர் யார்? கேட்டது குருநாதர் பாலச்சந்தர்! இந்த ஆளின் பளிச் பதில்: மகேந்திரன்!

இந்த இழவெடுத்த நேர்மையை திட்டாமல் என்ன செய்ய?

இதெல்லாம் ஒரு சேம்பிள்தான்!

இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள்!

ஜேஜே திரைப்பட நகரம் திறக்கப்பட்ட நேரம்!

மேடையில் ஆல் பவர்ஃபுல் ஜெயலலிதா!
சுற்றிலும் மந்திரி பிரதானிகள்!

எல்லோரும் புகழ்ந்து முடித்தபின் சொடக்குப் போட்டுப் பேசுகிறார் இந்த ஆள்: நியாயமா இந்த திரைப்பட நகருக்கு எம்ஜியார் பெயர் வைத்திருக்கவேண்டும்! உங்கள் பெயரை வைத்தது தவறு!

அடுத்தது
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா!

பார்வையாளர் வரிசையில் கலைஞருக்கு அருகில் ரஜினி!
மேடையில் அஜித் குமுறிவிடுகிறார்
ஐயா, விழாவுக்கு வரலைன்னா மிரட்டுறாங்கய்யா!”
சபை திகைத்து மௌனிக்கிறது.
எழுந்து நின்று கைதட்டி அந்தப்பேச்சை வரவேற்கிறார் ரஜினி!

இதெல்லாம் செய்தால் அறிவுசார் பச்சோந்திகள் வேறென்ன பெயர் வைக்கும்?

(இந்த நிகழ்வில் பக்கத்தில் பொத்தினாற்போல் உட்கார்ந்துகொண்டிருந்துவிட்டு முரசொலி பவளவிழா மேடையில்தற்காப்பு வேடிக்கை பார்க்கும், தன்மானம் மேடையேறும்” என்று தேவையே இல்லாமல் சீண்டிய உத்தம நண்பனை, நிச்சலனமாய் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த கதை தனிப் பதிவுக்கான வேறு விஷயம்!)

இதுதான் ரஜினி!

அரசியல் பேசும்போதும் இதே நாகரீகம்!

திரும்பவும் இதே ஆட்சி வந்தால் தமிழகத்தை ஆண்டவன்கூட காப்பாற்ற முடியாது!
இதுதான் எனக்குத் தெரிந்து ரஜினி வேகமாக வைத்த விமர்சனம்!

அதே ஜெயலலிதாவை தனிப்பட்டு விமர்சிக்கையில் தைரியலட்சுமி!
 தன்னை மண்ணைவாரித் தூற்றித் திரியும் சீமான், அன்புமணி என்று யாரைப் பற்றி கேட்டாலும், அறிவானவர், திறமைசாலி என்று பாராட்டு வார்த்தைகளே பதில்!

கலைஞரைப் பற்றி அவர் புகழ்ந்து பேசியவற்றை ஒரு தனிப் புத்தகமாகவே போடலாம்!
இணைய திமுகவினருக்கு அது எப்போதாவது உதவும்!

தனிப்பட்ட வாழ்விலும்,
என் திருமணத்துக்கு வராதீர்கள் என்று சொன்னபோது, வந்தால்? என்று நிருபர் கேட்க உதைப்பேன் என்று பதில் சொன்ன காலம் முதல், (அப்படி வந்தவர்களை நிஜமாகவே உதைத்துதும் நடந்தது) இன்றுவரை மனதில் பட்டதை மறைக்காமல் நேர்மையாகப் பேசும் பண்பை பைத்தியம் என்று சொல்லாமல் என்ன சொல்ல?

சமீபத்தில் தான் எவ்வளவு உயரிய தகப்பன் என்பதை நிரூபித்த நிகழ்ச்சியும், அவர் பிறர் அறியாது செய்யும் உதவிகளையும் இங்கு பட்டியலிட விருப்பமில்லை!
அது அவரது தனிப்பட்ட விஷயம்!

ஏறத்தாழ இறந்து மறுபிறவி எடுத்து சிங்கப்பூரிலிருந்து வந்ததிலிருந்து அவர் எவ்வளவு கனிவோடு  பண்பட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மை!


தனக்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு தான் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பது தவறில்லை!, அதற்காக கட்சி ஆரம்பிக்க நினைப்பதுதான் எல்லோருக்கும் மரண பயத்தை தருகிறது!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டு கட்சி ஆரம்பிக்காமல், கொள்கையை அறிவிக்காமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று சுற்றுபவர் மேல் ஏன் இத்தனை எரிச்சல் இந்த நல்லவர்களுக்கு?

ஏன் இப்படி அந்த மனிதனைப் பார்த்து எல்லோரும் பயந்து சாகிறார்கள்?

கொஞ்சமும் மனிதாபிமானமற்று தனிப்பட்ட முறையில் ஏன் இப்படி கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள்?

இது அவர்கள் தரம்! அது அவருடைய தரம்!

நாடாளும் பிரதமர் முதல், அண்டை நாட்டு அதிபர்கள்வரை வீடு தேடி வந்து அவரை சந்தித்துப் போகிறார்கள்!


அந்த அகந்தையும் மமதையும் ஒரு துளி அவர் குணத்தில் வெளிப்பட்டதில்லை!

தன்னை ஒரு மாமனிதனாக, அறிவு ஜீவியாக தனக்குத் தானே ஒரு ஒளிவட்டம் வரைந்துகொள்ளத் தெரியாத அவரை,

நடைபாதை கிளி ஜோஸ்யனைப்போல் ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஆமைக்கறி, ஏகே 74 என்று அள்ளிவிட்டு வசூல் வேட்டையாடிக் குவிக்கும், யாரையும் மரியாதையாகப் பேசவே தெரியாத  தறுதலைகளோடு ஒப்பிடுவதே கொடும் செயல்!

அதனால்தான் அந்த மனிதன் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால் பதறுகிறது!

பன்றிகளோடு களமிறங்கி சூரியன் அழுக்காவது தர்மமில்லை!

பன்றிகளுக்கு பண்பை உபதேசிப்பதும் சாத்தியமில்லை!

இன்று, எங்கே தாங்கள் கல்லாக் கட்டுவதற்கு இடைஞ்சலாக வந்துவிடுவாரோ என்ற அதீத பயத்தில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசித் திரியும் அத்தனை ஜென்மங்களும் அவரை ஒருமுறையாவது பயன்படுத்திக் கொண்டவைதான்!

எந்த நல்ல அறங்களும் இல்லாத கீழ்மை மனிதர்களிடம் நன்றியை மட்டும் எதிரிபார்க்க முடியுமா என்ன?

அவரைப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ வயிறு வளர்க்கும், பெரிய ஆளாகத் துடிக்கும், சோ கால்டு தலைவர்களுக்கும், ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் மறைமுகமாக சோறு போடுவதே அந்த மெண்டலான்தான்!

அவர் இன்னும் அதே உயர்ந்த இடத்தில்!

நீங்கள்தான் பாவம் எதையும் தின்று வாழும் தள்ளாட்டத்தில்!

உள்ளத்தனையது உயர்வு!

ரஜினி அரசியலுக்கு வந்தால், அவர் கொள்கைகளை விமர்சியுங்கள்

அதைவிட்டு அந்த தனிப்பட்ட மனிதனை விமர்சிக்கும் 
அருகதையும் திறமையும் தகுதியும் நேர்மையும்
யாருக்கும்,
மன்னிக்கவும்,
எவனுக்கும்
கிடையாது!

எப்போதோ, ராஜாவுக்கு சொன்னதுதான் இவருக்கும்!

சூரியன் எங்கோ எட்டாத உயரத்தில் தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறது!

குரைக்கும் நாய்கள் அதன் நிழலைக்கூட அழுக்காக்க முடியாது!

குரைத்தே வாய் கிழிந்து நாய்கள் மடியும்!

சூரியன் அப்போது அதற்கும் இரங்கும்!

அதன் மாறா உயர் குணம் அப்படி!

33 கருத்துகள்:

 1. அருமையான பதிவு நண்பரே...நல்ல வேலை நன்றியுள்ள நாயோடு ஒப்பிட வில்லை

  பதிலளிநீக்கு
 2. அருமையான, நெகிழ்ச்சியான பதிவு நண்பரே! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 3. எனக்கு எப்படி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை...
  அற்புதம்... ஆனந்தம்...
  சரியாக அடித்து உண்மையை உரைத்து சொல்லிஇருக்கிறீர்கள்
  மிக்கற்ற மகிழ்ச்சி...
  😊👌👍💐

  பதிலளிநீக்கு
 4. Excellent piece of writing. Beautiful positive feedback about superstar it is very difficult to be humble at the pinnacle of your stardom

  பதிலளிநீக்கு
 5. உண்மை வரிகள்....மெய்ச்சிலிர்க்கிறது!!! உண்மையான தலைவரின் ரசிகனால் மட்டுமே உணர முடியும்...
  ரஜினி என்ற மூன்றெழுத்து சகாப்தம்...
  அவர் தூய்மை,வாய்மை அதை ஒப்புக்கொள்வதே நேர்மை!!!
  Love u thalaivaaaa����

  பதிலளிநீக்கு
 6. நான் என் கடவுளை வணங்குவதற்கு காரணம் தேவையில்லை அதுபோல என் தலைவரை நேசிக்க எந்த ஒரு காரணமும் எனக்கு தேவையில்லை

  பதிலளிநீக்கு
 7. ஏன் கடவுள் ஆக நிலை கொண்டு இருக்கும் தலைவா 🙏
  இந்த பதிவை போட்ட காவளர்க்கு கோடி நன்றி😍

  பதிலளிநீக்கு
 8. Amazing work done by you
  thank you so much for such a wonderful article about Thalaivar

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு நண்பரே.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. Sir super engalin manathil ullathai appadiye eluthi irukkennu. Super and thank you

  பதிலளிநீக்கு
 11. சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சிஆரம்பிக்கப்போவதில்லை // இப்படி பல தேர்தல்கள் போக்கு காட்டி ரசிகர்கள் மற்றும் மக்களை குழப்பியதால் தான் ரசினியை தமிழில் பைத்தியக்காரர் என்கின்றனர்

  பதிலளிநீக்கு
 12. முத்துவில் தொடங்கி போன மாதம் வரை அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி கொண்டே ஓரு தீர்மான முடிவெடுக்காமல் இருப்பது தான் இப்பொழுது இவர் மேல் இருக்கும் விமர்சனம்..

  பதிலளிநீக்கு